திங்கள், 11 டிசம்பர், 2017

வலிப்பும் - விழிப்பும்
வலிப்பு நோயில் பல வகை உண்டு. அதற்கான காரணங்களும் பலவிதம். இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளையில் வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித்தொற்று, மூளையில் புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கான முக்கியக் காரணங்கள்.

சிலருக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வருகிறது. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே. ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவது, சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களாலும் வலிப்பு வரலாம். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக வலிப்பு வருவதுண்டு. பல நேரம் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும். ஒருமுறை வலிப்பு வந்தவருக்கு மீண்டும் மீண்டும் வலிப்புவருவதற்கு அதிக சாத்தியம் உண்டு.

வலிப்பின் வகைகள்

மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். மூளை யின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது பகுதி வலிப்பு. நாம் அவ்வப்போது காண் கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியி ருக்கும். இந்த வகைக்கு முழுவீச்சு வலிப்பு என்று பெயர்.

இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்ப சிகிச்சைமுறை மாறுவது மருத்துவ நியதி.

என்ன செய்ய வேண்டும்?

* வலிப்பு வந்தால், அருகில் உள்ளவர்கள் இவ் வாறு செய்ய வேண்டும்:

*அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள்.

*சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து டை போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.

*மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட் டம் கிடைக்க வழி செய்யுங்கள்.

*அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

*மூக்குக் கண்ணாடி அணிபவராக இருந்தால், அதை அகற்றிவிடுங்கள்.

*வாயில் உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.

*வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் ஆபத்து அதிகம். உடனே அருகில் உள்ள மருத்துவ மனையில் அவசர சிகிச்சையைப் பெற அவருக்கு உதவுங்கள். பின்னர் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள்.

என்ன பரிசோதனை?

வலிப்பு வந்தவர்கள் மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில அடிப்படை ரத்தப் பரிசோதனைகளுடன், மூளை யின் மின்னோட்டத்தை அளவிடும் இ.இ.ஜி., வீடியோ இ.இ.ஜி., சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.அய். ஸ்கேன், பெட்  ஸ்கேன், ஸ்பெக்ட்  ஸ்கேன் முதலியவற்றை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிகிச்சை என்ன?

இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக் கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். நல்ல பலன் கிடைத்துவிடும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்து விடலாம்.

2 முதல் 3 சதவீத நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர் களுக்கு எம்.ஆர்.அய். ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத் தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் மைக்ரோ அறுவைசிகிச்சை தற்போது உள்ளது. இந்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும். ஆனால், இந்த அறுவைசிகிச்சை வலிப்பு நோயாளிக் குத் தேவையா இல்லையா என்பதை மூளை நரம்பியல் மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
- விடுதலை நாளேடு,11.12.17

திங்கள், 20 நவம்பர், 2017

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வழிகள்

தினமும் காலையில் எழுந்தவுடன் நிறைய சுத்தமான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும். சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுதியாக உள்ள வெண்டைக்காய், கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சோற்றுக்கு பதிலாக கோதுமை, கம்பு, கேழ்வரகு ரொட்டிகளை சாப்பிடுவது நல்லது. எண்ணெய் குறைவாக சேர்க்க வேண்டும்.

நடப்பது என்பது சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிகத் தேவையான விஷயமாகும். தினசரி காலை நேரங்களில் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். காலையில் நேரம் கிடைக்காதவர்கள் மாலையில் நடைப் பயிற்சியை செய்யலாம். சாப்பிட்டவுடன் உட்காரவோ, உடனே தூங்கவோ கூடாது. ஒரு பத்து நிமிடமாவது நடந்துவிட்டு, பிறகுதான் தூங்கச் செல்ல வேண்டும். இதனால் உடலில் சர்க்கரை அதிகமாகும் அளவு குறைக்கப்படும்.

சர்க்கரை நோயிற்கான காரணங்கள் மற்றும் தேவையான மருந்து தீர்வுகள்

உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு.

1.உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய் ஆயுள் முழுவதும் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை. இந்த முதல்வகை சர்க்கரை நோய்க்கு அய்டிடிஎம்  என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக் கூடியது.

