ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

சிறுநீரகத்தை காக்க நாம் அறிய வேண்டியவை!


மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப் பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.
இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது.
வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.
மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளி யேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.
உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப் பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.
அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.
நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர்க்குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.
சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.
சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது.
சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள்,
பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப் போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சி யில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தைக் காக்க:
* உடல் பருமன் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.
* அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள் வதை தவிர்க்க வேண்டும்.
* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.
* தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.
* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை,
இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.
-விடுதலை,16.3.15

சனி, 15 ஆகஸ்ட், 2015

மாட்டுக்கறியை மறுக்கலாமா?

மாட்டுக்கறியில் உள்ள சில வகை கொழுப்புகளுக்கு கேன்சர் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. மாடு மற்றும் ஆட்டுக் கொழுப்பில் லினோலிக், பால்மி டோலிக் ஆசிடுகள் உள்ளன. கேன்சர் எதிர்ப்பு மிகுந்த இந்த ஆசிடுகள் வைரஸ் உள்ளிட்ட கிருமி எதிர்ப்பு சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது.
மாட்டுக்கறியில் அனைத்து வித மான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந் துள்ளன. அதிக அளவு சத்துக்களைக் கொடுத்தாலும் குறைந்த அளவு கலோரிகள்தான் அளிக்கிறது.
85 கிராம் மாட்டுக்கறியில் 179 கலோரி கள் தான் உள்ளன. ஆனால் 85 கிராம் மாட்டுக்கறியில் உடலுக்கு தேவையான பத்து சதவீதத்திற்கு மேலான உயிர்ச் சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் எடையை குறைக்கப் பயன் படுகிறது.
புரதம், ஸின்க், மெக்னீசியம், பாஸ் பரஸ், காப்பர், கோபால்ட், க்ரோமியம், நிக்கல், செலனியம், இரும்பு, வைட்டமின் டி, வைட்டமின்_இ, மற்றும் பி_-காம்ப் ளக்ஸ் வைட்டமின் கள் மாட்டிறைச் சியில் மிகுந்துள்ளன.
நமது தசைகள், பற்கள், எலும்புகள் வலுவாகின்றன. உடலின் செல்களுக்கு பிராண வாயுவையும், சக்தியையும் அளிக்கின்றன. பி வைட்டமின்களான தையமின், ரைபோப்ஃலேவின், பேன் டோனிக் ஆசிடு, ஃபோலேட், நியாசின் மற்றும் வைட்டமின் பி_6 ஆகிய சத்துக்களும் சிவப்பு இறைச்சிகளில் மிகுந்துள்ளன. வளரும் சிறுவர், சிறுமி யர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி.
கொழுப்பற்ற மாட்டுக்கறியை சாப்பிட்டு வந்தால் இதயக் கோளாறு கள் நீங்கும், இதயம் வலிமை பெறும். ஆங்கிலத்தில் இதனை லீன் பீப் (Lean Beef) என்பார்கள். இதனை 2012இல் அமெரிக்க ஜர்னல் சத்துணவு ஆய்வு மய்யத்தின் (American Journal Clinical Nutrition) ஆய்வறிக்கையில் ஆதாரங்களு டன் நிறுவியுள்ளனர்.
கொழுப்பற்ற மாட்டுக்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட் டுப்படுத்தும். மாட்டுக் கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாதிக் கும் மேற்பட்ட மாட்டுக்கொழுப்புகளில் இதயத்திற்கு தேவையான ஓலிக் ஆசிடுகள் நிரம்பி யுள்ளன.
இதயத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் மாட்டுக்கறி யில் கிடைப்பது போல வேறெந்த உணவிலும் இல்லை. முட்டை அல்லது மீன்களில் இருக்கும் கொழுப்பை அகற்ற முடியாது. ஆனால் மாட்டிறைச்சியில் எளிதாக கொழுப்பை அறுத்து நீக்கலாம். இதை தான் லீன் பீப் (Lean Beef) என்பார்கள்.
(LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால். இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடை படச் செய்கிறது. HDL என்பது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இத னுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப் படுகிறது.)
ஒப்பீடு
மாடு மற்றும் ஆட்டில் கிடைக்கும் புரத சத்தினால் தசைகள் வலுவாவது மட்டுமல்ல நமக்கு ஹார்மோன்களும் ஆரோக்கியமாக சுரக்கின்றன.
தானியங்களில் கிடைக்கும் ஸின்க், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சி கொள்கிறது. வசதியற்றவர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி. குறைந்த அளவு சாப் பிட்டு வந்தாலும் சத்து குறைவினை குறைக்கலாம். குழந்தை சத்து குறைவில் முன்னிலையில் இருக்கும் நம் நாட்டிற்கு அவசியமானது மாட்டிறைச்சி.
ஆரோக்கியமான நரம்பு மண்டலத் திற்கும், இரத்தத்திற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது. அதிலும் மாட்டுக்கறியில் வைட்டமின் பி12 37% நிரம்பியுள்ளது. மேலும் மனநோய்களை தவிர்க்கவும், கிழட்டுத் தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைப்பதிற்கும் வைட்டமின் பி12 அவசியம்.
வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சிகளில் நிரம்பியுள்ளது. நவீன உழைப்புச் சுரண்டலில் அழுத்தம் நிறைந்த பணி சூழலில் வேலை செய்யும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கு அவசியமானது பீஃப்.
சிவப்பு இறைச்சிகளில் வைட்டமின் டி மிகுந்துள்ளது. சூரிய ஒளி கிடைக்காத பகுதி மக்களுக்கும் மீன் சாப்பிடாதவர்களுக்கும் மாட்டிறைச்சி வரப்பிரசாதம். பாலில் கிடைக்கும் வைட்டமின் டியை விட மாட்டி றைச்சியில் அதிகம் உள்ளது.
அமெரிக்க விவசாயத்துறை ஆய்வறிக்கை
அமெரிக்க விவசாயத் துறையின் 2002 ஆய்வறிக்கையின்படி, 1.1 கிலோ டுயுனா மீனில் கிடைக்கும் ஸின்க் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. 750 கிராம் கோழியின் தோலற்ற நெஞ் சுக் கறியில் கிடைக்கும் வைட்டமின் பி12 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.
300 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் பி விட்டமினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. மூன்று கட்டு ஸ்பினாச் கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக் கிறது. மாட்டிறைச்சியில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளது.
450 கிராம் டுயுனா மீனில் கிடைக்கும் பி விட்ட மினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. ஆறரை கட்டு ஸ்பினாச் கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டி றைச்சியில் கிடைக்கிறது. தாவரங்களில் கிடைக்கும் இரும்புச் சத்தை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் ஹெம் இரும்புச் சத்தை மனிதனின் உடல் எளிதாக உறிஞ்சிக் கொள்கிறது.
குறைந்த அளவு சாப்பிட்டாலும் போதும். இரும்பு சத்து குறைவான வர்கள் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும். குறிப்பாக குழந்தை பெற்று கொள்ள இருப்பவர்களும், கர்ப்பிணிகளும் எடுத்து கொள்ள வேண்டியது மாட்டிறைச்சி. கர்ப்ப காலத்தில் தான் குழந்தையின் மூளை வளர்ச்சி அடையும் பருவம். குழந்தை யின் மூளை வளர்ச்சிக்கு இரும்பு சத்து மிகவும் அவசியானது. தாய்மார்களும், இளம் கணவன்மார்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-விடுதலை ஞா.ம,1.8.15

மதுவினால் ஏற்படும் தீமைகள்


வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன?
இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.
''ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும்.
எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை. அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள்.
கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும்.
'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும் என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.
குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை, டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார். ''ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் குடிநோய் வரலாம்.
குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்து கொள்வது,
மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை,
மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம்,
மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.
-விடுதலை,10.8.15

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கொழுப்பைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

