மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (8)
மரு.இரா.கவுதமன்
இதய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இதயத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இதயம் ஒரு வியப்பூட்டக்கூடிய உடல் உறுப்பு. முழுதும் தசைகளாலான இதயம் நம் நெஞ்சுக் கூட்டின் இடப்புறம் நெஞ்செலும்பிற்கு பின்புறம் அமைந்துள்ளது. கருத்தரித்தல் நிகழ்ந்து, 21 நாள்களிலேயே தோன்றும் முதல் உடல் உறுப்பு இதயம்தான். கருவின் இயங்கக்கூடிய முதல் உடலுறுப்பும் இதுதான். ஆரம்பத்தில் இரண்டு குழாய்களாக வளர்ச்சி அடையும் இது, பிறகு இணைந்து 4 அறைகளாக உருமாற்றம் பெறும். மூன்று வாரங்களில் இயங்கும் இதயம், கருவின் “இடைத்தோல் படை’’யிலிருந்து (Mesoderm) உருப்பெறுகிறது. கருவின் உட்புற செல்கள் மூன்று விதமாகப் பிரிகின்றன. “வெளித்தோல்படை’’ (Ectoderm), “இடைத்தோல் படை’’(Mesoderm), “உள்தோல் படை’’ (Endoderm) ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தே அனைத்து உறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றன.
இடைத்தோல் படையில் வளரும் இதயம் கரு உண்டாகி மூன்றாவது வாரத்தில் துடிக்கத் துவங்கி, நம் மரணம் வரை துடித்துக்கொண்டே இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும் இதயம், 60 வயதானவருக்கு, ஏறக்குறைய 2.5 மில்லியன் தடவை துடிக்கும். பெண்களுக்கு சுமார் 250 முதல் 300 கிராம் எடையும், ஆண்களுக்கு 300 முதல் 350 கிராம் எடையும் இருக்கும். இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் ‘சிரைகள்’ என்றும் இதயத்தில் இருந்து இரத்தத்தை உடலின் பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் குழாய்களுக்கு “தமனிகள்’’ என்றும் பெயர். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. அவை வலது (ஆரிக்கள்) மேலறை, இடது மேலறை, வலது கீழறை (Ventricle), இடது கீழறை ஆகியவை ஆகும்.
மேலறைகளும், கீழறைகளும் “அடைப்பிதழ்’’-களால் (Valve) பிரிக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் அறைகளை “முக்கூர் அடைப்பிதழும்’’(Tricuspid valve), இடது புற அறைகளை “இருகூர் அடைப்பிதழும்’’ (Bicuspid Valve) பிரிக்கின்றன. இவ்வறைகளை “பிரிசுவர்’’(Septum) பிரிக்கிறது. இரண்டு மேலறைகளும் மெலிதாகவும், இரண்டு கீழறைகள் தடிமனாகவும் இருக்கும். இடது கீழறை, வலது கீழறையை விட அதிக தடிமனாக இருக்கும். உடல் முழுதும் இரத்தம் செலுத்த வேண்டிய வேலையை இடது கீழறை செய்வதால் அது அவ்வாறு அமைந்துள்ளது. இடது கீழறையிலிருந்து வெளியேறும் “பெருநாடி’’ (மகாதமனி_(Aorta) யில் அடைப்பிதழ்கள் (Valve) உள்ளன. வலது கீழறையிலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் நுரையீரல் தமனியிலும் அடைப்பிதழ்கள் உள்ளன. இவை “அரைமதி அடைப்பிதழ்கள்’’ (Semilunar Valves) என்றழைக்கப்படுகின்றன. இதயத்தின் கீழ்புறமுள்ள அசுத்த இரத்தம், ‘கீழ்ப்பெருஞ்சிரை’ மூலமும், இதயத்திற்கு மேல்புறம் உள்ள அசுத்த இரத்தம் ‘மேல் பெருஞ்சிரை’ மூலமும் இதயத்தின் வலது மேலறையிலும் சேரும். நுரையீரலில் இருந்து வரும் நுரையீரல் சிரை, இதயத்தின் இடது மேலறையில் திறக்கும். நுரையீரலில் சுத்தகரிக்கப்பட்ட இரத்தம் இடது மேலறையில் சேரும். இதயத்தைச் சுற்றி இரண்டு உறைகள் (Pericardium) உள்ளன. மென்சவ்வால் ஆன இரண்டு உறைகளில் புறஉறை நார்ச்சவ்வாலும், அகஉறை நீர்ச்சவ்வாலும் ஆனது. இதனால் இதயத்திற்கு, அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இதயத்திற்குத் தேவையான இரத்தம் ‘இதயத்தமனி’(Coronary Artery) மூலம் கிடைக்கிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி நமது இதயம் பல