திங்கள், 23 டிசம்பர், 2019

கோதுமை நீரிழிவிற்கு தீர்வா?

அரிசிக்கு பதில் கோதுமை சாப்பிட்டால் சர்க்கரை குறையும் என்பதே இந்த நூற் றாண்டின் சிறந்த ஜோக்.

கோதுமை Vs அரிசி

எதில் அதிக மாவுச்சத்து (carbohydrate) இருக்கிறது?

100 கிராம் கோதுமையில் 71 கிராம் கார்ப்ஸ் இருக்கிறது

அதே  100 கிராம் அரிசியில் 79 கிராம் கார்ப்ஸ் இருக்கிறது . சரி! கலோரி வகையில் கோதுமை எப்படி என்று பார்ப்போம்.

100 கிராம் அரிசியில் 358 கிலோ கலோரி கிடைக்கிறது

100 கிராம் கோதுமையில் 339 கிலோ கலோரி கிடைக்கிறது.

ஆக கலோரி கணக்கிலும் மாவுச்சத்து கணக்கிலும் அரிசிக்கு கோதுமை சிறிதும் சளைத்ததல்ல.

பிறகு ஏன் கோதுமை பரிந்துரைக்கப் படுகிறது???

தமிழர்களுக்கு அரிசி பிடிக்கும். ஆனால்,  கோதுமை அவ்வளவாக பிடிக்காது. (என்று நினைத்தது தப்பாகி விட்டது) அரிசியை விட கோதுமையை சாப்பிடச் சொன்னால் குறைவாக சாப்பிடுவார்கள். அதனால் சர்க்கரை சரியான நிலை ஆகும் என்ற நினைப்பில் "கோதுமை" பரிந்து ரைக்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன?

கோதுமையை வடக்கத்திய  சகோதரர் களை  விட வெளுத்து  வாங்கி   வரு கிறோம்

கூடவே  அரிசி சாப்பிடு வதும் குறைந்த பாடில்லை.

சராசரி தமிழன் ஒரு ஆண்டிற்கு 127 கிலோ அரிசி சாப்பிடுகிறான்.

இது இந்திய சராசரி அளவை விட மிக அதிகம் (இந்திய சராசரி 77 கிலோ/வருடத்துக்கு)

சரி கோதுமையை அதிகமாக உண்ணும் மாநிலங்களாவது   நல்லா இருக்காங்களா ?

கோதுமை என்ற  உடனே நமக்கு சிங்குகள்  தான் ஞாபகம் வருவார்கள்.

ஒரு எட்டு நம்ம சிங்குகளின் பூமிக்கு போய் பார்ப்போம்.

பஞ்சாப் தான் நம் நாட்டிலேயே குண்டானவர்கள் அதிகம் இருப்பவர்களில் முதல் ரேங்க்.

ஆகவே கோதுமையினால் பெரிய ப்ரயோஜனம் கிடையாது என்பது திண்ணம் ()

இன்னும் கோதுமையில் உள்ள

"க்ளூடன்" (gluten) ஒவ்வா மையை உருவாக்கவல்லது.

இதற்குப் பெயர் க்ளூடன் ஒவ்வாமை(gluten into lerance)

நமது இந்திய மக்கள் தொகை யில் 10 சதவிகித மக்களுக்கு இந்த ஒவ்வாமை இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு.

இந்த ஒவ்வாமை நமக்கு குடல் சார்ந்த தன்எதிர்ப்பு நோய்களையும் (celiac dise ase)  இதய நோய்களையும் உருவாக்க வல்லது.(http://celiacindia.org.in/about-celiac-disease/celiac-disease/prevalence/)

அதுவும் நமது பாரம்பரிய கோதுமையை விட்டுவிட்டு தற்போது இந்தியா

முழுமைக்கும் பயிரிடப்படும் குட்டை கோதுமை, ஆறு  க்ரோமோசோம்களை

கொண்ட Hexaploid ரகமாகும் (hexa=ஆறு) .

நமது பாரம்பரிய கோதுமை இரண்டு க்ரோமோசோம்கள் கொண்டdiploid ரகமாகும் (di = இரண்டு).

