எலும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

எலும்பு புரையும் முறிவும்

முதுமையில் மூட்டின் மேல் வன்மம் கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமானது மூட்டுத் தேய்மானம் என்றால், மொத்த எலும்பு கூட்டத்தின் மேல் தாக்குதல் தொடுப்பது எலும்பு வலுவிழப்பு என்னும் எலும்பு புரை நோய்.

ஓசைப்படாமல் பல எலும்பு முறிவுகளுக்கு இது காரண மாக இருப்பது, நம்மில் பலருக்குத் தெரியாது. அதனால் மூட்டுகள் வலுவிழப்பதற்கான காரணங்களை அறிந்து கொள்வது, முதுமையைச் சுகப்படுத்த உதவும்.

உலக ஆஸ்டியோபோரோசிஸ்  அமைப் பின் கூற்றின்படி, இன்று உலக அளவில் எலும்பு வலிமை இழப்பால் ஒவ்வொரு மூன்று விநாடிகளுக்கு ஒருவர் எலும்பு முறிவால் பாதிக்கப்படுகிறார். அதாவது அய்ம்பது வயதைத் தாண்டியவர்களில் மூன்றில் ஒரு பெண்ணும் அய்ந்தில் ஒரு ஆணும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வைத்து, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

எப்படி வருகிறது?


பல்வேறு காரணங்களால் எலும்புகளின் தாது அடர்த்தி குறைவதாலும், அதன் நுண்ணிய கட்டமைப்பு தகர்க்கப்படுவதாலும் இது வருகிறது. அதாவது வரவுக்கு மீறிச் செலவு செய்யும்போது எப்படிப் பொருளா தாரச் சமநிலை குலைகிறதோ, அதைப் போல் எலும்புகளின் உருவாக்கத்துக்கும் தேய் மானத்துக்கும் முதுமையில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.

யாரெல்லாம் கவனமாக


இருக்க வேண்டும்?


# பெண்கள், குறிப்பாக மாதவிலக்கு சுழற்சி நின்ற பிறகு

# அறுபது வயதைத் தாண்டியவர்கள்

# உணவில் போதுமான ஊட்டச் சத்தைச் சேர்த்துக்கொள்ளாமல் வெறும் சோறு, இட்லி, தோசை என்றே வாழ்பவர்கள். நவீன உணவுக் காதலர்களான ஃபாஸ்ட் ஃபுட், பேக்கரி உணவு, காபி, டீ, நொறுக்குத் தீனிகளில் தங்களைத் தொலைப்பவர்கள்

# அசைவ உணவில் அதிக ஆர்வம் உடையவர்கள். இதில் உள்ள அதிக அளவு புரதம் ஆபத்து

# குடும்ப மரபில் ஏற்கெனவே யாராவது இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந் தால்

# உடற்பயிற்சி செய்யச் சொன்னால் பல கோணத்தில் முகத்தைச் சுளிப்பவர்கள்

# புகையையும் மதுவையும் கூட்டணி தர்மமாக வைத்திருப்பவர்கள்

# நாட்பட்ட நோய்களுக்குத் தொடர் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்

# குறைந்து போகும் ஹார்மோன்கள். குறிப்பாக, பெண்களுக்கு அடிப்படையான ஈஸ்ட்ரோஜன், ஆண்களுக்கு அடிப்படை யான டெஸ்டோஸ்டீரோன்.

# தைராய்டு சுரப்பு குறைபாட்டுக்காகத் தேவையான அளவைவிடக் கூடுதல் மருந்து களை எடுத்துக்கொள்பவர்கள் (தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள், நாளமில்லா சுரப்பு நிபுணர்களின் கண்காணிப்பில் இருப்பது உத்தமம்)

# பாரா தைராய்டு, அட்ரீனல் சுரப்புக் களின் அதீதச் செயற்பாடு

# வயதுக்குப் பொருத்தமில்லாத அதிக உடல் எடையும் குறைந்த உடல் எடையும் ஆபத்துதான்.

# உணவில் போதுமான அளவு கால்சியம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் (சராசரியாக நாள்தோறும் 1,000 மி.கி. அளவு கால்சியம் உடலில் சேர வேண்டும். அதுவே 50 வயதை தாண்டிய பெண்களும் 65 வயதை தாண்டிய ஆண்களும் 1,200 மி.கி. அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்)

பொதுவான அறிகுறிகள்


எலும்பு முறிவு ஏற்படும்வரை பொதுவாக எந்த அறிகுறியும் தெரிவதில்லை.