கோடிமுறை துடிக்கிறது. இதயத்தின் அறைகள் சுருங்கி, விரிவதால் ஏற்படும் ஒலியே நாடித்துடிப்பாக மருத்துவர்கள் அறிகின்றனர். கருத்தரித்த 21 நாள்களில் துடிக்கின்ற இதயத்திற்கும், அதன் தொடர்ச்சியான இடைவிடாத இயக்கத்திற்கும் தேவையான உயிர்க்காற்றும் (Oxygen), சத்தும், இதயத் தமனி மூலமே கிடைக்கிறது. இதயத் தமனியின் மூலம் கிடைக்கும் இரத்த ஓட்டத்தில் அடைப்போ, குறைபாடோ ஏற்பட்டால் இதயச் செயல்பாடு நின்று, உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். இதயத்திற்கு வரும் நரம்பு ‘வேகஸ்’ (Vagus) நரம்பாகும். இதயம் இரண்டு வகை நரம்புத் தொகுதிகளால், நரம்பு மண்டலத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பரிவு நரம்புகள்(Sympathetic Nervous System), துணை பரிவு நரம்புகள் (Para sympathetic Nervous System) என இரண்டு வகை நரம்புகள் இதய செயல்பாட்டை வழி நடத்துகின்றன. பரிவு நரம்பியக்கம் இதயத் துடிப்பை அதிகரிக்கும். துணைப் பரிவு நரம்பியக்கம் இதயத் துடிப்பைக் குறைக்கும். இவை அனைத்தும் இணைந்து ‘இதய நரம்புப் பின்னலை’ ஏற்படுத்துகின்றன (cardiac plexeus). மூளையிலிருந்து வருகின்ற வேகஸ் நரம்பிலிருந்தும் தானியக்க நரம்பு மண்டலத்திலிருந்தும்(Autonomous Nervous System) இந்த நரம்புகள் இதயத்திற்கு வருகின்றன. இதயம் சரியான முறையில் இயங்குவதற்கு இந்த நரம்புப் பின்னல்களே காரணம்.
இதயத்தின் இயக்கம்: உடலின் தலை, கழுத்து, மார்புப் பகுதிகளிலிருந்து கெட்ட இரத்தம் மேல் பெருஞ்சிரை மூலம் இதயத்தின் வலது மேலறையில் வந்து சேரும். அதேபோல் உடலின் மார்புக்கு கீழ்புறம் உள்ள உடலின் பாகங்களிலிருந்து வரும் கெட்ட இரத்தம் கீழ்ப் பெருஞ்சிரை வழியே இதய வலது மேலறைக்கு வரும். இதய மேலறைகள் இரண்டும் சுருங்கும்பொழுது வலது மேலறையிலிருக்கும் கெட்ட இரத்தம் முக்கூர் அடைப்பிதழைத் திறந்து கொண்டு வலது கீழறையை அடையும். வலது கீழறை சுருங்கும்பொழுது, கெட்ட இரத்தம் நுரையீரல் தமனியின் அரைமதி அடைப்பிதழைத் திறந்துகொண்டு, இரண்டு நுரையீரல்களுக்கும் செல்லும், அங்குள்ள நுரையீரல் பைகளில் நிரம்பியுள்ள உயிர் மூச்சுக்காற்று சிறு சிறு தந்துகிகளால் (Capillaries) உறிஞ்சப்பட்டு, தந்துகிகளில் உள்ள கரியமில வாயு(carbon-di-oxide) வெளியேறும். அதுவே நம் உடலிலிருந்து மூச்சுக்காற்றாக வெளியேற்றப்படுகிறது. (மூச்சு விடுதல்). இப்படி முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்ட நல்ல இரத்தம் நுரையீரல் சிரை (Pulmonary Vein) மூலம் இடது மேலறையை (Left auricle) வந்தடையும். மேலறைகள் சுருங்கும் வேளை இடது மேலறையிலிருக்கும் இரத்தம் இருகூர் அடைப்பிதழைத் திறந்து கொண்டு இடது கீழறையில் நிரம்பும். இதயக் கீழறை சுருங்கும்பொழுது பெருநாடி (மகாதமனி)யில் உள்ள அரைமதி அடைப்பிதழைத் திறந்து கொண்டு இரத்தம் அதன் வழியே வெளியேறி, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் பரவும். மேலறை, கீழறை ஆகியவற்றின் சுருங்கி விரியும் தன்மையை இதய நரம்புப் பின்னல் ஒழுங்காக நிகழுமாறு கட்டுப்படுத்துகிறது. இவ்வாறு மேலறைகளும், கீழறைகளும் இயல்பாகச் சுருங்கி, விரியும் தன்மையினால் நம் உடலின் இரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. இதயத்தின் அறைகள் சுருங்கி விரியும் பொழுது வெளியேறும் இரத்தம், அரைமதி அடைப்பிதழ்களைத் திறந்து செல்லும்-பொழுதும், முக்கூர், இருகூர் அடைப்பிதழ்-களைத் திறந்து, மூடும்பொழுது ஏற்படும் ‘ஒலி’யையே நாம் “லப்’’, “டப்’’ என்னும் இதயத் துடிப்பாகக் கேட்கிறோம். இதுவே தமனிகளில் “நாடித் துடிப்பாக’’ (Pulse) உணர்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக