சிறுநீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுநீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) - நவீன மருத்துவங்கள் (93)

 

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (93)

ஜனவரி 16-31,2022

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

சிறுநீர் நச்சுப் பிரிப்பு (Dialysis): சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்த நிலையில், மருத்துவர்கள் “சிறுநீர் நச்சுப் பிரிப்பு’’ (Dialysis) மருத்துவம் செய்வர். சிறுநீரகச் செயலிழப்பால் நச்சுப் பொருள்கள் உடலில் கலப்பதோடு அல்லாமல் பல இணை நோய்களையும் உண்டாக்கும். அந்த நச்சுப் பொருள்கள் உடலில் கலக்காமல் இருக்கவே இம்மருத்துவ முறை மேற்கொள்ளப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட கீழ்க்காணும் முறைகள் கையாளப்படுகின்றன.

இரத்த நச்சு சுத்தகரிப்பு (Haemodialysis) இரத்தத்தை வெளியே உள்ள கருவியில் செலுத்தி சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றி மீண்டும் _ இரத்தத்தை உடலில் செலுத்துவார்கள். 3 முதல் 4 மணி நேரம் இம்முறையைச் செயல்படுத்த ஆகும். பெரும்பாலும் மருத்துவமனையிலேயே செய்யப்படும் செயல்பாடு இது. ஆனால், இணை நோயின் தீவிரத்தால் மருத்துவமனைக்கு வரமுடியாத நோயாளிகளுக்கு வீட்டிலும் செய்ய முடியும்.

உள்ளுடற் சவ்வு நச்சு நீக்கம்:(Peritoneal Dialysis) குழாய்களை வயிற்றின் உள்பகுதியில் செலுத்தி, அதன் மூலம் மருத்துவ நீர்மங்களைச் செலுத்தி, சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றும் முறை இது. இதை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

பொதுவாக, நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப இம்மருத்துவம் செய்யப்படும். ஆரம்பத்தில் முதல் நாள் இரண்டு, மூன்று முறை கூட செய்ய வேண்டியிருக்கும். பிறகு இந்தச் செயல்பாடு குறையும்.

சிறுநீரக மாற்று மருத்துவம்: 100 சதவிகிதம் பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களுக்கு, மாற்றாக வேறு சிறுநீரகம் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை. ஆனால், மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது சற்று தாமதமாகலாம். அதுவரை நச்சுப் பிரிப்பு முறையில் சிறுநீரகத்தின் நச்சுகள் பிரிக்கும் மருத்துவம் மூலம் நோயாளியின் உயிர் பாதுகாக்கப்படும்.

*              பொதுவாக முழுமையான குணமளிக்கக் கூடிய மருத்துவ முறை.

*              ஒரு சிறுநீரகம்தான் தேவை.

*              குடும்ப உறுப்பினர்களிடம் எடுக்கும் சிறுநீரகம் சிறந்தது.

*              இணையரிடமோ, நண்பர்களிடமோ சிறுநீரகம் பெறலாம்.

*            இவர்கள் “உயிருள்ள உறவுமுறை நன்கொடையாளர்கள்’’ (Live Relatives Donors) என்று அழைக்கப்படுகிறார்கள்.

*              இயல்பாக ஒரு சிறுநீரகமே செயல்படப் போதுமானது. அதனால் எந்தக் குழப்பமுமின்றி சிறுநீரகம் கொடுக்கலாம்.

*              மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகங்களை தேவையானவர்களுக்குப் பொருத்தி, அவர்களின் உயிர் காக்க முடியும்.

*              பாதுகாப்பான, வெற்றிகரமான அறுவை மருத்துவம் இது.

*              இரத்தம் ஒரே வகையானதாக சிறுநீரகம் கொடையாளர்களுக்கும், பெறுபவர்களுக்கும் இருக்க வேண்டும்.

*             “திசு ஒற்றுமை’’ (Tissue Matching) ஒன்றாக இருக்க வேண்டும்.

*              சிறுநீரகக் கொடையாளிக்கு சிறுநீரகத்தை எடுப்பதால் உடல் நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் இயல்பான முழு வாழ்க்கையும் எந்தக் குறைபாடும் இன்றி வாழ முடியும்.

*            சிறுநீரகம் பெறுபவர் வாழ்நாள் 20 முதல் 25 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

*              பொருத்தப்பட்ட சிறுநீரகம் இயல்பு நிலையடைந்து, எளிதாக தன் பணியை முழுமையாகச் செய்யும்.

*              கொடையாளிக்கும், பெறுபவருக்கும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் அறுவை மருத்துவம் நடைபெறும்.

*              வேறு மருத்துவமனையில் இருந்து பெறப்படும் சிறுநீரகம், பாதுகாப்பாக, அதற்கென்று இருக்கும் பெட்டியில் வைக்கப்பட்டு, பெறுபவர் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பொருத்தப்படும்.

*             இன்றைய மருத்துவ வாய்ப்புகளில் கண்களுக்கு அடுத்து அதிகமாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறும் உறுப்பு மாற்ற அறுவை மருத்துவம் சிறுநீரக மாற்று அறுவை மருத்துவமே ஆகும்.

*              உயிரோடு இருப்பவர் சிறுநீரகங்கள் எளிதில், ஏற்றுக் கொள்ளப்பட்டு சிறப்பாகச் செயல்படும்.

*              இயல்பாக அவர் செயல்பட முடியும்.

*              கொடையாளிகள் உடல் நிலையில் இணை நோய்கள் இருக்கக் கூடாது.

*              இளைஞர்களின் சிறுநீரகங்கள் எளிதில், நோயாளிகளுக்குப் பொருந்தும்.

*              கொடையாளிகள் மருத்துவமனையில் சிறிது காலமே தங்க வேண்டி இருக்கும்.