இந்த Hexaploid க்ரோமோ சோம் உள்ள கோதுமை க்ளூடன் ஒவ்வாமையை உருவாக்க வல்லது என்கிறது ஒரு ஆய்வு.

கோதுமையை பிரதான உணவாக உண்ணும் பஞ்சாபின் நகரமான லூதியா னாவில் 310 இல் ஒருவருக்கு க்ளூடன் ஒவ் வாமை இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் 110 இல் ஒருவருக்கு இந்த ஒவ்வாமை இருக்கிறது.()

கோதுமை பிரதானமாக உண்பவர்கள் இடத்தில் அதிகம் காணப்பட்டு வந்த ஆட்டோ இம்யூன் வியாதிகள் இப்போது நம்மிடமும் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.

மேற்குஉலகம் கொஞ்சம் கொஞ்சமாக gluten free உணவுக்கு  மாறிவருவதையும்  நாம் உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

பேலியோ உணவு முறையில்  கோதுமை மற்றும் அதன் ஒன்று விட்ட தங்கை  மைதா அனைத்தும் தவிர்க்கச் சொல்வதற்கு காரணம் மேற்சொன்னவை தான்.

Dr. ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

 -  விடுதலை ஞாயிறு மலர், 7.12.19

வெள்ளி, 13 டிசம்பர், 2019

மருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்!

பெனிசிலின் (Penicillin) 1942

பாக்டீரியாவில் ஏற்படும் தொற்றுப் பிரச்சினைகளைத் தடுக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கண்டறியப்பட்ட முதல் ஆன்டிபயாடிக் மருந்து.

கண்டுபிடித்தவர்: அலெக்சாண்டர் ஃபிளெமிங் (Alexander Fleming). இந்த மருந்து கண்டறியப்படாமல் இருந்திருந்தால் இன்றைய காலகட்டத்தில் 80 மில்லியன் பேர் நோய் எதிர்ப்புசக்தி குறைவால் இறந்திருப்பார்கள்.

இன்சுலின்(Insulin) 1922

சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினைகளை, எளிமையாகச் சரிசெய்யும் மருந்து.

இன்றைய ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்’ தெரப்பிகளின் முன்னோடி இன்சுலின்தான். இதைக் கண்டுபிடித்தவர், சார்லஸ் பெஸ்ட் (Charles H.Best).

பெரியம்மை தடுப்பூசி(Smallpox Vaccine) 796

தடுப்பூசி வகையைச் சேர்ந்த இதைக் கண்டுபிடித்தவர், எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner).  பெரியம்மைக்கு மருந்து கண்டறியப்படும் முன்பு, 18ஆம் நூற்றாண்டு வரை உலகின் மிகப் பெரிய உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

மார்ஃபின்(Morphine)1827

தீவிர சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் வலி நிவாரணி மாத்திரை. இந்த மருந்து கண்டறியப்படுவதற்கு முன்பு, காயம் ஆறும்  வரை வலியுடனேயே இருக்க வேண்டியிருந்தது. இதைக் கண்டுபிடித்தவர், ஃப்ரெட்ரிச் வில்ஹெல்ம்  (Friedrich Wilhelm).

ஆஸ்பிரின் (Aspirin) 1899

உடல் வலி, மூட்டு வலி, தலைவலி, தசைப் பிடிப்பு என உடலில் ஏற்படும் சிறு சிறு வலிகளைப் போக்கக்கூடியது ஆஸ்பிரின். இதைக் கண்டுபிடித்தவர், ஃபெலிக்ஸ் ஹாஃப்மேன் (Felix Hoffmann) நூறாண்டுகள் கடந்தும் இதுபோன்று ‘பவர்ஃபுல்’ வலி நிவாரணி மாத்திரை வேறு கண்டறியப்படவில்லை.

போலியோ தடுப்பூசி(Polio Vaccine)1955

இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்கக்கூடிய இது, தடுப்பூசி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலும் குழந்தைகளுக்கே இளம்பிள்ளை வாதம் (போலியோ) பாதிக்க வாய்ப்பு அதிகம்.  உலகம் முழுவதும் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்தவர், ஜோனஸ் சால்க் (Jonas Salk).

