செவ்வாய், 9 மே, 2017

ஓசூர் சிறுவனின் உலகச் சாதனை! திடீர் மாரடைப்பை முன்கூட்டியே அறியும் கருவி!அண்மைக் காலத்தில் பல இளைஞர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள், முதியவர்கள் என்று வயது வேறுபாடு இல்லாமல் திடீர் என்று எந்தவித முன் அபாய அறிகுறிகளும் இன்றி மாரடைப்பு (Massive Heart Attack) மிகவும் அமைதியான மாரடைப்பு (Silent Attack) ஏற்பட்டு எதிர்பாராத வகையில் மின்னல் போல் உயிர் பறிப்பு ஏற்படுகிறது!

மாரடைப்பு பல ரகம். படபடப்பு, மூச்சுத் திணறல், கொட்டும் வியர்வை, நெஞ்சு வலி, நகரும் கை வலி சில அறிகுறிகள்.

எந்த அறிகுறியும் இல்லாமல் தாக்கும் மாரடைப்பும் உண்டு. யாராலும் கண்டுபிடிக்க முடியாது. திடீரென நெஞ்சடைக்கும். சுருண்டு விழுவார்கள், இதயம் நின்றுவிடும், உயிர் பிரிந்துவிடும்.

எந்தச் சோதனையும் செய்யாமல் சைலன்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி தெரிந்துவிட்டது இப்போது. வழிகாட்டி பெரிய விஞ்ஞானியோ, நோபல் விருது பெற்றவரோ இல்லை. நமது ஓசூர் சிறுவன் ஆகாஷ் மனோஜ். பத்தாம் வகுப்பு மாணவன்.

‘‘எங்க தாத்தா ரொம்ப ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு டயபெடிஸ், பிளட் பிரஷர் இருந்தது. ஆனால், ரொம்ப கன்ட்ரோல்ல வச்சிருந்தார். திடீர்னு ஒரு நாள் பேசிட்டு இருந்தப்ப அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போனார். நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுருச்சு. சைலன்ட் ஹார்ட் அட்டாக்னு டாக்டர்கள் சொன்னாங்க.’’

‘‘அது என்னான்னு படிக்க ஆரம்பிச்சேன். பெங்களூர்ல உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இருக்கிற லைப்ரரிக்குப் போய் இதயம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் படிக்க ஆரம்பிச்சேன். வெளிநாட்டுப் பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் அங்கே வரும். எல்லாவற்றையும் படித்தேன். இப்பொழுது எனக்கு 15 வயது. ஆனால், டாக்டர்களுக்கு ஹார்ட்பற்றி வகுப்பு எடுக்கிற அளவுக்குப் பேச முடியும்.

ரத்தத்திலே இருக்கிற FABP3  என்கிற ஒரு புரோட்டீன் அதிகமாகும்போது சைலன்ட் அட்டாக் வருகிறது என்று தெரிந்தது. அது ஒரு நெகடிவ் புரதம். அதனால், பாசிட்டிவ் புரதம் மூலமாக அதை ஈர்க்க முடியும். அதாவது பக்கத்தில் இழுத்து அடையாளம் காண முடியும். மணிக்கட்டு அல்லது காதுக்குப் பின்னால் ஒட்டிக்கொள்கிற மாதிரி சின்ன ஸ்டிக்கர் மாதிரி ஒரு சிலிக்கான் பேட்ஜ் தயாரித்தேன்.

அதை ஒட்டிக்கிட்ட உடனே அதிலே இருந்து பாசிட்டிவ் எலக்ட்ரிக் இம்பல்ஸ் உற்பத்தியாகி, ரத்த நாளங்களில் ஊடுருவும். அங்கே நெகடிவ் புரதம், அதாவது, FABP3 இருந்தா, உடனே பேட்ஜ் அதனை இழுக்கும். அது எந்த அளவு இருக்குன்னு அந்த பேட்ஜ் காட்டிக் கொடுக்கும். அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு சைலன்ட் அட்டாக் வரப் போகிறது என்று அர்த்தம். உடனே, டாக்டரை பார்க்கணும்‘’ என்று விவரிக்கிறான் மனோஜ்.

பிளாஸ்திரி மாதிரி இருக்கும் இந்தக் கருவிக்கு தன் பெயரில் காப்புரிமை கேட்டு மனு கொடுத்திருக்கிறான் ஆகாஷ் மனோஜ்.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் எத்தனைக் கோடி வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து இதன் உற்பத்தி உரிமையை வாங்கத் தயாராக இருக்கும் நிலையில்,

‘‘எனக்குப் பணம் பெரிதல்ல. என் தாத்தா மாதிரி இனிமே யாரும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கக் கூடாது. அதனால், மத்திய அரசு மூலமாக மலிவான விலையில் இதை உற்பத்தி செய்து, எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் அதுதான் என்னுடைய ஆசை’’ என்கிறான்.

