செவ்வாய், 23 அக்டோபர், 2018

உடல் ஆரோக்கியத்துக்கு பல் பாதுகாப்பு அவசியம்


பல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சாதாரண மருந்து மாத்திரைகளால் அளிக்கப்படும் சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை பல்வேறு வழிகள் உள்ளது.  எனவே பல் பாதுகாப்பு மிக அவசியம்.

* நீரிழிவு நோயாளிகளுக்கு பல் பிடுங்கும் சூழல் வந்தால் அவர்களுடைய சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திய பிறகுதான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

* பற்கள் ஏற்றமும் இறக்கமாகவும் இருந்தால் முகத்தின் அமைப்பு சீராக இருக்காது. இதற்கு   எனப்படும் க்ளிப் போட்டு சரி செய்யலாம்.

* செயற்கை பல்லை அதன் இடத்தில் வலுவாக பொருத்துகிற   நவீன மருத்துவம் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இந்த டெண்டல் இம்ப்ளாண்ட் மூலம் இழந்த பல்லின் இடத்தில் தாடைக்குள் நிரந்தரமாக பல்லைப் பொருத்த முடியும்.

* வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை அடக்குதல், பாக்குகளை பயன் படுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* வாய் சுத்தமாக இல்லாவிட்டாலும், பற்கள் பழுதாகி இருந்தாலும் நமது உடலில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நமது உடல் ஆரோக்கியம் கெடலாம். ஆதலால், ஒருவர் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் அவசியம்.

* பற்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்கு வதைப் போலவே, இரவு தூங்குவதற்கு முன்னும் பல் துலக்க வேண்டும்.

- விடுதலை நாளேடு, 22.10.18

‘எலும்பு வலுவிழப்பு நோய்’உடலுக்குள் ஒவ்வோர் எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக, இந்த வேகம் குறையும். பொதுவாக, 35 வயதுக்குப் பிறகு புதிய செல்கள் உருவாவது தாமதமாகும்.

பழைய செல்கள் இறந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகலாம். அப் போது எலும்பின் இயல்பான அடர்த்தி முதலில் குறையும். இந்த நிலைமைக்கு எலும்புத் திண்மக் குறைவு நோய்  என்று பெயர். 50 வயதுக்கு மேல், எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். அப்போது நம்மால் தொடர்ந்து நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும்.

நாளடைவில் அந்த எலும்பில் முறிவு ஏற்படவும் அதிக சாத்தியம் உண்டு. இதைத் தான் எலும்பு வலுவிழப்பு நோய் என்கிறோம். எளிதாகப் புரிந்துகொள்வதற்கு இப்படிச் சொல்லலாம்: இது எலும்புகள் பலவீனம் அடையும் நோய்!

ஏற்படக் காரணம்

குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணி செய்வது, வெயில் நுழைய முடியாத அடுக்கு மாடி வீடுகளில் குடியிருப்பது, உடலுழைப்பு குறைந்து போவது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்று வதால் புரதம், ஊட்டச்சத்துக் குறைந்துவிடுவது போன்ற தற்போதைய வாழ்க்கை முறையால் இந்த நோயின் தாக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர் களுக்கு கால்சியம் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்.

இந்த இரண்டும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் எலும்பு வலுவிழப்பு நோய் வருவதுண்டு. அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீதச் செயல்பாடு காரணமாகவும் இது ஏற்படு வதுண்டு.

இயல்பாகவே முதுமையில், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவ தாலும், பெண்களுக்கு மாதவிலக்கு நின்று ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைந்து விடுவதாலும், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை, போதைப் பழக்கம் போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகிறது. பரம்பரை ரீதியாகவும் இது வருகிறது.

யாருக்கு  வாய்ப்பு அதிகம்?