*             கொடையாளியின் மன நிறைவுக்காகவும், எந்தக் குறைபாடும் இல்லை என உறுதியளிக்கவும் சில ஆய்வுகளைச் செய்யலாம். வழமையான இரத்த ஆய்வு, சிறுநீர் ஆய்வு, மீள் ஒலிஆய்வு, ஊடுகதிர் கணினி வரைவு போன்றவை செய்து, கொடையாளிக்கு நம்பிக்கை ஊட்டலாம்.

*              கொடையாளிகளும், சிறுநீரகம் பெற்றவர்களும், குழந்தைகள் பெற முடியும் _ பெற்றுக் கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. மனத்திடத்திற்காக ஏற்கெனவே சிறுநீரகம் கொடுத்தவர்களிடம், கொடையாளிகள் கலந்துரையாடலாம்.

*             யாருக்குச் சிறுநீரகம் கொடுத்துள்ளோம் என கொடையாளிக்குத் தெரிய வேண்டியதோ, தெரிவிக்க வேண்டிய நிலைப்பாடோ சட்டப்படி கிடையாது.

சிறுநீரகச் செயலிழப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருத்துவம் செய்து முழுமையாக நன்றாக ஆக்க முடியும்.

நாள்பட்ட நோய்க்குத்தான் பெருமளவில் கடுமையான மருத்துவம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரம் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

சிறுநீரகச் செயலிழப்பு முழுமையாக இருந்தால், சிறுநீர் நச்சுப் பிரிப்பு முறையிலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் அறுவை மருத்துவம் மூலமும் நல்வாழ்வு பெற முடியும்.ஸீ

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) - (92)

 

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்

ஜனவரி 1-15,2022

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

நோயின் அறிகுறிகள்:

*              தசை வாதம் (Muscle Paralysis)

*              அதிக நீர்மம் வெளியேற்ற முடியாத நிலையில் ஏற்படும் குறைபாடுகள்.

*             கைகள், கால்கள், முகம், கணுக்கால்கள், பாதம் ஆகியவற்றில் நீர் கோத்து விடும். அதனால் அந்த இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              நுரையீரல்களிலும் நீர் கோத்து விடுவதால் மூச்சுத் திணறல் உண்டாகும்.

*              சிறுநீரக நீர்க்கட்டிகள் (Polycystic kidneys) சேரும். அதிக நீர், கல்லீரலுக்கும் பரவும்.

*            அதனால் முதுகு, உடலின் பக்கவாட்டில் வலி ஏற்படும்.

*              சிறுநீரகங்கள் “எரித்ரோபயோடின்’’ (Erythropiotin) என்ற ஊக்கி நீரை (Hormone) சுரக்கும். இந்த ஊக்கி நீர், எலும்பு மஜ்ஜைகளைத் தூண்டிவிட்டு சிவப்பணுக்-களை உற்பத்தி செய்து, இரத்தத்தில் கலக்கும். சிறுநீரகப் பாதிப்பு சிவப்பணுக்கள் உற்பத்தியைக் குறைக்கும். அதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன், சிவப்பணுக்கள் மூலம் செல்வது தடைபடும். இதனால், “இரத்த சோகை’’ (Anaemia) ஏற்படும்.

*             இரத்த சோகை ஏற்படுவதால் களைப்பு உணடாகும்.

*              நினைவாற்றல் குறையும்.

*            கவனக் குறைவு ஏற்படும்.

*             தலைச்சுற்றல் உண்டாகும்.

*              இரத்த அழுத்தம் குறையும்.

*              இயல்பான நிலையில் புரதங்கள் அளவில் பெரியதாக இருப்பதால் சிறுநீரக வடிப்பான்கள் மூலம் வெளியேறாது. ஆனால், வடிப்பான்கள் சேதமடைவதால் புரதங்கள் சிறுநீர் மூலம் வெளியேறும் (Micro proteinaemia) அதனால்,

*             நுரையுடன் சிறுநீர் வெளியேறும்.

*              கணுக்கால், பாதங்கள், கைகள், முகம், வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              பசியின்மை

*              உணவு எடுத்துக் கொள்வதில் ஆர்வமின்மை

*             தோல் கருத்துப் போதல்

*            இரத்தத்தில் புரதங்கள் தேங்குதல்

*              உயிர்க் கொல்லி மருந்துகள் (Anti-biotics-Penicillin) பென்சிலின் போன்றவை ‘வலிப்பு’ (Seizures) உண்டாக்கும்.

நோயறிதல் – ஆய்வுகள்: நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பை 5 அடுக்குகளில் அளவீடு செய்வார்கள். வடிப்பான்கள் (Glomerular Filtration rate (GFR) வடிகட்டும் தன்மைக்கேற்ப இது அளவிடப்படும். 1. வடிப்பான்கள் பாதிப்பு லேசாக இருப்பின், இது முதல் நிலையாகக் கருதப்படும். 2, 3ஆம் நிலைகளில் அதிக அளவு மருத்துவக் கண்காணிப்பு கொடுத்துக் கவனிக்க வேண்டும். நோயாளி குணமடையும் வாய்ப்பு அதிகம். 4, 5ஆம் நிலைகளில் நோயின் கடுமை அதிகமாக இருக்கும். தீவிர மருத்துவம் செய்ய வேண்டிய நிலை. 5ஆம் நிலையில் வடிப்பான் செயலிழப்பு மிகவும் ஆபத்தானது. சிறுநீரகங்கள் மாற்றும் மருத்துவம் செய்ய வேண்டிய நிலை இந்நிலை.

வடிப்பான் வடி திறனளவு: (Glomeruler Filtration Rate):  வடிப்பான் வடிதிறன் பல நிலைகளில் மாறுபடும். வயது, பாலினம், உடல் அளவு, சூழ்நிலை ஆகிய நிலைகளில் வேறுபடும். இது மிகவும் இயல்பானது. ஆனால், சிறுநீரக நோய் மருத்துவர்கள் இதை ஒரு சரியான அளவீடாகக் குறிப்பிடுகின்றனர். தேசிய சிறுநீரக நிறுவனம் (National Kidney Foundation) வடிப்பான் வடிதிறன் அளவீட்டுக் கருவியை தேவைப்பட்டால் கொடுக்கின்றனர். இரத்தத்தில் “கிரியேட்டினின்’’ அளவீடு, அறிவதற்கு வடிதிறன் கருவியைப் பயன்படுத்தத் தேவை.

