தூக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஜூன், 2019

தூக்கமின்மை ஏற்படுவது ஏன்?



தூக்கமின்மை இன்று வயது வித்தியாச மின்றி பரவலாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, முதுமை தூக்கமின்மையின் உச்சம். அதிலும் முதுமையானவர்களில் 50% பேர் உறக்கமின்மயால் பாதிக்கப்பட்டிருப் பதாக 'தேசிய உறக்க அமைப்பு' சொல்கிறது. இதற்கான காரணங்களைப் பட்டியலிட்டால், அது நீண்டுகொண்டே போகும்.

சமநிலைத் தூக்கம்

மேடேறிச் செல்லத் திணறும் அரசுப் பேருந்துபோல இன்று கணக்கற்ற முதிய வர்கள், அது பணக்காரரோ பாமரரோ உறக்கமின்றித் தவிப்பதற்கான காரணங் களையும், அதனால் ஏற்படும் பின்விளைவு களையும் புரிந்துகொண்டால் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் தானே?

பிறந்தபோது ஆழ்ந்த உறக்கமாயிருந்த (ஒரு நாளைக்கு 14  - 17 மணி நேரம்) தூக்கம், முதுமையில் துக்க வீட்டின் தூக்கம்போல் நான்கு மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்து போகிறது.

நான்கு நிலைகள்

உறக்கமானது மொட்டு மலர்வதைப் போல இயல்பாக மலர வேண்டும். அந்த இயல்பான உறக்கமானது நான்கு நிலைகளில் ஏற்படும்.

நிலை 1:  நினைவுக்கும் உறக்கத்துக்குமான இடைப்பட்ட நிலை. இது 15 நிமிடம் நீடிக்கும்.

நிலை2: இதயத் துடிப்பு சற்றே குறையும், மூளையும் தன் சிந்தனை வேகத்தை குறைத்துக்கொண்டே வரும். இதுவும் 15 நிமிடம் நீடிக்கும்.

நிலை 3: உறக்கத்தின் முக்கியமான நிலை, இந்த நிலையை Non- REM (அ) Delta stage என்கிறார்கள். இந்த நிலையில்தான் உடல் செல்கள் தன்னை புதுப்பிக்கும் வேலைகளைச் செய்யும். நாள் முழுதும் நகரத்தில் ஓடிய பேருந்து மறுநாளும் பயணிக்க, இரவில் பழுதுநீக்கி சீர்படுத்தப்படுவதைப் போல.

மேலும் உடல் வெப்பநிலை சற்றே குறையும்,  ரத்த அழுத்தமும் சற்று மட்டுப்படும். இந்த நிலைக்கு வந்துசேர, முதல் நிலையில் இருந்து சுமார் ஒன்றரை நேரம் பிடிக்கும்.

நிலை 4 (REM): இந்த நிலையில்தான் கனவுகள், நரநர என்று பற்களை கடித்தல், சில நேரம் பக்கத்தில் படுத்திருப்பவர்களை உதைத்தல் போன்ற சேட்டைகளும் நடக்கும்.

இந்த நிலையில் இமைகள் மூடி இருந் தாலும் கண்கள் சுழன்ற வண்ணம் இருக்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், உடல் வெப்ப நிலை, சுவாசம், ரத்த அழுத்தம் சற்று மிகைப் பட்டிருக்கும். இதைத்தான் இயல்பான உறக்கம் என்போம்.

முதுமையில் உறக்கமின்மைக்கான காரணங்கள்


# ஹார்மோன்கள் செய்யும் கலகத்தால் (குறிப்பாக Cortisole, Estrogen)

# உறக்கத்துக்கு முக்கிய காரணமான ‘மெலடோனின்’ (melatonin) சுரப்பு குறைபாடு.

# ஓய்வு காலத்துக்குப் பிறகு ஏற்படும் வாழ்க்கை முறை மாற்றங்கள், பிடிப்பற்ற வாழ்வு, அவநம்பிக்கை.

# பகலில் தொடர்ந்து எடுக்கும் ஓய்வு, உறக்கம்.

# படுக்கை அறை சார்ந்த பிரச்சினைகள்.

# எதிர்காலம் பற்றிய பயம், எதிலும் பயம் - தெனாலியின் பயம் போல.

# நோய்கள்-மருந்துகளால் வந்திருக்கும் நோய்களைப் பொருத்தும், எடுத்துக்கொளும் மருந்துகளைப் பொருத்தும் உறக்கமின்மை ஏற்படலாம்.

எடுத்துக்காட்டு: இதயம் சார்ந்த நோய்கள், மூட்டு வலி, குடல் பாதை சார்ந்த நோய்கள், சிறுநீர் பெருக்கி மருந்துக,  மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக எடுக்கும் மருந்துகள், குறிப்பாக மனச் சோர்வுக்கான மருந்துகள், ரத்த அழுத்தம் குறைய, சுவாசப் பிரச்சினை தீர உட்கொள்ளும் மருந்துகள்.

பார்க்கின்சன் நோய், ஞாபக மறதி நோய், நுரையீரல் பிரச்சினைகள் குறிப்பாக சிளிறிஞி என்கிற நாட்பட்ட சுவாச நோய்.

-  விடுதலை நாளேடு, 24.6.19

செவ்வாய், 21 மே, 2019

உறக்கத்தைக் கெடுக்கும் 8 முக்கிய காரணிகள்

சராசரி மனிதர்கள் தங்களின் வாழ் நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறங்கியே கழிக்கின்றனர்.உறக்கம் மனித உடலியலில் இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது  உறக்கம் மனிதன் உடல் மற்றும் சீரான மனநிலை இரண்டோடு மிகவும் ஆழமான தொடர்புடையதாக உள்ளது, பொதுவாக இதை நாம் மேலோட்டமாக அறிந்தி ருப்போம்.   சரியாக உறக்கமின்றி இருக்கும் மனிதர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல உடல்நலச் சீர்கேடுகளுக்கு ஆளாகின்றனர். மருத்துவவல்லுனர்கள் மனிதர்களின் நிம்மதியான உறக்கம் குறித்து அதை கடைப் பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறிக் கொண்டே உள்ளனர்.

உறக்கம் பற்றிய பல்வேறு கட்ட ஆய்வை உடல்நலத்திற்கான ஸ்லீப் ஹெல்த் என்ற தலைப்பில் ஆய்வு இதழ் பல்வேறு நபர்களிடம் ஆய்வை  நடத்தி யுள்ளது, அதுவும் உறக்கம் குறித்த விழிப் புணர்வை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு  இருக்கும் வகையில் உள்ளது. உறக்கம் பற்றிய நீண்ட ஆய்வில் மேற் கொண்ட மருத்துவ நிபுணர்கள் தூக்கமின் மைக்காக பல்வேறு காரணங்களை பட்டி யலிட்டு அதில் மிகவும் முக்கியமானதாக 20 காரணங்களை எடுத்துக் கொண்டு அவற்றை மனிதர்களின் இயல்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அவை எவ்வாறு மனிதர்களின் உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.   அந்த பட்டியலில் உறக்கமின்மைக்கான காரணங்கள் மிகவும் அபாயகரமானவை களாக உள்ளது.

1. சரியான உறக்கம்


பொதுவாக ஆரோக்கியமான மனிதர் களுக்கு குறைந்தபட்சம் அய்ந்துமணிநேரம் அல்லது அதற்கும் சிறிது குறைவான அளவு உறக்கம் கண்டிப்பாக தேவை, இந்த நேரம்  குறையும் போது உடல்நலிவுற ஆரம்பிக் கிறது,  நன்கு ஆரோக்கியமான ஒருவர் உறக்கத்தை தவிர்க்கும் போது அவரது உடல் பல்வேறு உபாதைகளுக்கு மெல்ல மெல்ல ஆளாகிக்கொண்டு வருகிறது, முக்கியமாக இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மனநலம் தொடர்பான பாதிப்புகள், மனச் சோர்வு, போன்றவை அதிகரிக்கும். மேலும் உடலின் ஹார்மோன் செயல்பாடு களில் பெரிய மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக நீரழிவு, உடற்பருமன் அதிகரிக்கிறது, முதியவர்கள் மற்றும் தொடர் சிகிச்சை எடுக்கும் நபர்கள் 7 முதல் 9 மணி நேரம் தூங்கவேண்டும் என்று மருத்து வர்கள் பரிந்துரைக்கின்றனர். நன்றாக உறங்குவதும் ஒரு நோய் தடுப்பு சிகிச்சை முறைதான்,