ஈத்தர் (Ether) 1846

அறுவை சிகிச்சையின்போது, உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்யும் மயக்க மருந்து. இதைக் கண்டுபிடித்தவர், வில்லியம் தாமஸ் க்ரீன் மோர்டன்  (William Thomas Green Morton) இது கண்டறியப்படுவதற்கு முன்பு வரை, அறுவை சிகிச்சையின்போது நோயாளிகள் வலியை எதிர்கொண்டபடி இருந்தனர்.

லிபிட்டார் (Lipitor) 1985

கொலஸ்ட்ரால் அளவு சீரற்று இருப்பவர்களுக்கு, ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்யும் மருந்து.

கொலஸ்ட்ரால் அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம். அவை அனைத்தையும் இந்த மருந்து முன்கூட்டியே சரிசெய்துவிடும். இதை கண்டுபிடித்தவர், ஃபிசெர் (Pfizer).

குளோர்ப்ரோமேசின்/தோராசின்  (Chlorpromazine or thorazine) 1950

மனநலக் கோளாறுகளைச் சரிசெய்யக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மருந்து. ‘குளோர்ப்ரோமேசின்’. கண்டறியப்பட்ட 10 ஆண்டுகளில், 50 மில்லியன் மக்கள் இதை உபயோகப்படுத்தியிருந்தனர்.

தட்டம்மை  (Measles)1963

1954ஆம் ஆண்டில், அமெரிக்க ஆய்வாளர்கள் என்டர்ஸ் மற்றும் தாமஸ் ஆகியோர் அம்மை நோயை ஏற்படுத்தும் வைரசைக் கண்டறிந்தனர். தொடர் ஆய்வுக்குப் பிறகு, இதற்கான மருந்தை 1963ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இது கண்டறியப்படுவதற்கு முன்புவரை, அமெரிக்காவில் வருடத்துக்கு 4 மில்லியன் மக்கள் அம்மையால் பாதிக்கப்பட்டனர்.

-  உண்மை இதழ், 16-31.8.19

வெள்ளி, 29 நவம்பர், 2019

குறைந்த ரத்த அழுத்தத்திற்கு தீர்வு

உயர் ரத்த அழுத்தம் குறித்து அநேகருக் கும் தெரிந்திருக் கிறது. அதேவேளையில் குறை ரத்த அழுத்தம் குறித்து படித்த வர்களிடம்கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. உலகளவில் சொல்லப்படும் புள்ளி விவரப்படி இளம் வயதில் 100ல் 10 பேருக்குக் குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவீதமும் கூடுகிறது.

உயர் ரத்த அழுத்த நோயை அமைதி யான ஆட்கொல்லி  என்கிறோம். அது போல் குறை ரத்த அழுத்தத்தை ஓர் எரிமலை என்கிறோம். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாததுபோல, குறை ரத்த அழுத்தமும் எப்போது ஆபத்தைத் தரும் என்று கூற முடியாது.

குறை ரத்த அழுத்தம் என்பது எது?

முப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது மேல் அழுத்தம்; 80 என்பது கீழ் அழுத்தம். ரத்த அழுத்தம் 90/60 மி.மீ.க்குக் கீழ் குறைந்தால் அது குறை ரத்த அழுத்தம். இதில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை ரத்த அழுத்த நோய்க்குத் தமனிநாளக் குறை ரத்த அழுத்தம் என்று பெயர்.

நம்மிடையே பலருக்குக் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல் லைகள் இருக்காது. அவர்கள் பயப்படத் தேவையில்லை.

திடீரென்று மேல் அழுத்தத்தில் 20 மி.மீ. குறைகிறதென்றால் அல்லது கீழ் அழுத்தத்தில் 10 மி.மீ. குறை கிறதென்றால் மயக்கம் உள்ளிட்ட சில தொல்லைகள் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

ரத்த அழுத்தம் குறைவது ஏன்?

இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப் புக்குக் கீழே நின்றுவிடுகிறது; இதயத்துக் கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறை கிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து விடுகிறது; மயக்கம் ஏற்படுகிறது.

யாருக்கு இது வருகிறது?

