ஞாயிறு, 12 ஜூலை, 2015

உலக தைராய்டு நாள்

       
கழுத்தின் முன்பகுதியில் 15 முதல் 20 கிராம் எடையுள்ள தைராய்டு சுரப்பி, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க உதவுகிறது என்பது ஆச்சர்யமான விஷயம்.தைராய்டு சுரப்பி குறைந்தாலும், அதிக மானாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். 12 சதவீத இந்தியர்கள், தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளனர். எட்டு சதவீத இந்தியர்கள் அறிகுறி தெரியாத தைராய்டு குறைபாட்டால் அவதிப்படு கின்றனர். குறைபாட்டின் அறிகுறிகள் உடல்பருமன், சோம்பல், உடல் தளர்ச்சி, உடல் அயர்ச்சி, தலைவலி, அடிக்கடி தூங்கிக் கொண்டே இருத்தல், வேகமாக செய்ய வேண்டிய வேலைகளை மிக மெதுவாக, தாமதமாக செய்தல், ஞாபக மறதி மற்றும் மூளை செயல்பாடு குறைதல், நடையில் தள்ளாட்டம், கை, கால் மதமதப்பு மற்றும் எரிச்சல், மனச்சோர்வு, குளிர் தாங்கும் தன்மை குறைதல், உலர்ந்த தடிமனான தோல், வியர்க்கும் தன்மை குறைதல், முடி உதிர்தல், முடி வளரும் வேகம் குறைதல் ஆகியவை.
ரத்தக்கொதிப்பு நோய், இருதய வீக்கம், இருதயத் தைச் சுற்றி நீர் அடைபடுதல், இருதயத்துடிப்பு குறைதல், நல்ல கொழுப்பு குறைதல், கெட்ட கொழுப்பு அதிக மாதல், நுரையீரல் சுருங்கி விரியும் தன்மை குறைதல், நுரையீரலை சுற்றி நீர் அடைதல், குறட்டை விடுதல், மலச்சிக்கல், உணவு செரிக்கும் தன்மை குறைதல், கால்சியம் சத்து குறைபாடு, எலும்பு அடர்த்தி குறைபாடு, மாதவிடாய் கோளாறு, ரத்தசோகை, பெண்களுக்கு குழந்தையின்மை, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுதல். இந்த அறிகுறிகள் இல்லாமலே கூட தைராய்டு குறைபாடு ஏற்படலாம்.
அயோடினும் தைராய்டும்
நாம் உண்ணும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் தைராய்டு குறைபாடு ஏற்படலாம். மலை சார்ந்த இடம் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள மண்ணில் அயோடின் குறைந்தளவே இருக்கும். இப்பகுதியில் தைராய்டு குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம். தைராய்டு கழலை நோயும் ஏற்பட வாய்ப்புண்டு. மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், மருத்துவரை அணுகி தைராய்டு சோதனை மேற்கொள்ள வேண்டும். டி3, டி4, டி.எஸ்.எச்., சோத னைகள் மூலம் சுலபமாக தைராய்டு குறைநிலையை அறிந்து கொள்ளலாம். தைராய்டு குறைநிலையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு மனவளர்ச்சி மற்றும் உடல்வளர்ச்சி குறைவான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது.
கடைப்பிடிக்கும் முறைகள்
முள்ளங்கி, முட்டைகோஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும். அயோடின் கலந்த உப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனை படி தைராக்சின் மாத்திரைகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். காலையில் மறந்து விட்டால் மதியமோ, இரவோ உணவு உட்கொள்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
தைராக்சின் மாத்திரை சாப்பிடும் போது இரும்புச்சத்து மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு எடுத்துக் கொள்ளும் ஆன்டசிட் மாத்திரைகள், ஆன்டசிட் ஜெல் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு நாள் ஒரு மாத்திரை எடுக்க மறந்து விட்டால், அடுத்தநாள் இரண்டு மாத்திரை போடலாம். இந்த மாற்றம் ஒருநாளுக்கு மட்டும் தான் பொருந்தும்.
தைராய்டு கழலைநோய்
கழுத்தின் முன்பகுதியில் கட்டி போன்று எச்சில் விழுங்கும் போது மேலும் கீழுமாக சென்று வந்தால், அது தைராய்டு கழலை. இதற்கு பல காரணங்கள் உண்டு. அயோடின் சத்து குறைவு, தைராய்டு குறைவு, தைராய்டு மிகைநிலை, தைராய்டு புற்றுநோய், தைராய்டு சுரப்பி தொற்றுநோய் காரணமாக இருக்கலாம்.
கவனிக்க வேண்டியவை தைராய்டு பரிசோதனையை வெறும் வயிற்றில் எடுக்க வேண்டியதில்லை. எந்த நேரமும் செய்யலாம். இருதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் பாதிப்பாலும் தைராய்டு ஹார்மோன் அளவில் சிறிதளவு மாற்றம் ஏற்படலாம். எனவே மருத்துவர் ஆலோசனைப்படி தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் தைராக்சின் மாத்திரை உட்கொள்கிறீர்களா. எத்தனை மாத்திரை, எவ்வளவு அளவு என்பதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மற்ற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளும், தைராய்டு பரிசோத னையில் மாற்றம் ஏற்படுத்தும். எனவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் அனைத்து மாத்திரைகளையும் மருத்து வரிடம் காண்பிக்க வேண்டும். அந்த குறைநிலையை அறிந்து சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தையும் மன நலத்தையும் பாதுகாப்போம்.

-விடுதலை,25.5.15