வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன?
இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.
''ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும்.
எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை. அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள்.
கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும்.
'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும் என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.
குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை, டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார். ''ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் குடிநோய் வரலாம்.
குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்து கொள்வது,
மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை,
மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம்,
மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.
-விடுதலை,10.8.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக