திங்கள், 28 நவம்பர், 2016

முதுகுவலிக்குத் தீர்வு என்ன?

வெளிப்பக்கம் காணப்படும் உடல் பகுதி களில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாமல் நம்மால் பார்க்கமுடியாத ஒரு முக்கியப் பகுதி முதுகு. தடித்த சருமம், பரந்து விரிந்த தசைகள், நீண்ட தசை நாண்கள், பலதரப்பட்ட எலும்புகள், மூளைத்தண்டுவட நரம்புகள் என்று பல கலவையால் ஆன கூட்டுக் குடும்பம் இது. கழுத்து, தோள்பட்டை எலும்பு, மேல் முதுகு, மத்திய முதுகு, கீழ் முதுகு என்று பல பகுதிகளைக் கொண்டது இது.

பெரும்பாலும் மேல் முதுகில் ஏற்படும் பிரச்சினை தசை சுளுக்கு காரணமாகவே இருக்கும். விபத்தின் மூலம் முதுகெலும்பு களில் அடிபடுதல், தோள்பட்டை வலி, விலா எலும்பு முறிவு, ரத்தம் கட்டுதல், விலா குருத்தெலும்பு வீக்கம் போன்ற பிரச் சினைகளும் வரலாம். மேல் முதுகில் வலி உண்டாகி இருமலும் இருந்து இவை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால்,  அது காச நோயாக இருக்கலாம்.

மேல் முதுகெலும்பு களில் பலமாக அடிபட்டு அவை நொறுங்கிப் போனாலோ, அங்கு செல்லும் முதுகுத் தண்டுவட நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ, அடிபட்ட உடல் பகுதிக்குக் கீழ் உள்ள பகுதிகள் எல்லாமே செயலிழந்து விடும். அந்த இடங்களில் உணர்ச்சி இல்லாமல் போகும். இந்த பாதிப்பு களை சரி செய்வது மிகவும் சிரமம்.

கீழ் முதுகு மார்பு முள்ளெலும்புத் தொடருக்கும் இடுப்பெலும்புக் கட்டுக்கும்  இடையில் உள்ள பகுதியைக் கீழ் முதுகு என்கிறோம். இதில் ஐந்து கீழ் முதுகு முள் ளெலும்புகள் ஒன்றோடொன்றாக கோர்க்கப் பட்டு, சற்று முன்புறமாக வளைந்துள்ளன. மேல் முதுகு சற்றே பின்பக்கமாக வளைந் துள்ளதைச் சரி செய்யவே இந்த எலும்புகள் முன்பக்கமாக வளைந்துள்ளன.

முதுகெலும்பிலேயே அதிக அசைவு உள்ள பகுதி கீழ் முதுகுதான். முன்பக்கம் குனிவது, பின்னால் சாய்வது, வலப்பக்கம் இடப்பக்கம் என உடலைச் சுழற்றுவது. இப்படிப் பல அசைவுகளை நம்மால் எளிதாக செய்ய முடிவதற்கு முக்கியக் காரணம் இங்குள்ள எலும்புகள்தான். சர்க்கஸ், நாட்டியம், மலை ஏறுதல், டென்னிஸ் போன்ற விளையாட்டு என பலவற்றுக்கும் இவை தருகின்ற அசைவுகள்தான் மூல காரணம். மேலும், உடல் எடை அதிகமாக இருந்தால் அதையும் இந்த எலும்புகள்தான் தாங்க வேண்டும்.

பரிசோதனையும் சிகிச்சையும்

கீழ் முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருப்பதால் முதுகு எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்து காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். ஜவ்வு வீங்குவது அல்லது விலகுவது காரணமாக ஆரம்பத்தில் ஏற்படுகிற கீழ் முதுகு வலியானது வலி நிவாரணிகள், 3 வாரம் முழுமையாக ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசி யோதெரபி மற்றும் ட்ராக்ஷன் சிகிச்சையில்  குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. சில ருக்கு முதுகு தண்டுவடத்தில் ஸ்டீராய்டு ஊசி போட்டும் இதைக் குணப்படுத்துவதுண்டு.

முதுகு வலியைத் தடுக்க

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டும்; கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது கீழ் முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
2. சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்வது முதுகு வலி வராமல் தடுக்கும்.

3. காற்றடைத்த  பானங்கள், குளிர் பானங்கள், மென்பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப் படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்து விடும். எனவே, இவற்றை அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

4. மேல் முதுகில் வலி ஏற்பட்டால் ஐஸ் ஒத்தடம் கொடுத்து, மூச்சுப்பயிற்சிகளைச் செய்தால் போதும். வெந்நீர் ஒத்தடம் கொடுப் பது, சுளுக்கு எடுப்பது, பேண்டேஜ் கட்டுவது, கண்ட கண்ட களிம்புளைப் போட்டு தேய்ப் பதை எல்லாம் செய்தால் பாதிப்பு அதிகமாகி வலியும் கடுமையாகிவிடும்.

5. முதுகில் வலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கக் கூடாது. இவர்கள் கட்டாந்தரையில் தான் படுக்க வேண்டும்; கட்டை பெஞ்சில்தான் படுக்க வேண்டும் என்பதில்லை. சரியான மெத்தையில் பக்க வாட்டில், சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.

6. பலமாகத் தும்மக்கூடாது. மலம் கழிக்கும் போது அதிகமாக முக்கக்கூடாது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. அதிக எடையைத் தூக்கக்கூடாது. அப்படியே தூக்கவேண்டியது இருந்தால் எடையைத் தூக்கும்போது இடுப்பை வளைத் துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக் கொள்வது இன்னும் நல்லது.

8. உடலை அதிகமாக விரியச் செய்தல், வளைத்தல் கூடாது. திடீரெனத் திரும்புதல் கூடாது.

9. குனிந்து தரையைச் சுத்தம் செய்வ தற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.

10.இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற் கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது.

11. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியக் கூடாது.

12. அருகில் உள்ள இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வதைவிட நடந்தே செல்லுங்கள்.
13. நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.

14. ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது பஸ்ஸின் நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து கொள்வது நல்லது.

15. பருமனைத் தவிர்க்க வேண்டும்.

16. புகை, மது, போதை மாத்திரைகள் கூடாது.

17. மன அழுத்தம் தவிருங்கள்.
-விடுதலை,28.11.16

ஞாயிறு, 27 நவம்பர், 2016

வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்ஏப்ரல் மாதம் முதலே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை  சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப்  பாதிக்கின்றன.
நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப  நோய்களைத் தடுப்பதும் எளிது.
வியர்க்குரு: கோடை காலத்தில் நம் உடலின் வெப்பத் தைக் குறைப் பதற்கு இயற்கையிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது  உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.  வியர்வை நாளங்கள் பாதிக்கப் பட்டு வியர்க்குரு வரும்.
வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு  வராது. குளித்து முடித்தபின் வியர்க்குரு பவுடர், காலமைன் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம்.  இதனால் அரிப்பு குறையும். கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை,  எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால்,  வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவி லிருந்து விடுதலை  பெறலாம்.
வேனல்கட்டியும் புண்களும்: சருமத்தின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில்  அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா கிருமிகள் தொற்றி அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான்  வேனல்கட்டி.
குழந்தைகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் கோடை காலத்தில் அடிக்கடி சருமத்தில் புண்கள் வந்து சீழ் பிடிக்கும்.  ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள்  பயன்படுத்தினால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.  கிருமி நாசினி கொண்ட சோப்பை உபயோகித்தால், மீண்டும் இந்தப் புண்கள் வராது.
தேமல் தொற்று
உடலில் வியர்வை தேங்கும் பகுதிகளான  மார்பு, முதுகு, அக்குள்களில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.  குறிப்பாக,  மலாஸ்ஸிஜியா ஃபர்ஃபர் எனும் பூஞ்சைகள் சருமத்தில் தொற்றும்போது  அரிப்புடன் கூடிய  தேமல் தோன்றும். தேமலைக் குணப்படுத்தும் வெளிப்பூச்சுக் களிம்பு  அல்லது பவுடரை தடவி வந்தால் குணமாகும்.
இதன்  தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சை எதிர்ப்பு மாத்திரைகள்    தேவைப்படும். படர்தாமரை சரும மடிப்புகளிலும் உடல் மறைவிடங்களிலும் காற்றுப் புகாத உடல் பகுதிகளிலும்   அக்குள், தொடையிடுக்கு போன்ற  உராய்வுள்ள பகுதிகளிலும் டிரைக்கோபைட்டன், எபிடெர்மோபைட்டன்   போன்ற காளான் கிருமிகள் தாக்கி, படர்தாமரை எனும் சரும நோய் வரும்.
இரவு நேரத்தில் அரிப்பும் எரிச்சலும் அதிகத் தொல் லையைக்  கொடுக்கும். கோடை வெப்பத்தால் உண்டாகும் வியர்வை, இந்தத் தொல்லைகளை அதிகப்படுத்தும். உள் ளாடைகளை தினமும்  துவைத்துச் சுத்தமாகப் பயன்படுத் தவும்.
முக்கியமாக, குளித்து முடித்தபிறகு மீண்டும் பழைய ஆடைகளை உடுத்தக் கூடாது.  மென்மையான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். செயற்கை   இழைகளால்  ஆன ஆடைகளும்  ஆகாது.
சருமத்தில் எரிச்சல்
அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற  ஊதாக்கதிர்களின் உக்கிரத்தைத் தாங்கமுடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக்குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்த வேளையில் 5 எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகி அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும்.
இதன் விளைவால்  சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இந்த பாதிப்புள்ள வர்கள், மருத்துவரை அணுகி வலி நிவாரணி மாத்திரைகள்,  எரிச்சலைக் குறைக்கும் களிம்புகளை பயன்படுத்திப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். வெப்பப் புண் என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பிரச்சினையை எளிதில் தடுத்துவிடவும் முடியும்.
வெயிலில் செல்வதற்கு முன்பாக, உடலில் வெளியே தெரியும்   பகுதிகளில் ஏற்கெனவே சொன்ன  சன்ஸ்கிரீன் லோஷனை  தடவி, அரை மணி நேரம் கழித்துச் செல்வது, புற ஊதாக்கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க எளிய வழி.
மேலும், பருத்தி ஆடைகளை அணிவதும், சருமத்தை முழுமையாக மறைக்கக்கூடிய குளோஸ் நெக் மற்றும் முழுக்கை  ஆடைகளை அணிவதும் சருமத்துக்குப் பாதுகாப்பு தரும். கருப்புநிற ஆடைகளை அணிந்தால், அவை சூரிய ஒளிக்கதிர்களை  அதிகமாக உறிஞ்சி சரும எரிச்சலை அதிகப்படுத்திவிடும். ஆகவே, கோடையில் வெள்ளைநிற ஆடைகளை அணிவதே நல்லது.
நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு  தண்ணீர் குடிக்காதது முக்கிய காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்து விடும்.
இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமான படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்து நீர்க்கடுப்பு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகும். அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் சிறுநீர்ப் பாதையில் நோய்த்  தொற்றோ, சிறுநீரகக்கல்லோ இருக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.
கோடையை வெல்வது எப்படி?
3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர் மற்றும் வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென் பானங்களைக்  குடிப்பதைவிட இளநீர், மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்ஸி ஆகிய இயற்கை பானங்களை குடிக்கவும். எலுமிச்சைச் சாற்றில் உப்பு  அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
தர்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை,  பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள்.
கோடையில்  வெளியில் செல்லும்போது குடையோடுதான் செல்ல வேண்டும். இயன்றவரை நிழலில் செல்வது நல்லது. குழந்தைகள்,  முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும்.
கண்களுக்கு சூரியக் கண்ணாடியை அணியலாம். கோடையில் காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள், அசைவ உணவுகள்  ஆகியவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் குறைத்துக் கொள்ளுங்கள்.
-விடுதலை,4.5.15

