புதன், 22 ஆகஸ்ட், 2018

நோய் கண்டறிதலின் அபார வளர்ச்சி



மருத்துவத்தில் நோய் கண்டறிதல் என்பது மிக முக்கியமான அங்கமாக உள்ளது.  துல்லியமாக நோயை கண்டறிந்துவிட்டால் சிகிச்சையளிப்பதில் பாதி வெற்றியடைந்தது போலத்தான். இந்த நோய் கண்டறியும் பரிசோதனை முறைகள் முன்பு  எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, நாளை எப்படி இருக்கும் என்று பொது நல  மருத்துவர் பிரசன்னா விக்னேஷிடம் பேசினோம்...

ஸ்கேனிங் தொழில்நுட்பம் அன்று

முன்பு நோய் கண்டறிதலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து செயல்முறைகளும் கைப்படவே  பரிசோதிக்கப் பட்டது. ரத்தம் எடுப்பதிலிருந்து அதற்கான  தயார் செய்வது, பின்பு  அதனை ரத்தத்தில்  கலப்பது, பின்பு சில மணி நேரங்கள் கழித்து அதன் அளவுகளைப்  பார்ப்பது, இவை அனைத்தும் தகுதி வாய்ந்த டெக்னீசியன்கள் மூலம்  அறியப்பட்டு பின்  அவை முடிவுகளாக தரப்பட்டது.

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தைராய்டு நோயை கண்டறிவதற்கான  பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் காலையில் ரத்த மாதிரி கொடுத்தால் மறுநாள்  மாலை 6 மணியளவில் முடிவுகள் கிடைக்கும் அதுவும் குறிப்பிட்ட மெடிக்கல் லேப்களில்  மட்டும் அந்த வசதி உண்டு. அதற்கான அன்றைய கட்டணம் 1200 ரூபாயாக இருந்தது.  அதாவது  ஒன்றரை பவுன் தங்கத்துக்கு ஈடானது. ஆனால் இன்று ரத்தம் கொடுத்த அடுத்த  15 நிமிடத்தில் நமது பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு முடிவுகள் கொடுக்க இயலும்.

ஸ்கேனிங் தொழில்நுட்பம் இன்று

தற்போது ரத்த பரிசோதனையில் அனைத்து செயல் முறைகளும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்  அனலைசர் எனும்  முறையில் ரத்த மாதிரிகளை பிரித்து அதனுள் வைத்து விட்டால் போதும்.  முடிவுகளை அதுவே ஆராய்ந்து அறிவிக்கும். பின்  முடிவுகளை நாம் கைப்பட டைப் செய்து  ரிப்போர்ட்டாக நோயாளிகளுக்கு கொடுக்கலாம்.

ரோபோட்டிக் தொழில்நுட்பம் இன்று முழுவதும் தானியங்கி ரோபோட்டிக் தொழில்நுட்ப வசதி  வந்து விட்டது. ரத்த மாதிரிகளை ட்ராக்கில்  வைத்துவிட்டால் போதும். அதுவே அதனை  பிரித்து அதற்கு தேவைப்படுகிற அளவு ரத்தத்தை தயார் செய்து மூடி, கழட்டி அந்தந்த  மெஷின்களில் அதனைக் கொண்டு சென்று அனைத்தும் பரிசோதித்து பின்னர் மூடிவிட்டு  வெளியே வைத்துவிடும்.

ஒரு மணி நேரத்திற்கு 4000 பரிசோதனைகளைக் கையாளும் அளவுக்கு இதில் திறனுள்ளது.  மேலும் அனைத்தும் தானியங்கி முறையில் நடைபெறுவதால் மனிதர்களால் ஏற்படும்  தவறுகள் ஏதும் இதில் நடைபெறாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி  ரோ போட்டிக் பரிசோதனைக் கூடத்தின் முடிவுகள் மிகவும் துல்லியமாக இருப்பதற்கு இதுவே  முக்கியக் காரணம்.  இந்தியாவில் தற்போது மூன்று இடங்களில் மட்டும் இந்த தானியங்கி  ரோபோட்டிக் பரிசோதனை கூடங்கள் உள்ளது. அதில்  சென்னையிலுள்ள எங்களது  நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தானியங்கி பரிசோதனைக்கூடத்தில் பரிசோதனைகள் செய்வதால் கட்டணங்கள் மிகவும்  அதிகமாக இருக்குமே என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் இந்த நவீன முறையில்  மூலப்பொருட்கள் வீண் ஆகாததாலும், திரும்ப செய்ய வேண்டிய  முறைகள் குறைவதாலும்  கட்டணங்கள் வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே இதில் இருக்கிறது. நாளுக்கு நாள்   முன்னேறி வருகிற தொழில்நுட்பங்கள் மூலம் நோய் கண்டறிவதற்கான  பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் குறைந்து வருவ தையும் நம்மால் காண முடிகிறது.

