வெள்ளி, 23 மார்ச், 2018

நீரிழிவு நோய்க்கானஅமெரிக்காவின் கோட்பாடு இந்தியாவுக்குப் பொருந்துமா?

பிறஇதழிலிருந்து...


சென்ற ஆண்டு இறுதியில், அமெரிக்க இதயநல மருத்துவர்கள் சங்கம் 140/90 மில்லி மீட்டர் பாதரச அளவு என்று இருந்த உயர் ரத்த அழுத்தத்துக்கான உச்சவரம்பை 130/80 மில்லி மீட்டர் பாதரச அளவு என்று குறைத்து, உலக அளவில் புதிய சர்ச்சைக்கு வழிசெய்தது நினைவிருக்கலாம். அதேபோன்று நீரிழிவு நோய் குறித்த புதிய சர்ச்சை ஒன்றை அமெரிக் காவின் காலேஜ் ஆஃப் பிஸிசியன்ஸ் அமைப்பு சமீபத்தில் கிளப்பியுள்ளது. இது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளி களிடமும் லட்சக்கணக்கான மருத்துவர்களிடமும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ விஷயங்களைப் பொறுத்தவரை புதிய நோய்களைத் தீர்மானிப்பதிலும், சிகிச்சை நெறிமுறை களை வழிகாட்டுவதிலும் உலக அளவில் கோலோச்சிக் கொண்டிருப்பது அமெரிக்காதான். அடிக்கடி அங்கு பழைய கோட்பாடுகளைத் தூர எறிந்துவிட்டு, புதிய கோட்பாடுகளைக் கொண்டுவருவது வழக்கம். அவற்றை உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதுதான் சிக்கல்.

ஹெச்பிஏ1சி 
பரிசோதனை

நீரிழிவு ஏற்கெனவே உள்ளவர்கள் தங்கள் ரத்தச் சர்க்கரையை எப்போதும் நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் முக்கியமான ரத்தப் பரிசோதனை ஹெச்பிஏ1சி. பொதுவாக, ஒருவர் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதிக் கும் போது முன்தினத்திலும், பரிசோதிக்கின்ற தினத் திலும் அவர் என்ன உணவும் மருந்தும் சாப்பிட்டாரோ அதை வைத்துத்தான் ரத்தச் சர்க்கரை அளவு இருக்கும். சர்க்கரை அளவு தொடர்பாக முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. 
இந்நிலையில், நோயாளியின் ரத்தச் சர்க்கரை கடந்த மூன்று மாதங்களில் சரியான கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்யப்படுகிறது.

பயனாளிக்கு ஹெச்பிஏ1சி அளவு 6.5% முதல் 7 % வரை இருந்தால் நீரிழிவு நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அர்த்தம். இவர்களுக்கு நீரிழிவு நோயால் உடலில் வேறு பிரச்சினைகள் ஏற்படாது. இது 7 %- க்கு அதிகமாகப் போனால், நீரிழிவு கட்டுப் பாட்டில் இல்லை என்று அர்த்தம். அப்போது இவர்களுக்கு இதயம், சிறுநீரகம், கண், கால்கள், ரத்தக்குழாய்கள், மூளை நரம்புகள், எலும்பு மூட்டுகள் போன்றவற்றில் பாதிப்புகள் தொடங்கி தொடர்ந்து தொல்லை கொடுக்கும். முக்கியமாக மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, காலிழப்பு போன்ற ஆபத்துகள் அணி சேரும். இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு, இந்திய மருத்துவர்கள் கடந்த 30 ஆண்டு களாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு ஹெச்பிஏ1சி அளவு 6.5% முதல் 7% வரை இருப்பதற்கான சிகிச்சை பரிந்துரைகள், உணவு ஆலோசனைகள், உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் போன்றவற் றைப் பின்பற்ற வலியுறுத்துகிறார்கள்.

அமெரிக்காவின் 
ஆராய்ச்சி

சமீபத்தில், அமெரிக்க நீரிழிவு சங்கம், அமெரிக்க அகச்சுரப்பியல் கல்லூரி இவற்றுடன் மேலும் சில ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து, நீரிழிவு நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டன. அதாவது, ஹெச்பிஏ1சி 7%-க்குக் கீழ் இருந்த நீரிழிவு நோயாளி களையும், ஹெச்பிஏ1சி 7%-க்கும் 8%-க்கும் நடுவில் இருந்தவர்களையும் பத்தாண்டுகள் தொடர்ந்து கவனித்து, அவர்களின் நோய்நிலை களையும் பக்கவிளைவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

அப்போது, இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீர கச் செயலிழப்பு போன்ற விளைவுகளில் அவ்வளவாக வேறுபாடு இல்லை எனத் தெரியவந்தது. எனவே, இனிமேல் ஒருவருக்கு ஹெச்பிஏ1சி 8 % வரை இருந்தாலே அந்த நபருக்கு நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்துவிடலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். அத்தோடு நிற்காமல், உலக நாடுகளையும் பின்பற்றச் சொல்கின்றனர். இதுதான் பிரச்சினை!