# இடுப்புவலி இருந்துகொண்டே இருக் கும். இது தண்டுவட எலும்புகள் விரிசல் அடைவதால் அல்லது தண்டுவட எலும்பு களின் வடிவைப்பு சீர்குலைவதால் ஏற்பட லாம்

# சராசரியான உயரம் குறைந்து போகலாம்

# முதுகுத் தண்டுவடம் வளைந்து கூன் விழலாம்

# சிறு சறுக்கலுக்கும் எலும்பு உடையலாம்

# அதிகம் பாதிக்கப்படும் எலும்புகள் இடுப்பு, தண்டுவட, கணுக்கால், மணிக்கட்டு எலும்புகள்

# பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் முதல் அறிகுறி மணிக்கட்டில் ஏற்படும் எலும்பு முறிவு.

-  விடுதலை நாளேடு, 12.8.19

உணவால் எலும்பைப் பலப்படுத்தலாம்



எலும்பு பலவீனம் அடைவதைத் தொடக்க நிலையிலேயே கண்டறி யலாம். இதற்காக உலக ஆஸ்டி யோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தயாரித்துள்ளது. அதற்கு '    ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் நமக்கு எலும்பு வலுவிழப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்:

# உங்கள் பெற்றோருக்குச் சற்றே தடுக்கி விழுந்தாலோ லேசான அடி பட்டோ இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா?

# கீழே விழுந்தோ லேசாக அடி பட்டோ உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா?

# உங்களுடைய மாதவிடாய் 45 வயதுக்கு முன்பே நின்றுவிட்டதா?

# உங்களுடைய உயரம் மூன்று செ.மீ.க்கு மேல் குறைந்துள்ளதா?


# அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவரா?

# தினமும் 10 சிகரெட்டுக்கு மேல் பிடிக்கும் பழக்கம் உடையவரா?

(இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்று பதில் அளித்திருந்தால், உங்களுக்கு எலும்பு வலுவிழக்க சாத்தியம் அதிகம். தகுதி வாய்ந்த மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்)

எலும்பு வலுவிழப்பை


எவ்வாறு தடுக்கலாம்?


# தேவையான அளவு கால்சியம், வைட்டமின் 'டி' அடங்கியுள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம்

# வாழ்நாள் முழுவதும் தசைகளை உறுதியுடன் வைத்திருக்கும், எடை தாங்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு 30 முதல் 45 நிமிடம் அது இருக்க வேண்டும்.

# நடைப் பயிற்சி அவசியம், நீச்சல் பயிற்சி சிறந்தது

# புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டையும் மது அருந்து வதையும் தவிர்க்க வேண்டும்.

# முழுக் கவனத்துடன் வாழ்க்கை முறையை நெறிப்படுத்த வேண்டும்.

கவனிக்க வேண்டியவை


கோதுமை உணவு, கீரைகள், சில பீன்ஸ் வகைகளை உண்ணும்போது பால் பொருட்களைத் தவிர்க்க வேண் டும். ஏனென்றால், இவற்றில் இருக்கும் ஃபைட்டேட் , ஆக்ஸ்லேட்  பாலில் உள்ள கால்சியம் சத்தை இரைப்பை உறிஞ்ச முடியாமல் தடுக்கின்றன.

மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சை: மருத்துவரின் ஆலோசனை அடிப் படையில் மட்டுமே கால்சியம், வைட்ட மின் டி' எடுத்துக்கொள்ளலாம் (விளம் பர மோகத்தில் அறிவை இழந்துவிடக் கூடாது). பிரச்சினைக் கேற்ப நல்ல மருந்துகள் உள்ளன. செய்ய வேண்டியது தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகுவது மட்டுமே.

கீழே விழாமல் இருப்பது எப்படி?


# தேவையான பொருட்களை கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

# அடிக்கடி குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளுக்குத் தகுந்த துணைக் கருவிகளைப் பயன்படுத்தலாம். சூடான பொருட்களை அடுப்பிலிருந்து உணவு மேஜைக்கு மாற்ற சிறிய தள்ளு வண்டியைப் பயன்படுத்தலாம்.

