சனி, 26 அக்டோபர், 2019

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்

நூல்: அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்

ஆசிரியர்கள்: டாக்டர் பூ.பழனியப்பன், ப.சுமங்கலி

வெளியீடு:திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,  

                 பெரியார் திடல், 84/1 (50),

                 ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி,  

                  சென்னை - 600007.

                தொலைபேசி: 044-26618163

பக்கங்கள்: 200   விலை: ரூ.125/-

 

மாதவிடாய் நின்று போன நிலை

மாதவிடாய் என்பது கருப்பையிலிருந்து(Uterus) கருப்பையின் சுவர்களில் படிந்துள்ள குருதியும் வேறு சத்துப் பொருள்களும் உரிய பருவத்தில் _ பருவந்தோறும் _ முறையாகப் பெண்குறி வழியாக வெளியேறும் செயலாகும். இச்செயல் கரு உண்டாகத் தகுதியுள்ள பெண்களிடத்தில் மட்டும் நடைபெறுகின்றது.

பொதுவாகப் பெண்களுக்கு முதல்முறையாக மாதவிடாய் ஏற்படல் _ பூப்பெய்தல் என்பது

11 _ 16 வயதுக்குள் நடைபெறும். 11 வயதுக்கு முன்னும் நடைபெறலாம். மாதவிடாய் ஏற்படல் ஒரு மாதத்திற்கு _ 28 நாள்களுக்கு ஒருமுறை என்கிற நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயலாகும்; வேறுபட்டும் நடைபெறுவது உண்டு. பெண்களுக்கு 45 வயதுவரை மாதவிடாய் நடைபெற்றுக் கொண்டிருக்கும்; சிலருக்கு 40 வயதிலேயேகூட நின்று விடும்; சிலருக்கு 45 வயதுக்குப் பின்னரும் தொடரும்.

மாதவிடாய் ஏற்படுதலில் எத்தகைய சிக்கலும் இல்லையென்றால்தான் கரு உண்டாகும்; மகப்பேறு நிகழும். மாதவிடாய் இல்லையெனில், மகப்பேறு இல்லை. குழந்தை பிறந்து சில மாதங்களில், மாதவிடாய் வராமலே (இல்லாமலே) கரு உண்டாக வாய்ப்பு உண்டு.

மனித உயிரி - கரு

ஒவ்வொரு மனித உயிரியும் (Human being) பெண் முட்டை செல் _ Egg cell _ பெண்ணின் உயிர் உற்பத்தி செல் என்கிற  Ovum ஒன்றும், ஆணின் உயிர் உற்பத்தி செல் என்கிற  Sperm ஒன்றும் இணைந்து கருவாவதன் மூலமே உண்டாகின்றது. கருவுறுதல் இல்லையெனில் உயிர்களின் உற்பத்தியில்லை.

பெண்களிடத்தில் இந்த உயிர் உற்பத்தி முட்டைகளை  (Ova) உற்பத்தி செய்பவை இரு முட்டைப் பைகளேயாகும்(Ovaries) முட்டைப் பைகளினுள் இருக்கும் முட்டைகள் ஒவ்வொன்றும் தனித்தனி சிறு பைகளில் (Sac) _ உறைகளில் இருக்கின்றது. இந்தச் சிறுபைகளுக்கு ஆங்கிலத்தில் ஃபாலிக்கிள்ஸ் (Follicles) என்று பெயர். ஒவ்வொரு மாதமும் முட்டைகளில் ஒன்று மட்டுமே முதிர்ச்சியடைகின்றது. முதிர்ச்சியடைந்த முட்டை (Ovum)யின் சிறு பை _ உறை வெடிக்கின்றது; முட்டை வெளிவருகின்றது. பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு முட்டை மட்டுமே முதிர்ச்சியடைந்து வெளிவரும். இச்செயலுக்கு _ முட்டை வெளியேற்றப்படும் செயல்  Ovulation என்று பெயர்.

சிறு பையிலிருந்து வெளியில் தள்ளப்பட்ட முட்டை வெளியேறும் குழாய்கள் ஒன்றின் வழியாக  Fallopian tube or Oviduct வெளிவரும். இப்பயணம் முடிய 4, 5 நாள்கள் ஆகும். அப்பொழுது பெண்குறி வழியே கருப்பையைக் கடந்து (Uterus) இந்த வெளியேறும் குழாய்க்கு (Fallopian tube) ஆணின் உயிர் உற்பத்தி செல் (Sperm) _ உடல் உறவு நிகழ்ந்தால் வரும். அவ்வாறு அது (Sperm) வந்திருந்தால் முட்டை செல் அதைச்சந்திக்கின்றது. இரு செல்களும் (பெண் _ ஆண்) இணைந்து கரு (Zygote) உண்டாகின்றது. இவ்வாறு உண்டாகும் கரு, கருப்பைக்குள் வருவதற்கு முன்னரே, இக்கருவை வளர்க்க கருப்பை தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.

