புதன், 1 ஜனவரி, 2025

மருத்துவத் துறையில் மயக்கவியல் துறை (அக்டோபர் 16 உலக மயக்க மருந்து நாள்)

 

வாழ்த்துகள் சொல்வோமா!- முனைவர் வா.நேரு

2024 அக்டோபர் 16-30 2024 கட்டுரைகள்

உலகம் முழுவதும் அக்டோபர் 16 உலக மயக்க மருந்துகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடச் சொல்வது அய்க்கிய நாடுகள் சபை அல்ல, மயக்க மருந்து நிபுணர்களின் உலகக் கூட்டமைப்பு(WFSA-World Federation of Societies of Anaesthesiologists) இந்தக் கூட்டமைப்பு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறது. இந்தக்  கூட்டமைப்பின் சார்பாகத்தான் 1955 முதல் ஆண்டுதோறும் இந்த மயக்க மருந்து நாள் கொண்டாடப்படுகிறது.

1846ஆம் ஆண்டு அக்டோபர் 16 தான் உலகில் முதன்முதலில் மயக்க மருந்து கொடுத்து ஒருவருக்கு வலி தெரியாமல் அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்பதை உறுதி செய்த நாள். உடலில் ஏற்படும் வலிகளிலேயே மிகுந்த வலியைத் தரும் வலி பல்வலி. அதை அனுபவித்தவர்கள் அறிவார்கள். 1846ஆம் ஆண்டுக்கு முன்னால் அப்படி பல்வலி வந்தவர்களுக்கு எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் துள்ளத் துடிக்கப் பல்லைப் பிடிங்கியிருக்கிறார்கள். இதனைச் செய்து கொண்டிருந்த பல் டாக்டர் வில்லியம் மார்டன் மயக்க மருந்து கொடுத்து, வலி தெரியாமல் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதைச் சிந்தித்து அதற்கான முயற்சிகளைச் செய்திருக்கிறார்.

அவருக்கு முன்னரே சிலர் இதனைப் போன்ற முயற்சிகளைச் செய்திருந்திருந்தாலும் அவை பலர் முன்னிலையில் மெய்ப்பிக்கப்படவில்லை; அல்லது அந்தப் பரிசோதனைகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஆனால், டாக்டர் வில்லியம் மார்டன் அக்டோபர் 16, 1846 அன்று ஈதர் என்னும் மயக்க மருந்தின் மூலம் முதன் முதலில் வெற்றிகரமான செயல்விளக்கத்தை உலகத்திற்கு அளித்துள்ளார். கழுத்தில் இருந்த கட்டியை அகற்றுவதற்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு நோயாளிக்கு வலி தெரியாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செயல்விளக்கம் மருத்துவ வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான தொடக்கமாக இருந்திருக்கிறது. எனவேதான் அந்த நாள், அக்டோபர் 16 உலக மயக்க மருந்து நாளாக நினைவு கூரப்படுகிறது. இதற்குக் காரணமான டாக்டர் வில்லியம் மார்டன் ‘மயக்கவியலின் தந்தை‘ என்று அழைக்கப்படுகிறார்.

இப்போதெல்லாம் பல்லைப் பிடுங்கும்போது பல்லிற்கு மேல் இருக்கும் ஈறில் ஓர் ஊசி போட்டு விடுகிறார்கள். அந்த இடத்தில் மட்டும் வலி தெரியாமல் இருக்கிறது. இப்படி குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் வலி தெரியாமல் கொடுக்கப்படும் மயக்க மருந்தை local மயக்க மருந்துகள் என்று அழைக்கிறார்கள். அதனைப் போல இடுப்புக்கு கீழே ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றால் ஒரு மயக்க மருந்தை இடுப்புக்கு கீழே செலுத்தி இடுப்புக்கு கீழே மட்டும் கொஞ்ச நேரம் வலி தெரியாமல், மரத்துப்போகும்படி செய்துவிடுகிறார்கள். இப்படிக் கொடுக்கப்படும் மயக்க மருந்தினை பகுதி (Regional) அல்லது பிராந்திய மயக்க மருந்துகள் என்று அழைக்கின்றார்கள். முதுகு, மூளை, இருதயம் ஆகியவற்றில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு முழுமையாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பல மணி நேரம் மயக்க நிலையிலேயே நோயாளிகள் வைக்கப்படுகிறார்கள். இப்படிக் கொடுக்கப்படும் மயக்க மருந்திற்கு பொது மயக்க மருந்து(General) என்று அழைக்கின்றார்கள்.

1846இல் மயக்க மருந்து செலுத்துவதற்கு அமைக்கப்பட்ட மருத்துவக் கருவியும் விளக்கமும் இணையத்தில் கிடைக்கிறது. மிகப்பெரிய வடிவத்தில் உள்ள கருவியோடு இணைக்கப்பட்டு குழாய் மூலமாக முதன்முதலில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு உள்ளது. எவ்வளவு மயக்க மருந்து செலுத்த வேண்டும், அது எந்த அளவிற்கு நோயாளிக்குப் பாதுகாப்பு அளிக்கும் அல்லது பாதிப்பு உண்டாக்கும் என்பதெற்கெல்லாம் தகுந்தவாறு அன்றைக்கு கருவிகள் இல்லை. அனுபவத்தின் மூலமாகவும், மயக்க மருந்து அதிகமாகச் செலுத்தும்போது ஏற்பட்ட பாதிப்புகள் மூலமாகவும் இந்த மயக்கவியல் துறை மருத்துவத் துறையில் வளர்ந்து கொண்டே வந்துள்ளது.

தமிழில் டாக்டர் எஸ்.மாணிக்கவாசகம் அவர்கள் எழுதிய ‘தூங்காமல் தூங்கி‘ என்னும் புத்தகம் ‘ஒரு மயக்கவியல் மருத்துவரின் நினைவோடை‘ என்னும் குறிப்போடு சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. 35 ஆண்டுகள் மயக்க இயல் மருத்துவராகப் பணியாற்றிய மருத்துவரின் வாழ்க்கை நிகழ்வுகளும், மருத்துவ நிகழ்வுகளும் இணைந்து எழுதப்பட்டிருக்கின்ற புத்தகம். ஓர் அறுவை சிகிச்சைக்கு ஒரு மயக்கவியல் மருத்துவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது டாக்டர் மாணிக்கவாசகம் அவர்களின் புத்தகத்தைப் படித்தபோதுதான் எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மயக்கவியல் நாளுக்கான ஒரு கருப்பொருளை வெளியிடு
கின்றனர். இந்த ஆண்டுக்கான கருப்பொருள் மயக்கவியல் துறையில் பணியாற்றுபவர்களின் நலன் என்பதாகும். மயக்கவியல் மருத்துவர் டாக்டர் எஸ்.மாணிக்கவாசகம் அவர்கள் தான் பணியில் இருந்த காலத்தில் எப்படி எல்லாம் மனதளவில் துன்பம் மயக்கவியல் பணியால் ஏற்பட்டது என்பதனை விளக்கியிருப்பார். அப்படிப் பணியாற்றுபவர்களின் நலன்(Work Force Well being) குறித்துப் பேசுவதுதான் இந்த ஆண்டின் கருப்பொருள்.
கணினி, இணையம், பல புதிய மருத்துவக் கருவிகள் என மருத்துவத் துறையில் வந்தபின்பு மயக்கவியல் துறையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக மயக்கவியல் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அறுவைச் சிகிச்சையின் ஒவ்வொரு நிலையிலும் கண்காணிப்பதற்கும் நோயாளிகளுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கும் உதவுக்கூடிய பல நுட்ப அறிவியல் கருவிகள் இப்போது வந்துவிட்டன.

செயற்கை நுண்ணறிவு மயக்கவியல் துறையிலும்
பயன்படுத்தப்படுவதாக இணையக் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. செயற்கை நுண்ணறிவு

1) மயக்க மருந்து கண்காணிப்பின் ஆழம்
2) மயக்கமருந்து கட்டுப்பாடு
3) நிகழ்வு மற்றும் ஆபத்து கண்காணிப்பு
4) அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதல்
5) வலி மேலாண்மை மற்றும்
6) இயக்க அறை தளவாடங்கள்

என்னும் ஆறு வழிகளில் பயன்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

புற்று நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் இயல்பான சிகிச்சையின் போது அவர்களுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கு மயக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள புற்று நோயாளி களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இந்த
மருந்துகள் மிகப்பெரிய ஆறுதலைக் கொடுக்கின்றன.

இன்று பல அறுவைச் சிகிச்சைகள் சில மணித் துளிகளில் வலி இன்றி நிகழ்த்தப்படுகின்றன. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டோம் என்பதே
மற்றவர்கள் சொல்லித்தான் நாம் அறியவேண்டிய அளவிற்கு வலி இன்றி அறுவைச் சிகிச்சைகள் செய்து கொள்கின்றோம். இதற்கான அடித்தளத்தை ஏறத்தாழ 178 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் டாக்டர் வில்லியம் மார்டன். இனி நாமோ ,நம் உறவினர்களோ அறுவைச் சிகிச்சைக்குச் செல்லும்
போது இந்த மயக்கவியல் நாளான அக்டோபர் 16ஆம் நாளை நினைவில் வைத்துக் கொள்வோம். நாம் அறிந்த மயக்கவியல் மருத்துவர்களை அழைத்து அக்டோபர் 16இல் வாழ்த்துகள் சொல்வோம்.

வெள்ளி, 5 ஜூலை, 2024

இதயத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்! - நவீன மருத்துவங்கள் (8)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (8)

மார்ச் 1-15, 2020

மரு.இரா.கவுதமன்

இதய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இதயத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இதயம் ஒரு வியப்பூட்டக்கூடிய உடல் உறுப்பு. முழுதும் தசைகளாலான இதயம் நம் நெஞ்சுக் கூட்டின் இடப்புறம் நெஞ்செலும்பிற்கு பின்புறம் அமைந்துள்ளது. கருத்தரித்தல் நிகழ்ந்து, 21 நாள்களிலேயே தோன்றும் முதல் உடல் உறுப்பு இதயம்தான். கருவின் இயங்கக்கூடிய முதல் உடலுறுப்பும் இதுதான். ஆரம்பத்தில் இரண்டு குழாய்களாக வளர்ச்சி அடையும் இது, பிறகு இணைந்து 4 அறைகளாக உருமாற்றம் பெறும். மூன்று வாரங்களில் இயங்கும் இதயம், கருவின் “இடைத்தோல் படை’’யிலிருந்து (Mesoderm) உருப்பெறுகிறது. கருவின் உட்புற செல்கள் மூன்று விதமாகப் பிரிகின்றன. “வெளித்தோல்படை’’ (Ectoderm), “இடைத்தோல் படை’’(Mesoderm), “உள்தோல் படை’’ (Endoderm) ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தே அனைத்து உறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றன.

இடைத்தோல் படையில் வளரும் இதயம் கரு உண்டாகி மூன்றாவது வாரத்தில் துடிக்கத் துவங்கி, நம் மரணம் வரை துடித்துக்கொண்டே இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும் இதயம், 60 வயதானவருக்கு, ஏறக்குறைய 2.5 மில்லியன் தடவை துடிக்கும். பெண்களுக்கு சுமார் 250 முதல் 300 கிராம் எடையும், ஆண்களுக்கு 300 முதல் 350 கிராம் எடையும் இருக்கும். இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் ‘சிரைகள்’ என்றும் இதயத்தில் இருந்து இரத்தத்தை உடலின் பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் குழாய்களுக்கு “தமனிகள்’’ என்றும் பெயர். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. அவை வலது (ஆரிக்கள்) மேலறை, இடது மேலறை, வலது கீழறை  (Ventricle), இடது கீழறை ஆகியவை ஆகும்.

மேலறைகளும், கீழறைகளும் “அடைப்பிதழ்’’-களால் (Valve) பிரிக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் அறைகளை “முக்கூர் அடைப்பிதழும்’’(Tricuspid valve), இடது புற அறைகளை “இருகூர் அடைப்பிதழும்’’ (Bicuspid Valve) பிரிக்கின்றன. இவ்வறைகளை “பிரிசுவர்’’(Septum) பிரிக்கிறது. இரண்டு மேலறைகளும் மெலிதாகவும், இரண்டு கீழறைகள் தடிமனாகவும் இருக்கும். இடது கீழறை, வலது கீழறையை விட அதிக தடிமனாக இருக்கும். உடல் முழுதும் இரத்தம் செலுத்த வேண்டிய வேலையை இடது கீழறை செய்வதால் அது அவ்வாறு அமைந்துள்ளது. இடது கீழறையிலிருந்து வெளியேறும் “பெருநாடி’’ (மகாதமனி_(Aorta) யில் அடைப்பிதழ்கள் (Valve) உள்ளன. வலது கீழறையிலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் நுரையீரல் தமனியிலும் அடைப்பிதழ்கள் உள்ளன. இவை  “அரைமதி அடைப்பிதழ்கள்’’ (Semilunar Valves) என்றழைக்கப்படுகின்றன. இதயத்தின் கீழ்புறமுள்ள அசுத்த இரத்தம், ‘கீழ்ப்பெருஞ்சிரை’ மூலமும், இதயத்திற்கு மேல்புறம் உள்ள அசுத்த இரத்தம் ‘மேல் பெருஞ்சிரை’ மூலமும் இதயத்தின் வலது மேலறையிலும் சேரும். நுரையீரலில் இருந்து வரும் நுரையீரல் சிரை, இதயத்தின் இடது மேலறையில் திறக்கும். நுரையீரலில் சுத்தகரிக்கப்பட்ட இரத்தம் இடது மேலறையில் சேரும். இதயத்தைச் சுற்றி இரண்டு உறைகள் (Pericardium) உள்ளன. மென்சவ்வால் ஆன இரண்டு உறைகளில் புறஉறை நார்ச்சவ்வாலும், அகஉறை நீர்ச்சவ்வாலும் ஆனது. இதனால் இதயத்திற்கு, அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இதயத்திற்குத் தேவையான இரத்தம் ‘இதயத்தமனி’(Coronary Artery) மூலம் கிடைக்கிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி நமது இதயம் பல கோடிமுறை துடிக்கிறது. இதயத்தின் அறைகள் சுருங்கி, விரிவதால் ஏற்படும் ஒலியே நாடித்துடிப்பாக மருத்துவர்கள் அறிகின்றனர். கருத்தரித்த 21 நாள்களில் துடிக்கின்ற இதயத்திற்கும், அதன் தொடர்ச்சியான இடைவிடாத இயக்கத்திற்கும் தேவையான உயிர்க்காற்றும் (Oxygen), சத்தும், இதயத் தமனி மூலமே கிடைக்கிறது. இதயத் தமனியின் மூலம் கிடைக்கும் இரத்த ஓட்டத்தில் அடைப்போ, குறைபாடோ ஏற்பட்டால் இதயச் செயல்பாடு நின்று, உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். இதயத்திற்கு வரும் நரம்பு ‘வேகஸ்’ (Vagus) நரம்பாகும். இதயம் இரண்டு வகை நரம்புத் தொகுதிகளால், நரம்பு மண்டலத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பரிவு நரம்புகள்(Sympathetic Nervous System), துணை பரிவு நரம்புகள் (Para sympathetic Nervous System) என இரண்டு வகை நரம்புகள் இதய செயல்பாட்டை வழி நடத்துகின்றன. பரிவு நரம்பியக்கம் இதயத் துடிப்பை அதிகரிக்கும். துணைப் பரிவு நரம்பியக்கம் இதயத் துடிப்பைக் குறைக்கும். இவை     அனைத்தும் இணைந்து ‘இதய நரம்புப் பின்னலை’ ஏற்படுத்துகின்றன (cardiac plexeus). மூளையிலிருந்து வருகின்ற வேகஸ் நரம்பிலிருந்தும் தானியக்க நரம்பு மண்டலத்திலிருந்தும்(Autonomous Nervous System) இந்த நரம்புகள் இதயத்திற்கு வருகின்றன. இதயம் சரியான முறையில் இயங்குவதற்கு இந்த நரம்புப் பின்னல்களே காரணம்.

இதயத்தின் இயக்கம்: உடலின் தலை, கழுத்து, மார்புப் பகுதிகளிலிருந்து கெட்ட இரத்தம் மேல் பெருஞ்சிரை மூலம் இதயத்தின் வலது மேலறையில் வந்து சேரும். அதேபோல் உடலின் மார்புக்கு கீழ்புறம் உள்ள உடலின் பாகங்களிலிருந்து வரும் கெட்ட இரத்தம் கீழ்ப் பெருஞ்சிரை வழியே இதய வலது மேலறைக்கு வரும். இதய மேலறைகள் இரண்டும் சுருங்கும்பொழுது வலது மேலறையிலிருக்கும் கெட்ட இரத்தம் முக்கூர் அடைப்பிதழைத் திறந்து கொண்டு வலது கீழறையை அடையும். வலது கீழறை சுருங்கும்பொழுது, கெட்ட இரத்தம் நுரையீரல் தமனியின் அரைமதி அடைப்பிதழைத் திறந்துகொண்டு, இரண்டு நுரையீரல்களுக்கும் செல்லும், அங்குள்ள நுரையீரல் பைகளில் நிரம்பியுள்ள உயிர் மூச்சுக்காற்று சிறு சிறு தந்துகிகளால் (Capillaries) உறிஞ்சப்பட்டு, தந்துகிகளில் உள்ள கரியமில வாயு(carbon-di-oxide) வெளியேறும். அதுவே நம் உடலிலிருந்து மூச்சுக்காற்றாக வெளியேற்றப்படுகிறது. (மூச்சு விடுதல்). இப்படி முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்ட நல்ல இரத்தம் நுரையீரல் சிரை (Pulmonary Vein) மூலம் இடது மேலறையை (Left auricle) வந்தடையும். மேலறைகள் சுருங்கும் வேளை இடது மேலறையிலிருக்கும் இரத்தம் இருகூர் அடைப்பிதழைத் திறந்து கொண்டு இடது கீழறையில் நிரம்பும். இதயக் கீழறை சுருங்கும்பொழுது பெருநாடி (மகாதமனி)யில் உள்ள அரைமதி அடைப்பிதழைத் திறந்து கொண்டு இரத்தம் அதன் வழியே வெளியேறி, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் பரவும். மேலறை, கீழறை ஆகியவற்றின் சுருங்கி விரியும் தன்மையை இதய நரம்புப் பின்னல் ஒழுங்காக நிகழுமாறு கட்டுப்படுத்துகிறது. இவ்வாறு மேலறைகளும், கீழறைகளும் இயல்பாகச் சுருங்கி, விரியும் தன்மையினால் நம் உடலின் இரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. இதயத்தின் அறைகள் சுருங்கி விரியும் பொழுது வெளியேறும் இரத்தம், அரைமதி அடைப்பிதழ்களைத் திறந்து செல்லும்-பொழுதும், முக்கூர், இருகூர் அடைப்பிதழ்-களைத் திறந்து, மூடும்பொழுது ஏற்படும் ‘ஒலி’யையே நாம் “லப்’’, “டப்’’ என்னும் இதயத் துடிப்பாகக் கேட்கிறோம். இதுவே தமனிகளில் “நாடித் துடிப்பாக’’ (Pulse) உணர்கிறோம்.

ஞாயிறு, 23 ஜூன், 2024

இறந்த பின்னும் வாழும் ஈகையர் !



2023 அக்டோபர் 16-31, 2023 உண்மை Unmai

நேர்காணல்: வி.சி.வில்வம்

இரத்ததானம் செய்வது பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்டது. ஊர்கள்தோறும் குழுவாக இணைந்து ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்! அதேபோல, “மண்ணுக்குப் போகும் கண்களை மனிதருக்கு வழங்கினால் என்ன?” என்கிற விழிப்புணர்வும் பெருகி கண் தானங்களும் ஓரளவிற்கு வளர்ந்துள்ளன! இதேபோல உடல்தானம் வழங்குவதும் பெருக வேண்டும் என மருத்துவ உலகம் எதிர்பார்க்கிறது!

இதுகுறித்து “உண்மை” இதழுக்காக கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் (ANATOMY) துறைத் தலைவர் திருமிகு வீ.ஆனந்தி, எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ., எம்.எஸ்., அவர்களைச் சந்தித்தோம்.

உடல் கொடை குறித்த விழிப்புணர்வு எந்தளவில் உள்ளது?

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம். அதையொட்டி மாணவர்களும் அதிகம். மாணவர்கள் உடற்கூறுகள் தொடர்பாகப் பயில்வதற்குப் (Practical) போதுமான உடல்கள் கிடைப்பதில்லை. 10 மாணவர்களுக்கு ஒரு உடல் என்கிற அளவில் தான் பயன்பாட்டில் இருக்கிறது! இவற்றை ஓர் ஆண்டு வரையிலும் பயன்படுத்துவோம். ஒரு சில ஆண்டுகளில் போதுமான உடல்கள் கிடைத்துவிடும். எனினும் பற்றாக்குறையே நிலவுகிறது!

உடல்கள் எந்தெந்த வழிகளில் கிடைக்கின்றன? நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நிலையில் ஒருவர் இறந்தால் அவரது உடலை எடுப்பதில் பிரச்சினைகள் இருக்காது. ஏனென்றால் அந்த உடல் குறித்த முழு விவரத்தையும் மருத்துவர்கள் அறிக்கையாகக் (Death Certificate) கொடுத்து விடுவார்கள். இதுவே வீட்டில் ஒருவர் இறந்தால், அவர் எப்படி இறந்தார்? பிரச்சினைகள் ஏதும் இருந்ததா? என்பதை அப்பகுதியின் கிராம நிருவாக அலுவலர் (VAO) சான்றிதழ் கொடுக்க வேண்டும்!

ஆதரவற்ற நிலையில் இறந்து போன ஒருவரின் உடலைப் பெற முடியுமா?

நேரடியாக எந்த உடலையும் மருத்துவக் கல்லூரிகள் பெற முடியாது. மருத்துவமனையிலோ, வீட்டிலோ இறந்து போன ஒருவரின் உடலை உரிய சான்றிதழ் மூலம் நாங்கள் பெற முடியும். சாலைகளில் ஆதரவற்ற நிலையில் இறந்து போன உடலைப் பெறுவதில் நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. அந்த மரணம் இயல்பானதா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து அறியப்பட வேண்டும். காவல்துறை அதற்கான முயற்சிகள் செய்து, தடையின்மைச் சான்றிதழ் (NOC) வழங்கினால் ஏற்றுக் கொள்வோம்.

உடல்தானம் வழங்குவதற்கு நிறைய ஆவணங்கள் தேவைப்படுமா?

முன்பு சான்றிதழ்கள் அதிகம் தேவைப்பட்டன. இப்போது அது இலகுவாக மாற்றப்பட்டுள்ளது. முன்பெல்லாம் உடல்தானம் செய்ய விரும்புவோர் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அந்த நடைமுறை இல்லை. இறந்தவர் விரும்பாமல் இருந்து, அவர் வீட்டார் விரும்பினால் உடல்தானம் வழங்கலாம்! மருத்துவமனையில் இறந்தால் மருத்துவர் சான்றிதழ், வீட்டில் இறந்தால் கிராம நிருவாக அலுவலர் சான்றிதழ் போதுமானது. தவிர ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதி, இறந்தவர் ஆதார் அட்டையும், ஒப்படைப்பவரின் ஆதார் அட்டையும் இணைக்க வேண்டும்!

ஏற்றுக் கொள்ள முடியாத உடல்தானங்கள் ஏதும் உள்ளதா?

எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, கொரோனா போன்ற தொற்றுகள், முற்றிய நிலையிலான புற்றுநோய், படுக்கைப் புண்கள், சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்சினைகள், உடல்பருமன், விபத்தில் கடுமையான காயம், பிரேதப் பரிசோதனைகள் உள்ளிட்ட காரணங்கள் இருந்தால் அந்த உடல்கள் தானம் செய்ய ஏற்றவை அல்ல.
இறந்த பிறகு எத்தனை மணி நேரத்திற்குள் உடலைக் கொடுக்க வேண்டும்?

பொதுவாக இறந்தவர் உடல் சில மணி நேரத்திற்குப் பிறகு “விறைக்க”த் (Rigor Mortis) தொடங்கும். சற்றொப்ப 24 மணி நேரத்திற்குள் அந்த விறைப்புத் தன்மை நீங்கிவிடும். பிறகு தோல்களில் சுருக்கம் ஏற்பட்டுவிடும். ஆதலால், அதற்கு முன்பே உடலை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்து விட வேண்டும்.

உடலைப் பெற்றதும் மருத்துவக் கல்லூரியின் செயல்முறை என்ன?

உடனடியாக உடலைப் பதப்படுத்தும் (Embalming) பணியைச் செய்வோம். அதற்குரிய பல்வேறு திரவங்கள் 5 முதல் 7 லிட்டர் வரை சேர்த்து, இறந்தவர் உடலின் தொடைப் பகுதி இரத்தக் குழாய் வழியாகச் செலுத்துவோம்! சிறிது, சிறிதாக முழு உடலுக்கும் அது பரவும். சடலத்தின் உடலில் அப்போது வேர்வை வரத் தொடங்கும். நரம்புகள் புடைத்தாற்போன்று காட்சி தரும். கண், மூக்கு வழியாகச் செலுத்தப்பட்ட திரவம் நீர்க் குவளைகளாக வெளிவரும். அப்போது தான் அந்த உடல் முழுமையாகப் பதப்படுத்தப்பட்டது என்பதை அறிவோம்.
ஓர் உடலை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்துவீர்கள்?

10 மாணவர்களுக்கு ஓர் உடல் என்பது வாய்ப்பாக இருக்கும். தட்டுப்பாடான சூழலில் அதிக மாணவர்கள் வகுப்பில் இருப்பர். ஓர் உடலை ஓர் ஆண்டு வரை பயன்படுத்தலாம். அதன் பிறகு கை, கால்கள் என உறுப்புகளைப் பிரித்துப் பல்வேறு ஆண்டுகள் அது பயன்பாட்டில் இருக்கும். ஒரு கட்டத்திற்கு மேல், அந்தப் பாகங்களை எரித்துவிடுவோம்! அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தேவைப்படுகிற போது, இறந்த உடலின் பாகங்களைப் பார்த்துக் கூடுதல் தகவல் பெற்றுச் செல்வர். இது அரசு மருத்துவர்களுக்கு மட்டும் பொருந்தும்!
சடலங்களுக்கு ஊடாக வசிக்கிற போது, ஏற்படுகிற மன உணர்வுகள் என்ன?

புதிதாகப் படிக்க வரும் மாணவர்களில் சிலர் மயக்கம் அடைவதுண்டு. ஆனால், அது விரைவிலே சரியாகிவிடும். உடலைப் பதப்படுத்திவிட்டால் (Embalming) துர்நாற்றம் என்பது இருக்காது. அதே நேரம் மாணவர்களின் வகுப்பிற்குப் பயன்பட்டது போக, மீதி நேரத்தில் அந்த உடலைப் பல்வேறு கரைசல்கள் அடங்கிய நீர்த் தொட்டியில் வைத்துவிடுவோம். அந்த வேதிக் கரைசல்களில் சில நெடிகள் வரலாம். அதனால் பாதிப்புகளும் இல்லை; தொற்று நோயும் ஏற்படாது.
இறந்த உடல்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதம் எப்படி இருக்கும்?

பொதுவாக எம்.பி.பி.எஸ்., படிப்பவர்கள் உடலின் அனைத்து உறுப்புகள் குறித்தும் படிப்பார்கள். பிறகு Ortho, ENTஉள்ளிட்ட தனித்தனிப் படிப்பு படிப்பவர்கள் தொடர்புடையதை மேலும் அறிவர். இறந்தவர் உடலைச் சடலம் என்று எண்ணாமல், மனிதர் என்பதாகவே மாணவர்கள் மதிப்பர். அப்படித்தான் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளோம்! ஆசைகள், கனவுகள், உறவுகள், அன்பு என அனைத்தும் கொண்ட மனிதர் அவர்! மருத்துவ மாணவர்களுக்குத் தம் உடலை வழங்கியதால் என்றென்றும் நன்றியும், மரியாதையும் செலுத்துவார்கள் மாணவர்கள்! அந்த உடலின் அருகே இருந்து பாடம் படிக்கும் போது, ஒளிப்படம் எடுப்பதோ, சிரிப்பதோ அல்லது வேறு எந்த உணர்வுகளுக்கும் ஆட்படுதலோ இல்லாமல், மனிதாபிமானம் கொண்ட மனிதர்களாக விளங்குவார்கள் வருங்கால மருத்துவர்கள்! ♦


ஞாயிறு, 16 ஜூன், 2024

மரணத்திற்குப் பின் வாழ்க்கை… – மருத்துவர் இரா. கவுதமன்



2023 கட்டுரைகள் மற்றவர்கள் மே 1-15,2023

மரணம் என்பது ஓர் இயற்கை நிகழ்வு. உயிருள்ள அனைத்தும் ஒரு நாள் மரணமடைந்தே தீரும். உயிருள்ள ஒவ்வொரு உயிரிகளும் மரணமடையாமல் இருக்க முடியாது. ஆத்திகர்கள் நாம் செய்யும் “புண்ணியங்கள்’’ நம்மை வாழ வைக்கும் என்று கூறுவதை பலமுறை நாம் கேட்டிருக்கிறோம் மரணத்திற்குப் பின் நாம் செய்யும் நல்ல செயல்கள் நம்மைப் பற்றிய நினைவுகளை மனங்களில் தங்க வைக்கும் என்பதைத் தவிர, பகுத்தறிவுக்கு ஒவ்வாத எண்ணங்கள்தான் இவை.

நம் இதயம் தொடர்ச்சியாகச் செயல்படுகிறது. மூளையும் அவ்வாறே செயல்படுகிறது. இரத்த ஓட்டம் நிற்காமல் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. காதுகள் கேட்கின்றன. கண்கள் பார்க்கின்றன. மூக்கு மூலம் உள் செல்லும் காற்றால், நுரையீரல்கள் உயிர்காற்றை நாள் முழுதும் இடைவிடாமல் உறிஞ்சி உடல் செல்களுக்கு அனுப்புகின்றன. உடலில் ஏற்படும் நச்சுகளை சிறு நீரகங்கள் இடைவிடாமல் வடிகட்டி வெளியேற்றுகின்றன. உண்ணும் உணவில் இருக்கும் சத்துகளை குடல் உறுப்புகள் உறிஞ்சி இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் செலுத்துகின்றன. ஒரு பெரிய தொழிற்சாலையில் பல பகுதிகள் செயல்பட்டு, ஒரு முழுமையான பொருளை உருவாக்குவது போல், நம் உடல் எனும் இயந்திரத்தில் பல உறுப்புகள் செயல்பட்டு, நம்மை இயக்குகிறது. இதையே நாம் “உயிர்’’ என்கிறோம். உடலின் பொறிகள் சரியாகச் செயல்படாத நிலையையே நோய் என்கிறோம்.

எப்படி தொழிற்சாலையில் உள்ள ஒரு பொறி பழுதானால் அதை சரியாக்கி மீண்டும் இயங்க வைக்கிறோமோ. அதேபோன்று நோயினால் உடலில் ஏற்படும் பழுதுகளை மருத்துவத்தால் சீராக்குகிறோம். பொறிகள் பலவும் ஒருங்கிணைந்து தொழிற்சாலை இயங்குவது போலவே உடல் உறுப்புகள் பலவும் இணைந்து செயல்பட்டே நம் உடலுக்கு இயக்கத்தைக் கொடுக்கின்றது. பழுதைச் சீராக்க முடியாத நிலையில் தொழிற்சாலை இயங்க முடியாத நிலை ஏற்படுவது போல், சீராக்க முடியாத பழுதுகள்(நோய்கள்) ஏற்பட்டால் உடல் இயக்கம் முழுமையாக நின்றுவிடுகிறது. இதையே “உயிர்’’ போய்விட்டது. என்றும் “மரணம்’’ என்று கூறுகிறோம்.

எனவே “உயிர்’’ என்று உருவகப்படுத்தப்படுவதற்கு தனியான குணநலன் கொண்டதாகவோ, அருவமாகவோ, ஆன்மாவாகவோ, ஆவியாகவோ, பேயாகவோ, கடவுளாகவோ மாறுகிறது என்பதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை. மேலே கூறிய அனைத்தும் நம் கற்பனைகளால் உருவகப்படுத்தப்பட்டவையே. நம் உடல் இயக்கத்தையே நாம் “உயிர்’’ என்கிறோம். இயக்கத்தை நம் உடல் நிறுத்திவிட்டால் “உயிர் போய்விட்டது’’ என்கிறோம். இதைத் தவிர உயிருக்கு வேறு எந்த விதமான மறு சுழற்சி கிடையாது என்பதே உண்மை. ஆதலால், “உயிர்’’ போன பின்பு ஆவி, பேய், கடவுள், மறு பிறவி என்று கூறுவதெல்லாமே அறிவியல் அடிப்படையற்ற, கற்பனையாக உருவகப்படுத்தப்பட்டவையே! இவையனைத்தையும் பாமர மக்களிடம் பரப்பியவர்கள், தங்களின் சுய நன்மைக்கும், பொருளீட்டவும் இதை ஒரு வாய்ப்பாக்கி வருமானம் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

மனித உயிர் போன பின்பு இத்தனை வகையில் மீண்டும் அவை இருப்பதாகக் கூறுபவர்கள் இறந்த மற்ற உயிரினங்களுக்கு இதுபோன்ற நிலைகள் வருகிறதா என்று ஏன் கூறுவதில்லை? ஒரு பசு (கோமாதா) கடவுளாகவோ, ஒரு எருமை மாடு (எமனின் வாகனம்), ஒரு நாய்(பைரவர்), ஒரு பன்றி(வராகமூர்த்தி) போன்றவை ஆவியாகவோ, பேயாகவோ அலைவதாக யாருமே கூறுவதில்லை. அப்படிக் கூறினால் அதை நாம் நம்புவோமா? அதென்ன, மனித உயிர்களுக்.கு மட்டும் மரணத்திற்குப் பின் இத்தனை கற்பனைகள்? இத்தனை கற்பனைகளை மரணத்திற்குப்பின் இருப்பதாகக் கூறுபவர்கள் உண்மையில், எப்பொழுதாவது கடவுளையோ, பேய்களையோ, ஆவிகளையோ நேரில் பார்த்ததாக அறிவியல் முறையில் உறுதி செய்திருக்கிறார்களா? இல்லை என்பதே விடையாக இருக்கும்.

“மரணத்திற்கு பின் வாழ்வு’’ என்பது ஆவியாகவோ, பேயாகவோ, கடவுளாகவோ, மறு பிறவியாகவோ இல்லை. பின் எப்படி இந்தத் தலைப்பு என்று வியக்கிறீர்களா? ஆம், மரணத்திற்குப் பின் நாம் வாழ முடியும். மருத்துவ அறிவியல் அதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறது. மூளைச் சாவு என்று மரணத்திற்கு விளக்கம் கொடுக்கப்பட்டபின் நம் “உடல் உறுப்புகள் கொடை’’யாக மற்றவர்களுக்கு அளிப்பதன் மூலமே நாம் வாழ முடியும். மூளை மீண்டும் செயல்படாத மூளைச்சாவு ஏற்பட்டவரை, மருத்துவர்கள் இதயத்துடிப்பை செயல்பாட்டிலேயே வைத்திருக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர்.

மூளைச்சாவு அடைந்துள்ள ஒருவரின் உறவினர்களின், இரத்தச் சொந்தங்களின் அனுமதியுடன் அவரின் இதயத்தை வேறு ஒருவருக்குப் பொருத்தி அவரை வாழ வைக்கலாம். அவரின் நுரையீரலை பழுதானவருக்குப் பொருத்தி அவருக்கு உயிரூட்ட முடியும். சிறுநீரகச் செயல்பாட்டை இழந்த இரண்டு பேருக்கு, மூளைச் சாவு அடைந்தவரின் சிறு நீரகங்களைப் பொருத்துவன் மூலம் அவர்களுக்கு வாழ்வளிக்க முடியும். குடிபோதையாலோ, நோய்களாலோ ஒருவரின கல்லீரல் செயலிழந்திருந்தால் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல், அவரின் வாழ்வை மீட்டுத் தரும். அவர் உயிரோட்டம் நின்றுவிட்டால் அவர் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் அவருடைய இரண்டு கண்களைக் கொடையாக வழங்குவதன் மூலம், இருவருக்குப் பார்வை வழங்க முடியும். மரணமடைந்தவர் கண்கள் மூலம், பார்வை இழந்த இருவர் உலகைப் பார்க்க முடியும்.

இப்பொழுது இரத்த சேமிப்பு வங்கிகள் போல் “எலும்பு சேமிப்பு வங்கிகள்’’(Bone Back) செயல்பாட்டிற்கு வந்துவிட்டன. மரணமடைந்தவரின் எலும்புகளைக் கூட இன்று மீண்டும் பயன்படுத்த முடியும் என்ற நிலை இன்று வந்துவிட்டது. மூளைச்சாவு அடைந்த ஒருவர் உறுப்புகளைக் கொடையாக அளிப்பதன் மூலம் அவர் உறுப்புகளைப் பெற்றவர்கள் மூலம் உலகைப் பார்க்க முடியும் நோயாளிகளாக மாறி வாழ்விழந்து மரணமடையும் நிலையில் உள்ள அய்ந்து பேர்களை மூளைச்சாவடைந்தவர் வாழ வைக்க முடியும். மூளைச்சாவுதான் “மரணம்’’ என்று நிலை ‘நாட்டப் பட்டபின், “மரணத்திற்குபின் வாழ்வு’’ என்பதை மருத்துவத்துறை தன் அறிவுக்கொடையாக மனித குலத்திற்கு வழங்கியுள்ளது.

மரணம் நிகழ்ந்த பின் கண்களைக் கொடை-யாக வழங்குவது போல், மருத்துவக் கல்லூரிகளுக்கு நம் உடலைக் கொடையாக வழங்குவதன் மூலம், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் கல்விக்கு நாம் உதவ முடியும். எரியூட்டப்பட்டு சாம்பலாவதாலோ, புதைத்து அழுகுவதாலோ யாருக்கும் பயனின்றிப் போகும் நம் உடல், உடற்கொடை கொடுப்பதன் மூலம், மரணத்திற்குப் பின் மற்றவர்களுக்கு நாம் பயன்பட முடியும். “கடவுளை மற, மனிதனை நினை’’ என்ற தந்தை பெரியார் கூற்றுக்கேற்ப மரணமடைந்தவர்கள் கடவுள்களாகிறார்கள், அவர்களை வணங்க வேண்டும் என்பதெல்லாம் மறந்து (கடவுளை மறந்து) மரணமடையும் நிலையில் உள்ளவர்களுக்கு உடல் உறுப்புகளைக் கொடுக்கும் மனித நேயச் (மனிதனை நினைத்து) செயல்பாட்டின் மூலம் மரணத்திற்குப் பின்னும் நாம் வாழ முடியும்.

(முற்றும்)


மரணத்திற்குப் பின்… பேய்? – மருத்துவம்



2023 மருத்துவம் மார்ச் 16-31,2023

மருத்துவர் இரா. கவுதமன்

மனிதனுக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்ட காலத்திலும், அதற்கு முன்பும் மரணம் என்பது ஒரு பெரும் புதிராகவும், விடை தெரியாத கேள்வியாகவும் இருந்தது.
மனிதனின் நாகரிகமோ, அறிவோ வளராதகாலத்தில் மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப்பின் என்ன நடக்கும் என்ற எண்ணமும் பல கற்பனைகளை மனித மனதில் தோற்றுவித்தது. அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும், அறிவியல் பொறிகள் மூலமும், மிக அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த மூடநம்பிக்கைகள் மக்களிடையே வெகு எளிதாகப் பரப்பப்படுகின்றன.

மரணத்திற்குக் காரணம் என்ன, இத்தனை நாள்கள் இயங்கிய மனிதனின் இயக்கம் திடீரென ஏன் நின்றது? அதன் காரணம் என்ன? போன்றவையும், மரணத்திற்குப் பின் என்ன நிகழும் போன்ற எண்ணங்களே பலவித எண்ணங்களுக்கும், கற்பனைகளுக்கும் காரணமாகின்றன. ஆதி மனிதன் தன்னோடு அத்தனை நாள் உடனிருந்தவர்கள், இயங்கிய-வர்கள் திடீரென இயக்கத்தை நிறுத்தியதையும், அவர்களின் நீங்காத நினைவுகளும் புரியாமல் என்ன செய்வது என்று தவித்த காலமும் ஒன்று இருந்தது. உயிரோடு இருந்த காலத்தில் அவர்களோடு வாழ்ந்த, அவர்கள் இயங்கிய நிலைகளை அவ்வளவு எளிதாக, அவனைச் சுற்றி இருந்தவர்களால் மறக்க முடியவில்லை.

ஒன்றாக வாழும் சமூக அமைப்பு, குடும்ப வாழ்க்கை என்று மனிதர்கள் வாழத் தலைப்பட்ட பொழுதுதான் மரணத்தின் தாக்கத்தை அவர்கள் உணர்ந்தனர். அதுவும் மரணம் என்பது ஒரு மீளமுடியாத நிகழ்வு என்பதையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் மனிதன், தூங்கி எழுவதைப் போல, மீண்டும் எழுந்து வருவார்கள் என்று எண்ணியதன் விளைவே இறந்த உடலோடு, பணியாளர்களுடன், உணவுப் பொருள்கள், காசுகள் போன்றவற்றையும் வைத்து ‘மூடும் பழக்கம் (பிரமிடுகள்) ஏற்பட்டது. நாளடைவில் மாண்டவர் மீளமாட்டார் என்பது தெளிவான பொழுது இறந்த பிணத்தை அப்படியே விட்டு விட்டு மாற்றுக் குடியிருப்புக்கு மாறி வசிக்கும் நிலைமை வந்தது.

பிற்காலத்தில் மனித அறிவு வளர வளர இறந்தவர் மீண்டும் வரமாட்டார் என்று உறுதியாக உணரத் துவங்கிய நிலை வந்ததும், பிணங்களைப் புதைக்கும் பழக்கமும், பிற்காலத்தில் மரப்பெட்டிகளில் வைத்துப் புதைக்கும் பழக்கமும், எரிக்கும் பழக்கமும் மனித சமூகத்தில் நடைமுறைக்கு வந்தன.

மனித நாகரிக, அறிவு வளர்ச்சி ஏற்பட, ஏற்பட மரணமடைந்தவர் உடல்களைப் பதப்படுத்தும் முறை ஏற்பட்டது. மரணமான
உடல்களை அந்தந்தப் பகுதிகளில் பலவகைகளிலும் அகற்றினாலும், மரணமடைந்தவர்களின் நினைவுகள் மட்டும் அழியவில்லை. நிலைத்து நின்றுவிட்ட அந்த நினைவுகளே பல கற்பனைகள் தோன்றவும் காரணமாகிவிட்டன. இந்த நிலை நாகரிகம் வளராத காலகட்டத்-திலிருந்து, அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலம் வரையிலும் நிலை பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் அவர்கள் (இறந்தவர்கள்) நினைவுகள் கடவுள்களாக வழிபடும் நிலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே நடுகல் வழிபாடு,
குலதெய்வ வழிபாடு, மறைந்த தலைவனை கடவுளாக்கி வழிபடுதல், உயிரோடு இருந்தபொழுது வழிநடத்தியது போல், இறந்த பின்னும் வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கை போன்றவையே கடவுள் வழிபாட்டுக்கும், “பய’’பக்திக்கும் அடிப்படையாக அமைந்தன. நாளடைவில் மரணமடைந்தவர்களைப் புதைத்த இடங்களே கோவில்களாக வழிபடும் இடங்களாக மாறிப்போயின.

நமது நாட்டில் ஆரிய(பார்ப்பன) ஊடுருவலுக்குப்பின் புதிய, புதிய தெய்வங்கள் படையெடுத்தன. குலதெய்வ வழிபாடுகள் ஊரைவிட்டே துரத்தப்பட்டு, ஊருக்கு வெளியே ‘சூத்திர’சாமிகளாக மாறிப்போயின. நம் முனியப்பனும், மதுரை வீரனும், சுடலையாண்டியும், மாரியாத்தாக்களும் ஊருக்கு வெளியே உட்கார வைக்கப்பட்டன. ஆரியப் பார்ப்பனர்களின் தெய்வங்கள் ஊருக்குள் பெரிய, பெரிய கோயில்கள் கட்டப்பட்டு அதில் அமர வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் மரணமடைந்தவர்கள் தெய்வங்களாகக் கருதப்பட்டாலும் ஆரியப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட நம் மக்கள் மரணமடைந்த-வர்கள் ஆவிகளாகவும், பேய்களாகவும் மாறியிருப்பதாக நம்ப வைக்கப்பட்டனர்.
இதுபோன்றே உலகின் பல பகுதிகளிலும் நம்பிக்கைகள் மாறுபட்டன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஆவிகள், பேய்கள் பற்றிய பயம் பல வகைகளிலும் பரப்பப்பட்டன. மதங்களும், மதத்தலைவர்களும், தங்கள் சுயநலத்தை முன்னிலைப்படுத்தி இந்த நம்பிக்கைகளை குறையாமல் பார்த்துக்கொண்டனர் –  பார்த்துக் கொள்கின்றனர். நாகரிகமும், அறிவும் வளர்ந்
துள்ள மேலை நாடுகள் தொடங்கி, படிப்பறிவில்லாத பழங்குடிகள் வாழும் ஆப்ரிக்கா கண்டம் தாண்டி கீழை ஆசியா நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கைகள் பரவலாக உள்ளன.
நம் நாட்டிலோ சொல்லவே வேண்டாம். ஆவிகள், பேய்கள் பற்றிய பயம், நோய் வந்தால் அதை மருத்துவரிடம் காண்பிக்காமல் “பேய் சேட்டை’’ என்று நம்புவது போன்றவை கிராமப்புறத்து படிக்காத ஏழை பாமர மக்களிடம் இன்றளவும் நீக்கமற நிறைந்துள்ளன. இதன் விளைவாகவே கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் ஊருக்கு வெளியே உள்ள காவல் தெய்வங்கள் கோயில்களிலும் பேய் ஓட்டுவது, ஆவிகளைத் துரத்துவது போன்ற செயல்பாடுகள் வெற்றிகரமாக பூசாரிகளால் நடத்தப்படுகிறது.

இதில் மதவேறுபாடுகள் இல்லை. பல தேவாலயங்களில் பாதிரியார்கள் யேசுவின் திருநாமத்தை(?) ஜபித்து பேய், ஆவிகளை ஓட்டுவதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் அவர்கள் “பரிசுத்த ஆவிகள்’’ பற்றிப் பேசுவதையும் பலமுறை கேட்டிருக்கிறோம். முஸ்லிம்கள் தர்காவில் பேய் ஓட்டுவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த எல்லாஇடங்களிலும் ஒரு பார்ப்பானோ, பார்ப்பனப்பெண்ணோ பேயாடி நாம் பார்த்திருக்கவே முடியாது. அதேபோல் பேயாடுகின்ற ஆண்களையும் நாம் பார்த்திருக்க முடியாது. மரணத்தால் ஏற்படும் பயம், பலவித கற்பனைகள் வளர காரணமாகின்றன. அதையும் மக்கள் முழுமையாக நம்புகின்றனர். மரணமடைந்தவர்கள் “உயிர்’’ போன உடன், அந்த உயிர் உடலைவிட்டு வெளியேறி, அதே அறையில் சில மணி நேரங்கள் இருந்து அனைவரையும் கவனிக்கிறதாம்.

மதவாதிகள் உயிரை, “ஆன்மா’’ என்றே குறிப்பிடுகின்றனர். உடல்தான் அழியுமே ஒழிய, உயிரோ, ஆன்மாவோ அழிவதில்லை என்று இவர்கள் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர். பேய் இருப்பதாகவும், ஆவிகள் பிடித்து ஆட்டுவதாகவும் கூறும் எந்த மதவாதி
யும், ஆன்மாவைப் பற்றி பேசும் எந்த ஆன்மிகவாதியும் இதுவரை பேய்களையோ, ஆவிகளையோ, ஆன்மாவையோ பார்த்திருப்பார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

இயற்கைப் பேரழிவுகளால், பூகம்பம், ஆழிப்பேரலை(சுனாமி) வெள்ளப்பெருக்கு, பனிச்சரிவு அடைமழை போன்றவற்றால் அழிந்தவர்கள் எத்தனை லட்சங்கள்? விபத்துக்கள் உண்டாக்கிய மரணங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

இதுதவிர இயல்பான, இயற்கை மரணங்களில் எண்ணற்றோர் மறைந்தனரே! இத்தனை பேரும், ஆவிகளாகவும், பேய்களாகவும் உலவும் நிலை உண்மையானால் இந்தப் பூமிப் பந்தில் அவை மட்டுமே நிறைந்திருக்கவேண்டும். நமக்கு இடமே இருந்திருக்காது. ஒரே, ஓர் உயிரியான மனித குலத்தில் மட்டும் இத்தனை கோடி இறப்பு  இழப்பு நிகழ்ந்ததென்றால், மற்ற உயிரிகளான, மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள்,

நீரிலும் நிலத்திலும் வாழும்உயிரினங்கள், பூச்சிகள், புழுக்கள் என்று உலகில்
உள்ள அனைத்து உயிர்களும் ஒருநாள் இறந்துவிடுகின்றனவே! அந்த உயிர்கள் எல்லாம் ஏன் ஆவியாக மாறி அலைவதில்லை. உடலைவிட்டு உயிர் பிரிகிறது, என ‘உயிர்’ என்னும் சொல்லாடல்வழக்கில் உள்ளதே! மதவாதிகள் இதையே ‘ஆன்மா’ என்றும், “ஆவிகள்’’ என்றும், “பேய்’’, ‘பிசாசு’என்றெல்லாம் கூறிப் பயமுறுத்தி ஏய்த்துப் பிழைத்து வருகிறார்களே தவிர, அவையெல்லாம் கிடையாது என்பதே உண்மையாகும்.
இந்தப் பித்தலாட்டக்காரர்களுக்கு மரண அடி தரக்கூடிய டாக்டர் கோவூர் அவர்களின் ஆவி உலகம் எனும் நூலை வாங்கிப் படியுங்கள்; தெளிவடையுங்கள்.
சிந்திப்போம், சந்திப்போம்!!


கடவுள் நம்பிக்கையைத் தகர்த்த மருத்துவத்துறை!



– மருத்துவர் இரா. கவுதமன்

பிறக்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ‘மரணம்’தான் இறுதியானது. “ஆக்கல்’’, “காத்தல்’’, “அழித்தல்’’ இவையெல்லாம் கடவுளின் செயல் என்று பகுத்தறிவு உள்ள மனிதன்தான் நினைக்கிறான். மற்ற உயிரினங்கள் எதற்கும் இந்த உணர்வோ, நினைப்போ இல்லை. இயல்பாக பிறக்கிறது, வாழ்கிறது இறக்கிறது. மனிதன் தன் அறிவியல் வளர்ச்சியால் “கடவுள் செயல்’’ என்ற நம்பிக்கையுடன் அறியப்பட்ட இந்த மூன்று செயல்பாடுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன் மருத்துவ அறிவியல் மூலம் ஆளுமை செலுத்துகிறான் என்பதுதான் உண்மை.

ஓர் உயிரை உருவாக்க முடியுமா என்று மதவாதிகளின் கேள்விக்கு மருத்துவ அறிவியல், “முடியும்’’ என்றே விடைபகருகிறது. செயற்கை முறையில் “மரபணுக்கள்’’ (Genes)  உருவாக்கம் உயிரை உருவாக்கும் முயற்சியில் பெரும் வெற்றியைத் தந்து கொண்டிருக்கிறது. “படியாக்கம்’’ (Cloning) என்று அழைக்கப்படும் முறையில் நம்மைப் போலவே மற்றொரு உருவத்தை உருவாக்குகிறார்கள். “குருத்தணு’’ (StemCell) சேமிப்பு வங்கிகள் இன்று பல நாடுகளில் வந்துவிட்டது. குருத்தணு சேமிப்பு பல தீர்க்க முடியாத நோய்களைக் குணமாக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

“எல்லாம் அவன் செயல்’’ என்று நிறைய குழந்தைகள் பெற்றுத் தள்ளிய காலம் மாறி, “நாம் இருவர்’’ என்ற நிலை வந்து, இன்று அதுவும் மாறி, “ஒரு குடும்பம், ஒரு குழந்தை’’ என்ற நிலை பல குடும்பங்களில் இன்று வந்துவிட்டது. குழந்தைப் பேற்றை மனித அறிவியல் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. குடும்பக் கட்டுப்பாட்டை எளிய அறுவை மருத்துவத்தால் வெற்றிகரமாகச் செயலாக்க முடிகிறது.

அறுவை மருத்துவமின்றி “கருத்தடைப் பொருள்கள்’’ மூலம் கருத்தரித்தலைத் தடுக்கவோ, தள்ளிப் போடவே முடியும். குழந்தையே பெறமுடியாத நிலைகளில் “மலடி’’ என்று பெண்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்த காலம் மாறி இன்று, “மலட்டுத் தன்மைக்கு ஆண்களே பெரிதும் காரணமாக இருக்கிறார்கள் என்று அறியப்பட்டு, அதை மாற்றி, மகப்பேற்றை அனைவரும் பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. “கருத்தரிப்பு மய்யங்கள்’’ இந்த மாற்றத்தை மனிதர்களுக்கு வழங்கியுள்ளது.

தந்தை பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்பே “இனி வரும் உலகம்’’ என்ற நூலில் எழுதியபடி, “குடுவைக்குள் குழந்தை பிறக்கும்’’ (Test Tube Babies) என்ற பெயர் மாற்றத்தோடு கருத்தரிப்பு மய்யங்களால் இன்று செயலாக்கப்பட்டு வருகிறது. உயிரினங்கள் உருவாக்கம் என்பது “ஆக்கல்’’ என்ற கடவுளின் செயல் என்பது முழுமையாகப் போய், மனிதன் நினைத்தால் மகப்பேற்றை உருவாக்கிக் கொள்ள முடியும். தேவையான அளவுக்கு செயல்படுத்திக் கொள்ள முடியும். தேவையில்லையென்றால் குழந்தையே பெற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். குறைபாட்டினால் மலட்டுத்தன்மை ஏற்பட்டிருப்பின் அதைச் சீராக்கி மகப்பேற்றை உருவாக்க முடியும் என்ற நிலை

ப்பாடுகள் எல்லாம் கடவுளின் கைகளிலிருந்து மனிதர்கள் கைகளுக்கு வந்துவிட்டன.

அடுத்து கடவுளின் செயல் என்று கூறப்படும் “காத்தல்’’ என்பதும் மனிதனின் கைகளுக்கு மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியரின் சராசரி வயது 25 லிருந்து 30 என்று கூறப்பட்டது. ஆனால், இன்று சராசரி வயது 55 லிருந்து 60 ஆக மாறிவிட்டது. “மந்திரமோ’’, “விதியோ’’, “கடவுள் செயலோ’’ இந்த மாற்றத்தை உருவாக்கவில்லை. மனிதனின் அறிவியல்தான் இப்பேர்ப்பட்ட மாற்றத்தை உருவாக்கியுள்ளது. நோய்கள் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் கொன்றன. மருத்துவத் துறையின் தொடர்ந்த ஆய்வுகள், சமூகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கி, நோய்க் காரணிகளை ஆய்ந்து, நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளைக் கண்டறிந்து உயிர்களைக் காத்தன. ஒரு காலத்தில் கோடிக் கணக்கான மக்களைஅழித்த கொள்ளை நோய்கள் இன்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. கோடிக்கணக்கான (சுமார் 5 கோடி) மனிதர்களை உலகம் முழுவதும் பலி வாங்கிய “பெரியம்மை’’ (Small Box) நோய் ஒரு தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிப்பால் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இதுபோன்று எண்ணற்ற நோய்கள், நுண்ணுயிர்களாலும் (Bacterias), வைரஸ்களாலும் ஏற்படுவதை தடுக்கக் கூடிய ‘உயிர்க் கொல்லி’ (Anti-Biotics) மருந்துகள், தடுப்பூசிகள் இன்று வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, மனித குலத்தைக் “காத்து’’ வாழ வைத்திருக்கின்றன. விபத்துகளால் ஏற்படும் தொல்லைகள், குறைபாடுகளிலிருந்து மனிதர்களைக் “காக்கும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்.

மாரடைப்புப் (Heart Attack)போன்ற நோய்களால் ஏற்படும். திடீர் மரணங்களைத் தடுக்கும் வகையில் தொடர் மருத்துவ ஆய்வுகள், இதயத் தமனி அடைப்பு நீக்கி (Coronary Artery Disease) மருந்துகள், மருத்துவ முறைகள் (Angioplasty) இதயத்தமனி மாற்று வழி அறுவை மருத்துவம் (Coronary Artery Bye Pass Surgery) போன்றவை மாரடைப்பைத் தடுப்பதுடன், திடீர் மரணம் ஏற்படாமல் மனிதர்களைக் “காத்து’’ நீண்ட நாள் வாழ வைக்கிறது என்பது உண்மை. ஏதாவது அறுவை மருத்துவம் இன்று பல்லாயிரம் பேரை வாழ வைக்கிறது. இதன்மூலம் அழிவு வேலையும் தடுக்கப்பட்டுவிட்டது.

