செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கரோனா (SARS-CoV-2) வைரசு

SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான மருந்தா கியூபா களம் இறக்கியிருக்கும் மருந்துதான் இன்டர்ஃபெரான்-ஆல்பா-டுபி (Interferon Alfa-2B). 

இன்டர்ஃபெர் (interfere) என்னும் குறுக்கீடு செய்வதை குறிக்கும் வகையில்தான் இம்மருந்து இன்டர்ஃபெரான் (interferon) என்று அழைக்கப்படுகிறது.

அது என்னன்னு பாக்குறதுக்கு முன்ன நோயெதிர்ப்பு அமைப்பு (immune system) பத்தி கொஞ்சம் பாக்கலாம்.

நம்மோட உடல்ல இயல்பாகவே நோய் கிருமிகளுக்கு எதிரான இயற்கையான பாதுகாப்பு அமைப்பு இருக்கும். அததான் நாம நோயெதிர்ப்பு அமைப்புனு (immune system) சொல்றோம். இந்த நோயெதிர்ப்பு அமைப்பு மனிதனோட உடம்பை நோய் கிருமிகள்கிட்ட இருந்து பாதுகாக்குது. 

மனிதனோட ஒட்டுமொத்த உடலே ஒரு பாதுகாப்பு அரண்தான் என்றாலும் புரதங்கள் (proteins), உயிரணுக்கள் (cells), நிணநீர் நாளங்கள் (lymph vessels) ஆகிய தனிப்பட்ட அமைப்புகளாலும் ஆனது. 

நம்மோட தோல் மேல்பரப்பு, உமிழ்நீர், கண்ணீர், மூக்குல இருக்குற முடி, சளி, காதுக்குள்ள இருக்குற மெழுகு, சவ்வு, பிறப்புறுப்பு ஈரப்பதம் இது எல்லாமே நோய்க்கிருமிகளுக்கு எதிரான முதல் தடைகள். இது எல்லாமே கிருமிகளை உடலுக்குள்ள போக விடாம தடுக்குது. 

உமிழ்நீர்ல இருக்குற குறிப்பிட்ட நொதி (enzyme), கண்ணீர் திரவம் எல்லாம் நுண்ணுயிர்களோட செல் சுவர்களை அழிக்குது.   

மூக்கு வழியா நுழையும் நோய்க்கிருமிகள் மூச்சுக்குழாயில் உள்ள சளியில சிக்கி, மூக்குல இருக்குற முடிகளால வெளியேற்றப்படுகின்றன.

உணவுக்குழாய் வழியா நுழையுற பெரும்பாலான நோய்க்கிருமிகள் வயித்துல சுரக்குற அமிலத்தால (acid) அழிக்கபடுகின்றன. 

அதுமட்டுமில்லாம நம்மோட உடம்புல உள்ள பல சளி சவ்வுகளும் உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.

இருமல் மற்றும் தும்மலும் கூட நோய்க்கிருமிகளை அகற்ற உதவும். 

இதெல்லாம் நோய் கிருமிகள் தாக்குறத எதிர்கொள்ளுறதுக்கு உடலுக்கு வெளியிலேயே இருக்கக்கூடிய அமைப்புகள் பற்றியானது.

 உடலுக்குள்ளாற தாக்குதல் நடந்தா நம் உடல் எப்படி எதிர்கொள்ளும்?

ஒரு நோய்க்கிருமி உடல் செல்களுக்குள் ஊடுருவியபின் நம் உடல் பல்வேறு கட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுது. அதுல ஒண்ணுதான் இன்டர்ஃபெரான்களை வெளியிடும் நடவடிக்கை. 

இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன?

இன்டர்ஃபெரோன்கள் (interferon) வைரஸ்கள் தாக்கிய செல்களால் வெளியிடப்படும் ஒரு வகை சமிக்சை புரதங்களின் கூட்டாகும். இப்படி வைரஸால் பாதிக்கப்பட்ட நம் உடலின் செல்கள் சமிக்சைகளை வெளியிடுவதால் அதன் அருகில் உள்ள நல்ல செல்கள் விழிப்படைந்து தங்கள் பாதுகாப்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துகின்றன.  

இன்டர்ஃபெரான்களின் வேலை என்ன? 

