ஞாயிறு, 30 அக்டோபர், 2016

எடைக் குறைப்பு உணவுக் கட்டுப்பாடு நல்லதா?

இப்போதெல்லாம் பலரும் சட்சட்டென எடையைக் குறைக் கிறார்கள். அதைப் பெரிய சாதனை போலச் சொல்கிறார்கள். இப்படித் திடீர் எடை குறைப்புக்குப் பின்னால் இருப்பது கிராஷ் டயட் எனப்படும் திடீர் உணவுக் கட்டுப்பாடு. இது பல நேரங்களில் மோசமாக முடிவதும் உண்டு. எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்துவதற்கு முன் யோசிக்க வேண்டியவை:
உணவைக் கட்டுப்படுத்தும்போது உடலுக்கு அத்தியாவசியமான சோடியம், பொட்டாஷியம் போன்ற உப்புகள் தேவையான அளவு கிடைக்காமல் போகலாம். இவை தடைபட்டால் மாரடைப்பு ஏற்படுவதற் கான சாத்தியம் இருக்கிறது.
உணவுக் கட்டுப்பாட்டை கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்கும்போது எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்), ரத்தசோகை போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.
போதுமான அளவு ஊட்டமுள்ள உணவு உடலுக்குள் செல்ல வில்லை என்றால் மனரீதியான பிரச்சினைகள், மன அழுத்தம் போன்ற வையும் ஏற்படக்கூடும்.
அலட்சியம் பார்வையை பறிக்கலாம்  
நாம் படிக்கும்போதும், எழுதும்போதும், தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பயன்படுத்தி பார்க்கும்போது கண்ணீர், நீர் வடிவதோ, தலை வலி வருவதோ, பார்வை குறைபாட்டுக்கான காரணமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பார்வைக் குறைபாடு இருந்தால் சாதாரணக் கண்ணாடி போட்டு ஆரம்ப நிலையிலேயே சரி செய்துவிடலாம்.
பார்வைக் குறைபாட்டுக்கு உரிய நேரத்தில் கண்ணாடி போடாவிட்டால், குறைபாடு அதிகமாகி பார்வைக் கோளாறு என்ற நிலைக்குச் சென்றுவிடும். இந்த நிலையில் கண் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்துக்கு நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், நிரந்தரமாகப் பார்வையிழப்பு ஏற்பட்டு விட வாய்ப்பு உண்டு.
சிலருக்குப் பார்வைக் குறைபாடு இருக்கும். கண்ணாடி போட்டால் சரியாகி விடலாம். ஆனால் அது தெரியாமல் கண் மருத்துவமனைக்குப் போனால் கண்ணாடி போட வைப்பார்கள், ஆபரேஷன் ஏதாவது செய்துவிடுவார்கள் என்று பயந்துகொண்டு கண்ணாடி போடாமலேயே பார்வை பிரச்சினையுடனேயே நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதன்மூலம் பார்வையைக் காப்பாற்ற முடியும்.
கண்ணில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் சுயவைத்தியம் வேண்டாம். கண்ணில் ஏற்படும் சிவப்பு எல்லாமே மெட்ராஸ் அய் இல்லை. சில ஆபத்தான கண் நோய்களின் அறிகுறியாகவும் இருக்க லாம். எனவே, கண்ட கண்ட மருந்துகளைப் போட்டு, சரிப்படாவிட்டால் கடைசியில் மருத்துவரைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்போக்கு இனியும் வேண்டாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கண் பரிசோதனை மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்களின் சிறு நீரகங்கள் கண்களில் பாதிப்பு ஏற்படுவது அதிகம் என்பதால், அதனை உணர்த்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
-விடுதலை,24.10.16

சனி, 29 அக்டோபர், 2016

ஜப்பான் பேராசிரியருக்கு மருத்துவ நோபல் பரிசுஸ்டாக்ஹோம், அக்.4 செல்களின் மறுசுழற்சி செயல்முறைக்கான கண்டுபிடிப்புக்காக ஜப்பான்பேராசிரியர்யோஷி னோரி ஓசுமிக்கு மருத்துவத்துக் கான நோபல் பரிசு அறி விக்கப்பட்டுள்ளது. இயற் பியல்,மருத்துவம், பொரு ளாதாரம்,அமைதி,வேதியி யல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று தொடங்கியது.

மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் யோஷினோரி ஓசுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னைத்தானே உட்கொண்டு மறுசுழற்சிசெய்யும் உயிரியல் செல்களின் செயல் முறைகள்தொடர்பானகண்டு பிடிப்புக்காக  இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட் டுள்ளது. செல் சைக்காலஜியில் ஆட்டோபேகி என்பது அடிப் படையான செயல்பாடாகும். இது பாதிக்கப்பட்ட மற்றும் வயது முதிர்ந்த செல்களை ஒரு அறை போன்ற அமைப்புக்குள் தள்ளி தன்னைத்தானே உண்டு புதிய செல்களை மறுசுழற்சி செய்யும்.

இதில் ஏற்படும் பாதிப்பி னால்தான் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. 1960 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பாக கண்டுபிடிப்புகள் வெளிவந்தாலும், ஆட்டோ பேகி செயல்பாட்டை ஈஸ்ட் மூலம் முழுமையாக விளக்கியிருக்கிறார் ஓசுமி. இதற்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

71 வயதாகும் ஓசுமி, 1974 இல் டோக்கியோ பல்கலையில் பிஎச்டி பட்டம் பெற்றவர். கடந்த ஆண்டு ஒட்டுண்ணி நோய்களுக்கான சிகிச்சை முறையை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் வில்லியம் கேம்பெல்,ஜப்பானின்சதோஷி ஓமுரா, சீனாவின் டு யுயு ஆகி யோருக்கு மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது.

