வெள்ளி, 25 டிசம்பர், 2020

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்![3]

புதன், 23 டிசம்பர், 2020

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்![1]

சனி, 5 டிசம்பர், 2020

உயிர் காக்கும் உப்பு, சர்க்கரைக் கரைசல்


திங்கள், 30 நவம்பர், 2020

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (11)

மரு.இரா.கவுதமன்

இதயத்தமனி (அடைப்பு) நோய் (coronary artery disease)

மாரடைப்பு (Heart Attack)

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, கருவுற்ற எட்டாவது வாரத்தில் இதயம் இரண்டு குழாய்களாக அமைந்து, பிறகு நான்கு அறை கொண்ட இதயமாக மாறுகிறது. அப்பொழுதே துடிக்க துவங்கும் இதயம், நம் மரணம் வரை இடைவிடாது துடித்துக் கொண்டே இருக்கிறது.

இதயம்தான் கருவில் உருவாகும் முதல் உறுப்பு. ஆரம்பத்தில் நிமிடத்திற்கு 120 முதல் 160 வரை இதயம் துடிக்கும், பேறு காலத்தில் துடிப்பு நிமிடத்திற்கு 130 ஆக இருக்கும்.

பின் குழந்தை வளர, வளர நிமிடத்திற்கு 72 முறை துடிப்பாக மாறி நிலை கொள்ளும். இயல்பான நிலையில் நிமிடத்திற்கு 72 முறை,  X ஒரு மணிக்கு 72 X 60 முறை, ஒரு நாளைக்கு 72 X 60 X 24 என்று நாம் வாழும் காலம் முழுதும் இதயம் இயங்கிக் கொண்டே இருக்கும்.

சுருங்கி, விரியும் தன்மையையே நாம் இதயத் துடிப்பாக உணர்கிறோம். அவ்வாறு இடைவிடாமல் இதயம் இயங்க வேண்டுமானால் அதற்கு தேவையான சக்தி இடைவிடாமல் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த சக்தி இடைவிடாமல் கிடைக்க வேண்டுமானால் இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடையின்றி கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தங்குத் தடையின்றி (ஒரு நிமிடம் கூட நில்லாமல்) கிடைக்கும் இரத்தம் மூலமே இதய இதயத்திற்கு தேவையான உயிர்க்காற்றும் (ஆக்ஸிஜன்), சத்தும் கிடைக்கிறது. அப்படி நில்லாமல் கிடைக்கும் இரத்த ஓட்டம் இதயத் தமனி (coronary Artery) மூலமே, இதயத்திற்கு கிடைக்கிறது.

இதயத் தமனிகள் (Coronary Arteries):

மகாதமனி (Aorta) (இடது வெண்டிரிக்கள், left ventricle) இடது கீழறையிலிருந்து வெளியேறும் இடத்தில், இதயத் தமனி பிரிகிறது. பிரிகின்ற இதயத் தமனிதான் முழு இதயத்திற்கும் தேவையான இரத்த ஓட்டத்தை கொடுக்கிறது.

மகாதமனியிலிருந்து பிரியும் இதயத்தமனி மேலும் இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிகிறது. இடது பெரும் இதயத் தமனி (left main coronary artery (also called left main track) வயது பெரும் இதயத் தமனி (right coronary artery - RCA) என்று இரு பிரிவுகளாக பிரிந்து இதயத்தின் இடது, வலது புறங்களுக்கு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இடது பெரும் இதயத்தமனி மேலும் இரண்டாக பிரிகிறது. இதயச் சுற்றுத் தமனி (circumflex artery) இடது முன் கீழிறக்கத் தமனி (left anterior descending artery - LAD) என்று இரண்டாகப் பிரிகிறது.

சுற்றுத் தமனி, இடது மேலறை, இடது கீழறையின் (Left Ventricle) பக்கவாட்டிற்கும், பின் பகுதிக்கும் இரத்தம் கொண்டு செல்கிறது. முன் கீழறக்கத் தமனி, இடது கீழறையின் முன்புறம், கீழ்புறம், கீழறைகளின் இடைச்சுவர் ஆகிய பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்கிறது. வலது பெரும் இதயத் தமனி (Right Coronary Artery - RCA) வலது ஓரத் தமனி  (Right Marginal Artery), பின் கீழறக்கத் தமனி (Posterior Descending Artery) என்று இரண்டு பிரிவாக பிரிந்து வலது மேலறை, வலது கீழறை, கீழறைகளின் அடிப்பகுதி, இடைச்சுவர்களின் (Septcem) பின்புறம் ஆகிய பகுதிகளுக்கு இரத்தத்தை செலுத்துகிறது. இந்த பிரிகின்ற தமனிகள் எல்லாம் ஒரு வலைப்பின்னல் போல் அமைந்து, இதயத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டத்தை, இடைவிடாமல் கிடைக்கச் செய்கின்றன.

துணைத் தமனிகள் (Collateral Vessels):

இவை இதயத்தில் அமைந்துள்ள சிறிய தந்துகிகள் (tiny blood vessels - capillaries) ஆகும். இதயம் இயல்பாக செயல்படும் பொழுது, இவை மூடி இருக்கும். இதயத்தமனி சுருக்க நோயில், இவை விரிந்து, இதயத்திற்கு தேவையான இரத்தத்தை செலுத்தத் துவங்கும். அதனால் இதய இயக்கத்திற்கு தேவையான இரத்தம் கிடைக்கும். இதனால் மாரடைப்பு தவிர்க்கப்படும். இனி இதயத் தமனி நோய்களை பார்ப்போம்.

இதயத் தமனி இரத்த ஓட்டக் குறைபாடு (Ischemia) : இதயத் தமனி வழியே இதயத்திற்கு தேவையான இரத்தம் குறைவின்றி தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் காரணமாக இரத்த ஓட்டம் குறைந்தால், இதயத்திற்கு தேவையான உயிர் காற்றும் (Oxygen) சத்தும் கிடைக்காமல் போகும். அதனால் இதயம் நின்று விடும் நிலை ஏற்படும். இதையே “மாரடைப்பு’’ (Heart Attack) என்று கூறுகிறோம். மிகவும் ஆபத்தமான நிலை இது. உடனடியாக மருத்துவம் செய்யாவிடில் மரணம் நிகழக் கூடிய நிலை ஏற்படும். இனி இது எப்படி நிகழுகிறது எனப் பார்ப்போம்.

மாரடைப்பு (Heart Attack): மிகவும் ஆபத்தான இந்நோய் எதிர்பாராமல் ஏற்படும். இதயத்திற்கு செல்கின்ற இரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால் இதயம் துடிக்காமல் நின்று விடும். இதயம் செயல்படுவது நின்று போவதால் மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல்படாமல் நின்று விடும். நோயாளி மரணமடைந்து விடுவார்.

“சற்று முன் கூட பேசிக் கொண்டிருந்தாரே, திடீரென்று சாய்ந்து விட்டார், இறந்து விட்டார்’’ என்றெல்லாம் பல முறை நாம் கேட்டுள்ளோம். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்நோயேயாகும். மிகவும் அதிகளவில் மரணம் நிகழ்த்த கூடிய நோய் இது. ஆனால் இந்நோயை கண்டறிவதும், மருத்துவம் செய்வதும் முழுமையாக இந்நோயிலிருந்து நோயாளிகளை மீட்டு, நீண்ட வாழ்வு வாழ வகை செய்யலாம் இந்தியாவில் இந்நோயினால் வருடத்திற்கு ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய்க்கான காரணங்களை பார்ப்போம்.

“நிலையான மார்பு வலி’’, “நிலையற்ற மார்பு வலி’’ மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் சட்டைப் பையில் கீழ்கண்ட 3 மாத்திரைகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள் புழங்குமிடங்களில் (படுக்கையறை, உணவு உண்ணும் அறை போன்ற இடங்களில்) கைக்கு உடனே எடுக்கும்படியாகவும் இம்மாத்திரைகளை வைத்திருத்தல் நலம் பயக்கும். லேசானா நெஞ்சு வலி ஏற்பட்டாலும் உடனடியாக செய்கின்ற வேலையை, நிறுத்திவிட்டு (நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாலும்) உடனடியாக அருகில் ஓர் இடத்தில் அமைதியாக அமர வேண்டும். படுக்கை இருந்தால் படுத்துக் கொள்ள வேண்டும் உடனடியாக மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மருத்துவமனைக்கு செல்ல, அனைத்து முயற்சிகளையும் கைக்கொள்ள வேண்டும். தனியாக இருக்கும்பொழுது மார்பு வலி வந்தால், ஆழ்ந்து மூச்சித்திழுத்து, இரும வேண்டும். நெஞ்சுப் பகுதியை கைகளால் பிசைந்து கொடுக்க வேண்டும். மாத்திரைகளையும் உடனடியாக சாப்பிட வேண்டும்.

மார்பு வலியேற்படும் பொழுது உண்ண வேண்டிய மாத்திரைகள்:

ஆஸ்பிரின் 75 mg. (Aspirin 75 mg)

(இம்மருந்து இரத்தம் உறைதலை தடுக்கும்)

எனலார்பில் (Enalarpil - Vaootec)

(இம்மருந்து இரத்தக் குழாய்களை விரித்து கொடுக்கும். அதனால் இரத்த ஓட்டம் அதிக அளவு இதயத்திற்கு செல்லும்.)