2. உடலில் இன்சுலின் உற்பத்தி போதிய அளவுக்கு உற்பத்தி ஆகாததால் ஏற்படுவது இரண்டாவது வகை சர்க்கரை நோயாகும். இந்த வகை சர்க்கரை நோய்க்கு என் அய்டிடிஎம்  என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோ யாளிகள் ஆயுள் முழுதும் மாத்திரை சாப்பிட வேண்டி யிருக்கும்.

இந்தியாவில் இரண்டாவது வகை சர்க்கரை நோய் காரணமாக பாதிக்கப்படுவோர்தான் அதிகம். உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை, முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் வந்து விட்டால், ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு தரும் பயன்

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தவுடன் பயப்படத் தேவையில்லை. சாப்பிட்டு ஒன்றரை மணி கழித்து எடுக்கப்படும் இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவு 180 மில்லி கிராமுக்கு கீழ் இருக்கும் நிலையில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தினசரி உடற்பயிற்சி போதுமானது. மாத்திரை தேவையில்லை. ஆக 20 சதவிகித சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகளின் தேவையின்றி உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலமே இரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு ஒரு நோயாளி உணவுக்கட்டுப்பாட்டில் தொடர்ந்து விரும்பி அக்கறை செலுத்தினால் சர்க்கரை நோய் காரணமாக உடலில் ஏற்படும் விளைவுகளை தடுக்க முடியும். ஏனெனில் கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய் காரணமாக இதயம், சிறுநீரகங்கள், கண்கள், பாதங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி முதலில் உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிப்பது அவசியம். ஒவ்வொருவருக்கும் உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள குத்துமதிப்பான கணக்கு ஒன்று உள்ளது.

அதாவது உங்களது உயர அளவிலிருந்து 100-அய்க் கழிக்க வரும் எண்ணே உங்களது சரியான எடை அளவு. உதாரணமாக 170 செ.மீ உயரம் இருந்தால், அவரது எடை 70 கிலோ கிராம்தான் இருக்க வேண்டும். அவரே சர்க்கரை நோயாளியாக இருந்தால் உடல் எடை 10 சதவிகிதம் குறைவாக இருப்பது நல்லது. அதாவது 63 கிலோ கிராம் இருந்தால் நல்லது. சர்க்கரை நோயாளிகள் சமச் சீரான உணவில் தினமும் கவனம் செலுத்துவது அவசியம். புரதம், கார்போ ஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, வைட்ட மின்கள் ஆகியவை போதுமான அளவுக்கு தினமும் உணவில் சேருவதே சமச்சீரான உணவு என சொல்லப் படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டிய காய்கறிகள் : கேரட், பீட்ரூட், பட்டாணி, டபுள் பீன்ஸ் ஆகியவை.

தவிர்க்க வேண்டியவை: உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை தேன், குளுக்கோஸ், ஜாம், வெல்லம், இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள், கேக், இளநீர், தேங்காய், குளிர்பா னங்கள், மதுபான வகைகள், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன் விட்டா, காம்ப்ளான் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அனைத்து வகையான பிஸ்கட்டுகளையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
- விடுதலை நாளேடு, 20.11.17

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

கர்ப்ப காலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா? ஆயுஷ் கையேட்டுக்கு மருத்துவரின் விளக்கம்மத்திய யோகா மற்றும் நேச்ரோபதி கவுன்சில் (ஆயுஷ்) கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில், `கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக் கூடாது. கோபப்படக் கூடாது. ஆசைப்படக் கூடாது. கர்ப்பக் காலத்தில் கணவன் - மனைவி தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது. படுக்கை அறையில் அழகான படங்களை மாட்டி வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும். பிரார்த் தனை செய்ய வேண்டும். நல்ல இசை கேட்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த மாதம் ஆரோக்கிய பாரதி (ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மருத்துவ அணி) சார்பாக ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. அதில் அழகான, உயரமான, அறிவான குழந்தைகளைப் பெற ஜெர்மனியின் ஆயுர்வேதா முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. அதன்படி, குறிப்பிட்ட கிரகங்கள் ஒன்று சேரும் நேரத்தில் மட்டும் கணவன் - மனைவி தொடர்ந்து 3 மாதங்கள் தாம் பத்திய உறவில் ஈடுபட வேண்டும். இதனால் உடனே கருத்தரித்து, அழகான, உயரமான ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும். கருத்தரித்ததில் இருந்து குழந்தை பிறக்கும் வரை தாம்பத்திய உறவு வைத் துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