இதுல இன்டர்ஃபெரான்களோட வேலை என்னனா வைரஸ்களோட செயல்பாட்டுல குறுக்கிட்டு அத பெருகவிடாம தடுக்குறதுதான்.  அப்படி அது குறுக்கீடு (interfere) செய்றதாலதான் அதுக்கு interferon-னு பெயர் வந்தது. 

இன்டர்ஃபெரான்கள் எப்படி குறுக்கீடு செய்கிறது?

ஆராய்வுகளின்படி மூன்று வகையான இன்டர்ஃபெரான்கள் உள்ளன. இதுல வைரஸ்களோ இல்ல பிற கிருமிகளோ நம்மோட உடம்புல ஒரு செல்லை தாக்கினா, அந்த பாதிக்கப்பட்ட செல்கள் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு தான் பாதிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கிறது. அவ்வாறு எச்சரிக்கை சமிக்சையாக அது  இன்டர்ஃபெரான் ஆல்பா (1) மற்றும் இன்டர்ஃபெரான் பீட்டாவை (2) வெளியிட்டு எச்சரிக்கிறது. 
இந்த எச்சரிக்கை சமிக்சையால் தூண்டப்பட்டு இரத்த வெள்ளை அணுக்கள் இன்டர்ஃபெரான்-காமாவை (3) வெளியிடுகிறது. இந்த இன்டர்ஃபெரான்-காமாவானது வைரஸ்கள், சில பாக்டீரியாக்கள், புரோட்டோசோவன்  நோய்த்தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்திக்கு முக்கியமான காரணியாக இருக்கிறது. இது மாக்ரோபாஜ்களை (macrophage) தூண்டுகிறது. 

மாக்ரோபாஜ் என்றால் என்ன?

மேக்ரோபாஜ் அப்படீங்குறது ஒரு பெரிய வெள்ளை இரத்த அணு. இது நம்மோட நோயெதிர்ப்பு மண்டலத்தோட ஒருங்கிணைந்த ஒரு பகுதி.
நுண்ணுயிர் தாக்கிய செல்களை கண்டுபிடித்து அதை “சாப்பிட்டு” அழிப்பது இதனோட வேலை. கிருமி தாக்கிய செல்களை முழுமையாக விழுங்கி, அதனை ஜீரணித்து, அதோடு சேர்த்து கிரிமிகளையும் அழிக்குது. இந்த முறைக்கு பாகோசைட்டோசிஸிஸ்-னு (phagocytosis) பெயர். இப்படியாக நோய் தாக்குதலுக்கு உள்ளான நம் உடல் செல்களை அழித்து, நோய் கிருமிகள் நல்ல செல்களை தாக்காத வண்ணம் பாதுகாக்கிறது. 

இன்டர்ஃபெரானை எப்பொழுது மருந்தாக பயன்படுத்தின தொடங்கினர்?

ஐசாக் மற்றும் இன்டென்மென்  (Isaacs & Lindenmann) ஆகியோரின் ஆராய்ச்சியின் விளைவாக இன்டர்ஃபெரான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இன்டர்ஃபெரான் நேரடியாக வைரசை செயலிழக்க வைக்கிறது என்று நினைத்திருந்தனர். 1957-க்கு பிறகு அவை புரதத்தால் ஆனது என்றும், அது பல உயிரிலியல் செயல்பாடுகளுக்கு காரணமான மரபணுவை தூண்டுகிறது என்றும் கண்டறிந்தனர். அவற்றின் செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே அது பலவிதமான வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது பல காரணங்களுக்காக நிறைவேறவில்லை.

இன்டர்ஃபெரான்களைக் கண்டுபிடித்ததன் மூலம் முதலில் உருவாக்கப்பட்ட உற்சாகத்தின் காரணமாக, பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் குறைந்த அளவிலான இன்டர்ஃபெரான்களை மட்டுமே பிரித்தெடுக்க முடிந்ததாலும், அவையும் சுத்திகரிக்கப்பட்டதாக இல்லாமல் போனதாலும் ஆராய்ச்சிகள் திசு வளர்ப்பு சோதனைகள் அளவிலேயே முடிந்து கொண்டிருந்தன.   