(தொடரும்)


புதன், 12 ஜூன், 2024

மரணம்(5) மரணத்திற்கு பின்னால்…-

 மருத்துவர் இரா. கவுதமன்

2023 மருத்துவம் மார்ச் 1-15,2023

மரணமடைந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமாட்டார்கள் என்ற உண்மை எல்லோரும், அறிவர். ஆனால் அவர்களோடு வாழ்ந்த நாள்கள், அவர்களைப் பற்றிய நினைவுகள் அழியாமை, மரணம் அடையும் வரை நம்மோடு இருந்தவர்கள் அதற்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்ற கற்பனை ஆகியவற்றின் விளைவாகத் தோன்றிய எண்ணங்களே கடவுள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், ஆன்மா போன்றவை கற்பனையாக உருவாக அடிப்படைக் காரணம்.

பல நேரங்களில் மரணமடைந்தவர்களின் உறவினர்கள், “அவர் மரண-மடையப் போவதை ஒருசில மணி நேரத்திற்கு முன்னே, ஒரு சில நாள்களுக்கு முன்பே உணர்ந்துவிட்டார் போலும்’’ என்றெல்லாம் கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால், இதற்கு எந்தவித மருத்துவ, அறிவியலும் அடிப்படையாக இல்லை. எல்லா மதங்களிலும் மரணத்தைப் பற்றி பலவகை
மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.

எல்லா மதங்களிலும் மரணமடைந்தவர்கள் ஆவியாக அலைவதாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதுவும் திடீரென ஏற்படும் மரணங்களில் மரணமடைந்தவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் ஆவியாக மாறி அலைகின்றனர் என்ற நம்பிக்கை பரவலாக அனைவர் மனதில் இருக்கிறது. அதிலும் நல்லவர்கள், நம்மை வழி நடத்திய பெரியவர்கள் நல்ல ஆவிகளாக மரணத்திற்குப் பின்னும் நமக்கு நல்வழி காட்டுவதாகவும், கெட்டவர்கள் கெட்ட ஆவிகளாக மாறி நமக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்றும் நம்பிக்கை. திடீரென மரணமடைந்தவர்கள் தங்கள் ஆசை நிறைவேறும் வரை ஆவியாக அலைந்து மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்றும் நம்புவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

ஆவிகளைப் பற்றிய எண்ணங்களும்,நம்பிக்கைகளும் நாளடைவில் பேய்களாக உருவாகியது. பேய்கள், பிசாசுகள் கற்பனைக்கு, மதம், மத குருமார்கள், அதை வளர்த்ததும் ஒரு முக்கிய காரணம். கடவுள் பற்றிய நம்பிக்கையைப் போலவே “சாத்தானை’’ப் பற்றிய நம்பிக்கையும் பெரும்பாலான மதங்களிலும் உள்ளன. நாகரிகம் வளரும் காலத்தில் ஒரு பேரரசாக உருவாகிய கிரேக்கம் பல கடவுள்களை நம்பி, அவற்றுக்கு உருவம் கொடுத்து, சிற்பங்களாக வடிக்கத் துவங்கினர். ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், ஒரு கடவுளைக் கற்பிப்பதும், அதை வணங்கும் பழக்கமும் கிரேக்க நாட்டிலேயே உருவானது. அதற்குப் பிறகு வந்த ரோமப் பேரரசில் அரசனே கடவுள் என்ற நிலைகளில் நம்பிக்கை கொள்ளும்படி மக்கள் வற்புறுத்தப்பட்டனர்.

ரோமப் பேரரசு காலத்தில் தோன்றிய ‘செமிடிக்’ மதங்கள் பல உருவ வழிபாடுகளை மாற்றி, ஒரு கடவுள் தத்துவத்தை முன் வைத்தன. ‘பைபிளில் வரும் ஆப்ரகாம் கதைக்குப் பிறகு உருவான மதங்கள் “செமிடிக் மதங்கள்’’ என்றழைக்கப்பட்டன. யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் இவையனைத்தும் ஒரு கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை வைத்தன. யூதர்களின் வேதமான “தோரா’’விலும் அதிலிருந்து கிளைத்த கிறித்துவர்களின் வேதமான “பைபிளி’’லும், அதற்குப்பின் வந்த இஸ்லாமியர்களின் வேதமான “குர்ஆனி’’லும் கடவுளைப் பற்றிக் குறிப்பிடுவது போலவே, “சாத்தானை’’ப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

நன்மை செய்பவர் கடவுள், தீமை செய்பவர் சாத்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நன்மை செய்யும் “பரிசுத்த ஆவி’’களும் தீமை செய்யும் கெட்ட ஆவிகளும், “பிசாசுகள்’’, “இரத்தக் காட்டேரிகள்’’(ஞிக்ஷீணீநீuறீணீ) தோன்றின அதே ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் நன்மை செய்யும் தேவதைகளும், தீமை செய்யும் ஆவிகளும் அவரவர் கற்பனைகளுக்கு ஏற்ப, அப்பகுதியின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன.

பயத்தின் விளைவாகவே, அந்த ஆவிகளும், பேய்களும் தம்மைப் பிடித்துக்கொள்ளும் என்ற நிலையில் அவற்றை மனநிறைவடையச் செய்ய, அந்தக் கற்பனை உருவங்களை அமைதிப்படுத்த அவற்றை வணங்குவதும், அவற்றிற்கு வேண்டியதைப் படைக்கும் பழக்கமும் ஏற்பட்டது.
கடவுளுக்கும், மக்களுக்கும் தொடர்பு உண்டாக்கும் இடைத்தரகர்களாக, “அர்ச்சகர்களாக’’ வாழ்ந்தனர். கடவுள் ஆவிகள், பேய்கள் இவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி படைத்தவர்களாக இவர்கள், மக்களால் நம்பப்பட்டனர். இந்தியாவில் ஆரியர்கள் இந்தத் தரகுப் பணிகளை செய்யத் துவங்கினார்.

அரசர்களே மதகுருமார்களின் கட்டளை-களாக ஆண்டவன் கட்டளையாக ஏற்றுக்-கொண்டு செயல்படும் பொழுது அவர்கள் கீழ் வாழும் குடிமக்கள் மதகுருக்களின் ஆணைகளை, கடவுளின் ஆணைகளாக, எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டு அடங்கிப் போயினர். சர்வ வல்லமை உடைய மனிதர்களாக மதகுருக்கள் மாறிப்போயினர். பல பகுதிகளில் கடவுளின் ஆணைகளை அறிந்தவர்களான இந்த அர்ச்சகர்களே தங்கள் வாரிசுகளுக்கு மதச்சடங்குகளும், அவை தங்கு தடையின்றி தொடரும் முறைகளையும் சொல்லித் தந்தனர். அதன் விளைவாக அர்ச்சகர் பரம்பரை தோன்றியது. புரோகிதர்கள் மட்டுமே தெய்வீக சம்பிரதாயம் அறிந்தவர்களாக பல மதங்களில் மாறிப்போனார்கள்.

புரோகிதனுக்கு மட்டுமே கடவுளை அணுகும் வழிமுறைகள் தெரியும் என்றும், கடவுளின் விருப்பையும், வெறுப்பையும் காட்டும் மந்திரங்கள் அவனுக்கும், அவன் பரம்பரைக்கு மட்டுமே தெரியும் என்றும் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். பரம்பொருளுக்கும், பக்தனுக்கும் இடையே இந்த இடைத்தரகன் பாதி தெய்வீகத்தன்மை உடையவன் ஆனான். அவன் துணையின்றி ஒருவரும் நேரடியாக தெய்வத்தைத் தொழுவதோ, தெய்வத்துடன் தொடர்புகொள்ளவோ முடியாது என்ற நிலை நாளடைவில் மக்களிடையே பரவச் செய்யப்பட்டது. புரோகிதர்களும், அர்ச்சகர்களும், பூசாரிகளும் சமூகத்தில் அஞ்சத் தக்கவர்களாகவும், அவர்கள் சொற்கள் தெய்வீக அருள்வாக்காகவும் மாறிவிட்டது.
நாட்டை ஆளும் மன்னர்களும் அந்த தெய்வீக அருள்வாக்கிற்குக் கட்டுப்பட்டனர். மன்னர்களையும் மிஞ்சிய அதிகாரம் உடைய அவர்களைப் பார்த்து மக்கள் பயத்துடன் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்த கடவுள்களை நெருங்க இந்தப் பூசாரிகள் தேவைப்பட்டனரோ, அவர்களையே மக்கள் பயத்துடனும், பக்தியுடனும் (பய, பக்தி) நெருங்கும் நிலை ஏற்பட்டது.

– தொடரும்