திங்கள், 5 செப்டம்பர், 2016

வலிப்பு என்பது நோயல்ல

மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது, வலிப்பு நோய். காக்காய் வலிப்பு என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும்.
இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.  பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிப்பதாலும், வலிப்பு பற்றிய மூடநம்பிக்கைகள் நம் சமூகத்தில் அதிகம் என்பதாலும், இது குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம்.
எது வலிப்பு? எது வலிப்பு நோய்?
வலிப்பு என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.
ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த நிகழ்வுக்குப் பெயர் வலிப்பு. ஒருவருக்கு இரண்டுமுறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய்  இருப்பதாகக் கொள்ள வேண்டும்.
எப்படி ஏற்படுகிறது?
மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல கிளம்புகிறது.
அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் வலிப்பு என்கிறோம். பூமியின் உள் அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப்போல, மூளையில் உண்டாகிற மின் அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.
என்ன காரணம்?
தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை  வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.
முன்னெச்சரிக்கை அறிகுறிகள்!
பொதுவாக வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும். என்றாலும், அது வருவதற்கு சில நிமிடங் களுக்கு முன்னதாக, ஆரா என்று அழைக்கப்படுகிற எச்சரிக்கை மணி அடிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
அவை: திடீர் தலைவலி, உடல் சோர்வு, குழப்பமான மனநிலை, பதட்டம், பயம், வியர்த்தல், காதில் மாயக் குரல் கேட்பது, கண்கள் கூசுவது அல்லது மங்கலான பார்வை, உடலில் மதமதப்பு, நடை தடுமாற்றம்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் வலிப்புப் பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது. அப்படியும் வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் இவ்வாறு செய்யுங்கள்:
அவரை இடது பக்கமாகச் சாய்த்துப்படுக்க வையுங்கள். சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து டை போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள். முகத்தில் கண்ணாடி அணிந்திருந்தால், வாயில் செயற்கைப் பல் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள்.
அவர் கையில் ஏதேனும் பொருள் இருந்தாலும் அகற்றி விடுங்கள். அவர் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி கூர்மையான பொருட்கள் இருந்தால், அவற்றையும் அகற்றி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வலிப்பின்போது பாதிக்கப்பட்டவரின் உடலில் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
மின்விசிறி/கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
பாதிக்கப்பட்டவர் முழுமையாக சுயநினைவுக்கு திரும்பிய பிறகு, வலிப்புக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து கைவசம் இருந்தால்,  உடனே கொடுத்து விடுங்கள். ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்கவேண்டியது அவ சியம்.
அதன்பின் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே சிகிச்சை பெறும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள். வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து தரும் விளைவுகள் உடலில் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என அச்சப்படத் தேவையில்லை. மருந்து / மாத்திரைகளைச் சாப்பிட ஆரம் பித்து, 3 ஆண்டுகள் வரை வலிப்பு வரவில்லை என்றால், மாத்திரைகளைச் சிறிது சிறிதாகக் குறைத்து, பின்னர் முழுவதுமாக நிறுத்திவிடலாம்.  மாத்திரை களை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது.
வலிப்புக்கான சிகிச்சையில் இதுதான் முக்கியம். 2 முதல் 3 சதவிகித நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம்  மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் மைக்ரோ அறுவைச் சிகிச்சை தற்போது உள்ளது. இந்தச்சிகிச்சையை செய்து கொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும்.
பாதுகாப்பது எப்படி?
வலிப்பு நோய்க்குக் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். வலிப்பு நோய்க்கு மருத் துவர் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து, மாத் திரை சாப்பிட வேண்டும். அப்படித் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும்போதும் வலிப்பு வருமானால், அதை மருத்துவரிடம் கூறி, மருந்தின் அளவை அதிகப்படுத்தலாம். அல்லது மருந்தை மாற்றலாம். வலிப்புக்கான மருந்தைத் திடீரென்று ஒருநாளில் நிறுத்திவிடக்கூடாது. மருந்தின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்த வேண்டும்.
வலிப்பு மருந்தை ஒரு வேளைக்குச் சாப் பிட மறந்துவிட்டாலும், அது நினைவுக்கு வந்ததும் உடனே விட்டுப்போன மருந்தைச் சாப்பிட்டுவிட வேண்டும். வேறு ஏதேனும் நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது வலிப்பு நோய்க்குச் சாப்பிடும் மருந்துகளை மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
வலிப்பு வந்தவர்கள் விபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க வேண்டியது முக்கியம். இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, தண்ணீரில் அல்லது தண்ணீருக்கு அடியில் இயங்கும் பணிகளில் ஈடுபடுவது, வாகனம் ஓட்டுவது போன்ற பணிகளைத் தவிர்க்க வேண்டும். வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், குட்டை, ஏரி, கிணறு, அருவி ஆகிய இடங்களில் குளிப்பதற்கும், நீர் நிலை களுக்கு அருகே விளையாடுவதற்கும் அனுமதிக்கக் கூடாது. வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக்கூடாது.
அப்படி அருந்தினால், வலிப்புக்கான மருந்து முழுவதுமாக வேலை செய்யாது. தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால்,  உடனடியாகத் மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விடுதலை நாளேடு,5.9.16

மனித வலுவை கெடுக்கும் 6 காரணிகள்!