திங்கள், 21 நவம்பர், 2016

மழையோடு வரும் மாபெரும் தொற்று

மழையைப் பற்றிய இனிய நினைவுகளைக் கலைத்துப் போட்டு வெறும் கசப்புகளையும் பயத்தையும் மட்டுமே கொடுத்துச் சென்றது கடந்த  ஆண்டு மழையும் வெள்ளமும். இந்த  ஆண்டு மழை எப்படி இருக்குமோ... ஆனால், மழையால் ஏற்படும் சாதாரண காய்ச்சல், சளி, இருமல் இவற்றுடன் 'ஹெபடைடிஸ் ஏஎனப்படும் மிகக் கொடிய தொற்று நோயையும் சந்திக்க நேரிடும்  "தூய்மையற்ற நீர், உணவு இவற்றால்  ஏற்படுகின்ற ஆரம்பகட்ட கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்து கிறது ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று.  மழை நீர் மாசுபடுவதால் தொற்றுக்கிருமிகள் உற்பத்தி அதிகமாகி ஹெபடைடிஸ் ஏ பரவக்கூடிய  நிலை உருவாகிறது.

மேலும் ஹெபடைடிஸ் ஏவால்  பாதிக்கப்பட்ட நோயாளியின் இயற்கைக் கழிவுகளாலும் அவ ருடைய நேரடித் தொடர்பினாலும் இது மற்ற வர்களுக்கு பரவுகிறது. சுற்றுப்புறத்திலுள்ள சரியாகப் பராமரிக்கப்படாத கழிவு அகற்றும் குழாய்கள், சாக்கடைகளில் உற்பத்தியாகும் கிருமி களால் இந்தத் தொற்று திடீரென்று  வேகமாக பரவு கிறது. 14 முதல் 28 நாட்களுக்குள் ஹெபடைடிஸ் ஏ நோயின் கிருமிகள் பெருகி மஞ்சள் காமாலை எனும் நோயை ஏற்படுத்துகிறது.

கண்களிலும், சருமத்திலும் மஞ்சள் ஏற்படுவது, பசியின்மை, பலவீனம், வயிற்றுப்போக்கு, வாந்தி இவை அறிகுறிகள்.  இந்த தொற்றினால் பாதிக்கப் பட்ட 70 சதவிகித நோயாளிகளில், 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் இதன் தீவிரம் அதிக மாகக் காணப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தொற்றுஆபத்து குறையும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர் களுக்கும், சுகாதாரமற்ற சூழலில் வாழ்பவர்களுக் கும், தொற்றினால் பாதிக்கப்பட்ட தனிநபருடன் பழகுபவர்களுக்கும் தொற்று பரவும் ஆபத்து அதிகம். நம் உடலில் சேரும் நச்சுப்பொருட்களை கழிவுகளாக உருமாற்றி நீக்கும் பணியைச் செய்யும் கல்லீரல், ஹெபடைடிஸ் ஏ தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறது.

ஹெபடைடிஸ் ஏ தொற்றுக்கு வரையறுக் கப்பட்ட சிகிச்சையோ தடுப்பு மருந்துகளோ கிடை யாது. இதிலிருந்து நோயாளி முற்றிலுமாக விடுபடு வதற்கு ஒரு மாத காலமாகும். சத்தான உணவும், போதுமான நீராகாரங்களும் வழங்கப்பட வேண் டும். இல்லையெனில் ஊட்டச்சத்து குறைவு ஏற் பட்டு, குமட்டல், வாந்தி  மற்றும் வயிற்றுப்போக்கை நீட்டிக்கும் என்று  அறி குறிகளையும் கூறுகிறார்.

தடுப்பூசி மூலம் மட்டுமே ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்றிலிருந்து உறுதியான பாதுகாப்பு கிடைக்கிறது. ஊசி மூலம் ஏற்றப்படும் தடுப்பு மருந்து ஒரு மாதத்துக்குள் உடலில் நோய் எதிர்ப்பு கிருமிகளை உருவாக்கி நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது.

தடுப்பூசி போட்டுக் கொண்டதிலிருந்து  இரண்டு வார காலத்துக்குள், இந்தத் தொற்றினால் திடீரென்று பாதிக்கப் பட்டவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. இப்போது மேம்பட்ட வடிவங்களில் தடுப்பூசி மருந்து வந்துவிட்டது.

வழக்கமாக போடப்படும் அதிக வலியை தரக்கூடிய இரண்டு டோஸ் ஐ.எம். எனும் தசையின் மூலம் ஏற்றப்படும் ஊசிக்கு பதிலாக சருமத்துக்கு அடியில் செலுத்து வதன் மூலம் மருந்து உடலினுள் ஏற்றப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி தொற்றிலிருந்து  நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்ய உங்கள் குழந்தையின் நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந் துரைக்கிறது  தடுப்பூசியின் அவசியத்தை எடுத் துரைக்கிற மருத்துவர்கள், யாரெல்லாம் இத்தடுப் பூசியை போட்டுக் கொள்ளலாம் என்பதையும் சொல்கிறார்.

1 வயதுக்கு குறைவான குழந்தைகள் தவிர, எந்த வயதினரும் எடுத்துக்கொள்ள முடியும். குழந்தை பருவத்தில் தடுப்பூசி போட்டுக் கொள் ளாத பெரியவர்கள் கூட, இப்போது தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த தொற்று ஏற்படுவதற்கான அபாயத் திலிருந்து தங்களை பாதுகாக்க முடியும். வரும் மழைக்காலம் தொடங்கும் முன், தங்களுக் கும் தங்கள் பிள்ளைகளுக்கும் முறையான தடுப்பூசி மூலம் பாதுகாக்க வேண்டும். முறையான சுகாதாரம், உணவு மற்றும் இன்றியமையாத தடுப்பூசி மருந்து  இவை யாவும் ஹெபடைடிஸ் ஏ எனும் கொடிய தொற்றிலிருந்து நம்மைக் காத் துக்கொள்ளும் வழிகளாகும் என முன்னெச் சரிக்கை முறைகளை முன் வைக்கின்றனர் மருத்துவர்கள்.
-விடுதலை,21.11.16

கை, கால் குடைச்சல்!


கை, கால் குடைச்சல் என்றாலே வயதானவர்களின் உபாதை என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல மணிநேரம் வேலை செய்பவர் களுக்கும் இப்பிரச்சினை வரும் என்கிறார் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் கண்ணன். கை, கால் குடைச் சலுக்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறுகிறார் அவர்.
ஒருவருக்கு கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் வரலாம். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, கை, கால் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாதல், வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல் போன்றவையும் காரணமாகலாம்.
இந்த உபாதை 30 வயதுக்கு உட்பட்டவருக்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதே வேளையில், சுமை தூக்கும் தொழிலாளிகள், தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு தொடர்ந்து 10 மணிநேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வரலாம். பெண்களில் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவருக்கு கை, கால் குடைச்சல் அதிகமாக வருகிறது. இதற்கு மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு போன்றவை காரணங்கள்.
இது பரம்பரையாகத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு. கை, கால்களில் ஒருவருக்கு குடைச்சல் உள்ளது என்பதை உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். காலின் அடிப்பாகத்தில் எரிச்சல் தோன்றும்... படிப்படியாக முழங்கால் வரை அதிகமாகும். இரவு நேரங்களில் தூங்கும் போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற மாதிரி இருக்கும். குடைச்சல் ஏற்படுவதற்கு முன்னர் கை, கால்கள் மரத்துப் போகும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும். இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு இடுப்பு வலிமற்றும் தலைவலி இருக்கும். சிலருக்கு தூக்கமின்மை வரலாம். அன்றாட வேலைகளைச் சரியாக செய்ய முடியாது. சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை ஆகியவற்றால் ஏற்படுகிற கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, முடி உதிர்தல் போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.
வலி நிவாரணி மருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவதாலும், மருந்துகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும் கை, கால் குடைச்சலைக் குணப்படுத்தலாம். வாரத்தில் 5 நாட்கள் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடங்கள் செய்வதும் அவசியம். எளிதில் செரிக்கும் புழுங்கலரிசி உணவு, கஞ்சி, எண்ணெய் இல்லாத கோதுமை ரொட்டி, உளுந்து, வெந்தயம் சேர்ந்த உணவு வகைகள், ரசம் போன்றவற்றை கை, கால் குடைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவது நன்மை தரும். கிழங்கு வகைகள், காரம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக உப்பு கூடாது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல், தாங்களாகவே மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. மருந்து கலந்த எண்ணெய், ஆயின்மென்ட், ஸ்பிரே ஆகியவற்றை மருத்துவர் வழிகாட்டுதலுடன் பயன்படுத்தலாம். இதனால் தற்காலிக நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தண்டுவட பாதிப்பினால் ஏற்படும் கை, கால் குடைச்சலுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பது அவசியம். பிரச்னைக்கான தக்க காரணத்தை ஆராய்ந்து அறிந்து நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை மேற்கொண்டால் இந்த குறைபாட்டை சரி செய்யலாம்.மருத்துவ ஆலோசனை
சூவிங்கம் மெல்வதால் உணவு சாப்பிடுவது குறைந்து உடல் எடை குறைய வாய்ப்புண்டா?
அதிக தடவை உணவு உட்கொள்வதைச் சூவிங்கம் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், அந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் சாப்பிடும் வேளையில் அதிக உணவு உட்கொண்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. சூவிங்கம் மெல்லுபவர்கள் இயற்கையான பழங் களைவிட, சத்தற்ற உணவையே அதிகம் விரும்புகின்றனர்.
பூண்டு சாப்பிடுவதால் தீய விளைவுகள் உண்டா?
பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. அது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீங்கள் ரத்தத்தை இளக்கும் மாத்திரையை உட் கொள்பவராக இருந்தால், பூண்டைச் சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். பூண்டுக்கு ரத்தத்தை இளக்கும் தன்மை உண்டு.
உடல் பருமனுக்கும் இறப்புக்கும் உள்ள தொடர்பு?
டைப் 2 வகை நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆகியவை நேரடியாக உடல் பருமனுடன் தொடர்புடையவை. அமெரிக்காவில் நிகழும் அய்ந்து மரணங் களில் ஒன்று உடல் பருமனால் ஏற்படுகிறது.
-விடுதலை,1.6.15

திங்கள், 7 நவம்பர், 2016

நோய் காட்டும் கண்ணாடி


சிறுநீர் என்பது ஒரு நோய் காட்டும் கண்ணாடி என்றால் மிகையில்லை. இதைப் பரிசோதிப்பதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் கண்டறிய முடியும். இந்த வாரம் மேலும் சில பரிசோதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

யூரோபிலினோஜன் பரிசோதனை

கல்லீரலில் சுரக்கும் பித்தநீரின் ஒரு பகுதி ரத்த ஓட்டத் தில் கலந்து, சிறுநீரகத்தை அடையும். அங்கு யூரோபி லினோஜனாக மாற்றப்பட்டுச் சிறுநீரில் வெளிப்படும். அடுத்து இது யூரோபிலின் எனும் வேதிப்பொருளாக மாறும். இதுதான் சிறுநீருக்குக் கொஞ்சம் மஞ்சள் நிறத்தைத் தருகிறது. எனவே, இது குறிப்பிட்ட அளவில் சிறுநீரில் இருக்கும்.