யூரீமியா: (Uremia):  சிறுநீரகத் துறை வளர்ச்சியடையும் முன், சிறுநீரகச் செயலிழப்பு, யூரீமியா (Uremia) என்றே அழைக்கப்பட்டது. இரத்தத்தில் யூரியா கலப்பதையே அவ்வாறு அழைத்தனர். 1847 வரை இரத்தத்தில் சிறுநீர் கலந்து விடுவதாக மருத்துவர்கள் நினைத்தனர். சிறிதளவோ, அல்லது சிறுநீரோ போகாததால் மருத்துவர்கள் அவ்வாறு நினைத்தனர். சிறுநீரகத் துறையின் வளர்ச்சி இந்த நிலைப்பாட்டை மாற்றியது. இன்று சிறுநீரகச் செயலிழப்பின் ஓர் அறிகுறியாகவே யூரீமியா குறிப்பிடப்படுகிறது.

அடிப்படை ஆய்வுகள்:

*             இரத்தத்தில் அணுக்கள், சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள் எண்ணிக்கை ஆய்வு. (சிவப்பணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, வெளுத்த தன்மை, வெள்ளணுக்கள் அளவு கூடுதல் போன்றவை நோய்த் தன்மையை வெளிப்படுத்த உதவும்.)

*              இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவு கூடியிருந்தால், நோய் உள்ளதை அறிய முடியும்.

*             மீள்ஒலி பதிவில் (Ultra Sonogram) சிறுநீரகங்கள் சிறுத்துத் தெரியும்.

*              ஊடுகதிர் கணினி வரைவி (Computerised Tomography) மூலம் சிறுநீரகங்கள் அமைப்பையும், மற்ற சிறுநீரகங்களின் பாகங்களில் உள்ள குறைபாடுகளையும் எளிதில் கண்டறியலாம்.

மருத்துவம்: நீரிழிவு நோய் முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்கும், நீரிழிவு நோய் அற்றவர்களுக்கும், குறைந்த அளவு புரதச் சத்துள்ள உணவுகள், நோயின் தீவிரத் தன்மையைக் குறைக்கும். ஆனால், இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு இது பயனளிக்காது. அசைவ உணவுகள், அதிகப் புரதச் சத்துள்ள உணவுகள் நோயைத் தீவிரப்படுத்தும்.

மருந்துகள்: வலி நீக்கி மருந்துகள், சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளை அறவே தவிர்க்க வேண்டும். சிறுநீரகச் செயலிழப்பால் ஏற்படும் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்தல் தேவையாகும். நிறமிகள் (Dye) மூலம் செய்யும் சோதனைகளைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரின் நீர்த்த தன்மையை அதிகமாக்கும் மருந்துகளை (Diuretics)

மருத்துவர்கள் கொடுப்பர்.

(தொடரும்…)

திங்கள், 24 அக்டோபர், 2022

சிறுநீரகச் செயலிழப்பு - (91)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (91)

டிசம்பர் 16-31,2021

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (Chronic Renal Failure):

உடலின் பிற நோய்கள் காரணமாக சிறுநீரகங்கள் மெதுவாகப் பாதிப்படைந்து கொண்டே வரும். நீரிழிவு நோய் (Diabetes), மிகு இரத்த அழுத்தம் (Hypertension), இரத்தக் குழாய் நோய்கள் (Vascular Diseases), நாளமில்லாச் சுரப்பி நோய்கள் (endocrine glandular disease), கல்லீரல் நோய்கள் (Hepatic Diseases) ஆகிய பல நோய்கள் மெல்ல மெல்ல நீண்ட காலத்தில் சிறு நீரகங்களைச் செயலிழக்கச் செய்துவிடும். ஆரம்ப காலங்களில் சிறுநீரகங்கள் பாதிப்பு என்று எந்த அறிகுறிகளுமே தெரியாது. சிறுநீரகங்கள் பாதிப்பு  அளவைத் தாண்டும்பொழுதுதான் மெல்ல, மெல்ல சிறுநீரகங்கள் பாதிப்பு அறிகுறிகளாகத் தெரியத் துவங்கும். அந்த நேரத்தில் மருத்துவம் செய்து முழுமையாக சிறுநீரக நோய்களிலிருந்து வெளியேறினால், சிறுநீரகங்கள் செயலிழப்பைத் தவிர்க்க முடியும். ஆனால், மற்ற உறுப்பு நோய்களை முழுமையாகச் சீராக்காவிட்டால் மீண்டும் சிறுநீரகங்கள் பாதிப்பும், செயலிழப்பும் தவிர்க்க முடியாது.

நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மீது குறுகிய கால நோய்த் தாக்குதல்: (Acute-on-Chronic Renal Failure):

ஏற்கனவே நாள்பட்ட சிறுநீரகங்கள் பாதிப்படைந்த சிறுநீரகங்கள் மேல் திடீரென்று ஏற்படும் உடனடி பாதிப்புகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சரியாக சிறுநீரகங்களின் நோய்த் தாக்கத்தைக் கண்டறிந்து மருத்துவம் செய்தல் உடனடி தேவை. ஆரம்ப நிலை மருத்துவம், குறுகிய கால நோய்ப் பாதிப்பைச் சீராக்குவதில் நோய்க்கு மருத்துவம் செய்து கொண்டிருப்பர். உடனடி ஆபத்துகள் சீரான பின்பு, நீண்ட நாள் மருத்துவம் நோயாளியைக் காப்பாற்றும். அப்பொழுதுதான் நீண்ட நாள் சிறுநீரகங்கள் நோய் மருத்துவரால் அறியப்பட்டால் அதற்கான மருத்துவம் தொடங்கப்படும்.

