புதுடில்லி, டிச.21 வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையை ஒழுங்கு படுத்துவதற்கான மசோதா, மக்களவையில் 19.12.2018இல் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மூலம், வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. இதனால், வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர்கள் போன் றோர் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது.
வெளிநாடுகளைச் சேர்ந்த தம்பதியர், இந்தியாவுக்கு வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் வாடகைத்தாயாக உதவுவோருக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
மேலும், அதிக தொகை வாங்கித் தருவதாகக் கூறி, பின் னர் இடைத்தரகர்களால் ஏமாற்றப் படுகின்றனர்.
இந்நிலையில், வணிக ரீதியி லான வாடகைத்தாய் முறையை தடுக்க வேண்டும்; வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக் கத்தில் வாடகைத்தாய் முறை ஒழுங்குபடுத்துதல் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. கூடுதலாக பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்ட இந்த மசோதாவை, மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா புதன்கிழமை தாக்கல் செய்து, விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் கூறியதாவது:
வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறையில் உள்ள பிரச்னை களைத் தீர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், சட்ட ஆணை யமும், அரசியல் கட்சிகளும், சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் குரல் கொடுத்து வரு கின்றனர். அவர்களின் எதிர் பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, இந்த மசோதா உருவாக் கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மஹ்தாப் ஆகியோர் மசோதாவில் மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சில பிரபலங்கள் தங்களது உடல் அழகு கெட்டு விடக்கூடாது என்பதற்காக, வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெறு கிறார்கள். வாடகைத்தாய் முறை யில் குழந்தை பெறுவதை நாகரிமாகக் கருதும் இத்தகைய போக்கு தடுக்கப்பட வேண்டும்‘ என்று சுப்ரியா சுலே கூறினார்.
ஒரே பாலின தம்பதிகள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற வழிவகை செய்ய வேண்டும் என்று தஸ்திதார் வலியுறுத்தினார்.
கட்டுப்பாட்டு விதிமுறைகள் இல்லாததால் வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை அதிகரித்து வருகிறது’ என்று மஹ்தாப் கூறி னார். மேலும், குழந்தை பெறும் தம்பதிக்கு வாடகைத்தாயாக எந்த உறவுகள் எல்லாம் உதவலாம் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார். அதற்குப் பதில ளித்து ஜே.பி.நட்டா பேசிய தாவது:
வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறையை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம். அதே நேரத்தில் நவீன மருத்துவ அறிவியலைப் பயன்படுத்தி, குழந் தைப் பேறு இல்லாத தம்பதி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனுமதி அளிக்கப் படுகிறது.
வாடகைத்தாய் முறையில், இந்திய தம்பதி மட்டுமே குழந்தை பெறலாம். வெளி நாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்ச வாளியைச் சேர்ந்தவர்கள் குழந் தைப் பெற முடியாது.
மேலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வசிப் பவர்கள், பிரிந்து வாழும் பெற்றோர், ஓரினச்சேர்க்கையாளர் போன்றோர் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது. ஏற்கெனவே குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதியும் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது.
மேலும், வாடகைத்தாய் முறையை தவறாகப் பயன் படுத்துவோருக்கு தண்டனை விதிப்பதற்கான அம்சங்களும் மசோதாவில் உள்ளன என்றார் அவர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த விவாதத்துக்குப் பிறகு மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறை வேற்றப்பட்டது
- விடுதலை நாளேடு, 21.12.18