இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூலை, 2024

இதயத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்! - நவீன மருத்துவங்கள் (8)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (8)

மார்ச் 1-15, 2020

மரு.இரா.கவுதமன்

இதய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இதயத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இதயம் ஒரு வியப்பூட்டக்கூடிய உடல் உறுப்பு. முழுதும் தசைகளாலான இதயம் நம் நெஞ்சுக் கூட்டின் இடப்புறம் நெஞ்செலும்பிற்கு பின்புறம் அமைந்துள்ளது. கருத்தரித்தல் நிகழ்ந்து, 21 நாள்களிலேயே தோன்றும் முதல் உடல் உறுப்பு இதயம்தான். கருவின் இயங்கக்கூடிய முதல் உடலுறுப்பும் இதுதான். ஆரம்பத்தில் இரண்டு குழாய்களாக வளர்ச்சி அடையும் இது, பிறகு இணைந்து 4 அறைகளாக உருமாற்றம் பெறும். மூன்று வாரங்களில் இயங்கும் இதயம், கருவின் “இடைத்தோல் படை’’யிலிருந்து (Mesoderm) உருப்பெறுகிறது. கருவின் உட்புற செல்கள் மூன்று விதமாகப் பிரிகின்றன. “வெளித்தோல்படை’’ (Ectoderm), “இடைத்தோல் படை’’(Mesoderm), “உள்தோல் படை’’ (Endoderm) ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தே அனைத்து உறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றன.

இடைத்தோல் படையில் வளரும் இதயம் கரு உண்டாகி மூன்றாவது வாரத்தில் துடிக்கத் துவங்கி, நம் மரணம் வரை துடித்துக்கொண்டே இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும் இதயம், 60 வயதானவருக்கு, ஏறக்குறைய 2.5 மில்லியன் தடவை துடிக்கும். பெண்களுக்கு சுமார் 250 முதல் 300 கிராம் எடையும், ஆண்களுக்கு 300 முதல் 350 கிராம் எடையும் இருக்கும். இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் ‘சிரைகள்’ என்றும் இதயத்தில் இருந்து இரத்தத்தை உடலின் பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் குழாய்களுக்கு “தமனிகள்’’ என்றும் பெயர். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. அவை வலது (ஆரிக்கள்) மேலறை, இடது மேலறை, வலது கீழறை  (Ventricle), இடது கீழறை ஆகியவை ஆகும்.

மேலறைகளும், கீழறைகளும் “அடைப்பிதழ்’’-களால் (Valve) பிரிக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் அறைகளை “முக்கூர் அடைப்பிதழும்’’(Tricuspid valve), இடது புற அறைகளை “இருகூர் அடைப்பிதழும்’’ (Bicuspid Valve) பிரிக்கின்றன. இவ்வறைகளை “பிரிசுவர்’’(Septum) பிரிக்கிறது. இரண்டு மேலறைகளும் மெலிதாகவும், இரண்டு கீழறைகள் தடிமனாகவும் இருக்கும். இடது கீழறை, வலது கீழறையை விட அதிக தடிமனாக இருக்கும். உடல் முழுதும் இரத்தம் செலுத்த வேண்டிய வேலையை இடது கீழறை செய்வதால் அது அவ்வாறு அமைந்துள்ளது. இடது கீழறையிலிருந்து வெளியேறும் “பெருநாடி’’ (மகாதமனி_(Aorta) யில் அடைப்பிதழ்கள் (Valve) உள்ளன. வலது கீழறையிலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் நுரையீரல் தமனியிலும் அடைப்பிதழ்கள் உள்ளன. இவை  “அரைமதி அடைப்பிதழ்கள்’’ (Semilunar Valves) என்றழைக்கப்படுகின்றன. இதயத்தின் கீழ்புறமுள்ள அசுத்த இரத்தம், ‘கீழ்ப்பெருஞ்சிரை’ மூலமும், இதயத்திற்கு மேல்புறம் உள்ள அசுத்த இரத்தம் ‘மேல் பெருஞ்சிரை’ மூலமும் இதயத்தின் வலது மேலறையிலும் சேரும். நுரையீரலில் இருந்து வரும் நுரையீரல் சிரை, இதயத்தின் இடது மேலறையில் திறக்கும். நுரையீரலில் சுத்தகரிக்கப்பட்ட இரத்தம் இடது மேலறையில் சேரும். இதயத்தைச் சுற்றி இரண்டு உறைகள் (Pericardium) உள்ளன. மென்சவ்வால் ஆன இரண்டு உறைகளில் புறஉறை நார்ச்சவ்வாலும், அகஉறை நீர்ச்சவ்வாலும் ஆனது. இதனால் இதயத்திற்கு, அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இதயத்திற்குத் தேவையான இரத்தம் ‘இதயத்தமனி’(Coronary Artery) மூலம் கிடைக்கிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி நமது இதயம் பல கோடிமுறை துடிக்கிறது. இதயத்தின் அறைகள் சுருங்கி, விரிவதால் ஏற்படும் ஒலியே நாடித்துடிப்பாக மருத்துவர்கள் அறிகின்றனர். கருத்தரித்த 21 நாள்களில் துடிக்கின்ற இதயத்திற்கும், அதன் தொடர்ச்சியான இடைவிடாத இயக்கத்திற்கும் தேவையான உயிர்க்காற்றும் (Oxygen), சத்தும், இதயத் தமனி மூலமே கிடைக்கிறது. இதயத் தமனியின் மூலம் கிடைக்கும் இரத்த ஓட்டத்தில் அடைப்போ, குறைபாடோ ஏற்பட்டால் இதயச் செயல்பாடு நின்று, உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். இதயத்திற்கு வரும் நரம்பு ‘வேகஸ்’ (Vagus) நரம்பாகும். இதயம் இரண்டு வகை நரம்புத் தொகுதிகளால், நரம்பு மண்டலத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பரிவு நரம்புகள்(Sympathetic Nervous System), துணை பரிவு நரம்புகள் (Para sympathetic Nervous System) என இரண்டு வகை நரம்புகள் இதய செயல்பாட்டை வழி நடத்துகின்றன. பரிவு நரம்பியக்கம் இதயத் துடிப்பை அதிகரிக்கும். துணைப் பரிவு நரம்பியக்கம் இதயத் துடிப்பைக் குறைக்கும். இவை     அனைத்தும் இணைந்து ‘இதய நரம்புப் பின்னலை’ ஏற்படுத்துகின்றன (cardiac plexeus). மூளையிலிருந்து வருகின்ற வேகஸ் நரம்பிலிருந்தும் தானியக்க நரம்பு மண்டலத்திலிருந்தும்(Autonomous Nervous System) இந்த நரம்புகள் இதயத்திற்கு வருகின்றன. இதயம் சரியான முறையில் இயங்குவதற்கு இந்த நரம்புப் பின்னல்களே காரணம்.

இதயத்தின் இயக்கம்: உடலின் தலை, கழுத்து, மார்புப் பகுதிகளிலிருந்து கெட்ட இரத்தம் மேல் பெருஞ்சிரை மூலம் இதயத்தின் வலது மேலறையில் வந்து சேரும். அதேபோல் உடலின் மார்புக்கு கீழ்புறம் உள்ள உடலின் பாகங்களிலிருந்து வரும் கெட்ட இரத்தம் கீழ்ப் பெருஞ்சிரை வழியே இதய வலது மேலறைக்கு வரும். இதய மேலறைகள் இரண்டும் சுருங்கும்பொழுது வலது மேலறையிலிருக்கும் கெட்ட இரத்தம் முக்கூர் அடைப்பிதழைத் திறந்து கொண்டு வலது கீழறையை அடையும். வலது கீழறை சுருங்கும்பொழுது, கெட்ட இரத்தம் நுரையீரல் தமனியின் அரைமதி அடைப்பிதழைத் திறந்துகொண்டு, இரண்டு நுரையீரல்களுக்கும் செல்லும், அங்குள்ள நுரையீரல் பைகளில் நிரம்பியுள்ள உயிர் மூச்சுக்காற்று சிறு சிறு தந்துகிகளால் (Capillaries) உறிஞ்சப்பட்டு, தந்துகிகளில் உள்ள கரியமில வாயு(carbon-di-oxide) வெளியேறும். அதுவே நம் உடலிலிருந்து மூச்சுக்காற்றாக வெளியேற்றப்படுகிறது. (மூச்சு விடுதல்). இப்படி முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்ட நல்ல இரத்தம் நுரையீரல் சிரை (Pulmonary Vein) மூலம் இடது மேலறையை (Left auricle) வந்தடையும். மேலறைகள் சுருங்கும் வேளை இடது மேலறையிலிருக்கும் இரத்தம் இருகூர் அடைப்பிதழைத் திறந்து கொண்டு இடது கீழறையில் நிரம்பும். இதயக் கீழறை சுருங்கும்பொழுது பெருநாடி (மகாதமனி)யில் உள்ள அரைமதி அடைப்பிதழைத் திறந்து கொண்டு இரத்தம் அதன் வழியே வெளியேறி, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் பரவும். மேலறை, கீழறை ஆகியவற்றின் சுருங்கி விரியும் தன்மையை இதய நரம்புப் பின்னல் ஒழுங்காக நிகழுமாறு கட்டுப்படுத்துகிறது. இவ்வாறு மேலறைகளும், கீழறைகளும் இயல்பாகச் சுருங்கி, விரியும் தன்மையினால் நம் உடலின் இரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. இதயத்தின் அறைகள் சுருங்கி விரியும் பொழுது வெளியேறும் இரத்தம், அரைமதி அடைப்பிதழ்களைத் திறந்து செல்லும்-பொழுதும், முக்கூர், இருகூர் அடைப்பிதழ்-களைத் திறந்து, மூடும்பொழுது ஏற்படும் ‘ஒலி’யையே நாம் “லப்’’, “டப்’’ என்னும் இதயத் துடிப்பாகக் கேட்கிறோம். இதுவே தமனிகளில் “நாடித் துடிப்பாக’’ (Pulse) உணர்கிறோம்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (14)இதயத்தமனி (அடைப்பு) நோய்

வியாழன், 4 பிப்ரவரி, 2021

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!