அதாவது கருப்பையின் சுவர் பஞ்சு போன்று உறிஞ்சும் இயல்பைப் பெறுகின்றது. அச்சுவரில் குருதியும் சத்துப் பொருள்களும் _ திசுக்கள் படிகின்றன; சுவர் தடிப்பாகின்றது. கருப்பைக்குள் வந்த கரு கருப்பையில் ஊன்றி விடுகின்றது. படிந்த பொருள்கள் கருவுக்கு உணவாகின்றன.

ஹார்மோன்கள் - இயக்குநீர்

வெளியேறும் குழாய் ஒன்றின் வழியே பயணஞ் செய்து கொண்டிருக்கும் முட்டை _ (Ovum) ஆணின் உயிர் உற்பத்தி செல்லைப் பெற்றுக் (Sperm) கருவாகும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், கரு உருவாகாத நிலையிலும் கருப்பை (Uterus) கருவை ஏற்கத் தன்னைத் தயார்நிலையில் வைத்துக் கொள்கின்றது. கருவாக உருவாகாத முட்டை கருப்பையை அடைந்து உடைந்து விடுகின்றது.

கரு வராத நிலையில் _ கரு இல்லாத நிலையில், கருப்பையில் படிந்துள்ள பொருள்கள் பயனற்றதாகி விடுகின்றன. எனவே, சுவரில் படிந்த பொருள்களாகிய குருதி, திசுக்களின் இளகிய கூழ்ப் பகுதி ஆகியவை பெண்குறி வழியே வெளியேறுகின்றன. இதுவே மாதவிடாயாகும். ஒவ்வொரு மாதவிடாய் முடிந்தவுடனே கருப்பை கருவை ஏற்கத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் வேலையைச் செய்கின்றது.

ஹார்மோன்கள் என்பவை நாளமில்லாத சுரப்பிகள் (Ductless glands - Endocrine glands) சுரக்கும் இயக்குநீராகும். இது நேரடியாகவே குருதியில் கலக்கின்றது.

நாளமில்லாத சுரப்பிகளைத் தவிர திசுக்களில் இருக்கும் சில தனிவகை செல்களும் _  Special cells _ ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த செல்கள் நாளமில்லாத சுரப்பி வகைகளைச் சேர்ந்தவை அல்ல. இங்கு இருவகை ஹார்மோன்களும் செயல்படுகின்றன. உடல் இயல்பான நிலையில் இயங்க ஹார்மோன்கள் காரணமாக அமைகின்றன என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்.

ஹார்மோன்களின் வேலை

மாதவிடாய் முறையாக நடைபெற காரணமாக அமைபவை பிட்யூட்டரி சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களேயாகும். சான்றாக ஒவ்வொரு முட்டையையும் சுற்றி உறை போன்றிருக்கும் சிறு பையின் செயலைத் தூண்டுவது ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனாகும் (Follicle Stimulating Hormone) (FSH) . இந்த ஹார்மோன் தூண்டுவதால்தான் முட்டையுறைப் பை (ஃபாலிக்கிள்ஸ்) எஸ்ட்ரோஜன்  (Estrogen) என்னும் ஹார்மோனைச் சுரக்கின்றது. அதனால்தான் கருப் பை, கருவை ஏற்கும் நிலையை அடைகின்றது. அடுத்து லூட்டினைசிங் ஹார்மோன்  (Luteinizing Hormone) (LH)   முட்டையுறைப்பையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றது.

மேலும் லூட்டினைசிங் ஹார்மோன்(LH) ஃபாலிக்கிள்ஸ்களைத் தூண்டுவதால் கார்பஸ் லூட்டியம்  (Corpus Luteum)  என்னும் ஒரு புதிய அமைப்பு உண்டாகின்றது. இங்கு பிட்யூட்டரி சுரப்பி சுரக்கும் லூட்டியோட்ராபிக் ஹார்மோன்  (Luteotropic Hormone - LH)   கார்பஸ் லூட்டியத்தைத் தூண்டி, புரோகெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோனைச் சுரக்குமாறு செய்கிறது. இந்த புரோகெஸ்ட்ரோன்தான் முட்டையை ஏற்க கருப்பையைப் பக்குவப்படுத்துகின்றது.