சமூகம் தழைத்தோங்க ஆண் - பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போல் தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தி யாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அவசியம்; அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர். `இந்த நேரத்தில்தான் உறவுகொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது' என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சித்திரிப்பதும்... விந்தையாக உள்ளது. ஏற்கெனவே மனைவியுடன் கணவன் பலவந்தமாக உடலுறவுகொள்வது குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. இச்சூழலில் கருத்தரித்த நாளில் இருந்து பெண் உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது. 

தாம்பத்தியம் “கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக மாமிசம் சாப்பிடக் கூடாது; தாம்பத்தியம் கூடாது என்று சொல்வது முற்றிலும் பிற்போக்குத்தனம்'' என்று கூறுகிறார், மதுரை மகப்பேறு மருத்துவர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் மாநில உறுப்பினர் மீனாம்பாள் கூறியதாவது:-

‘‘கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந் தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாக வேத்தான் கிடைக்கின்றன. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவுல இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள்  இருக்கின்றன. காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்துல மட்டும்தான் இருக்கின்றன. அதனால கர்ப்பிணிகளை  புரோட்டீன், இரும்புச் சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடச் சொல்வோம். காய்கறிகளை விட மாமிசம் சாப்பிடறப்ப எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறி களோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்’’ என்றவர் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவின் அவசியம் பற்றியும் விவரித்தார்... 

‘‘கர்ப்ப காலத்துல தாம்பத்திய உறவே கூடாதுனு சொல்றதை ஏத்துக்க முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாசம் ரொம்ப ஹார்ஷா வேணாம்னு கொஞ்சம் அவாய்ட் பண்ண சொல்வோம். அதுக்கப்பறம் பொண்ணுக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லேனா எப்பவும் போல கம்ஃபர்டபிளா தாம்பத்திய உறவு வெச்சுக்கலாம். தாம்பத்திய உறவால குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது. குழந்தை நல்ல பாதுகாப்பா அம்மாவோட பனிக்குடத்துலதான் வளருது. கர்ப்பமா இருக்குற பொண்ணு உடல் அளவுல சவுகரியமா பீல் பண்ணினா அதுக்கேத்த மாதிரி இரண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கணும். 

சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவுல பிரச்சினை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.அய்.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும். சில இன்ஃபெக்ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை  தவிர்க்கணும். கர்ப்ப காலத்துல பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாம, கணவன் - மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனுசரணையா இருக்குறது அவசியம். கணவன் - மனைவிக்கு இடையே தாம்பத்தியம் அதிகளவுல பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்துல அரசோட இந்த நெறி முறைகளை தவிர்த்துட்டு ஒவ்வொருத் தரும் அவங்க செக்கப் போற டாக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை ஃபாலோ பண்ணினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்கலாம்...''  என நம்பிக்கை ஊட்டுகிறார் டாக்டர் மீனாம்பாள். 

- நன்றி: விகடன் இணையம், 17.6.2017

-விடுதலை,8.7.17

சனி, 19 ஆகஸ்ட், 2017

புற்றுநோய் ஒரு நோயல்ல; B17 வைட்டமின் குறைபாடே!

கேன்சர் என்பது நோய் அல்ல; வைட்டமின் பி17 குறைபாடு. மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற்றுநோயை சிலர்  வியாபாரமாக்கி கோடிகோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் முறையான உணவால் அப்பாதிப்பிலிருந்து மீளலாம்! உயிர்பயம் தேவையில்லை
தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் பி17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சரை எதிர்த்து போராடக்-கூடிய வல்லமை பெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சரை எதிர்த்து போராடக்கூடிய  லேட்ரில்  உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோவிலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்திக் கொண்டு செல்லப்படுகிறது. ஞிக்ஷீ. ஹரோல்ட் கீ. மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சரை எதிர்க்கும் மருத்துவ முறையில்  90% வெற்றி கண்டார்.