வியாழன், 28 ஜனவரி, 2021

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (9)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (8)

திங்கள், 30 நவம்பர், 2020

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (11)

மரு.இரா.கவுதமன்

இதயத்தமனி (அடைப்பு) நோய் (coronary artery disease)

மாரடைப்பு (Heart Attack)

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, கருவுற்ற எட்டாவது வாரத்தில் இதயம் இரண்டு குழாய்களாக அமைந்து, பிறகு நான்கு அறை கொண்ட இதயமாக மாறுகிறது. அப்பொழுதே துடிக்க துவங்கும் இதயம், நம் மரணம் வரை இடைவிடாது துடித்துக் கொண்டே இருக்கிறது.

இதயம்தான் கருவில் உருவாகும் முதல் உறுப்பு. ஆரம்பத்தில் நிமிடத்திற்கு 120 முதல் 160 வரை இதயம் துடிக்கும், பேறு காலத்தில் துடிப்பு நிமிடத்திற்கு 130 ஆக இருக்கும்.

பின் குழந்தை வளர, வளர நிமிடத்திற்கு 72 முறை துடிப்பாக மாறி நிலை கொள்ளும். இயல்பான நிலையில் நிமிடத்திற்கு 72 முறை,  X ஒரு மணிக்கு 72 X 60 முறை, ஒரு நாளைக்கு 72 X 60 X 24 என்று நாம் வாழும் காலம் முழுதும் இதயம் இயங்கிக் கொண்டே இருக்கும்.

சுருங்கி, விரியும் தன்மையையே நாம் இதயத் துடிப்பாக உணர்கிறோம். அவ்வாறு இடைவிடாமல் இதயம் இயங்க வேண்டுமானால் அதற்கு தேவையான சக்தி இடைவிடாமல் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த சக்தி இடைவிடாமல் கிடைக்க வேண்டுமானால் இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடையின்றி கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தங்குத் தடையின்றி (ஒரு நிமிடம் கூட நில்லாமல்) கிடைக்கும் இரத்தம் மூலமே இதய இதயத்திற்கு தேவையான உயிர்க்காற்றும் (ஆக்ஸிஜன்), சத்தும் கிடைக்கிறது. அப்படி நில்லாமல் கிடைக்கும் இரத்த ஓட்டம் இதயத் தமனி (coronary Artery) மூலமே, இதயத்திற்கு கிடைக்கிறது.

இதயத் தமனிகள் (Coronary Arteries):

மகாதமனி (Aorta) (இடது வெண்டிரிக்கள், left ventricle) இடது கீழறையிலிருந்து வெளியேறும் இடத்தில், இதயத் தமனி பிரிகிறது. பிரிகின்ற இதயத் தமனிதான் முழு இதயத்திற்கும் தேவையான இரத்த ஓட்டத்தை கொடுக்கிறது.

மகாதமனியிலிருந்து பிரியும் இதயத்தமனி மேலும் இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிகிறது. இடது பெரும் இதயத் தமனி (left main coronary artery (also called left main track) வயது பெரும் இதயத் தமனி (right coronary artery - RCA) என்று இரு பிரிவுகளாக பிரிந்து இதயத்தின் இடது, வலது புறங்களுக்கு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இடது பெரும் இதயத்தமனி மேலும் இரண்டாக பிரிகிறது. இதயச் சுற்றுத் தமனி (circumflex artery) இடது முன் கீழிறக்கத் தமனி (left anterior descending artery - LAD) என்று இரண்டாகப் பிரிகிறது.

சுற்றுத் தமனி, இடது மேலறை, இடது கீழறையின் (Left Ventricle) பக்கவாட்டிற்கும், பின் பகுதிக்கும் இரத்தம் கொண்டு செல்கிறது. முன் கீழறக்கத் தமனி, இடது கீழறையின் முன்புறம், கீழ்புறம், கீழறைகளின் இடைச்சுவர் ஆகிய பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்கிறது. வலது பெரும் இதயத் தமனி (Right Coronary Artery - RCA) வலது ஓரத் தமனி  (Right Marginal Artery), பின் கீழறக்கத் தமனி (Posterior Descending Artery) என்று இரண்டு பிரிவாக பிரிந்து வலது மேலறை, வலது கீழறை, கீழறைகளின் அடிப்பகுதி, இடைச்சுவர்களின் (Septcem) பின்புறம் ஆகிய பகுதிகளுக்கு இரத்தத்தை செலுத்துகிறது. இந்த பிரிகின்ற தமனிகள் எல்லாம் ஒரு வலைப்பின்னல் போல் அமைந்து, இதயத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டத்தை, இடைவிடாமல் கிடைக்கச் செய்கின்றன.