ஐசாட்ரில் 5 (Isodril 5)

(இம்மருந்தை நாக்கின் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இதயத் தமனிகளை விரித்து அதிகளவு இரத்தம் இதயத்திற்கு செல்ல வழிவகுக்கும், மருந்து இது.)

 (தொடரும்...)

- உண்மை இதழ் ஜூன் 16 -  ஜூலை 15 .2020

திங்கள், 6 ஜூலை, 2020

'ஆஸ்பிரின்' மாத்திரையின் மகிமை அறிவீர்களா?

'ஆஸ்பிரின்' - மாத்திரை வெறும் தலைவலிக்கான மாத்திரை என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால், இப்போது மருத்துவ உலகில், இந்த 'ஆஸ்பிரின்' உயிர் காக்கும் - மாரடைப்பைத் தடுக்க உதவிடும் முக்கியப் பணி செய்யும் மாத்திரை என்றே அங்கீகரிக்கப்பட்டு, இதய நோய், நிபுணர்களான மருத்துவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோர் அல்லது Stent   எனப்படும் ரத்தக் குழாயில் அடைப்பை தடுக்கும் தடுப்பான் உள்ளே பொருத்தப்பட்ட பிறகும் மருத்துவர்கள் இதனை நாள்தோறும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றே கூறுவது.

75mg அளவுள்ள மாத்திரை - அமெரிக்காவில்Bayer போன்ற மருந்து தயாரிப்பாளர்கள் 'குழந்தைகளுக்கான ஆஸ்பிரின்' 'பேபி ஆஸ்பிரின்' என்பவை 81 எம்.ஜி. அளவுக்கு தயார் செய்து, தருகின்றனர்; 75 என்பதற்குப் பதிலாக 81 எடுத்துக் கொள்ளலாம் தவறல்ல என்றே பல மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

பொதுவாகவே மூச்சுத் திணறல், நெஞ்சழுத்தம், கனத்தல் இதுபோன்ற இறுக்கம் ஏற்படுகிறதோ என்று நினைக்கையில், முதல் உதவி சிகிச்சை போல உடனடியாக ஒரு  ஆஸ்பிரின் மாத்திரையை விழுங் குதல் நல்லது.

'ஆஸ்பிரின்'பற்றி அண்மையில் 'Men's Health' என்ற ஒரு ஆங்கில மாத ஏட்டில் படித்தேன்.  அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயன் அளிக்கும் அல்லவா!

ஆஸ்பிரினின் சக்தி அதிகம் இதன் பயன் பல வகைப்பட்டதாகும்.

ஆஸ்பிரினில் உள்ள கலவைகளில் ஒன்று முக்கியமாக 'சேலிசிலிக் ஆசிட்' (Salicylic acid) ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கும் சக்தியுள்ளது. அதன் எரிச்சலையும் (inflamation) தோல் சிகப்பாகும் (redness) தன்மையையும் குறைக்கிறது என்றார் - அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் கவிதா மேரிவாலா, (அமெரிக்க தோல் சிகிச்சை நிபுணர் இவர்).

1. முகப் பரு போக்க: 

முகப்பருவினை இந்த ஆஸ்பிரின் கலவையில் உள்ள ஒரு கூறு, தடுக்கிறது. 'பிட்சா' முகம் போல உள்ளவர்களுக்கு, ஒரு ஆஸ்பிரினை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து, கலக்கி, (பாலைப் போல வெள்ளையாகும்) படுக்கப் போகும் முன் தடவிக் கொண்டு படுத்தால் முகப் பருக்கள்தானே சுருங்கும் வாய்ப்பு இதன் சக்தி மூலம் வரும்!

கொசுக்கடியால் ஏற்பட்ட முகத்தடிமன்கள், சிவப்பாகியுள்ள சீழ் கட்டிகள் போல உள்ளவைகளுக்கும்கூட இது பயன்படுத்தப்படுமாம். அரிப்பினையும் இது குறைக்க உதவும்.

2. புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க:

புற்று நோய் செல்கள் கெட்டியான ரத்த அணுக்களில் பரவுவதைத் தடுக்க, அதன் பசைத் தன்மையைக் குறைக்க (by making platelets less sticky) ஆஸ்பிரின் மாத்திரை ரத்தத்தின் உறையும் தன்மையைக் குறைக்கும் அல்லது தடுக்கும் சக்தியுள்ளதால் (ஆஸ்பிரினை ''Blood Thinner' என்றே கூறுவர்) புற்றுநோய் செல்கள் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் மூலம் உள்ளே நுழைவதைத்  தடுக்க உதவிடும்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்த உண்மை என்ன தெரியமா?

75mg 'ஆஸ்பிரின்' மாத்திரையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால் புற்று நோய்மூலம் ஏற்படும் இறப்பு 20 விழுக்காடு குறைகிறது என்பதாகும்.

இதன் மூலம் இறப்பு வாய்ப்பு மேலும் அடுத்த 15 ஆண்டுகள் தள்ளிப் போகச் செய்யக் கூடும் என்பதும் ஆய்வின் முடிவாகும்.

3. திட்டுகளை மிருதுவாக்க:

கையிலும், கால்களிலும் உள்ள கடுமையான சில திட்டு திட்டாக உள்ள பகுதிகளையும் (patches) மிருதுவாக்கிடும் தன்மை ஆஸ்பிரினுக்கு உண்டு.

மூன்று ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பொடி செய்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி தண்ணீருடன் கலந்து குழைத்து 'அத்திட்டுக்களின்மீது தடவி வந்தால்,   அவை மிருதுவாக அப்புறப்படுத் தும் அளவுக்கு வரக் கூடும்).

4. பருக்களைப் போக்க:

ஆஸ்பிரின் மாத்திரையில் உள்ள 'சேலிசைலிக் ஆசிட்' பருக்களை போக்குவ தோடு மயிரில் உள்ள சிக்குகளையும்  (Cure Dandruff) போக்கவல்லது. தோல் காய்ந்த நிலையில் உள்ளதால் தலையின் பின்பகுதி (Scalp) ஷாம்புவுடன் இரண்டு ஆஸ்பிரின் மாத்திரையை கரைத்து முடிமேல் தடவி 30 வினாடிகள் அப்படியே விட்டு விடுங்கள்.  இப்படி வாரத்தில் மூன்று முறை தடவிக் குளியுங்கள், முடிச் சிக்குகள் தானே போகும் என்கிறார் டாக்டர் கவிதா மேரி வாலா என்ற அமெரிக்க தோல் சிகிச்சை டாக்டர்.

5. மன இறுக்கத்தை சோர்வைப் போக்க:

தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆஸ்பிரினை எடுத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்களை மனச் சோர்வு (Depression) மன இறுக்கம் எளிதில் அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் முடிவுகளில் ஒன்றாகும்! அதன் அறிகுறிகள் எளிதில் இத்தகையவர்களைத் தாக்குவதில்லை!

சைக்கோ தெரப்பி, அன்ட் சைக்கோஸ் மாடிக்  Psychotherapy and Psychosmatics  என்ற ஆய்வு இதழில் இதை விளக்கி கட்டுரைகள் வெளி வந்துள்ளன!

'ஒரு நாள் ஒரு ஆஸ்பிரின்' என்ற தலைப்பில் டாக்டர் கெய்த் சவுட்டர் (Dr. Keith Souter) எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் உள்ளெரிச்சலுக்கும் (Inflamation) ஆஸ் பிரினின் தடுப்புப் பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டில் பெரு நிலையில் உள்ள பலரும் மனச்சோர்வினால் அவதி யுறும் நிலை சர்வ சாதாரணமாய்க் காணப் படுகிறது. இப்படி 'ஆஸ்பிரின்' அவர்தம் சோர்வைப் போக்கி மகிழ்ச்சியை அவர்தம் முகங்களில் வரவழைக்கிறதாம்! 

என்னே ஆஸ்பிரின் மகிமை! என்ன, பையில் ஒரு ஆஸ்பிரின் இருக்கலாமே!

