செவ்வாய், 28 மே, 2024

ஆண்களுக்கான ஆய்வுகள் -அதி நவீன மருத்துவங்கள் (111)


மருத்துவம் விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (111)

உண்மை இதழ்

ஆண்களுக்கான ஆய்வுகள்
மரு. இரா.கவுதமன்

வாழ்வியல் முறைகளில் மாற்றம் (Lifestyle changes)

* சில மருந்துகள் ஆண் கரு வளர்ச்சியைப் பாதிப்பதால், மருத்துவ அறிவுரைப்படி அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* கரு வளர்ச்சியைத் தடுக்கும் சில உணவு வகைகளைத் தவிர்த்தல் நல்ல பலனைக் கொடுக்கும்.
* அடிக்கடி உடலுறவு வைத்துக்-கொள்ளல்.
* கருமுட்டை வெளியேறும் (Ovulation) நாளைக் கணக்கிட்டு அன்று உடலுறவு கொள்ளுதல்.
* தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல்
* இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்த்தல்
* சத்தான உணவுகளை உண்ணுதல்
* மனநலத்தைப் பேணுதல்
* “குழந்தை பிறக்காது என்று நினைக்கும் மனத்தளர்ச்சியை (Depression) அகற்றுதல்
* சரியான மருத்துவ அறிவுரை பெறுதல்

மருந்துகள் (Medicines): மருத்துவர் அறிவுரைப்படி சில மருந்துகள் உட்கொள்ளலாம். இம்மருந்துகள் ஆண் அணுக்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதோடு, அவற்றின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவும். அதனால் மகப்பேறுக்கான வாய்ப்புப் பெருகும்.

ஆண் அணுக்கள் செயல்பாட்டை மீட்டெடுப்பு (Sperm Retrival)
விந்து குறைபாடோ, ஆண் அணுக்கள் வெளியேற்றத்தில் தடையோ, எண்ணிக்கைக் குறைபாடோ, இயக்கக் குறைபாடோ இருப்பின் மருத்துவ உதவியுடன் ஆய்வு செய்து குறைபாட்டைக் களைய வேண்டும்.

அறுவை மருத்துவம் (Surgery): விரையில் சிரை வீக்கம் (க்ஷிமீக்ஷீவீநீஷீநீமீறீமீ) குழந்தையின்மைக்குக் ஒரு காரணமாக அமையும். அறுவை மருத்துவம் செய்வதன்மூலம் இந்தக் குறைபாட்டைச் சீராக்கலாம். மகப்பேறின்மைக்கு இது காரணமென்றால், குழந்தைப்பேறுக்கு வாய்ப்பு ஏற்படும்.

பெண்களுக்கான மருத்துவ முறைகள்:
குழந்தையின்மைக் குறைபாட்டால் பாதிக்கப்-பட்ட பெரும்பாலான பெண்கள் ஒன்று அல்லது இரண்டு மருத்துவ முறைகளால் மகப்பேறு அடையும் வாய்ப்பு ஏற்படும். வேறு சிலருக்கோ, ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முறைகளால் இக்குறைபாட்டை நீக்க முடியும்.

மருந்துகள் மூலம் கருமுட்டை வெளிப்-பாட்டைச் சீராக்குதல்(Stimulating Ovulation with fertility drugs):

கருவுறுதலை ஊக்குவிக்கும் மருந்துகள், கருமுட்டை வெளிப்பாட்டைச் சீராக்கிக் குழந்தையின்மைத் தன்மையைப் போக்க வல்லவை. கருமுட்டை வெளிப்பாட்டில் ஏதேனும் சிக்கல் இருப்பின் இம்மருந்துகள் அதை ஒழுங்குப்படுத்தும் தன்மையுடையவை.

கருவூட்டல் (Intra uterine insemination-IUI): கணவரின் விந்தணுக்கள் முழுத்திறனோடு இருக்கும் பொழுது, குழந்தையின்மை இருந்தால் அந்த விந்தணுக்களை கருப்பையில் செலுத்தி, மருத்துவர்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவர்.

அறுவை மருத்துவம்: (Surgery to restore fertility):உடலியல் அளவில் கருப்பையிலோ, கருக்குழாயிலோ ஏற்படும் குறைகளைச் சரியாக்க அறுவை மருத்துவம் செய்ய வேண்டி இருக்கும். கருச்சுவரில் உண்டாகும் சிறுகட்டிகள் (Endometrial Polyps), கருப்பைக் கட்டிகள் (Fibroids), கருப்பைக் காய வடுக்¢கள் (Intra uterine scar tissue) கருக்குழாய் அடைப்புகள் போன்றவற்றை அறுவை மருத்துவம் மூலம் சரியாக்கி விடுவதன் மூலம், கருவுறுதல் நிகழ வாய்ப்பு ஏற்படும். மாறிவரும் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் “வயிற்றை உள்நோக்கி அறுவை மருத்துவம் (Laproscopic Surgery) மூலம் பெரும்பாலான இக்குறைபாட்டைச் சீராக்கலாம்.

செயற்கை முறை கருத்தரித்தல்: (Assisted Reproductive Technology)

கருக்குழாய்க்குள்ளோ, கருப்பையிலோ ஒன்றிணைய முடியாத பெண் கரு முட்டையையும், ஆண் கருவையும் வெளியே இணைத்துக் கருவை உருவாக்கும் முறையையே செயற்கை முறை கருத்தரித்தல் (ART) என்று அழைக்கிறோம். “சோதனைக் குழாய்க் குழந்தை’’ (Test Tube Baby) என்று பேச்சு வாக்கில் வழங்கப்படும் இம்முறையில் “வெளிச்சோதனை முறை கருக்கட்டல்’’ என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. செயற்கை முறையில் கருமுட்டையுடன் விந்தை இணைத்து, கருவை உருவாக்கி, பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். அக்கரு, முளையாகி, பல செல்களாக வளர்ந்து, குழந்தையாக உருவாகும். நவீன மருத்துவத்தில் பல இடங்களில் இம்மருத்துவ முறை இப்பொழுது கையாளப்படுகிறது. தீர்த்தாடனம் செய்தும், அரச மரத்தைச் சுற்றியும் ஆத்தா கோவில்களில் தொட்டில் கட்டியும், காசி, இராமேஸ்வரம் என்றெல்லாம் “சேத்ராடனம்’’ செய்தும், கண் திறக்காத கடவுளுக்கு சவால்விடும் வகையில் “சோதனைக் குழாய் குழந்தை’’ மூலம் பல ஆயிரக்கணக்கான இணையர்களுக்கு மகப்பேறு உருவாகும் வாய்ப்பை மருத்துவம் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
“பிள்ளைப் பேற்றுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம்’’ என்றும்,
“எதிர்காலத்தில் குடுவைக்குள் குழந்தையை உருவாக்கும் நிலை வரலாம்’’ என்றும் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் ஒரு 70, 80 ஆண்டுகளுக்கு முன்பே “இனி வரும் உலகம்’’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதை எண்ணிப் பாருங்கள்.

செயற்கை முறை கருத்தரித்தல் – சிக்கல்கள்(Complications of Assisted Reproductive Technology):

*ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை பிறப்பு: பல நேரங்களில் செயற்கை முறை கருத்தரித்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இரண்டு, அல்லது மூன்று குழந்தைகள் கூட பிறக்கின்ற நிலை ஏற்படலாம்.
இரத்தப் போக்கு, நோய்த் தொற்று (ஙிறீமீமீபீவீஸீரீ ஷீக்ஷீ மிஸீயீமீநீtவீஷீஸீ): இந்த முறையிலான கருத்தரித்தல் வெளியே நிகழ்வதால் கருவை, கருப்பையில் பொருத்தும் பொழுது, சிலருக்கு இரத்தப் போக்கும், சிலருக்கு நோய்த் தொற்றும் ஏற்படக்கூடும். ஆனால், மருத்துவத்தால் இவற்றைச் சரியாக்கலாம்.
* மனநலம் ஒரு முக்கியமான செயல்-பாடு. பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து, இப்பொழுது குழந்தை பிறக்குமா என்ற கேள்விக் குறியோடு, மனதில் ஏற்படும் குழப்பத்தையும் அதன்பின் விளைவாக ஏற்படும் மனத்தளர்ச்சியையும் தவிர்க்க வேண்டும். பெண்கள் அவர்களின் இணையர்களோடு, உறவினர்களோடு, நண்பர்-களோடு பேசுவது, கலந்துறவாடுவது நல்ல மனநிலையை உண்டாக்கும்.
* மருத்துவர் அறிவுரைப்படி எளிதான உடற்பயிற்சிகள், நல்ல சத்தான உணவு போன்றவை நல்ல முறையில் மகப்பேற்றை உண்டாக்கும். 