இது சிறுநீரில் இல்லவே இல்லை என்றால், பித்தநீர்ப் பாதை அடைத்துக்கொண்டுள்ளது என்பதைத் தெரி விக்கும் முக்கியமான தடயம் அது. எப்படியெனில், இந்த நோயின்போது பித்தநீரானது சிறுநீரகத்துக்குச் செல்ல முடியாது. அதனால், சிறுநீரில் இது வெளியேறாது. உதாரணத்துக்கு, பித்தப்பை கல், கணையப் புற்றுநோய் போன்றவற்றைச் சொல்லலாம்.

மாறாக யூரோபிலினோஜன் அளவு சிறுநீரில் மிக அதிகமாக இருந்தால் உடலில் கல்லீரல் பாதிப்பு, மலேரியா, அதீத ரத்த அணுக்கள் சிதைவு எனும் பாதிப்பு போன்றவற்றில் ஒன்று இருப்பதாகக் கொள்ளலாம்.

கீட்டோன் பரிசோதனை

முதலில் கீட்டோன் என்றால் என்ன? ரத்தத்தில் சர்க்கரை கட்டுமீறி அதிகரிக்கும்போது, உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ‘கீட்டோன்’ எனும் வேதிப்பொருளை வெளிப்படுத்தும். இது ஆரோக்கியத்தைக் கெடுக்கிற அமிலக்கூறு. இதன் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும்போது, நீரிழிவு நோய் இன்னும் கடுமையாகும். பாதிக்கப்பட்ட நபருக்குக் குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வேகமாக மூச்சு விடுதல், மூச்சுக் காற்றில் அழுகிய பழநாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

நிலைமை மோசமாகும்போது சிறுநீரகமும் மூளையும் பாதிக்கப்படும். நோயாளிக்கு கோமா’ எனும் ஆழ்நிலை மயக்கம் வரும். அப்படிப் பட்டவர்களுக்குச் சிறுநீரில் கீட்டோன் வெளிப்படும். இதைச் சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உறுதிசெய்வது வழக்கம். ஆரோக்கியமாக உள்ளவர்களின் சிறுநீரில் கீட்டோன் வெளியேறாது.

யாருக்கு இது அவசியம்?

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் ரொம்பவே அலட்சியமாக இருப்பவர்கள், கடுமையான நீரிழிவு நோய் இருப்பவர்கள்,  நீரிழிவு நோயுள்ள குழந்தைகள், கர்ப் பிணிகள், கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், நீண்ட காலம் சாப்பிட முடியாமல் இருப்பவர்கள், விரதம் இருப்பவர்கள்.

சிறுநீரில் ரத்தம் - என்ன காரணம்?

ஆரோக்கியமாக உள்ளவர் களுக்குச் சிறுநீரில் ரத்தம் வெளிப்படாது. அப்படி வெளிப்பட்டால் அது சாதாரண நோய்த்தொற்றிலிருந்து புற்றுநோய்வரை எந்த நோயின் காரணமாகவும் இருக்கலாம்.

சில முக்கியமான காரணங்கள்:

சிறுநீரகத்திலும் சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப் பை எனச் சிறுநீர் வெளியேறும் பாதையிலும் நோய்த்தொற்று இருப்பது, சிறுநீரகக் கல் இருப்பது, புராஸ்டேட் வீக்கம் அல்லது புற்றுநோய் இருப்பது, சிறுநீரகத்தில் உள்ள வடிப்பான் களில் அழற்சி ஏற்பட்டிருப்பது, சிறுநீரகத்தில் காசநோய் இருப்பது, சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர்ப் பையில் புற்றுநோய் இருப்பது, சிக்கில் செல் ரத்தசோகை போன்ற பரம்பரை நோய் இருப்பது, விபத்தின்போது சிறுநீரகத்தில் அடிபடுவது,

சிறுநீர் கசடுகள்

சில நோய்நிலைகளில் சிறுநீருடன் பல வேதிப் பொருள்களும் துகள்களும் ரத்த அணுக்களும் சீழ் செல்களும் கலந்து வரும். அவை சிறுநீர்க் கசடுகள் எனப்படுகின்றன. அவற்றை நுண்ணோக்கியில் ஆராய்ந்து தெரிந்துகொள்வதன் மூலம், அந்த நோய்களுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். அவை:

1. சிறுநீரகக் கல் வகையைக் கண்டறியும் பரிசோதனை:

சிலருக்குச் சிறுநீரகக் கல் தோன்றி இருக்கலாம் அல்லது அவை தோன்ற வாய்ப்புகள் இருக்கலாம். அப் போது அவர்களின் சிறுநீரில் அந்தக் கற்களின் துகள்கள் வெளியேறும். இவற்றை நுண்ணோக்கியில் காணலாம். சிறுநீரகக் கல்லில் கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம், ஸ்டுரூவைட் கற்கள், சிஸ்டின் எனப் பல வகைகள் உள்ளன. அவற்றின் வடிவத்தையும் தோற்றத்தையும் வைத்து, அவை எந்த வகைக் கற்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

என்ன பலன்?

ஒருவருக்கு இந்தத் தொல்லை மீண்டும் மீண்டும் ஏற்படும்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள கல் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருந்துகளைச் சாப்பிடுவதும் உணவு முறையை மாற்றிக்கொள்வதும், மீண்டும் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்க உதவும்.

2. ரத்தச் சிவப்பணுக்கள்

சிறுநீரில் ரத்தம் வெளிப்படுவதற்குக் காரணமான நோய்களின் ஆரம்ப நிலையில், சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், ரத்தச் சிவப்பணுக்கள் மிகச் சிறிய அளவில் வெளியேறத் தொடங்கும். இதைக் கண்டறிந்து அந்த நோய்கள் தீவிரமடையாமல் தடுத்துவிடலாம்.

3. ரத்த வெள்ளையணுக்கள்

சிறுநீரில் ரத்த வெள்ளையணுக்கள் வெளியேறுவதை நுண்ணோக்கியில் காண முடியும். சிறுநீரகத்தில் சீழ் பிடித்திருந்தால், வேறு ஏதேனும் அழற்சி ஏற்பட்டிருந்தால் இவ்வகை அணுக்கள் சிறுநீரில் வெளியேறும். சிறுநீர்ப் பையில் நோய்த்தொற்று இருந்தாலும் சிறுநீரில் ரத்த வெள்ளையணுக்கள் வெளியேறும்.

4. சீழ் செல்கள்

சிறுநீரில் சீழ் செல்கள் வெளியேறுமானால், சிறுநீரக நோய்த்தொற்று தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம்.

என்ன காரணம்?

சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்ப் புறவழி ஆகிய இடங்களில் நோய்த்தொற்று காரணமாகப் புண் உண்டாவது,  சிறுநீரகத்தில் காசநோய் ஏற்படுவது, பால்வினை நோய்கள் இருப்பது, புராஸ்டேட் சுரப்பியில் நோய்த்தொற்று உண்டாவது, ரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்களின் பக்க விளைவு, சிறுநீரகப் புற்றுநோய்,

சிறுநீர் கிருமி வளர்ப்புப் பரிசோதனை மற்றும் மருந்துத் தேர்வுப் பரிசோதனை

சிறுநீரில் சீழ் தெரிந்தால், சீழில் உள்ள கிருமிகளின் வகை, அவற்றை அழிக்கும் மருந்துகள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் பரிசோதனை இது. சிறுநீரை ஆய்வுக்கூடத்தில் ஊட்டச்சத்துப் பொருளில் வைத்து வளர்த்து, அதில் எவ்வகை நுண்கிருமிகள் வளர்கின்றன என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. மேலும் அக்கிருமிகள் எந்த மருந்துக்குக் கட்டுப்படும் என்பதையும் இது துல்லியமாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் நோய்க் கிருமிகளையும் சரியாகக் கண்டுபிடிக்கலாம்; அவற்றுக்குச் சரியான மருந்து கொடுத்து நோயையும் முழுவதுமாகக் குணப்படுத்திவிடலாம்.

சளிப்பரிசோதனை:

உடலில் மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய மூன்று இடங்களில் சளி சேரும். இவற்றில் நுரையீரல் சளி முக்கியமானது. காசநோய் ஏற்பட்டவர்களுக்கு நுரை யீரலில் அதிகச் சளி கட்டும். அப்போது அந்த நோயை உறுதி செய்யச் சளிப் பரிசோதனை  செய்யப்படும்.

அதிகாலையில் ஆழமாக இருமி எடுக்கப்படும் சளிதான் பரிசோதனைக்கு உகந்தது. ஆய்வுக் கூடத்தில் கொடுக்கப்படும் குப்பியில் சளியைச் சேகரித்து, உடனே பரிசோதனைக்குக் கொடுத்துவிட வேண்டும்.

ஆய்வுக்கூடத்தில் அதைப் பக்குவப்படுத்தி, நுண்ணோக்கியில் ஆராய்வார்கள். சளியில் காசநோய்க் கிருமிகள் காணப்பட்டால் பாசிட்டிவ் என்று முடிவு தருவார்கள். இது காசநோயை உறுதி செய்ய உதவும். இந்த நோய்க்குச் சிகிச்சை பெற்ற பிறகு, மீண்டும் சளியைப் பரிசோதிப்பார்கள். இதில் காசநோய்க் கிருமிகள் இல்லை என்று தெரிந்தால், நெகட்டிவ் என்று முடிவு தருவார்கள். அப்போது சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.

சிலருக்கு இப்பரிசோதனையில் காசநோய்க் கிருமிகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சளித் தொந்தரவு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்குக் கிருமி வளர்ப்புப் பரிசோதனை மற்றும் மருந்துத் தேர்வுப் பரிசோதனையை செய்ய வேண்டும்.   காசநோய் தவிர நிமோனியா, நுரையீரல் பூஞ்சை நோய் போன்றவற்றுக்குக் காரணமான கிருமிகளையும் சளிப் பரிசோதனையில் காண முடியும்.
-விடுதலை,7.11.16

செவ்வாய், 1 நவம்பர், 2016

தொண்டையில் வீக்கமா?  அது புற்றுநோயாக இருக்கலாம்! 

விதவிதமான புற்றுநோய்களைப் பற்றி தெரிந்த நமக்கு தைராய்டு புற்றுநோயைப் பற்றி தெரியாமல் போனது ஆச்சரியம்தான். பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களின் வரிசையில் தைராய்டு புற்று நோய் எட்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. எல்லா வயதின ருக்கும் ஏற்படக்கூடிய தைராய்டு புற்று நோய், இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக அதி கரித்து வருவதை தி மெட்ராஸ் மெட்ரோ பாலிடன் டியுமர் ரெஜிஸ்ட்ரி  சென்னை என்ற அமைப்பு பதிவு செய்திருக்கிறது.

"பலருக்கும் இதன் தீவிரம் தெரியவில்லை. தைராய்டு புற்றுநோயை குணப்படுத்த, ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதே சிறந்த வழி என்கிறார் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை துணைப் பேராசிரியர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி.

தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டு சுரப்பியில் ஏற்படுகிற கட்டி அல்லது வளர்ச்சியாகும். நாளமில்லா சுரப்பி அமைப்பில் மிக அதிகமாக காணப்படும் புற்றுநோயாக இது இருக்கிறது. ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் எந்த வயதிலும் இது வரக்கூடும். எனினும், ஆண்களைவிட பெண்களிடத்தில் 3 மடங்கு மிக அதிகமாக தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது.

சமீபத்திய ஆய்வுகளின்படி, தமிழ்நாட்டில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டில் 100 சதவிகிதம் அதிகரிக்கலாம். கழுத்துப்பகுதியை அல்ட்ராசவுண்ட் /  ஸ்கேன்   ஆகியவற்றின் மூலம் இமேஜிங் செய்வது அதிகரித்து வருவதால், தைராய்டு புற்று நோய் கண்டறியப்படுவது அதிகரித்திருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

இதனால் இந்த நோய் இருப்பது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிறிய அளவிலான சிகிச்சையை  விரைவில் தொடங்கி எளிதில் குணப்படுத்துவது சாத்தியமாகிறது என்கிறார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 400க்கும் அதிக நோயாளி களுக்கு நான் சிகிச்சை அளித்து வருகிறேன். இவர்களில் 80 சதவிகிதத்தினர் குறைந்த அளவு ஆபத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். சரியான சிகிச்சை மற்றும் தவறாத பின்தொடர் சிகிச்சையின் மூலம் இத்தகைய நோயாளிகள் நல்ல தரமான வாழ்க்கையை வாழ முடியும் என்கிறார் அணு மருத்துவத்துறையின் முதுநிலை சிறப்பு நிபுணர் டாக்டர் ஷெல்லி சைமன்.

பொதுவாக தைராய்டு புற்றுநோயானது, வலியில்லாத தைராய்டு முடிச்சாக வெளிப்படுகிறது. தைராய்டு புற்றுநோய் முற்றிய நிலையை உணர்த்தும் வகையில், கழுத்தின் கீழ்புற முன்பகுதியில் வலி, கழுத்தில் வீங்கிய நிணநீர் கணுக்கள், பேசும் போது கரகரப்பு மற்றும் சுவாசிப்பதிலும், விழுங்குவதிலும் சிரமம் ஆகியவை அறிகுறிகளாகும். உடற்பரி சோதனை, ரத்தப் பரிசோதனைகள், தைராய்டு அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணிய ஊசியின் வழியாக உறிஞ்சி வெளியில் எடுக்கப்படும் பயாப்சி ஆகியவை, தைராய்டு புற்றுநோய்க் கான சோதனைகள்.

தைராய்டு புற்றுநோயானது வளரக்கூடியது, வளராதது  என இரு வகைப் படும். வளரக்கூடிய தைராய்டு புற்றுநோய்க்கு கதிரியக்க அயோடின் சிகிச்சை அளிக்கப் படுகிறது. பாதித்த மற்றும் பாதிக்காத அணுக் களை தனித்தனியே அறிவது கடினம் என்பதால் கதிரியக்க அயோடினை பாய்ச்சும் போது பாதிக்கப்பட்ட அணுக்கள் தூண்டப்படும்.

அவை அயோடினை உள் வாங்கியவுடன், கதிரியக்கம் அவற்றை அழித்துவிடும். ஒட்டுமொத்த தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே முதன்மையான சிகிச்சை யாகும். அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, நோயாளிகளுக்கு கதிரியக்க அயோடின் ஸ்கேன் மற்றும் கதிரியக்க நீக்க செயல் முறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தைராய்டு ஹார்மோனை அகற்றுவது அல்லது தைராய்டை தூண்டி விடுகிற ஹார்மோன் ஊசி மருந்துகளை செலுத்தும் சிகிச்சைகளை மேற் கொள்வதன் மூலம் ரத்தத்தில் உயர் அளவிலான தைராய்டு ஹார்மோனை தூண்டச் செய்யலாம். தைராய்டு ஹார்மோன்களை அகற்றும்போது, மிதமானது முதல் தீவிரமான ஹைப்போதைராய்டிசம் (தைராய்டு சுரப்புக்குறை) ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.  அளவுகளை அதிகரிப்பதற்கான ஊசி மருந்துகளை செலுத்துவதன் மூலம் நோயாளிகள் வழக்கமான வாழ்க்கைமுறையை மேற்கொள் வதில் எந்த சிரமும் இருக்காது என்று நம்பிக்கையூட்டுகிறார் டாக்டர் ஷெல்லி.

அனைத்து புற்றுநோய்களையும் போலவே உரிய நேரத்தில் நோய் கண்டறிதல் மற்றும் உரிய சிகிச்சையை பெறுதல் ஆகியவை அவசியமாகின்றன. ஒரு வெற்றிகரமான தைராய்டு டெக்டமி என்பது, ஒத்துழைப்புடன் கூடிய அணுகுமுறையை மேற்கொள்வதும், தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், நாளமில்லா சுரப்பு மருத்துவர்கள் மற்றும் அணு மருத்துவர் ஆகியோரின் நிபுணத் துவத்தை ஒருங்கிணைப்ப தாகும்.

முழுமையான தைராய்டு சுரப்பியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாமல் தைராய்டு திசு பாதிப்பு பகுதிகளை சிறிதளவு விட்டுவிட்டாலும் அதன் பாதிப்பானது முந்தைய நிலையைவிட பன்மடங்கு அதிகரித்து விடும்  எச்சரிக்கிறார். வேறு எந்த புற்றுநோயையும்விட, தைராய்டு புற்று நோயில் சிகிச்சை மூலம் குணமடைந்து உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் சிறப்பானதாக இருக்கிறது என்ற ஆறுதலான விஷயம்.
-விடுதலை,31.10.16

பக்கவாதம் நேர்கையில்  மூளையில் சேதம் ஏற்படாமல் தடுக்க...


உலக பக்கவாத தினம் 2016, "பக்கவாதம் சிகிச்சை யால் குணப்படுத்தக்கூடியதே" என்ற தகவலையும். அறிவையும் மக்கள் அறியுமாறு முன்னிலைப்படுத்து கிறது. இந்த நோய் குறித்தும் மற்றும் இதனால் விளைகின்ற சேதத்தையும், பாதிப்பையும் கட்டுப் படுத்த உதவுகின்ற அத்தியாவசிய செயல்நடை முறைகள் குறித்தும் விழிப்புணர்வை பரப்புவது இந்த உலக பக்கவாத தின அனுசரிப்பில் முக்கிய மானதாகும்.

பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்பது, மூளையில் எந்தவொரு பகுதிக்கும் இரத்த ஓட்டம் நிகழ்வதில் ஏற்படும் இடையூறால் விளைகின்ற ஒரு மூளை தாக்குதலாகும். ஒரு சில நொடிகளுக்கும் கூடுதலான நேரத்திற்கு மூளைக்கு இரத்த ஓட்டம் செல்வது தடைபடுமானால், மூளைக்கு இரத்தமும், ஆக்ஸி ஜனும் (பிராணவாயு) கிடைக்காமல் போகிறது.

இதனால், மூளையிலுள்ள செல்கள் உயிரிழக்கின்றன மற்றும் மூளையின் அப்பகுதியால் கட்டுப்படுத்தப் படும் உடலின் செயல்திறன்கள் இழக்கப்பட்டு விடுகின்றன. மூளைக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் செல்வதை தடைசெய்கின்ற பக்கவாதம் ஏற்படும் போது, ஒவ்வொரு நொடிக்கும் 1.9 மில்லியன் நரம்பு உயிர் அணுக்கள் பாதிக்கப்படக்கூடும்.

தலை அல்லது கழுத்தில் ஏற்படும் விபத்தின் தாக்கம் அல்லது காயமானது, 50 வயதுக்கும் குறை வான நோயாளிகள் மத்தியில் ஆக்ஸிஜன் குறை பாட்டை ஏற்படுத்துகின்ற பக்கவாத பாதிப்பு ஏற் படும் வாய்ப்பை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. பக்கவாத பாதிப்பு தொடக்க நிலையிலேயே கண்ட றியப் படுமானால், நீண்டகால செயல்திறனிழப்பு ஏற்படாமல் தடுக்க உரிய நேரத்திற்குள் பயனளிக் கக்கூடிய சிகிச்சையை வழங்கமுடியும்.

இதுகுறித்து ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனையின் நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர்.சதீஷ் குமார் தெரிவித்திருப்ப தாவது: சமீபத்தில், சென்னையில் மீஞ்சூருக்கு அருகே ஒரு வாகன விபத்தில் சிக்கியதற்குப் பிறகு, 26 வயதுள்ள ஜெகதீஷ் என்ற நபர், ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட் டார்.

முகத்தில் அதிக இரத்த கசிவுள்ள காயத்தோடு குழப்பமடைந்த நிலையிலும், தான் எங்கிருக்கிறோம் என்று தெரியாத நிலையிலும் அவர் அங்கு கொண்டுவரப்பட்டார். பக்கவாத சிகிச்சை பிரிவால் அவர் தொடக்கத்தில் பரிசோதிக்கப்பட்டபோது, மூளை - நரம்பியல் பாதிப்பு இல்லாதது கண்டறியப் பட்டது.

எனினும், ஒரு சில மணிநேரங்களுக் குள்ளாகவே, மருத்துவமனையில் இருக்கும்போது உடலின் இடது புறத்தில் பக்கவாத பாதிப்பு இருப் பதை செவிலியர் கண்டறிந்தார். உடனடியாக, கழுத்து மற்றும் இரத்த நாளங்களுக்கான ஊவு ஆஞ்சியோகிராபி (மூளைக்கு செல்லும் இரத்த நாளங்கள் மீது விரிவான நிழற்படங்களை வழங்கக் கூடிய எக்ஸ்ரேக்களை பயன்படுத்துகின்ற) எடுக்கப் பட்டது.

தமனி சார்ந்த அழுத்தத்தின்கீழ் இரத்தம் தமனியின் சுவருக்குள் நுழைவதையும் மற்றும் அதன் அடுக்குகளை பிரிக்கவும் அனுமதிக்கிற முக்கியமான தமனிகளுள் ஒன்றில் கிழிசல் ஏற்பட்டிருப்பதை அது வெளிப்படுத்தியது. நுண் இரத்தத்துகள் கட்டிகள் ஏற்படுவதற்கான காரணமாக இது இருந்து பக்கவாதத்தை விளைவித்திருக்கக்கூடும் என்பது அறியப்பட்டது," என்று கூறினார்.

நோயின் அறிகுறிகளில் விரைவாக அடையாளம் கண்டு, பக்கவாத தாக்குதல் ஏற்பட்டதிலிருந்து 4 மணி நேரங்களுக் குள்ளாக (வின்டோ பிரியட்) உரிய மருத்துவ சிகிச்சையை வழங்குவதன் மூலம் பக்கவாத பாதிப்புள்ள நோயாளிகளைக் காப்பாற்றி அவர்கள் தொடர்ந்து வாழ வகை செய்யமுடியும். நோய் நிலையானது ஆரம்பத்திலேயே கண்டறியப் படுமானால், சிகிச்சையின் விளைவு பொதுவாகவே நன்றாக இருக்கும் என்றார் அவர்.
-விடுதலை,31.10.16