 - கி.வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள்

சனி, 13 ஜூன், 2020

ஹேப்பி ஹைப்பாக்சியா

June 13, 2020 • Viduthalai • ஞாயிறு மலர்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90% பேர் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதை நாம் அறிவோம்
இதில் அறிகுறிகள் வெளியே தோன்றாத நிலையிலும் பலருக்கு இந்த ஹேப்பி ஹைபாக்சியா எனும் பிரச்சனை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
"ஹேப்பி ஹைப்பாக்சியா" என்றால் என்ன?
இந்த வகை மக்களுக்கு நுரையீரலில் பல்வேறு ரத்தக் கட்டிகள் (Blood clots) ஏற்பட்டு, நுரையீரலின் நுண்ணிய ரத்த நாளங்களை அடைத்துக் கொண்டு, நுரையீரலின் முக்கிய வேலையான ரத்தத்தைத் தூய்மை செய்து ஆக்சிஜனேற்றம் செய்வதில் தொய்வை ஏற்படுத்தும்.
இதனால் ரத்தத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் இருக்க வேண்டிய இடத்தில், குறைவான அளவே இருக்கும். இதை SpO2  எனும் அளவைக் கொண்டு அறிய முடியும். SpO2  என்றால் Peripheral Capillary Oxygen Saturation  என்று பொருள்.
நுரையீரலில் இருந்து ஆக்சிஜனேற்றம் செய்யப் படும் நமது ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனை, உடல் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுச் செய்வது ஹீமோகுளோபின் எனும் இரும்பு கலந்த புரதமாகும்.
ஹேப்பி ஹைப்பாக்சியாவில் நுரையீரல் பழுதடைவ தால் தேவையான அளவு ஆக்சிஜன் உடல் முழுவதும் சென்று சேராது.
பொதுவாக இவ்வாறு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காத நிலையை Hypoxia (ஹைப்பாக்சியா) என்று அழைப்போம்.
இந்த வகை ஹைப்பாக்சியா நிலைகளில்,
  1. மூச்சு விடுவதில் சிரமம் (Shortness of Breath)
  2. மூச்சுத் திணறல் (Breathlessness)
  3. ஏங்கி மூச்சு விடுதல் (பெருமூச்சு) (Gasping) போன்ற அறிகுறிகள் தென்படும்.
ஆனால் இந்த சைலண்ட்/ஹேப்பி ஹைபாக்சியா எனும் நிலையில், நமக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு மிக மிகத் தாழ்வான நிலைக்குக் குறைந்தாலும் நமக்கு அதற்கான அறிகுறிகள் ஏற்படுவதில்லை.
பொதுவாக SpO2 அளவு 95-100% என்ற அளவில் இருக்கும். இதில் 93%க்குக் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அது ஹைபாக்சியா எனும் அளவு என்று கொள்ளப்படும்.
இந்த ஹேப்பி ஹைபாக்சியா எனும் இந்த பிரச்சனையில் ஆக்சிஜன் அளவுகள் 90%, 80%, 70%, 60% வரை கூட குறைந்திருந்தாலும், நோயாளிக்கு எந்த வெளிப்புற அறிகுறியும் தோன்றாமல் இருக்கும்.
ஆனாலும் நுரையீரலில் பெரும்பகுதி ரத்தக் கட்டிகளால் அடைக்கப்பட்டு அதன் செயல்திறன் மிகவும் குறைந்து விடும்.
அடுத்து, குறைவான அளவு ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதால் முக்கியமான உறுப்புகளான 1.மூளை, 2.இதயம், 3.சிறுநீரகம் போன்றவற்றிற்கு, தொடர்ந்து மிகக் குறைவான அளவு ஆக்சிஜனே கிடைக்கும்.
இதன் விளைவாக அந்த உறுப்புகளின் செயல்திறன் குறைந்து போனதும், சிறுகச் சிறுக அவை செயலிழக்கும் நிலை உருவாகலாம். இதை Multi Organ Dysfunction  என்று அழைக்கிறோம்.
சரி.. இவ்வளவு குறைவாக ஆக்சிஜன் அளவுகள் ரத்தத்தில் இருக்கும் நிலை வந்தாலும், எப்படி வெளியே தெரியாமல் இருக்கிறது?
பொதுவாக உயர்ந்த மலையேற்றத்தில் ஈடுபடும் மக்களுக்கு அல்லது உயர்ந்த மலைப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவு ஆக்சிஜன் இருக்கும். காரணம் அவர்கள் வாழும் இடங்களில் காற்றிலுள்ள ஆக்சிஜன் அளவு, தரைமட்டத்தை விட குறைவாகவே இருக்கும்.
அதற்கு ஈடாக அவர்கள் ரத்தத்தில் அதிகமான ரத்தச் சிவப்பு அணுக்கள் உருவாகும். (POLYCYTHEMIA)
மேலும் மலையேற்றம் செய்பவர்கள் சரசரவென்று மேலே ஏறாமல், ஆங்காங்கே இடைவெளி விட்டு சிறிது தங்கி, பிறகு ஏறுவார்கள். இதனால் அவர்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவதும், ரத்தச் சிவப்பு அணுக்கள் அளவுகளில் கூடுவதும் ஒரு சேர மெதுவாக நடக்கும் இதை "ACCLAMATIZATION" என்று கூறுவோம். அதாவது உயரமான இடங்களில் வாழ்வதற்கு உடல் தன்னை தகவமைத்துக்கொள்ளும் கலை.
இந்த வகை தகவமைப்பு என்பது நுரையீரல் நல்ல முறையில் செயல்படுபவர்களுக்கு நிகழும்
ஆனால்,
*          நுரையீரலில் கோவிட் போன்ற நிமோனியா தொற்று இருப்பவர்களுக்கு
*          உடல் பருமன் இருப்பவர்களுக்கு
*          நுரையீரல் அழற்சி/ ஆஸ்துமா போன்ற நோய் இருப்பவர்களுக்கு
*          வயதானவர்கள், குழந்தைகள் போன்றோருக்கு அத்தனை சிறப்பாக நிகழாது.
எனவேதான், இவ்வகை மக்கள் மலையேற்றத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.
இதே விசயத்தை கோவிட்19 மூலம் நிகழும் இந்த சைலண்ட் ஹைபாக்சியாவிற்கு பொறுத்திப் பாருங்கள். அதாவது நன்றாக இருக்கும் நுரையீரலை கொரோனா வைரஸ் தாக்குகிறது. அது தாக்கும் போது நுரையீரலின் சிறு, குறு ரத்த நாளங்களில் பெரும்பான்மைக் கட்டிகளால் அடைக்கப்பட்ட நிலையில் கூட வெளியில் தெரியாமல் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் போன்ற வாய்ப்பு இருக்கிறது. உடல் முழுவதும் குறைவான ஆக்சிஜன் கிடைப்பதால்
  1. உடல் சோர்வு
  2. உடல் வலி
  3. மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
இவ்வாறான குறைவான ஆக்சிஜன் அளவுகளுக்குச் சென்ற ஒரு நபர், இன்னும் நுரையீரலுக்கும் இதயத்துக்கும் அதிக வேலையைக் கோரும் வேலைகளைச் செய்தால் சைலண்ட் ஹைபாக்சியா (Silent Hypoxia) வையலண்ட்டாக (Violent) மாற வாய்ப்புள்ளது.
ஓட்டம் / மலையேற்றம் / அதிக ஆக்சிஜன் கோரும் உடற்பயிற்சிகளைச் செய்யும் போது இந்த நிலை முற்றும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இத்தகைய நிலையில் மருத்துவமனையை அடையும் மக்களுக்கு ரத்தக் கட்டியைக் கரைக்கும் ஹெபாரின் மருந்து, ஆக்சிஜன் மற்றும் வெண்ட்டிலேட்டர் உதவி கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலை இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது?
Pulse Oximeter எனும் கருவி மூலம் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜனின் அளவுகளை அறிய முடியும். கை விரல்களில் மாட்டி சோதிக்கும் finger pulse oximeter கருவிகள் இப்போது பார்மசிகளில் பல நிறுவனங்களின் தயாரிப்பில் கிடைக்கின்றன.
அனைவரும் தங்களின் Spo2 அளவுகளை தொடர்ந்து இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர்களை வாங்கி சோதித்து கொண்டே இருக்க வேண்டுமா?
தேவையில்லை! காரணம் சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகை பல்ஸ் ஆக்சிமீட்டர்களின் தரம் குறித்து ஆய்வு செய்து கூறுவது இயலாது. அனைவராலும் அதை வாங்கிப் பயன்படுத்தவும் முடியாது.
ஆனால் கோவிட் தொற்று பரவி வரும் நோய் தொற்று மண்டலங்களில் இருப்பவர்களுக்கு அதீத உடல் அசதி / சோர்வு / உடல் வலி /மூச்சு விடுவதில் சிரமம்/ திணறல் இருந்தால் மருத்துவமனையை அணுகுவதில் நேர விரயம் இருக்கக்கூடாது.
காரணம், நமக்குத் தோன்றும் ஒரே அறிகுறியாக அது இருக்கலாம்.
சைலண்ட் ஹைபாக்சியா என்பது கோவிட் நோயின் ஒரு வடிவம் என்பதை அறிந்துகொண்டோம். தொடர்ந்து விழிப்புடன் இருப்போம்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கரோனா (SARS-CoV-2) வைரசு

SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான மருந்தா கியூபா களம் இறக்கியிருக்கும் மருந்துதான் இன்டர்ஃபெரான்-ஆல்பா-டுபி (Interferon Alfa-2B). 

இன்டர்ஃபெர் (interfere) என்னும் குறுக்கீடு செய்வதை குறிக்கும் வகையில்தான் இம்மருந்து இன்டர்ஃபெரான் (interferon) என்று அழைக்கப்படுகிறது.

அது என்னன்னு பாக்குறதுக்கு முன்ன நோயெதிர்ப்பு அமைப்பு (immune system) பத்தி கொஞ்சம் பாக்கலாம்.

நம்மோட உடல்ல இயல்பாகவே நோய் கிருமிகளுக்கு எதிரான இயற்கையான பாதுகாப்பு அமைப்பு இருக்கும். அததான் நாம நோயெதிர்ப்பு அமைப்புனு (immune system) சொல்றோம். இந்த நோயெதிர்ப்பு அமைப்பு மனிதனோட உடம்பை நோய் கிருமிகள்கிட்ட இருந்து பாதுகாக்குது. 

மனிதனோட ஒட்டுமொத்த உடலே ஒரு பாதுகாப்பு அரண்தான் என்றாலும் புரதங்கள் (proteins), உயிரணுக்கள் (cells), நிணநீர் நாளங்கள் (lymph vessels) ஆகிய தனிப்பட்ட அமைப்புகளாலும் ஆனது. 

நம்மோட தோல் மேல்பரப்பு, உமிழ்நீர், கண்ணீர், மூக்குல இருக்குற முடி, சளி, காதுக்குள்ள இருக்குற மெழுகு, சவ்வு, பிறப்புறுப்பு ஈரப்பதம் இது எல்லாமே நோய்க்கிருமிகளுக்கு எதிரான முதல் தடைகள். இது எல்லாமே கிருமிகளை உடலுக்குள்ள போக விடாம தடுக்குது. 