ரத்த சோகை: மனித வலுவை கெடுக்கும் முதன்மையான காரணங்களில் ஒன்று ரத்தசோகை. நம் உடலின் செல்களுக்கு ஆக்சிஜனும் ஆற்றலும் செல்வதற்கு ரத்த சிவப்பணுக்கள் முக்கியமான ஊடகமாக இருக்கிறது.
ரத்தசோகையால் ஒருவர் பாதிக்கப்படும்போது இரும்புச்சத்து குறைந்து, ரத்த அணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடுகிறது. இதன் காரணமாகவே ரத்தசோகை ஏற்பட்டவர்கள் சோர்வாக இருக்கிறார்கள். அதிலும், பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினை இது என்பதால் காரணம் தெரியாத சோர்வு கொண்டவர்கள் ரத்தப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சிறுநீரகப் பாதையில் தொற்று: சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தாலோ, அதற்கான சிகிச்சையை சமீபத்தில் எடுத்திருந்தாலோ உடல் சோர்வடையும். அதனால், சிறுநீரகத்தொற்று இருக்கிறதா, ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குறைபாடு முழுவதுமாக நீங்கிவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தைராய்டு பிரச்சினை: நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்றும் அளவான வளர்சிதை மாற்றம் உடலில் சரியாக செயல்பட வேண்டும். தைராய்டு குறைபாடு ஏற்பட்டால் இந்த வளர்சிதை மாற்றம் சரியான கட்டுப்பாட்டில் இருக்காது. எனவே, ஹைப்போதைராய்டு பிரச்சினை இருக்கிறதா என்று நாளமில்லா சுரப்பிகள் மருத்துவரிடம் சோதனை செய்து கொள்ளுங்கள்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல்: இரவில் நன்றாகத் தூங்கி எழுந்தபிறகு காலையில் ஃப்ரெஷ்ஷாக உணர வேண்டும். ஆனால், போதுமான அளவு தூங்கியும் சோர்வாக உணர் கிறீர்களா? அப்படியெனில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் பிரச்னை உங்களுக்கு இருக்கக் கூடும். தூக்கத்தின்போது இந்தக் குறைபாட்டை உங்களால் உணரமுடியாத பட்சத்தில், இரவில் குறட்டை விடுகிறீர்களா என்பதை உங்கள் துணையிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உண்மைதான் என்றால் தூக்கம் தொடர்பான சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு: சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்தில் பலருக்கும் அது தெரிவது இல்லை. அதனால், உடல் சோர்வாகவே இருப்பதாக உணர்ந்தால் அளவுக்கு அதிகமான சர்க்கரையைப் பராமரிக்க முடியாமல் உங்கள் உடல் திணறுகிறது என்று புரிந்து கொள் ளுங்கள். குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தாலோ, பருமன் இருந்தாலோ, நீங்களும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
மன அழுத்தம்: உள்ளம் தான் உடலுக்கு மருத்துவர். மனம் சோர்வடைந்தால் உடல் செயல்படாது என்பது ஊரறிந்த உண்மை.
பசியின்மை, எதிர்மறை எண்ணங்கள், கவலை என மனரீதியாக ஒருவரை முடக்கும் திறன் கொண்டது மன அழுத்தம். எனவே, மன அழுத்தம் இருப்பதாக உணர் கிறவர்கள் மன நல மருத்துவரை சந்தித்துத் தேவையான ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இழந்த எனர்ஜியை மீட்க உதவும்.
விடுதலை நாளேடு,5.9.16

சனி, 3 செப்டம்பர், 2016

கருப்பை புற்றுநோய்க்குத் தடுப்பூசி

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் முக்கியமானது கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இதற்கு, ஹீயூமன் பேப்பிலோமா வைரஸ் என்ற கிருமிதான் காரணம். இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது. இதை, 11 வயதில் இருந்து 26 வயதுக்குள், திருமணத்துக்கு முன் போட்டுக்-கொள்வது நல்லது. முதல் ஊசியைப் போட்டதில் இருந்து, இரண்டு மாதங்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை, இரண்டு அல்லது நன்கு மாதங்கள் இடைவெளியில், மூன்றாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். ஆண் இனப்பெருக்க உறுப்பு வழியாகத்தான் இந்த வைரஸ் பரவுகிறது என்பதால், பாலியல் முதிர்ச்சி பெறும் காலத்திலேயே ஆணுக்கும் இந்த ஊசியைப் போட்டுக்கொள்வது நல்லது.
-உண்மை இதழ், 1-15.7.16