வியாழன், 23 பிப்ரவரி, 2017

உடல் நலம் காக்கும் ஒமேகா 3

நாம் தினமும் 0.3_0.5 கிராம் இ.பி.ஏ. (Eicosapentaenoic acid) மற்றும் டி.ஹெச்.ஏ. (Docosahexaenoic acid) வகையும், 0.8-_1.1 கிராம் ஏ.எல்.ஏ.  (Alpha-Linolenic acid)   வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

உடலுக்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமில (Polyunsaturated fatty acids) வகையைச் சேர்ந்தது, ஒமேகா 3 கொழுப்பு அமிலம். மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் இது அவசியம். புற்றுநோய், மன அழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும், வந்தபின் அளிக்கப்படும் சிகிச்சையிலும் இதற்கு முக்கிய பங்கு உள்ளது.

டிரைகிளிசரைட் அளவைக் குறைப்பதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடலால் உருவாக்க முடியாது. எனவே, இதை உணவின் மூலம் எடுத்துக்கொள்வது அவசியம். எண்ணெய்ச் சத்துமிக்க மீன், வால்நட், ஃபிளாக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதை போன்றவற்றில் இருந்து போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கிறது.

மீன்போன்ற கடல் உணவுகளில் இருந்து கிடைக்கும் இ.பி.ஏ. மற்றும் டி.ஹெச்.ஏ. வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடல் நேரடியாக பயன்படுத்திக்கொள்ளும்.

வால்நட் போன்ற கொட்டைகளில் இருந்து கிடைக்கும் ஏ.எல்.ஏ. வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உடல், இ.பி.ஏ. மற்றும் டி.ஹெச்.ஏ. வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலமாக மாற்றித்தான் பயன்படுத்த வேண்டி இருக்கும். உடலுக்குத் தேவையான வகையில் மாற்றும் திறன் சிலருக்கு குறைவாக இருக்கும். அவர்கள், டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் மாத்திரையாக எடுத்துக்கொள்ளலாம்.

¨    100 கிராம் நெய் மீனில்... 8 கிராம் (டி.ஹெச்.ஏ. மற்றும் இ.பி.ஏ. வகை)
¨    ஒரு டேபிள் ஸ்பூன் ஃபிளாக்ஸ் விதையில்.... 1.6 கிராம் (ஏ.எல்-.ஏ வகை)
¨    கால் கப் வால்நட்டில்... 2.3 கிராம் (ஏ.எல்.ஏ. வகை)
¨    முக்கால் கப் சோயாபீனில்... 0.76 கிராம் (ஏ.எல்.ஏ. வகை)

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றை உணவில் சேர்த்துப் பயன் பெறுவோம். 

-உண்மை இதழ்,16-28.2.17


செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மருத்துவ சிகிச்சையோடு பிசியோதெரபியும் அவசியம்
தசைகள், நரம்புகள் மற்றும் எலும்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சையோடு, பிஸியோதெரபி பயிற்சிகளையும் இணைத்து தருவது அவசியம். அப்போதுதான் விரைவில் குணமடைய முடியும் என்கிறார் நரம்பியல் இயன்முறை மருத்துவர் மணிவேல். பிஸியோதெரபியில் இருக்கும் வகைகள், அவை எப்போது தேவைப்படும் என்பதைத் தொடர்ந்து கூறுகிறார்.

பிஸியோதெரபி சிகிச்சையில் நோயாளி ஒருவரின் மீட்பு நிலையைச் சார்ந்து இயக்கப் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. இதில் Active, Passive 
மற்றும்   Active, Passive என்ற 3 முக்கிய நிலைகளில் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. ஆக்டிவ் தெரபி என்பது நோயாளிகளை தானாகவே செய்ய வைக்கும் பயிற்சியாகும்.

நோயாளிக்கு ஒரு குறிப்பிட்ட நரம்போ, தசையோ பிடித்துக் கொள்ளும்போது அதை தளர வைப்பதற்காக சில பயிற்சிகளை மருத்துவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அவற்றை தாங்களாகவே செய்து அப்பகுதியை செயல்பட வைக்கும் முறைதான் ஆக்டிவ் பிசியோதெரபி. அதாவது மூளை இடும் கட்டளைகளை ஏற்று உடலின் பகுதிகள் தானாக இயங்கும் முறை.

