திங்கள், 30 நவம்பர், 2020

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (11)

மரு.இரா.கவுதமன்

இதயத்தமனி (அடைப்பு) நோய் (coronary artery disease)

மாரடைப்பு (Heart Attack)

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, கருவுற்ற எட்டாவது வாரத்தில் இதயம் இரண்டு குழாய்களாக அமைந்து, பிறகு நான்கு அறை கொண்ட இதயமாக மாறுகிறது. அப்பொழுதே துடிக்க துவங்கும் இதயம், நம் மரணம் வரை இடைவிடாது துடித்துக் கொண்டே இருக்கிறது.

இதயம்தான் கருவில் உருவாகும் முதல் உறுப்பு. ஆரம்பத்தில் நிமிடத்திற்கு 120 முதல் 160 வரை இதயம் துடிக்கும், பேறு காலத்தில் துடிப்பு நிமிடத்திற்கு 130 ஆக இருக்கும்.

பின் குழந்தை வளர, வளர நிமிடத்திற்கு 72 முறை துடிப்பாக மாறி நிலை கொள்ளும். இயல்பான நிலையில் நிமிடத்திற்கு 72 முறை,  X ஒரு மணிக்கு 72 X 60 முறை, ஒரு நாளைக்கு 72 X 60 X 24 என்று நாம் வாழும் காலம் முழுதும் இதயம் இயங்கிக் கொண்டே இருக்கும்.

சுருங்கி, விரியும் தன்மையையே நாம் இதயத் துடிப்பாக உணர்கிறோம். அவ்வாறு இடைவிடாமல் இதயம் இயங்க வேண்டுமானால் அதற்கு தேவையான சக்தி இடைவிடாமல் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த சக்தி இடைவிடாமல் கிடைக்க வேண்டுமானால் இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடையின்றி கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தங்குத் தடையின்றி (ஒரு நிமிடம் கூட நில்லாமல்) கிடைக்கும் இரத்தம் மூலமே இதய இதயத்திற்கு தேவையான உயிர்க்காற்றும் (ஆக்ஸிஜன்), சத்தும் கிடைக்கிறது. அப்படி நில்லாமல் கிடைக்கும் இரத்த ஓட்டம் இதயத் தமனி (coronary Artery) மூலமே, இதயத்திற்கு கிடைக்கிறது.

இதயத் தமனிகள் (Coronary Arteries):

மகாதமனி (Aorta) (இடது வெண்டிரிக்கள், left ventricle) இடது கீழறையிலிருந்து வெளியேறும் இடத்தில், இதயத் தமனி பிரிகிறது. பிரிகின்ற இதயத் தமனிதான் முழு இதயத்திற்கும் தேவையான இரத்த ஓட்டத்தை கொடுக்கிறது.

மகாதமனியிலிருந்து பிரியும் இதயத்தமனி மேலும் இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிகிறது. இடது பெரும் இதயத் தமனி (left main coronary artery (also called left main track) வயது பெரும் இதயத் தமனி (right coronary artery - RCA) என்று இரு பிரிவுகளாக பிரிந்து இதயத்தின் இடது, வலது புறங்களுக்கு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இடது பெரும் இதயத்தமனி மேலும் இரண்டாக பிரிகிறது. இதயச் சுற்றுத் தமனி (circumflex artery) இடது முன் கீழிறக்கத் தமனி (left anterior descending artery - LAD) என்று இரண்டாகப் பிரிகிறது.

சுற்றுத் தமனி, இடது மேலறை, இடது கீழறையின் (Left Ventricle) பக்கவாட்டிற்கும், பின் பகுதிக்கும் இரத்தம் கொண்டு செல்கிறது. முன் கீழறக்கத் தமனி, இடது கீழறையின் முன்புறம், கீழ்புறம், கீழறைகளின் இடைச்சுவர் ஆகிய பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்கிறது. வலது பெரும் இதயத் தமனி (Right Coronary Artery - RCA) வலது ஓரத் தமனி  (Right Marginal Artery), பின் கீழறக்கத் தமனி (Posterior Descending Artery) என்று இரண்டு பிரிவாக பிரிந்து வலது மேலறை, வலது கீழறை, கீழறைகளின் அடிப்பகுதி, இடைச்சுவர்களின் (Septcem) பின்புறம் ஆகிய பகுதிகளுக்கு இரத்தத்தை செலுத்துகிறது. இந்த பிரிகின்ற தமனிகள் எல்லாம் ஒரு வலைப்பின்னல் போல் அமைந்து, இதயத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டத்தை, இடைவிடாமல் கிடைக்கச் செய்கின்றன.