புற்று பாதிப்பை நீக்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ், சோளம், லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி. 

2. பருப்பு வகைகள்- லென்டில் (மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முளை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் (பாதம் பருப்பு). இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-_முசுக்கட்டைய் பழத்தில் (Mullberries) இல் கருப்பு முசுக்கட்டை, பிளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-_எள் (வெள்ளை & கருப்பு), ஆளி விதை.

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி (Brown Rice), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்: 

அப்ரிகாட்

லிமா பீன்ஸ்

ஃபாவா பீன்ஸ் (Fave Beans) 

கோதுமை புல் (Wheat Grass) 

பாதாம்

ராஸ்பெரிஸ்

ஸ்ட்ராபெர்ரி

ப்ளாக்பெர்ரி

பிளூபெர்ரி

பக் வீட் (Buck Wheat)

சோளம்

பார்லி

குதிரைவாலி

முந்திரி

மெகடாமியா கொட்டைகள் (Macadamia Nuts)

முளைகட்டிய பீன்ஸ்

இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதில் கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் Handwash Liquid, Dishwash Liquid இல் அதிகளவு கேன்சரை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் உள்ளது. 

நாம் இதைப் பயன்படுத்தும்பொழுது இது நம் கைகளிலோ, உணவு தட்டுகளிலோ படிந்து-விடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாகப் பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.

இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். 
அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில்கூட புற்றுநோயை உண்டாக்கக் கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே! உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

(http://www.newsrescue.com/secret-uncovered-cancer-not-disease-business/#axzz4MOVbUFAiஎன்ற இணையத்திலிருந்து...)
-உண்மை,16.31.7.17

 


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

தேவைக்குத் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பை தவிர்க்கலாம்கொலஸ்டிராலுக்கும், மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு பரவலாக அறியப்பட்டது. ஆனால், தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். 

தண்ணீர் இல்லாமல் உடலில் எந்த செல்லும் இயங்க முடியாது. உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் தண்ணீர் தேவை. திசுக்களுக்குத் தண்ணீர் தேவை. ரத்த உற்பத்திக்கு, செல்களின் வளர்சிதைமாற்றப் பணிகளுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்குச் சரியான ஊடகம் தண்ணீர்தான். மேலும், ரத்த ஓட்டத்துக்கு, சுவாசத்துக்கு, உணவு செரிமானத்துக்கு, வியர்ப்பதற்கு, சிறுநீர் கழிப்பதற்கு, உடலின் வெப்பத்தைச் சமப்படுத்துவதற்கு என உடலின் முக்கியமான இயக்கங்களுக்கும் தண்ணீர் தேவை.

வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், காலநிலை, நோய்நிலை எனப் பல காரணிகள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன. என்றாலும், ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் 2,400லிருந்து 3,000 மிலிவரை தண்ணீர் குடிக்க வேண் டும். பொதுவாகச் சொன்னால், ஒரு கிலோ உடல் எடைக்கு 35 மி.லி. தண்ணீரை தினமும் அருந்த வேண்டும். 

ரத்த பிளாஸ்மாவில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. ரத்தச் சிவப்பணுவில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. தண்ணீரின் அளவு உடலில் சரியாக இருந்தால், இந்த அளவுகள் மாறாது; ரத்தம் திரவ நிலையில் இருக்கும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் சரியாகக் கிடைக்கும். இதனால், இதயத்தின் அழுத்த விசையும் சரியாக இருக்கும்.

அடுத்து, ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் ஃபைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. உடலில் ரத்தக்காயம் ஏற்படும்போது ரத்தக்கசிவைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் இந்த ஃபைப்ரினோஜன்தான்.
ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஃபைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு ஃபைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். அப்போது மாரடைப்புக்கு சாத்தியம் உண்டாகும். 

ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் () எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்கின்றன. இவற்றின் முக்கியத்துவம் என்ன? முதன்மை மின்சார இணைப்பு நின்று போனால், யு.பி.எஸ்.  கருவி தடங்கல் இல்லாமல் மின் விநியோகத்தைப் பார்த்துக்கொள்வது போலத்தான் இந்த நுண்ணிய ரத்தக்குழாய்கள் நமக்கு உதவுகின்றன.
அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த விநியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற் படும்போது, இவைதான் இதயத் தசைகளுக்கு ஆபத் பாந்தவன்களாக ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகும் அல்லது மாரடைப்பின் கடுமை குறையும்.

கரோனரி ரத்தக்குழாய் அடைப்புக்கு ஸ்டென்ட் சிகிச்சை அல்லது பைபாஸ் அறுவைச் சிகிச்சையைப் பெறும்வரை உயிரைத் தாங்கிப் பிடிப்பவை இந்த நுண்ணிய ரத்தக் குழாய்கள்தான். ஆகவே, இவை சரியாக ரத்தம் விநியோகம் செய்ய வேண்டுமானால், தேவைக்குத் தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம்.

அடுத்து, குறைவாகத் தண்ணீர் அருந்துவதால் உடலில் நீர் வறட்சி  ஏற்படும் அல்லவா? இந்த நிலைமை நீடித்தால், ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கும். அப்போது ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இது மாரடைப்புக்கு வழி அமைக்கும். மேலும், அதிக அடர்த்தியுள்ள ரத்தம் உடலைச் சுற்றிவருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ரத்தச் சுற்றோட்டத்தின் வேகம் குறையும். இதனால், லேசாக உள்ள அல்லது ஆரம்ப நிலையில் உள்ள அல்லது வெளியில் தெரியாமல் மறைந்துள்ள மாரடைப்பானது, நாம் சிறிதளவு கடின வேலைகளைச் செய்யும்போதுகூட கடுமையாகி உயிருக்கு ஆபத்தை வரவழைக்கலாம். 

தினமும் தேவையான தண்ணீரை அருந்தும் பழக்கம் எல்லோருக்கும் அவசியம்தான் என்றாலும், புகை பிடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், பிறவி இதயநோய் உள்ளவர்கள், ஏற்கெனவே மாரடைப்பு வந்து சிகிச்சை பெறுபவர்கள், கர்ப்பிணிகள், சுருள் சிரை நோய்  உள்ளவர்கள், அடிக்கடி அதிக தூரம் பயணம் செய்பவர்கள், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் உள்ளவர்கள், வெயிலில் வேலை செய்பவர்கள் ஆகியோர் தங்கள் தேவைக்கு தினமும் தண்ணீர் அருந்தி, உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பைத் தடுக்க உதவும் வழிகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
-விடுதலை,7.8.17

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

குழந்தை நீரிழிவுக்கு - தடுப்பூசி


நீரிழிவு நோய் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இதில், 'டைப் 1' ரக நீரிழிவு நோய் சில வைரஸ் தொற்றினால் வரக்கூடும் என பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த வைரஸ்களைப் பற்றி கடந்த, 25 ஆண்டுகளாக செய்த ஆய்வுக்குப் பிறகு, அவற்றைத் தடுக்கும் ஊசி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். டைப் 1 நீரிழிவு, டைப் 2 நீரிழிவை விட குறைவாகவே வருகிறது என்றாலும், வைரஸ் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே டைப் 1 நீரிழிவு ஆரம்பித்து விடுவது கொடுமையானது. உலகெங்கும் ஆண்டுக்கு, 80 ஆயிரம் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு உண்டாகிறது. குறிப்பிட்ட சில வைரஸ்கள், உடலில் இன்சுலினை சுரக்கும் கணையத்தை தாக்குகின்றன. இதனால்தான் டைப் 1 நீரிழிவு குறைபாடு உண்டாகிறது. எனவே, அதை உருவாக்கும் வைரசுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் டைப் 1 நீரிழிவை வெற்றிகரமாக தடுக்க முடியும் என பின்லாந்திலுள்ள டேம்பர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். விலங்குச் சோதனைகளில் வெற்றி கிடைத்திருப்பதையடுத்து, 2018இல் மனிதர்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் போட்டு சோதனைகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதில் வெற்றி கிடைத்தால், டைப் 1 வகை நீரிழிவு நோயாளிகள் இளம் வயதிலேயே உருவாவதை தடுக்க முடியும்.

-விடுதலை,3.8.17