பாஸிவ் என்பது செயலற்ற நிலையைக் குறிக்கும். மூளையின் கட்டளைகளைப் பெற முடியாமலும், தானாக இயங்காமலும் உடல் செயலற்று இருக்கும் நிலையில் உள்ள நோயாளிக்குக் கொடுக்கப்படும் தெரபி இது. இந்த பாஸிவ் தெரபி நிபுணரின் உதவியோடு செய்யப்படும். ஆக்டிவ் அஸிஸ்டிவ் என்ற மூன்றாவது வகையில் பயிற்சியாளரின் மேற்பார்வையுடன்  நோயாளிகள் செய்வார்கள்.

சில நேரங்களில் கை, கால், தோள்பட்டை மூட்டு இணைப்புகள் இறுக்கமாக இருக்கும். அசைக்க நினைத் தாலும் குறிப்பிட்ட அளவுக்குமேல் அசைக்க முடியாது. இந்நிலையில், திசுக்கள் மற்றும் மூட்டுகளைத் தளர்த்த வெப்பமூட்டும் நடைமுறையை பயன்படுத்தி, உறுப்பு களை அசையவைத்து அவற்றின் இயக்கத்தை மேம் படுத்துவோம் என்றவரிடம், இன்னும் கொஞ்சம் விளக்க மாகச் சொல்லுங்கள் என்று கேட்டோம்.

பாஸிவ் என்ற இயக்கமற்ற நிலையிலிருந்து மாறி, நோயாளிகளின் இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் நலிவுற்ற தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் கொடுக்கப் படும்.

நீண்ட நாட்கள் அசையாமல் படுத்த நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு தசை மற்றும் மூட்டுகள் மிகவும் நலிவடைந்திருக்கும். நோயாளிகளின் நிலை மையை கருத்தில் கொண்டு, பிற்காலத்தில் தசைகளிலோ, எலும்பு இணைப்புகளிலோ காயங்கள் ஏற்படாத வண்ணம் படிப்படியாக வலுப்படுத்தும் பயிற்சிகளை கொடுப்போம்.
செயலற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு முதுகு மற்றும் மார்பு தசைகள் இறுக்கமாகும். அப் பகுதிகளில் லேசாக தட்டுவதன்() மூலம் தசைகளை தளர்வடையச் செய்வோம். நுரையீரல் செயலற்று இருக்கும் நோயாளிக்கு மார்பை கைகளால் தட்டி சிகிச்சை கொடுப்போம்.

தீவிரமான சிகிச்சைதேவைப்படும் நிலையில் எலக்ட் ரானிக் கருவிகள், மற்ற கருவிகளின் உதவியோடு மார்புப் பகுதிகளில் அதிர்வுகள் கொடுத்து தசைகளை தளர் வடையச் செய்வோம். எலக்ட்ரானிக் அதிர்வுகளால் தசை களின் இறுக்கம் குறையும் போது லேசாக இருமல் வரும்.

இதனால் நுரையீரலில் இறுக்கம் குறைந்து இயல்பான சுவாசம் ஏற்படும். இயல்பு நிலை திரும்பியவுடன் படிப்படி யாக பயிற்சிகளை குறைத்து வருவோம்.
வெளிநாடுகளில் நுரையீரல் பாதிப்புக்கு ஆன்ட்டி  பயாட்டிக் மருந்துகள் கொடுப்பதைத் தவிர்த்து, பிரதான மாக பிஸியோதெரபி பயிற்சிகளையே மேற்கொள் கிறார்கள். நம் நாட்டில்தான் அதிகமான அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உபயோகிக்கிறார்கள்.

இதனால் உடல் மருந்துகளுக்கு பழக்கப்பட்டு ஆன்டிபயாடிக் எதிர்ப்புநிலை  உருவாகி விடுகிறது. அதாவது, அதற்குப் பிறகு கொடுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பலன் தராமல் மேலும் அதிக வீரியமுள்ள மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிடும். அதனால், பிசியோதெரபி பயிற்சிகளைப் போதுமான அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

-விடுதலை,20.2.17

திங்கள், 13 பிப்ரவரி, 2017

காமாலையைத் தடுக்க வழிகளும், தடுப்பூசிகளும்மது அருந்தக் கூடாது.

சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவைச் சாப்பிடவும்.

கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள் ளவும்.

மலம் கழித்த பிறகு கிருமிநாசினி பயன்படுத்தி கை கழுவுங்கள்.

ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளுக்கான தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவும்.

ஆரோக்கிய உணவுப் பழக்கம் அவசியம்.

வயதுக்கு ஏற்ப உடல் எடையைப் பராமரிக்கவும்.

டாக்டர் சொல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.

காமாலைக்கான தடுப்பூசிகள்

ஹெபடைடிஸ் - ஏ தடுப்பூசியை குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணை, ஒன்றரை வயது முடிந்ததும் இரண்டாம் தவணை போட வேண்டும். குழந்தைப் பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், இப்போது ஒரு தவணையும் ஆறு மாதங்கள் கழித்து ஒரு தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஹெபடைடிஸ்- பி தடுப்பூசியை குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, 1 மாதத்திலிருந்து 1 மாதத்துக்குள் இரண்டாம் தவணை, 6 மாதம் முடிந்ததும் மூன்றாம் தவணை இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் இதைப் போடாதவர்கள், முதல் ஊசியை இப்போது போட்டுக்கொண்டு, ஒரு மாதம் கழித்து ஒருமுறையும், ஆறு மாதங்கள் கழித்து மறு தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
-விடுதலை,13.2.17

தடுப்பு மருந்துகளும் சந்தேகங்களும்இயற்கையி லேயே நம் உடலில் நோய் தடுப்பு ஆற் றல் இருக்கிறது. தற் போதைய சூழலில் நோய்களின் தாக்கம் அதிகமாகிவிட்டது. அதை கட்டுப்படுத்த நாம் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். நோயின் தன்மையை பொறுத்தும், வயதைப் பொறுத்தும் பல்வேறு தடுப்பு மருந்துகள் இருக்கின்றன என்கிறார் பொது நல மருத்துவர் தேவராஜன்.நோய் தடுப்பு மருந்துகள் பற்றியும் எப்போது அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தொடர்ந்து விளக்கு கிறார்.

நோய் தடுப்பு மருந்துகள் எப்படி செயல்படுகிறது?

நோய் வராமல் நம்மை காக்க நோய்க்கு காரணமான கிருமிகளை உடலில் இருந்து எடுத்து, உயிரோடோ அதன் வீரிய சக்தி குறைந்த நிலையிலோ அல்லது உயிரற்ற நிலையிலோ அந்த கிருமியை வைத்து தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. அந்த மருந்தை ஒருவர் உடம்பில் செலுத்துவதன் மூலம் நோயை உண்டுபண்ணக்கூடிய கிருமி களுக்கு எதிராக அந்த மருந்து செயல் படுகிறது. இதனால் நோய் பரவுவதைத் தடுத்து நம் உடலை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

தடுப்பூசிகள் எப்போது போட்டுக் கொள்ள வேண்டும்?

தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.  இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் தடுப் பூசிகள் பற்றி ஓர் அட்டவணையைப் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றில் போலியோ சொட்டு மருந்துகள், பி.சி.ஜி, ஹெப்-1, மீஸல்ஸ் சொட்டு மருந்துகள் (அம்மை),  தடுப்பூசி என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இதை பொது வான அட்டவணையாகக் கொடுப்பதை விட, உங்கள் குழந்தைகள் நல மருத் துவரின் வழிகாட்டுதலின்படி, உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப அட்ட வணையைப் பெற்றுக் கொண்டு அதைப் பின்பற்றுவதே சரியானது.

பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

ஒவ்வொரு தடுப்பு மருந்தையும் சரியான கால இடைவெளியில் குழந்தை நல மருத்துவரை அணுகி போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைக்குத் தடுப்பூசி போட்ட பிறகு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிந்தால் அதை மருத்து வரிடம் தெரிவிக்க வேண்டும். தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் உண்டு.கர்ப்பிணி பெண்கள், எய்ட்ஸ் நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள் மற்றும் உடல் ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்ப வர்கள் எல்லா தடுப்பூசிகளையும் போட் டுக்கொள்ள முடியாது. அவர்கள் மருத்து வரை அணுகி அவர்களின் ஆலோ சனையின் படியே ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் தாய் சேய் நல மருத்துவரை அணுகி தங் களுக்கான தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த வுடன் ஓர் அட்டையில் பதிவு செய்து அதை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தடுப்பு ஊசியையும் மருத் துவர் ஆலோசனையின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கடைப்பிடிக்காமல் விட்டால் நோய் தடுப்பு வீரியம் குறைந்து விடும்.
-விடுதலை,13.2.17

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

பெண்களை கருத்தரிக்க விடாமல் ஆண்களின் உயிரணுக்களே செயல்படலாம்!தம்பதியரின் நெருக்கத்தைப் பற்றிப் பேசும் போது ஈருடல், ஓருயிர் என்கி றோம். நீ பாதி, நான் பாதி என்கிறோம். அதையெல்லாம் மெய்யாக்கும்  வகையில்தான், ஆணில் பாதியும் பெண்ணில் பாதியுமாகச் சேர்ந்து புதிய உயிர் உலகத்துக்கு வருகிறது. இதுதான் உலக நியதி. பெண்ணின் உடலில்  உயிராகி வளர வேண்டிய கருவுக்கு, காரணமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டிய ஆண் அணுக்களே அதற்கு எதிரியானால்? அப்படிக்கூட  நடக் குமா என்பதே எல்லோரின் கேள்வி யாகவும் இருக்கும்.
நடக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன். பெண் உடலில் கரு வளர விடாமல் செய்ய, அவளது கணவரின் ரத்தமும்,  மரபணுக்களுமே எதிராகச் செயல் படுகிற அந்தப் பின்னணி பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். சில பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கல்  இருக்காது. ஆனால், கருவானது, கருப்பையில் ஒட்டி வளர்வதில்தான் பிரச்சினை இருக்கும். நல்ல கரு வந்து, தங்காதவர்களுக்கும், குழந்தை  இல்லாததற்காக அய்.வி.எஃப் சிகிச்சை மேற்கொண்டு, அதிலும் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறவர்களுக்கும் மேலே சொன்ன விஷயம்தான்  பிரச்சினையாக இருக்கும்.
காரணமே தெரியாமல், மறுபடி, மறுபடி சிகிச்சையைத் தொடர்வதும், சிகிச்சை வெற்றி பெறவில்லையே என்கிற விரக்தியில் வாழ்க்கையை  வெறுப்பதுமாக துயரத்தின் உச்சத்தில் இருப்பார்கள். கரு என்பது, கணவன் -மனைவி இரண்டு பேரின் ரத்தம் மற்றும் மரபணுக்கள் சேர்ந்தது. சில  பெண்களின் உடல், கணவனின் ரத்தத்தையும்,  மரபணுக்களையும் அந் நியப் பொருள்களாக நினைத்துக் கொண்டு, கருவை ஒட்ட விடாமல் செய்து  விடும். அதைப் பரிசோதனை யில் கண்டுபிடித்து, கணவனின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக் களை எடுத்து, சில மருந்துகள் கலந்து, மனைவியின்  உடலில் ஊசி மூலம் செலுத்தப்படும்.
அதாவது, அந்த வெள்ளை அணுக்கள், மனைவியின் உடலில் ஊறி, எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சில வகை நோய்கள் வரும் முன், எச்சரிக்கை  நடவடிக்கையாக முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம் இல்லையா? அதே டெக்னிக்தான் இதிலும். இதற்கு ஹஸ்பென்ட் லூகோசைட்  டிரான்ஸ்ஃபர், அதாவது, ஹெச்.எல்.டி. என்று பெயர். இந்த ஊசியை பெண்களின் சருமத்தின் வழியே செலுத்த வேண்டும்.
வாரம் ஒரு ஊசி வீதம், 8 முதல் 12 ஊசிகள் போட வேண்டியிருக்கும். ஒரு ஊசிக்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும். இந்த சிகிச்சை முடிந்த பிறகு  குழந்தை இல்லாத பெண்களுக்கு அய்.வி.எஃப். செய்தால், கரு தங்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். சென்னைக்கு மிகவும் புதுசான இந்த சிகிச்சை,  குழந்தை இல்லாத தம்பதியருக்கு ஆறுதலையும், தீர்வையும் கொடுக்கிறது... என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன்.
- ஆர்.வைதேகி
நன்றி: வசந்தம்  23.6.2013
-விடுதலை ஞா.ம.6.9.14

சனி, 11 பிப்ரவரி, 2017

மாரடைப்பைத் தடுக்குமா மாத்திரை?


