ஞாயிறு, 28 டிசம்பர், 2014

துடிக்காத இதயத்தைத் துடிக்க வைத்த மருத்துவச் சாதனை

சிட்னி, அக். 25_ ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை களில், துடிக்காத இதயத்தை வெற்றிகரமாக பயன் படுத்தி சாதனை படைத் துள்ளனர்.
பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சை களில் மருத்துவர்கள் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தையே பயன்படுத்தி வந்தனர். ஆனால், உலகில் முதன்முறையாக சிட்னி யின் செயின்ட் வின் சென்ட் மருத்துவமனை மற்றும் விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி மய்யம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள ஒரு புதிய செயல்பாட்டின் மூலம், துடிப்பது நின்று 20 நிமி டத்திற்கு பிறகும் கொடை செய்யப்பட்ட இதயத்தை வெற்றிகரமாக மற்றொரு வருக்கு பொருத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை இந்த செயல் பாட்டின் உதவியால் மூன்று பேருக்கு வெற்றி கரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக வும், இந்த முறையில் சிகிச்சை பெற்றவர்களில் இருவர் நலமுடன் இருப்ப தாகவும், மூன்றாவது நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனை செயல்பாடு குறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் இணை பேராசி ரியர் குமுத் டித்தால் கூறி யதாவது:-
உலகிலேயே மூவருக்கு தான் இந்த சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையில் கொடை செய்யப்பட்ட இதயம் ஹார்ட் இன் ஏ பாக்ஸ் என்னும் ஒரு சிறிய இயந் திரத்தினுள் கதகதப்பான சூழலில், பாதுகாப்பான திரவத்தில் வைக்கப்படு கிறது.
இவ்வகையில் பரா மரிக்கப்படும் இதயங்கள் பாதுகாப்பாக உள்ளன என்பது மருத்துவர்க ளுக்கு உறுதியாக தெரிவ தால், நோயாளிகளுக்கு இம்முறை உதவியாக உள் ளது. இன்னும் 5 ஆண்டு களில் நாம் அதிக அள வில் இயந்திரங்கள் மூலம் இதயத்தை பாதுகாக்கும் முறையை பின்பற்ற துவங்கி யிருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை,25.10.14