துணைத் தமனிகள் (Collateral Vessels):

இவை இதயத்தில் அமைந்துள்ள சிறிய தந்துகிகள் (tiny blood vessels - capillaries) ஆகும். இதயம் இயல்பாக செயல்படும் பொழுது, இவை மூடி இருக்கும். இதயத்தமனி சுருக்க நோயில், இவை விரிந்து, இதயத்திற்கு தேவையான இரத்தத்தை செலுத்தத் துவங்கும். அதனால் இதய இயக்கத்திற்கு தேவையான இரத்தம் கிடைக்கும். இதனால் மாரடைப்பு தவிர்க்கப்படும். இனி இதயத் தமனி நோய்களை பார்ப்போம்.

இதயத் தமனி இரத்த ஓட்டக் குறைபாடு (Ischemia) : இதயத் தமனி வழியே இதயத்திற்கு தேவையான இரத்தம் குறைவின்றி தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் காரணமாக இரத்த ஓட்டம் குறைந்தால், இதயத்திற்கு தேவையான உயிர் காற்றும் (Oxygen) சத்தும் கிடைக்காமல் போகும். அதனால் இதயம் நின்று விடும் நிலை ஏற்படும். இதையே “மாரடைப்பு’’ (Heart Attack) என்று கூறுகிறோம். மிகவும் ஆபத்தமான நிலை இது. உடனடியாக மருத்துவம் செய்யாவிடில் மரணம் நிகழக் கூடிய நிலை ஏற்படும். இனி இது எப்படி நிகழுகிறது எனப் பார்ப்போம்.

மாரடைப்பு (Heart Attack): மிகவும் ஆபத்தான இந்நோய் எதிர்பாராமல் ஏற்படும். இதயத்திற்கு செல்கின்ற இரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால் இதயம் துடிக்காமல் நின்று விடும். இதயம் செயல்படுவது நின்று போவதால் மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல்படாமல் நின்று விடும். நோயாளி மரணமடைந்து விடுவார்.

“சற்று முன் கூட பேசிக் கொண்டிருந்தாரே, திடீரென்று சாய்ந்து விட்டார், இறந்து விட்டார்’’ என்றெல்லாம் பல முறை நாம் கேட்டுள்ளோம். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்நோயேயாகும். மிகவும் அதிகளவில் மரணம் நிகழ்த்த கூடிய நோய் இது. ஆனால் இந்நோயை கண்டறிவதும், மருத்துவம் செய்வதும் முழுமையாக இந்நோயிலிருந்து நோயாளிகளை மீட்டு, நீண்ட வாழ்வு வாழ வகை செய்யலாம் இந்தியாவில் இந்நோயினால் வருடத்திற்கு ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய்க்கான காரணங்களை பார்ப்போம்.

“நிலையான மார்பு வலி’’, “நிலையற்ற மார்பு வலி’’ மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் சட்டைப் பையில் கீழ்கண்ட 3 மாத்திரைகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள் புழங்குமிடங்களில் (படுக்கையறை, உணவு உண்ணும் அறை போன்ற இடங்களில்) கைக்கு உடனே எடுக்கும்படியாகவும் இம்மாத்திரைகளை வைத்திருத்தல் நலம் பயக்கும். லேசானா நெஞ்சு வலி ஏற்பட்டாலும் உடனடியாக செய்கின்ற வேலையை, நிறுத்திவிட்டு (நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாலும்) உடனடியாக அருகில் ஓர் இடத்தில் அமைதியாக அமர வேண்டும். படுக்கை இருந்தால் படுத்துக் கொள்ள வேண்டும் உடனடியாக மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மருத்துவமனைக்கு செல்ல, அனைத்து முயற்சிகளையும் கைக்கொள்ள வேண்டும். தனியாக இருக்கும்பொழுது மார்பு வலி வந்தால், ஆழ்ந்து மூச்சித்திழுத்து, இரும வேண்டும். நெஞ்சுப் பகுதியை கைகளால் பிசைந்து கொடுக்க வேண்டும். மாத்திரைகளையும் உடனடியாக சாப்பிட வேண்டும்.

மார்பு வலியேற்படும் பொழுது உண்ண வேண்டிய மாத்திரைகள்:

ஆஸ்பிரின் 75 mg. (Aspirin 75 mg)

(இம்மருந்து இரத்தம் உறைதலை தடுக்கும்)

எனலார்பில் (Enalarpil - Vaootec)

(இம்மருந்து இரத்தக் குழாய்களை விரித்து கொடுக்கும். அதனால் இரத்த ஓட்டம் அதிக அளவு இதயத்திற்கு செல்லும்.)

ஐசாட்ரில் 5 (Isodril 5)

(இம்மருந்தை நாக்கின் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இதயத் தமனிகளை விரித்து அதிகளவு இரத்தம் இதயத்திற்கு செல்ல வழிவகுக்கும், மருந்து இது.)

 (தொடரும்...)

- உண்மை இதழ் ஜூன் 16 -  ஜூலை 15 .2020