-விடுதலை,4.10.16

கண்கள் பாதுகாப்பு


கண்களில் ஏற்படும் தற்காலிக எரிச்சல், அரிப்பு போன்றவற்றுக்குக் கை மருத்துவமாக நாமே சில சிகிச்சைகளைச் செய்யலாம்.  அதேநேரம், நாள்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவரையே நாட வேண்டும்.
சில எளிய முறைகள்:
> எப்போதுமே வெளியே போய்விட்டு, அலுவலகம் போய்விட்டு வீடு திரும்பிய பிறகு கண்களைத் தொடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிடுங்கள். பொதுவாகக் கைகளிலிருந்துதான் நுண்கிருமிகள் கண்களுக்கு அதிகம் தொற்றுகின்றன.
> வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும். வெள்ளரியைச் சாப்பிடுவது மட்டுமல்லாமல், வட்டமாக நறுக்கிக் கண்களின் மேல் வைத்தால் கண் அரிப்பு, எரிச்சல் குறையும்.
> ரோஸ் வாட்டர் கண் அரிப்பைக் குறைக்கும். ரோஸ் வாட்டரை நேரடியாகப் பயன்படுத்தாமல், தண்ணீரில் கலந்து கண் இமைகளின் மேல் தடவலாம், கழுவலாம், துணியால் ஒத்தி எடுக்கலாம்.
> அதேபோல நல்ல, குளிர்ச்சியான பாலில் பஞ்சை நனைத்துக் கண் இமைகளின் மேல் ஒத்தி எடுக்கலாம்
-விடுதலை,3.10.16

நோயின்றி வாழ நீண்ட நேரம் அமர்ந்தபடி இருக்காதீர்கள்தனிமனித உடல், மன ஆரோக்கியத்தில் புதிய புதிய சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகிறோம். 25-30 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கேயோ யாருக்கோ பாதித்திருக்கிறது என்று சொல்லிக் கேள்விப்பட்ட புற்றுநோய், மாரடைப்பு, உடல்பருமன் நோய், நீரிழிவு நோய், மூட்டுவலி போன்ற நாள்பட்ட நோய்கள் நமக்கும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள், வேண்டப்பட்டவர் களையும் சர்வ சாதாரணமாகப் பாதிப்பதை இன்றைக்குப் பார்க்கிறோம்.
பெருகிவரும் உடல் உழைப்பின்மை, உணவு முறை மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம், வேலைப்பளு, குடிப்பழக்கம், புகைத்தல், முதுமை, மரபு வழிக் குறைபாடுகள் எனப் பல்வேறு ஆபத்தான காரணிகளோடு இந்த நோய்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விடச் சமீப காலத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் தீவிரமாக எச்சரித்துவருகின்றனர். சிகரெட் புகைப்பது எந்த அளவு உடலுக்குத் தீமை விளை விக்குமோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும் தீமையை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவதால் இந்தப் பிரச்சினை கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக மாறியுள்ளது.
நம்முடைய அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளைச் சற்றே உற்று நோக்கினால் வீட்டில், பணியிடத்தில், தினசரிப் பயணங்களில் பெரும்பாலான நேரத்தை நாம் உட்கார்ந்திருப்ப திலேயே செலவு செய்வதை அறிய முடியும். அதாவது நாம் நடமாட்டத்துடன் இருக்கும் நேரம் மிகமிகக் குறைவு. ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு நேரம் உட்கார்ந் திருக்கலாம் என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியா விட்டாலும், உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது உடல்நலனுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
வெகு நேரம் உட்கார்ந்திருக்கும்போது, நம்முடைய உடல் ஒரே இடத்தில் அசைவற்று இருப்பதால், ஒரு செயலற்ற (இயக்கமற்ற) நிலைக்குத் தள்ளப்படுகிறது; அதனால் உடலில், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவுகள் சீராக இருப்பதில்லை. அத்துடன் தசைகளும் எலும்புகளும் வலுவிழக்கின்றன. குறிப்பாகக் கழுத்து - முதுகுப் பகுதி தசைகள் இறுகி வலியை உண்டாகுவது, உடலில் கொழுப்புத்தன்மை கூடி உடல் எடை அதிகரிப்பதுடன் உடல்பருமனுக்கும் வழிவகுக்கிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து 147% சதவீதமும், நீரிழிவு நோய் ஆபத்து 112% சதவீதமும், இதய நோய்களால் ஏற்படும் மரணங்கள் 90% சதவீதமும், மற்ற வகைக் காரணங்களால் ஏற்படும் மரணங்கள் 49% சதவீதமாகவும் அதிகரிக்கக் கூடும் என்று உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் கூட்டு முடிவு அறிவிக்கிறது. இந்த ஆய்வு 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ‘ என்ற இணைய மருத்துவ ஆராய்ச்சி நூலில் வெளியாகியுள்ளது.
எப்படிக் குறைக்கலாம்?
முதலில், எந்தெந்த வேலைகளின்போது நாம் அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப் புரிதல், அடுத்த கட்டத் தடுப்பு நடவடிக்கைக்கு நம்மைத் தயார்படுத்தும். உடல் உழைப்பின்றி நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்ளும் நேரம் வீட்டில் தொலைக்காட்சி அல்லது கணினி/மடிக்கணினி முன் மணிக் கணக்கில் விழுந்து கிடக்கும் நேரம்தான். அதேபோல், அலுவலகத்தில் நேரம் போவதே தெரியாமல் உட்கார்ந்து வேலை செய்வது, தொலைவான பயணங்களின்போது, சாட் செய்யும்போது என நம்மையும் அறியாமல் நமது உடலை பொம்மை’ போன்ற செயல்படாத நிலைக்குத் தள்ளிக்கொண்டே இருக்கிறோம்.
நம்முடைய உடல்நலனைப் பாதுகாப்பதை ஒவ்வொரு நாளும் புறக்கணித்து அல்லது தள்ளிப்போட்டு, திடீரென்று பெரும் நோயை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளுடன், உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதை முடிந்த மட்டும் குறைப்பதையும், உடல்நலப் பராமரிப்பில் அத்தியாவசியக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
உட்கார்ந்திருப்பதைக் குறைக்க
சின்னச் சின்ன உடலியக்க நடவடிக்கைகள் மூலம் நமது உடலைத் தொடர்ச்சியான இயக்கத்தில் வைத்துக் கொண்டு, உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அடிப்படையானது.
அதற்கு, எளிதாகப் பின்பற்றக் கூடிய சில வழிகள்:
குறைந்தது அரை மணி நேரத்துக்கு ஒரு முறை உங்களுடைய இருக்கையை விட்டு எழுந்து 2-3 நிமிடங்கள் நடந்துவிட்டு உட்காரலாம்.
# கைபேசியில் பேசும்போது நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ பேசலாம்.
# வாய்ப்பு இருக்கும் இடங்களில் உட்கார்வதற்குப் பதிலாக நிற்க முயற்சிக்கலாம்.
# பணியிடத்தில், அடுத்த அறையில், மாடியில் அல்லது பக்கத்துக் கட்டிடத்தில் உள்ள உங்கள் நண்பரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளாமல் நேரில் சென்று பார்த்துப் பேசலாம்.
# அலுவலக உதவியாளரிடம் தேநீர், காபி வாங்க அனுப்பாமல் நீங்களே சென்று பருகலாம்.
# லிப்ட்’டுக்கு பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி நடக்கலாம்.
# தொலைக்காட்சி விளம்பர இடைவேளையின்போது, துணி மடிப்பது, சோபா கவரை மாற்றுவது, இஸ்திரி போடுவது போன்ற வேலைகளை நின்றுகொண்டு செய்யலாம்.
# குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக முடிவு செய்து, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைங்கள். அதற்கு மாற்றாகப் பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்கள், பொழுதுபோக்குப் பகுதிகளுக்கு ஒன்றாக நடந்து சென்று வரலாம்.
# குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி, கணினி, நோட் பேட் போன்றவற்றின் முன்பாக உட்கார்ந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளை விளக்கிக் கூறுங்கள்; ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதை முன்கூட்டி முடிவு செய்யலாம்.
# குழந்தைகளின் பிறந்தநாள் மற்ற மகிழ்ச்சியான தருணங்களின்போது பரிசளிப்பதற்குச் சைக்கிள், கிரிக்கெட் மட்டை, டென்னிஸ் மட்டை, ஸ்கேட்டிங் செட், யோகா, நடன வகுப்புகள் போன்ற ஆரோக்கியமான தேர்வுகளைக் கருத்தில் கொள்ளலாம்.
# வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவுவதற்கும், தாங்களே சுய-பராமரிப்பு செய்துகொள்ளவும் குழந்தை களைப் பழக்கலாம், இது அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பட்டாணியில் கிடைக்கும் சத்துகள்
பட்டாணியில் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து அதிகம் உண்டு. ஒரு கோப்பைப் பட்டாணியில் 19 கிராம் நார்ச்சத்து இருக்கும். நார்ச்சத்து குடலைத் தூய்மைப்படுத்தக்கூடியது.
ஒரு கோப்பைப் பட்டாணியில் 16 கிராம் புரதச் சத்து இருக்கிறது.  பட்டாணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், மக்னீஷியம் போன்ற கனிமச்சத்துகள் உண்டு.
பட்டாணியில் கொழுப்பு குறைவு. அதுவும் பெரும்பாலும் நல்ல கொழுப்பு.
இதிலுள்ள பைட்டோஸ்டீரால் உடலின் கெட்ட கொழுப்பு அளவை குறைத்து எலும்பை வலுப்படுத்தக் கூடியது. எலும்பு வலுவிழப்பு நோயை (ஆஸ்டியோ போரோசிஸ்) குறைக்கும். நரம்புச் சிதைவைக் குறைத்து அல்சைமர் நோயையும் மட்டுப்படுத்தும்.
செரிமானத்தை மேம்படுத்துவதாலும், விரைவாகச் சாப்பிட்ட நிறைவைத் தருவதாலும் எடை குறைப்புக்கும் பட்டாணி உதவும். 