ஆண்களுக்கான ஆய்வுகள் -அதி நவீன மருத்துவங்கள் (110)


மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (110)

உண்மை இதழ்

ஆண்களுக்கான ஆய்வுகள்
மரு. இரா.கவுதமன்

ஆண்களின் விந்தும், ஆண் அணுக்களின் எண்ணிக்கையும், அதன் உற்பத்தியும் அதன் இயக்கத்தின் வேகமும், பெண் கருவுடன் இணையும் வாய்ப்பும் இணைந்து செயல்பட்டால்தான் ‘கருவுறுதல்’ (Fertilisation) நிகழும். ஆண்களுக்கு செய்யப்படும் ஆய்வுகள் இந்தத் தொடர் நிகழ்வில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று அறியவும், அதற்கான மருத்துவம் செய்யவும் உதவும். உடலியல் அளவில் ஏதேனும் குறைபாடு (Physical Examination) உள்ளதா என்ற ஆய்வும், ஆய்வுக்கூட சோதனைகளும் செய்யப்பட வேண்டி இருக்கும். உடலியல் குறைபாடு ஏதும் இல்லாவிடில் ஆய்வுக்கூட ஆய்வுகள் (Laboratory test) மேற்கொள்ள மருத்துவர்கள் சொல்வர்.

விந்து ஆய்வு (Semen Analysis): விந்து ஆய்வுகள் ஒரு முறையோ, ஒரு சில முறைகளிலோ செய்ய வேண்டியிருக்கும். ஒரு சுத்தமான கண்ணாடிக் குழாயிலோ, வேறு ஏதாவது சிறிய குப்பியிலோ விந்தை அடைத்து ஆய்வுக் கூடத்தில் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் சிறுநீரில், ஆண் அணுக்கள் உள்ளதா என்று ஆய்வும் செய்ய வேண்டியதிருக்கும்.

ஊக்கி நீர் ஆய்வு (Hormone Testing): இரத்தத்தில் ஆண் ஊக்கி நீர், டெஸ்டோஸ்டிரான் (Testosterone) அளவை ஆய்வு செய்வதன்மூலம் ஊக்கி நீர் சுரப்பில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.

மரபணு குறைபாடு (Genetic Testing): சிலருக்கு மரபணு ஆய்வும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மரபணு குறைபாட்டால் கருத்தரித்தல் நிகழாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்-.

விரைத்திசு ஆய்வு (Testicular Biopsy): சிலருக்கு ஆண் கரு உற்பத்தி விரைகளில் ஏதேனும் கோளாறு இருந்தால் சரியான அளவு உற்பத்தியின்மையோ அல்லது குறை-பாட்டோடு ஆண் அணுக்கள் உற்பத்தி-யாகவோ- கூடும். அதனால் கருத்தரித்தல் நிகழும் வாய்ப்பு தடைபடும். விரைத் திசு, சிறிதளவு எடுத்து, ஆய்வு செய்வதன் மூலம், இதை எளிதில் அறிய முடியும்.

உருவரைவு (Imaging): சில நேரங்களில், “மீள்ஒலி (Ultra-sound) ஆய்வை, விரைகளில் மேற்கொள்வதன் மூலம், விரைகளில் ஏதேனும் நோயோ, குறைபாடோ உள்ளதா என்பதை அறிய முடியும். சில நேரங்களில் ஆண் கரு உற்பத்தி உறுப்புகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை அறிய “காந்த அதிர்வு அலை’’ (Magnetic Resonance Imaging- MRI) ஆய்வும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உருவரைவு ஆய்வுகள் விரைகளில் உள்ள குறைபாடுகளை தெளிவாக அறிய உதவும்.
தாயணை (DNA) ஆய்வுகளும் ஆண்களுக்கு சில நேரங்களில் செய்ய வேண்டியிருக்கும்.
மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். பெரும்பாலானவர்களுக்கு, ஊக்கி நீர்க் குறைபாட்டாலோ, விந்துக் குறைபாட்டாலோதான் மலட்டுத் தன்மை ஏற்படக் காரணமாக இருக்கும். இக்குறைபாடுகளை மருந்துகள் மூலம் எளிதில் குணமாக்க முடியும்.

பெண்களுக்கான ஆய்வுகள்:பெண்களுக்கு ‘கருவுறுதல்’ (Fertilisation) நிகழ வேண்டி இருந்தால் பெண் கரு முட்டை (ovum) சீராக உற்பத்தியாகி வெளியேற வேண்டும். வெளியேறிய கருமுட்டை, கருக்குழாய் மூலம் சென்று, ஆண் அணுவோடு (sperm) இணையும் நிகழ்வு நடைபெற வேண்டும். அவ்வாறு இணைந்து உருவான கரு, கருப்பையை அடைந்து, கருப்பையின் (Uterus) உட்சுவரில் சரியாக ஒட்டிக்கொள்ள வேண்டும். பெண்கள் மலட்டுத்தன்மை என்பது இந்த செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடோ, தடங்கலோ ஏற்பட்டால் நிகழும் குழந்தையின்மையை உண்டாக்கும் குறைபாட்டை அறிய மருத்துவர்கள் பல ஆய்வுகளைச் செய்வர். இவ்வாய்வுகள் மூலம் குறைபாட்டை எளிதில் அறியலாம்.

கருமுட்டை வெளிப்பாடு (Ovulation) ஆய்வு: இயல்பான நிலையில் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு நிகழும் 14ஆம் நாளில் கருமுட்டை வெளிப்பாடு நிகழும். பெண்களுக்கு சுரக்கும் “ஈஸ்ட்ரஜன்’’ (Oestrogen) ஊக்கி நீர் இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணியாகும். ஈஸ்ட்ரஜன் ஊக்கி நீர் குறைபாடு, கரு உருவாவதில் சிக்கலையும் கரு சரியான நேரத்தில் வெளியேறுவதில் சிக்கலையும் ஏற்படுத்தும். இதனால் பெண்-களுக்குக் கருவுறுதல் நிகழாத நிலை ஏற்படும்.

கருக்குழாய் அடைப்பு: கருப்பையிலோ, கருக்குழாயிலோ ஏதாவது சிக்கல் ஏற்படும் நிலை சில பெண்களுக்கு ஏற்படும். அதனால் கருத்தரித்தல், மகப்பேறு இல்லாத நிலை ஏற்படும். கருப்பையில் கோளாறு இல்லாவிட்டாலும், கருக்குழாயில் அடைப்பு சிலருக்கு இருக்கலாம். முதிர்ச்சியடைந்த கருமுட்டை, கருமுட்டைப் பையை விட்டு வெளியேறினாலும் கருக்குழாய் உள்ளே செல்ல முடியாது. அதேபோல் ஆண் அணுக்கள் கருக்குழாய்க்குள் செல்வதும் தடைபடும். அதனால் குழந்தையின்மை ஏற்படும் இவ்வாறு உள்ள கோளாறுகளைக் கண்டறிய ஓர் ஆய்வு செய்யப்படுகிறது. கருப்பை, கருக்குழாய் வரைவி (Hysterosalpingography) என்று இந்த ஆய்வுக்குப் பெயர். ஒரு சிறுகுழாய் மூலம் கருப்பையில் ஒரு நிறமியைச் செலுத்துவர். அதை ஊடு கதிர் நிழற் படம் மூலம் பார்க்கலாம். கருப்பை கோளாறையோ, கருக்குழாய் அடைப்பையோ இதன் மூலம் கண்டறிய முடியும். வேறு ஏதேனும் மற்ற கோளாறுகளையும் இந்த ஆய்வால் அறியலாம்.

சினை முட்டை, சினைப்பை ஆய்வு: (Ovarian reserve testing) சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதலையும், அம்முட்டை முழு வளர்ச்சியுடன் உள்ளதா என்பதையும், முட்டை உருவாகவும், முழுமையாக வளர்ச்சி அடையவும் காரணமான ஊக்கிநீர் ஆய்வுகள் முட்டையின் நிலைப்பாட்டை அறிய உதவும்.

மற்ற ஊக்கி நீர் ஆய்வுகள்: (other Homone Testing) மற்ற ஊக்கி நீர்களான “பிட்யூட்டரி” (Pitutary) ஊக்கி நீர், கருமுட்டை வெளிப்பாட்டை சீராகச் செய்யும். இது ஊக்கி நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்வதால் அதையும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும்.

மீள் ஒலி (Ultra Sound) ஆய்வு: மீள்ஒலி ஆய்வு, கருப்பையில் அல்லது சினைப்பையில் உள்ள நோய்களை அறிய உதவும்.

கருப்பை ஒளி ஆய்வு (Hysteroscopy): மருத்துவர், நேரடியாக கருப்பையில் ஒரு ஒளி உமிழும் குழாயைச் செருகி ஆய்வு செய்யும் முறை.

வயிற்றறை உட்காண் மருத்துவம்(Laproscope): சில நேரங்களில் வயிற்றில் சிறு துளையிட்டு, உள்நோக்கி வழியாக நோயறியும் முறை. கருப்பையின் அமைப்பு, சினை முட்டைப் பையின் அமைப்பை இதன் மூலம் நேரடியாகக் கண்டறியலாம்.

குழந்தையின்மை- மருத்துவம்: குழந்தை யின்மைக்கான மருத்துவம் இன்று ஆய்வுகளுக்கு உட்பட்டு, சிறந்த மருத்துவ முறைகள் கிடைக்கின்றன. இந்த வளர்ச்சியின் காரணமாக பல இணையர்கள் குழந்தை பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
= எந்தக் காரணத்தால் குழந்தை பிறக்க-வில்லை?
= எவ்வளவு காலமாகக் குழந்தை இல்லை?
= குழந்தை இல்லாத இணையர்கள் வயது?
சில இணையர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள். ஆனால் சில இணையர்களுக்கு, சில குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் மகப்பேறுக்கு வாய்ப்பே இல்லாத நிலை உண்டாகும். பலருக்கு மகப்பேறு மருத்துவம், மருந்துகள் மூலம் கருவுறுதலை நிகழ்த்த முடியும்.
ஆண்களுக்கான மருத்துவ முறைகள்: ஆண்களுக்கு குழந்தையின்மைக் குறைபாடு பெரும்பாலும் ஆண் கரு (Sperm) சீராக இல்லாததால் ஏற்படுகிறது. இந்நிலையைச் சீராக்க பல வழிகாட்டும் முறைகள் இன்று உள்ளன.

நல்ல நேரமும் பிள்ளைப் பிறப்பும்! -நவீன மருத்துவங்கள் (109)

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (109)

உண்மை இதழ்

நல்ல நேரமும் பிள்ளைப் பிறப்பும்!

மரு.இரா.கவுதமன்

இல்லாத ஒரு பொய் அறிவியலைக் கூறி, அப்பாவி மக்களிடம் ஜோதிடம், நாள், நட்சத்திரம் பற்றிக் கூறி, ஏமாற்றிப் பணம் பறிக்கும் இந்த ஜோதிடர் கூட்டத்தின் பேச்சை நம்பி ஏமாறும் பாமர மக்கள் இந்த அறிவியல் உலகில் இன்னும் இருப்பது மிகவும் பரிதாபம். இதை நம்பி, மூல நட்சத்திரம், செவ்வாய்தோஷம் என்றெல்லாம் பெண்களின் வாழ்க்கையையே அழித்துவரும் மூடர்களை என்னவென்று சொல்வது?

குழந்தையின்மை (Sterility) : திருமணமாகி, இயல்பான பாலியல் வாழ்க்கை (Sexual life) இருந்தும், எந்தவிதக் கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்தாத நிலையில் வேறு விதமான திட்டமிடலும் இல்லாமல் இருக்கும் நிலையில் ஓராண்டு குழந்தைப்பேறு ஏற்படவில்லை யென்றால், மருத்துவ ஆய்வுக்குச் செல்லுவதும், மருத்துவ அறிவுரை பெறுதலும் நலம். ஏறத்தாழ 10 சதவிகிதம் தம்பதிகளுக்கு மகப்பேறு உண்டாகும் பருவத்தில் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் நிலை உண்டு. 30 சதவிகிதம் குழந்தையின்மைக்கு பெண்களிடம் குறைபாடும், அதே அளவு குறைபாடு ஆண்களிடமும் உண்டு. ஆனால், சமூக அளவில் ஏதோ குறைபாடு பெண்களிடமே உள்ளது போல் ‘மலடி’ எனப் பட்டம் சூட்டி, அவர்களை சமூக இழிவுக்கு ஆளாக்கும் கொடுமையைப் பார்க்கிறோம்.
சில வீடுகளில் இதையே சாக்காக வைத்து ஆணுக்கு மறுமணம் செய்து வைக்கும் கொடுமை–களையும் நாம் அறிந்திருக்கிறோம். 30 சதவிகிதம் பேருக்கு இருபாலருக்கும் குறை இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. சரியான காரணங்களை, இந்தத் தம்பதிகளின் குழந்தை இன்மைக் குறைபாட்டை அறிய முடியாத நிலை உள்ளதை மறுப்பதற்கில்லை. நாம் அறிந்த வகையில் ஏறத்தாழ 60சதவிகிதம் தம்பதிகள் குழந்தையின்மைக் குறைபாட்டிலிருந்து, மீண்டு மகப்பேறு அடையும் வாய்ப்பை இன்றைய மருத்துவம் வழங்கி உள்ளது. இந்த இணையர்களுக்கு மருத்துவக் காரணங்களால் தான் குழந்தையின்மை உண்டாகிறது. அந்தக் குறைபாட்டை நீக்கி விட்டால் குழந்தைப் பேற்றை அவர்கள் அடைய முடியும்.

பெண்களிடம் உள்ள குறைபாடுகள்: பொதுவாக குழந்தைப் பேறுக்குக் காரணமாக உள்ள உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் என்றும், ஊக்க நீர்க் (Hormones) குறைபாடு என்றும் பெண்களின் குறைபாடு-களாக அறியப் படுகின்றன.

குழந்தைப் பேறு உறுப்புகளில் குறைபாடுகள்: கருக்குழாய்களில் அடைப்பு, கருப்பையின் கழுத்தில் ஏற்படும் நோய்கள், கருப்பையில் உண்டாகும் கட்டிகள், கருப்பையில் காயத் தழும்புகள் (கருக்கலைப்பால் ஏற்படுபவை), கருப்பைப் புற்று நோய், கருப்பைக் கழுத்தில் புற்றுநோய், அவற்றைக் குணமாக்கச் செய்யும் ஊடுகதிர் (Radiation) மருத்துவம், புற்றுநோயைக் குணமாக்கும் மருந்துகள் (Chemotherapy) ஆகியவை குழந்தையின்மையை உண்டாக்குகின்றன.

ஊக்கிநீர்க் குறைபாடுகள்: ஊக்கி நீர்க் குறைபாடு கருமுட்டை சரியாகப் பக்குவமடைவதைத் தடுக்கும். சரியாகப் பக்குவமடையாத கருமுட்டையால் கருவுறுதல் நிகழாது. ஈஸ்ட்ரஜன், புரொஜெஸ்ட்ரான் குறைபாடுகளால் கரு முட்டை முழுவளர்ச்சி அடைவது தடைப்படுவதோடு, கருப்பைச் சுவரில் கருமுட்டை ஒட்டுவதையும் தடுக்கிறது. இந்த ஊக்கிநீர் (ஈஸ்ட்ரஜன்) குறைபாடு, கருமுட்டை வெளிப்பாட்டையும் (Ovulation) தடுக்கிறது. இக்குறைபாட்டால் நீர்க்கட்டிகள் (Polycystic ovary) ஏற்படும் நிலையும் உண்டாகி கருவுறுதலைத் தடுக்கிறது. ‘‘புரோலேக்டின்’’ (Prolactin) ஊக்கி நீர், இரத்தத்தில் அதிகளவு இருத்தல், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் குறைபாட்டால் ‘‘தைராக்ஸின்’’ சுரப்பு அதிகளவு சுரந்தாலும் (Hyperthyroidism) அல்லது குறைந்த அளவு சுரந்தாலும் (Hypothyroidism) மகப்பேறு வாய்ப்பைத் தடுக்கும்.

ஆண்களிடம் உள்ள குறைபாடுகள்: விரைகளில் சிரை வீக்கம் (Varicocele) ஆண்-களிடம் மலட்டுத் தன்மையை உண்டாக்கும். விரைகளுக்கு தமனிகள், சிரைகள் (Arteries and veins) இரத்த ஓட்டம் நிகழ்கிறது. விரைகளிலிருந்து சிரைகள் மூலம் இரத்தம் வெளியேறாத நிலையில், சிரைகளில் இரத்தம் தேங்கி, வீக்கம் ஏற்படும். உடல் வெப்பநிலையைவிட, விரைகளில் வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும். அதனால்தான் இயற்கையிலேயே நம் உடலுக்கு வெளிப்புறமாக விரைப்பைகளில் விரைகள் அமைந்துள்ளன. அதனால் இறுக்கமான செயற்கை இழை உள்ளாடைகள் விரைகளின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும். விரைகளில், சிரைகளில் ஏற்படும் வீக்கம், ஆண் கரு உற்பத்தியையும், அது வெளியேறுவதையும் தடுக்கும். அதே போல இறுக்கமான ஆடைகள், விரைகளில் வெப்பத்தை அதிகமாக்கும் பொழுது ஆண் கரு உற்பத்தியைப் பாதிப்பதுடன், ஆண் கருக்-களின் வேகமான இயக்கத்தையும் தடுக்கும். ஆண் கருக்கள் வேகமான இயக்கம் தடைபடும் நிலையால், அவை கருப்பையை அடைவதில் தடை ஏற்படும். குழந்தையின்மைக்கு இது ஒரு முக்கியமான காரணமாகிறது.

சில பாரம்பரிய (Genitical Diseases) நோய்கள் எடுத்துக்காட்டாக நீர்க்கட்டிகள் (Cystic Fibrosis) அல்லது ஆண் கருக்கள் உற்பத்திக் கோளாறு, விந்துக் குழாய்களில் அடைப்பு போன்றவை ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். அதே போல் நோய்கள், மருந்துகள், மனத்தளர்ச்சி போன்ற காரணங்களால் ஏற்படும் ஆண் குறி விறைப்புத் தன்மைக் குறைபாடு, உடலுறவில் ஈடுபட முடியாத நிலையை உண்டாக்கும். இதனால் கருவுறும் வாய்ப்பு முற்றிலும் பாதிப்-படையும். சில ஆண்களுக்கு ‘‘விந்து முந்துதல்’’ (Pre-Mature ejaculation) நிலை இருக்கும். இதுவும் கருவுறுதலைத் தடுக்க வல்லது. ஆண் அணுக்களின் இயக்க வேகம் இயல்பான நிலையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் விந்து நீரில் மிதந்து, வேகமாக நகர்ந்து கரு முட்டையைத் துளைத்து உட்புகும். வேகம் குறைவாகவோ, இயக்கம் குறைவாகவோ இருந்தால் கருவுறுதல் நிகழும் வாய்ப்பு குறைந்துவிடும். ஆண் அணுக்கள் இயக்க குறைபாடு (Asthenospermia) பெரும்பாலான ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமாகிறது. இயல்பான வேகத்தில் 40 சதவிகிதம் குறைந்திருப்-பின் ‘‘ஆண் அணுக்கள் இயக்கக் குறைபாடு (Asthenospermia) என்று மருத்துவர்கள் வகைப்படுத்துவர்.
சிலருக்கு விந்து வெளியேறுவதற்குப் பதில் சிறுநீர்ப்பைக்குள் சென்றுவிடும். (Retrograde ejaculation) சிலருக்கு ஆண் அணுக்கள் எண்ணிக்கைக் குறைபாடு (Oligospermia) இருக்கும். ஒரு மில்லி லிட்டரில்,
15 மில்லியன் ஆண் அணுக்கள் இயல்பான நிலையில் இருக்கும். இந்த அளவைவிடக் குறைந்திருப்பின் கருவுறுதல் நிகழும் வாய்ப்பும் குறைந்துவிடும். சில மருந்துகள், புராஸ்டேட் சுரப்பி வீக்கம், சிறுநீர்ப்பை, முதுகெலும்பில் அடிபடுதல் அல்லது முதுகெலும்பில் அறுவை மருத்துவம் போன்ற மற்றைய காரணங்-களால் ஆண் மலட்டுத்தன்மை (Male Sterelity) ஏற்படலாம். அதே போல் ஊக்கிநீர்க் குறைபாடும் (Hormone deficiency) மலட்டுத் தன்மையை உண்டாக்கும். ஆண்-களுக்கு ‘‘ஆன்ட்ராஜன்’’ (Androgen), ‘‘டெஸ்ரோஸ்டிரான்’’ (Testo Strero ne) போன்ற ஊக்கி நீர்கள் ஆண் அணுக்கள் உற்பத்தியையும், எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும். இந்த வகை ஊக்கி நீர்க் குறைபாடு மலட்டுத் தன்மையை உண்டாக்கும்.
அடிப்படையில் பெண்களைவிட ஆண்-களுக்கே மலட்டுத்தன்மை ஏற்படக் கூடிய நிலை இருக்கும். ஆனால், குழந்தை இல்லை என்றால் பெண் மீதே பழி சுமத்தப்படும் சமூகக் கொடுமையே நடைபெறும் நிகழ்வாக உள்ளது. ‘‘மலடி’’ என்றுதான் சமூகத்தில் சொல்கிறார்களே ஒழிய, ‘‘மலடன்’’ என்று யாரும் குறிப்பிடுவதில்லை. ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள்தான் ‘தோஷம்‘ உள்ளவர்கள், ‘‘விபசாரி’’ என்று பெண்ணுக்குத்தான் பெயர். தகாத உறவைக் கொண்ட ஆண்களுக்கு எந்தப் பெயரும் இல்லை. ‘‘விதவை’’ என்ற பெயர் உள்ளதே தவிர, ‘‘விதவன்’’ என்ற பெயர் எங்கும் இல்லை. குழந்தையின்மை என்ற பழி முழுதும் பெண்களின் மேல்தான் சுமத்தப்படுகிறதே தவிர, ஆண்களை யாரும் குறை சொல்வதில்லை. மருத்துவ ஆய்வுக்கு இணையர் இருவரும் வரவேண்டும் என்றால் ஆண்கள் ஒத்துழைப்பதில்லை. எங்கே தன் குறைபாடு தெரிந்து ‘‘ஆண்மை’’ இல்லை என்று தெரிந்து விடுமோ என்கிற அச்சம். இதுபோன்ற நிலைகளால்தான் குழந்தையின்மை என்ற குறைபாடு இருக்கும் நிலை. அறிவியல் முன்னேற்றத்தில் படிப்படியாக இந்த நிலையும் மாறிவருகிறது. மலட்டுத் தன்மைக்கான அடிப்படைக் காரணங்களைச் சரியான முறையில் ஆய்வு செய்து, கண்டறிந்து, அதற்கான மருத்துவம் செய்தால் பெரும்பாலான இணையர்களுக்கு குழந்தையின்மைக் குறைபாட்டைச் போக்க முடியும்!
(தொடரும்…)

குழந்தையின்மையும், தீர்வுகளும் -நவீன மருத்துவங்கள் (108)


மருத்துவம் விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (108)

உண்மை இதழ்

குழந்தையின்மையும், தீர்வுகளும்
மரு.இரா.கவுதமன்

“பிள்ளைப் பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடன் புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்-படியாக பொலிகாளைகள்போல் தெரிந்-தெடுத்து, மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்கள் வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண், பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டு வந்து விடக் கூடும்.’’

_ “இனிவரும் உலகம்’’ _ தந்தை பெரியார்
பிள்ளை பெறாத பெண்கள் இழிவு-படுத்தப்படுகின்றனர். ஒதுக்கப்படுகின்றனர்.
இதில் மிகவும் கொடுமையான நிலை என்னவென்றால், வீட்டில் உள்ள மற்ற பெண்களின் ஏளனத்திற்கும், கேலிக்கும் இப்பெண் ஆளாவது. அதிலும் மாமியார், “ஒரு புழு, பூச்சு உண்டா’’ என்று ஏகடியம் பேசுவதும், மற்றப் பெண்கள் ஏளனம் பேசுவதும் ஓர் இயல்பான நிகழ்வாக மாறிப் போனது. இது குழந்தையில்லாத பெண்ணுக்கு மேலும் மனச் சோர்வையும், சங்கடத்தையும் உண்டாக்கும் நிலை!

இந்த மனச்சோர்வும், மனத்தளர்ச்சியும் பெண்ணையோ, இந்த நிலையில் உள்ள பெண்களையோ போலிச் சாமியார்களைத் தேடிச் செல்ல வைக்கிறது. போலிச் சாமியார்களும் “பிள்ளை வரம்’’ கொடுப்பதாக பெண்களை ஏமாற்றுவதும், பாலியல் கொடுமைகள் செய்வதும் இன்றுவரை நிகழும் நிகழ்வாக மாறிப் போனது. சில பெண்கள் கோயில் கோயிலாகச் சுற்றுவதும், ஆத்தா கோயில்களில் தொட்டில் கட்டுவதும், காசு கட்டுவதும், வேண்டுதல் என்கிற பெயரில் தீச்சட்டி எடுப்பதும், தீ மிதித்தல் போன்ற மூடநம்பிக்கைகளில் பெண்களைத் தள்ளுகிறது. அரச மரத்தைச் சுற்றுவதும், கடவுளுக்கு காணிக்கைகள் (முடி, பணம்) எனக் கொடுத்து வேண்டுவதும், பிள்ளை வரம் கொடுக்கும் “ஆத்தா’’க்களைத் தேடி அலைவதும், “காசி’’, “இராமேஸ்வரம்’’ என்று கடவுள் அருள் வேண்டிச் சுற்றுவதும், மஞ்சள் நீராடுவது, மற்ற வேண்டுதல்கள் செய்வது, விரதம் இருப்பது போன்ற (மூட) நம்பிக்கைகள் குழந்தையின்-மைக்குத் தீர்வாகாது.

அறியாமையில் மூழ்கியுள்ள நம் பெண்கள் இது போன்ற நம்பிக்கைகளை நம்பி, அறிவியல்பூர்வமான அணுகுமுறைகள் செய்யத் தவறிவிடுகின்றனர். சுற்று வட்டாரத்தில் இருக்கும் பெண்கள் பழி தூற்றுவார்கள் என்கிற அச்சமும், தயக்கமும் சமூக அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ போன்ற எண்ணங்களும் (மூட) நம்பிக்கைகளில் அவர்கள் ஆட்படக் காரணமாகின்றன. அக்கம், பக்கத்திலிருப்போர் கூறும் செவிவழிச் செய்திகள் இவர்கள் ஏமாறுவதற்குக் காரணமாகிவிடுகின்றன.

குழந்தை பிறக்காததை முன் வைத்து, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை-களுக்கு அளவே இல்லை. ஆண்களுக்கு ஆண் தன்மை குறைபாடு உள்ளதா இல்லையா என்று ஒருவருமே, ஒரு காலக்கட்டத்தில் கவலைப்பட்டதில்லை. ஆண்மைக் குறைபாடு என்று சொல்வதே ஒரு சமூக அவலமாகக் கருதப்பட்டது. அதனால் பழி பெண்கள் மேல் போடப்பட்டு, “மலடி’’ என்று அவர்களுக்கு முத்திரை குத்தி, மாமியாரும், மற்றவர்களும் கொடுமை செய்யும் நிலை அண்மைக் காலம் வரை இருந்தது. “இருதார மணத் தடைச் சட்டம்’’ வரும் வரை, ‘மலடி’ என்று காரணம் கூறி இரண்டாம் தாரமாக ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் கொடுமை-யெல்லாம் இந்தச் சமூகத்தில் நிகழ்ந்தது. சட்டத்தின் மூலமே இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மருத்துவ அறிவியல் வளர்ச்சியும், மக்களின் கல்வி வாய்ப்புகளும் குழந்தையின்மைக் குறைபாட்டை பெருமளவு குறைத்துவிட்டது. குழந்தை-யின்மைக்காக மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு, பொழுதையும், பணத்தையும் வீணாக்குவதை விட்டு, விட்டு மருத்துவர்களை அணுகினால் இந்தக் குறைபாட்டை எளிதில் தீர்க்க முடியும்.

பல நேரங்களில் உடல் அளவில் குறைபாடுகள் என்று இருப்பதைவிட, உளவியல் அளவில் குறைபாடுகள் இருக்கும். எப்படி இருந்தாலும் ஒரு பத்து சதவிகிதம் பேர்களுக்குத்-தான் இந்த வாய்ப்பின்மை இருக்கும். பெரும்பாலோர் மருத்துவ அறிவுரைகள் மூலம் குழந்தை பெறுகின்ற வாய்ப்பைப் பெறுகின்றனர் என்பதே உண்மை. பெண்களுக்குக் கல்வி வாய்ப்புகளும், வெளி உலகத் தொடர்புகளும், சமூகத் தொடர்புகளும், வலைத் தளங்களை அவர்கள் கையாளும் திறமையும், மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை மீட்டு, ஆக்கப்பூர்வமான அறிவியல் பக்கம் திருப்பியுள்ளது.

முதலில் குழந்தையின்மைக்குக் காரணம் கணவனா அல்லது மனைவியா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆண்கள் தங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் மன நிலைக்கு வரவேண்டும். பெரும்பாலான ஆண்கள் எங்கே தங்கள் மலட்டுத் தன்மை வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சி, பல ஆண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளத் தயங்கிய நிலை மிகவும் பரவலாக இருந்தது. ஆனால், அதைவிட ‘குழந்தை தேவை’ என்ற நிலையும், சமூக அங்கீகாரமும் முன் வந்து நிற்பதால் இந்தத் தயக்கம் மெள்ள மெள்ளக் குறைந்து வருகிறது. அதுவும் நகர்ப்புறங்களில் இந்தத் தயக்கம் பெரும்பாலும் நீங்கி விட்டது என்றே சொல்லலாம். கிராமப்புறங்களில் இந்தத் தயக்கம் இன்னும் இருந்தாலும், அதுவும் தேவையைக் கருதி விரைவில் மாறி விடும் என எதிர்பார்க்கலாம். அதே போல் கல்வியின்மையும் இந்தத் தயக்கத்திற்குக் காரணம். அந்த நிலையும் இப்பொழுது மாறி வருகிறது. இது பெண்களுக்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. அதுவுமில்லாமல் ஆண்களுக்கு ஆரம்ப நிலை ஆய்வுகள் மிகவும் எளிமையானவை.

அடுத்து, பெண்களுக்கு வரும் பெரும் இடர்பாடு “ஜாதகம்’’! ஜாதகம் என்பதே ஒரு பொய் அறிவியல். ஜோதிடப் பலன்கள் போடும் பெரும்பாலான பத்திரிகைகளைப் பாருங்கள். இரண்டு ஜோதிடர்கள் ஒரே மாதிரியாய்ச் சொல்லி இருக்க மாட்டார்கள். அதே போல் குழந்தை பிறந்த உடன் பிறந்த நேரத்தைக் கூறினால் ஜோதிடர், ஜாதகம் கணித்துக் கொடுக்கிறார். சில நட்சத்திரங்களில் பிறந்ததாகக் கூறப்படும் பெண் குழந்தைகள் இந்த ஜாதக மூடநம்பிக்கையால் வாழ்நாள் முழுதும் பாதிப்படைகின்றனர். எடுத்துக்-காட்டாக “மூல நட்சத்திர’’த்தில் பிறந்த பெண் குழந்தைகள்! “ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்’’ என்னும் சொலவடையைக் கேட்டிருக்கிறோம்.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை வளர்ந்த பின் திருமணம் செய்துகொள்ள எந்த ஆணும் முன் வருவதில்லை. அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், மணமகன் வீடு நிர்மூலமாகிவிடுமாம். அதேபோல், சில குழந்தைகளுக்கு (பெண்) “செவ்வாய் தோஷம்’’ என்பர். செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் மாமனார் வீட்டுக்கு ஆபத்தாம். இதுபோன்ற நட்சத்திரங்களையும், ஜாதகத்தையும் நம்பும் வீடுகளில் பல பெண்கள் திருமண வாய்ப்பே இல்லாமல் தாய் வீடுகளிலேயே இருக்கக் கூடிய நிலையும், வாழ்நாள் முழுவதும் துயரம் அனுபவிக்கும் நிலையும் ஏற்பட்டு விடும் சூழ்நிலைகளைக் காண்கிறோம்.

பிறந்த நேரம் சரியாகக் கணிக்க முடியுமா? குழந்தை தாய் வயிற்றில் உண்டான நேரமா? சில நேரங்களில் முதலில் கால்களும், சில நேரங்களில் கைகளும் வெளிவந்து, கடைசியில் தலை வெளிவருகிறதே! அப்பொழுது பேறு கால நேரமேது? பேறு காலத்தில் சிக்கல்கள் இருந்தால் மருத்துவர் தாயும், சேயும் பத்திரமாக இருப்பதைப் பார்ப்பாரா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பாரா? பேறுகால அறையில் கடிகாரம் தவறாக மணியைக் காட்டிக் கொண்டிருந்தால், பேறு கால நேரம் தவறாகக் கணிக்க வாய்ப்புண்டா இல்லையா? இது போன்ற சூழ்நிலைகளில் “பிறந்த நேரம்’’ எப்படி துல்லியமாகக் கணிக்க முடியும்?
அதைவிட வேடிக்கையான நிகழ்வுகள் தற்பொழுது நடக்கின்றன. அறுவை மருத்துவம் செய்து குழந்தையை எடுக்க வேண்டிய நிலை தற்போது ஓர் இயல்பான நிகழ்வாக இன்று மாறிப் போனது. தாய்க்கு உறவினர்கள், மருத்துவரிடம் வந்து, “இன்று நல்ல நாள், நல்ல நேரம்!’’ என்று கூறி அந்த நேரத்தில் அறுவை மருத்துவம் செய்யக் கேட்டுக் கொள்வர். மருத்துவர் அதற்கிசைந்து அதே சமயத்தில் அறுவை மருத்துவம் நிகழ்த்துவார். இதுபோன்ற நிலையில் பிறக்கும் நேரத்தை குடும்பத்தார் நிர்ணயிக்கிறார்களா இல்லையா? அது எப்படி இயல்பான பேறுகால நேரமாகும்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு இதுவரை எந்த ஜோதிடரும் பதில் சொன்னதில்லை என்பதே உண்மை!

மகப்பேறு(PREGNANCY) அதி நவீன மருத்துவங்கள் (107)

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (107)

மகப்பேறு
(PREGNANCY)
மரு.இரா.கவுதமன்


இரண்டாம் நிலை:(Stage2) குழந்தை பிறப்பு :
இந்த நிலை சில பெண்களுக்கு சில நிமிடங்களில் கூட நிகழலாம். சில பெண்களுக்கு சில மணி நேரங்கள் வரை நீடிக்கலாம். முதல் குழந்தைக்கு பெரும்பாலும், கொஞ்ச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையுண்டாகும். கருப்பை சுருங்கும் பொழுது, முக்க வேண்டும். கருப்பை சுருங்கும் பொழுது வலி உண்டாகும். அந்த நேரத்தில்தான் முக்க வேண்டும். வலியில்லாத பொழுது முக்கக் கூடாது. அதைப் போன்று செய்தால் விரைவில் களைப்பு ஏற்பட்டு விடும். அதனால் முக்குவது கடினமாகிவிடும். செவிலிய உதவியாளர் முக்கச் சொல்லும்பொழுது முக்கி, அழுத்தம் கொடுத்தால் குழந்தை மெள்ள, மெள்ளக் கீழே இறங்கும். சில நேரங்களில் பெண்களுக்கே, கருப்பை சுருங்கும் பொழுது, வலியும், முக்க வேண்டும் என்கிற உணர்வும், இயல்பாகவே உண்டாகும். குழந்தை வெளியேறும் நிலையில், சிலருக்கு படுத்திருக்கும் நிலையோ, சிலருக்கு கால்களை மடக்கி வைத்தோ, சிலருக்கு சாய்வாக அமர்ந்திருக்கும் நிலையோ வசதியாக இருந்தால் அப்படியே செய்யலாம்.

செவிலியரோ, செவிலிய உதவியாளரோ பெண்களுக்கு உதவியும், அறிவுரையும் வழங்குவர். அதுபோல் செய்தால் பெண்களுக்குக் குழந்தை பிறப்பு எளிதாக இருக்கும். சில நேரங்களில் லேசாகவும், சில நேரங்களில் முக்க வேண்டிய நிலையும் உண்டாகலாம். மெதுவாக முக்கி குழந்தை வெளியேறும் பொழுது பிறப்புறுப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. வேகமாக முக்கும் பொழுது, சில நேரங்களில் பிறப்புறுப்பு கிழிந்து குழந்தை வெளியேறலாம். சில நேரங்களில் மருத்துவரோ, செவிலியரோ, லேசாகக் கீறி, பிறப்புறுப்பில் வழியை அதிகமாக்கி குழந்தை வெளியேற உதவுவர். குழந்தை வெளியேறிய பின் கீறிவிட்ட பகுதியை மீண்டும் இணைத்து விடுவர்.

குழந்தை கால்களுக்கிடையே வெளியேறும் உணர்வை இந்த நிலையில் தாயால் நன்கு உணர முடியும். பொதுவாக முதலில் தலைப்பகுதிதான் (Head Presentation) வெளியேறும். தலை வெளியேறிய உடன் , உடல் பகுதி எளிதாக வெளியே வந்து விடும். குழந்தை வெளியேறியவுடன் குழந்தை கத்தும் (Cry). தாய்க்கு எல்லையற்ற மகிழ்ச்சியும், பெருமையும், கர்வத்தையும் உண்டாக்கும் தருணம் அது. தாய்க்கு வலி முழுமையாக நின்றுவிடும். குழந்தை சில நேரங்களில் அழாது. பனிக்குட நீர் குழந்தையின் வாயில், தொண்டடையில் அடைத்துக் கொண்டு இருக்கலாம்.