ஹெச்பிஏ1சி 6.5% முதல் 7% வரை இருந்தால் நீரிழிவு நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறும் கோட்பாடு என்பது, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நீரிழிவு தொடர்பான மருத்துவ அமைப்புகள் கூட்டாக எடுத்த முடிவு. இவர்கள் அவரவர் நாட்டு மக்களின் முக்கிய உணவுமுறையை அடிப்படையாக வைத்து இந்தக் கோட்பாட்டை அறிவித்தனர்.

30 வருடங்களாக வழக்கத்தில் இருக்கும் இந்தக் கோட்பாட்டில் இதுவரை தவறு நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவின் புதிய கோட்பாடு, அந்த நாட்டினரின் உணவை அடிப்படை யாகக் கொண்டது. இது இந்தியர்களுக்குப் பொருந்தாது என்பதுதான் பெரும்பாலான இந்திய மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்தியாவில்

என்ன பிரச்சினை?

உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா வில்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம். இந்தியாவில் சென்ற ஆண்டின் கணக்குப்படி 7.2 கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நீரிழிவு வரக்கூடிய எல்லையில் இருப்பவர்கள் 8 கோடிப் பேர். ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒரு நீரிழிவு நோயாளி, தன்னுடைய ஆண்டு வருமானத்தில் சராசரியாக 34% செலவழிக்க வேண்டியுள்ளது என்கிறது

ஒரு புள்ளிவிவரம்.

இப்படியான சூழலில், அமெரிக்க ஆராய்ச்சியாளர் கள் உருவாக்கியிருக்கும் புதிய கோட்பாட்டின்படி ஹெச்பிஏ1சி 8% வரை இருந்தாலே அந்த நபருக்கு நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்துவிட்டால், இந்தியர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் இன்னும் அலட்சியம் காட்டுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதன் விளைவாக, இதுவரை நல்ல கட்டுப் பாட்டில் இருப்பதாக அறியப்படும் 20% நீரிழிவு நோயாளிகள்கூடத் தடம் மாறிவிடலாம்.

அப்போது நீரிழிவு இவர்களுக்கும் தீவிரமாகி, இதயநோய், சிறுநீரகப் பாதிப்பு, கண் பாதிப்பு உள்ளிட்ட ஆபத்துகள் தொடங்கலாம். இதன் விளைவாக இவர்கள் இன்னும் அதிக அளவில் மருந்துகளைச் சாப்பிட வேண்டியது வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.

வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையாக நீரிழிவு நோய் உள்ளதால், அவர்களை நோயாளிகளாக ஆக்கி, தொடர்ந்து மருந்து சாப்பிட வைக்கும் வணிக நோக்கம் இந்தப் புதிய கோட்பாட் டின் பின்புலத்தில் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

அரசின் கவனம் தேவை

முன்பு நீரிழிவு நோய்க்கான ரத்தச் சர்க்கரை சராசரி அளவைக் குறைத்தார்கள். அதனால் நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் அதிகரித்தனர். கொழுப் பின் அளவைக் குறைத்தார்கள். அதனால், ரத்தக் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் அதிகரித்தனர். இந்த நோய்களுக்கான மாத்திரைகளின் வணிகம் உச்சத் துக்குச் சென்றது. இப்போது ஹெச்பிஏ1சி அளவைத் தளர்த்தியிருக்கிறார்கள். இதனாலும் நீரிழிவு நோயாளி களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இது அயல்நாட்டு மருந்து நிறுவனங்களின் வாயில் சர்க்கரை போட்டது போல் ஆகிவிடும்.

எனவே, மக்களிடமும் மருத்துவர்களிடமும் குழப்பம் ஏற்படுத்தும் அமெரிக்காவின் இந்தப் புதிய கோட்பாடு இந்தியாவுக்குப் பொருந்தாது என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டியது அவசியம். இந்தியர்களுக்கான நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு குறித்து ஆலோசனைகள் சொல்ல இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நீரிழிவு ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி மய்யம், இந்திய மருத்துவர்கள் சங்கம் ஆகியவை உள்ளன.

இந்தியாவில் நீரிழிவுக்கான எந்தப் பரிந்துரையும் இவர்களின் மூலம் வரும்படி ஏற்பாடுசெய்ய வேண்டும். அதுதான் இந்திய மருத்துவர்களுக்குச் சரியான பாதை காட்டுவதாக இருக்கும். இன்றைய சூழலில் மக்களும் மருத்துவர்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்!

- கு.கணேசன்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

நன்றி: தி இந்து (22.3.2018)

- விடுதலை நாளேடு, 23.3.18

செவ்வாய், 20 மார்ச், 2018

இரவு உணவை 8 மணிக்குள் முடியுங்கள்!

நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத் தியபடி Early To Bed Early To Rise என்பதுதான் சரியான வாழ்க்கை முறை. ஆனால், இன்றைய நமது அன்றாட செயல்கள் எல்லாம்  தலை கீழாக மாறிவிட்டன.

அவற்றில் ஒன்றுதான் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கமும். இதனால், வயிற்றை நிரப்புகிறோம் என்பதை தவிர, வேற எந்த பயனும் நமக்கு கிடைப்பது இல்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

இரவு உணவை இதுபோல் தாமதமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு பிரச்சினை களும் உண்டாகிறது.

இரவு உணவை 8 மணிக்கு முன் முடித்து விட வேண்டும். அதுதான் சரியான நேரம். அதற்கு மேல் தாமதமாகும் போது வயிற்றில் அமிலச்சுரப்பு உண்டாகும். நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட உணவு எதுக்கலிக்கும். பலமணி நேரம் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கியும் விடும்.

மேலும், இரவில் தாமதமாக உண்ணும் வழக்கத்தால் இயல்பைவிட, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். எனவே, உடலில் கலோரி அளவும் அதிகரிக்கும். தூங்கும் நேரம் குறைந்து உடல் எடை அதிகரிக்கும். இரவில் நேரங்கழித்து சாப்பிடுவதால், உடல் எடை யைக் குறைக்க முடியாது.

இரவில் தாமதமாக சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கூறுவதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது கிடையாது. உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் வளர்சிதை மாற் றங்கள் குறையும். ரத்தத்தில் டிரைகிளிசரைட் என்ற கெட்ட கொழுப்பின் அளவு அதி கரிக்கும். காலை, மதியம் என எந்த நேரத்து உணவாக இருந்தாலும், உரிய நேரத்தில் சாப்பிட்டு வந்தால்தான், நமக்கு அந்த உணவால் பயன் கிடைக்கும்.

அதனால் எந்த வகை உணவை, எந்த நேரத்தில், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை நன்றாக அறிந்து, அதனை பின்பற்றி வந்தால் உணவு வேளை மற்றும் உறங்கும் நேரம் சரியான சுழற்சியில் நடைபெறும். இரவில், சீக்கிரமாக சாப்பிடுவதால் செரிமான குறைபாடு, உடல் எடை அதிகரித்தல் போன்ற எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக தூங்கச் செல்லும் 2 மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடுவது சிறந்தது. இதன்மூலம் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும்.

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.  இரவு வேளையில் நேரங்கழித்து சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் களைப்பு காரணமாக உடனே படுத்து விடுவார்கள். அவ்வாறு செய் வதால் செரிமானமாக போதுமான நேரம் கிடைக்காது.

மேலும், செரிமானம் மெது வாகவும் நடைபெறும். இதனால், குடலுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல், இரவு உணவு தாமதம் ஆகும் போது, காலை உணவு தவிர்க்கப்படுகிறது. தலைவலி வரும். உடலில் கொழுப்பு தங்கி விடுகிறது. ஆகவே, இரவு சாப்பாட்டை எவ்வளவு சீக்கிரமாக சாப்பிடுகிறோமோ அவ்வளவும் உடலுக்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

உடலில் மண்ணீரலுக்கு என்ன வேலை? 

இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் ராதா கிருஷ்ணன். மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட பணிகள் உண்டு. அந்த வேலைகள் தடையின்றி நடந்தால்தான் உடலை உயிருடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் மண்ணீரலும் தன் பங்குக்கு சிறப்பான பணிகளைச் செய்கிறது.

மண்ணீரல் அடிவயிற்றின் இடது மேல் திசையில் அமைந்துள்ள உறுப்பாகும். சுமார் 7 சென்டிமீட்டர் வரை  இருக்கும். பிறந்து 5 வயது வரை ரத்த உற்பத்தி பணியை தீவிரமாக பார்க்கிறது. இதனால் குழந்தைகளை வயிற்றில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலில் இயங்குதல் தன்மையை ஊக்குவிக் கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதயத்தின் இயக்கத்தைத் தூண்டுகிறது.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண் கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல் பாடுகளை தூண்டுகிறது.

ரத்தத்தின் மூலமாக வருகிற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 
வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது.கல்லீரல், இரைப்பை பித்தப்பை, சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் மண்ணீரல் பாதிக்கப்படும். வயிற்றுப் பகுதி அடிபட்டாலும் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும். மண்ணீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் உடனடி யாக அதனை அகற்றிவிடுவார்கள்.

இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் வருவதில்லை. மண்ணீரல் பார்த்த பணியை கல்லீரல் பார்க்கத் தொடங்கிவிடும். மண்ணீரல் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் எடை அதிகரிக்கும், அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாகும், வாந்தி ஏற்படும். கீரைகள், காய்கறிகள், சிறு தானியங்கள், கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம் போன்ற உணவுகள் மண்ணீரலுக்கேற்ற உணவுகள் ஆகும் என்கிறார்.

- விடுதலை நாளேடு, 19.3.18