-விடுதலை,3.10.16

வெள்ளி, 28 அக்டோபர், 2016

முழு உடல் பரிசோதனைகள் என்னென்ன?

நீரிழிவு நோய் இருக்குமோ என்ற சந்தேகத்தில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு ஒருவர் வந்திருந்தார். அவருடன் துணைக்கு வந்திருந்த நண்பரிடம், நீயும் பரிசோதித்துக் கொள் என்றார்.
நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். எனக்கு ஒரு நோயும் இருக்காது என நண்பர் மறுத்தார். என்றாலும்  வந்தவர் விடவில்லை. நண்பரைச் சம்மதிக்க வைத்து விட்டார். இருவருக்கும் பரிசோதனை முடிந்தது. நோய் ஏதாவது இருக்குமோ என்ற பதைபதைப்புடன் வந்த வருக்கு எல்லாமே நார்மல். மாறாக, உடன் வந்த நண்ப ருக்கு நீரிழிவு நோய், ரத்தக் கொழுப்பு, சிறுநீரகக் கற்கள் எனப் பல பிரச்சினைகள்.
முன்னெச்சரிக்கை அறிகுறிகளைச் சரியாக உணர்ந்து கொள்ளாத பலரும், தங்கள் உடலில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றுதான் நம்புகிறார்கள். ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவை நம்மை அறியாமலேயே பல்வேறு நோய்களை உடலுக்குள் கொண்டுவந்து விடுகின்றன. உள்ளுக்குள் மறைந்துகொண்டிருக்கும் நோய் ஒரு நாளில் திடீரெனத் தாக்கும். அப்போது நோய் முற்றிய நிலையில் இருக்கும் என்பதுதான் சிக்கல். எனவே, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதைப் பொறுத்த வரை நம்மில் பலரும் நோய் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர். நோய் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும்வரை காத்திருக்கின்றனர். உதாரணத்துக்குத் தலைச்சுற்றல், மயக்கம் வந்தால் உயர் ரத்தஅழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.
அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, புண் ஆறத் தாமதம் ஆகிறது என்றால் நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று அர்த்தம். இப்படி நோய் வந்த பிறகு உடலைச் சிரமப்படுத்து வதைவிட, அந்த நோய் தலையெடுக்கும் முன்பே கண்டுபிடித்து, முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் புத்தி சாலித்தனம். இதற்கு முழு உடல் பரிசோதனை உதவுகிறது.
கவனிக்க!
பொதுவாகச் செய்யப்படும் முழு உடல் பரிசோதனை யோடு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூட்டுகள் என ஒவ்வோர் உறுப்புக்கும் தனிப்பட்ட சிறப்புப் பரிசோதனைகளும் உள்ளன.
ஆண்களுக்குப் பிரத்யேகமாகப் பி.எஸ்.ஏ. பரிசோ தனை, பெண்களுக்குப் பிரத்யேகமாகத் தைராய்டு பரிசோதனை, மமோகிராம் மற்றும் பாப் சிமியர் பரிசோதனை, முதியவர் களுக்குப் புற்றுநோய்க்கான டியூமர் மார்க்கர்ஸ் பரிசோதனை, குடல் புற்றுநோய்க் கான கொலோனோஸ்கோப்பி பரிசோதனை மற்றும் எலும்பு வலுவிழப்பு நோய்க்கான டெக்சா ஸ்கேன் , வைட்டமின் டி, கால்சியம் பரிசோதனைகள், மூட்டு வலிக்கான பரிசோதனைகள் செய்யப்படும்.
இப்போது புதிதாக டி.என்.ஏ. பரிசோதனையும் செய்யப்படுகிறது.
இவற்றைப் பயனாளி விரும்பினால் மட்டும் செய்து கொள்ளலாம். அல்லது முழு உடல் பரிசோதனையில் ஏதேனும் ஒரு உறுப்புக்குப் பிரச்சினை இருக்கிறது எனத் தெரிந்து, அந்த உறுப்புக்கான சிறப்புப் பரிசோதனை தேவைப்படுகிறது என்று மருத்துவர் பரிந்துரைத்தால் செய்துகொள்ளலாம்.
யாருக்கு அவசியம்?
குடும்ப வழியில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், பிறவிக் கோளாறுகள் போன்றவை இருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்த வர்கள் 20 வயதில் ஒருமுறை முழு உடல் பரி சோதனை செய்துகொள்வது நல்லது. அதற்குப் பிறகு தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் இதைச் செய்து கொள்ள வேண்டும்.
பொதுவாக 35 வயதைக் கடந்தவர்கள் எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்வது நல்லது.
புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்கள், இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், நோய்த் தடுப்பு மருந்துகள் அல்லது ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப் பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒருமுறை கட்டாயம் இதைச் செய்துகொள்ள வேண்டும்.
என்னென்ன நன்மைகள்?
பிரீ-டயபடிஸ் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயின் முந்தைய நிலையில் உள்ளவர்கள், இதன் மூலம் எச்சரிக்கையாக இருந்து, சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து, நோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம். அல்லது நோயைத் தள்ளிப்போடலாம்.
இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், கருப்பை வாய் போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கிற நோய்களை இதன்மூலம் கண்டறிய முடியும்.
பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
ஏற்கெனவே நோய் இருந்தால், நோயின் தன்மையை அறிந்து சிகிச்சையை மாற்றியமைத்து, உயிருக்குப் பாதுகாப்பு தர முடியும்.
புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பத்தி லேயே கண்டுபிடித்துவிட்டால் நோயைக் குணப்படுத்துவது குறித்து யோசிக்க முடியும்.
ஏற்கெனவே புற்றுநோய் இருந்தால், உடலில் மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதைத் தடுக்க முடியும்.
பலரும் முழு உடல் பரிசோதனையை வீண் செலவு என்றுதான் நினைக்கின்றனர். அப்படியில்லை. ஆரோக்கியம் காக்க நீங்கள் செய்யும் முதலீடு இது. பிற்காலச் செலவைத் தடுக்கும் சேமிப்பும்கூட.
என்ன முன்னேற்பாடு?
காலையில் வெறும் வயிற்றில் பரிசோதிக்க வேண்டும்.
முடிவு தெரியக் குறைந்தது இரண்டு நாட்கள் தேவைப் படும்.
முன்பதிவு செய்துகொண்டு, எப்படி வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பரிசோதனைக்குச் செல்வது நல்லது.
பரிசோதனைக்கு முன்பு அல்லது பின்பு மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் பதில் சொல்ல வேண்டும்.
மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்னென்ன பரிசோதனைகள்?
ரத்த அழுத்தப் பரிசோதனை
பொதுவான ரத்தப் பரிசோதனைகள் TC, DC, ESR
ரத்த வகை, ஆர்.ஹெச். வகை
ரத்தச் சர்க்கரை அளவு வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தும்
ரத்தக் கொழுப்புப் புரதங்கள் அளவு
ரத்த யூரியா அளவு
சீரம் கிரியேட்டினின் அளவு
ஹெச்பி.ஏ.ஒன்.சி. அளவு
சீரம் யூரிக் அமிலம் அளவு
ரத்த அயனிகள் பரிசோதனை
ஹெச்.ஐ.வி. பரிசோதனை
ட்ரெட் மில் பரிசோதனை
தைராய்டு சுரப்புப் பரிசோதனை
ஸ்பைரோமெட்ரி பரிசோதனை
கல்லீரலுக்கான பரிசோதனைகள்
பொதுவான சிறுநீர்ப் பரிசோதனைகள்
மலப் பரிசோதனை
மார்பு எக்ஸ்-ரே
இ.சி.ஜி.
எக்கோ
வயிறு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை
கண், பல், காது, மூக்கு, தொண்டைப் பரிசோதனைகள்
மருத்துவ ஆலோசனை
உணவு மற்றும் வாழ்க்கைமுறை ஆலோசனைகள்
குறிப்பு: மேலே சொல்லப்பட்ட பரிசோதனைகள் வசூலிக்கப்படும் கட்டணத்தைப் பொறுத்து மருத்துவ மனைக்கு மருத்துவமனை வெவ்வேறு பெயர்களுக்கு மாறுவதும் உண்டு. விசாரித்துவிட்டுச் செல்வது நல்லது. அரசு மருத்துவமனைகளில் ரூ. 250-க்கு இது செய்யப் படுகிறது. ஆனால், அங்கே செய்யப்படும் பரிசோதனை களில் சில மட்டும் குறையலாம்.
-விடுதலை,12.9.16

திங்கள், 17 அக்டோபர், 2016

டெங்கு காய்ச்சலை சமாளிக்க முடியுமா?

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே, மர்மக் காய்ச்சல் பீதி எல்லோரையும் தொற்றிக் கொள் கிறது. கொசுக்களின் உற்பத்திக்கு வாசல் திறந்துவிடும் மழைக்காலத்தில் விதவிதமான வைரஸ் காய்ச்சல்களின் தாக்குதலுக்கு எல் லையே இருக்காது. அச்சுறுத்தும் டெங்கு காய்ச் சலை மட்டுமல்ல, மழைக் காலங்களில் ஏற்படும் இன்ன பிற காய்ச்சல்களையும் சுற்றுப்புறத் தூய்மை மூலம் தடுக்க முடியும்.

காரணம் என்ன?

டெங்கு காய்ச்சலுக்குக் காரணம் டெங்கு வைரஸ் கிருமிகள். ஏடிஸ் எஜிப்தி என்ற ழைக்கப்படும் கொசுக்களே இந்தக் காய்ச்சலைப் பரப்புகின்றன.

இந்தக் கொசுக்கள்தான் டெங்குக் கிருமி களைச் சுமந்து செல்கின்றன. இந்தக் கொசுக் கள் ஒருவரைக் கடிக்கும்போது, டெங்கு காய்ச்சல் அவரைத் தொற்றிக் கொள்கிறது.

அறிகுறிகள்

அதிகக் காய்ச்சல், பசியின்மை, கடும் தலைவலி, கண்களில் வலி, மூட்டு வலி போன்றவை டெங்கு தாக்கியிருப்பதற் கான பொதுவான அறிகுறிகள்.

காய்ச்சல் தீவிரமடையும்போது கை, கால் மூட்டுகளில் வலி, உடலில் சிவப்புப் புள் ளிகள் தோன்றுவது, வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

எச்சரிக்கை

டெங்கு வைரஸ் கிருமி உடலில் உள்ள தட்டணுக்களை (பிளேட்லெட்) அழித்துவிடும் தன்மை உடையது. தட்டணுக்கள் குறைந்தால் பல், ஈறு, மூக்கு, மலம், சிறுநீர்ப் பாதைகளில் ரத்தம் வடியும். இது ஆபத்தான நிலையைக் குறிக்கும். இதற்கு உரிய சிகிச்சை எடுக்காதபட்சத்தில் மரணம் கூட ஏற்படலாம்.

என்ன செய்வது?

உடல் வெப்பத்தை 39 டிகிரி செல்சி யஸுக்குக் கீழே வைத்திருக்க வேண் டும்.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அலட்சியமாக இருக்கக் கூடாது. மருத்துவரை அணுகி டெங்கு காய்ச்சலுக் கான பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.

டெங்குவுக்குத் தடுப்பூசிகள் கிடையாது. மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து, மாத்திரைகளுடன் முழுமையான ஓய்வு அவசியம்.
அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். நிலவேம்புக் குடிநீரைப் பருகலாம்.

எதைச் செய்யக் கூடாது?

தொடர்ந்து காய்ச்சல் இருக்கும்போது தாமா கவே மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலோ அல்லது அதற்கான அறிகுறியோ தெரிந்தால் ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்ளக் கூடாது. இது காய்ச்சலை அதிகப்படுத்திவிடலாம்.

தடுப்பு முறைகள்

டெங்கு வராமல் தடுக்கக் கொசுவை அழிப்பதுதான் முதன்மை வழி.

மழைக்காலத்தில் கொசுக்களின் பெருக் கம் அதிகமாக இருக்கும் என்பதால் கொசுக் கடியிலிருந்து தப்பிப்பதற்கான வழி முறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. பகல் நேரங்களில் கடிக்கும் கொசு என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உடலை மறைக்கும் உடைகள், காலுறை, கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும்.

வீட்டுக்குள் கொசுக்கள் வராதபடி கொசு வலை அடிக்க வேண்டும் அல்லது மாலை நேரத்தில் கதவு, ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

வீட்டுக்குள் நொச்சித் தழை, வேப்பந்தழை போன் றவற்றைக் கொண்டு கொசுக்களை விரட்ட லாம்.

டெங்கு காய்ச்சலில் இருப்பவரையும் கொசுக் கடிக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டும்.

பாத்திரங்கள், பூந்தொட்டிகள், நீர்க் கசிவு உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தத் தண் ணீரில்தான் கொசுக்கள் இனப் பெருக்கம் செய்து பெருகும்.

கொசு பெருகுவது எப்படி?

தேங்கிய நீரில் இந்த வகைக் கொசுக்கள் தங்கியிருக்கும்.

வீட்டில் இருக்கும் பழைய டயர்கள், பூந்தொட்டிகள், பாத்திரங்களில் தண்ணீர் இருந்தால் கொசுக்கள் தங்கி இனப் பெருக்கம் செய்யும்.

மரத் துளைகள், கூரை வடிகால்கள், விழுந்த இலைகள், பழைய தகடுகள், ஏ.சி.யிலிருந்து வடியும் நீர், பள்ளத்தில் உள்ள நீர், பயன்படுத்தப்படாத பொருட்கள், தூக்கியெறியப்படும் பேப்பர் - பிளாஸ்டிக் கோப்பைகள் ஆகியவற்றில் டெங்கு கொசுக்கள் தங்கி இனப்பெருக்கம் செய்து பெருகிவிடும்.