திங்கள், 24 நவம்பர், 2014

கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகள்



பெண்களுக்கு கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகள்

மாதவிலக்காவது, அதைத் தொடர்ந்து திருமண மாகி குழந்தை பெறுவது என இந்த இரண்டுமே கருப்பையின் மாபெரும் வேலைகள் என்பது பெரும்பாலான பெண்களின் நினைப்பு.
அதனால்தான் முன்பெல்லாம் கருப்பையில் சின்ன பிரச்சினை என்றால்கூட சர்வசாதாரணமாக அறுவை சிகிச்சையில் அதை வெட்டி எறிந்து விட்டு வேறு வேலையைப் பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் இருந்தது. விஞ்ஞானமும், மருத்துவமும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் கருப்பையை அகற்றாமலேயே பிரச்னைகளை மட்டும் குணப்படுத்த முடியும்.
கருப் பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கான அதை நீக்காமல் செய்யக்கூடிய தீர்வுகள் பற்றியும், தவிர்க்க முடியாமல் கருப்பை அறுவை சிகிச்சை  செய்கிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.
கருப்பையில் உண்டாகிற அனேகப் பிரச்னைகளை இன்று கருப்பையை அகற்றாமலேயே சரிசெய்ய முடியும். உதாரணத்துக்கு ஃபைப்ராயிடு கட்டி என்றால் அதை மட்டும் நீக்கும் சிகிச்சைகள் வந்து விட்டன. அதீத ரத்தப் போக்கு தொடர்பான  பிரச்சினைகளுக்கும் பிரத்யேக ஊசிகள், மெரீனா என்கிற கருத்தடைச் சாதனம் போன்றவை உதவும்.
ஹார்மோன் கோளாறு காரணமாக உண்டாகிற அளவுக்கதிக ரத்தப் போக்கை சரி செய்ய, கருப்பையின் உள்ளே உள்ள சவ்வுப் பகுதியை பொசுக்கி, அதை மெலிதாக்கும் எண்டோமெட்ரியல் அப்லேஷன் சிகிச்சை பலனளிக்கும். கருப்பையில் கட்டியோ, சதையோ இருந்தாலும் ஹிஸ்ட் ரோஸ்கோப் மூலம் சரி செய்து விட முடியும்.
இவற்றையெல்லாம் மீறி, கருப்பையில் வேறு ஏதேனும் பெரிய பிரச்சினைகள் இருந்து, கருப் பையை நீக்குவது மட்டுமே தீர்வு என்கிற நிலையில்லேப்ராஸ் கோப்பி முறையில் அதை நீக்குவதுதான் பாதுகாப்பானது. ஓப்பன் சர்ஜரி என்கிற வயிற்றைக் கிழித்துச் செய்கிற அறுவை சிகிச்சை  செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறை யிலும் இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று  டிஎல்ஹெச் எனப்படுகிற டோட்டல் லேப்ராஸ்கோப்பிக் ஹிஸ்ட்டரெக்டமி. இதில் முழுக்க முழுக்க லேப்ராஸ்கோப்பிக் முறையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படும். இன்னொன்று எல்ஏவிஹெச் எனப்படுகிற லேப்ராஸ் கோப்பிக் அசிஸ்ட் டெட் வெஜைனல் ஹிஸ்ட்டரெக்டமி.
இதில் பாதி அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோப்பி முறையிலும், மீதி பிறப்புறுப்பின் வழியேவும் செய்யப்படும். முதல் வகையில் இடுப்பெலும்புத் தசைகள் பாதிக்கப்படாது. பின்னாளில் ஏற்படுகிற சிறுநீர் கசிவு, சிறுநீரை அடக்க முடியாத நிலை, அடி இறக்கம் போன்றவை இதில் இருக்காது.

இரண்டாவது வகையில் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது சிரமம்.கர்ப்பப்பையை அகற்றச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தினால், அதற்கு முன் உங்கள் சினைப்பையை ஸ்கேன் செய்து பார்த்து, அவற்றின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் மாலா ராஜ்
விடுதலை,செவ்வாய், 18 நவம்பர் 2014 

இன்சுலினை கண்டுபிடித்தார்!

இன்சுலினை கண்டு பிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்' என்ற விஞ் ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி இன்று வயது வேறுபாடின்றி அனைவருக்கும் வரும் நோயாக மாறிவிட்டது.
இந் நோயை முழுதாக குணமாக்க முடியாது.மருத்துவரின் ஆலோசனை மற்றும் சரியான உணவுக் கட்டுப்பாடு மூலம் இந்நோயின் தொடர் விளை வுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். வயது வேறுபாடு, தகைமை, தராதரம், பாலின பேதம், செல்வம், வறுமை, நகரம், கிராமம் என வேறு பாடின்றி நீரிழிவு நோய் வேகமாக பரவி வருகிறது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் பன்னாட்டளவில் முன்னெடுக்கப்படுகின்றன.  அது மட்டுமல்லாமல், அய்க்கிய நாடுகள் சபை, இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடை யாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டி ருக்கிறது. நீலநிறத்திலான வளையம், நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்த படியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே அய்க்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித் துள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லி நோயாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை அய்க்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-இல் 36 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பன்னாட்டளவில் நீரிழிவு நோயாளி கள் அதிகம் உள்ள 10 நாடுகளில் இந்தியாவில் தான் அதிக அளவு நீரழிவு நோயாளிகள் உள்ளனர். இரண்டாமிடத்தில் சீனா, இதனை அடுத்து  அமெரிக்கா, இந்தேனேசியா, ஜப்பான், பாகிஸ்தான், ரஷ்யா, பிரேஸில், இத்தாலி, பங்களாதேஷ் ஆகியவை உள்ளன.  முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் 4 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலோருக்கு இல்லை.
நீரிழிவு நோய் என்றால் என்ன?
உடலில் உள்ள திசுக்களின் தேவை யான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப் படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவ தில்லை. இதனால் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதுவே நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது. நீரிழிவு நோய் உடையவர்கள் சரியான முறையில் மருத்துவ ஆலோசனை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் நீண்ட நாட்கள் எந்த பாதிப்பும் இல் லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
விடுதலை,சனி, 22 நவம்பர் 2014 