அது சில நேரங்களில் மூச்சுவிடுவதில் தடையுண்டாக்கி, குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகலாம். செவிலியர்களோ, செவிலிய உதவியாளரோ குழந்தையின் தொண்டை யிலிருக்கும் நீரை, உறிஞ்சி வெளியேற்றி விடுவர். குழந்தை அழத் தொடங்கும். எந்தச் சிக்கலும் இல்லாத குழந்தை பிறப்பில் செவிலியர் சில நிமிடங்கள் பொறுத்து “தொப்புள் கொடி”யை (Umbilical Cord) கட்டி, வெட்டி விடுவார். தாயும், சேயும் தனித்தனியாகி விடுவர்.
சில நிமிடங்களில் கழித்து, தொப்புள் கொடியை வெட்டி விடுவது, குழந்தைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும். பேறு காலத்திற்குப் பின் இரத்த சோகை, குழந்தைக்கு ஏற்படாமல் தவிர்க்க உதவும். சில நேரங்களில் வயிற்றில் குழந்தை தலை மாறிய நிலையில் கூட இருக்கலாம். அந்த நிலையில் (Breech position) செவிலியரோ, மருத்துவரோ குழந்தை பிறப்பிற்கு முழுமையாக உதவுவார். குழந்தை வயிற்றில் வேறு நிலையில் இருந்தால் பயப்பட வேண்டியதில்லை. மருத்துவர், செவிலியர் அறிவுரைப்படி நடந்தால் குழந்தைப் பிறப்பு இயல்பாக நடந்துவிடும்.

மூன்றாம் நிலை (Stage 3) : நஞ்சுக்கொடி வெளியேற்றம் (Delivery of placenta):
குழந்தை வெளியேறிய உடன் தாய்க்கு மிகுந்தளவு நிம்மதி ஏற்படும். ஆனால் கருப்பையில் இன்னும் நஞ்சுக்கொடி இருக்கும். அதுவும் வெளியேறினால்தான் பிறப்பு முழுமை பெறும். நஞ்சுக்கொடி கருப்பைச் சுவரிலிருந்து குழந்தை வெளியேறியவுடன் பிரியத் துவங்கும். இதற்கு சுமார் 30 நிமிடங்கள் வரை ஆகலாம். இந்த நேரத்தில் கருப்பை சுருங்கி விரியும். ஆனால் குழந்தையை வெளியே தள்ளும் பொழுது ஏற்பட்ட சுருங்குதல் போல் கடுமையாக இது இருக்காது. லேசாகத்தான் இருக்கும். அதனால் வலியும் லேசாக இருக்கும். இதுபோல் சுருங்குவதால் நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரியும். செவிலியர்கள் அதை வெளியேற்ற உதவுவார்கள். நஞ்சுக்கொடி வெளியே வரும் நிலையில் சற்று தாய் முக்க வேண்டியிருக்கும். நஞ்சுக்கொடி வெளியேறிதும், கருப்பை மெள்ள, மெள்ள சுருங்கத் தொடங்கும். நஞ்சுக்கொடி எளிதாகப் பிரிவதற்கும், பிரிந்த பின் இரத்தப் போக்கு அதிகம் ஏற்படாமல் இருக்கவும் மருத்துவர் ஊசி மருந்துகள் தாய்க்குச் செலுத்துவர். நஞ்சுக்கொடி முழுமையாக வெளியேறிவிட்டதை செவிலியர் உறுதிப்படுத்திக் கொள்வார். ஏதேனும் நஞ்சுக் கொடித் துண்டுகள் கருப்பையில் நின்றுவிட்டால் இரத்தப் போக்கு ஏற்படும். மருத்துவர் அவற்றை சுத்தம் செய்வார். இரத்தப் போக்கு நின்று விடும். இரத்தப் போக்கு முழுமையாக நின்றுவிட்டால் நஞ்சுக்கொடி முழுமையாக வெளியேறியபின் கருப்பை முழுதுமாகச் சுருங்கி இயல்பு நிலையை அடையும்.

சில நேரங்களில் நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும். அப்படி ஏற்பட்டால் குழந்தை கருப்பையிலிருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும்.

சில நேரங்களில் இயல்பான குழந்தை பிறப்பு ஏற்படாத நிலை கூட உண்டாகலாம். குழந்தையின் இதயத்துடிப்புக் குறையும் நிலை, குழந்தை வளர்ச்சியில் குறை, இரண்டும் அதற்கு மேற்பட்டு குழந்தைகள் கருப்பையில் வளர்தல் போன்ற நிகழ்வுகள் உண்டானால் அறுவை மருத்துவம் (cesarean) செய்து குழந்தையை / குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டி-யிருக்கும். இன்றைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் அறுவை மருத்துவம் செய்து குழந்தையை எடுப்பது என்பது பயப்பட வேண்டிய ஒரு நிகழ்வல்ல. மருத்துவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினால், அஞ்சாமல் அந்த மருத்துவத்தைச் செய்து கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் பெற்றோர்கள், பாட்டிகள் எல்லாம் பல குழந்தைகள் (பத்துக் குழந்தைகள் கூடப்) பெற்றார்கள். அவர்கள் காலத்தில் குனிந்து, நிமிர்ந்து வீட்டு வேலைகளைச் செய்து வந்தனர். அதனால் வயிற்றுப் பகுதித் தசைகள் எல்லாம் கடினப்பட்டு, இருந்ததால் பேறுகாலம் எளிதாக இருந்தது. அறுவை மருத்துவத் தேவை குறைவாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் வீட்டு வேலைக்கும், சமையலறைக்கும் பல பொறியியல் சாதனங்கள் வந்துவிட்டதால், வயிற்றுப் பகுதித் தசைகளுக்கு அதிக வேலை இல்லை. அதனால் தசைப் பகுதி மென்மையாகிவிடுகிறது. பேறு காலத்தில், முக்கிக் குழந்தையை பெற போதுமான சக்தி இல்லாது போகிறது. அதனால் பல பெண்களுக்கு அறுவை மருத்துவம் மூலமே குழந்தையை வெளியே எடுக்க நேரிடுகிறது.

சனி, 18 மே, 2024

தாய்ப்பாலில் கிருமிகள் இருக்குமா?

விடுதலை ஞாயிறு மலர்
Published February 3, 2024

மருத்துவர் ப.வைத்திலிங்கம்

மனித உடல் முழுவதும் கிருமிகள் ராஜ்ஜியம்தான்!
உயிரினங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழுகின்றன. உயிரியல்படி அவைகளின் குறிக்கோள் இவ்வுலகில் உயிர் பிழைத்து வாழ வேண்டும்; தன் இனம் பெருக வேண்டும் என்பது மட்டுமே. ஒரு செல் உயிரினத்தில் இருந்து அனைத்தும் இந்த விதிக்கு உட்பட்டவைகள்தான்.
இப்போது மனிதனையும் அவனைச் சார்ந்து இருக்கும் கிருமிகளின் உலகத்தையும் பார்ப்போம். எப்போதும் மனிதனின் உடல் முழுவதும். வெளிப்புறத்திலும், உடலுக்குள்ளும் நுண்கிருமிகள் இருந்து கொண்டேதான் இருக்கும். வாய், மூக்கு, காது, ஆசனவாய் போன்ற வெளி உலகுடன் தொடர்புடைய பகுதிகளில் அதிகமாகவும், மற்ற தோல் பகுதிகளில் சற்றுக் குறைவாகவும் இருக்கின்றன. துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும் தோராயமாக மனிதனின் மலக்குடலுக்குள் மட்டும் 100 டிரில்லியன் அல்லது நூறு லட்சம் கோடி நுண்ணுயிரிகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
நம் உடலின் உள்ளும் வெளியிலும் இருந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டுவிக்கும் இந்த நுண்ணுயிரிகளில் சிலவகைகள் மனிதனைச் சார்ந்து, அவனுடனே இருந்து தீங்கு எதுவும் விளைவிக்காத சாதுக்கள். சில வகைகள் உடலுடன் ஒட்டிக்கொண்டே இருந்துகொண்டு, எப்போது மனித உடலின் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ அந்த நேரத்தில் உள்ளே நுழைந்து நோய்களை உண்டுபண்ணும் சந்தர்ப்ப வாதிகள். சிலவகைகள் மனிதனுக்கு எதிர்ப்பு சக்தி உண்டுபண்ணி அவனைக் காப்பாற்ற உதவும் மெய்க்காப்பாளர்கள். சிலவகைகள் எப்போதுமே மனித உடலில் நோய்களை உண்டு பண்ணும் எதிரிகள். ஆக மனித உடலே கிருமிகளின் கூட்டங்கள் நிறைந்த ஒரு நுண்ணுயிர்க் காட்சி சாலை என்றே சொல்லலாம்.