உமிழ்நீர்ல இருக்குற குறிப்பிட்ட நொதி (enzyme), கண்ணீர் திரவம் எல்லாம் நுண்ணுயிர்களோட செல் சுவர்களை அழிக்குது.   

மூக்கு வழியா நுழையும் நோய்க்கிருமிகள் மூச்சுக்குழாயில் உள்ள சளியில சிக்கி, மூக்குல இருக்குற முடிகளால வெளியேற்றப்படுகின்றன.

உணவுக்குழாய் வழியா நுழையுற பெரும்பாலான நோய்க்கிருமிகள் வயித்துல சுரக்குற அமிலத்தால (acid) அழிக்கபடுகின்றன. 

அதுமட்டுமில்லாம நம்மோட உடம்புல உள்ள பல சளி சவ்வுகளும் உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.

இருமல் மற்றும் தும்மலும் கூட நோய்க்கிருமிகளை அகற்ற உதவும். 

இதெல்லாம் நோய் கிருமிகள் தாக்குறத எதிர்கொள்ளுறதுக்கு உடலுக்கு வெளியிலேயே இருக்கக்கூடிய அமைப்புகள் பற்றியானது.

 உடலுக்குள்ளாற தாக்குதல் நடந்தா நம் உடல் எப்படி எதிர்கொள்ளும்?

ஒரு நோய்க்கிருமி உடல் செல்களுக்குள் ஊடுருவியபின் நம் உடல் பல்வேறு கட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுது. அதுல ஒண்ணுதான் இன்டர்ஃபெரான்களை வெளியிடும் நடவடிக்கை. 

இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன?

இன்டர்ஃபெரோன்கள் (interferon) வைரஸ்கள் தாக்கிய செல்களால் வெளியிடப்படும் ஒரு வகை சமிக்சை புரதங்களின் கூட்டாகும். இப்படி வைரஸால் பாதிக்கப்பட்ட நம் உடலின் செல்கள் சமிக்சைகளை வெளியிடுவதால் அதன் அருகில் உள்ள நல்ல செல்கள் விழிப்படைந்து தங்கள் பாதுகாப்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துகின்றன.  

இன்டர்ஃபெரான்களின் வேலை என்ன? 

இதுல இன்டர்ஃபெரான்களோட வேலை என்னனா வைரஸ்களோட செயல்பாட்டுல குறுக்கிட்டு அத பெருகவிடாம தடுக்குறதுதான்.  அப்படி அது குறுக்கீடு (interfere) செய்றதாலதான் அதுக்கு interferon-னு பெயர் வந்தது. 

இன்டர்ஃபெரான்கள் எப்படி குறுக்கீடு செய்கிறது?

ஆராய்வுகளின்படி மூன்று வகையான இன்டர்ஃபெரான்கள் உள்ளன. இதுல வைரஸ்களோ இல்ல பிற கிருமிகளோ நம்மோட உடம்புல ஒரு செல்லை தாக்கினா, அந்த பாதிக்கப்பட்ட செல்கள் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு தான் பாதிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கிறது. அவ்வாறு எச்சரிக்கை சமிக்சையாக அது  இன்டர்ஃபெரான் ஆல்பா (1) மற்றும் இன்டர்ஃபெரான் பீட்டாவை (2) வெளியிட்டு எச்சரிக்கிறது. 
இந்த எச்சரிக்கை சமிக்சையால் தூண்டப்பட்டு இரத்த வெள்ளை அணுக்கள் இன்டர்ஃபெரான்-காமாவை (3) வெளியிடுகிறது. இந்த இன்டர்ஃபெரான்-காமாவானது வைரஸ்கள், சில பாக்டீரியாக்கள், புரோட்டோசோவன்  நோய்த்தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்திக்கு முக்கியமான காரணியாக இருக்கிறது. இது மாக்ரோபாஜ்களை (macrophage) தூண்டுகிறது. 

மாக்ரோபாஜ் என்றால் என்ன?

மேக்ரோபாஜ் அப்படீங்குறது ஒரு பெரிய வெள்ளை இரத்த அணு. இது நம்மோட நோயெதிர்ப்பு மண்டலத்தோட ஒருங்கிணைந்த ஒரு பகுதி.
நுண்ணுயிர் தாக்கிய செல்களை கண்டுபிடித்து அதை “சாப்பிட்டு” அழிப்பது இதனோட வேலை. கிருமி தாக்கிய செல்களை முழுமையாக விழுங்கி, அதனை ஜீரணித்து, அதோடு சேர்த்து கிரிமிகளையும் அழிக்குது. இந்த முறைக்கு பாகோசைட்டோசிஸிஸ்-னு (phagocytosis) பெயர். இப்படியாக நோய் தாக்குதலுக்கு உள்ளான நம் உடல் செல்களை அழித்து, நோய் கிருமிகள் நல்ல செல்களை தாக்காத வண்ணம் பாதுகாக்கிறது. 

இன்டர்ஃபெரானை எப்பொழுது மருந்தாக பயன்படுத்தின தொடங்கினர்?

ஐசாக் மற்றும் இன்டென்மென்  (Isaacs & Lindenmann) ஆகியோரின் ஆராய்ச்சியின் விளைவாக இன்டர்ஃபெரான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இன்டர்ஃபெரான் நேரடியாக வைரசை செயலிழக்க வைக்கிறது என்று நினைத்திருந்தனர். 1957-க்கு பிறகு அவை புரதத்தால் ஆனது என்றும், அது பல உயிரிலியல் செயல்பாடுகளுக்கு காரணமான மரபணுவை தூண்டுகிறது என்றும் கண்டறிந்தனர். அவற்றின் செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே அது பலவிதமான வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது பல காரணங்களுக்காக நிறைவேறவில்லை.

இன்டர்ஃபெரான்களைக் கண்டுபிடித்ததன் மூலம் முதலில் உருவாக்கப்பட்ட உற்சாகத்தின் காரணமாக, பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் குறைந்த அளவிலான இன்டர்ஃபெரான்களை மட்டுமே பிரித்தெடுக்க முடிந்ததாலும், அவையும் சுத்திகரிக்கப்பட்டதாக இல்லாமல் போனதாலும் ஆராய்ச்சிகள் திசு வளர்ப்பு சோதனைகள் அளவிலேயே முடிந்து கொண்டிருந்தன.   

1970-களின் நடுப்பகுதியில் பின்லாந்தை சேர்ந்த கான்டெல் மற்றும் அவரது சக ஊழியர்களின் (Cantell and his coworkers), முயற்சிகளால் இரத்த வெள்ளையணுக்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இன்டர்ஃபெரான்கள் தயாரிக்கப்பட்டது. பின்னர் வைரசுகளுக்கு எதிரான சிகிச்சையில் அது குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை அடைந்தது. நம் உடலில் உருவாகும் கிருமிகளை மற்ற நோயெதிர்ப்பு செல்களுக்கு காட்டிக்கொடுக்கும் சமிக்சையாக, மருந்தாக இன்டர்ஃபெரான் புரதங்களை பயன்படுத்த துவங்கினர்.

இன்டர்ஃபெரான் மருந்துகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

இன்டர்ஃபெரான் மனித உடலில் செலுத்தப்பட்டால் அது வைரஸ்களை சமாளிக்க மனித உடலை தயார்படுத்துகின்றன. நம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வெள்ளையணுக்கள் தூண்டப்பட்டு மேக்ரோபேஜ்கள் நோய் தொற்றுக்கு உள்ளான செல்களை அழிக்க தயாராகிறது. இதனால் வைரஸ்கள் நம் உடலில் பெருகி விடாதபடி அவை கட்டுப்படுத்துகின்றன. 

இன்டர்ஃபெரான் மருந்துகள் எந்த நோய்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது?

இன்டர்ஃபெரான் மருந்துகள் முதலில் புற்றுநோய் சிகிச்சைக்காக வெளிவந்தன. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் சிகிச்சையிலும் இன்டர்ஃபெரான்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்டர்ஃபெரான் மருந்துகள் தயாரிப்பில் கியூபாவின் பங்கு என்ன?

கியூபா தனது முதல் இன்டர்ஃபெரானை 1981 ஆம் ஆண்டில் தயாரித்தது. அதே ஆண்டில் கியூபா டெங்கு நோய்க்கு எதிரான சிகிச்சையில் இன்டர்ஃபெரானை பயன்படுத்தியது. பின்னர் 1986-ஆம் ஆண்டில் ‘மறுசீரமைப்பு’ (recombinant) முறையில் (man-made) இன்டர்ஃபெரான் ஆல்ஃபா-2பி (interferon Alfa-2B) தயாரிக்கப்பட்டது.

கோவிட் 19 (COVID-19)-க்கான மருந்துகள் என்ன?

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் எந்த மருந்து வெற்றிகரமாக நோயை எதிர்த்து போராட முடியும் என்பது இன்னும் தெளிவாக யாரும் வரையறுக்கவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருந்துகளை சேர்க்கை முறையில் கலந்து பரிசோதனை முயற்சி செய்கின்றன. உலக சுகாதார மையம் (WHO) சமீபத்தில் நான்கு மருந்து கலவைகளை அறிமுகப்படுத்தியது. 
1. வைரசுகளுக்கு எதிரான ரெம்டெஸ்விர் (remdesivir)
2. மலேரியாவுக்கு எதிரான குளோரோகுயின் (அல்லது தொடர்புடைய ஹைட்ராக்ஸி குளோரோகுயின்) (chloroquine (or the related hydroxychloroquine))
3. இரண்டு ஹச்.ஐ.வி மருந்துகளின் கலவை 
4. அதே இரண்டு ஹச்.ஐ.வி மருந்துகளின் கலவையோடு சேர்த்து இன்டர்ஃபெரான் பீட்டாவுடன்.