விபத்துக்குள்ளாகுபவர்கள், தடகள வீரர்கள், கடுமையான உடற் பயிற்சி/ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியாக உள்ள வர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு உள் ளிட்ட சில ஹார்மோன் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக் கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள், ரத்தம் இழப்பவர்கள், ரத்தசோகை, கடுமையான நோய்த்தொற்று, இதயநோய், நுரையீரல் நோய், சிறுநீரக நோய் - சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடலில் நீரிழப்பு ஏற்பட்டவர்கள், ஒவ்வாமை உள்ள வர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட சாத்தியம் அதிகம். கடுமையான தீப்புண், அதிர்ச்சி, விஷக்கடி, மருந்துகளின் பக்க விளைவு போன்ற வற்றாலும் இது ஏற்படலாம்.

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

தலைக்கனம், தலைசுற்றல், மயக்கம், வாந்தி, அதிக தாகம், சோர்வு, கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, படபடப்பு, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால், அப்போது குறை ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.

இருக்கை நிலை குறை ரத்த

அழுத்தம் என்பது என்ன?

சிலருக்குப் படுக்கையைவிட்டு எழுந் ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட் டாவது போல் உணர்வது, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான்.

இதற்கு இருக்கை நிலை குறை ரத்த அழுத்தம் என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவது அதிகம். நடு வயதிலும் ஏற்படலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்து விட்டு, திடீரென்று எழுந்து நின்றால் குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வருவதும் உண்டு. சில மாத்திரை மருந்து களாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படு வதுண்டு.

உணவு சாப்பிட்ட பிறகு சிலருக்கு

மயக்கம் ஏற்படுகிறது. அது ஏன்?

சிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இது பொது வாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம்.

உணவைச் சாப்பிட் டதும் அதைச் செரிமானம் செய்ய குட லுக்கு அதிக அளவில் ரத்தம் சென்றுவிடும்.

இதனால் இதயத்துக்கும் மூளைக்கும் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

இந்த வகை குறை ரத்த அழுத்தத்தைத் தவிர்க்க சிறிது சிறிதாகச் சிறிய இடை வெளிகளில் உணவு சாப்பிட வேண்டும். கொழுப்புச் சத்து உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம்.

இதற்கு என்னென்ன பரிசோதனைகள் தேவைப்படும்?

குறை ரத்த அழுத்தம் உள்ளவர் களுக்கு மல்லாந்து படுத்த நிலையிலும் பிறகு எழுந்து நின்ற நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட வேண்டும். வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்வதும் நல்லது. சிலருக்கு சாய் மேசை பரிசோதனையும் தேவைப்படும்.

என்ன சிகிச்சைகள் உள்ளன?

அடிப்படைக் காரணத்தைச் சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். மருத்துவரின் ஆலோசனைப் படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப் படுத்திக்கொள்ளலாம்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கால்களுக்கு மீளுறை களை அணிந்து கொள்வது நல்லது. சிறு தானியங்கள், கீரை, காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும். உடல் எடையைப் பேண வேண்டும். இந்த நோயைக் குணப்படுத்த மாத்திரைகளும் உள்ளன.

- விடுதலை நாளேடு 25 11 19

செவ்வாய், 12 நவம்பர், 2019

குணாதிசயம் சொல்லும் குரோமாசோம்

கருப்பையில் வளரும் சிசுவின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை அறிய கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவது பலருக்குத் தெரிந்திருக்கும். சில கர்ப்பிணிகளுக்கு மட்டும் மருத்துவர்கள் கேரியோ டைப்  என்னும் சிறப்புப் பரிசோதனையை மேற் கொள்ளச் சொல்கிறார்கள். இது ஏன், எதற்கு, இதை எப்படிச் செய்கிறார்கள்?

மரபியல் நினைவகம் என்பது என்ன?

நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லுக்குள்ளேயும் 23 இணை குரோமோசோம்கள் வீதம் மொத்தம் 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. இவற்றில் 23 குரோமோசோம்கள் அப்பாவிடமிருந்தும் அடுத்த 23 குரோமோசோம்கள் அம்மாவிட மிருந்தும் வருகின்றன. இந்த 46 குரோமோசோம்களில் எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் நம் பாலினத்தை நிர்ணயிப்பவை. ஒருவருக்கு எக்ஸ் குரோமோசோமும் இருக்கிறது; ஒய் குரோமோசோமும் இருக்கிறது என்றால் அவர் ஆண்; மாறாக, ஒய் குரோமோசோம் இல்லை; இரண்டுமே எக்ஸ் குரோமோசோம்களே என்றால் அவர் பெண்.

இந்த குரோமோசோம்களில்தான் மரபணுக் களைக் கொண்ட டி.என்.ஏ. மூலக்கூறுகள் இருக் கின்றன. இவற்றில் காலம் காலமாய் நம் மரபில் வரும் குணாதிசயங்கள் பொதிந்திருக்கின்றன. ஆகவே, இவற்றை மரபியல் நினைவகம் என்கிறோம். ஒரு குழந்தைக்கு அம்மாவின் கண், அப்பாவின் மூக்கு, தாத்தாவின் உயரம், பாட்டியின் நினை வாற்றல், முப்பாட்டனின் முன்கோபம், முப்பாட்டி யின் முடி என்று எல்லாமே சேர்ந்திருப்பதற்கு இதுதான் காரணம்.

******

நிலவேம்பு கசாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது

* பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடிப்பதால் போதிய சத்துக்களை பெறலாம்

* தேங்காய் உடலில் பரவியுள்ள நுண்கிருமி களை அழித்து, உடலை தூய்மை செய்கிறது.

* அல்சர், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் ஆற்றல் பெற்றது கொய்யா பழம்.

* சுண்டைக்காய் நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுத்து பார்வைத் திறனை அதிகரிக்கும், நினைவாற்றல் கூடும்.

- விடுதலை நாளில் 4 11 19

நீரிழிவு நோயாளிகளே கவனம்!

சர்க்கரை நோய் கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப் படுவது இயல்பு. அந்தப் பாதிப்புகளுக்கு டயபடிக் நியூரோபதி என்று பெயர். அந்தப் பாதிப்பு ஏன் வருகிறது? எப்படி வருகிறது? என்ன தீர்வு?

ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப் படுத்தாததுதான் இதற்கு முக்கியக் கார ணம். ரத்தச் சர்க்கரை அதிகமாகும் போது அது சார்பிட்டால் எனும் வேதிப் பொருளாக மாறி நரம்புகளில் ஒட்டிக் கொள்ளும். அது இலையைத் தின்னும் பூச்சிபோல நரம்பிழைகளைத் தின்னும். இதனால் நரம்புகளின் தகவல் பரிமாற்றம் தடைப்படும். மேலும், இவர்களுக்கு நுண்ணிய ரத்தக்குழாய்களும் பாதிக்கப் படுவதால், நரம்பு முனை களுக்குப் போதிய ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் கிடைக்காது. இது அந்தப் பாதிப்பை அதிகப்படுத்தும்.

அடுத்து, சர்க்கரை நோய் காரண மாகச் சிறுநீரகமும் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் சில நச்சுக்கள் சேரும். அவை நரம்புச் சுவர்களைச் சிதைக்கும். இவர் களுக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந் தால் நிலைமை இன்னும் மோசமாகும். புகையில் உள்ள நச்சுக்கள் ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடுவதால், உறுப்பு களுக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடுவதுதான் காரணம்.

யாருக்கு இந்தப் பாதிப்பு அதிகம்?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எவருக் கும் இது வரலாம். என்றாலும், எப்போதும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல் லாமல் இருப்பவர்களுக்கு இது வேகமாக வந்துவிடும். உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், ரத்த மிகு கொலஸ்டிரால், புகை/மதுப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இதற்கான சாத்தியம் அதிகம்.

நரம்பு பாதிப்புகள் எல்லாமே ஒரே வகைதானா? வெவ்வேறா?

நரம்பு பாதிப்புகளில் புற நரம்பு பாதிப்பு, தானியங்கு நரம்பு பாதிப்பு, அண்மை நரம்பு பாதிப்பு, குவிய நரம்பு பாதிப்பு எனப் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இவற்றில் அதிகம் காணப் படுவது, புற நரம்பு பாதிப்பு. இதில் கை, கால், பாத நரம்புகள் பிரதானமாகப் பாதிக்கப்படும். இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்குக் கை, கால் மரத்துப்போகும்; எரிச்சல் ஏற்படும்; ஊசி குத்தும் வலி உண்டாகும்; இந்தத் தொல்லைகள் இரவில் அதிகமாக இருக் கும்; சிலருக்குத் தொடு உணர்வு அதி கரிக்கும்; பாதங்களில் போர்வை பட்டால் கூடச் சுமையாகத் தோன்றும்; நடந்தால் மெத்தைமேல் நடப்பது போலிருக்கும்; பலருக்குச் செருப்பு கழன்று போவதுகூடத் தெரியாது. அந்த அளவுக்கு உணர்வு குறைந்து போகும்; பாதங்களில் கூர்மை யான பொருட்கள் குத்தினாலும் தெரி யாது என்பதால் அடிக்கடி பாதங்களில் தொற்றும் புண்களும் உண்டாகும்.

அண்மை நரம்பு பாதிப்பு என்பது என்ன? கேள்விப்படாததாக இருக்கிறதே! நாற்பது வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு அண்மை நரம்பு பாதிப்பு ஏற்படுகிறது. இதில் புட்டம், இடுப்பு, தொடை நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படும். அப்போது இடுப்பில்/ புட்டத்தில் / முன் தொடையில் திடீ ரென்று கடுமையாக வலிக்கும். தொடக் கத்தில் தொடை வலி ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படும். போகப்போக இரண்டு பக்கமும் வலிக்கும். அத்தோடு, சம் மணம் போட்டு உட்கார்ந்து எழுந்தி ருப்பதும் படிகளில் ஏறு வதும் சிரமப்படும். தொடைத் தசைகள் சுருங்கி விட்டதுபோல் தெரியும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு

இதய நரம்புகளும் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

உண்மைதான். இது தானியங்கி நரம்புகள் பாதிக்கப் படுவதால் ஏற்படும் விளைவு. இதயம் மட்டுமல்ல, நுரையீரல், கண், சிறுநீரகம், வாய், உணவுக்குழாய், இரைப்பை, குடல், பாலின உறுப்புகள் ஆகியவற்றையும் தானியங்கி நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன. ரத்தச் சர்க் கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் இந்த உறுப்புகள் பாதிக்கப்படுவதுண்டு. உதாரணமாக, இதய நரம்புகள் பாதிக் கப்பட்டால் இதயம் ஒழுங்கற்றுத் துடிக்கும். படபடப்பு வரும். ரத்த அழுத் தம் குறையும். உட்கார்ந்து எழுந்திருக் கும்போது தலைசுற்றும்.

மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி வருவதை நமக்கு உணர்த்துவது தானியங்கு நரம்புகளே. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த நரம்புகள் பாதிக்கப் படுவதால் மாரடைப்பு வரும் போது நெஞ்சில் வலி தெரிவதில்லை. அமைதியான மாரடைப்பு  வருகிறது. சிலருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்படுவதும் இப்படியே. இது ஓர் ஆபத்தான நிலைமை.

இதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் இவர்களுக்குத் தெரிவதில்லை. ரத்தச் சர்க்கரை குறையும் போது உடல் வியர்க்கும். கைகால் நடுங்கும். தானியங்கு நரம்பு பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அறி குறிகள் தெரியாது. இதுவும் ஓர் ஆபத்தான பாதிப்பே. உறக்கத்தில் ரத்தச் சர்க்கரை குறைந்துவிட்டால் அதை உணர முடி யாமல் உயிரிழப்புகூட ஏற்படலாம்.

பாதிக்கப்படுவது வாய்/உணவுக் குழாய் நரம்பு என்றால், உதடுகள் உலர்ந்து போகலாம். விழுங்குவதில் சிரமம் ஏற் படலாம். குடல் நரம்புகள் பாதிக்கப் பட்டால் அடிக்கடி வயிற்றில் வாயு சேரும்; ஏப்பம் உண்டாகும். மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறித் தொல்லை  கொடுக்கும். மலத்தை அடக்க முடியாமல் போகும். பாதிக்கப்படுவது சிறுநீர்ப்பை நரம்பு என்றால், சிறுநீரை அடக்க முடியாது. அவசரமாக வருவதுபோல் இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். ஆனால், சிறுநீர் கழிப்பது சிரமமாக இருக்கும். இரவில் இந்தத் தொல்லை அதிக மாக இருக்கும். அடிக்கடி உறக் கத்தில் எழுப்பிவிடும். பாலின நரம்பு பாதிக்கப் படும் போது ஆண்களுக்கு விரைப்புத் தன்மை குறைவதும் பெண் களுக்குப் பிறப்புறுப்பு உலர்வதும் உண்டு.