சிறுநீரகங்கள் செயலிழப்புக்கான காரணிகள்:

உடனடிச் சீறுசீரகச் செயலிழப்பு – சிறுநீரகங்கள் திடீரென செயல் இழப்பதற்கான காரணிகள்:

*             நஞ்சுகள், நச்சுத் தன்மை உடைய செயற்கை உரங்கள், வேண்டுமென்றோ, (தற்கொலை எண்ணத்துடன்) அல்லது எதிர்பாராமலோ உண்டுவிட்டால் அது நேரடியாக சிறுநீரகங்களைப் பாதிக்கும்.

*               விபத்து போன்ற நிகழ்வுகளால் சிறுநீரகங்-களில் அடிபட்டால் சிறுநீரகம் செயலிழந்து விடும்.

*               சிறுநீரகங்களில் (Poly Cystic Kidney) எளிதில் பல நீர்க் கட்டிகள் அதிகமாவதாலும், பெரியதாவதாலும் அவை சிறுநீரகங்களின் செயல்பாடுகளைத் தடுத்து, செயலிழப்பை ஏற்படுத்தும்.

*               சீராகாத நீண்ட நாள் நோய்த் தொற்று, வடிப்பான்களை (Nephrons) அழித்து, சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும்.

*               மரபணு (Genetical) மாற்றங்கள் உடைய சிலருக்கு சிறுநீரகச் செயலிழப்புக்குக் காரணமாகிறது என மருத்துவர்கள் கண்டுள்ளனர்.

*               HIV (எய்ட்ஸ்) நோய் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்தும்.

நோயின் அறிகுறிகள்: சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் அறிகுறிகள் நோயின் தன்மைக்கு ஏற்பவும், துணை நோய்களின் நிலைமைக்கு ஏற்பவும் மாறுபாடாகத் தெரியும். ஆரம்ப நிலை நோயில் பொதுவாக, குறிப்பாக எந்த அறிகுறிகளும் வெளிப்-படையாகத் தெரியாது. சிறுநீரக வடிப்பான்கள் செயலிழப்பு அதிகமாகும் போது, கழிவுகள் வெளியேற முடியாத நிலை ஏற்படும். கழிவுகள் முதலில் இரத்தத்தில் கலந்து தேங்கத் துவங்கும். பிறகு உடலில் தேங்கும். உடலில் தேங்கும் கழிவுகளான நைட்ரஜன், யூரியா போன்றவை நச்சுத் தன்மை உடையவை. நைட்ரஜன் கழிவுகள் வயிற்றில் தேங்கும். வயிற்றில் அதனால் நீர் கோக்கத் துவங்கும். அதனால் வயிறு உப்பத் துவங்கும். (Azotemia) பெருத்த வயிறு, நாளடைவில் மூச்சு விடுவதில் தொல்லை ஏற்படுத்தும். அதேபோன்று யூரியா இரத்தத்தில் கலந்து, கரைய முடியாத நிலை ஏற்படும்பொழுது “யூரியா’’ மிகுந்து “மிகை இரத்த யூரியா’’ (Uremia) நிலைக்குச் சென்று விடும். இதனால் இரத்தத்தில் நச்சுத் தன்மை உண்டாகிவிடும். இது தவிர மேலும் பல அறிகுறிகள் தோன்றத் துவங்கும். யூரியா, இரத்தத்தில் மிகும்பொழுது,

*             குமட்டல், வாந்தி

*              நீர்மக் குறைபாடு (Dehydration)

*               எடைக்குறைவு

*               இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Nocturnal Urination)

*              இயல்பைவிட அதிகமாக, வெளிர்த்த சிறுநீர் கழித்தல் (Pale Urine)

*               சிலருக்கு அடர்த்தியான, குறைந்தளவு சிறுநீர் கழிக்கும் நிலை.

*               சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும்.

*               சிறுநீர் கழிக்கும் போது வலி, அதிகம் முக்கி வெளியேற்றும் நிலை.

*              பாஸ்பேட் நச்சு இரத்தத்தில் சேர்வதால்.

*               அரிப்பு.

*              எலும்புகள் பாதிப்பு.

*               எலும்பு முறிவு ஏற்பட்டால், மீண்டும் ஒன்று சேராமை.

*               தசைப் பிடிப்பு (Cramps) போன்றவை பாஸ்பேட் நச்சு மிகுவதால் ஏற்படும்.

*               பொட்டாசியம் இரத்தத்தில் மிகுந்த அளவு சேர்வதால்: (Hyperkalemia) இதயத் துடிப்பு பாதிப்பு (Abnormal heart rhythms)

*               நாளடைவில் இதயச் செயலிழப்பு (Heart failure)

(தொடரும்…)

சிறுநீரகச் செயலிழப்பு (90)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (90)