வெள்ளி, 7 நவம்பர், 2014

தூக்கமும் மருந்துதான்



தூக்கமும் மருந்துதான் - மறவாதீர்!

போதிய தூக்கம் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் பெறுவது மிக மிக அவசியம். உடல் 
நலத்திற்கும் உள்ள வளத்திற்கும் உணவு- சத்துணவு 
எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும்கூட!
தூக்கமின்மை என்பதும், மிகக் குறைந்த அளவே ஒருவர் தூங்குகிறார் என்பதும் விரும்பத்தகாத ஒன்று - உடல் நலக் கண்ணோட்டத்தில்!
செரிமானத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் போதிய தூக்கம் - உணவு, தூய காற்று, ஓய்வு, இளைப்பாறுதல் போலவே மிகவும் இன்றியமையாதது.
மிகக் குறைந்த வயதுள்ள குழந்தைகள் அதிக நேரம் தூங்க வேண்டும். வயது ஏற, ஏற இதன் கால அளவுதானே சுருங்கி, ஓர் ஒழுங்கான கட்டுக்குள் வரும்! (7 மணி - 8 மணி நேரம்).
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் விழித்து எழுந்து விடுவது என்ற பழக்கம், வழக்கமாகிவிட, உடம்பு என்ற கடிகாரம் அதனை வகைப்படுத்திக் கொள்ள தானே முயன்று வெற்றி பெற்று விடுகிறது!
உடலின் மூளை மற்ற அவய வங்கள் எல்லாம் இந்த உடற் கடிகாரம் சொன்னபடி கேட்க முன்வருவது இயற்கைக் கூறுகளின் அதிசயங்களில் ஒன்று.
அளவோடு தூங்கி எழுவது என்பது உழைப்பவர்களுக்கு ஒரு வகை புத்துணர்வைத் தரும் அரிய மாமருந்தாகும்.
நாளும் திட்டமிட்ட பணிகள், உடற்பயிற்சி, போதிய நடைப்பயிற்சி, இரவில் படுக்குமுன் தொலைக்காட்சி பார்க்காமல், ஏதாவது விரும்பும் ஓர் நூலின் சில பக்கங்களையாவது படித்து, துயில் கொள்ளச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இயற்கை யாகவே தூக்கம் நம் கண்களைத்தானே வந்து தழுவும்.
இரவில் போதிய உணவை எடுத்துக் கொள்ளத்தவறும் போதோ, அல்லது பல்வேறு, மனதை அலைக்கழிக்கும் பிரச்சினைகள் உள்ளத்தை உலுக்கும் போதோ, எளிதில் தூக்கம் வராது; அப்போது உடனே இரவு எத்தனை மணியானாலும் எழுந்து உட்கார்ந்து கொண்டு புத்தகங்களை எடுத்து உங்கள் கண்களில் தூக்கம் வந்து அசத்தும் வரை படித்துக் கொண்டே இருங்கள்; மனமும், வேறு திசையில் செனறு மன உளைச்சலைத் தவிர்க்க உதவிடக் கூடும்.
விளக்குகள் அணைக்கப்பட்டு, இருட்டு வந்துவிடும்போது, நமது மூளை முற்றிலும் வேறு வகையாக - அதாவது நாம் விழித்திருந்து வேலை பார்க்கும் போது இருந்த முறைக்கு மாறாக - இயங்குமாம்.