துணைத் தமனிகள் (Collateral Vessels):

இவை இதயத்தில் அமைந்துள்ள சிறிய தந்துகிகள் (tiny blood vessels - capillaries) ஆகும். இதயம் இயல்பாக செயல்படும் பொழுது, இவை மூடி இருக்கும். இதயத்தமனி சுருக்க நோயில், இவை விரிந்து, இதயத்திற்கு தேவையான இரத்தத்தை செலுத்தத் துவங்கும். அதனால் இதய இயக்கத்திற்கு தேவையான இரத்தம் கிடைக்கும். இதனால் மாரடைப்பு தவிர்க்கப்படும். இனி இதயத் தமனி நோய்களை பார்ப்போம்.

இதயத் தமனி இரத்த ஓட்டக் குறைபாடு (Ischemia) : இதயத் தமனி வழியே இதயத்திற்கு தேவையான இரத்தம் குறைவின்றி தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் காரணமாக இரத்த ஓட்டம் குறைந்தால், இதயத்திற்கு தேவையான உயிர் காற்றும் (Oxygen) சத்தும் கிடைக்காமல் போகும். அதனால் இதயம் நின்று விடும் நிலை ஏற்படும். இதையே “மாரடைப்பு’’ (Heart Attack) என்று கூறுகிறோம். மிகவும் ஆபத்தமான நிலை இது. உடனடியாக மருத்துவம் செய்யாவிடில் மரணம் நிகழக் கூடிய நிலை ஏற்படும். இனி இது எப்படி நிகழுகிறது எனப் பார்ப்போம்.

மாரடைப்பு (Heart Attack): மிகவும் ஆபத்தான இந்நோய் எதிர்பாராமல் ஏற்படும். இதயத்திற்கு செல்கின்ற இரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால் இதயம் துடிக்காமல் நின்று விடும். இதயம் செயல்படுவது நின்று போவதால் மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல்படாமல் நின்று விடும். நோயாளி மரணமடைந்து விடுவார்.

“சற்று முன் கூட பேசிக் கொண்டிருந்தாரே, திடீரென்று சாய்ந்து விட்டார், இறந்து விட்டார்’’ என்றெல்லாம் பல முறை நாம் கேட்டுள்ளோம். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்நோயேயாகும். மிகவும் அதிகளவில் மரணம் நிகழ்த்த கூடிய நோய் இது. ஆனால் இந்நோயை கண்டறிவதும், மருத்துவம் செய்வதும் முழுமையாக இந்நோயிலிருந்து நோயாளிகளை மீட்டு, நீண்ட வாழ்வு வாழ வகை செய்யலாம் இந்தியாவில் இந்நோயினால் வருடத்திற்கு ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய்க்கான காரணங்களை பார்ப்போம்.

“நிலையான மார்பு வலி’’, “நிலையற்ற மார்பு வலி’’ மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் சட்டைப் பையில் கீழ்கண்ட 3 மாத்திரைகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள் புழங்குமிடங்களில் (படுக்கையறை, உணவு உண்ணும் அறை போன்ற இடங்களில்) கைக்கு உடனே எடுக்கும்படியாகவும் இம்மாத்திரைகளை வைத்திருத்தல் நலம் பயக்கும். லேசானா நெஞ்சு வலி ஏற்பட்டாலும் உடனடியாக செய்கின்ற வேலையை, நிறுத்திவிட்டு (நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாலும்) உடனடியாக அருகில் ஓர் இடத்தில் அமைதியாக அமர வேண்டும். படுக்கை இருந்தால் படுத்துக் கொள்ள வேண்டும் உடனடியாக மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மருத்துவமனைக்கு செல்ல, அனைத்து முயற்சிகளையும் கைக்கொள்ள வேண்டும். தனியாக இருக்கும்பொழுது மார்பு வலி வந்தால், ஆழ்ந்து மூச்சித்திழுத்து, இரும வேண்டும். நெஞ்சுப் பகுதியை கைகளால் பிசைந்து கொடுக்க வேண்டும். மாத்திரைகளையும் உடனடியாக சாப்பிட வேண்டும்.

மார்பு வலியேற்படும் பொழுது உண்ண வேண்டிய மாத்திரைகள்:

ஆஸ்பிரின் 75 mg. (Aspirin 75 mg)

(இம்மருந்து இரத்தம் உறைதலை தடுக்கும்)

எனலார்பில் (Enalarpil - Vaootec)

(இம்மருந்து இரத்தக் குழாய்களை விரித்து கொடுக்கும். அதனால் இரத்த ஓட்டம் அதிக அளவு இதயத்திற்கு செல்லும்.)

ஐசாட்ரில் 5 (Isodril 5)

(இம்மருந்தை நாக்கின் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இதயத் தமனிகளை விரித்து அதிகளவு இரத்தம் இதயத்திற்கு செல்ல வழிவகுக்கும், மருந்து இது.)

 (தொடரும்...)

- உண்மை இதழ் ஜூன் 16 -  ஜூலை 15 .2020

செவ்வாய், 3 மார்ச், 2020

இதய பாதிப்பிலிருந்து காக்கும் வழிகள்

மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் முக்கியமானது இதய செயலிழப்பு! அதிலும், சர்க்கரை நோய் கொண்டவர்களுடைய இதயம் மற்ற சாதாரண இதயத்தைவிட மும்மடங்கு பலவீன மானது.