மாரடைப்பு வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது பரம்பரை வழியிலும் வருகிறது என்பது உண்மை. குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பிரச்சினை இருந்திருக்குமானால், அவர் களுடைய வாரிசுகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆண் 55 வயதுக்குக் குறைவாகவும், பெண் 65 வயதுக்குக் குறைவாகவும் இருந்து மாரடைப்பு வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். இது பொதுவான கருத்து.
உங்கள் அப்பாவுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது என்பதை மட்டும் வைத்துக்கொண்டு உங்களுக் கும் மாரடைப்பு வரும் என்று முடிவு செய்யக் கூடாது. பொதுவாக, ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிகக் கொலஸ்ட்ரால், புகைப் பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாத சோம்பல் வாழ்க்கை, பரம்பரை ஆகிய காரணிகள் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
இவற்றில் ஏதாவது இரண்டு காரணிகள் உங்களுக்கு இருக்குமானால், உடனடியாக இதய நிபுணரிடம் சென்று, இதய நோய் தொடர்பான முழு உடல் பரிசோதனையைச் செய்து கொள் ளுங்கள். அதில் உங்களுக்கு மாரடைப்பு வரு வதற்கான வாய்ப்பு தெரிந்தால், டாக்டர் ஆலோ சனைப்படி ஸ்டாடின் மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.
மாரடைப்புக் காரணமாகும் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை ஸ்டாடின் மாத்திரை 35 சதவீதம் மட்டுமே குறைக்கிறது. கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் ரத்தத்தில் அதிகரிக்கிறது.
கல்லீரல்    எனும் என்சைமின் துணையோடு சுயமாகக் கொலஸ்ட்ராலைத் தயாரித்து ரத்தத்துக்கு அனுப்புவது ஒரு வழி. நாம் சாப்பிடும் உணவிலி ருந்து ரத்தத்துக்கு நேரடியாகக் கொலஸ்ட்ரால் கிடைப்பது மற்றொரு வழி. ஸ்டாடின் மாத்திரை    எனும் என்சைமைச் செயலிழக்கச் செய்வதால், கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது;
ரத்தக் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. அதே நேரம், உணவிலிருந்து கிடைக்கும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கத்தான் செய்யும். எனவே, ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்க ஸ்டாடின் மாத்திரை மட்டுமே போதாது. ஸ்டாடின் மாத்திரையோடு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும் தேவை.
கட்டுப்பாடு அவசியம்
எல்.டி.எல். கொலஸ்ட்ராலை நேரடியாக அதிகரிக்கும் செரிவுற்ற கொழுப்பு உணவுகளான பாமாயில், நெய், வெண்ணெய், வனஸ்பதி, பால் பொருட்கள், இறைச்சி, தேங்காய் எண்ணெய், பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இதயத்துக்கு ஆபத்து தருகிற டிரான்ஸ் கொழுப்பை அதிகரிக்கும் நொறுக்கு தீனிகளை நெருங்கக் கூடாது. துரித உணவையும் மென்பானங்களையும் ஓரங்கட்ட வேண்டும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன் உணவைச் சாப்பிட வேண்டும். வெள்ளைப் பூண்டு சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவை ரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைத்து, ஹெச்.டி.எல். கொலஸ்ட் ராலை அதிகரிக்கச் செய்து மாரடைப்பைத் தடுக்கும்.
இவை தவிர, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் எடையைக் கட்டுப் படுத்த வேண்டும். நீரிழிவு நோயை நெருங்கவிடக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மன அழுத்தம் ஆகாது. இப்படிப் பல விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.
-விடுதலை,30.1.17

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

வலிப்பு...ஏன்? எதற்கு? எப்படி?அரிதாக வரும் நோயாக... ஆனால் ஆபத்து நிறைந்ததாக வரும் நோய் வலிப்பு  Epilepsy என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய், உலக அளவில் 150 பேரில் ஒருவரை பாதிக்கிறது. இந்த வலிப்பு நோய் ஏன் வருகிறது, வந்தால் என்ன செய்ய வேண்டும், வராமல் தடுக்க என்ன வழி என்ற நம் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கிறார் நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ப்ரித்திகா சாரி.