2. உறங்கச் செல்லும், முன்பு


படுக்கைக்குச் செல்லும் முன்பு உங்களின் மனதிற்கு பிடித்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பது அல்லது பாடல்களைக் கேட்பது ஒரு நல்ல பழக்கம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  நீங்கள் உறங்கச்செல்லத்தயாராகிக்கொண்டு இருக்கின்றீர்களா? முதலில் அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன் படுத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.  மின்னணு திரைகள் வெளிவிடும் ஊதா கதிர்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளை விக்கின்றன. முக்கியமாக அவை மனங்களில் சஞ்சலத்தை உருவாக்கி தூக்கம் தொடர்பான எதிர்மறை காரணிகளை உருவாக்கி விடுகின்றன.

3.  உடலில் இயங்கும் கடிகாரம்


மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து உறக்க நேரம் கடைப்பிடிக்கப் படுகிறது, உங்கள் உடல் ஒரு கடிகாரம் போன்று அது தானாகவே இயங்கி உங்களின் உறக்க நேரத்தை உங்களுக்கு சுட்டிக்காட்டும் இதை நாம் எப்போதுமே புறந்தள்ளக்கூடாது, நமது உடல் வேலை செய்வது மற்றும் ஓய்வு எடுப்பது போன்றவை இயற்கையின் மாற்றங் களைப் பின்பற்றி நடைபெறுகிறது, சூரிய உதயத்தின் போது உடல் புத்துணர்ச்சி பெறுவது, சூரியன் மறையும் போது சோர் வாக இருப்பது போன்றவை நமது உடல் கடிகாரம் பின்பற்றும் ஒரு தொடர்நடவடிக்கை ஆகும். இதை நாம் பின்பற்றவில்லை என் றால் நமது உறக்க நேரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். சரியான நேரத்திற்கு உறங்காமல் உட லுக்கு அதிக வேலைகளைக் கொடுத்து விட்டு நாமாகவே உறக்கத்திற்கு கால அளவை ஏற்படுத்துவது உடல் நலத்திற்கு கேடுகளை விளைவிக்கும் காரணிகள் ஆகும். கண்கள் மூடிய நிலையில் படுக் கையில் தூங்குவதுபோல் இருப்பதும் கிட்டத் தட்ட நல்லது.

இரவு நேரப் பணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் உறக்கமின்மை, மன அழுத் தம் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளா கின்றனர். இதனால் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது

4. தூக்கம் வரவில்லையா? கண்களை மூடி ஒரு நிலைப் படுத்துங்கள்


சிலருக்கு வேலைப்பளு காரணமாக உறக்க உணர்வு மங்கியதைப் போல் உணரலாம், அல்லது களைப்பு ஏற்பட்டு உடல் சோர்வடைவது போல் உணரலாம், உடலை இவ்வாறு நாம் மாற்றுவது மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாக ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.  மனிதர்களது மூளை,  இதயம் மற்றும் நுரையீரல் போன்ற வற்றின் செயல்பாடுகள் விழித்திருக்கும் போது தனித்தன்மையுடனும் உறங்கும்  போது தனித்தன்மையுடனும் இயங்கு கின்றன, இது உடலுக்கு மிகவும் முக்கியமான செயல்பாடாக கருதப்படுகிறது.

உடலில் மிகமுக்கிய உறுப்புகளான இவைகளின் செயல்பாடுகள் ஆழ்ந்த உறக்கத்தின் மூலமே சாத்தியமாகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த உறக்கம் மற்றும் அதன்மூலம் உடலில் உறுப்புகளின் செயல்பாடுகள் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு டையது, ஆகவே நாம் உடலின் செயல்பாட்டிற்கு ஏற்ப மாற்றி கொள்ள வேண்டும். போதுமான தூக்கமின்மை உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் என் பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் என்று ஆய்வாளர் ராபின்ஸ் கூறுகிறார்.

5.உறக்கம் என்பது நமக்கு கிடைத்த பரிசு ஆகும்


உறக்கமின்மை என்பது நாம் உறக் கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் பாதிப்பை ஏற்படுத்தும்,  உறக்கம் என்பது நமக்கு கிடைத்த பரிசு ஆகும், இதை நாம் கொண்டாடி வரவேற்கவேண்டும்,  சிலருக்கு முக்கிய அலுவலக கலந்துரையாடலின் போதோ, விமானப் பயணத்தில் நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கும் போதோ தூக்கம் வரலாம், முடிந்த வரை அது போன்ற நேரங்களில் உறக்கத்தைக் கட்டுப்படுத்து வதை விட விரைவாக முடித்துகொண்டு உறங்கச்செல்வது நல்லது.

6. உறங்கச்செல்லும் முன்பு தவிர்க்கவேண்டியது


இரவு உறங்கச்செல்லும் முன்பு வரவுசெலவு கணக்கு பார்ப்பது, சில மிடறு மது அருந்துவது, அல்லது நரம்புகளை மந்தப்படுத்தும் இருமல் மருந்துகளை சாப்பிடுவது போன்றவை உண்மையில் உங்களுக்கு உறக்கத்தைத் தராது, உங்களுக்கு உறக்கம் வந்தது போல் இருந்தாலும் இவை எல்லாம், உங்கள் மூளையை மிகவும் சோர்வடையச்செய்யும் ஒன்றாகும்,  இதன் மூலம் காலை நேரம் உங்களுக்கு தலைவலி மற்றும் சோர்வான உணர்வே ஏற்படும்

7. உறக்கமின்மையால் மூளையின் செயல்பாடுகள் பாதிப்படையும்


நாம் உறங்குவதற்காக சில பழக்க வழங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.  இது பொதுவான ஒரு நம்பிக்கையாக உள்ளது, இது நம்பிக்கை என்றாலும் இது ஒருவிதத்தில் நன்மை விளைவிக்கும் ஒன்றாகும், எடுத்துக் காட்டாக உறங்கச்செல்லும் முன்பு சூடான பால் அருந்தக் கூறுவார்கள். இது நல்ல பழக்கம் என்றாலும் சிலருக்கு பால் அருந்துவது பிடிக்காத ஒன்றாக இருக்கும். அப்படியென்றால் சூடான காபி சிறிது அருந்தலாம், இதன் மூலம் நல்ல உறக்கம் வரும் என்றால் அதை தொடர்வதில் தவ றில்லை என்கிறார் ஆய்வாளர் ராபின்ஸ்.

-  விடுதலை நாளேடு, 20.5.19

செவ்வாய், 5 மார்ச், 2019

தூக்கம் குறைந்தால் இதயம் வெடிக்கும்!



மனிதன் உறங்குவதற்குக்கூட நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றான். உறங்க வேண்டிய நேரத்தில் உழைப்பும், உழைக்க வேண்டிய நேரத்தில் உறக்கமும் என்று மனிதனின் வாழ்க்கையில் ஒரு முறையில்லாமல் இருந்து கொண்டிருக் கின்றது.

இந்நிலையில், மனிதனுக்கு தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய நோய்கள் பல இருக்கின்றன. அதில், ஒன்று தான் இதய நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர் டேனியல் கியூட்டிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேர சேவைப்பணியாளர்களில் குறைவான தூக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளார்.

மேலும், போதிய தூக்கமின்மையால் இதய நோயுடன், இரத்த அழுத்தமும் ஏற்பட வாய்ப்பிருப் பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால், ஒரு மனிதன் தனக்கு தேவையான தூக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால், அவனுடைய இதயம் வெடிப்பதற்குண்டான வாய்ப்புக்கூட இருப்பதாக கூறப்படுகின்றது.

- விடுதலை நாளேடு, 28.2.19

புதன், 10 அக்டோபர், 2018

உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை?



மூன்றில் ஒருவர் இரவில் நன்றாகத் தூங்குவதில்லை. பெரும் பாலானவர்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியம். சிலருக்கு அதைவிட குறைந்த நேரம் போதும் உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை முதலில் அறியுங்கள். அவ்வளவு நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள்.

தொடர்ந்து போதிய தூக்கமில்லாமல் இருந்தால் அது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும். உடல் பருமன், நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இதனால் உண்டாகும்.

நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன நலமும் மேம்படும். நீரிழிவுக்கான வாய்ப்புகள் குறையும். பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.

ஒரு நாள் சரியாகத் தூங்காவிட்டால், மறுநாள் அதிகம் தூங்குங்கள். பல மாதங்கள் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், மீண்டு வரவே சில வாரம் தேவை.

- விடுதலை நாளேடு, 4.10.18

செவ்வாய், 12 ஜூன், 2018

சரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்!

மனித மூளையின் ஆரோக்கியமான  செயல்பாடுகளுக்கு ஒவ் வொரு நாளின் முடிவிலும் போதுமான பரிபூரண தூக்கம் அவசியம். அப்படி தேவையான நேரங்களில் உடலும், மனமும் தூக்கத்துக்காகக் கெஞ்சும்போது,  அதைப் பொருட்படுத்தாமல் அசட்டை செய்து நாம் மேலும், மேலுமென தூக்கத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந் தோமெனில் நமது மூளை ஒரு கட்டத்தில் தன்னைத்தானே சாப்பிடத் தொடங்கி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறைவான தூக்கம் கணிசமான அளவில் மூளையின் முக்கியமான நியூரான் இழப்பிற்கு காரணமாகி விடுகிறது. அது மட்டுமல்ல மூளையின் லட்சக் கணக்கான சினாப்டிக் பரிமாற்றங்களையும் அது தடுத்து விடுகிறது. இப்படியொரு அசம்பாவிதம் நிகழ ஒருமுறை நாம் அனுமதித்து விட்டோம் எனில் மீண்டும் அதை சரி செய்து கொள்வதென்பது முடியவே முடியாத காரியமாம். பிறகு நீங்கள் ஆற, அமர நன்கு தூங்கி ஓய்வெடுத்தாலும் பயனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.  அதோடு தூக்கமின்மை என்பது மனிதர்களிடையே அதிகளவில் அல்சைமர் நோயின் தாக்குதல் மற்றும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்து விடுகிறது.

மிகக்குறைவான தூக்கத்தால் ஆஸ்டோசைட்ஸ் பாதிப்பு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆஸ்ட்ரோசைட்ஸ் பிரச்சினை இருந்தால் அதனால் பாதிப்படைந்தவர்கள் பார்ப்பதற்கு துறுதுறுவென்று சுறுசுறுப்பாக இருப்பவர்களைப் போல தோன்றினாலும் அவர்களது மூளைச் செல் களுக்குள் மிகப்பெரிய ஆபத்து இருப்பது அவர்களுடன் பழகும் மனிதர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்தப் பிரச்சினை இருப்பவர்களுக்கு மூளையின் தகவல் பரிமாற்றங்களில் முக்கியப்பங்காற்றும் சினாப்டிக் செல்கள்  குழப்ப மடைந்து மூளையை தனக்குத் தானே ரீமாடல் செய்து கொள்வதால் அவர்கள் அவ்விதமாக இயங்குகிறார்களே தவிர அவர்களுடைய உற்சாகமென்பது அணையப் போகிற விளக்கில் திடீரென அதிக சுடரொளி தெரிவதைப்போன்றது  தானாம்.

