வெள்ளி, 17 டிசம்பர், 2021
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான மருத்துவ எண்கள் இவை..
வெள்ளி, 3 டிசம்பர், 2021
சிறுநீரகக் கற்கள்மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (42)
சிறுநீரகக் கற்கள்
(KIDNEY STONES)
மரு.இரா.கவுதமன்
அறுவை மருத்துவம்: பல நேரங்களில் அறுவை மருத்துவம் மூலமே, கற்களை நீக்க வேண்டிய நிலையும் உண்டாகும். மருந்துகளால் வெளியேற்ற முடியாத நிலையில் அறுவை மருத்துவம் தேவையானதாகும். சிறு நீரகத்திலோ, சிறு நீர்க் குழாய்களில் உள்ள கற்கள், சிறுநீரில் வெளியேறாவிட்டாலும், அளவில் மிகவும் பெரியதாக இருந்தாலும், வலி திடீரென உண்டாகி, மிகவும் அதிகமாக இருந்தாலும், கற்கள் சிறுநீரகச் செயல்பாட்டைப் பாதித்தாலும், சிறியதாக உருவான கற்கள், பெரிதாகும் வாய்ப்பு இருப்பின் அறுவை மருத்துவம் தேவையாகும். சிறுநீர்க் குழாயில் கற்கள் அடைத்துக் கொள்ளும் நிலை சில நேரங்களில் தோன்றக் கூடும். அதனால் சிறுநீர் வெளியேறாமல் அடைத்துக் கொள்ளும். அப்பொழுதும் அறுவை மருத்துவம் செய்ய வேண்டிய நிலை இருக்கும்.
அதிர்வலை உடைப்பு (Shock Wave Lithotripsy):
சிறுநீரகத்திலோ, சிறுநீர்க் குழாய்களிலோ உருவாகி உள்ள பெரும் கற்களை, ஊடுகதிர் மூலமோ, மீள் ஒலிப்பதிவு மூலமோ துல்லியமாகக் கண்டறிந்து அதிர்வலைகளை கற்கள் மேல் பாய்ச்சுவர். அதனால் பருமனான கற்கள் சிறிய அளவாகி விடுவதால் சிறுநீரில் எளிதாக வெளியேறிவிடும். கற்களின் அளவு பெரிதாக இருந்தாலும், மிகக் கடினமான, (உடைக்க முடியாத) கற்களையும், அதிர்வலை உடைப்புக்காகக் கொடுக்கும் மருந்துகளால் மூச்சுத் திணறல் உண்டானாலும் இவ்வகை மருத்துவம் செய்ய முடியாது.
அதிர்வலை உடைப்பு மிகவும் எளிதான, பயனுள்ள மருத்துவமாகும். மருத்துவம் முடிந்த அன்றே வீட்டுக்குச் சென்றுவிடலாம். வழமையான பணிகளில் இரண்டு, மூன்று நாள்களில் ஈடுபடலாம். மருத்துவர்கள் சிறுநீரை சிறிய குடுவையில் பிடிக்கச் சொல்வர். அதன்மூலம் கற்கள் வெளியேறுவதை அறிய முடியும். அக்கற்களை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யும் வாய்ப்பு இதன்மூலம் ஏற்படும்.