கொசு பெருகுவதைத் தடுக்க

கொசு வராமல் தடுக்க வீடுகளில் நொச்சித் தாவரத்தை வளர்க்கலாம்.
பயன்படுத்தும் எல்லாப் பாத்திரங் களையும் நன்றாகக் கழுவி, கவிழ்த்து வைக்கவும்.
நீர் சேமிப்புத் தொட்டிகளில் சிறிய மீன் களை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
வீட்டின் அருகே தேவையில்லாமல் கிடக்கும் பொருட்களையும், தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களையும் அப் புறப்படுத்த வேண்டும்.

-விடுதலை,17.10.16

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வலிப்பு என்பது நோயல்ல

மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது, வலிப்பு நோய். காக்காய் வலிப்பு என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும்.
இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.  பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிப்பதாலும், வலிப்பு பற்றிய மூடநம்பிக்கைகள் நம் சமூகத்தில் அதிகம் என்பதாலும், இது குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம்.
எது வலிப்பு? எது வலிப்பு நோய்?
வலிப்பு என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.
ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த நிகழ்வுக்குப் பெயர் வலிப்பு. ஒருவருக்கு இரண்டுமுறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய்  இருப்பதாகக் கொள்ள வேண்டும்.
எப்படி ஏற்படுகிறது?
மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல கிளம்புகிறது.
அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் வலிப்பு என்கிறோம். பூமியின் உள் அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப்போல, மூளையில் உண்டாகிற மின் அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.
என்ன காரணம்?
தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை  வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.
முன்னெச்சரிக்கை அறிகுறிகள்!
பொதுவாக வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும். என்றாலும், அது வருவதற்கு சில நிமிடங் களுக்கு முன்னதாக, ஆரா என்று அழைக்கப்படுகிற எச்சரிக்கை மணி அடிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
அவை: திடீர் தலைவலி, உடல் சோர்வு, குழப்பமான மனநிலை, பதட்டம், பயம், வியர்த்தல், காதில் மாயக் குரல் கேட்பது, கண்கள் கூசுவது அல்லது மங்கலான பார்வை, உடலில் மதமதப்பு, நடை தடுமாற்றம்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் வலிப்புப் பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது. அப்படியும் வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் இவ்வாறு செய்யுங்கள்:
அவரை இடது பக்கமாகச் சாய்த்துப்படுக்க வையுங்கள். சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து டை போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள். முகத்தில் கண்ணாடி அணிந்திருந்தால், வாயில் செயற்கைப் பல் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள்.
அவர் கையில் ஏதேனும் பொருள் இருந்தாலும் அகற்றி விடுங்கள். அவர் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி கூர்மையான பொருட்கள் இருந்தால், அவற்றையும் அகற்றி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வலிப்பின்போது பாதிக்கப்பட்டவரின் உடலில் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
மின்விசிறி/கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
பாதிக்கப்பட்டவர் முழுமையாக சுயநினைவுக்கு திரும்பிய பிறகு, வலிப்புக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து கைவசம் இருந்தால்,  உடனே கொடுத்து விடுங்கள். ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்கவேண்டியது அவ சியம்.
அதன்பின் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே சிகிச்சை பெறும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள். வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து தரும் விளைவுகள் உடலில் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என அச்சப்படத் தேவையில்லை. மருந்து / மாத்திரைகளைச் சாப்பிட ஆரம் பித்து, 3 ஆண்டுகள் வரை வலிப்பு வரவில்லை என்றால், மாத்திரைகளைச் சிறிது சிறிதாகக் குறைத்து, பின்னர் முழுவதுமாக நிறுத்திவிடலாம்.  மாத்திரை களை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது.
வலிப்புக்கான சிகிச்சையில் இதுதான் முக்கியம். 2 முதல் 3 சதவிகித நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம்  மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் மைக்ரோ அறுவைச் சிகிச்சை தற்போது உள்ளது. இந்தச்சிகிச்சையை செய்து கொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும்.
பாதுகாப்பது எப்படி?
வலிப்பு நோய்க்குக் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். வலிப்பு நோய்க்கு மருத் துவர் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து, மாத் திரை சாப்பிட வேண்டும். அப்படித் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும்போதும் வலிப்பு வருமானால், அதை மருத்துவரிடம் கூறி, மருந்தின் அளவை அதிகப்படுத்தலாம். அல்லது மருந்தை மாற்றலாம். வலிப்புக்கான மருந்தைத் திடீரென்று ஒருநாளில் நிறுத்திவிடக்கூடாது. மருந்தின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்த வேண்டும்.
வலிப்பு மருந்தை ஒரு வேளைக்குச் சாப் பிட மறந்துவிட்டாலும், அது நினைவுக்கு வந்ததும் உடனே விட்டுப்போன மருந்தைச் சாப்பிட்டுவிட வேண்டும். வேறு ஏதேனும் நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது வலிப்பு நோய்க்குச் சாப்பிடும் மருந்துகளை மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
வலிப்பு வந்தவர்கள் விபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க வேண்டியது முக்கியம். இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, தண்ணீரில் அல்லது தண்ணீருக்கு அடியில் இயங்கும் பணிகளில் ஈடுபடுவது, வாகனம் ஓட்டுவது போன்ற பணிகளைத் தவிர்க்க வேண்டும். வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், குட்டை, ஏரி, கிணறு, அருவி ஆகிய இடங்களில் குளிப்பதற்கும், நீர் நிலை களுக்கு அருகே விளையாடுவதற்கும் அனுமதிக்கக் கூடாது. வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக்கூடாது.
அப்படி அருந்தினால், வலிப்புக்கான மருந்து முழுவதுமாக வேலை செய்யாது. தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால்,  உடனடியாகத் மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-விடுதலை,5.9.16