1970-களின் நடுப்பகுதியில் பின்லாந்தை சேர்ந்த கான்டெல் மற்றும் அவரது சக ஊழியர்களின் (Cantell and his coworkers), முயற்சிகளால் இரத்த வெள்ளையணுக்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இன்டர்ஃபெரான்கள் தயாரிக்கப்பட்டது. பின்னர் வைரசுகளுக்கு எதிரான சிகிச்சையில் அது குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை அடைந்தது. நம் உடலில் உருவாகும் கிருமிகளை மற்ற நோயெதிர்ப்பு செல்களுக்கு காட்டிக்கொடுக்கும் சமிக்சையாக, மருந்தாக இன்டர்ஃபெரான் புரதங்களை பயன்படுத்த துவங்கினர்.

இன்டர்ஃபெரான் மருந்துகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

இன்டர்ஃபெரான் மனித உடலில் செலுத்தப்பட்டால் அது வைரஸ்களை சமாளிக்க மனித உடலை தயார்படுத்துகின்றன. நம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வெள்ளையணுக்கள் தூண்டப்பட்டு மேக்ரோபேஜ்கள் நோய் தொற்றுக்கு உள்ளான செல்களை அழிக்க தயாராகிறது. இதனால் வைரஸ்கள் நம் உடலில் பெருகி விடாதபடி அவை கட்டுப்படுத்துகின்றன. 

இன்டர்ஃபெரான் மருந்துகள் எந்த நோய்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது?

இன்டர்ஃபெரான் மருந்துகள் முதலில் புற்றுநோய் சிகிச்சைக்காக வெளிவந்தன. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் சிகிச்சையிலும் இன்டர்ஃபெரான்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்டர்ஃபெரான் மருந்துகள் தயாரிப்பில் கியூபாவின் பங்கு என்ன?

கியூபா தனது முதல் இன்டர்ஃபெரானை 1981 ஆம் ஆண்டில் தயாரித்தது. அதே ஆண்டில் கியூபா டெங்கு நோய்க்கு எதிரான சிகிச்சையில் இன்டர்ஃபெரானை பயன்படுத்தியது. பின்னர் 1986-ஆம் ஆண்டில் ‘மறுசீரமைப்பு’ (recombinant) முறையில் (man-made) இன்டர்ஃபெரான் ஆல்ஃபா-2பி (interferon Alfa-2B) தயாரிக்கப்பட்டது.

கோவிட் 19 (COVID-19)-க்கான மருந்துகள் என்ன?

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் எந்த மருந்து வெற்றிகரமாக நோயை எதிர்த்து போராட முடியும் என்பது இன்னும் தெளிவாக யாரும் வரையறுக்கவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருந்துகளை சேர்க்கை முறையில் கலந்து பரிசோதனை முயற்சி செய்கின்றன. உலக சுகாதார மையம் (WHO) சமீபத்தில் நான்கு மருந்து கலவைகளை அறிமுகப்படுத்தியது. 
1. வைரசுகளுக்கு எதிரான ரெம்டெஸ்விர் (remdesivir)
2. மலேரியாவுக்கு எதிரான குளோரோகுயின் (அல்லது தொடர்புடைய ஹைட்ராக்ஸி குளோரோகுயின்) (chloroquine (or the related hydroxychloroquine))
3. இரண்டு ஹச்.ஐ.வி மருந்துகளின் கலவை 
4. அதே இரண்டு ஹச்.ஐ.வி மருந்துகளின் கலவையோடு சேர்த்து இன்டர்ஃபெரான் பீட்டாவுடன்.

இன்டர்ஃபெரான் ஆல்ஃபா-2பி (interferon Alfa-2B) மருந்தை பயன்படுத்திய நாடுகள் எவை?

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கியூபாவின் கூட்டு முயற்சியோடு இன்டர்ஃபெரான் ஆல்ஃபா-2பி-யை கோவிட்-19-னை எதிர்த்துப் போராட பயன்படுத்தியது. உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியின் நட்சத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மருந்து எச்.ஐ.வி, மனித பாப்பிலோமா வைரஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் சி சிகிச்சையில் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ்களுக்கு ஒத்த குணாதிசயங்களைக் காட்டும் வைரஸ்களுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த கியூபன் மருந்து சிறந்ததாக விளங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. COVID-19 ஐ எதிர்த்து கியூபாவின் மருந்துகளை பயன்படுத்துவதை அயர்லாந்து பரிசீலித்து வரும் நிலையில், கியூபா ஏற்கனவே இத்தாலியில் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட தங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அவசர குழுவை அனுப்பியுள்ளது நாம் அறிந்ததே.