வெளியில் நடக்கும்போது....


# குதிகால் உயரம் குறைந்த காலணிகளைப் பயன்படுத்துங்கள்

# மழைக் காலத்தில் வெதுவெதுப்பைத் தரும் காலணிகளை அணியுங்கள்

# படிகளில் ஏறும்போதோ இறங்கும் போதோ கைப்பிடியைப் பயன்படுத் துங்கள்

# நடக்கும்போது அக்கம் பக்கம் பராக்கு பார்க்காமல், தரையைப் பார்த்து கவனமாக நடக்க வேண்டும்

# வெளிச்சமான இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும்.

# கைப்பையில் பொருட்களை எடுத்து போவதைத் தவிர்த்து, தோளில் மாட்டும் பையைப் பயன்படுத்துவது நல்லது.

# தேவைப்படும் நிலையில் கைத் தடியை வெட்கமின்றிப் பயன்படுத் தலாம்.

எலும்பு வலுவிழப்பு தொடர்பான மூடநம்பிக்கைகள் தேவையற்றவை. ஏனென்றால்,

# எலும்பு வலுவிழப்பு நோய் வராமல் தடுக்க முடியும்

# வந்தபின் குணப்படுத்த முடியும்

# சரியான உடற்பயிற்சியும் உணவுத் திட்டமும் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்ள உதவும்

# இளமையிலேயே வாழ்க்கை முறையை நெறிப்படுத்துங்கள்

# சுயமருந்து வேண்டவே வேண்டாம்

தவிர்க்க வேண்டியவை


# அதிக உப்பு  சிப்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வரும் வறுத்த தின்பண்டங்கள் போன்றவற்றை. இவை உடலில் உள்ள கால்சியம் சத்தைக் குறைத்து எலும்புத் தேய்மானத்தை அதிகரிக்கும்.

# அதிகமான ஊறுகாயும் உப்பும் மிகவும் தவறு.

 

 

 

 

மருத்துவ குறிப்புகள்

மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் தீர வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றை அரைத்து சாப்பிட வேண்டும்.

கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.

 - விடுதலை நாளேடு, 12 .8. 19

செவ்வாய், 23 அக்டோபர், 2018

‘எலும்பு வலுவிழப்பு நோய்’



உடலுக்குள் ஒவ்வோர் எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக, இந்த வேகம் குறையும். பொதுவாக, 35 வயதுக்குப் பிறகு புதிய செல்கள் உருவாவது தாமதமாகும்.

பழைய செல்கள் இறந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகலாம். அப் போது எலும்பின் இயல்பான அடர்த்தி முதலில் குறையும். இந்த நிலைமைக்கு எலும்புத் திண்மக் குறைவு நோய்  என்று பெயர். 50 வயதுக்கு மேல், எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். அப்போது நம்மால் தொடர்ந்து நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும்.

நாளடைவில் அந்த எலும்பில் முறிவு ஏற்படவும் அதிக சாத்தியம் உண்டு. இதைத் தான் எலும்பு வலுவிழப்பு நோய் என்கிறோம். எளிதாகப் புரிந்துகொள்வதற்கு இப்படிச் சொல்லலாம்: இது எலும்புகள் பலவீனம் அடையும் நோய்!

ஏற்படக் காரணம்

குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணி செய்வது, வெயில் நுழைய முடியாத அடுக்கு மாடி வீடுகளில் குடியிருப்பது, உடலுழைப்பு குறைந்து போவது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்று வதால் புரதம், ஊட்டச்சத்துக் குறைந்துவிடுவது போன்ற தற்போதைய வாழ்க்கை முறையால் இந்த நோயின் தாக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர் களுக்கு கால்சியம் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்.

இந்த இரண்டும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் எலும்பு வலுவிழப்பு நோய் வருவதுண்டு. அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீதச் செயல்பாடு காரணமாகவும் இது ஏற்படு வதுண்டு.

இயல்பாகவே முதுமையில், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவ தாலும், பெண்களுக்கு மாதவிலக்கு நின்று ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைந்து விடுவதாலும், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை, போதைப் பழக்கம் போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகிறது. பரம்பரை ரீதியாகவும் இது வருகிறது.