இதயப் பாதிப்புகள் பிறப்பிலேயே ஏற்படலாம். சிறுவயதிலும் ஏற் படலாம். நடுத்தர வயதிலும் ஏற்பட லாம், வயதான வருக்கும் ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் வரும் இதய நோய்களை நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டும்.

இதற்கான மிக முக்கிய காரணங்கள்

# உடல்பருமன்

# உடல் உழைப்பின்மை

# நீரிழிவு நோய் கட்டுப் பாடின்மை

# தொடர் மனச்சிதைவு நோய்

# தொடர் மருத்துவப் புறக் கணிப்பு

அய்ம்பது வயதினரைத் தாக்கிக் கொண்டிருந்த இந்த மரண நோய், இன்று இருபது வயதினரைக்கூட அதிகமாகத் தாக்குகிறது.

குறிப்பாக, இந்த இதயத் தமனி நோய்கள் சர்க்கரை நோயாளிகளை அதிகமாகத் தாக்குகின்றன.

இதற்குத் தீர்வு என்ன?

5 வகையான 100-களைக் கண்காணித்தலும் 3 வகையான 'உ'களை கடைப்பிடித்து வருவதுமே இதற்கான தீர்வாகும்...

# நம் உயரத்திலிருந்து 100அய்க் கழித்தால் வரும் எண்தான் நம் உடல் எடையாக  இருக்க வேண்டும்.

# நம் சராசரி ரத்தச் சர்க்கரை அளவு 100அய்த் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

# நம் இதய ரத்த  கால்சியம் ஸ்கோர் எனும் இதய நாள கால்சியம் படியும் இலக்கம் 100க்கும் கீழ் இருத்தல் அவசியம்.

# நம் கெட்ட கொழுப்பு எண் 100அய்த் தாண்டாமல் இருக்க வேண்டும்

# நம் உடல் தயாரித்திடும் நல்ல கொழுப்பு எனும்  எண் 100 அய் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

உணவு, உள்ளுணர்வு, உடல் உழைப்பு எனும் இந்த  மூன்றை முறையாகப் பாதுகாத்தால், நிச்சயமாக இதயம் பாதுகாக்கப்படும்.

- விடுதலை நாளேடு, 2.3.20

திங்கள், 30 செப்டம்பர், 2019

இதய நோய்களைத் தடுக்கலாம்

அன்றாட வாழ்க்கை முறையில் மாற் றங்கள் செய்தால், இதய நோய்களைத் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதய நோய்களுக்கு வயது, பாலினம், குடும்பப் பின்னணி எனப் பல்வேறு காரணிகள் இருந் தாலும் சில அடிப்படையான வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொண்டால் அவற்றி லிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். இதய நோய்களைத் தடுப்பதற்கான சில ஆலோசனைகள்

புகைபிடிப்பது, புகையிலை பயன் படுத்துவது ஆகிய இரண்டு பழக்கங்களும் இதய நோய்களை உருவாக்குவதற்கான முக் கியக் காரணங்களாகக் கண்டறியப் பட்டுள் ளன. புகையிலையில் இருக்கும் வேதிப் பொருட்கள் இதயம், ரத்த நாளங்களைப் பாதிப்படையச் செய்யும். இந்தப் பாதிப்பு, நாளடைவில் மாரடைப்பு ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. சிகரெட்களில் இருக்கும் கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவில் மாற்றத்தை உருவாக்கும்.

இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. போதுமான ஆக்சிஜன் கொண்ட ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் கடினமாகச் செயல்பட வேண்டியிருப்பதால் இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது. இதய நோய்களைத் தடுக்க வேண்டுமென்றால், புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதுதான் சரியான வழி. எப்போதாவது நண்பர்களுடன் வெளியே செல்லும்போதுதான் புகைபிடிக்கிறேன் என்று சொன்னால் அதுவும் ஆபத்துதான். ஆனால், புகைபிடிப்பதை நிறுத்தியவுடன் இதய நோய்களுக்கான அறிகுறிகள் இயல் பாகவே குறையத் தொடங்கும்.

30 நிமிட உடற்பயிற்சி

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது இதய நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி. உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான எடை, உணவு போன்ற அம்சங்களை இணைத்துக் கொள்ளும்போது அதனால் கிடைக்கூடிய பலன்கள் அதிகம். உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, நீரிழிவு நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த உதவும். ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் சீராக இயங்குவதற்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சியுடன், தோட்டக்கலை, வீட்டு பராமரிப்புப் பணிகள், உங்கள் செல்லப் பிராணியுடன் நடைப் பயிற்சிக்குச் செல்வது என அனைத்துமே உடற்பயிற்சி செய்வது போலத்தான். அதனால் எடுத்தவுடனே கடுமையான உடற்பயிற்சி முறைகளைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையான நடைப்பயிற்சி, தோட்டப் பராமரிப்புப் பணிகள் போன்றவற்றிலிருந்து உங்கள் அன்றாட உடற்பயிற்சியைத் தொடங்கலாம்.

