வியாழன், 17 மே, 2018

சிரமம் தரும் சிறுநீர்ச் சுரப்பி!
ஆண்களின் அடிவயிற்றில் சிறுநீர்ப் பைக்குக் கீழே, சிறுநீர்ப் புறவழி தொடங்குகிற இடத்தில், சிறுநீர்ப் பையின் கழுத்தைச் சுற்றி, தசையாலான சுரப்பி ஒன்று உள்ளது. அதற்கு புராஸ்டேட் சுரப்பி என்று பெயர்.

பொதுவாக, இளமைப் பருவத்தில் இது ஆரோக்கிய மாகவே இருக்கும். வயது ஆக ஆக இது வீக்கமடையும். பினைன் புராஸ்டேட்டிக் ஹைப்பர்பிளேசியா என்று இதற்குப் பெயர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வீக்கம் ஏற்படுவது மிகச் சாதாரணமானதுதான். முதுமையில் தலைமுடி நரைப்பதைப்போல இதுவும் முதுமையின் ஓர் அடையாளம் எனக் கருதப்படுகிறது. இருந்தாலும் ஒரு நோயாக மாறும்போது, பலருக்கும் இது பிரச்சினை தரும் உறுப்பாகக் கருதப்படுவதுண்டு. முக்கியமாக, இந்தச் சுரப்பி வீக்கமடைந்து சிறுநீர்ப் பையை அழுத்திச் சிறுநீரை வெளியேற்றுவதில் பிரச்சினையை உருவாக்கும்.

சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படும்போது, சிறுநீர்த் தாரை அடைத்துக்கொள்ளும்போது, சிறுநீர்ப் பையில் கற்கள் உருவாகும்போது, புராஸ்டேட் சுரப்பியில் அழற்சி ஏற்படும்போது என மற்ற காரணங்களாலும் சிலருக்கு புராஸ்டேட் சுரப்பி வீங்கி விடலாம்.

அறிகுறிகள்

சிறுகச் சிறுகச் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது தடை உண்டாவது, சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்போது தயக்கம் ஏற்படுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்து முடித்த பின்னரும் இன்னும் சிறுநீர் உள்ளதுபோன்று உணர்வது, மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது, கடைசியில் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் சொட்டுதல் போன்றவை இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகளோடு சிறுநீரில் ரத்தம் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது புராஸ்டேட் புற்றுநோயாக இருக்க வாய்ப்புண்டு.

சிகிச்சை என்ன?

சாதாரண புராஸ்டேட் வீக்கத்துக்குப் பயப்படத் தேவையில்லை. பெரும்பாலும், ஆரம்ப நிலையில் உள்ள வீக்கத்தை மருந்துகள் மூலமே குறைத்துவிடலாம். அப்போது அறிகுறிகளும் விடைபெற்றுக்கொள்ளும். ஒருவேளை அது மருந்துகளுக்குக் கட்டுப்படவில்லை எனும்போது, டிரான்ஸ் யுரேத்திரல் ரிசக்சன் ஆஃப் புராஸ்டேட் எனும் எளிமையான அறுவைசிகிச்சை மூலம் அல்லது இப்போது வந்துள்ள நவீன முறையான லேசர் சிகிச்சையின் மூலம் இந்த வீக்கத்தைக் குறைத்து விடலாம்.

என்ன பரிசோதனை?

உங்களுக்குள்ள புராஸ்டேட் பிரச்சினையை உறுதிசெய்ய, வயிற்றை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் புராஸ்டேட் எந்த அளவில் வீங்கியுள்ளது, அதன் நிலைமை என்ன, எந்த அளவுக்குச் சிறுநீர் போவதை அது தடுக்கிறது என்பது போன்றவற்றைத் தெரிந்துகொண்டு, மாத்திரைகள் மட்டும் போதுமா அல்லது அறுவைசிகிச்சை தேவைப்படுமா என்பதை உறுதிசெய்ய முடியும்.