மாதவிலக்கு நின்றுபோன பெண்களுக்கு, வெயில் படாத வேலை செய்கிறவர்களுக்கு, முதியோருக்கு, மது அருந்து பவர்களுக்கு, புகைபிடிப்போருக்கு, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு, மூட்டுத் தேய்மானம் உள்ளவர்களுக்கு, நாட்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வரும் சாத்தியம் அதிகம். பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. சிலருக்கு மட்டும் கீழ்முதுகிலும் கழுத்திலும் தொடர்ந்து வலி இருக்கும். அந்த இடங்களைத் தொட்டால் வலி கூடும். பலருக்கு பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோய் இருப்பது தெரியவரும்.

கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதும், லேசாக அடிபட்டால்கூட பலத்த எலும்பு முறிவு ஏற்படுவதும்தான் இந்த நோயின் கொடுமை. பொதுவாக, இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவை இந்த நோயின்போது எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும் இடங்கள்.

எப்படி கண்டறிவது?

தைராய்டு பரிசோதனை, கால்சியம் மற்றும் வைட்டமின் டி அளவீடு போன்ற பல பரிசோத னைகள் உள்ளன. என்றாலும், டெக்சா ஸ்கேன்   பரிசோதனைதான் முக்கியமானது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 வருடங்களுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். தேவைப்படுபவர்களுக்குச் சிகிச்சை வழங்க முடியும்.

என்ன சிகிச்சை?

இந்த நோய் ஏற்பட்ட பின்பு வலு இழந்த எலும்பை மீண்டும் வலுப் பெறச்செய்ய முடியாது. கால்சியம் மற்றும் வைட்டமின் டி மிகுந்த உணவுகளைச் சாப்பிடுதல் அல்லது மாத்திரைகள் சாப்பிடுதல் மூலம் மற்ற எலும்பு களை வலிமைபெறச் செய்யலாம். இவை தவிர, சமீபத்தில் இந்த நோய்க்கு நவீன மாத்திரை களும் ஊசி மருந்துகளும் வந்துள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம்.

பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் அதிகம். தவிர, கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, முட்டைக் கோஸ், எலுமிச்சை, திராட்சை, கொய்யாப் பழம், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற வற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களை அதிகப்படுத்திக்கொண்டால் உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்து விடும். வைட்டமின் டி குறைபாட்டால் இந்த நோய் வர காரணமாகிறது.

வைட்டமின் டி

தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின் டி இயற்கை யாகவே கிடைப்பதற்கு வழி செய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுப் பொருட்களில் இதைப் பெறலாம். வைட்டமின் டி மாத்திரைகளும் கிடைக் கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றைச் சாப்பிடலாம்.

 - விடுதலை நாளேடு, 22.10.18

சனி, 13 அக்டோபர், 2018

பாக்டீரியா எனும் பயங்கரவாதிஒரு பத்து லட்சம் ரூபாய்க்கு மனை வாங்கி நாற்பது லட்சம் செலவு செய்து அழகாக வீடு கட்டி குடிபோகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நமக்கே நமக்காக நம்முடைய உழைப்பால் கட்டிய வீடு என்று பெருமிதமாக உணர்ந்து உணர்ந்து பூரிப்படை வீர்கள். ஆனால் அதில் உங்களுக்குத் தெரியாமல் - உங்களுக்கு வாடகையும் கொடுக்காமல் எத்தனை பேர் உடன் வாழ்கிறார்கள் தெரியுமா? நன்றாகத் தேடிப் பாருங்கள்...

உங்கள் வீட்டில் ஒரு 10 பல்லியாவது குடியிருக்கும். 50 சிலந்திப் பூச்சிகள் நம் வீட்டிற்கு உள்ளேயே தனி வீடு கட்டி இருக்கும். ஒரு 1000 எறும்புகளாவது சுற்றிக் கொண்டிருக்கும். மாலை வேளைகளில் ஒரு 300 கொசுக்கள் நம் உத்தரவில்லாமல் நம் வீட்டிற்குள் வந்து நம்மையே கடிக்கும். இரவில் 4 எலிகள் சுற்றும். 2 பூனைகள் அவற்றைக் கண்காணிக்கும். 5 குளவிகள் தன் குழந்தையோடு வாழ்ந்து கொண்டிருக்கும். ஒரு 10 கரப்பான் பூச்சிகள் மீசையை முறுக்கிக் கொண்டு உங்களையே முறைக்கும். ஒரு 4 தவளையாவது நம் குளியலறையில் அடைக்கலமாகி இருக்கும். இவை வாடகை தராமல் நாம் கட்டிய வீட்டில் நம்முடனே  வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இவை நம் கண்ணுக்குப் புலப்படுபவை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரி யாக்கள் என்னும் நுண்ணுயிரிகள் லட்சக் கணக்கில்... அல்ல, அல்ல, கோடிக்கணக்கில் கூட நம் வீட்டில் உல்லாசமாக உடன் வாழ்ந்து வருகின்றன. இவை எல்லாவற் றாலும் ஏராளமான நோய்களுக்கு நாம் ஆளாகிறோம்.