ஒற்றை நரம்பு பாதிப்பு என்பது என்ன?

உடலில் குறிப்பிட்ட ஒரு நரம்பு மட்டும் பாதிக்கப்படும் நிலைமை இது  திடீரென்றுதான் வரும் உதாரணமாக, கண்ணுக்கு வரும். மூன்றாவது மத்திய நரம்பு பாதிக்கப்படுமானால், கண்ணுக்குப் பின்னால் கடுமையாக வலிக்கும். ஆறாவது மத்திய நரம்பு பாதிக்கப்படுகிறது என்றால், பார்க்கும் பொருளெல்லாம் இரண்டிரண்டாகத் தெரியும். முக நரம்பு பாதிக்கப்படும் போது முகவாதம் வரும். முகத்தில் ஒரு பக்கத்தில் தசைகள் இயங்காது என்பதால், பேசும்போது வாய் ஒரு பக்கமாகக் கோணும். ஒரு பக்க இமை மூடாது. கைக்கு வரும் நடுநரம்பு பாதிக்கப்படுகிறது என்றால், விரல்களில் வலி, கூச்ச உணர்வு, மதமதப்பு, பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன் றும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் கையில் எடுக்கும் பொருட்களை அடிக்கடி கீழே போட்டுவிடு வார்கள். ஒற்றை நரம்பு பாதிப்பில் ஒரு நல்ல செய்தியும் உண்டு. இவை எல்லாமே சில மாதங்கள் இருந்துவிட்டு முழுமையாக மறைந்து விடும்.

இதற்கு என்ன தீர்வு? இதைத் தடுப்பதற்கு வழி உண்டா?

ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதுதான் இதற்கான தீர்வு. இன்சுலின் சிகிச்சை, ஆரோக்கியமான உணவு முறை, தேவையான உடற்பயிற்சி மூலம் இது சாத்தியமாகும். உடல் எடையைச் சரியாகப் பேணுவதும் பாதப் பராமரிப்பும் பொருத்தமான காலணிகள் அணி வதும் முக்கியம். ரத்த அழுத்தம், ரத்த கொலஸ்டிரால் அளவுகளைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

மது, புகைப் பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை பயோதிசியோ மெட்ரி' என்னும் பாதப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வழிகளில் நரம்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் தள்ளிப் போடவும் முடியும். பொதுவாக, நரம்புப் பிரச்சினை களைத் தொடக்கத்தி லேயே கவனித்துவிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். தாமதமானால் சிரமமாகி விடும்.

- விடுதலை நாளேடு 4.11.19

சனி, 26 அக்டோபர், 2019

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்

நூல்: அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்

ஆசிரியர்கள்: டாக்டர் பூ.பழனியப்பன், ப.சுமங்கலி

வெளியீடு:திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,  

                 பெரியார் திடல், 84/1 (50),

                 ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி,  

                  சென்னை - 600007.

                தொலைபேசி: 044-26618163

பக்கங்கள்: 200   விலை: ரூ.125/-

 

மாதவிடாய் நின்று போன நிலை

மாதவிடாய் என்பது கருப்பையிலிருந்து(Uterus) கருப்பையின் சுவர்களில் படிந்துள்ள குருதியும் வேறு சத்துப் பொருள்களும் உரிய பருவத்தில் _ பருவந்தோறும் _ முறையாகப் பெண்குறி வழியாக வெளியேறும் செயலாகும். இச்செயல் கரு உண்டாகத் தகுதியுள்ள பெண்களிடத்தில் மட்டும் நடைபெறுகின்றது.