மாதவிடாய் நின்றுபோதல்

பெண்களின் ஏதோ ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், முட்டைப் பைகள் (Ovaries)  நான்கு வாரங்களுக்கு ஒருமுறை, ஒரு முட்டையை உற்பத்தி செய்யும் தன்மையை இழந்து விடுகின்றன. ஆதலின் முட்டை (பெண்ணின் உயிர் உற்பத்தி செல்) உண்டாவதில்லை. முட்டை (Ovum)  இல்லையெனில் அது தொடர்பான வேலைகளும் இல்லை. எனவே, மாதவிடாய் நின்று விடுகின்றது. மாதவிடாய் 40 வயதுக்கு முன்னும் நின்று போகலாம்; 45 வயதுக்குப் பிறகும் நின்று போகலாம்.

குறிப்பாக மாதவிடாய் நின்றுபோதல் என்பது ஒரு பெண்ணின் இறுதியும் முடிவுமான மாதவிடாய் எனலாம். ஆனால், இறுதியான மாதவிடாய் என்பதற்குப் பின்னர் 12 மாதங்கள் சென்ற பிறகுதான் அவள் முடிவாக, கடைசியான மாதவிடாய் நின்று போதலை அடைகிறாள் என்று கூறுதல் வேண்டும். மாதவிடாய் நின்று போதல்(Menopause) என்பதற்குரிய இலக்கணமும் இதுதான்.

மாதவிடாய் நின்று போதல் சிலருக்குத் தொல்லையின்றி இயல்பாக _ சிறுகச்சிறுக நாளடைவில் நின்றுபோகும்; சிலருக்குத் திடீரென நின்று போகலாம். சிலருக்கு மாதவிடாய் போக்கு பல நாள்கள் தொடர்ந்த பின்னர் நின்றுபோகலாம். மாதவிடாய் நின்றுபோதல் என்பது சில காரணங்களால் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதாலும் ஏற்படுகின்றது. கருப்பை நீக்கப்பட்டாலும் முட்டைப் பைகள் அவற்றின் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆக முட்டைப் பைகள் (Ovaries)  நீக்கப்பட்டாலும் மாதவிடாய் நின்றுபோகும்  (Surgical Menopause).

சில நோய்களுக்காகக் கதிர்வீச்சு மருத்துவத்தைப்  (Radiotherapy) பயன்படுத்து கின்றபொழுது கதிர்வீச்சால் முட்டைப் பைகள் பாதிக்கப்பட்டு எஸ்ட்ரோஜென்  (Estrogen) என்னும் ஹார்மோன் உற்பத்தியாவதில்லை. அதனால் மாதவிடாய் நின்று போகின்றது. ஆக, மாதவிடாய் 1. இயற்கையாகவும், 2. கருப்பை, முட்டைப் பைகள் ஆகியவை நீக்கப்படுவதாலும், 3. கதிர்வீச்சால் முட்டைப் பைகள் பாதிக்கப்படுவதாலும் நின்று போகின்றது.

விளைவுகள்

மாதவிடாய் நின்றுபோகும் சமயத்தில் சிலருக்குப் பல தொல்லைகள் உண்டாகின்றன. மாதவிடாய்க்கும் ஹார்மோன்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் திடீரென ஏற்பட்ட புதிய நிலையை உடல் சரிசெய்து கொள்வதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.

மேலும் பெண்கள் பெண்மையுடனும், மகிழ்வுடனும், உறுதியுடனும், உடல் வலிமையுடனும் வாழக் காரணமாக அமைபவை ஹார்மோன்களேயாகும். அவற்றுள் மிக முக்கியமானது எஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனேயாகும். இந்த எஸ்ட்ரோஜென் இன்மையால் பலவகை இன்னல்கள் ஏற்படுகின்றன.

வாசோ மோட்டார் -  (Vasomotor)

வாசோ மோட்டார் என்பது குருதிக்குழாய்ச் சுவர்களின் தசைகளைக் கட்டுப்படுத்தி, குறுக்களவைச் சரி செய்தலாகும். இதில் கோளாறு ஏற்படின் தோலின் நுண்குருதிக் குழாய்கள் முறையாகத் திடீரென்று விரிவடைகின்றன. அப்பொழுது உடல் மீது அனல் வீசுதல் போன்ற உணர்ச்சி ஏற்படும்; எரியும்; அனல் வீசும் அடுப்பின் அருகில் அமர்ந்திருப்பதுபோல் இருக்கும்; வியர்த்துக் கொட்டும். இரவில் ஆடைகள் நனைந்து போகுமளவுக்கு வியர்வை உண்டாகும். இத்துடன் மயக்கம், படபடப்பு ஆகியவையும் ஏற்படும்.