டிசம்பர் 1-15,2021

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு. இரா. கவுதமன்

நம் உடலின் ஓய்வற்ற தொழிற்சாலைகளில் ஒன்றான சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ என்றழைக்கப்-படுகிறது. பொதுவாக சிறுநீரகங்களின் செயல்பாடு 15 சதவிகிதத்-திற்கும் குறைவாக அமையுமானால், அதை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ (Kidney Failure) என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர். சிறுநீரகச் செயலிழப்பே “சிறுநீரக இறுதிக்கட்ட நோயின் இறுதிச் செயல்பாடாகக் (End stage kidney disease) கருதப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பு, ‘உடனடி சிறுநீரகச் செயலிழப்பு’’ (Acute kidney failure) என்றும், “நாள்பட்ட காலச் சிறுநீரகச் செயலிழப்பு’’ (Chronic kidney failure) என்று இருவகைப்படும். உடனடி சிறுநீரகச் செயல்பாடு திடீரென ஏற்படும். ஆனால், எளிதில் குணமடையும். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு தோன்றி, மெதுவாக, மெதுவாக அதிகமாகி முழுமையாக செயலிழப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்த அளவு பாதிப்பு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பின், சிறுநீரகங்கள் மீண்டும் சரியாகாது. இயல்பு நிலை திரும்பாது. நாள்பட்ட நோயில் பெரும்பாலும் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படையும். சில நோய்களில் ஏதேனும் ஒரு சிறுநீரகம் மட்டும் பாதிப்படையும் நிலை உண்டானால், மறு சிறுநீரகம் முழுச் செயல்பாட்டில் இயங்கும். சிறுநீரகச் செயல்பாடுகள் நிற்பதற்கு, முன் நோய்கள் பலதும் காரணமாக உள்ளன. உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organisation – WHO) ஆய்வின்படி உடனடி செயலிழப்பு ஆண்டுக்கு 1000 பேருக்கு, மூவர் பெறுவதாகவும், நாள்பட்ட செயலிழப்பு 1000 பேரில் ஒருவருக்கு வருவதாகவும் ஆண்டு ஆய்வில் தெரிவித்-துள்ளது. 10,000 பேரில் மூவர் புதியதாக இந்நோயால் பாதிப்படைவதாகவும் மற்றொரு அறிக்கையில் உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிறுநீரகச் செயலிழப்பு வகைகள்:

சிறுநீரகச் செயலிழப்பு, உடனடி செயலிழப்பா அல்லது நாள்பட்ட காலச் செயலிழப்பு என்பதை இரத்தத்தில் உள்ள “கிரியேட்டினின்’ (Creatinine) அளவை வைத்தே மருத்துவர்கள் முடிவு செய்வர். இரத்த சோகை (Anaemia), சிறுநீரகங்கள் சிறுத்து விடுதல் (பொதுவாக “மீள் ஒலி அலைப் பதிவு (Ultrasonography) மூலம் சிறுநீரகத்தின் அளவை அறியலாம்) போன்றவற்றைக் கொண்டும் நோயின் தன்மையை அறிய முடியும்.

உடனடி சிறுநீரகச் செயலிழப்பு:

இச்செயலிழப்பு பொதுவாக நச்சுப் பொருள்களை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ உட்கொள்வதால், அந்த நஞ்சு சிறுநீரகங்களைப் பாதித்து சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும். இதன் விளைவாக சிறுநீர் போவது முழுமையாகத் (Oliguria) தடைப்பட்டு விடும். ஒரு நாளைக்கு வளர்ந்தவர்கள் 400 மி.லி. அளவேயும், 1 கிலோ எடையுள்ள குழந்தை 0.5 மி.லி.  சிறுநீருமே கழித்தால் சிறுநீரகப் பாதிப்பை உணர்த்தும். சிறுநீரக உடனடிச் செயலிழப்பு, சிறுநீரகம் முன்புறம் (Pre renal), சிறுநீரக உட்புறம் (Intrinsic), சிறுநீரகம் பின்புறம் (Post renal) என்று மூன்று வகைப் பாதிப்புகளை ஏற்படுத்தும். பெரும்பாலும் நஞ்சுகள் என்ன வகை என்பதை உடனே அறிந்து, மருத்துவம் செய்யாவிடில் சிறுநீரகங்கள் சட்டென்று செயலிழந்து விடுவதோடு, மீண்டும் சீராக்க முடியாமலேயே போய்விடும். விரைவான, சரியான நஞ்சு முறிவுகள், சிறுநீர்ப் பிரிப்பு (Dialysis) போன்றவை உடனடியாக மேற்கொள்வதாலும், மற்ற உடலுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் கண்டறிந்து மருத்துவம் மேற்கொள்வதாலும், நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்புவார். சிறுநீர்ப் பிரிப்பு மருத்துவம் உடனடி மேற்கொள்வதால், மற்ற மருத்துவமும், மற்ற உறுப்புகளைச் சீராக்க நேரமும் மருத்துவருக்குக் கிடைக்கும்.

*              சில பெரிய அறுவை மருத்துவத்தின்-பொழுது, நீண்ட நேரம் சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்தம் தடைபடும் நிலை ஏற்படும். அதனால் சிறுநீரகங்கள் செயலிழக்கும். எடுத்துக்காட்டாக, இதயத் தமனி மாற்று (வழி) பாதை (Coronary Artery Bye pass surgery – CABG) அறுவை மருத்துவம் போன்றவற்றில் நான்கு, அய்ந்து மணி நேரம் அறுவை மருத்துவம் நடக்கும். அதுபோன்று சிறுநீரகங்கள் பாதிப்படையும் வாய்ப்பும் ஏற்படும்.

*              கிருமிக் கொல்லி மருந்துகள் (Anti-biotics) எதிர்பாராத விதமாக அதிக அளவு எடுத்துக் கொள்வதால், சிறு நீரகங்கள் சேதமடையும். நீண்ட நாள்கள் உட்கொள்ளப்படும் கிருமிக் கொல்லிகள் (Anti-biotics) எதிர் வினையாகச் சிறுநீரகங்கள் பாதிப்படையும். எந்தெந்த மருந்துகளால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்றறிந்து அவற்றைத் தவிர்ப்பதும் அல்லது எச்சரிக்கையோடு பயன்படுத்துவதும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க உதவும்.

*              தேனீப் பூச்சிகள், பாம்புக்கடி நஞ்சு போன்றவை சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும்.

*             தொடைப் பகுதி அறுவை மருத்துவத்தில் இரத்த ஓட்டக் குறைவை உண்டாக்க தொடைப் பகுதியைக் கட்டி விடுவர். அறுவை மருத்துவம் முடிந்த பிறகு, கட்டுகள் பிரிக்கப்பட்டவுடன், திடீரென ஏற்படும் இரத்த ஓட்டத்தின் பின் விளைவாக சில நேரங்களில் சிறுநீரகங்கள் செயலிழந்து விடும்.