வலிப்பு நோய் யாருக்கு வருகிறது?

உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று மூளை. மூளையில் ஏற்படக்கூடிய தொந்தரவுகளால் கைகள், கால்களில் அடுத்தடுத்து காரணமில்லாமல் உதறல் ஏற்படுவதை வலிப்பு நோய் (Epilepsy)  என்கிறோம். நமது உடலில் உள்ள நரம்பு செல்களே உடலின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன. மூளை மற்றும் நரம்பு செல்களுக்கு இடையே செல்லும் மின் அதிர்வுகளில் தடை ஏற்படும் போதுதான் இதுபோல் வலிப்பு உண்டாகிறது. பெரும்பாலும் வலிப்பு நோய் 10 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது, மூளை வளரும் பருவத்தில் உள்ளவர்கள் மற்றும் முதுமை அடைந்த மூளை உடையவர்களுக்கு இந்த நோய் அதிக அளவு ஏற்படுகிறது.

வலிப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

10 பேரில் ஒருவருக்கு தூக்கமின்மை, கடுமையான வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக நாள்கள் பட்டினியோடு இருப்பது மற்றும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது என சில தூண்டுதல்களால் வலிப்பு வருகிறது. சிலருக்கு என்ன காரணத் தால் வலிப்பு வந்ததென்று கண்டுபிடிக்க முடியாமலும் போகும்.ஆனால், பொதுவாக வலிப்பு வருவதற்கு என்று சில காரணங்கள் உள்ளன. இந்த காரணங்கள் ஒவ்வொருவரின் வயதுக்கேற்ப மாறுபடும். குழந்தை பிறக்கும்போது தலையில் அடிபடுவதால் வலிப்பு வரலாம். வைட்டமின்  B6, கால்சியம், குளுக்கோஸ் போன்ற சத்துக்கள் குறைவதாலும் வரலாம். மூளைக்காய்ச்சல் காரணமாகவும் குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. இதில் 5 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் அதிக காய்ச்சலால் ஏற்படும் வலிப்பினை   Febrile Seizure என்கிறோம்.இந்த காரணங்கள் தவிர நரம்பு மண்ட லத்தில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் நச்சுத்தன்மை (காரீயம், பூச்சிமருந்துகள், சாராயம்) உடலுக்குள் செல்லும்போதும் வலிப்பு ஏற்படுகிறது. தலையில் அடிபடுவது, மூளையில் கட்டி ஏற்படுவது, ரத்த ஓட்ட பாதிப்பு, மூளை வளர்ச்சியில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மரபணு தன்மை போன்ற காரணங்களாலும் வலிப்பு ஏற்படுகிறது.

இதில் வகைகள் ஏதேனும் உண்டா?