தினமும் ஷூக்கள் அல்லது பூட்ஸ் அணிபவர்கள் தங்கள் காலுறையை அன்றாடம் துவைத்து சுத்தமாகப் பயன்படுத்த வேண்டும். ஒரே காலுறையைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அதில் வியர்வை உறிஞ்சப்பட்டு ஏராளமான பாக்டீரியாக்கள் அண்டிக் கொள்ளும். காலுறை இல்லாமல் ஓட்டப்பயிற்சி (ரன்னிங்) ஷூ அணிபவர்கள் வருடம் ஒருமுறையாவது ஷூக்களையே மாற்றிக் கொள்ள வேண்டும். இவை வியர்வையை நேரடியாக உறிஞ்சுவதால் பாக்டீரியாக்கள் விரைவில் பெருகி அவை வசதியாக வாழ ஆரம்பித்துவிடும். நமது காலணிகளைக்கூட வருடம் ஒருமுறை மாற்றிக் கொள்வது நல்லது. அல்லது அவற்றை அடிக்கடி கழுவி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் வீட்டையும், கழிவறைகளையும், தரையையும் சுத்தம் செய்யும் பிரஷ், குச்சிகள், கையுறை போன்றவற்றை ஆறு மாதங் களுக்கு ஒரு முறையாவது புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தலையணையை அதன் உறையை இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றுங்கள். நம் வீட்டிலேயே அதிகமாக விரைவாக அழுக்காகி விடும் துணி தலையணை தான். இதில் சேர்ந்து வாழும் பாக்டீரியாக்களால் சரும அரிப்பு, இருமல், தும்மல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

நீங்கள் குளித்துவிட்டு துடைத்துக் கொள்ளும் துண்டில் ஒருவித ஃபைபர் தன்மை இருக்கும். பயன்படுத்த பயன்படுத்த துண்டில் உள்ள ஃபைபர் தன்மை குறைந்துவிடும். இதில் பாக்டீரியாக்கள் வாசம் பண்ணத்தொடங்கி விடும். இந்தத் துண்டு களைத் துவைக்க துவைக்க அதில் பாக்டீரி யாக்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இவற்றையும் அடிக்கடி மாற்றிவிடுங்கள்.

நீங்கள் பல் துலக்கும் டூத் பிரஷ்ஷை கண்டிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கான பிரஷ்ஷை மாற்றுவது கட்டாயம். இவற்றில் உள்ள நாட்பட்ட பாக்டீரியாக்கள் பல் தொற்றை ஏற்படுத்தி விடும்.

நீங்கள் தூங்கப் பயன்படுத்தும் மெத்தைப் படுக்கைகளைக்கூட 5 ஆண்டிற்கு

ஒருமுறை மாற்ற வேண்டும். ஆனால் அவை விற்கும் விலையில் நம் பொருளா தார சூழலுக்கு நிச்சயமாகக் கட்டுப்படி யாகாது. எனவே உங்கள் மெத்தை விரிப்பை குறைந்தது இரண்டு வாரங் களுக்கு ஒரு முறையாவது மாற்றி விடுங்கள். இவையெல்லாம் பாக்டீரியாக் களின் அட்டகாச பூமி என்றால் அது மிகை யில்லை.

ஒரு வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் முடிந்தவரை தனித்தனி சீப்பைப் பயன்படுத்துங்கள். அல்லது பயன்படுத்திய சீப்பை வாரம் ஒருமுறை யாவது கழுவி சுத்தம் செய்து வையுங்கள்.