அதிர்வலை உடைப்பு மருத்துவம் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பினும் சிலருக்கு, சில நேரங்களில், சில நாள்கள் வரை சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும். பெரும்பாலும் வெற்றிகரமான மருத்துவ முறையாக இது இருந்தாலும், சில நேரங்களில் கற்கள் முழுமையாக உடையாமல், அளவு முழுமையாகக் குறையாமல் அடைப்பை உண்டாக்கிவிடும். அந்த நேரங்களில் மீண்டும் ஒரு முறை மருத்துவம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
சிறுநீர்க்குழாய் உள்நோக்கி (Urethroscopy):
சிறுநீரகக் கற்களையும், சிறுநீர்க் குழாயில் உள்ள கற்களை அகற்றவும் சிறுநீர்ப்பை (Bladder) வழியே சிறுநீர்க் குழாய் வரை செலுத்தி, அதன்மூலம் கற்களை அகற்றுவர். சிறுநீர்க் குழாய் முடிவில் சிறுநீர்ப் பையின் அருகில் இருக்கும் கற்கள் சற்றே கடினமான குழாய்மூலமும், சிறுநீர்க் குழாயின் மேற்பகுதியிலும், சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை மென்மையான குழாய் மூலமும் மருத்துவர்கள் அகற்றுவர். உள்நோக்கி மூலம் கற்களைக் கண்டறிந்து அதை சிறிய பிடிப்பான் மூலம் அகற்றிவிடுவர். சற்றே பெரிய கற்களை உடைத்து உள்நோக்கிக் குழாய் மூலமே அகற்றிவிடுவர். இம்மருத்துவம் முடிந்ததும், சிறுநீர்க் குழாயில் ஓர் உறைக்குழாயைப் (Stent) பொருத்திவிடுவர். இதன்மூலம் சிறுநீர் எவ்விதத் தட்டுப்பாடுமின்றி, சிறுநீர்ப் பைக்கு வந்து சேரும். வெளிப்புற சிறுநீர்க் குழாய் பொருத்துதல் இதன்மூலம் தவிர்க்கப்படுகிறது. இம்மருத்துவம் முடிந்ததும் அன்றே வீட்டுக்குச் செல்லலாம். ஆனால், உறைக் குழாய் ஒருவாரம் முதல் பத்து நாள்கள் வரை அதே இடத்தில் இருக்கும். பிறகு மருத்துவர் அதை எடுத்து விடுவார். அந்த உறைக் குழாயோடு ஒரு மெல்லிய நூலிழை இருக்கும். அதன்மூலம் நோயாளியே அதை எடுக்கும் வசதியும் உண்டு. நீண்ட நாள்கள் அவ்வுறைக் குழாயை எடுக்காமல் விட்டுவிட்டால் நோய்த் தொற்று ஏற்படக்கூடும்.
தோல்வழியாக சிறுநீரகக் கற்கள் அகற்றுதல்:
இம்மருத்துவ முறை மற்ற முறைகளில் செய்ய முடியாத நிலையில் செய்யப்படும் அறுவை மருத்துவம். இம்முறையில் தோல் வழியே, நேரடியாக, ஒரு குழாயைச் சிறுநீரகத்தில் செலுத்தி, கற்களை அகற்றுவார்கள். பெரும்பாலும் மற்ற வகையில் அகற்ற முடியாத அளவில் பெரிய கற்களை இம்முறை மூலம் அகற்றுவார்கள். மருத்துவமனையில் இரண்டு, மூன்று நாள்கள் இருந்து மருத்துவம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆரம்பக் காலங்களில் மிகவும் சவாலாக இருந்த சிறுநீரகக் கற்கள் அகற்றும் மருத்துவம் இன்று மிகவும் எளிமையான ஓர் அறுவை மருத்துவ முறையாக மாறிவிட்டது. முன்-பெல்லாம் தோலைக் கீறி, சிறுநீரகம் சென்று அகற்றப்பட்ட கற்கள், குழாய்கள் மூலம் அகற்றப்பட்டன. ஆனால், வலியற்ற, மருத்துவ-மனையில் தங்கக் கூட தேவையற்ற எளிதான மருத்துவமாக இன்று சிறுநீரகக் கற்கள் அகற்றும் மருத்துவம் மாறியிருப்பது புதிய மருத்துவத் துறை சாதனையன்றோ!
சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்கும் வழிமுறைகள்:
அதிக அளவு குடிநீர் குடிப்பது, மிகவும் நல்ல உணவுப் பழக்கம் இதன்மூலம் தேவையற்ற கழிவுகள் கரைக்கப்பட்டு சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றப்பட வாய்ப்பு ஏற்படும்.
அதிக அளவு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தல் நலம் பயக்கும்.
முட்டை, இறைச்சி உணவு வகைகள் யூரிக் அமிலம் உண்டாக்கும் தன்மை உடையதால் அவற்றைக் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.
ஆரம்ப நிலை மருத்துவம் _ சிறந்த பலனைத் தரும்.ஸீ
-உண்மை இதழ், நவம்பர் 16-30.2021