திங்கள், 10 அக்டோபர், 2016

இரைப்பைப் புண்


நம் செரிமான மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான உறுப்பு, இரைப்பை! நமக்குப் பசியைத் தூண்டி, சாப்பிட வைத்து, செமிக்க வைத்து, உணவுச் சத்துகளை ரத்தத்தில் கலக்க வைத்து, உடல் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் வழி அமைப்பது இரைப்பை. அதே நேரத்தில் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய் என வரிசையாகப் பல பிரச்னைகளைத் தருவதும் இரைப்பைதான். ஆகவே, இந்த இடத்தில் இரைப்பையை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
1.இரைப்பை அழற்சி
இரைப்பையில் ஏற்படும் முதல் பிரச்சினையே இதுதான்.  புண் உண்டாவதற்கு முந்தைய நிலை என்று சொல்லலாம். இதை 'இரைப்பை அழற்சி  என்கிறார்கள். உடலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி இரைப்பைச் சுவரில் சிவந்த சிராய்ப்புகளும் வீக்கங்களும் ஏற்படுவதால் இது உருவாகிறது. இதன் அறிகுறிகள் சிலருக்குப் பசி இருக்காது.
சிலருக்குக் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். குமட்டல், வாந்தி, ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற தொந்தரவுகளும் வெளிப்படும். இதன் அறிகுறிகள் சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு மட்டும் ஏற்பட்டால், அது தற்காலிக இரைப்பை அழற்சி  எனவும், மாதக்கணக்கில் நீடித்தால் நாட்பட்ட இரைப்பை அழற்சி  எனவும் அழைக்கிறோம்.
நோய்க்கான காரணங்கள், கண்டு பிடிக்கப் பயன்படும் பரிசோதனைகள், சிகிச்சைகள் எல்லாமே இரைப்பைப் புண்ணுக்கு உள்ளவையே. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், இரைப்பையில் அழற்சி ஏற்படும்போது, அமிலச்சுரப்பு குறைந்துவிடும். இதனால், நாம் சாப்பிடும் உணவிலிருந்து இரும்புச் சத்து கிரகிக்கப்படாது. வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும், இதன் விளைவாக, ரத்தசோகை உண்டாகும்.
2.இரைப்பைப் புண்
இரைப்பையில் ஏற்படுகிற நோய்களில் முக்கியமானது, `அல்சர் என அனைவராலும் அழைக்கப்படும் இரைப்பைப் புண். இது உணவுக்குழலின் இறுதிப்பகுதி, இரைப்பை, முன் சிறுகுடல், மெக்கலின் பக்கப்பை ஆகிய நான்கு இடங்களில் வரும். இரைப்பையில் வருவதை 'இரைப்பைப் புண்   எனவும், முன்சிறுகுடலில் வருவதை `முன்சிறுகுடல் புண் எனவும் தனித்தனி பெயர்களில் மருத்துவர்கள் அழைக் கிறார்கள்.
இந்த இரண்டையும் சேர்த்து `செரிமானப் புண் அல்லது பெப்டிக் அல்சர் எனவும் அழைக்கிறார்கள். இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் அளவுக்கதிகமாக சுரக்கும்போது இரைப் பையிலும் முன்சிறுகுடலிலும் உள்ள சிலேட்டுமப் படலம் சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர்.
காரணங்கள்
இரைப்பைப் புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. `ஹெலிக்கோபேக்டர் பைலோரி  எனும் கிருமி காரணமாக இரைப்பைப் புண் ஏற்படுவதுதான் இப்போது அதிகம். அசுத்தமான  குடிநீரில் இவை வசிக்கும். அதைக் குடிப் போருக்கு இந்த பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது எச்சிலில் கூட இருக்கும். முத்தம் கொடுக்கும்போது இது மற்றவர்களுக்குப் பரவிவிடும்.
இது பல ஆண்டுகளுக்கு இரைப்பையில் வாழும்.  அதிகபட்சமாக 100ல் 10 பேருக்கு இது இரைப்பைப் புண்ணை உண்டாக்கும். மது அருந்துதல், புகைப்பிடித்தல், காரம் நிறைந்த உணவு, புளிப்பு மிகுந்த உணவு, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் வறுத்த உணவு போன்றவற்றை அதிகஅளவில் உண்பது, கோலா, காபி மற்றும் தேநீர் பானங்களை அதிகப்படியாக குடிப்பது, ஆஸ்துமா மற்றும் மூட்டுவலிகளுக்கு தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், தலைவலிக்குத் தரப்படும்.
ஆஸ்பிரின், அனால்ஜின், இபுபுரூஃபன், பேரசிட்டமால் போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி அடிக்கடி சாப்பிடுவது போன்றவற்றால் பெப்டிக் அல்சர் வருகிறது. உணவை நேரந்தவறி சாப்பிடுவது, சூடாகச் சாப்பிடுவது, அவசர அவசரமாகச் சாப்பிடுவது போன்ற தவறான உணவுப் பழக்கங்களாலும் இவ்வாறு புண் ஏற்படலாம்.
எலுமிச்சை, நெல்லிக்காய், கடுக்காய் போன்ற புளிப்புச் சுவை உடையவற்றை அதிகமாகச் சாப்பிட்டாலும் இந்த நோய் ஏற்படும்.  மருந்துகளை நீண்ட காலம் சாப்பிடுவதும் இந்த நோய்க்கு வழி அமைக்கும்.  சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் இது ஏற்படுகிறது. குறிப்பாக, உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்து கொண்டவர் களுக்கு இந்நோய் ஏற்பட மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.