நியூரோ என்டோக்ரின்  (NEURO ENDOCRINE)

நரம்பு செல்களில் தனித்தன்மை வாய்ந்த சில செல்கள் இருக்கின்றன. அவை ஹார்மோன்களைச் சுரக்கின்றன. சான்றாக ஆக்சிடோசின்  (Oxytocin), வாசோ பிரசின் (Vaso pressin), ஆகியவை நரம்பு செல்கள் சுரக்கும் ஹார்மோன்களாகும். இவை குருதியுடன் கலக்கின்றன. உடலின் தேவையான பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கு உடலின் செயல்களைக் கட்டுப்படுத்தும் வேலையை நரம்புகளும் நரம்பு செல்கள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களும் செய்கின்றன. இந்த நிலையில் மாறுதல்கள் ஏற்படும்பொழுது கடுகடுப்பு, மறதி, கவனக்குறைவு, தன்னம்பிக்கை இன்மை ஆகியவை ஏற்படும்.

முட்டைப் பைகளில் ஏற்படும் மாறுபாடுகள்

1.            மகப்பேறு ஏற்படும் வாய்ப்புக் குறைதல்

2.            கருமுட்டையில்லாத (Ovum)  மாதவிடாய்ச் சுழற்சிகள்.

ஒரு மாதவிடாய் தொடங்கி முடிந்து அடுத்த மாதவிடாய் ஏற்பட 28 நாள்கள் ஆகும். இதை ஒரு சுழற்சி (Cycle) என்போம். முதல் 14 நாள்களைச் சுழற்சியின் முதல்பாகம் என்றும், இரண்டாவது 14 நாள்களைச் சுழற்சியின் இரண்டாம் பாகம் என்றும் கூறுகிறோம். சுழற்சியின் இரண்டாம் பாகமாகிய 14 நாள்களில் ஹார்மோன்கள் சுரப்பது குறைகின்றது. ஆதலின் இந்த இரண்டாம் பாகச் சுழற்சியை வலுவிழந்த சுழற்சிப்பாகம் என்கிறோம் ( மாதவிடாயின் ஒரு சுழற்சி 14+14 = 28 நாள்களைக் கொண்டது ). இது சிறிதே மாறுபடலாம்.

இன வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்கள்  (Sex Steroids), ஈஸ்ட்ரோஜென்ஸ் (Oestrogens), புரோ ஜெஸ்டிரோன் _ (Progesterone), பிட்யூட்டரி சுரப்பிகள் Inhibin ஆகியவற்றில் மாறுதல்கள் ஏற்படும்.

நரம்பு செல்கள் ஹார்மோன்களைச் சுரப்பதிலும் மாறுதல்கள் உண்டாகும்.

உடலின் வெப்ப நிலை, தூக்கம், மனநிலை, செயல்கள் _  (Behaviour) ஆகியவற்றிலும் வேறுபாடுகள் ஏற்படும்.

மாதவிடாய் நின்றுபோதலின் மாறுதல்கள்

குருதியிலுள்ள முட்டையுறைத் தூண்டு ஹார்மோன்  (FSH) அளவு மாதவிடாய் நின்றுவிட்ட பிறகும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை இயல்பான அளவுக்குமேல் பத்து மடங்கு அதிகமாக உயருகின்றது. அதாவது முட்டையுறைத் தூண்டு ஹார்மோனின்  (FSH)  உற்பத்தி அதிகமாகின்றது. இத்துடன் லூட்டியோட்ராஃபி ஹார்மோனின்(LH)    உற்பத்தியும் கணிசமான அளவுக்கு உயருகின்றது.

ஹார்மோன்கள் அதிகமான இந்த நிலை ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கின்றது. பிறகு இந்த ஹார்மோன்களின் அளவு பெருமளவில் குறைகின்றது. மேலும் மாதவிடாய் நின்ற பின்னர் ஈஸ்ட்ரோஜன், ஆண்ட்ரோஜென் (Androgen) ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தியும் குறைந்து விடுகின்றது. குருதியிலிருக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவுக்கும் உடலின் பருமனுக்கும் எப்பொழுதும் ஓர் உடன்பாடான தொடர்பு(Positive) உண்டு. மற்றபடி தைராய்டு, அட்ரீனல், பாரா தைராய்டு ஆகிய மூன்று சுரப்பிகளில் எத்தகைய மாற்றமும் நிகழ்வது இல்லை.

இந்தியப் பெண்களுக்கு மேல்நாட்டுப் பெண்களைவிட ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாதவிடாய் நின்று விடுகின்றது என்பதை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். பொதுவாக இந்தியப் பெண்களுக்கு 44_48 வயதளவில் மாதவிடாய் நின்று போகின்றது. மேல்நாட்டுப் பெண்களுக்கு 50 _ 51 வயதளவில் மாதவிடாய் நின்றுவிடுகிறது. மனநிலைப் பாதிப்பில், இந்தியப் பெண்களைவிட மேலை நாட்டுப் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், நமது நாட்டுப் பெண்கள், சிறுநீர்ப் பாதை பாதிப்பு, பெண்குறி வழிப் பாதிப்பு ஆகியவற்றில் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த வகைப் பாதிப்பு மேல்நாட்டுப் பெண்களுக்குக் குறைவாகவே ஏற்படுகிறது.

சிறுநீர்ப் பாதை, பிறப்பு வழி பாதித்தல்

URO-GENITAL PROBLEMS

ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் மேற்கூறிய உறுப்புகளின் மேலுள்ள சல்லாத்துணி போன்ற மெல்லிய சவ்வுப்படலம் Epithelium நலிந்து, மெலிந்து போகின்றது. சிறுநீர்ப் பாதையும் பிறப்பு வழியும் எஸ்ட்ரோஜெனைச் சார்ந்து பெறுபவையாகும். மாதவிடாய் நின்று போவதால் இந்தக் கூறு (Factor) _ ஈஸ்ட்ரோஜென் குறைந்து விடுகின்றது. மேற்கூறிய உறுப்புகளுக்கு வலுவளிக்கும் ஈஸ்ட்ரோஜென் இந்த உறுப்புகளின் மேல் செயல்பட முடியாத நிலை ஏற்படுகின்றது. அதன் விளைவாக சிறுநீர்ப் பாதையின் அடிப்பாகம் நலிந்து, மெலிந்து போகின்றது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அவசரமாகச் சிறுநீர் கழித்தல் ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் சிறுநீரை அடக்கி வைக்கும் தன்மையையும் இழந்து விடுகின்றனர். சிறுநீரை அடக்கி வைக்கக் காரணமாக அமைந்துள்ள சுருங்கு தசைகள் செயலிழந்து விடுகின்றன. இதனால் சிரித்தாலோ, இருமினாலோ, உடல் குலுங்கினாலோ அவர்கள் அறியாமலேயே சிறுநீர் கசியும் நிலை உண்டாகின்றது.

ஈஸ்ட்ரோஜென் மாத்திரைகள், பசைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் இக்குறைகளை ஓரளவிற்குத் தவிர்க்கலாம். பெண்குறி வழி பசையின்றி வறண்டு போகும். அங்கு வலியேற்படும். இவற்றை உரிய மருத்துவரின் அறிவுரைக்கேற்பச் செயல்பட்டுச் சரி செய்து கொள்ளல் வேண்டும்.

எலும்புகள் பாதிக்கப்படல்

மாதவிடாய் நின்றுபோகும்பொழுது எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போதல் என்பது நோயாளி அறிந்து கொள்ளாமலேயே மெல்லமெல்ல நிகழும் ஒரு பாதிப்பாகும். இதனால் பெரிதும் பாதிக்கப்படும் எலும்பு தொடை எலும்பின் மேல் பாகமேயாகும் Neck of femur. அடுத்து முதுகு முள்ளெலும்புகள் நொறுங்கிப் போகின்றன. இதனால் உயரம் குறைவதும், கூன் விழுவதும் உடல் ‘ட’ வடிவத்தில் மாறுவதும் ஏற்படுகின்றன. முதுகு வலி ஏற்படுகின்றது; நடமாடும் நிலை குறைகின்றது. முன்னங்கை எலும்பு மணிக்கட்டு அருகில் உடையும் நிலை உண்டாகின்றது. மேலும் பொதுவாக எலும்புகளின் வலிமை குறைவதால் உடலின் எந்த எலும்பும் உடையலாம். அய்ம்பது வயதைக் கடந்த ஆண்களைவிட தாய்மார்களே அதிக அளவில் எண்ணிக்கையிலும் எலும்பு முறிவினைப் பெறுகின்றனர்.

எலும்புகள் தேய வாய்ப்புகள்

1. ஆசிய நாட்டுப் பெண்களும், 2. பரம்பரையாக அதிக எண்ணிக்கையில் எலும்பு முறிவுகளைப் பெற்றவர்களும், 3. குறைவாக ஊட்டச்சத்து உணவினை உண்பவர்களும், 4. இளமையில் போதிய அளவு சுண்ணாம்புச் சத்தினைப் பெறாதவர்களும், 5.மகப்பேறில்லாதவர்களும், 6. நீண்ட நாள்களுக்குப் பிறகு இடைவெளிக்குப் பிறகு ஏற்படும் மாதவிடாய்களை அடிக்கடி பெறுபவர்களும், 7. உரிய காலத்திற்கு முன்னரே மாதவிடாய் நின்று போகும் நிலையை அடைந்தவர்களும், 8. அறுவை சிகிச்சை மூலம் முட்டைப் பைகள் நீக்கப்பட்டவர்களும், 9. ஏதோ ஒரு காரணத்தால் நீண்ட காலம் படுத்த படுக்கையாகக் கிடந்தவர்களும், 10. நீண்ட காலம் தொடர்ந்து கார்ட்டிசோன், Cortisone, தைராய்டு  Thyroid போன்ற மருந்துகளை உட்கொள்ளுபவர்களும், 11. போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களும், 12. புகை, மது ஆகியவற்றின் பழக்கத்திற்கு ஆளாகியவர்களும் எலும்பு முறிதலுக்கு எளிதல் ஆளாவர்.

உலகில் 1990ஆம் ஆண்டு மட்டும் 17 இலட்சம் மக்கள் எலும்பு முறிவுக்கு ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது. மாதவிடாய் நின்றுபோகும் தொடக்கக் காலத்திலேயே ஹார்மோனை ஈடுகட்டும் _ ஈடுசெய்யும் (HRT) மருத்துவத்தைப் பெற்றவர்கள் இத்தகைய எலும்பு முறிவுகளைப் பெருமளவில் தடுத்துக் கொள்ளலாம். வாய்வழியே உட்கொள்ளும் மாத்திரைகள், தோலில் பதிய வைக்கும் வில்லைகள் போன்ற மருந்துகள் மூலம் ஈஸ்ட்ரோஜெனைப் பெறலாம். இம்மருந்துகளைக் குறைந்தது அய்ந்து ஆண்டுகளுக்காவது பயன்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் உரிய பயன் கிடைக்கும்.

இதயம், இதயக் குருதிக் குழாய்கள் பாதித்தல்

பெண்களைவிட ஆண்களே இதய நோய்களால் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றனர் என்னும் ஒரு கருத்து உள்ளது. ஆனால், 60_65 வயதினைக் கடந்துவிட்ட நிலையில் ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேற்கூறிய கருத்து நிலவக் காரணம், இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களில், பெண்களைவிட ஆண்களே அதிக எண்ணிக்கையில் மருத்துவஞ்செய்து கொள்கின்றனர். இதயவலி, போதிய குருதி கிடைக்காததால் இதயத்தில் சில இடங்களில் இதயத் திசுக்கள் மடிதல் (Infraction), குருதி அழுத்தம், மூளைக்குப் போதிய குருதி செல்லாததால் மூளையில் ஏற்படும் திடீர் பாதிப்பு  Stroke, மூளையில் குருதிக் கசிவு போன்ற நோய்கள் மாதவிடாய் நின்று போதலுக்கு முன்னர் பெண்களிடையே குறைவாகவே காணப்படுகின்றன. இதற்குக் காரணம் மாதவிடாய் நின்று போதலுக்கு முந்தைய பருவத்தில் மாதவிடாய் முறையாக நடைபெறும் வயதில் இந்த நோய் வராமல் முட்டைப் பைகள் (Ovaries) தடுக்கின்றன. ஆனால், மாதவிடாய் நின்றுபோன பிறகு இதயம் சுருங்கிச் செயல்படும் தன்மையில் குறைந்து, அதன் இடப் பாகம் தடித்து, முதிர்ந்து போய்ச் செயலில் குறைந்து காணப்படுகின்றது.