*              உடனடி சிறுநீரகங்கள் செயலிழப்பு பெரும்பாலும் நலமடையக் கூடிய நோய். எதனால் அந்நோய் உண்டானது என்ற சரியான காரணத்தைக் கண்டறிந்தால் சிறுநீரகங்களின் செயல்பாட்டைச் சீராக்கும் வாய்ப்புகள் அதிகம். நஞ்சுப் பொருள்களுக்கு, மருந்துகளுக்கு எதிர் வினையாற்றும் மருந்துகள் கொடுப்பதன் மூலம், சிறுநீரகங்களின் செயல்பாட்டை மீண்டும் சீராக்க முடியும். அதேபோல் பூச்சிகள், பாம்புக் கடியையும் எளிதில் குணமாக்கலாம்.

*             ஆனால், உடனடி செயலிழப்புக்கு ஆளானவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்புக்கு உடனடி செயலிழப்பு ஏற்பட்டதும் ஒரு காரணமாக அமையும். எனவே, இந்நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பிற்கு பின்னணியில் நீரிழிவு நோய் (Diabetes) ஒரு முக்கியக் காரணியாக இருக்கும்.

*             மிகு இரத்த அழுத்தம் (Hypertension) ஒரு முக்கியக் காரணி.

*              இரத்தக் குழாய் நோய்கள் (Vascular diseases)  நீண்ட நாள்கள் இருக்கும்பொழுது, சிறுநீரக இரத்தக் குழாய்களையும் பாதிக்கும்.

(தொடரும்…)

திங்கள், 17 அக்டோபர், 2022

சிறுநீரகக் கற்கள் (மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்) (40)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (40)

அக்டோபர் 16-31,2021

சிறுநீரகக் கற்கள்

(KIDNEY STONES)

மரு.இரா.கவுதமன்

ஒவ்வோர் ஆண்டும், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதால் பாதிக்கப்படுகின்றனர். பத்தில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் ஏதாவதொரு சமயத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிப்படைகின்றனர். இந்நோயால் அதிகளவில் பாதிப்படைபவர்கள் ஆண்களே. 11 சதவிகிதம் ஆண்கள் பாதிக்கப்பட்டால், 8 சதவிகிதமே பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மிகு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பருத்த உடல் ஆகியவற்றால் இந்நோய் எளிதில் வரும் வாய்ப்பு ஏற்படும்.

சிறுநீரகக் கற்கள்: சிறுநீரில் உள்ள வேதிப் பொருள்கள், கடினப்படுவதால், கெட்டியான சிறுநீர்க் கல் தோன்றுகிறது. சிறுநீர்க் கற்கள் பொதுவாக நான்கு வகைப் பொருள்களால் உருவாகின்றன. பொதுவாக, கால்சியம் ஆக்ஸலேட்  (Calcium Oxalate), யூரிக் ஆசிட் (Uric acid), ஸ்ட்ருவைட் (Cystine), சிஸ்டைன் (சிஹ்stவீஸீமீ) போன்ற வேதிப் பொருள்களே சிறுநீரகக் கற்கள் உண்டாகக் காரணமாகின்றன. சிறுநீரில் பல உடலின் கழிவுகள் வடிகட்டப்-படுகின்றன. சிறுநீரில் இவை கரைக்கப்பட்டு, சிறுநீராக வெளியேற்றப்படுகின்றன. சில நேரங்களில் அதிக அளவு கழிவுப் பொருள்கள் வடிகட்டப்பட்டு, அவை கரைந்து வெளியேறத் தேவையான அளவு நீர்மம் இல்லாத நிலை ஏற்படும். அதுபோன்ற நேரங்களில், கழிவுகள் சிறு, சிறு துகள்களாகப் படியத் துவங்கும். நாளடைவில் சிறு, சிறு படிகங்களாக (Crystals)  உருப்பெரும் இத்துகள்கள்.

அந்நிலையில் வடிப்பான்களில் (Nephrons) வடிக்கப்படும் நீர்மங்கள் இவற்றைக் கரைத்து வெளியேற்ற, தங்களால் முடிந்தளவு சிறுநீரகங்கள் முயலும். சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்ற முடியாத நிலையில் அவை அங்கு தேங்கும். அக்கழிவுகள் வேறு சில வேதிப் பொருள்களையும் கவரும். கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் ஆசிட், சிஸ்டைன், க்சேந்தைன் (Xanthine), பாஸ்பேட் போன்ற வேதிப் பொருள்கள், சிறுநீரகக் கழிவுகளுடன் சேர்ந்துவிடும். இவை அனைத்தும் இணைந்து, கடினமாகி கற்கள் போன்று உருமாறிவிடும். இயல்பான நிலையில் சிறிய படிவங்கள், அல்லது சிறு கடினப் பொருள்கள், சிறுநீரில் வெளியேறிவிடும். பெரிய கடினப் பொருள்கள் சிறுநீரகத்திலேயே, வெளியேற முடியாமல் தங்கி விடும். பெரும்பாலோருக்கு உடலில் தேவையான அளவு நீர்மச் சத்து இருக்கும். அவர்களுக்கு சிறுநீரகத்தில் அதிகமாக நீர்மங்கள் வெளியேற்றப்-பட்டு, வேதிப் பொருள்கள் படிவங்களாக மாறும் முன்பே கரைத்து வெளியேற்றப்பட்டுவிடும்.

தேவையான அளவு உடல் நீர்மங்கள் இல்லாதவர்களுககு சிறுநீர்க் கற்கள் எளிதாகத் தோன்றும். சிறுநீர்க் கற்கள் படிந்த உடன், அதன் பருமன் அதிகமாகி சிறுநீரகத்திலேயே நின்றுவிடும். சில நேரங்களில் சிறிய அளவு கற்கள், சிறுநீர்க் குழாய்களில் இறங்கி, சிறுநீர்க் குழாய்களை (Ureters) அடைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பல நேரங்களில் மிக மிகச் சிறிய கற்கள் சிறுநீரோடு வெளியேறிவிடும். சற்று பருமனான கற்களோ, பெரிய கற்களோ சிறுநீரில் வெளியேற முடியாத நிலை ஏற்படும். அத்தகைய கற்கள் சிறுநீரகம், சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை (Bladder), சிறுநீர்ப் புறவழி (Urethra) போன்ற பகுதிகளில் எங்கேயாவது அடைத்துக் கொள்ளும் நிலையேற்படும். அந்த நிலையில் கடுமையான வலி ஏற்படும்.