யாருக்கு  வாய்ப்பு அதிகம்?

மாதவிலக்கு நின்றுபோன பெண்களுக்கு, வெயில் படாத வேலை செய்கிறவர்களுக்கு, முதியோருக்கு, மது அருந்து பவர்களுக்கு, புகைபிடிப்போருக்கு, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு, மூட்டுத் தேய்மானம் உள்ளவர்களுக்கு, நாட்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வரும் சாத்தியம் அதிகம். பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. சிலருக்கு மட்டும் கீழ்முதுகிலும் கழுத்திலும் தொடர்ந்து வலி இருக்கும். அந்த இடங்களைத் தொட்டால் வலி கூடும். பலருக்கு பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோய் இருப்பது தெரியவரும்.

கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதும், லேசாக அடிபட்டால்கூட பலத்த எலும்பு முறிவு ஏற்படுவதும்தான் இந்த நோயின் கொடுமை. பொதுவாக, இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவை இந்த நோயின்போது எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும் இடங்கள்.

எப்படி கண்டறிவது?

தைராய்டு பரிசோதனை, கால்சியம் மற்றும் வைட்டமின் டி அளவீடு போன்ற பல பரிசோத னைகள் உள்ளன. என்றாலும், டெக்சா ஸ்கேன்   பரிசோதனைதான் முக்கியமானது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 வருடங்களுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். தேவைப்படுபவர்களுக்குச் சிகிச்சை வழங்க முடியும்.

என்ன சிகிச்சை?

இந்த நோய் ஏற்பட்ட பின்பு வலு இழந்த எலும்பை மீண்டும் வலுப் பெறச்செய்ய முடியாது. கால்சியம் மற்றும் வைட்டமின் டி மிகுந்த உணவுகளைச் சாப்பிடுதல் அல்லது மாத்திரைகள் சாப்பிடுதல் மூலம் மற்ற எலும்பு களை வலிமைபெறச் செய்யலாம். இவை தவிர, சமீபத்தில் இந்த நோய்க்கு நவீன மாத்திரை களும் ஊசி மருந்துகளும் வந்துள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம்.

பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் அதிகம். தவிர, கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, முட்டைக் கோஸ், எலுமிச்சை, திராட்சை, கொய்யாப் பழம், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற வற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களை அதிகப்படுத்திக்கொண்டால் உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்து விடும். வைட்டமின் டி குறைபாட்டால் இந்த நோய் வர காரணமாகிறது.

வைட்டமின் டி

தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின் டி இயற்கை யாகவே கிடைப்பதற்கு வழி செய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுப் பொருட்களில் இதைப் பெறலாம். வைட்டமின் டி மாத்திரைகளும் கிடைக் கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றைச் சாப்பிடலாம்.

 - விடுதலை நாளேடு, 22.10.18

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும் உணவு முறைகள்...!




எலும்புகள்தான் உடலின் அசைவுகளைச் சுலபமாக்குகின்றன. சிறு வயது முதல் உடல் உழைப்பு சீராக உள்ளவர்களுக்கு எலும்புத் தேய்மானம் சற்றுக் குறைவாக  இருக்கும். உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கு எலும்புத் தேய்மானம் அதிகமாக ஏற்படும்.

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 முதல் 35 வயது வரை எலும்பு நல்ல வலிமையாக இருக்கும். பிறகு எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்.

பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான  எலும்புக்கு உதவிபுரிகின்றன. தயிர், மோர் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம்.தினமும் காலை மற்றும் மாலை வேளையில்  அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.
மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன. எலும்பு வலிமையாக இருக்க, பேரீச்சம்பழமும் சாப்பிடலாம்.

ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்ட மின் சி நிறைவாக உள்ளன. இதுவும், எலும்புக்கு வலிமை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமை பெறச் செய்கின்றன. அசைவ உணவுகள் உட்கொள்வதாலும் எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

அதிக உடல் எடை எலும்பு மூட்டுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, தேய்மானத்தை விரைவு படுத்தும். உடல் பருமனானவர்கள் எடையைக் குறைப்பதன்  மூலம் முதுகெலும்பு, கால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக் கலாம்.
-  விடுதலை நாளேடு, 23.4.18