நம் வீட்டில் குளியலறை, சமையலறை, தரைகள் துடைக்கப் பயன்படுத்தும் பஞ்சை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள். இவற்றில் வளரும் பாக்டீரியாக் களால் ஃபங்கஸ் (பூஞ்சை) தொற்று அதிகரிக்கும்.

இன்னும் முக்கியமானது நமது உள்ளாடைகள் மற்றும் ஆடைகள். இவற்றை நன்றாகத் துவைத்து சுத்தமாகப் பயன்படுத்த வேண்டும். தொற்றுநோய் பிரச்சினைகள், அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை ஏற்பட இவற்றில் வாழும் பாக்டீரியாக்களே பெரும் காரணமாக அமைகின்றன. சிலர் பல ஆண்டுகளாக ஒரே உள்ளாடைகளைப் பயன்படுத்துவார்கள். மேற்கண்ட நோய் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்போது எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டாலும் குணமாகாது. உள்ளாடைகளை மாற்றி விட்டால் சரியாகி விடும். நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் மருந்து களுக்கு மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கும் காலாவதி நாள் (Expiry Date) உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இவை எல்லாவற்றையும்விட முக்கிய மானது நாம் அன்றாடம் தொட்டுப் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்கள். பல வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் பிளேக் என்னும் தொற்று நோயால் ஏராளமான மக்கள் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர். இந்த நோய் அவர்களிடம் புழங்கிய ரூபாய் நோட்டுகள் மூலம் பரவியிருந்ததை நீண்ட ஆராயச்சிக்குப் பின் கண்டறிந்தனர். சிறுநீரகத் தொற்றுநோய், மூச்சுப் பிரச்சினை, காச நோய், வயிற்றுப்போக்கு, தோல் பிரச்சினைகள், மூளைக் காய்ச்சல் போன்ற 78 வகையான நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் இந்திய ரூபாய் நோட்டுகளில் வசிக்கின்றன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. எனவே ரூபாய் நோட்டுகளை எச்சரிக்கை யாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது நாக்கால் எச்சில் தொட்டு எண்ணுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
- விடுதலை ஞாயிறு மலர், 29.9.18

புதன், 10 அக்டோபர், 2018

உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை?மூன்றில் ஒருவர் இரவில் நன்றாகத் தூங்குவதில்லை. பெரும் பாலானவர்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியம். சிலருக்கு அதைவிட குறைந்த நேரம் போதும் உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை முதலில் அறியுங்கள். அவ்வளவு நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள்.

தொடர்ந்து போதிய தூக்கமில்லாமல் இருந்தால் அது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும். உடல் பருமன், நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இதனால் உண்டாகும்.

நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன நலமும் மேம்படும். நீரிழிவுக்கான வாய்ப்புகள் குறையும். பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.

ஒரு நாள் சரியாகத் தூங்காவிட்டால், மறுநாள் அதிகம் தூங்குங்கள். பல மாதங்கள் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், மீண்டு வரவே சில வாரம் தேவை.

- விடுதலை நாளேடு, 4.10.18

வெள்ளி, 5 அக்டோபர், 2018

நெருங்கிய உறவில் திருமணம் கூடாது! ஏன்?

இன்று உலக மக்கள் தொகையான 760 கோடியில் 10 முதல் 12 சதவிகிதம் வரை நெருங்கிய ரத்த சம்பந்த உறவில்தான் திருமணம் (Consanguineous marriages) செய்து கொள்கிறார்களாம்! காரணம் இதில் குடும்பப் பின்னணியை ஆராயத் தேவையில்லை; தலைமுறை உறவுகள் நீடிக்கும்; குடும்பச் சொத்துக்கள் மற்றவர் கைகளுக்குப் போகாது என்று பல காரணங்கள்.

வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் பலவற்றில் இப்பழக்கம் கலாசார ரீதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. சில அய்ரோப்பிய நாடுகளிலும் நெருங்கிய சொந்தத்தில் மணம் செய்வதுண்டு.