இரவில் நீரோன் என்பவை ஓர் குழுவாகி, இராணுவப் படை எப்படி அணிவகுத்து அதன் பணி முடிக்க அணியமாகிறதோ அதுபோலத் தயாராகி விடுகிறது, மின்காந்த அலைகளும், நமது மூளையை மிக அருமையான மென்மை யான வகையில் லேசாக தழுவுவது போன்று அலையால் வருடிக் கொடுத்து இதமான சுகத்தை உருவாக்குவதால், ஒரு வகை புதுவகை சக்தியைத் தந்து, தூக்கத்தின் மூலம் புதியதோர் வலி மையைச் சுட்டி அண்மையில் இணையத் தில் ஓர் கட்டுரை வந்துள்ளது!
மதியம் பகல் உணவுக்குப்பின், ஒரு பூனைத் தூக்கம் ஷிவீமீணீ (சியெஸ்டா) லேசாகப் போட்டால், அந்த சிறிய இளைப்பாறுதல் மூலம் மேலும் மற்றைய நேரப் பணிகளில் நமக்குத் தெளிவும், தெம்பும் ஏற்படக் கூடும். குறிப்பாக வயது முதிர்ந்த மூத்த குடி மக்களான பெரிய வர்களுக்கு இது எப்போதும் நல்லது.
டெல்லியில் 92 வயதுக்கு மேலும் மிகவும் சுறுசுறுப்புடன் செயலாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் - முதுபெரும் தலைவர் - தோழர்  அர்கிஷண்சிங் சுர்ஜித் அவர்கள் எவ்வளவு பணிகள் இருந்தாலும் பகல் 2 மணி முதல் 4 மணி வரை தூக்கம் - ஓய்வைத் தவறவே மாட்டாராம்.
தொலைப்பேசியை அணைத்து விடுவார் ரிசீவரை எடுத்துக் கீழே - மணியடிக்க வாய்ப்பில்லாமல் - வைத்து விடுவாராம்.
பல முறை சந்திக்க விரும்பிய எங்கள் இருவருக்கும் நேரம் வாய்ப் பாக அமையாமலேயே இருந்து வந்தது.
ஒரு நாள் டில்லியில் நான் இருந்த போது அவர் வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்து நேரம் கொடுத்தார்; நான் விமானத்திற்கு வர வேண்டி இருந் ததைச் சொன்னேன் அப்படியானால் 2 மணிக்கு வாருங்கள் என்றார்; மற்ற தோழர்கள் வியப்படைந்தனர்.
அவர் 2 மணிக்கா தந்தாரா? யாருக் குமே அந்த நேரத்தை ஒதுக்க மாட்டாரே என்றனர். விதிக்கு விலக்காக நான் உங்களைச் சந்திக் கவே என் வழமையான தூக்க நேரத்தைச் சற்று தள்ளி வைத்தேன். நான் நன்றி கூற, பேசி எவ்வளவு விரைவில் உரையாடலை முடித்துக் கொள்ளும்.  அந்த முயற்சியை இங்கிதத்தோடு செய்தேன். அவர் அதைப் புரிந்து கொண்டு, நான் இன்று பெரியாருக்காக எனது ஓய்வை, தூக்கத்தைத் தள்ளி வைத்துள்ளேன்.
அதுபற்றி கவலைப்படாமல் நீங்கள் என்னிடம் பேசிவிடை பெறலாம்; தயங்க வேண்டாம் என்று கூறி, எத்தகைய பெருந்தகையாளர் கொள்கை உணர்வு படைத்த புரட்சி வீரர் என்பதை நிரூபித்தார்!
எனவே, தூக்கம் அனைவருக்கும் பொது உடைமைதானே! ஏழை களுக்கே அது பெரிதும் தனி உடைமை; பணக்கார முதலாளிகளை அது அவ்வளவு எளிதாக நெருங்குவ தில்லை! முதலாளித்துவத்திற்கும் தூக்கத்திற்கும் அத்தகைய விசித்திர உறவு - இல்லையா?
- கி.வீரமணி
விடுதலை,26.9.14