பதிவு எழுத்தாளர் ஜீவா - முனைவர் நுண்ணுயிரியல் துறை.

-  திருப்பூர் குணா முகநூல் பக்கம்

புதன், 1 ஏப்ரல், 2020

நாவல் கரோனா வைரஸ், அறிந்ததும் - அறியாததும்

(த வி வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் புது டெல்லி )

*தொற்று:*
 தொண்டை மற்றும் நுரையீரல் புறத்தோல்களில் உள்ள செல்களில் மட்டுமே SARS-CoV-2 கிருமி தொற்ற முடியும். இந்த செல்களில் தான் ACE2 எனும் ஏற்பிகள்(Receptors) உள்ளன ACE2 ஏற்பிகளுடன் மட்டுமே SARS-CoV-2 பற்றிக்கொண்டு செல்களுக்குள் புக முடியும். எனவே ACE2 ஏற்பிகள் இல்லாத தோல் மூலம் இந்த வைரஸ் உடலில் புக முடியாது.  யானை தன தலையிலே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் என்பது போல நமது கைகளின் வழியே தான் கண் வாய் அல்லது மூக்குப் பகுதியை அடைந்து, தொண்டை மற்றும் நுரையீரலுக்குள் செல்லும். எனவே அடிக்கடி கைகளை சோப்பு போட்டு இருபது நொடிகள் தேய்த்து சுத்தம் செய்வதன் வழி தொற்றுப் பரவலை தடுக்கலாம். 

*தொற்று ஊட்டு அளவு:* 
சிறுகுரங்கின் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மூக்கு தொண்டை வழியே குறைந்தபட்சம் 700000 PFU டோஸ் ஊட்டு அளவு கிருமி செலுத்தப்பட்ட பின்னர் தான் தொற்றுநோய் ஏற்பட்டது. நோய்அறிகுறி தென்படவில்லை என்றாலும் அதன் உமிழ்நீர் மற்றும் மூக்கு சளி திவலைகளில் வைரஸ் இருந்தது. அதே போல செயற்கையாக ACE2 ஏற்பிகளை பொருத்தி மரபணுமாற்றம் செய்த எலிகளில் சோதனை செய்தபோது 240 PFU டோஸ்சிலேயே SARS கிருமி தொற்று ஏற்படும் நிலையில் , SARS-CoV-2 தொற்று ஏற்பட 70,000 PFU தேவைப்பட்டது. 

*நோய்பரப்புகிற காலம்:*
 கிருமி தொற்று ஏற்பட்ட ஒருவர் எவ்வளவு நாட்கள் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்த முடியும் என்பது உறுதியாக தெரியாது. சுமார் 10-14 நாட்கள் என மதிப்பீடு செய்கிறார்கள். கிருமி தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வாய்ப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி செயற்கையாக தொற்றுப்பரப்புகிற காலத்தை குறைப்பதன் மூலம் தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்துகிறார்கள். மருத்துவமனையில் தனி படுக்கைகளில் அனுமதித்தல், வீட்டுக்குள்ளேயே தனிமைபடுத்தல்,  ஊரடங்கு முதலிய இதற்கு பயன்படுத்தப்படுகிறது. 

*யார் யாரால் தொற்று பரப்ப முடியும்:*
    நோய் அறிகுறி இல்லை என்றாலும் கிருமி தொற்று உள்ளவர்கள் அனைவரும் தொற்று பரப்ப முடியும். தும்மல் இருமல் வரும்போது மூக்கையும் வாயையும் துணியால் மூடிக்கொள்வது தொற்றுப் பரவலை குறைக்கும்.  கிருமி தொற்று உள்ளவரின் உமிழ்நீர், சளி மற்றும் மலத்தில் கிருமி இருக்கும். 