'ஓ' ரத்தப்பிரிவு உள்ளோருக்கு இயற்கையிலேயே இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாக இருப்பதால், இவர்களுக்கு சிறுவயதிலேயே இது வந்துவிடுகிறது. மனக்கவலை, மனஉளைச்சல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், கோபம், பரபரப்பு, ஓய்வில்லாதது போன்ற காரணங்களாலும் இது பலரையும் பாதிக்கிறது.
அறிகுறிகள்
இந்நோயின் தொடக்கத்தில் நெஞ்சுப்பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். அப்படியே சாப்பிட்டாலும், குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு ஏற்படும். நெஞ்சில் ஏதோ பந்து போல் திரண்டு வந்து அடைப்பது போலத் தோன்றும். இது ஏப்பம் விட்டதும் சரியாகும். நோயின் அடுத்த கட்டமாக வயிற்றில் வலி தோன்றும்.
இரைப்பையில் சுரக்கும் அமிலம் அங்குள்ள புண்மேல் படுவதால் இந்த வலி வருகிறது. அடுத்து உணவு சாப்பிட்ட பின்பு இதேவலி உண்டாகும். இதற்குக் காரணம், உண்ட உணவு இரைப்பைப் புண்ணில் படுவதுதான்.
சிலருக்கு இந்த வயிற்று வலி நடு முதுகுக்கும், வயிற்றின் வலது பக்கத்திற்கும் பரவலாம். வயிற்று வலிக்கு அடுத்தபடியாக வாந்தி வரும். வாந்தியினால் நோயாளிக்கு நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. அடிக்கடி வாந்தி வந்தால் சரியாக உணவு சாப்பிட முடியாது, இதனால் உடல் எடை குறையும். உடல் மெலியும். இது தீமை. இரைப்பைப் புண் உள்ளவர்கள் வாந்தி எடுக்கும்போது, இரைப்பையில் உள்ளவை எல்லாமே வெளியில் வந்துவிடுவதால் அங்கு அமிலத்தன்மை குறைந்துவிடும்.
இதனால் வயிற்றுவலி தற்காலிகமாக குறையும். இது இவர்களுக்கு நன்மை. இதற்காக வயிற்று வலியைத் தாங்க இயலாத ஒரு சிலர் தாங்களாகவே வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுக்கத் தூண்டுவார்கள். இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கு உணவு சாப்பிட்ட உடன் வயிற்றுவலி அதிகமாகும். வாந்தி எடுத்தால் வயிற்றுவலி குறையும். அதேநேரத்தில் முன்சிறுகுடலில் புண் உள்ளவர்களுக்கு சாப்பிட்டவுடன் வயிற்று வலி குறையும்.
நோய் அறியும் முறைகள்
முன்பெல்லாம் இரைப்பைப் புண்ணை உறுதி செய்ய அமில சுரப்புப் பரிசோதனை மற்றும் பேரியம் கதிர்வீச்சுப் படங்கள்  உதவின. இப்போது 'எண்டோஸ்கோப்பி பரிசோதனை  மூலம் நோயாளியின் செரிமானப் பாதையில் இருக்கும் புண்ணின் இருப்பிடம், அளவு, நிலைமை, ரத்தக்கசிவு, குடலடைப்பு போன்ற பல தகவல்களை மருத்துவரே நேரடியாகப் பார்த்து உறுதி செய்கிறார்.
இரைப்பைக்கு உதவுங்கள்
வயிறு நிறைய சாப்பிடாதீர்கள். உடல் உழைப்பு குறைந்தவர்கள் முக்கால் வயிறு சாப்பிட்டால் போதும்.
நொறுக்குத் தீனி சாப்பிடுவதை நிறுத்தவும்.
அசைவ உணவு சாப்பிட்டதும் குளிர் பானங்கள், கோலா பானங்கள் மற்றும் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கவும்.
காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்.
இரவில் எளிதாக செரிக்கக்கூடிய உணவையே சாப்பிடுங்கள்.
சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் ஒரேநேரத்தில் சாப்பிட வேண்டாம்.
உணவு சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடாதீர்கள்.
உணவு சாப்பிட்ட உடனே படுத்துக் கொள்ளாதீர்கள. குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் கழித்து நீர் அருந்தி விட்டு படுக்கைக்கு செல்லவும்.
உணவை சீரான இடைவெளியில் புசித்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. முன்சிறுகுடல் புண்
இரைப்பையில் அமிலம் அதிகமாகச் சுரக்கப்படும் போது, அது முன்சிறுகுடலின் முதலாவது பகுதியையும் அரித்துப் புண்ணாக்கிவிடும். இதுதான் முன்சிறுகுடல் புண் என்று அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள்
உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வயிற்றில் வலி வந்தால் அது முன்சிறுகுடல் புண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் நள்ளிரவிலும், அதிகாலையிலும்தான் இவர்களுக்கு வயிற்று வலி வரும். இவர்களுக்கு ஆரம்பத்தில் வாந்தி வராது. பசி நன்றாக இருக்கும். எடை குறையாது. நாட்பட்ட நோயாளிகளுக்கு மலத்தில் ரத்தம் வரலாம். புண்ணானது முன்சிறுகுடலை அடைத்துக்கொண்டது என்றால், வயிற்று வலியோடு வாந்தியும் வரும். முன்சிறுகுடல் புண்ணுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்புமுறைகள் எல்லாமே இரைப்பைப் புண்ணுக்கு சொல்லப்பட்டவையே.
-விடுதலை,10.10.16