உதாரணமாக இதுபோன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத மற்ற இடங்களில்  தைராய்டு பரிசோதனை செய்வதற்கு 500 ரூபாய் வரை செலவாகும்.

ஆனால் இதற்கு  இப்போது பரிசோதனை நிலையத்தில் 150 ரூபாயை கட்டணமாகப் பெறுகிறார்கள். அதுபோல   சர்க்கரை நோய் பரிசோதனைக்கான கட்டணத்தை 20 ரூபாய் வரை குறைத்துக்  கொடுக்கின்றனர்.

பொதுவாகவே அனைத்து ரத்தப் பரிசோதனைகளும் மற்ற இடங்களை விட 70 சதவீதம்  வரை குறைவாக உள்ளது. துல்லியமான முடிவுகளை துரிதமாக மிகவும் குறைந்த  கட்டணத்தில் பெறுவதற்கு ரோபோட்டிக் தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கிறது  என்பதை யாராலும் மறுக்க இயலாது. இனி வரும் காலங்களில் இந்த முழு தானியங்கி  பரிசோதனை மய்யங்களின் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை.

சிடி ஸ்கேன்

1980-களில் சென்னையில் முதன்முதலாக டாக்டர் ராமமூர்த்தி அவர்களால் சிடி ஸ்கேன்  நிறுவப்பட்டது. அன்றைய தினத்தில் சிடி ஸ்கேன் தலைக்கு எடுப்பதற்கு 50 நிமிடங்கள்  முதல் 75 நிமிடம் வரை ஆகும் என்ற அளவிலேயே இருந்தது. அதுவரை தலையில் அடிபட்ட  நோயாளிகள் ஸ்கேன் மிசினில் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது.

இன்று தலையில் அடிபட்ட நோயாளிகளுக்கு 10 வினாடிகளில் எடுக்கும் அளவில் மிகவும்  அதிநவீன சிடி ஸ்கேன் மெசின்கள் தமிழ்நாட்டில் வந்துள்ளது. இரண்டு நொடிக்குள் முழு  ஸ்கேன் எடுக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த நவீன  ஸ்கேன் கருவிகள் இருக்கிறது.  கட்டணங் களும் பெருமளவில் குறைந்துள்ளது. இனிவரும் காலங் களில் மொபைல்  ஆம்புலன்ஸ் எனும் நடமாடும் வாகனங்களில் சிடி ஸ்கேன் உலாவும் என்பது எவ்வித  அய்யமும்  இல்லை.

எம்.ஆர்.அய். ஸ்கேன்

எம்.ஆர்.அய் மிசின்கள் முதன்முதலாக 0.2  எனப்படும் அளவில் இருந்தது. அதில்  முதுகுத்தண்டுக்கு எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுக்க முன்பு 45 நிமிடம் முதல் 75 நிமிடம் வரை  ஆகும் என்ற நிலையிருந்தது. ஆனால், இன்று உள்ள 1.5   ஸ்கேனில் மொத்த  முதுகுத்தண்டையும் 15 முதல் 20 நிமிடங்களில் பார்க்க முடிகிறது.

இன்று மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் அனை வரும் ஆதாரபூர்வமாக ஆராய்ந்த பின்னரே  அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவர் கீழே  விழுந்து கை ஒடிந்திருப்பது நன்றாகவே தெரிந்தாலும், முதலில் எக்ஸ்ரே எடுத்துவிட்டு பின்  அந்த எக்ஸ்ரே முடிவுபடியே அடுத்தடுத்து சிகிச் சையை மேற்கொள்ள ஆயத்தமாகிறார்கள்.