மருத்துவர்களால் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தூக்க நேரமான 8 மணி நேரத் தூக்கத்தை நாம் நிராகரித்தோம் என்றால் மிக மோசமாக மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும் உள்ளார்ந்த மீள் எண்ணங்களால் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும். இதனால் மனிதர்கள் உள்ளார்ந்த கவலைகள் மற்றும் மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டு சுயவிசாரத்தில் இறங்கும் அபாயம் அதிகரிக்கும்.  இப்படி மனிதர்கள் தமக்குள் சுயவிசாரங்களில் ஆழ்ந்து போகும் போது அவர்களுடைய வாழ்நாள் அளவு தானாகக் குறைந்து விடுகிறது என்பதோடு வாழ்வின் தரமும் குறைந்து விடுகிறது. அதாவது உப்புச் சப்பில்லாமல் வாழ்ந்து மடிய வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். இப்படி தூக்கமின்மை என்ற ஒரு விஷயம் மனிதனை பல்வேறு உடல் மற்றும் மனநலன் சார்ந்த ஆரோக்கியக் கேடுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 11.6.18

திங்கள், 19 பிப்ரவரி, 2018

தூக்கத்தை தவிர்த்தால் விளையும் பாதிப்புகள்


தூக்கம் மனிதர்களுக்கு  இன்றியமையாத ஒன்றாகும். சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மனித உடலில் பல பாதகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டு வந்தி ருக்கிறது. அதற்கு ஏற்றவாறே நமது உடலும் சூரியகாந்தி மலர்களைப் போல் சூரிய வெளிச் சத்துக்கு ஏற்றவாறு பகலில் வேலை செய்யவும் இரவில் ஓய்வெடுக்கவும் பழகியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இரவானதும் சுமார் ஏழு ஏழரை மணிக்கே மக்கள் தூங்கச் சென்றுள்ளனர். இரவைப் பகலாக்கும் மின்சாரத்தின் பரவலாக்கத்துக்குப் பின்னரே தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர் வானொலி, தொலைக் காட்சி, கணினி என ஒவ்வொன்றாகப் படுக்கை யறையை ஆக்கிரமிக்க, இறுதியில் செல்பேசியின் வருகையால் பலரும் மறுநாள்தான் தூங்கச் செல்வது என்றாகிவிட்டது. 
என்னதான் அதி நவீன அய்போனைப் பார்த்துக்கொண்டே படுத்துக்கொண்டிருந் தாலும், அந்தி கருத்தவுடனேயே தூங்கச் சென்ற ஆதிமனிதன் காலத்திலிருந்து நம்மு டைய உடல் பெரிதாக மாறிவிடவில்லை.

குறையும் எதிர்ப்பு ஆற்றல்

தூக்கத்தின்போது உடலுக்குள் நிகழும் செயல்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை. எனினும், உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே தூக்கம் மிக முக்கியம். அதுவும் உயிரினங்களில் மூளையின் செயல்பாடுகள் சிக்கலாகச் சிக்கலாகத் தூக்கத்தின் தேவையும் அதி கரிக்கிறது.

தூங்காமல் இருக்கும்போது உடலில் ஸ்டீராய்டு ஹார் மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

உடல் பருமனுக்குத் தூக்கமின் மையும் ஒரு முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பல எதிர் விளைவுகளும் ஏற்படுகின்றன.

தூக்கமின்மையால் வரும் கவனக் குறைபாட் டால் பல விபத்துகள் ஏற் படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மை.

கவலையால் வராத தூக்கம்

தூக்கமின்மைக்கு ஒரு முக்கியக் காரணம், மனப் பதற்றம். தூங்கப் போகும்போதுதான்  தேவையின்றி கவலைப்படவும் தொடங்கு கிறோம். ஏனென் றால், பகல் முழுதும் வேறு வேறு வேலைகள் நமது கவனத்தை ஆக்கிரமித்து இருந்திருக்கும்.

இன்னும் சிலருக்கு வேறொரு கவலையால் தூக்கம் வராமல் போய்விடும். தூக்கம் வரவில் லையே என்ற கவலைதான் அது! குடிப் பழக் கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலை யால் குடிப்பதைப் போன்றதுதான்

தூங்கவிடாத சிந்தனை

தூக்கம் வரவில்லையே எனக் கவலைப் பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால்  எதிர்மறை யாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும்.

இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர் பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும்,   நாள டைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்து விடும்.

தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்பேசிகளுக்கும் தடை போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை.

இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும். 
- விடுதலை நாளேடு, 19.2.18