வாழ்க்கையில் அவசரமாகக் கடந்து போய், தவறவிட்ட கணங்கள் திருப்பிக் கிடைக்காதவை மட்டுமல்ல, தீர்க்க முடியாத சிக்கல்களையும் கொண்டுவந்து சேர்க்கும். நீரிழிவு நோயும் அப்படித்தான்.
என்ன செய்துவிடப் போகிறது? என இந்நோயில் நாம் அலட்சியமாய், அறியாமையாய்த் தவறவிடும் கணங்கள், எதிர்பாராத சிக்கல்களைப் பிற்காலத்தில் கொண்டுவந்து சேர்த்துவிடும். சர்க்கரை நோயில் ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்பு அப்படியான சிக்கல்களில் ஒன்று!
அவசியமில்லாமலும் சரியான மருத்துவ வழிகாட்டு தலும் இன்றி, இஷ்டத்துக்கு எடுக்கும் எந்த மருந்தும் பின்னாளில் பிரச்சினையைத்தான் தரும். அது நவீனமோ மரபோ, துல்லியமாய்க் கணித்து, திறம்பட மருந்தைப் பரிந் துரைக்காதபோது இச்சிக்கலுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.
அலட்சியமே முதல் காரணம்
மருந்துகளில் அலட்சியம், உணவில் அலட்சியம், உடற்பயிற்சியில் அலட்சியம் என இருப்போர் இறுதியில் வந்து சேர்வது சிறுநீரக நோய்ச் சிக்கலில்தான். கிட்டத்தட்ட 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள், சில ஆண்டுகளில் சிறுநீரக நோயாளிகளாக மாறிவிடுகின்றனர். அதுவும் இந்த அளவு, தற்போது இனிப்பு தேசத்தில் எக்குத்தப்பாக அதிகரித்து வருகிறது.
புரத அளவைப் பாருங்கள்
கட்டற்ற சர்க்கரையால் பழுதாகும் சிறுநீரகம், முதலில் எவ்வித அறிகுறியையும் காட்டுவதில்லை. முழுசாய் முடங்கிப் போவதற்குச் சற்று முன்னதாகத்தான் சின்னச் சின்ன அறிகுறிகளையும் ரத்தத்தில் புரதம், உப்பு, கிரி யாட்டினின்களில் மாற்றத்தையும் காட்டத் தொடங்குகிறது. ரத்தத்தில் யூரியாவும் கிரியாட்டினின் அளவும் சரியாக உள்ளது என அலட்சியமாய் இருப்பதைவிட ஆபத்து, இந்நோயில் வேறு எதுவும் கிடையாது.
கிரியாட்டினின் நம்பகத்தன்மையை நவீனம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது. மைக்ரோஅல்புமின் யூரியா எனும் சிறுநீரில் வரத் தொடங்கும் நுண்ணியப் புரதக் கழிவைத்தான் இப்போது நவீன மருத்துவம் உற்றுப் பார்க்கச் சொல்கிறது.
ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும், தன் ரத்தச் சர்க்கரை அளவோடு உள்ளதா எனக் கணிக்கும் போதே, சிறுநீரில் நுண்ணியப் புரதம் கழிகிறதா என்பதை அவ்வப்போது பார்க்கத் தவறிவிடக் கூடாது. கூடவே எஸ்டிமேஷன் ஆஃப் க்ளோமெரூலா ஃபில்ட்ரேஷன் ரேட் எனப்படும் என்னுமொரு மிக முக்கிய பரிசோதனையையும் பார்த்தாக வேண்டும்.
இந்த இரு சோதனைகளை எல்லா நீரிழிவு நோயினரும் அவ்வப்போது செய்து பார்த்து தம் நலத்தை, தம் சிறுநீரக நலத்தை உறுதி செய்துகொள்வது மிக மிக முக்கியம். மைக்ரோஅல்புமின் கொஞ்ச நாளில் மேக்ரோஅல்புமின் ஆகி பின்னர் எண்ட் ஸ்டேஜ் ரீனல் டிசீஸ் எனும் ஆவது இந்தியாவில் மிக மிக அதிகம். மேலோட்டமாக நீரிழிவுக் கென செய்யப்படும் பல பரிசோதனைகளில் சிறுநீரகத்தின் நலம் முழுதாக அறியப்படுவதில்லை.
எல்லாப் பரிசோதனைகளும் தவறு. வணிகச் சூழ்ச்சி கொண்டது என்கிற பிரசங்கம் வேறு, நீரிழிவு நோய் சார்ந்து ஆங்காங்கே பேசப்படுவதும், இப்போது கணிசமாக அதிகரித்திருப்பது இன்னும் வேதனை. மருத்துவத் துறை யிலுள்ள அறமற்ற வணிகத்தை எதிர்ப்பதாகப் புறப்பட்டு, உண்மையான அறிவியலையும் புறக்கணிக்கும் போக்கு, இந்நோயில் பல சிக்கல்களைச் சாமானியனிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.