சிறுநீர்க் கற்கள் தோன்றக் காரணங்கள்:

*              மிகக் குறைந்த அளவு தண்ணீர் பருகுதல். இதனால் உடலில் நீர்மம் குறைந்த அளவே இருக்கும்.

*             உடற்பயிற்சி அதிக அளவில் செய்தல். இதனால் வியர்வை அதிக அளவில் வேளியேறி நீர்மக் குறைபாடு ஏற்படக் கூடும்.

*              சிறிய அளவில் உடற்பயிற்சியும், கழிவுகள் வியர்வையாக வெளியேறாமல் உடலில் தேக்கமடையும் நிலையை உண்டாக்கும். பின் விளைவாக சிறுநீரகங்களில் இவை தங்கும்.

*              உடல்பருமன் (Obesity)

*             அறுவை மருத்துவத்திற்குப் பின் ஏற்படும் எடைக் குறைவு. கடுமையான நோய்களுக்குச் செய்யப்படும் பெரும் அறுவை மருத்துவத்தில் ஏற்படும் நீர்மக் குறைபாட்டை சரிவரக் கவனித்துச் சீராக்காவிட்டால் சிறுநீர்க் கற்கள் தோன்ற வாய்ப்பாகிவிடும்.

*              அதிக அளவு உப்பு, சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்ளல்.

*             சிறுநீரக, சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று இப்பகுதிகளில் அழற்சியை உண்டாக்கும். அழற்சியின் காரணமாக உண்டாகும் வீக்கம், சிறுநீரகப் பணிகளைப் பாதிக்கும். சிறுநீர் சரியாக வெளியேறாத நிலை ஏற்படும். அதனால், கழிவுக் கரைசல்கள் கற்களாக மாறும் நிலை ஏற்படும்.

*              பாரம்பரிய நோயாகவும் சிலருக்கு வரும் நிலையும் ஏற்படும்.

*              ஃபிரக்டோஸ் மாவுச் சத்து அதிக அளவு உள்ள உணவுகள் சிறுநீரகக் கற்கள் ஏற்படக் காரணமாகக் கூடும். நாம் தினமும் எடுக்கும் சர்க்கரை, பழச்சாறுகளில் இந்த மாவுச் சத்து அதிக அளவில் இருக்கும்.

*              ஏற்கெனவே சிறுநீரகக் கற்கள் வந்து குணமாகி இருந்தால் மீண்டும் வரும் வாய்ப்பு அதிகம்.

*              வயிறு, குடல் நோய்களுக்கு அறுவை மருத்துவம் செய்திருந்தால் சிறுநீரகக் கற்கள் தோன்ற வாய்ப்பு அதிகம்.

*              சிறுநீரக நீர்க்கட்டிகள் (Polycystic Kidney Disease)

*              மூட்டு நோய்கள், குடல் நோய்களின் பின் விளைவாக சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்.

*             கால்சியம் மாத்திரைகள், சிறுநீர்ப் பிரிப்பூக்கி (Diuretics) மருந்துகள் நீண்ட காலம் உண்பதால், சிறுநீர்க் கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

(தொடரும்…)

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் ( மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்) (39)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (39)

அக்டோபர் 1-15,2021

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும்

KIDNEYS & INFECTIONS

மரு.இரா.கவுதமன்

மருத்துவம்:

சிறு நீர்ப் பாதை நோய்த் தொற்றை எளிதில் குணமாக்கலாம். ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போது மருத்துவம் செய்து, நோயை எளிதில் குணமாக்கலாம். நோய்க்கு அடிப்படைக் காரணமான நோய்க் கிருமிகளை அழிப்பதன் மூலம் நோயை எளிதில் குணமாக்கலாம். கிருமிக் கொல்லிகள் (Anti-biotics) மூலம், நோய்க் கிருமிகளை அழித்தால் நோய் எளிதில் குணமாகும். பொதுவாக, நைட்ரோப்யூரன்டைன், சல்பா, அமாக்ஸிசிலின், செஃபலோஸ்போரின் பாக்டிரிம், டாக்ஸிசைக்ளின், சிப்ரோப்ளாக்ஸின் போன்ற மருந்துகள் நோயை எளிதில் கட்டுப் படுத்துபவை. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒரு மருந்தையோ அல்லது கூட்டாக இரு மருந்துகளோ மருத்துவர் அறிவுரைப்படி உண்ண வேண்டும். அறிகுறிகள் நின்ற உடன், குணமாகி விட்டதாகக் கருதி, மருந்துகள் உண்பதை நிறுத்தி விடக் கூடாது. மருந்துகளை முழுப் பருவமும் முடிய உண்ண வேண்டும். மருத்துவர் அறிவுறுத்திய காலம் முடிய மருந்துகளை தவறாமல் உண்ண வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்படும் நிலை இருக்கும். பொதுவாக ஆண்களில் சிலருக்கு, நோய்த் தொற்று இரண்டாம் முறையும் ஏற்படும். ஆனால், பெண்களுக்கு அய்ந்து பேரில் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் நோய்த் தொற்று ஏற்படும் நிலை உண்டாகும். பொதுவாக ஒரே வகை நோய்க் கிருமிகள் (ஈ கோலி _ E.Coli) காரணமானாலும், அடுத்தடுத்து வரும் நோய்த் தொற்றுக்கு வேறு நோய்க் கிருமிகளும் காரணமாகக் கூடும். சில நேரங்களில் சில வகை நோய்க் கிருமிகள் இரத்தத்தோடு கலந்து, அதிக அளவில் பெருகி, மீண்டும் சிறுநீர்ப் பாதையைத் தாக்கும். சில வகைக் கிருமிகள் வழக்கமான மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை. பொதுவாக ஒருவருக்கு ஆண்டுக்கு மூன்று முறையும், அதற்கு மேலும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்பட்டால், நோயாளியை தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வகை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சற்று நீண்ட நாள்கள் கிருமிக் கொல்லி மருந்துகளை (Anti-biotics) உண்ணச் சொல்வர். உடலுறவு முடிந்தவுடன் ஒரு நேரம் உயிர்க்கொல்லி மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய்த் தொற்றைத் தவிர்க்க உதவும். நோய்த் தொற்றின் அறிகுறிகள் தோன்றும் ஆரம்ப நிலைகளிலேயே, ஓரிரு நாள்கள் கிருமிக்கொல்லி மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோய் மேலும் வலுவடையாமல் தடுக்கும். சிறுநீர் ஆய்வுகள்  நோய்த் தொற்றை அறிய உதவும்.