இன்டர்ஃபெரான் ஆல்ஃபா-2பி (interferon Alfa-2B) மருந்தை பயன்படுத்திய நாடுகள் எவை?

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கியூபாவின் கூட்டு முயற்சியோடு இன்டர்ஃபெரான் ஆல்ஃபா-2பி-யை கோவிட்-19-னை எதிர்த்துப் போராட பயன்படுத்தியது. உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியின் நட்சத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மருந்து எச்.ஐ.வி, மனித பாப்பிலோமா வைரஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் சி சிகிச்சையில் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ்களுக்கு ஒத்த குணாதிசயங்களைக் காட்டும் வைரஸ்களுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த கியூபன் மருந்து சிறந்ததாக விளங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. COVID-19 ஐ எதிர்த்து கியூபாவின் மருந்துகளை பயன்படுத்துவதை அயர்லாந்து பரிசீலித்து வரும் நிலையில், கியூபா ஏற்கனவே இத்தாலியில் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட தங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அவசர குழுவை அனுப்பியுள்ளது நாம் அறிந்ததே.

பதிவு எழுத்தாளர் ஜீவா - முனைவர் நுண்ணுயிரியல் துறை.

-  திருப்பூர் குணா முகநூல் பக்கம்

புதன், 1 ஏப்ரல், 2020

நாவல் கரோனா வைரஸ், அறிந்ததும் - அறியாததும்

(த வி வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் புது டெல்லி )

*தொற்று:*
 தொண்டை மற்றும் நுரையீரல் புறத்தோல்களில் உள்ள செல்களில் மட்டுமே SARS-CoV-2 கிருமி தொற்ற முடியும். இந்த செல்களில் தான் ACE2 எனும் ஏற்பிகள்(Receptors) உள்ளன ACE2 ஏற்பிகளுடன் மட்டுமே SARS-CoV-2 பற்றிக்கொண்டு செல்களுக்குள் புக முடியும். எனவே ACE2 ஏற்பிகள் இல்லாத தோல் மூலம் இந்த வைரஸ் உடலில் புக முடியாது.  யானை தன தலையிலே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் என்பது போல நமது கைகளின் வழியே தான் கண் வாய் அல்லது மூக்குப் பகுதியை அடைந்து, தொண்டை மற்றும் நுரையீரலுக்குள் செல்லும். எனவே அடிக்கடி கைகளை சோப்பு போட்டு இருபது நொடிகள் தேய்த்து சுத்தம் செய்வதன் வழி தொற்றுப் பரவலை தடுக்கலாம். 

*தொற்று ஊட்டு அளவு:* 
சிறுகுரங்கின் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மூக்கு தொண்டை வழியே குறைந்தபட்சம் 700000 PFU டோஸ் ஊட்டு அளவு கிருமி செலுத்தப்பட்ட பின்னர் தான் தொற்றுநோய் ஏற்பட்டது. நோய்அறிகுறி தென்படவில்லை என்றாலும் அதன் உமிழ்நீர் மற்றும் மூக்கு சளி திவலைகளில் வைரஸ் இருந்தது. அதே போல செயற்கையாக ACE2 ஏற்பிகளை பொருத்தி மரபணுமாற்றம் செய்த எலிகளில் சோதனை செய்தபோது 240 PFU டோஸ்சிலேயே SARS கிருமி தொற்று ஏற்படும் நிலையில் , SARS-CoV-2 தொற்று ஏற்பட 70,000 PFU தேவைப்பட்டது. 

*நோய்பரப்புகிற காலம்:*
 கிருமி தொற்று ஏற்பட்ட ஒருவர் எவ்வளவு நாட்கள் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்த முடியும் என்பது உறுதியாக தெரியாது. சுமார் 10-14 நாட்கள் என மதிப்பீடு செய்கிறார்கள். கிருமி தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வாய்ப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி செயற்கையாக தொற்றுப்பரப்புகிற காலத்தை குறைப்பதன் மூலம் தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்துகிறார்கள். மருத்துவமனையில் தனி படுக்கைகளில் அனுமதித்தல், வீட்டுக்குள்ளேயே தனிமைபடுத்தல்,  ஊரடங்கு முதலிய இதற்கு பயன்படுத்தப்படுகிறது. 

*யார் யாரால் தொற்று பரப்ப முடியும்:*
    நோய் அறிகுறி இல்லை என்றாலும் கிருமி தொற்று உள்ளவர்கள் அனைவரும் தொற்று பரப்ப முடியும். தும்மல் இருமல் வரும்போது மூக்கையும் வாயையும் துணியால் மூடிக்கொள்வது தொற்றுப் பரவலை குறைக்கும்.  கிருமி தொற்று உள்ளவரின் உமிழ்நீர், சளி மற்றும் மலத்தில் கிருமி இருக்கும். 

எப்படி தொற்று பரவுகிறது: எச்சில் தும்மல் மூக்கு சளி திவலைகள் வழி தான் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. அதுவும் ஆறு அடி தொலைவுக்கு தான் பரவும். எனவே தான் காய்கறிக் கடை முதலிய பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் மத்தியில் 1.5 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க அறிவுறுத்துகிறார்கள். பாதுகாப்பு இடைவெளி விட்டு இருப்பதன் மூலம் சுமார் 44%அளவுக்கு பரவலை குறைக்கலாம் என ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. கதவுகளின் கைப்பிடி, செல்பேசிகள் லிப்ட் பொத்தான்கள் மற்றும் கவுண்டர் மேசைகள் முதலியவற்றை தீண்டுவதன் தொடர்ச்சியாகவும் பரவ முடியும் என்றாலும் இவற்றால் மெய்யாக எவ்வளவு தொற்று பரவல் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு தடயங்கள் இல்லை. பொது இடங்களில் இது கைவிரல்கள் (கை) புழங்கிய பிறகு எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக  கைகளை சுத்தம் செய்வது நலம். 

*எவ்வளவு பேருக்கு தொற்று செய்கிறோம்:*
 சராசரியாக தொற்று ஏற்பட்ட ஒருவர் 2.2 முதல் 3.1 வருக்கு கிருமியை பரப்புவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. இடைவெளி விட்டு அணுகுவதன் வழியும் தனிமைப் படுத்துதல் ஊரடங்கு அமலின் மூலமாகவும் செயற்கையாக பரவு விகிதத்தை குறைக்கலாம். 

*எங்கிருந்து வந்தது:* வௌவால் சூப் குடித்ததால் நிச்சயம் வரவில்லை. உணவை சமைக்கும் போது வெப்பத்தில் வைரஸ் மடிந்து விடும். துவக்கத்தில் வௌவால்களிடமிருந்து மனிதனுக்கு SARS-CoV-2  வைரஸ் தாவியது என கருதினர். சமீபத்திய மரபணு ஆய்வுகளுக்கு பிறகு வௌவால்களில் தோற்றுவாய் இருந்தாலும் இடையே வேறு ஒரு விலங்குக்கு தாவிய பின்னர் தான் மனிதனிடம் வந்து சேர்ந்தது என புலனாகியுள்ளது. வேறு ஒரு ஆய்வு பல காலமாக இந்த வைரஸ் மனிதர்களிடம் சுற்றிக் கொண்டிருந்தது எனவும் சமீபத்தில் தான் வீரியம் கொண்டதாக மாறியது எனவும் கூறுகிறது.  

*எப்படி பரிணமித்தது:*
 மனிதனுக்கு நோய் ஏற்படுத்த வல்ல திறன் கொண்ட SARS-CoV-2 வைரஸ் முதலில் விலங்குகளில் பரிணமித்த பின்னர் தற்செயலாக மனிதரிடம் தாவியது அல்லது அவ்வளவாக நோய் ஏற்படுத்தும் குணம் இல்லாமல் மனிதரிடம் குடிபுகுந்த பின்னர் நோய் ஏற்படுத்தும் குணம் கொண்ட SARS-CoV-2 பரிணமித்தது என இரண்டு கருதுகோள்களை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர்.  மேன்மேலும் செய்யப்படும் ஆய்வுகளில் தான்  இதில் எது சரி என்பது விளங்கும்.

*SARS-CoV-2 வைரஸ் எப்போது உருவானது:*
 டிசம்பர் 2019 முன்னர் SARS-CoV-2 தொற்றுக்கான தடயங்கள் ஏதுமில்லை. எனினும் மரபணு தொடரை ஆராய்ச்சி செய்தபோது அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் நடுப்பகுதிக்குள் பிறந்துள்ளது என தெரியவருகிறது. இதன் பொருள் முதல் நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாகவே மனிதர்களிடம் பரவியிருந்திருக்கும். யாரும் இனம் காண முடியாதபடிக்கு சளி இருமல் காய்ச்சல் என வந்து சென்றிருக்கும். 

*நாய் பூனை போன்ற விலங்குகளில் இருக்குமா:*

  SARS-CoV-2 மரபணு பரிசோதனைக்கு பிறகு மனிதனை தவிர வௌவால் புனுகுப்பூனை குரங்கு மற்றும் பன்றிகளிடம் இந்த வைரஸ் வளர முடியும். நாய் பூனை கோழி ஆடு மாடுகளில் வாழ முடியாது. கோழி, முட்டை உண்பதால் எந்தவித கொரோனா ஆபத்தும் இல்லை. 