நம் நாட்டில் தாய்வழி உறவுகளில் முறை மாப்பிள்ளை, முறைப்பெண் என்று தேர்ந்தெடுத்து மணம் முடிக்கும் வழக்கம் இருக்கிறது.

பெற்றோர், உடன்பிறப்புகள், பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை அவர்களுடைய வாரிசுகள் இரத்த உறவுகள் ஆகும்.

உலக வரலாற்றில் நெருங்கிய  ரத்த சம்பந்த உறவு திருமணங்கள் :

அரச பரம்பரை வாரிசுகளில் சிலர் நோஞ்சானாக இருந்தார்கள்; பலருக்கு ரத்தம் உறைவதில் சிக்கல் (Hemophila) இருந்தது; மனநலம் குன்றி அவலட்சணத்துடன் இருந்த ஸ்பெயின் மன்னர் சார்லஸ்மிமி 1700ஆம் ஆண்டு இறந்தபோது வாரிசு இல்லாமல் அந்த வம்ச ஆட்சியே முடிவுக்கு வந்தது.

உறவில் மணம் செய்த  டார்வினின் மூன்று குழந்தைகள் இளம் பிராயத்திலே நோய்வாய்ப்பட்டு இறந்து போயின; மேலும் மூவருக்கு வாரிசுகள் இல்லாமல் போயின.  டார்வினே நோய்வாய்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்கு அவருடைய தாத்தாவும் பாட்டியும் நெருங்கிய ரத்த சம்பந்த உறவினர்கள் என்பதே காரணம்.

பின்னாளில் டார்வினின் நான்கு தலைமுறைகளை ஆராய்ந்தவர்கள் நெருங்கிய சொந்தத்தில் மணமுடித்தவர்களின் வாரிசுகளில் சிலருக்கு பிறவிக் குறைபாடுகள் இருந்ததை  உறுதி செய்தார்கள். உறவுத் திருமணங்களில் பிறந்த குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் உண்டாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பது உறுதி ஆயிற்று.

உறவுத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளில் சிலருக்கு வாய் பேசாமை, காது கேளாமை, இதயக் கோளாறுகள், மனநலம் பாதிப்பு போன்றவை உண்டாவதைக் காணமுடிகிறது.
காரணம் என்ன?

ஒரு மனிதக் கரு உருவாகும்போது தாயிடம் இருந்த 23 குரோமோசோம்களையும் தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம்களையும் பெறும். அவற்றில் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் (Genes) இருக்கும்.

இதில் ஒரு குறிப்பிட்ட குரோமோசோம் ஜோடிதான் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தீர்மானிக்கும் பெண்ணின் அந்த குரோமோசோமில் X, X என்று ஒரே ரக உயிரணுக்கள் இருக்கும். ஆணில், X, சீ என்று மாறுபட்டு இருக்கும். X உடன் X சேர்ந்தால் பெண்; X உடன் சீ சேர்ந்தால் ஆண்! ஆணா பெண்ணா என்று திர்மானிப்பது ஆணின் விந்தில் இருக்கும் குரோமோசோம்களே. 
மற்ற 22 குரோமோசோம் ஜோடிகளில் நிறம், அங்க அமைப்பு, ஆரோக்கியம் உட்பட பல்வேறு பரம்பரை இயல்புகள் பதிவாகியிருக்கும்.

இந்த ஜோடிகளில் இருக்கும் அணுக்களில் ஆதிக்கம் செலுத்துபவை (Dominant), அடங்கி இருப்பவை (Recessive) என்று இருவகை உண்டு.

முன்னோர்களின் பண்புகள்தான் மரபணு மூலம் மணமக்களுக்கு வரும். இப்படி ஒரே பண்புடன் கூடிய மரபணுக்கள் (Homozygotes) தம்பதியினர் இருவர் மூலமும் குழந்தைக்கு வருவதுதான் இச்சிக்கலுக்குக் காரணம். ஒடுங்கி இருக்கும் ஒரே வகை குறைபாடுகள் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளாக (Autosomal recessive disorders) வெளிப்படுகிறது.   
- உண்மை இதழ், 1-15.9.18