உலகளவில் சர்க்கரை நோய் பாதிப்பை அடுத்து கொலஸ்டிரால் எனும் கொழுப்பு நோய் பாதிப்பு அதிகம் காணப்படுவது இந்தியாவில் தான். சர்க்கரை நோய் வந்து விட்டாலே அதன் உடன்பிறப்புகளான ரத்த அழுத்தம் (பிரஷர்), கொழுப்பு (கொலஸ்டிரால்) போன்றவையும் பின் தொடர்ந்து வருகின்றன. இதனை கவனிக்காமல் விட்டால் இதயம், மூளை முதல் உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்.
தற்போதைய நமது உணவுபழக்கம், மது மற்றும் புகை, உடற்பயிற்சி இன்மை போன்றவை இந்நோய்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. கொலஸ்டிரால் பற்றியும் அதனை கட்டுப்படுத்துவது பற்றியும் மைலாடியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பிரசில்லாசரோன் கூறியதாவது:
கொழுப்பு என்றால் என்ன?
கொழுப்பு என்பது ரத்த நாளங்களில் படிந்து அதன் சுற்றளவை குறைத்து அடைப்பு ஏற்படுத்தி இறுதியில் இதயத்தின் செயலுக்கு ஊறு விளைவிக்கும் துகள்கள் ஆகும். நம் உணவு பழக்கத்தின் வேதியியல் மாற்றத்தில் நிகழும் இதனை நமது ஈரல் 75 சதவீதம் உற்பத்தி செய்கிறது. 25 சதவீதம் உணவின் மூலம் சாதாரணமாக பெறுகின்ற நல்லது உடலுக்கு தேவையாகவும், எஞ்சிய நிலையில் இதன் துகள்கள் உடல் முழுவதும் உள்ள செயல்பாடுகளுக்கு கேடும் விளைவிக்கிறது.
அறிகுறி: கொழுப்பு அதிகமாக உடலில் தங்கும்போது உடனடியாக வெளிக்காட்டாது. ஆனால், உடலில் ஆழமான உறுப்புகளில் இதன் தாக்கம் இருக்கும். அதிகமாக படிவதால் சுத்த ரத்த தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தும் நிலையை அத்ரோஸ் கிளோரிஸ் என்கிறோம். இது இதய நோய்க் குரிய அச்சுறுத்தும் அறிகுறி.
ரத்த பரிசோதனை: கொழுப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய ரத்த பரிசோதனைகள் அவசியம். 20 வயதிற்கு மேல் 4 முதல் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரத்தத்தில் கொழுப்பு அளவை பரிசோதிப்பது நல்லது. காலையில் உணவு அருந்தும் முன்பு லிப்போ புரோட்டின் புரோபைல் எனும் சோதனையை செய்ய வேண்டும். இதன்மூலம் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் டிரைக்கிளிஸ்  அளவுகளை கணக்கிட முடியும்.
கெட்ட கொழுப்பு என்றால் என்ன?
எல்.டி.எல். எனும் (லோடென்சிட்டி லிப்போபுரோட்டின்ஸ்) கெட்ட கொழுப்பு ரத்தத்தில் பயணித்து மற்ற புரதங்களுடன் சேர்ந்து தமனிகளை அடைக்கும். உணவில் உள்ள பூரணகொழுப்பு இதற்கு மூல காரணம். கெட்ட கொழுப்பு 100 க்கு குறைவாக இருந்தால் ஆரோக்கியம் .100-120 வரை இருந்தால் ஆரோக்கியத்தின் அருகில் இருக்கிறோம். 130-159 வரம்பு அல்லது நடுநிலை. 160-189 இருந்தால் அதிகம். 190-க்கு மேல் இருந்தால் மிக அதிகம்.
நல்ல கொழுப்பு என்றால் என்ன?
நல்ல கொழுப்பு எச்.டி.எல் (அய்டென் சிட்டி லிப்போ புரோட்டின்) எனப்படும். ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பு படிவங்களை தடுக்கிறது. இதன் அளவு அதிகமாக இருப்பது நல்லது. இதன் அளவு குறையும் போது இதய நோய்க்கு வழி வகுக்கும். ஆலிவ் எண்ணை இதனை அதிகரிக்க செய்கிறது. நல்ல கொழுப்பு 60-க்கு மேல் இருந்தால் ஆரோக்கியம். 40-க்கு கீழ் ஆண்களுக்கு இருக்கக்கூடாது. 50-க்கு கீழ் பெண்களுக்கு இருக்கக்கூடாது.