எப்படி தொற்று பரவுகிறது: எச்சில் தும்மல் மூக்கு சளி திவலைகள் வழி தான் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. அதுவும் ஆறு அடி தொலைவுக்கு தான் பரவும். எனவே தான் காய்கறிக் கடை முதலிய பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் மத்தியில் 1.5 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க அறிவுறுத்துகிறார்கள். பாதுகாப்பு இடைவெளி விட்டு இருப்பதன் மூலம் சுமார் 44%அளவுக்கு பரவலை குறைக்கலாம் என ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. கதவுகளின் கைப்பிடி, செல்பேசிகள் லிப்ட் பொத்தான்கள் மற்றும் கவுண்டர் மேசைகள் முதலியவற்றை தீண்டுவதன் தொடர்ச்சியாகவும் பரவ முடியும் என்றாலும் இவற்றால் மெய்யாக எவ்வளவு தொற்று பரவல் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு தடயங்கள் இல்லை. பொது இடங்களில் இது கைவிரல்கள் (கை) புழங்கிய பிறகு எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக  கைகளை சுத்தம் செய்வது நலம். 

*எவ்வளவு பேருக்கு தொற்று செய்கிறோம்:*
 சராசரியாக தொற்று ஏற்பட்ட ஒருவர் 2.2 முதல் 3.1 வருக்கு கிருமியை பரப்புவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. இடைவெளி விட்டு அணுகுவதன் வழியும் தனிமைப் படுத்துதல் ஊரடங்கு அமலின் மூலமாகவும் செயற்கையாக பரவு விகிதத்தை குறைக்கலாம். 

*எங்கிருந்து வந்தது:* வௌவால் சூப் குடித்ததால் நிச்சயம் வரவில்லை. உணவை சமைக்கும் போது வெப்பத்தில் வைரஸ் மடிந்து விடும். துவக்கத்தில் வௌவால்களிடமிருந்து மனிதனுக்கு SARS-CoV-2  வைரஸ் தாவியது என கருதினர். சமீபத்திய மரபணு ஆய்வுகளுக்கு பிறகு வௌவால்களில் தோற்றுவாய் இருந்தாலும் இடையே வேறு ஒரு விலங்குக்கு தாவிய பின்னர் தான் மனிதனிடம் வந்து சேர்ந்தது என புலனாகியுள்ளது. வேறு ஒரு ஆய்வு பல காலமாக இந்த வைரஸ் மனிதர்களிடம் சுற்றிக் கொண்டிருந்தது எனவும் சமீபத்தில் தான் வீரியம் கொண்டதாக மாறியது எனவும் கூறுகிறது.  

*எப்படி பரிணமித்தது:*
 மனிதனுக்கு நோய் ஏற்படுத்த வல்ல திறன் கொண்ட SARS-CoV-2 வைரஸ் முதலில் விலங்குகளில் பரிணமித்த பின்னர் தற்செயலாக மனிதரிடம் தாவியது அல்லது அவ்வளவாக நோய் ஏற்படுத்தும் குணம் இல்லாமல் மனிதரிடம் குடிபுகுந்த பின்னர் நோய் ஏற்படுத்தும் குணம் கொண்ட SARS-CoV-2 பரிணமித்தது என இரண்டு கருதுகோள்களை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர்.  மேன்மேலும் செய்யப்படும் ஆய்வுகளில் தான்  இதில் எது சரி என்பது விளங்கும்.

*SARS-CoV-2 வைரஸ் எப்போது உருவானது:*
 டிசம்பர் 2019 முன்னர் SARS-CoV-2 தொற்றுக்கான தடயங்கள் ஏதுமில்லை. எனினும் மரபணு தொடரை ஆராய்ச்சி செய்தபோது அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் நடுப்பகுதிக்குள் பிறந்துள்ளது என தெரியவருகிறது. இதன் பொருள் முதல் நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாகவே மனிதர்களிடம் பரவியிருந்திருக்கும். யாரும் இனம் காண முடியாதபடிக்கு சளி இருமல் காய்ச்சல் என வந்து சென்றிருக்கும். 

*நாய் பூனை போன்ற விலங்குகளில் இருக்குமா:*

  SARS-CoV-2 மரபணு பரிசோதனைக்கு பிறகு மனிதனை தவிர வௌவால் புனுகுப்பூனை குரங்கு மற்றும் பன்றிகளிடம் இந்த வைரஸ் வளர முடியும். நாய் பூனை கோழி ஆடு மாடுகளில் வாழ முடியாது. கோழி, முட்டை உண்பதால் எந்தவித கொரோனா ஆபத்தும் இல்லை. 

*ஒரு முறை தொற்று ஏற்பட்டால் மறுமுறை ஏற்படுமா:*
  வாழ்கையில் ஒருமுறை தான் தட்டம்மை தொற்றும். அதன் பின்னர் இந்த வைரசுக்கு எதிராக நோயெதிர்ப்பு தன்மை உருவாகிவிடும். குரங்குகளில் நடத்தப்பட ஆய்வில் ஒரு முறை SARS-CoV-2  தொற்று ஏற்பட்ட பின்னர் மறுமுறை ஏற்படவில்லை. அதே போல மனிதர்களிடமும் நோய் ஏற்பட்டு குணமான பின்னர் மறுமுறை ஏற்பட்ட தடயம் ஏதுமில்லை. ஆனால் இந்த நோயெதிர்ப்பு தன்மை ஆயுள் முழுவதும் நீடிக்குமா அல்லது சில காலம் மட்டுமே நீடிக்குமா என்பது இன்னமும் புதிர் தான். 

*எவ்வளவு ஆபத்தானது:*

 COVID-19 நோய் மரணத்தை விளைவிக்கும் நோய்  அல்ல. கிருமி தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் 81% மிதமான நோய் - சளி ஜலதோஷம் முதலியவைதான் ஏற்பட்டது. சுமார்15% நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப் பட்டது. சுமார் 5% தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பார்க்க நேர்கிறது. கிருமி தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பான்மையினருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதில்லை 

*யாருக்கு ஆபத்து:*

 மருத்துவம் பார்க்கும் மருத்துவ ஊழியர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறனர். இத்தாலியில் லாம்பார்டியில் கரோனா நோய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவ ஊழியர்களில் சுமார்  20% கரோனா நோயால் மடிந்தனர். பொது மக்கள் இடையே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே இருதய நோய், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.  

*மரணம் எதனால் சம்பவிக்கும்:*
.  சுவாசம் முட்டல் மற்றும் சுவாச முட்டல் உடன் இருதயம் செயலிழப்பு ஆகியவை தான் மரணத்துக்கு முக்கிய காரணங்கள். நுரையீரலுக்குள் திரவம் சேர்ந்து மூச்சு விட முடியாமல் தவிப்பது தான் தீவிர நோய். வெண்டிலேடர் உட்பட செயற்கை சுவாச உதவி தான் முக்கிய சிகிச்சை. மருந்துகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன, முடிவு தெரியவில்லை. 

*பால் கவர் செய்தித்தாள் மூலம் கிருமி பரவுமா:*

 பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் சுமார் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும். பால் கவரை கழுவதன் மூலமும், பாத்திரங்களை துலக்குவதன் மூலமும் அகன்றுவிடும். 10000 PFU அளவு SARS-CoV-2 கிருமிகளை செலுத்தி ஆய்வு செய்தபோது சுமார் ஐந்து நிமிடங்கள் தான் செய்தித்தாள் மற்றும் பருத்தி ஆடைகளில் அவற்றால் உயிர்ப்புடன் இருக்க முடிந்தது. 

*காற்றில் பரவுமா:*

 காற்றில் வெறும் 2.7 மணி நேரம் மட்டுமே அவை உயிர்ப்புடன் இருக்கும். எனவே ஊரடங்கு நேரத்தில் மொட்டை மாடி பால்கனி முதலியவற்றில் அச்சம் இன்றி நடமாடலாம். 

*வீரியம் குறைவான ரக SARS-CoV-2 உள்ளனவா:*

 இதுவரை பல ரகங்கள் இனம் காணபட்டுள்ளன. எனினும் பரவு விகிதம் அல்லது நோய் கடுமை தன்மையை பாதிக்கும் எந்த ஒரு மரபணு மாற்றமும் இதுவரை இனம் காணப்படவில்லை. 

*வேனில் காலத்தில் SARS-CoV-2 மடிந்து விடுமா:*
 பருவ காலங்களை சார்ந்து இதன் பரவல் தன்மை மாறுபடும் என்பதற்கான எந்தவொரு உறுதியான சான்றுகளும் கண்டுபிடிக்கபடவில்லை.
நன்றி:
T.V., வெங்கடேஸ்வரன்
(விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி)
புது டெல்லி

பகிர்வு:.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
மக்கள் நலவாழ்வு இயக்கம்.
🌺🌺🌺🌺