*ஒரு முறை தொற்று ஏற்பட்டால் மறுமுறை ஏற்படுமா:*
  வாழ்கையில் ஒருமுறை தான் தட்டம்மை தொற்றும். அதன் பின்னர் இந்த வைரசுக்கு எதிராக நோயெதிர்ப்பு தன்மை உருவாகிவிடும். குரங்குகளில் நடத்தப்பட ஆய்வில் ஒரு முறை SARS-CoV-2  தொற்று ஏற்பட்ட பின்னர் மறுமுறை ஏற்படவில்லை. அதே போல மனிதர்களிடமும் நோய் ஏற்பட்டு குணமான பின்னர் மறுமுறை ஏற்பட்ட தடயம் ஏதுமில்லை. ஆனால் இந்த நோயெதிர்ப்பு தன்மை ஆயுள் முழுவதும் நீடிக்குமா அல்லது சில காலம் மட்டுமே நீடிக்குமா என்பது இன்னமும் புதிர் தான். 

*எவ்வளவு ஆபத்தானது:*

 COVID-19 நோய் மரணத்தை விளைவிக்கும் நோய்  அல்ல. கிருமி தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் 81% மிதமான நோய் - சளி ஜலதோஷம் முதலியவைதான் ஏற்பட்டது. சுமார்15% நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப் பட்டது. சுமார் 5% தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பார்க்க நேர்கிறது. கிருமி தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பான்மையினருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதில்லை 

*யாருக்கு ஆபத்து:*

 மருத்துவம் பார்க்கும் மருத்துவ ஊழியர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறனர். இத்தாலியில் லாம்பார்டியில் கரோனா நோய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவ ஊழியர்களில் சுமார்  20% கரோனா நோயால் மடிந்தனர். பொது மக்கள் இடையே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே இருதய நோய், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.  

*மரணம் எதனால் சம்பவிக்கும்:*
.  சுவாசம் முட்டல் மற்றும் சுவாச முட்டல் உடன் இருதயம் செயலிழப்பு ஆகியவை தான் மரணத்துக்கு முக்கிய காரணங்கள். நுரையீரலுக்குள் திரவம் சேர்ந்து மூச்சு விட முடியாமல் தவிப்பது தான் தீவிர நோய். வெண்டிலேடர் உட்பட செயற்கை சுவாச உதவி தான் முக்கிய சிகிச்சை. மருந்துகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன, முடிவு தெரியவில்லை. 

*பால் கவர் செய்தித்தாள் மூலம் கிருமி பரவுமா:*

 பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் சுமார் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும். பால் கவரை கழுவதன் மூலமும், பாத்திரங்களை துலக்குவதன் மூலமும் அகன்றுவிடும். 10000 PFU அளவு SARS-CoV-2 கிருமிகளை செலுத்தி ஆய்வு செய்தபோது சுமார் ஐந்து நிமிடங்கள் தான் செய்தித்தாள் மற்றும் பருத்தி ஆடைகளில் அவற்றால் உயிர்ப்புடன் இருக்க முடிந்தது. 

*காற்றில் பரவுமா:*

 காற்றில் வெறும் 2.7 மணி நேரம் மட்டுமே அவை உயிர்ப்புடன் இருக்கும். எனவே ஊரடங்கு நேரத்தில் மொட்டை மாடி பால்கனி முதலியவற்றில் அச்சம் இன்றி நடமாடலாம். 

*வீரியம் குறைவான ரக SARS-CoV-2 உள்ளனவா:*

 இதுவரை பல ரகங்கள் இனம் காணபட்டுள்ளன. எனினும் பரவு விகிதம் அல்லது நோய் கடுமை தன்மையை பாதிக்கும் எந்த ஒரு மரபணு மாற்றமும் இதுவரை இனம் காணப்படவில்லை. 

*வேனில் காலத்தில் SARS-CoV-2 மடிந்து விடுமா:*
 பருவ காலங்களை சார்ந்து இதன் பரவல் தன்மை மாறுபடும் என்பதற்கான எந்தவொரு உறுதியான சான்றுகளும் கண்டுபிடிக்கபடவில்லை.
நன்றி:
T.V., வெங்கடேஸ்வரன்
(விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி)
புது டெல்லி

பகிர்வு:.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
மக்கள் நலவாழ்வு இயக்கம்.
🌺🌺🌺🌺

சனி, 28 மார்ச், 2020

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்!
வைரஸ் என்றால்?... முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை. செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும். இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் தொண்டப் பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system) மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது. இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ் உள்பட. நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது. முதலாவது அந்த நுண்ணியிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணியிரின் உருவம். இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன. ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். அதில் ஒன்று Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இது தான் இதன் வேலை.

அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள். இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும். இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க... தொண்டைப்பகுதியை அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை. நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும். இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். இன்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும். அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து, பல்கிப் பெருகும். 10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.

இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது. மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. அது என்ன வகையான குழப்பம்... நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான். ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும். அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன. இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை. இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.

நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன. ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.
கவனமாக இருக்க வேண்டும் நண்பர்களே... 
அரசின் உத்தரவு நம் நன்மைக்கே. 21 நாட்கள் உங்கள் வீட்டில் இருப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நம் நாட்டிற்கும் நன்மையே. 🙏🙏🙏

புதன், 11 மார்ச், 2020

மாரடைப்பு என்றால்....

மாரடைப்பு  (Heart Attack) என்பது என்ன?

இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது ரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவை யான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால், இதயம் பாதிக்கப்பட்டு, தனது துடிப்பை நிறுத்திக்கொள்வதே மாரடைப்பு.

திடீர் இதயத்துடிப்பு முடக்கம்(Sudden Cardiac Arrest) என்பது என்ன?

நம் இதயத்துக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் இருந்து மின்னோட்டம் வருகிறது. சில காரணங்களால் இந்த மின்னோட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் (Fluctuations) ஏற்படும்போது, இதயத் துடிப்பு திடீரென  அதிகரித்தும் குறைந்தும் தாறுமாறாக செயல்படுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் எரிந்துகொண்டிருக்கும் பல்பு ணஃபீஸ் போவதைப் போல நமது இதயம் சட்டென தன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது. இந்த நிலையையே திடீர் இதயத் துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest) என்பார்கள். இதயத் துடிப்பின் திடீர் நிறுத்தத்தால், உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் தடைபடுகிறது. தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்படுவதால் மயக்க நிலைக்குச் சென்று,  சுயநினைவு இழக்கும் நிலை ஏற்படுகிறது.

வேறுபாடு  அறிவது எப்படி?

மாரடைப்பு ஏற்படும்போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான வலி (நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலி) ஏற்படுவது போல தோன்றும். இந்த வலி கழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் பரவும், ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். இதயத்துடிப்பு இருக்கும்,  மூச்சுத் திணறல் உண்டாகும். வியர்த்துக் கொட்டி, மயக்கம் வரும். இதுபோன்ற அறிகுறிகளை வைத்தே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறியமுடியும். அதாவது மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினை வோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆஸ்பிரின் போன்ற மாத்தி ரைகள் எடுத்துக்கொண்டு  இதய அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகள் அளித்து உயிரைக் காப்பாற்றுவர்.

திடீர் இதயத்துடிப்பு முடக்கம். மாரடைப்பைவிடவும் அபாயகரமானது, ஏனெனில் எந்தவித அறிகுறியும் இல்லாமல், திடீரென ஒருவர் நிலைகுலைந்து, மயக்க நிலையில் தரையில் சாய்ந்தால் அது திடீர் இதயத் துடிப்பு முடக்கமாக இருக்கலாம். இதயத் துடிப்பு நின்றுவிடுவதால், இதயத்தின் உள்ளிருந்து ரத்தத்தை உந்தித் தள்ளும் பணியை இதயம் நிறுத்திவிடுகிறது. எனவே, இதயத்திலிருந்து பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்ல, நெஞ்சுப் பகுதியில் வேகமாக அழுத்தம் கொடுத்து, வாயோடு வாய் வைத்து செயற்கை  மூச்சு  அளிக்கும் முதலுதவி அளிக்க வேண்டும். இதற்கு  சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation) முத லுதவி என்று பெயர். தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டுசென்றால் டிஃபிப்ரிலே ஷன் (Defibrillation) கருவி மூலம் மின் தூண்டல் ஏற்படுத்தி, இதயத்துக்கு உயிரூட்ட முடியும். திரைப் படங்களில் நெஞ்சுப் பகுதியில் அயன் பாக்ஸ் போல ஒரு கருவியை வைத்து வைத்து எடுப்பார்களே அதுதான் டிஃபிப்ரிலேஷன் கருவி.

 - விடுதலை நாளேடு 9. 3.20

செவ்வாய், 3 மார்ச், 2020

இதய பாதிப்பிலிருந்து காக்கும் வழிகள்

மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் முக்கியமானது இதய செயலிழப்பு! அதிலும், சர்க்கரை நோய் கொண்டவர்களுடைய இதயம் மற்ற சாதாரண இதயத்தைவிட மும்மடங்கு பலவீன மானது.