தாய்ப்பாலிலும் கிருமிகளா?
தாய்ப்பாலில் கிருமிகள் அறவே இருக்காது என்றுதான் 19ஆம் நூற்றாண்டின் பின்பகுதி வரையிலும் அறிவியல் உலகம் நினைத்துக் கொண்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நடந்த ஆய்வுகளில் தாய்ப்பாலிலும் கிருமிகள் இருப்பதை உறுதி செய்தன. இவைகள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும், உடல் சுத்தம் இல்லாத தாய்மார்களின் தாய்ப்பாலில்தான் இம்மாதிரியான கிருமிகள் இருப்பதாகவும் அக்கால கட்டத்தில் நம்பப்பட்டது.
2003ஆம் ஆண்டில் நடந்த ஆய்வில் மிகவும் ஆரோக்கியமாக இருந்த தாய்மார்களின் தாய்ப்பாலை எடுத்து சோதனைச்சாலைகளில் ஆராய்ந்த போது அவர்களின் குடலில் உள்ள லாக்டோபேசில்லஸ் என்ற பாக்டீரியா தாய்ப்பாலிலும் இருப்பதைக் கண்டார்கள். ஆக உடல் சுத்தத்திற்கும், பாலில் காணப்படும் கிருமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைக் கண்டார்கள். தொடர்ந்து நடந்த நுண்ணறிவியல் வளர்ச்சியின் பயனாக கிருமிகளை அடையாளம் காணவும், இனம் பிரித்து வளர்க்கவும், பெருக்கவும் தெரிந்ததால், தாய்ப்பாலில் இயல்பாகவே கிருமிகள் இருப்பது தெரிய வந்தது.
கிருமிகள் எப்படித் தாய்ப்பாலுக்குள் வந்தன?

தாயின் பிரசவக் காலத்தின் கடைசி வாரங்களில் தாயின் குடலில் உள்ள லாக்டோபசில்லஸ் போன்ற நன்மை பயக்கும் கிருமிகள் எல்லாம் நிணநீர் குழாய்களின் வழியாக தாயின் மார்பகம் வந்து, பால் சுரப்பிகளில் தங்கிக் கொள்கின்றன. குழந்தை பிறந்து பால் குடிக்க ஆரம்பித்தவுடன், புது வயலில் விதை விதைப்பது போல குழந்தையின் குடலுக்குள் தாய்ப்பால் மூலம் இக்கிருமிகள் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. மேலும் தாயின் தோலின்மேல் ஒட்டியிருக்கும் நன்மை பயக்கும் கிருமிகளும் பால் குடிக்கும்போதே குழந்தைக்குப் போய்விடுகின்றன. பிறந்தவுடன் கிருமிகள் அறவே இல்லாத குழந்தையின் குடலுக்குள் 24 மணி நேரத்துக்குள் தாயின் உடலில் உள்ள நன்மை பயக்கும் கிருமிகள் அனைத்தும் தாயால் பகிரப்பட்டு விடுகின்றன.
நன்மை பயக்கும் கிருமி களில் பலவகையான பாக்டீரி யாக்கள் (லாக்டோபசில்லஸ் ஸ்டெரெப்டோகாக்கஸ், ஃபைபிடோ பாக்டீரியம்), வைரஸ்கள், பூஞ்சைகள், ஈஸ்டுகள் உள்ளன. ஆக இந்த நுண்ணுயிரிகளின் உலகம்தான் தாய்ப்பால். தாய் தன் குழந்தையைக் காப்பாற்றி இவ்வுலகில் வாழவைக்க, இயற்கையில் நடக்கும் அற்புதம்!

தாய்ப்பாலில் கிருமிகள் ஏன்?
தாயின் உடலில் இருக்கும் அத்தனை வகையான கிருமிகளும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்குப் போய்ச் சேருகிறது. இந்த ‘மெய்க்காப்பாளர்கள்’ கிருமிகள்தான் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி விடுகிறது. இவை எப்படி குழந்தையைப் பாதுகாக்கும் என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம். அனைத்தும் குழந்தையின் குடலுக்குள் சென்று அங்கே உள்ள எதிர்ப்பு சக்தி மண்டலத்தைத் தூண்டிக்கொண்டே இருப்பதால் வெளி உலகில் உள்ள நோய் உண்டுபண்ணும் கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாகி விடுகிறது. தாய்க்கு உள்ள எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் அனைத்து நன்மை பயக்கும் கிருமிகளும் அப்படியே சேய்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு விடுகிறது. பாலூட்டிகளின் தொகுப்பில், மற்ற மிருகங்களின் பாலைவிடவும், மனித இனத்தின், தாய்ப்பாலின் அமைப்பு மிகவும் சிக்கலானது. தோராயமாக 200க்கும் மேற்பட்ட சர்க்கரைச் சத்தின் மூலக்கூறுகள் குழந்தையின் குடலுக்குள் சென்று நன்மை உண்டாக்கும் கிருமிகளுக்கு எல்லாம் உணவாகப் பயன்பட்டு அவைகள் பல்கிப் பெருகுவதற்கான சூழலை அமைத்துக் கொடுக்கிறது.

‘டிசைனர் மில்க்’
பரிணாம வளர்ச்சியில் மனிதன் காட்டு விலங்குகளைப் பழக்கி, வீட்டு விலங்குகளாக்கி தன் உதவிக்கும், உழைப்புக்கும், உணவுக்கும் உபயோகப்படுத்தினான். அதன் தொடர்ச்சியாகத் தற்போது மாட்டுப்பாலை மாற்றித் தாய்ப்பாலுக்கு இணையானதாக ஆக்குவதற்கு முயன்று வருகிறோம். சில நேரங்களில் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்க முடியாத சூழ்நிலைகள் வருவதால் குழந்தையைக் காப்பாற்ற வேண்டி மிருகத்தின் பாலை நாட வேண்டியுள்ளது.
உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மிருகங்களில் மரபணு மாற்றங்களை உண்டுபண்ணி, அவைகளின் பாலின குணங்களை மாற்றி, தாய்ப்பாலுக்கு சமமாக மாற்ற முயற்சிக்கிறோம். பாலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவோ, நீக்கவோ, அல்லது அதன் மூலக்கூறுகளை மாற்றவோ செய்யலாம். கார்போஹைட்ரேட் சத்தில் உள்ள லாக்டோஸ், மற்றும் புரோட்டீன் சத்துக்களில் மாற்றம் செய்து அதனால் வரும் ஒவ்வாமையைக் குறைக்கலாம். மொத்தத்தில் அச்சு அசலாக தாய்ப்பால் போலவே ஒரு ‘டிசைனர் மில்க்’ தயாரிக்க முற்படுகிறோம்.
குழந்தையின் வளர்ச்சியும் தன்மையும் அறிந்து ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இயற்கையால் வடிவமைக்கப்படுகிறது. குறைமாதக் குழந்தையைப் பெற்ற தாயின் பாலில் உள்ள சத்துக்கும் நிறைமாதக் குழந்தையைப் பெற்ற தாயின் பாலில் உள்ள சத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. குறைமாதக் குழந்தை விரைவில் வளரும் நோக்கில் அங்கே சத்துக்கள் அதிகம். தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலுக்கும் பின்னர் வரும் ரெகுலர் தாய்ப்பாலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இயற்கையோடு போட்டியிட்டு இன்று வரையில் நம்மால் தாய்ப்பாலை அப்படியே வடிவமைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை!

நன்றி: நியூ செஞ்சுரியின் ‘உங்கள் நூலகம்’