இன்னுமொரு முக்கிய விஷயம், நீரிழிவு நோயுடன் யாருக்கு ரத்தக்கொதிப்பு அதிகம் உள்ளதோ, அவருக்கே சிறுநீரக பாதிப்பு வரும் ஆபத்து அதிகம் என்கிறது நவீன மருத்துவம். குறிப்பாக இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம், அதாவது டயாஸ்டாலிக் பிரஷர் 90-க்குள் இருக்க வேண்டும்.
உள்ளூர் உணவே நல்லது!
சிறுநீரகத்தின் அளவு ஒவ்வொரு மரபுக்கும் மாறுபடும். அதில் உள்ள மிக நுண்ணிய வடிகட்டிகள், அதாவது நெப்ரான்கள் அளவும்கூட மாறுபடும். ஆப்பிரிக்க மரபி னரின் நெப்ரான் அளவும் அமைந்தகரை மரபினரின் நெப்ரான் அளவும் நிச்சயம் ஒன்றல்ல. அதேபோல் போஷாக்காகப் பிறந்த குழந்தைக்கும், குறைப்பிரசவமாகப் பிறந்த குழந்தைக்கும் இந்த நெப்ரான்களின் அளவில் வேறுபாடு உண்டு. எனவே, நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரகம் கெடாமலிருக்க பீட்சா, பிரெஞ்சு ஃபிரைஸ் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளைச் சாப்பிடாமல், ஏன் உள்ளூர் உணவு அவசியம் என்பதற்கான காரணத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உள்ளூர் மெஸ்ஸின் சாம்பாரில் உள்ள பாசிப்பயறுப் புரதத்துக்கும் அல்லது அயிரை மீன் குழம்புப் புரத்துக்கும், கலிஃபோர்னியா சந்தையில் புழங்கும் சால்மன் மீனின் புரதத்துக்கும் விலங்குப் புரதத்துக்கும் நிறையவே வித்தி யாசம் உண்டு. சாப்பிடும் பெரும்புரத உணவின் கழிவை, இயல் பிலேயே அளவில் கூடிய அவர்கள் சிறுநீரக நெப்ரான்கள் அழகாக வெளி யேற்றிவிடுவதுபோல் நம் நெப்ரான்களால் முடிவதில்லை.
இயல்பிலேயே அளவில் குறைந்த நம் சிறுநீரக நெப் ரான்கள், இச்செயலில் விழிபிதுங்கி விக்கி அடைத்துக் கொள்ளும். மொத்தத்தில் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. சிறுநீரகத்தையும் மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
எப்போதும் வேண்டாம் கிழங்கு!
ஃபிங்கர் ஃப்ரைஸ்! உலகெங்கும் உருளைக் கிழங்கை நீளவாக்கில் செவ்வகத்துண்டுகளாக வெட்டி, பொரித்து விற்பனை செய்யப்படும் ஒரு பில்லியன் டாலர் நொறுக் குத்தீனி. சிப்ஸ் அதன் ஒண்ணுவிட்ட தம்பி. உலகில் கணிசமானோரின் உடல் எடையைக் கூட்டி, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற நோய் களில் தள்ளியதில் இந்த இரண்டுக்கு பெரும்பங்கு உண்டு.
ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் உருளை சிப்ஸ் கம்பெனிகளுக்குத் தர என்றே தனியாக, நீள வாக்கில் பருத்து வளரும் இயல்புடைய வீரிய ஒட்டுரக உருளை உருவாக்கப்பட்டது. நெடுங்காலம் முன்பு நம் பசியாற்ற, தென் அமெரிக்காவில் உள்ள பெரூ நாட்டில் உருவான உருளைக்கும், இந்த கம்பெனி படைக்கும் இப்போ தைய உருளைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. நீள நீள துண்டுகளால், பொக்கே போல் அவை அலங் கரிக்க, மற்ற நாடுகளில் ரஸ்ஸெட் பர்பேங்க் அண்ட் மாரிஸ் பைப்பர் வகை உருளைதான் வேண்டுமாம்.
இந்தியாவில் நல்ல பருத்த உருளைக்கென ஜோதி, சந்திரமுகி, அட்லாண்டா போன்ற வீரிய பருத்த ரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை களெல்லாம் அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் படைத் தவை. தான் விரும்பும் பெரிய வடிவில் அவை விளைந்து தள்ள, பயன்படுத்தப்படும் உர ரசாயனங் களும் பூச்சிக் கொல்லிகளும் ஏராளம். இவற்றின் கூறுகள், விளை மண்ணிலும், விளைவிப்பவன் உடலிலும் ஏற்படுத்தும், நலவாழ்வின் முறிவில் ஏற்படும் ஒலிதான், நாம் அதை மொறுக் மொறுக் என ருசித்து நொறுக்கும் போது கேட்கப்படும் ஒலி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
- விடுதலை நாளேடு, 18.6.18