நோய்த் தொற்றைத் தவிர்க்கும் வழிகள்:

¨           சிறுநீர்க் கழிக்கும் உணர்வு தோன்றியவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும்.

¨           ஒவ்வொரு முறையும், சிறுநீர்ப்பையில் இருக்கும் சிறுநீர் முழுமையாக வெளியேறும் வரை பொறுமையாக சிறுநீரை வெளியேற்ற வேண்டும்.

¨           சிறுநீர் கழிப்பதை அடக்கி வைக்கும் நிலையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

¨           அதிகம் தண்ணீர் பருக வேண்டும்.

¨           அதிக வீரியமற்ற சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

¨           உடலுறவுக்கு முன், பிறப்புறுப்புகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

¨           உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழிப்பது நலம். அதனால் சிறுநீர்ப் பாதையில் ஏதேனும் கிருமித் தொற்று இருந்தாலும் அவை சுத்தமாக்கப்பட்டுவிடும்.

¨           கருத்தடைச் சாதனங்கள், ஆணுறைகள் போன்றவை கூட ஒவ்வொரு வகையில் நோய்த் தொற்றை உண்டாக்கக் கூடும். அதை மாற்றி வேறு வகைக் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம். மருத்துவரின் அறிவுரையைக் கேட்கலாம்.

¨           உள்ளாடைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

¨           பருத்தி உள்ளாடைகள் பயன்படுத்த ஏற்றவை. இறுக்கமான உள்ளாடைகள் அணியக் கூடாது.

¨           இறுக்கமான ஆடைகள் நோய்த் தொற்றை எளிதில் உண்டாக்கும்.

¨           நோயின் அறிகுறிகள் தெரியும் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் அறிவுரை பெற வேண்டும்.

¨           அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்றைத் தவிர்க்க, சிறிது காலம் தொடர் மருத்துவம் தேவை. மருத்துவர் அறிவுரை பெறுவது கட்டாயத் தேவை.

¨           தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக் கூடாது.

சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று – சிக்கல்கள்(Complications)

சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றை மருந்துகளால் எளிதில் குணமாக்கலாம். சீரான மருத்துவம் செய்யப்படாத நோய்த் தொற்றே பல சிக்கல்களை உண்டாக்கும். இச்சிக்கல்கள் நாளடைவில் ஆபத்தான அறிகுறிகளை உண்டாக்கும்.

சிறுநீரக நோய்த் தொற்று (Kidney Infection – Pyelonephritis): 

நோய் சீராக மருத்துவம் செய்யப்படாத நிலையில் நோய்க் கிருமிகள், சிறுநீர்ப்பையையும் தாக்கி அழற்சியை (Cystitis) ஏற்படுத்தும். பின் அங்கிருந்து சிறுநீர்க் குழாய்கள் (Ureters) வழியே சிறுநீரகங்களுக்குப் பரவும் நிலையேற்படும். சிறு நீரகங்களில் உள்ள வடிப்பான்களில் அழற்சி (Nephritis) யை உண்டாக்கும். வடிப்பான்களில் அழற்சி பெருகி, வடிநீர்க் குழாய் முடிச்சுகள் அழற்சி (Glomarular Nephritis) யாக மாறிவிடும். முடிவில் சிறுநீரகம் முழுவதும் அழற்சியாக (Pyelonephritis) என்ற நிலை ஏற்பட்டு விடும்.

நோய்க்கிருமிப் பரவல் (Sepsis): 

சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டு முற்றிய நிலையில் அங்கிருக்கும் தந்துகிகள் மூலம், கிருமிகள் இரத்தத்தோடு கலந்து உடல் முழுவதும் பரவிவிடும். கிருமிகள் நச்சும் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவும் (Septicemia). இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure): 

பெரியவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று, சிறுநீரகத்தில் காயங்களை ஏற்படுத்தும். அது வடிப்பான்களில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தி விடும். வடிப்பான்கள் பாதிப்பால், சிறுநீர் வடிப்பது நின்றுவிடும். சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்துவிடும்.

கருவுறுதலும், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றும் (Pregnancy & Urinary Tract Infection): 

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று கருவுற்ற தாய்மார்களையும், கருப்பையில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றால் கருவுற்றவருக்கு மிகு இரத்த அழுத்தம் (High Blood Pressure) ஏற்படும். அதனால் குறைமாதப் பிறப்பு (Premature delivery), பேறுகால வலிப்பு (Eclampsia) போன்ற சிக்கல்கள் ஏற்படும் நிலை ஏற்படும்.

இந்நோயை முறையான மருத்துவம் மூலம் எளிதில் குணமாக்கலாம். ஆரம்ப நிலையில் மருத்துவம் மூலம் நோயை முழுமையாகச் சீராக்க முடியும்.                 (தொடரும்)