மூளையில் ஏற்படும் பாதிப்பின் அளவுகள் மற்றும் அறிகுறி களின் அடிப்படையில் வலிப்பு நோய் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப் படுகிறது. மூளையின் மொத்தப்பகுதியும் பாதிக்கப்படும்போது, உடல் முழுவதும் அந்த வலிப்பு எதிரொலிக்கும். இதற்கு   Generalized Seizure என்று பெயர். இதற்குள் உட்பிரிவாக 5 வகைகள் உள்ளன.நினைவாற்றல் தவறுதல், கை, கால்களில் விறைப்புத்தன்மை மற்றும் உடல் உதறுதல், வாயில் நுரைதள்ளுதல், சில சமயம் தன்னை அறியாமல் சிறுநீர், மலம் கழிப்பது போன்ற அறிகுறிகளோடு வருவதை   Tonic clonic generalized seizure  என்கிறோம். இந்த அறிகுறிகளோடு கை, கால் வெட்டுதல் இல்லாமல் இருப்பதற்கு   Tonic Seizure என்று பெயர். உடல் திடீரென நிலைகுலைந்து போதல், தற்காலிக மறதி மற்றும் ஞாபகமின்மை போன்ற அறி குறிகளோடு  இருப்பதை A Tonic Seizure என்கிறோம். தலை மற்றும் உடலின் மேல்பாகத்தில் திடீரென தொய்வு ஏற்பட்டு கீழே கவிழ்ந்து விடுவதை   Myoclonic Seizure  என்கிறோம். சில நொடிகள் உணர் வில்லாமல் போவது மற்றும் கண்சிமிட்டுவது போன்ற அறிகுறி களோடு இருப்பதை   Absence seizure என்கிறோம். இதேபோல் மூளையில் குறிப்பிட்ட பாகத்தில் ஏற்படும் பாதிப்பினால் வரக்கூடிய வலிப்பிற்கு  Partial Seizure   என்று பெயர். இந்த பிரிவில் 2 வகைகள் உள்ளன. இந்த இரண்டு வகைகளிலும் உடலிலுள்ள முகம், கை, கால் போன்ற ஏதாவது ஒன்றில் ஒரே பக்கத்தில் வெட்டுதல் Simple partial Seizure  ஏற்படுகிறது. நினைவாற்றல் மாறாமல், உடலின் ஒரு பாகத்தில் கை, கால்களில் வெட்டுதல் ஏற்படுவதை    என்கிறோம். நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டு, நினைவு தவறுதல், மனக்குழப்பம் மற்றும் பிதற்றுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பதை  Complex partial Seizure என்கிறோம். இந்த வகையினர் சில சமயம் சுயநினைவில்லாமல் அங்கும் இங்குமாக நடப்பது, ஆடைகளைக் கழற்ற முயற்சிப்பது, வாய், முகபாவனைகளில் மாற்றம் ஏற்படுவது, இதைத் தொடர்ந்து குழப்பமான முகத்தோற்றத்தோடும் இருப்பார்கள்.  இதனால் அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வலிப்புக்கான சிகிச்சைகள் என்ன?

வலிப்பு நோயாளியிடம் தோன்றும் அறிகுறிகளை வைத்து, எந்த வகை வலிப்பு என்பதை மருத்துவர் முதலில் கண்டறிய வேண் டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே,  ECG பரிசோதனைகள், எம்.ஆர்.அய். ஸ்கேன் மற்றும் வீடியோ டெலிமெட்ரி பரிசோதனைகள் மூலமாக வலிப்பு நோயின் தன்மைகளை கண்டறியலாம்.வலிப்பு நோயின் வகை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றாற்போல சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவர் சரியான மருந்தை சரியான அளவில் கொடுக்கும்போது பலருக்கு வலிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

அப்படி வலிப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதபோது மூளை அறுவைச் சிகிச்சை மற்றும் கீட்டோஜெனிக் டயட் (அதிக கொழுப்பு சத்துள்ள உணவு) மருத்துவ முறை அவர்களுக்கு பரிசீலிக்கப்படு கிறது. 70 சதவிகிதம் வலிப்பு உள்ளவர்களுக்கு 3 முதல் 5 வருடங்கள் வரை மருந்துகள் சாப்பிட்ட பின்பு வலிப்பு வராமல் இருந்தால் மருந்துகளை நிறுத்திவிட வாய்ப்பு உள்ளது.பெரும்பாலும் வலிப்பு நோயின் பாதிப்புகளை மருத்துவர்களால் நேரில் பார்க்க முடிவ தில்லை. அப்படி பாதிப்பின் அறிகுறிகளை நேரில் பார்த்தவர்கள் சொல்லும் தகவலானது, நோய் பாதிப்பின் தன்மைகளை அறிந்து, மருத்துவர் சரியான சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும். அதற்கு வலிப்பின் அறிகுறிகள் பற்றிய சரியான தகவல்களை ஒவ்வொரு வரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் வலிப்பு வருகிறபோது செய்ய வேண்டிய முதலுதவிகளை தெரிந்து கொள் வதும் அவசியம். வலிப்பு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?   வலிப்பு நோயின் அறிகுறிகள் ஒருவரிடம் தென்பட்டால் பயம் கொள்ளவோ, பதற்றப்படவோ கூடாது. அவரை சுற்றியுள்ள சூழ்நிலையை அமைதியாக்க வேண்டும். வலிப்பு வந்தவர்களை கீழே விழாதவாறு பிடித்து தரையில் அமர்த்த வேண்டும். வலிப்பு வந்தவரின் தலையின் கீழ் மென்மை யான துணி அல்லது தலையணையை தலையில் அடிபடாமல் இருக்குமாறு வைக்க வேண்டும். உடலில் அடிபடாமல் இருக்க அருகிலுள்ள பொருட்கள் மற்றும் அவரது கையில் உள்ள கூர்மையான பொருட்களை அகற்றிவிடுவது நல்லது. உடல் மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள ஆடைகள் இருக்கமாக இருந்தால், தளர்வு படுத்த வேண்டும். சுவாசம் சீராக இருக்க ஒரு பக்கமாக உடலும், தலையும் இருக்கும்படி திருப்பி வைக்க வேண்டும். இதனால் வாயிலிருந்து வரும் உமிழ்நீர் மூச்சுக்குழலுக்குள் செல்வது தவிர்க்கப்படுகிறது. வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும்வரை, அருகிலிருந்து கவனித்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். முக்கால்வாசி வலிப்புகள் ஒன்றரை அல்லது இரண்டு நிமிடங்களில் அதுவாகவே அடங்கிவிடும். அடுத்தடுத்து வலிப்பு வந்தாலோ, தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் வலிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