மாதவிடாய் நின்று போவதால் மகளிர் உண்ணும் உணவிலுள்ள மாவுப் பொருள்களில் _ கார்போஹைட்ரேட்டுகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குருதியில் அதிக அளவில் சர்க்கரைச் சத்தும், இன்சுலினும் இருப்பதால் குருதிக் குழாய்களின் குறுக்களவு குறைந்து பல தீமைகள் உண்டாகின்றன. மாதவிடாய் நின்று போனதற்குப் பின்னர் இன்சுலின் செயல் முன்பைவிடக் குறைந்து விடுகின்றது. மாதவிடாய் நின்ற பிறகு உடலில் இன்சுலினை எதிர்க்கும் சக்தி உண்டாகின்றது. பெண்களின் உடலில் இடுப்பிற்கு மேலுள்ள பகுதி பருமனாகின்றது. இது பொதுவாக ஆண்களுக்கு ஏற்படும் ஒன்றாகும். குருதியின் கொலஸ்ட்ராலிலுள்ள -  Cholesterol -  கொழுப்புச் சத்துகளில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. நன்மை அளிக்கும் அடர்த்தி குறைந்த லிப்பிடின் (LDL) அளவு குறைகின்றது. இதனால் தீமை ஏற்படும். குருதி அழுத்தம், மாதவிடாய் நின்று போன பிறகு வயது அதிகமானதன் காரணமாக ஏற்படுகின்றது என்றாலும், குருதிக் குழாயின் தன்மை மாறுவதும், குறுக்களவு குறைதலும், எடை கூடுவதும், எஸ்ட்ரோஜென் குறைவதும் குருதி அழுத்தத்திற்கு முக்கிய காரணங்களாகும். இதயம், குருதிக் குழாய்கள் ஆகியவை _ சுருங்கி விரியும் செயலுக்கு ஹார்மோனை ஈடுகட்டும் மருத்துவம் (HRT) பெரிதும் துணை புரிகின்றது. ஆதலின் குருதி அழுத்தம், இதயவலி ஆகியவற்றின் பாதிப்புகள் குறைகின்றன. எனினும் சரியான அளவோடு கூடிய உணவுமுறை, எடை பராமரிப்பு, கொழுப்புச் சத்துகளைக் குறைக்கும் மருந்து வகைகள் ஆகியவற்றிலும் போதிய கவனஞ் செலுத்துதல் வேண்டும். மேலும் புகைபிடித்தலைக் கைவிடல் நலமாகும்.

இவற்றுடன் இதயத் தசைகளிலுள்ள குருதிக் குழாய்களுக்குப் போதிய அளவு குருதி செல்லாத நிலை ஏற்படும் பொழுது இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்சிசன் கிடைக்காது. எனவே, இதயம் பாதிக்கப்படுகின்றது. மேலும் இதயத் தசைகளுக்குக் குருதி மூலம் சத்துப் பொருள்களை எடுத்துச் செல்பவை குருதிக் குழாய்களே.

ஒற்றைத் தலைவலி

ஈஸ்ட்ரோஜென் குருதிக் குழாய்கள் சுருங்கி விடுவதைத் தடுத்து விரிவடையத் துணை புரிகின்றது. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னர் உண்டாகும் தலைவலி Menstural Migraine  எஸ்ட்ரோஜென் குறைவதால் ஏற்படுகின்றது. இவ்வாறே மாதவிடாய் நின்றுபோகும் பொழுது உண்டாகும் தலைவலியும் (Menopausal Migraine) ஈஸ்ட்ரோஜென் குறைவதால் உண்டாவதேயாகும். இத்தகைய தலைவலிகளை நீக்க ஈஸ்ட்ரோஜென் மருந்து வகைகள் பெரிதும் பயன்படுகின்றன. ஹார்மோனை ஈடுகட்டும் மருத்துவத்தின் மூலம் ஈஸ்ட்ரோஜெனைக் கிடைக்கச் செய்வதால் இதயநோய்களின் பாதிப்பிலிருந்து நல்ல அளவில் தப்பித்துக் கொள்ளலாம். மருத்துவ மேற்பார்வையின்றி இந்த மருந்தை நீண்ட காலம் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் சில தீமைகள் கொடுமையானவை என்பதை மறந்து விடலாகாது. சிலருக்கு, குறிப்பாக மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இயல்புக்கு முன்னரே மாதவிடாய் நின்று போதல்

PREMATURE MENOPAUSE

சில சமயங்களில் இயல்புக்கு முன்னரே 35 _ 45 வயதிலேயே மாதவிடாய் நின்று போதலும் உண்டு. இவ்வாறு 100இல் ஒருவருக்கு என்கிற அளவில் உண்டாகும். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் பரம்பரையை முதன்மையாகக் கூறலாம். பொன்னுக்கு வீங்கி என்னும் தொற்று நோய் போன்றனவும் காரணமாகின்றன. காரணம் தெரியாத வழியாலும் ஏற்படுவது உண்டு. இவ்வாறு உரிய காலத்திற்கு முன்னரே மாதவிடாய் நின்று போதல், உரிய காலத்திற்கு முன்னரே முட்டைப் பைகள் செயல்படாமல் போதலேயாகும் _ Premature Ovarian Failure. இத்தகையவர்களுக்கு, சாதாரணமானவர்களை விட அதிக வியர்வை, படபடப்பு, முகத்தில் அனல் வீசுதல் போன்ற நிலை ஆகியவை ஏற்படும். இவர்களுக்கும் ஹார்மோன்களை ஈடுகட்டும் மருத்துவம் செய்யலாம்; பயனும் கிடைக்கும். மேலும் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்டெரோஜென் _  Progesterone  _ ஆகிய ஹார்மோன்களைத் தவிர குறைந்த அளவில் கார்ட்டிசோன் வகை மருந்துகள், பிட்யூட்டரி சுரப்பி வகை மருந்துகள் ஆகியவற்றையும் கொடுக்கலாம். அவை நல்ல பயனைத் தருகின்றன.

ஹார்மோனை ஈடுகட்டும் மருத்துவத்தைத் தொடங்குதல்

இம்மருத்துவத்தை மாதவிடாய் நின்று ஆறு மாதங்களிலிருந்து ஓராண்டிற்குள் தொடங்கலாம். சில சமயங்களில் மாதவிடாய் வந்து கொண்டிருக்கும்பொழுதும் தொடங்கலாம். இம்மருத்துவத்தைத் தொடங்கு முன்னர் குருதிப் பரிசோதனை செய்து எஸ்ட்ராடையால் Oestradiol _ ஃபாலிக்கள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH)   ஆகியவற்றின் அளவைக் கண்டுபிடித்தல் சிறந்ததாகும். சில சமயங்களில் 65 _ 74 வயது உடையவர்களுக்கு இத்தகைய HRT மருத்துவஞ் செய்து எலும்பு முறிவுகளைத் தடுக்கலாம் என்று கருதுகின்றனர். அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்த வகை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதால் இலட்சக்கணக்கான டாலர்கள் செலவாகின்றன. செலவு அதிகமாதலின் நம் நாட்டில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த வகை மருத்துவஞ் செய்து கொண்டு பயன்பெறுகின்றனர். மேலும் அடிக்கடி தவறாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுபவர்கள், வசதி படைத்தவர்கள் ஆகியவர்களால்தான் இந்த மருத்துவ முறையைப் பின்பற்ற இயலும். ஏற்றவகை ஈஸ்ட்ரோஜனைக் கொடுப்பதாலும் அதிக அளவு மருந்தை நீண்டகாலம் கொடுக்காமல் இருப்பதாலும் இம்மருத்துவத்தின் பயனைத் தீமையின்றிப் பெறலாம். தங்கள் குடும்பத்தில் மார்பக நோய்களைப் பெற்றவர்கள் இருப்பின் ஹார்மோனை ஈடுகட்டும் மருத்துவத்தைத் தவிர்த்தல் வேண்டும். எவ்வாறு இருப்பினும், பயனையும் விளைவையும் கருத்திற்கொண்டு மருத்துவத்தைப் பயன்படுத்துதல் நல்லதாகும்.

மார்பகப் புற்று நோய்

உலகெங்கும் இந்நோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகின்றது. அமெரிக்காவில் ஏழு தாய்மார்களுக்கு ஒருவர் என்கிற அளவில் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு என்று கணக்கிட்டுள்ளனர். 1983ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஓர் இலட்சம் தாய்மார்களுக்கு 12 பேர் என்கிற அளவில் இந்த நோய் இருந்ததாகக் கணக்கிட்டுள்ளனர். இப்பொழுது 17.5 பேர் என்கிற அளவில் உள்ளது. இதற்கான காரணங்கள் பலவாறாகப் பேசப்பட்டாலும் நீண்ட நாளைய Hormones உட்கொள்ளுதலும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதிக அளவில் நீண்ட நாள்கள் (5 ஆண்டுகளுக்கு மேல்) ஹார்மோன்ஸ் Hormones உபயோகித்தால் இந்த அபாயம் அதிகரிக்கலாம்.

- உண்மை இதழ் 16 -31. 10 .19