இதயப் பாதிப்புகள் பிறப்பிலேயே ஏற்படலாம். சிறுவயதிலும் ஏற் படலாம். நடுத்தர வயதிலும் ஏற்பட லாம், வயதான வருக்கும் ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் வரும் இதய நோய்களை நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டும்.

இதற்கான மிக முக்கிய காரணங்கள்

# உடல்பருமன்

# உடல் உழைப்பின்மை

# நீரிழிவு நோய் கட்டுப் பாடின்மை

# தொடர் மனச்சிதைவு நோய்

# தொடர் மருத்துவப் புறக் கணிப்பு

அய்ம்பது வயதினரைத் தாக்கிக் கொண்டிருந்த இந்த மரண நோய், இன்று இருபது வயதினரைக்கூட அதிகமாகத் தாக்குகிறது.

குறிப்பாக, இந்த இதயத் தமனி நோய்கள் சர்க்கரை நோயாளிகளை அதிகமாகத் தாக்குகின்றன.

இதற்குத் தீர்வு என்ன?

5 வகையான 100-களைக் கண்காணித்தலும் 3 வகையான 'உ'களை கடைப்பிடித்து வருவதுமே இதற்கான தீர்வாகும்...

# நம் உயரத்திலிருந்து 100அய்க் கழித்தால் வரும் எண்தான் நம் உடல் எடையாக  இருக்க வேண்டும்.

# நம் சராசரி ரத்தச் சர்க்கரை அளவு 100அய்த் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

# நம் இதய ரத்த  கால்சியம் ஸ்கோர் எனும் இதய நாள கால்சியம் படியும் இலக்கம் 100க்கும் கீழ் இருத்தல் அவசியம்.

# நம் கெட்ட கொழுப்பு எண் 100அய்த் தாண்டாமல் இருக்க வேண்டும்

# நம் உடல் தயாரித்திடும் நல்ல கொழுப்பு எனும்  எண் 100 அய் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

உணவு, உள்ளுணர்வு, உடல் உழைப்பு எனும் இந்த  மூன்றை முறையாகப் பாதுகாத்தால், நிச்சயமாக இதயம் பாதுகாக்கப்படும்.

- விடுதலை நாளேடு, 2.3.20

ஞாயிறு, 1 மார்ச், 2020

புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப் படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் உடலின் பிற பாகங்களில் உண்டாகும் புற்றுநோயை குணப்படுத்தும் முறை ஒன்றை கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த முறை இன்னும் பாதிக்கப்பட்ட வர்களின் உடல்களில் சோதிக்கப்பட வில்லை என்றாலும், இது புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் மிக்கது என்று 'நேச்சர் இம்யூனாலஜி' எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள இதன் முடிவுகள் கூறுகின்றன.

புதிய கண்டுபிடிப்பு என்ன?

உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களைத் தாக்கும். மனித உடலுக்கு எதாவது தீங்கு ஏற்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து, அவ் வாறு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் அவற்றைத் தாக்கி அழிக்கும் உயிரணுக்கள் 'டி' -உயிரணுக்கள் எனப்படும்.

அனைத்து வகையான புற்று நோய்களையும் கண்டறிந்து அழிக்கும் ஒரு வகை 'டி'- உயிரணுவைத்தான் இப்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"இது சாத்தியம் என்று யாரும் இதுவரை நினைக்கவில்லை. ஒரே வகையான டி-உயிரணு அனைத்து வயதினருக்கும் உண்டாகும் அனைத்து வகையான புற்றுநோயையும் குணமாக்கும் வல்லமை பெற்றுள்ளது," என்று இந்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் ஆன்ட்ரூ செவல் பிபிசியிடம் கூறினார்.

இந்த வகை டி-உயிரணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் 'ஏற்பிகள்'  ஒரு குறிப்பிட்ட வேதியியல் நிலையில் புற்று நோய் அணுக்களை கண்டறியும் திறன் உடையவை.

ரத்தம், தோல்,எலும்பு, மார்பு, சிறுநீரகம், கருப்பை உள்ளிட்ட உடலின் பாகங்களில் உண்டாகும் புற்றுநோய் அணுக்களை கண்டறிந்து இந்த டி-உயிரணுக்கள் தாக் குவது ஆய்வக சோதனைகளில் உறுதியாகி யுள்ளது. எனினும், இவற்றால் சாதாரண உயிரணுக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மனித உடலில் உள்ள அனைத்து உயிர ணுக்களின் மேற்பரப்பிலும் இருக்கும் 1 எனும் மூலக்கூறுடன் டி-உயிரணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் 'ஏற்பிகள்' உடன் இணையும்போது, 1 மூலக்கூறு அது இருக்கும் அணுவின் வழக்கத்துக்கு மாறான வளர்சிதை மாற்றம் நிகழ்வதை நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு காட்டிக் கொடுக்கிறது.

"புற்றுநோய் அணுக்களில் உள்ள 1 மூலக்கூறை கண்டறியும் டி-உயிரணுக்களை கண்டறிவது இதுவே முதல் முறை," என ஆய்வாளர் கேரி டால்டன் பிபிசியிடம் தெரிவித்தார்.

புற்றுநோயை குணப்படுத்துவதில் இது ஏன் முக்கியமானது?

டி-உயிரணுக்கள் மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன.

மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள் மூலம் மரணத்தின் விளிம்பில் உள்ள புற்றுநோயாளிகளை முற்றும் குணப் படுத்தும் முறை மிகவும் பிரபலமானது. எனினும் இதன் மூலம் அனைத்து வகை யான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியாது.

புற்றுக் கட்டிகளை உருவாக்கும் புற்றுநோய்களில் மட்டுமே இந்த முறை தடுமாறுகிறது. ரத்தப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களிலேயே நல்ல பலன ளிக்கிறது.

எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ள புதிய வகை டி-உயிரணுக்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப் படுத்தும் திறன் உடையது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 - விடுதலை நாளேடு 20 2 20

மனநலத்தை பேணிக் காப்போம்!

மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் என்பது வள்ளுவர் வாக்கு. வள்ளுவரின் காலந்தொட்டே மனநலம் பற்றிய சிந் தனை எழுந்துள்ளது. மனத்தில் உருவாகும் எண்ணங்கள், அதனால் விளையும் செயல்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகியவற்றின் தொகுப்பே, மனநலத்துக்கு அடித்தளமாகத் திகழ்கிறது.

மனநலம் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் மேம்படுத்தும் நோக்கில் ஸ்டான்லி மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறை மனநலக் கையேட்டை வெளியிட்டுள்ளது. மன வருத்தம், தற்கொலை, மனப் பதற்றம், ஆளுமைக் கோளாறு குறித்த விளக்கங்கள் அந்தக் கையேட்டிலிருந்து இங்கே எடுத்துத் தரப்பட்டுள்ளன.

மன வருத்தம்

ஒரு இயல்பான மனநிலை, வேதனை யான உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடே இந்த மன வருத்தம். இந்த வருத்தம், சோர்வு தொடர்ந்து இருந்து தனக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினை களைத் தருமானால் மன நோயாக மாறுகிறது. மனப் பாதிப்புகளிலேயே மிக அதிகமாகவும் பரவலாகவும் காணப் படுவது மன வருத்த நோய். ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதிகமாகப் பாதிக்கப்படுவது வயது முப்பதிலிருந்து அய்ம்பதுவரை.

இந்த நோயைக் கண்டறியும் அறிகுறிகள்

# உறக்கமின்மை

# பசியின்மை

# எதிலும் நாட்டமின்மை

# எளிதில் சோர்வடையும் நிலை

# செயலில் மந்தநிலை

# மனத்தளவில் மகிழ்ச்சியின்மை

# தன்னம்பிக்கை இழந்த நிலை

எதிலும் எதிர்மறை எண்ணங்கள் எழும் நிலை காணப்படுகிறது. என்னால் முடியாது, எதிர்காலம் எனக்கில்லை, இவ்வுலகில் வாழ்வது வீணே என்பது போன்ற எண்ணங்கள் அதிகமாகும்போது தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. இந்நோயை முன்பே கண்டறிந்து மனநல நிபுணரை அணுகி உரிய நேரத்தில் மருந்துகள் உட்கொண்டு மனவழி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

தற்கொலை என்பது தன் உயிரைத் தானே அழித்துக்கொள்வது. நாற்பது விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

காரணங்கள்

# தனி மனிதக் காரணங்கள்

# சமூகக் காரணங்கள்

தனிமனிதக் காரணங்களாகக் கருதப்படுவது ஏமாற்றம், தோல்வி, இழப்பு, அவமானம் ஆகியவை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மதம், அரசியல் எனப் பல சமூகக் காரணங்கள் உள்ளன.

காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் சமாளிக்கும் திறன், பிரச்சினை களுக்குத் தீர்வுகாணும் மனஉறுதி குறையும் போது, தற்கொலை எண்ணம் மேலோங்கு கிறது. பிரச்சினைகளை மற்றவர்களிடம் பேசும்போது மனபாரம் குறையும், ஒரு தீர்வு கிடைக்க வழிவகுக்கும். அந்த ஒரு நொடியில் அவரது பிரச்சினையைக் கேட்டு அரவணைத்து ஆதரவு கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது தற்கொலையிலிருந்து மீள, மறுவாழ்வு பெற ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு செய்ய முடியவில்லையெனில் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால், தற்கொலையைத் தடுக்க முடியும்.