டிரை கிளிசரீஸ்: உடலில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஆல்கஹால் டிரை கிளிசரீனாக மாற்றப்பட்டு கொழுப்பு வடிவில் உடலில் சேர்கிறது. பெரும்பாலும் மதுபானம் அருந்துவோர் புகைப் பிடிப்பவர்களுக்கு, அதிக எடை உடையவர்களுக்கு இது அதிகம் உள்ளது. இதன் அளவு 150-க்கு அதிகமாக இருந்தால் உடலில் செயல்பாடுகள் பாதிப்பால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வரும்.
டோட்டல் கொலஸ்டிரால்: எல்.டி.எல்., எச்.டி.எல்., வி.எல்.டி.எல் சேர்ந்த நிலையை டோட்டல் கொலஸ்டிரால் எனச் சொல்கிறோம். இதன் அளவு 200-க்கு குறைவாக இருப்பது நல்லது. 200-க்கு மேல் இருந்தால் இதயநோய் வரும். உணவும் , ஈஸ்ட்ரோஜனும் பால், முட்டை, இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகம் உள்ளவை. தினசரி மனிதனுக்கு 300 கிராம் கொழுப்பு போதும்.
ஒரு முட்டையில் 186 கிராம் கொழுப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அடர் கொழுப்பு, பரம்பரையாக கொழுப்பு நோய் இருந்தாலும், அதிக உடல் எடை உடையவர்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
அதிக கொழுப்பின் விளைவுகள் பக்கவாதம், இதயநோய், கோரோநெரி ஆர்டரி நோய் வரும். சீராக ரத்தம் இதயம் மற்றும் மூளைக்கு போகாத பட்சத்தில் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும்.
கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள்: கரையும் தன்மையுள்ள நார்ச்சத்து உணவுகள் கெட்ட கொழுப்பை குறைக்கும். தானிய வகைகள், ஓட்ஸ், பழங்கள், காய்ந்த கனிகள் (உலர் பழங்கள்) காய்கறிகள், ஓமோகா 3 போன்றவற்றில் கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
நல்ல கொழுப்பை அதிகரிக்க: நல்ல மூச்சு பயிற்சி மூலம் 5 சதவீதம் நல்ல கொழுப்பை பெற முடியும். முறையான உடற்பயிற்சியான நீச்சல், நடை, ஓட்டம் 30 நிமிடங்கள் செய்வதாலும் கெட்ட கொலஸ்டிரால் குறையும்.
துணை உணவுகள்: ஆளி விதை, மீன் எண்ணெய், வெந்தயம், பிகாம்ப்ளக்ஸ் விட்டமின், கடுக்காய், ஓட்ஸ் போன்றவற்றை உணவுடன் உட்கொள்ள வேண்டும். ரெட் ஒயின், கிரீன் டீ, பீன்ஸ், பூண்டு, ஆலிவ் எண்ணெய் போன்றவையும் உட்கொள்ளலாம். மல்லி தூளை கொதிக்க வைத்த நீர், அல்லது 2 சுட்ட வெள்ளை பூண்டு, காட்டு நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், தேன், மீன் எண்ணெய், சம்பா அரிசி, ஆலிவ் எண்ணெய். பீன்ஸ், ஆப்பிள் சீடர் வினிகர் 2 கரண்டி கலந்து சாப்பிடலாம்.
வீட்டு வைத்தியம்: வெள்ளை பூண்டு, மஞ்சள், இஞ்சி, வால் மிளகு, நல்ல மிளகு கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மருதம் பட்டை, வெங்காயம் கெட்ட கொழுப்பை மாற்றி நல்ல கொழுப்பிற்கு உதவுகிறது.
-விடுதலை,3.8.15