ஒற்றைத் தலைவலிஉலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.
அறிகுறிகள்: மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும். படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.
வகைகள்: ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைகளில் அறியப்படுவதாக உள்ளது.
1. கிளாசிக் மைக்ரேன்: தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.
தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு,
உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும். நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு. கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.
பொதுவான மைக்ரேன்:  மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.
ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?
மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டு களாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறை பாடுகள் தான் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?: ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால் தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்-மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75 சதவிகிதம் வரும் வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50 சதவிகிதம் வரும் வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.
தீர்வு பெற  வழிகள்: அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும் உங்களுக்கு உதவ சிலவழிகள்.
1. உணவுமுறையில் மாற்றம்: சரியாக உணவு உண் ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண் பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.
2. முறையான தூக்கம்: தூக்கமில்லாமல் அவதிப் படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.
3. உடற்பயிற்சி: உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.
4. சுற்றுச்சூழலில் கவனம்: அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.
5. மது, புகை, காபி தவிர்த்தல்: மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல், வாசனை திரவியம் பூசிக் கொள்ளுதல், அறைக்கு வாசனை திரவியம் தெளித்தல், பெயிண்ட் வாசனை போன்றவைகளாலும் சிலருக்கு தலைவலி உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.
6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்: அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.
7. தடுப்புமுறைகள்: ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்து கொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக,  சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன் னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.
-விடுதலை,25.7.16