மனப் பதற்றம்

மனப் பதற்றம் என்பது அச்சுறுத்தலின் போதோ அல்லது ஆபத்தான - கடினமான சூழ்நிலையிலோ நாம் அனைவரும் பெறும் ஓர் உணர்வு. ஆனால், நீங்கள் எந்தக் காரணமுமின்றிக் கவலைப்படுகிறீர்கள் அல்லது பதற்றப்படுகிறீர்கள் என்றால் அது வாழ்க்கையைப் பாதிக்கும்.

இதில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.

# ஜெனரல் ஆன்சைட்டி டிஸ்ஆர்டர்

# பேனிக் அட்டாக்

# ஃபோபியா

நோய்க்கான காரணங்கள்

# மரபு வழி

# லேசான பதற்றத்தைக்கூடத் தீவிர உடல் நோயின் அறிகுறிகள் என்று நம்புவது

# உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள்

# மனநலப் பிரச்சினைகள்

சிகிச்சை முறைகள்

# நீங்கள் நம்புகிற - மதிக்கும் ஒரு நல்ல நண்பர் அல்லது உறவினருடன் பேச முயல வேண்டும்.

# ஓய்வெடுப்பதற்கான சில சிறப்பு வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

# மனநல மருத்துவரை நாட வேண்டும்.

உதவி பெறும் முறைகள்

# சுயஉதவி முறைகள்

# மன அழுத்தமாக இருக்கும்போது ஓய்வெடுக்க முயலுங்கள்.

# ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவது அவசியம்

# உடல் ஆரோக்கியத்தைக் கவனி யுங்கள்.

# சில வழக்கமான உடற்பயிற்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

# நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஈடுபடுங்கள்.

ஆளுமைக் கோளாறு உள்ள ஒருவருடன் வாழும்போது அவர்களுக் கான இடத்தைக் கொடுப்பது, அவர்களின் கவலைகளைக் கேட்பது, ஒப்புக்கொள்வது, மற்றவர்களை (நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்கள்) ஈடுபடுத்துவது அனைத் தும் பயனுள்ளதாக இருக்கும். உடன் இருப்பவர்களின் சொந்த உடல் / மன ஆரோக்கியத்தைக் கவனிப்பதும் முக்கிய மாகும்.

மனத்தைப் பேணுவோம்

ஒருவரின் எண்ணங்களும் செயல்களும் உணர்ச்சிகளும் தன்னையும், பிறரையும் பாதிக்காத அளவுக்கு இருக்குமேயானால், அதுதான் சிறந்த மனநலம்.

அதைப் பேணுவதும் போற்றிப் பாதுகாப்பதும் அவசியம். அதில் பிரச் சினை ஏற்பட்டால், மனநலம் பாதிக்கப் படும், பல விளைவு களையும் நாம் சந்திக்க நேரிடும்.

எனவே, விழிப்புணர்வு பெறுவோம், மனநலம் காப்போம், மனித இனம் வளர்ப்போம்.

- விடுதலை நாளேடு, 17.2.20

புதன், 22 ஜனவரி, 2020

தீவிர சைவ உணவு உயிருக்கே உலை வைக்கும்!


நாட்டில் மிகவும் மோசமான மதவாத அரசியல் அரங்கேறி வருகிறது. இந்து மதக்கலாச்சாரப்படி தான் வாழவேண்டு மென்று சட்டம் மட்டும் இயற்றவில்லையே தவிர மற்றபடி வட இந்தியாவில் இந்து வென்றால் இப்படி இருக்கவேண்டும் என்று மறைமுகமாக பரப்புரை செய்தும் அதை பின்பற்றாதவர்களை இந்து அமைப் பினர் தாக்கியும் வருவது அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நவராத்திரி மற்றும் இதர இந்து விழாக்களின்போது பல மாநி லங்களில் இறைச்சி விற்பனை தடை செய் யப்பட்டு வருகிறது, காந்தி பிறந்தநாள், மகாவீரர் பிறந்த நாள் உள்ளிட்ட பல முக்கிய நாட்களில் அவர்களின் நினை வாக அவர்கள் கடைப்பிடித்த வன்முறை யின்மை, கொல்லாமை குறித்த கொள்கை களுக்காக இந்த இறைச்சி விற்பனை தடை உள்ளது, அதுவும் கடைகளில் மட் டும் விற்பனை செய்யப்படாது, மற்றபடி வீடுகளில் சாப்பிட தடையில்லை.

ஆனால் தற்போது உத்தரப்பிரதேசம் அரியானா, குஜராத் போன்ற மாநிலங் களில் நவராத்திரி என்னும் 9 நாள் விழா வில் இறைச்சிக்கடைகளை மூடுங்கள் என்று மறைமுக மிரட்டல் விடுத்து வரு கின்றனர்.  தற்போது வாரத்தின் மூன்று விரதநாட்களில் இறைச்சிக்கடைகளை மூடுங்கள் என்று மிரட்டி வருகின்றனர். அரியானா  மாநிலத்தில் இறைச்சிகடைகள் இந்துக்கள் வாழும் பகுதியில் இருக்க கூடாது என்று மாநகர ஆணையர்களே மறைமுக உத்தரவு பிறப்பித்து வருகின்ற னர்.

இந்த நிலையில் இறைச்சி தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதித்து வரு கின்றனர். நாட்டில் அதிக அளவு கிளை களைக் கொண்ட அயல்நாட்டு இறைச்சி நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஒரு விளம் பரம் செய்தது, அதில் 'காய்கறிகள் சாப் பிட்டு சலிப்படைந்து விட்டீர்களா? புரோட்டின் உள்ள இறைச்சிகள் உங்களது விருப்பமாக இருக்கட்டும் எங்கள் நிறு வனம் உங்களுக்கு தேவையான புரத உணவை வழங்குகிறது' என்று விளம்பரப் படுத்தி இருந்தது,

இதைக் கண்ட மத்திய உணவுப் பாது காப்புத்துறை அந்த நிறுவனத்திற்கு எச் சரிக்கை விடுத்துள்ளது, அதில் இறைச்சி சாப்பிடுவதை விட காய்கறி சாப்பிடுவதை கெடுதல் என்று கூறுவது போல் உங்கள் விளம்பரம் உள்ளது, இறைச்சிக் கலாச் சாரத்தை ஆதரிப்பது போல் உங்கள் விளம்பரம் உள்ளது. ஆகையால் உங்கள் விளம்பரத்திற்கு அரசு அபராதம் விதிக் கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்தியப் பிரதேச அரசு கொண்டு வந்த அங்கன்வாடிகளில் முட்டை கொடுக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும்  பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இறைச்சி சாப்பிடுவது, முட்டை சாப்பிடுவது போன்றவை இந் துக்களின் கலாச்சாரம் இல்லை. இறைச்சி, முட்டை சாப்பிடுபவர்கள் இந்துக் கலாச் சாரத்திற்கு எதிராக செயல்படுபவர்க ளோடு கூட்டு சேர்ந்துவிட்டனர் என்று கூறிவருகின்றனர்.

வட இந்தியாவில் இறைச்சி சாப்பிடு பவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என்ற ஒரு சமூக அச்சத்தை பரப்பி வரு கின்றனர். ஆனால் இறைச்சி உண்ணாமல் புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டு நாட்டில் மிகப்பெரிய ஊட்டச்சத்தின்மை சூழல் உருவாகும் அபாயம் ஏற்படும் என்பது குறித்து இவர்கள் அக்கறைகொள்வ தில்லை.

தீவிர சைவ உணவான "வீகன்" உணவுமுறையைப் பின்பற்றியதால் குழந்தை மரணம்... பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்துக்காகப் பெற் றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'வீகன்’ என்னும் உணவு முறையைப் பின்பற்றியதால் ஊட்டச்சத்துக் குறை பாட்டால் 18 மாத குழந்தை இறந்ததை அடுத்து அக்குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகா ணத்தைச் சேர்ந்தவர்கள் ஷீலா- ரயான் தம்பதியர். இவர்களுக்கு 18 மாத ஆண் குழந்தை இருந்தது. 'வீகன்' உணவு முறையைப் பின்பற்றும் இத்தம்பதியர் தங்களது குழந்தைக்கும் இதே உணவு முறையைப் பழக்கப்படுத்தி வந்துள்ளனர்.

வீகன் என்பது சைவத்தின் அடுத்தபடி யான ஒரு உணவு முறை ஆகும். இந்த உணவு முறையால் குழந்தை ஊட்டச் சத்துக் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறியாத பெற்றோர் தொடர்ந்து குழந்தைக்கு அதே உணவு முறையை அளித்து வந்துள்ளனர்.

திடீரென கடந்த செப்டம்பர் மாதம் அந்தக் குழந்தை மரணமடைந்துவிட்டது. ஊட்டச்சத்துக் குறைபாடால் உடல் மெலிந்து இறந்துள்ளது அக்குழந்தை. இதையடுத்து பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்துக்காகப் பெற் றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தம்பதியருக்கு 5 மற்றும் 3 வயது களில் இரண்டு குழந்தைகள் வேறு உள்ள னர். இந்தக் குழந்தைகளும் பற்கள் சொத் தையாகி, உடல் மெலிந்து காணப்பட்டுள் ளனர். தற்போது இந்த இரண்டு குழந்தை களுக்கும் ஊட்டச்சத்து மற்றும் புரதம் அடங்கிய உணவு வழங்கப்படுகிறது, இவர்கள் தொடர்ந்து உணவு முறையை கண்காணிப்பதற்காக குழந்தைகள் அரசு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 -  விடுதலை ஞாயிறு மலர், 30.11.19