ஆரோக்கியமான உடல் எடை

உடல் எடை அதிகமாக இருப்பது இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. உங்கள் உடல் நிறைக் குறியீட்டைத்   தெரிந்துகொண்டு, அதன்படி உங்கள் உடல் எடையைப் பராமரிப்பது நல்லது. ஆண்களின் இடுப்பளவு 40 அங்கு லத்துக்கு (101.6 செ.மீ) அதிகமாக இருந்தால், அவர் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அதேபோல், பெண்களின் இடுப்பளவு 35 அங்குலத்துக்கு (88.9 செ.மீ) அதிகமாக இருந் தால் அவர்கள் உடல்பருமனால் பாதிக்கப் பட்டிருப்பதாகப் பொருள். அதிக உடல் எடையுடன் இருப்பவர்கள் 3-இலிருந்து 5 சதவீதம் எடையைக் குறைத்தாலும் அது ரத்தச் சர்க்கரை அளவு, நீரிழிவு நோய் அறிகுறிகளைக் குறைக்கும்.

பற்களில் உள்ள கரையை போக்க....

* கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.

* தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

- விடுதலை நாளேடு, 30. 9. 19

திங்கள், 9 செப்டம்பர், 2019

இதயம் சார்ந்த நோய்களை தவிர்க்க....



இந்த நவீனத் தொழில்நுட்பக் காலத் திலும் உலக அளவில் மனித உயிரிழப்புக்கு முதன்மைக் காரணமாக இருப்பது இதயம் சார்ந்த நோய்களே. நாம் மனது வைத்தால் இதைத் தவிர்க்க முடியும். குறிப்பாக, முதுமையில் .

தினமும் மாரடைப்புடன் மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் பல நோயாளிகளைப் பார்க்கிறேன். தனக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பது தெரிந்தும், அதை அலட் சியப்படுத்தியவர்களாகவும் அல்லது தனக்கு இதய நோய் வராது என்கிற அலட்சிய வாழ்க்கை முறையைக் கடைப் பிடிப்பவர்களாகவும்தான் இருக்கி றார்கள்.

எனவே, இதயத்தைப் புரிந்துக் கொள்வதன் மூலம் பல நோய்களுக்கு வாசல் கதவை திறக்காமல் இருக்க முடியும்.

வயது ஏற ஏற இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழல்களில் விரைப்பும் தடிப்பும் அடைப்பும் அதிகரிக்கும் சாத்தியம் அதிகம்.

அது மட்டுமல்ல; இதயத் தசைகளிலும் பல்வேறு தேய்மானங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும். இதை புரிந்துக்கொண்டால் எந்தெந்த பிரச் சினைகள் இதயம் என்கிற இன்ஜினைப் பழுதாக்கும், எப்படி பழுது படாமல் இதயத்தை பக்குவமாக காக்க முடியும் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

என்ன நடக்கிறது

நம் இதயம் சராசரியாக ஒரு நிமி டத்துக்கு அய்ந்து லிட்டர் உச்சந் தலை முதல் உள்ளங்கால்வரை ரத்தத்தை பாய்ச்சு கிறது.

தாயின் கருவறையில் நான்காம் மாதம் தொடங்கி உயிர் இருக்கும்வரை ஓய் வறியா சூரியனாக உழைக்கும் இந்த இதயத் தசைகள் உரம் பெற, ரத்தம் தேவை.

இதயத் தசைகளுக்கு ரத்தம் அனுப்பும் ரத்த குழல்களின் பெயர் கரோனரி(Coronary) ரத்தக் குழல்கள்.


இந்த ரத்தக் குழல்களில் கொழுப்போ வேறு பல காரணங்களாலோ அடைப்பு ஏற்பட் டால் எந்தப் பகுதியில் அடைப்பு ஏற்படுகிறது.

அந்தப் பகுதியில் உள்ள இதயத் தசைகளுக்கு ஆக்சிஜன், மற்ற சத்துக்கள் செல்லாமல் அப்பகுதித் தசைகள் பழுதடையத் தொடங்கி, இதய செயல் பாடு குன்றத் தொடங்கும் அல்லது நின்று விடும். அதனால்தான் மார டைப்பில் தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் பேரிழப்பு என்கிறது மருத்துவ உலகம்.

மாரடைப்பு வருவதற்கான

சாத்தியக்கூறு உள்ளவர்கள்:

# 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள்,

# மாதவிலக்கு சுழற்சி நின்ற பெண்கள்

# ரத்தத்தில் மிகைக் கொழுப்பு உள்ளவர்கள்

# இருக்க வேண்டிய அளவைத் தாண்டிய உடல் பருமன்

# குடும்பத்தில் ஏற்கெனவே எவ ருக்காவது இதயம் சார்ந்த நோய்கள் இருந்தால்

# மதுவையும் புகையையும் இரு கண்களாகக் கருதுபவர்கள்

# நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தும், அதை கட்டுப் படுத்தத் தவறி வாழ்பவர்கள்

# உடல் உழைப்பையும் உடற்பயிற்சியையும் அயர்ச்சியாக நினைப் பவர்கள்

# நாவைக் கட்டுப்படுத்தாமல் உண்பவர்கள்

# அடிக்கடி நொறுக்குத் தீனி, துரித உணவு, பேக்கரி உணவு, எண்ணெயில் பொரித்த உணவு, உப்பை அதிகம் உட்கொள்பவர்கள்

# எப்போதும் பரபரப்புடன், மன உளைச்சலுடன் இருப்பவர்கள்

நேரடி அறிகுறிகள்

(Classic Chest pain)

# நெஞ்சு எலும்பின் பின்புறம் (Retrosternal), நெஞ்சின் முன்பகுதியில் பிழிவது(squeezing) போலவோ (அ) இறுக்குவது (Tightness) போலவோ வலி இருக்கும்.

# தொண்டைக்குழி, நெஞ்சு எலும்பின் கீழ்பகுதியின் புறத்தில், அக்குள் பகுதிவரை வலி பரவும். இந்த வலி கத்தியால் கிழிப்பதுபோல (அ) நெஞ்சுப் பகுதியில் இனம் புரியாத கனம்  , அழுத்தம், அடைப்பதுபோல வரலாம்.

# அதிகமாக வியர்த்துக் கொட்டி உடலே சில்லிட்டும் போகலாம், வாந்தி எடுக்கலாம். இப்படி ஏற்படுகிற வலி கழுத்து, தாடை, தோள்பட்டை, முதுகு, கைகளுக்கும் பரவலாம். குறிப்பாக இடது கைகளுக்கு. இந்த அறிகுறிகளை அலட் சியப்படுத்தக் கூடாது

மறைமுக அறிகுறிகள்

(Non classic Chest pain):

# நெஞ்சின் முன்பகுதியில் வலி சில விநாடிகள் தோன்றி மறைவது அல்லது சில மணி நேரம் தொடர்ந்து இருந்தால்

# சிறிய வேலையிலோ கழுத்து அசைவிலோ வலி வந்தால்

# சின்னச் சின்ன வேலையிலும் வலி வருவது, நடந்தால் மூச்சு வாங்குவது அல்லது எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் போதே மூச்சு வாங்குவது

# குமட்டல், தலை பாரம், பலவீனம், மனக்குழப்பம், தோள்பட்டை, கைகள், தாடைப் பகுதியில் வலி.

# வயிற்றின் மேல் பகுதியில் வலி, வியர்வை அதிகம் இருந்தால் (ஆண் டாசிட் மருந்துகள் குடித்து வலி குறைந் தாலும் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இ.சி.ஜி. எடுத்து பார்க்கவேண்டும்)

செய்துகொள்ள வேண்டிய

பரிசோதனைகள்

# ரத்த அழுத்தம்

# இ.சி.ஜி

# ரத்தத்தில் கொழுப்பு, நீரிழிவு - சிறுநீரகச் செயல்பாடு

# தேவைப்பட்டால் எக்கோ(Echo), டிரெட்மில்

# மாரடைப்பு வந்துள்ளதா என்பதை அளவிடும் தனியாக ரத்தப் பரிசோ தனைகள்

- விடுதலை நாளேடு, 9.9.19

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

உடல் நலம் சிறக்க...

இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அவசியம். நாளொன்றுக்கு 3 வேளை அதிகமாக உண்பதைவிட, சிறிது சிறிதாகப் பலமுறை உண்பது நல்லது. இரவு உணவைத் தூங்கச் செல்வதற்கு 2-3 மணி நேரத்துக்குமுன் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டும். இரவில் சர்க்கரை, தயிர், தேங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சிமுன் அமர்ந்து உணவு உண்பதைத் தவிர்ப்பது நன்று. பீட்சா, பர்க்கர் போன்ற பாஸ்ட்ஃபுட் உணவு வகைகள் இதயத்துக்கு ஆகாது. நாளொன்றுக்குக் குறைந்தது 5 முறை பழங்களையும் காய்கறி களையும் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. பப்பாளிப் பழத்தைக் காலை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. முடிந்தால் தினமும் வால்நட் பருப்பைச் சாப்பிடலாம். எண்ணெய்யில் பொரித்த மீனையும் இறைச்சி யையும் தவிர்ப்பது நல்லது.

உப்பு அதிகம் தவறு


உணவில் அதிகப்படியான உப்பைச் சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தத்தை உரு வாக்கும். உணவைச் சமைத்த பின், அதாவது சாப்பிடும்போது உப்பைச் சேர்க்கக் கூடாது. ஏற்கெனவே உப்பு அதிகம் சேர்த்துத் தயார் நிலையில் உள்ள நூடுல்ஸ், சிப்ஸ், முட்டை, சாஸ், கெட்ச்அப் போன்றவை உடலுக்குக் கேட்டையே விளைவிக்கும். உப்புக்குப் பதிலாக வெங்காயம், பூண்டு, மிளகு, எலு மிச்சைச் சாறு போன்றவற்றை ருசிக்குப் பயன்படுத்தலாம்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த...


ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஊறுகாய், அப்பளங் களைத் தவிர்ப்பது எளிய வழி. இளநீர், வாழைப்பழம், ஆரஞ்சு, எலு மிச்சைச்  சாறு போன்றவற்றில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. உடலுக்குத் தேவையான (90ml/dl) பொட்டாசியத்தை எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே, இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது.

நல்ல கொழுப்பை அதிகமாக்க...


குழம்பு மீன், வால்நட், கிரீன் டீ, காலை உணவில் பப்பாளி, கீரை வகைகள் போன்ற வற்றை வாரத்துக்கு 2 முறையும் பாதாம் பருப்பை வாரத்துக்கு 2-3 முறையும் உட் கொள்வது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். மது அருந்துவதைத் தவிர்ப்பது உடல் நலனுக்கும் குடும்ப நலனுக்கும் நன்று. சால்மன் போன்ற ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளைச் சாப் பிட்டால், உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும், ரத்த அழுத்தம் குறையும், ரத்த நாளங்களில் ரத்தம் உறைவது தடைபடும், மாரடைப்பு ஏற்படும் ஆபத்து நீங்கும்.

ரத்த குழாய்களில் அடைப்பு


கொழுப்பால் உண்டாகும் அடைப்புக்கு அத்திரோமா (Atheroma) என்று பெயர். இந்த அத்திரோமா இதயத்துக்கு நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் மட்டு மல்லாமல்; மூளை, சிறுநீரகங்களுக்குச் செல் லும் ரத்தக் குழாய்களிலும் அடைப்பை ஏற் படுத்துகிறது. நெய், வெண்ணெய், முட்டை, மாமிசம், மூளை, ஈரல் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நன்று. போதிய உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பதே உடலில் கொழுப்பு சேர்வதற்கு முக்கியக் காரணம்.

டிரான்ஸ்பேட் எனும் எதிரி


உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், டிரான்ஸ்ஃபேட்-அய் (Transfat) 
அதிகம் பயன்படுத்துகின்றன. பிஸ்கெட், பொரித்த உணவு, ரஸ்க், ரொட்டி, பன், கேக், மின் அடுப்பில் பொரிக்கப்பட்ட பாப்கார்ன், பீட்சா, பர்க்கர், பிரெஞ்சு பிரை, சாக்லேட், ஐஸ்கிரீம்கள் ஆகியவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகம் உள்ளது. டிரான்ஸ்பேட் உணவால் உடல் பருமன் அதிகமாவதுடன், நல்ல கொழுப்பின் (HDL) அளவு குறைந்து கெட்ட கொழுப்பின் (LDL) அளவு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கிறது. மேலும், ரத்தத்தில் triglyceride என்னும் கெட்ட கொழுப்பின் அளவும் அதிகமாகிறது. எனவே, டிரான்ஸ்ஃபேட் அதிகம் உள்ள உணவை அறவே தவிர்ப்பது இதய நலனுக்கு நன்று.

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?


கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய்யில் சரிக்குச் சமமாக நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பும் உள்ளன. நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது. சூரியகாந்தி எண்ணெய் குறைந்த அடர்த்திகொண்டது. அதில் PUFA வகைக் கொழுப்பு அதிகமாக உள்ளது. இந்தக் கொழுப்பு உடலுக்கு நல்லது. பாமாயிலில், அடர் கொழுப்பு உள்ளதால் அறவே தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் (30 கிராம்) அளவு எண்ணெய் போதுமானது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு 3 டீஸ்பூன் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வறுவலுக்கு ஏற்ற எண்ணெய்


எண்ணெய்யை அதிகப்படியாகச் சூடு படுத்தும்போது, ரசாயன மாற்றம் ஏற்பட்டு அதனால் புற்றுநோய் ஏற்படச் சாத்தியம் உள்ளது. அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியதாகவும், நுரையும் புகையும்  ஏற்படுத்தாத நல்லெண் ணெய்யே வறுவலுக்கு ஏற்ற எண்ணெய் ஆகும். கடலை எண்ணெய்யையும் வறுவலுக்குப் பயன்படுத்தலாம்.

எண்ணெய்யைப் பாதுகாக்க...


எண்ணெய் பாக்கெட்டில் TFA-வின் அளவு குறிப்பிட வேண்டும் எனச் சட்ட மாக்கப்பட்டுள்ளதால், TFA இல்லாத எண் ணெய்களை வாங்க வேண்டாம். பிளாஸ்டிக், டின்களில் வாங்கப்படும் எண்ணெய்யை உடனடியாக இரும்பு, அலுமினியம் அல்லது கண்ணாடி பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண் டும். சமையல் எண்ணெய்யைக் குளிர் நிறைந்த, வெளிச்சம், ஈரமில்லாத பாத்திரத்தில் இறுக மூடி (காற்றுப்புகாதவாறு) பாதுகாக்க வேண்டும்.

ஆயுளை நீட்டிப்போம்


இங்கு உள்ள எளிய குறிப்புகளைப் பின்பற்றினால், இதயத்தின் நலன் மேம்படும். இதயத்தின் நலனே மனிதனின் நலனுக்கு அடிப்படையானது. இதய நலனை நன்கு பேணினால், உடலின் நலன் மட்டுமல்ல; நமது ஆயுளும் நீடிக்கும்.

-  விடுதலை நாளேடு, 11.2.19