எனவே, முன்பு பரிசோதித்து பார்த்து மருத்துவம் செய்த முறை மாறி, இன்று பரிசோதித்து  பார்த்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சிகிச்சையினை தொடரும் நிலைக்கு  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பெரிதும் உதவுவது எக்ஸ்ரே, சி.டி எம்.ஆர்.அய் மற்றும்  ரத்தப் பரிசோதனைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது!

- விடுதலை நாளேடு, 20.8.18

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

சளிப் பிரச்சினைக்கு காரணம்?

நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும்தாம் சைனஸ் பிரச்சினைக்கு முக்கியக் காரணங்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போதும், சைனஸ் தொல்லை கொடுக்கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, பாலிப் எனும் மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்சினையைத் தூண்டுகின்றன.

அழற்சியே அடிப்படை

மாசடைந்த காற்றில் வரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும்போது, அங்குள்ள சளிச் சவ்வு வீங்கி அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நிணநீர் திரவம் சுரந்து, மூக்கு வழியாக வெளியேறும். ஜலதோஷம் பிடித்தால், தூசு, புகை காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், மிகவும் குளிர்ச்சியானதைச் சாப் பிட்டால், பனியில் நடந்தால், மழையில் நீண்ட நேரம் நனைந்தால் இதே நிலைமைதான்.

சைனஸ் அறையில் அழற்சி அதிகமாகும்போதும், மூக்கில் சதை வளரும்போதும், இந்த நீர் வெளியேற முடியாத அளவுக்கு மூக்கு அடைத்துக்கொள்ளும். அப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருப் பார்கள். இதனால் சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமடையும்.

அறிகுறிகள் என்ன?

அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொது வான அறிகுறிகள். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலிக்கும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டை யில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்துகொள்ளும்.

பரிசோதனைகள் என்ன?

சைனஸ் தொல்லையைக் கண்டறிய முகத்தை எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.அய். ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். இப்போது மூக்கு எண்டாஸ்கோப்பி பரிசோதனை மூலமும் சைனஸ் பாதிப்பைத் துல்லியமாகக் கணிக்க முடிகிறது. இவற்றுடன் பொதுநலன் அறியும் ரத்தப் பரிசோத னைகள், ஒவ்வாமைக்கான பரிசோத னைகள், சளிப் பரிசோதனைகள் ஆகியவையும் தேவை.

இந்தப் பிரச்சினைக்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணியாக இருப்பதால், அந்த ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையைத்தான் முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த மருத்துவர் களின் பரிந்துரையுடன் சில மாத்திரைகளைச் சாப்பிடலாம். மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது அவசரத்துக்கு உதவும். ஆனால், இதையே தொடர்ந்து மேற்கொள்வது நல்லதல்ல.

சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பது போலிருக்கும். ஆனால், நாளடைவில் இதனால் நிவாரணம் கிடைக்காது. இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரே யரைப் பயன்படுத்தலாம். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு இதைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்தி, காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகி, சுலபமாக வெளியேறிவிடும். தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டி பயாடிக் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

எண்டாஸ்கோப்பி உதவும்!

இதற்கு எண்டாஸ்கோப்பி உதவியுடன், பலூன் சைனுபிளாஸ்டி  எனும் நவீன சிகிச்சை முறையில், முழு நிவாரணம் அளிக்க முடியும். சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இது இலவசமாகச் செய்யப்படுகிறது.

செய்யக் கூடாதவை என்ன?

# அய்ஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவு வகைகள் கூடாது

# பனியில் அலையக் கூடாது.

# புகைப்பிடிக்கக் கூடாது.

# புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது.

# மூக்குப்பொடி போடக் கூடாது.

# அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது.

# விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது.

# மூக்கடைப்பைப் போக்கும் சாதாரண இன்ஹேலரை மருத்துவர் கூறாமல் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.

-  விடுதலை நாளேடு, 13.8.18