வலிப்பு வந்தால் செய்யக் கூடாதவை என்ன?

வலிப்பின் போது ஏற்படும் கை, கால் வெட்டுதலை அடக்கிப் பிடிக்கக் கூடாது. கையில் சாவி கொடுப்பது, மூக்கில் செருப்பைக் காட்டுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. வாயிலிருந்து வெளிவரும் நுரை மூச்சுக்குழலுக்குள் சென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும் வரை எந்த விதமான ஆகாரமோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது. வலிப்பின்போது மருந்து, மாத்திரை மற்றும் தண்ணீர் கொடுக்கக் கூடாது. வாயில் எந்த பொருளையும் திணிக்கக் கூடாது. ஆபத்தான சூழ்நிலை தவிர மற்ற சூழ்நிலைகளில் வலிப்பு முழுவதும் நிற்கும் வரை வலிப்பு வந்தவர்களை அந்த இடத்தைவிட்டு மாற்ற முயற்சிக்கக் கூடாது.

வலிப்பு நோயைத் தடுக்க செய்ய வேண்டியது என்னென்ன?

வலிப்பு ஏற்படும் சூழ்நிலைகளை அறிந்து, அதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வலிப்புக்கு கொடுக்கப்படும் மருந்து களால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம், குமட்டல், தூங்கிக்கொண்டே இருத்தல், நிலையாக நிற்க இயலாமை, கை, கால் நடுக்கம், மாறுபட்ட செயல்பாடுகள், வயிற்று எரிச்சல், தோல் தடிப்புகள், எடை கூடுதல், வாய் உலர்ந்துபோதல், கண்பார்வை கோளாறுகள் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி அந்த மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.வலிப்பு சிலருக்கு தூங்கும் போதும், விழித் திருக்கும் போதும் ஏற்படுகிறது. தூக்கமின்மையும் சிலருக்கு வலிப்பு ஏற்பட காரணமாகிறது. இதனால் சரியான நேரத்துக்கு தூங்கி எழுவது அவசியம். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தூங்கும் இடம் காற்றோட்டமாக, வெளிச்சமின்றி, மிதமான தட்ப வெப்ப நிலையில் இருப்பது அவசியம். பாட்டில் குளிர்பானங்கள், துரித உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. இயற்கையான உணவு வகைகளை சாப்பிடுவதோடு, சமச்சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.உணவில் காய்கறிகள், பழங்களை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது, படிப்பது மற்றும் பிறரைப் போன்று வேலைகள் செய்வதை மருத்துவரின் ஆலோசனையுடன், சில கட்டுப்பாடுகளோடு செய்யலாம். வலிப்பு நேய் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் மற்றவர்களைப் போன்று, எல்லோருடனும் இணைந்து முழுமையான வாழ்க்கையை வாழ முடியும்!

-விடுதலை,6.2.17