பூர்வாங்க சோதனைகள் முடிந்து மனிதர்களிடம் சோதிக்கும் கட்டத்தை மனோஜின் சிலிகான் பேட்ஜ் எட்டியிருக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் இளம் கண்டுபிடிப்பாளர் விருதும், பாராட்டுப் பத்திரமும் அளித்திருக்கிறார். பிளஸ் 2 முடித்ததும் அவன் விரும்பிய கார்டியாலஜி துறையில் சேர்த்துக் கொள்ள டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தயாராக இருக்கிறது.

வாழ்க அந்த மனோஜ்!

வெல்க அவரது மனிதநேயம்!!

(ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து)

 உண்மை இதழ்,1-15.4.17


 


 


ஆரோக்கியம் காக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்!நம் உடல் செல்களால் ஆனது. இரண்டு செல்கள் இணைந்து இணையாக இருக்கும். ஒரு இணையில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். ஒரு எலெக்ட்ரானை இழந்த நிலையில், அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, ஈடுகட்டும். இவ்வாறு பாதிப்பைச் ஈடு செய்யும்  நுண்ணூட்டச் சத்துகளைத்தான் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறோம்.

ஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தடுக்க முடியாது. ஏனெனில், நாம் சுவாசிப்பதாலும், உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தினாலும், நமது நோய் எதிர்ப்புச் சக்தியின் செயல்பாட்டினாலும் இயல்பாகவே ஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அதை ஈடுசெய்ய முடியும். அவ்வாறு ஈடு செய்யாவிட்டால், இளமையில் முதுமை முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளவை: பீட்டாகரோட்டின், லைக்கோபீன், வைட்டமின் ‘ஏ, சி, இ’ இவற்றுடன் துத்தநாகம், செலினியம் போன்ற தாது உப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்கள் அதிகமாக உள்ளன.

பீட்டாகரோட்டின் உள்ள பொருள்கள்:

புரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கேரட், மக்காச்சோளம், மக்காச்சோளம், மாம்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை, பீச், தக்காளி போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘இ’ உள்ள பொருள்கள்:

பப்பாளி, பூசணிக்காய், சூரியகாந்தி விதை, பசலைக்கீரை, அவகேடோ போன்றவற்றில் வைட்டமின் இ உள்ளது.

வைட்டமின் ‘சி’ உள்ள பொருள்கள்:

ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், புரோக்கோலி, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

துத்தநாகம், செலினியம் உள்ள பொருள்கள்:

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், வாதுமை போன்ற நட்ஸ்களில் துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளன.

பூண்டு, வெங்காயம், இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், லவங்கம், பட்டை, சோம்பு, கிராம்பு, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், கிரீன் டீ, சிறுதானியங்கள், திராட்சை, மாதுளை, அன்னாசி போன்றவற்றிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. 

-உண்மை இதழ்,16-31.3.17

திங்கள், 8 மே, 2017

வலிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைவலிப்பு ஏற்பட்டவருக்குக் கையில் சாவி போன்ற ஏதாவது ஓர் இரும்புப் பொருளைக் கொடுத்தால் உடனே வலிப்பு நின்றுவிடும் என்று கூறுகிறார்கள். இப்படிச் சொல்வது சரியா? சரியில்லை. சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர் களுக்குக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று சொல்வதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை.

மூடநம்பிக்கை

இது ஒரு மூட நம்பிக்கை. திரைப்படங்களிலும் தொலைக் காட்சி நாடகங்களிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிப் பதால், இந்த நம்பிக்கை மக்களின் பொதுப்புத்தியில் பதிந்து விட்டது. பொதுவாக, வலிப்பு சில நிமிடங்களுக்குள் தானா கவே நின்றுவிடும். அருகில் உள்ளவர்கள் இரும்புப் பொ ருளை எடுத்துக் கொடுப்பதற்கும் சில நிமிடங்கள் ஆகு மல்லவா? இயற்கையாக உடலில் வலிப்பு நிற்பதற்கும் இவர்கள் இரும்புப் பொருளை வலிப்பு வந்தவருக்குக் கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான். மற்றபடி, வலிப்பு நிற்பதற்கும் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் தொடர்பில்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், வலிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வலிப்பு ஏற்படும் விதம்: மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல் பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம்.

பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, மூளையில் உண்டாகிற மின்அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.

என்ன காரணம்: தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற வையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.

பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக் கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக பொய் வலிப்பு  வருவதும் உண்டு.

குழந்தைகளுக்கு வலிப்பு: குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வரும் சாத்தியம் அதிகம். சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

என்ன செய்ய வேண்டும்: ஒருவருக்கு வலிப்பு வந்து விட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் சாவியைத் தேடி நேரத்தை வீணாக்குவதைவிடக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றலாம்:

# அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள் சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்ற வற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய் யுங்கள்.

# மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.

# அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

# மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள். உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.

# ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம்.

என்ன செய்யக்கூடாது?

# அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.

# வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

# வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக் கூடாது.

# முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு (இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.
-விடுதலை,8.5.17