உங்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்பட்டால் நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம் போன்றவற்றை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான மேல் ஆலோசனைக்கு ஒரு சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணரை நீங்கள் சந்திப்பது நல்லது.

-  விடுதலை நாளேடு, 14.5.18

பாதங்களில் எரிச்சல் ஏன்?

சர்க்கரை நோய் உள்ளவருக்குக் கால் நரம்புகள் பாதிக்கப்படுவது மிகவும் சகஜம். சர்க்கரை நோய் தொடர்ந்து கடுமையாக இருக்கும்போது உடலில் உள்ள புறநரம்புகள் எல்லாமே பாதிக்கப்படும். அதற்கு டயபடிக் நியுரோபதி  என்று பெயர். தமிழில் இதை நரம்பு வலுவிழப்பு நோய் என்கிறார்கள். மற்ற நரம்புகளை ஒப்பிடும்போது, கால் நரம்பு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை எகிறும்போது, அந்தச் சர்க்கரையானது சாப்பிட்டால் வேதிப்பொருளாக மாறி, புறநரம்புகளில் படியும். அப்போது அது நரம்பிழைகளைப் பாதிக்கும். காலில் ஏற்படுகின்ற தொடு உணர்வு, வெப்ப உணர்வு, வலி உணர்வு, அதிர்வு போன்றவற்றை மூளைக்கு எடுத்துச் சென்று நமக்கு உணர்த்துவது புற நரம்புகள்தான். இந்த நரம்புகளை சார்பிட்டால் பாதிக்கும்போது நரம்பு செல்களில் செய்திகள் கடத்தப்படும் வேகம் குறைகிறது. இதன் விளைவாகக் கால் மரத்துப் போகிறது. மதமதப்பு ஏற்படுவதும், பஞ்சு மேல் நடப்பது போலிருப்பதும் இதனால்தான்.

மேலும், இவர்களுக்கு ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படுவதால் நரம்பு செல்களுக்குத் தேவையான ரத்தமும் கிடைப்பது இல்லை. முக்கியமாக, நரம்பு முனைகளுக்கு ஊட்டச்சத்து, ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் முதலில் எரிச்சலும், அதைத் தொடர்ந்து ஊசி குத்தும் வலியும் உண்டாகின்றன. பாதம் குளிர்ந்தும் போகிறது.

என்ன பரிசோதனை?

கால் நரம்பு பாதித்திருக்கிறது என்பதை உறுதி செய்வதற்கு பயோதிசியோமெட்ரி பரிசோதனை உதவுகிறது. பாதத்தில் முக்கியமான நரம்புகள் இருக்கிற ஆறு இடங்களில் தொடு உணர்வு, அதிர்வு உணர்வு, வெப்ப உணர்வு, குளிர் உணர்வு போன்றவை எப்படி இருக்கின்றன எனக் கண்டறியும் பரிசோதனை இது. இதன் முடிவுகள் பாதத்தில் எந்த நரம்பு, எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகத் தெரிவித்துவிடும்.

ரத்தசோகை கவனிக்க!

சர்க்கரை நோய் தவிர, கால் எரிச்சலுக்கு தமனி ரத்தக் குழாய் பாதிப்பு, ரத்தசோகை, வைட்டமின் பி6, பி12 பற்றாக்குறை, ஃபோலிக் அமிலம் பற்றாக்குறை, உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடிப்பது, சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு பற்றாக்குறை, சில மருந்துகளின் பக்கவிளைவு எனப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன.

உங்களுக்கு என்ன காரணத்தால் காலில் எரிச்சல் வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு சரியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களில் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருந்ததா என்பதை அறிய எச்பிஏ1சி பரிசோதனையையும் மேற்கொள்ளுங்கள். இதுவும் சரியாக இருந்தால், மற்ற காரணங்களுக்கான ரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, காரணம் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். கால் எரிச்சல் குறைந்துவிடும்.

- விடுதலை நாளேடு, 14.5.18