பொதுவாகப் பெண்களுக்கு முதல்முறையாக மாதவிடாய் ஏற்படல் _ பூப்பெய்தல் என்பது

11 _ 16 வயதுக்குள் நடைபெறும். 11 வயதுக்கு முன்னும் நடைபெறலாம். மாதவிடாய் ஏற்படல் ஒரு மாதத்திற்கு _ 28 நாள்களுக்கு ஒருமுறை என்கிற நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயலாகும்; வேறுபட்டும் நடைபெறுவது உண்டு. பெண்களுக்கு 45 வயதுவரை மாதவிடாய் நடைபெற்றுக் கொண்டிருக்கும்; சிலருக்கு 40 வயதிலேயேகூட நின்று விடும்; சிலருக்கு 45 வயதுக்குப் பின்னரும் தொடரும்.

மாதவிடாய் ஏற்படுதலில் எத்தகைய சிக்கலும் இல்லையென்றால்தான் கரு உண்டாகும்; மகப்பேறு நிகழும். மாதவிடாய் இல்லையெனில், மகப்பேறு இல்லை. குழந்தை பிறந்து சில மாதங்களில், மாதவிடாய் வராமலே (இல்லாமலே) கரு உண்டாக வாய்ப்பு உண்டு.

மனித உயிரி - கரு

ஒவ்வொரு மனித உயிரியும் (Human being) பெண் முட்டை செல் _ Egg cell _ பெண்ணின் உயிர் உற்பத்தி செல் என்கிற  Ovum ஒன்றும், ஆணின் உயிர் உற்பத்தி செல் என்கிற  Sperm ஒன்றும் இணைந்து கருவாவதன் மூலமே உண்டாகின்றது. கருவுறுதல் இல்லையெனில் உயிர்களின் உற்பத்தியில்லை.

பெண்களிடத்தில் இந்த உயிர் உற்பத்தி முட்டைகளை  (Ova) உற்பத்தி செய்பவை இரு முட்டைப் பைகளேயாகும்(Ovaries) முட்டைப் பைகளினுள் இருக்கும் முட்டைகள் ஒவ்வொன்றும் தனித்தனி சிறு பைகளில் (Sac) _ உறைகளில் இருக்கின்றது. இந்தச் சிறுபைகளுக்கு ஆங்கிலத்தில் ஃபாலிக்கிள்ஸ் (Follicles) என்று பெயர். ஒவ்வொரு மாதமும் முட்டைகளில் ஒன்று மட்டுமே முதிர்ச்சியடைகின்றது. முதிர்ச்சியடைந்த முட்டை (Ovum)யின் சிறு பை _ உறை வெடிக்கின்றது; முட்டை வெளிவருகின்றது. பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு முட்டை மட்டுமே முதிர்ச்சியடைந்து வெளிவரும். இச்செயலுக்கு _ முட்டை வெளியேற்றப்படும் செயல்  Ovulation என்று பெயர்.

சிறு பையிலிருந்து வெளியில் தள்ளப்பட்ட முட்டை வெளியேறும் குழாய்கள் ஒன்றின் வழியாக  Fallopian tube or Oviduct வெளிவரும். இப்பயணம் முடிய 4, 5 நாள்கள் ஆகும். அப்பொழுது பெண்குறி வழியே கருப்பையைக் கடந்து (Uterus) இந்த வெளியேறும் குழாய்க்கு (Fallopian tube) ஆணின் உயிர் உற்பத்தி செல் (Sperm) _ உடல் உறவு நிகழ்ந்தால் வரும். அவ்வாறு அது (Sperm) வந்திருந்தால் முட்டை செல் அதைச்சந்திக்கின்றது. இரு செல்களும் (பெண் _ ஆண்) இணைந்து கரு (Zygote) உண்டாகின்றது. இவ்வாறு உண்டாகும் கரு, கருப்பைக்குள் வருவதற்கு முன்னரே, இக்கருவை வளர்க்க கருப்பை தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.

அதாவது கருப்பையின் சுவர் பஞ்சு போன்று உறிஞ்சும் இயல்பைப் பெறுகின்றது. அச்சுவரில் குருதியும் சத்துப் பொருள்களும் _ திசுக்கள் படிகின்றன; சுவர் தடிப்பாகின்றது. கருப்பைக்குள் வந்த கரு கருப்பையில் ஊன்றி விடுகின்றது. படிந்த பொருள்கள் கருவுக்கு உணவாகின்றன.

ஹார்மோன்கள் - இயக்குநீர்

வெளியேறும் குழாய் ஒன்றின் வழியே பயணஞ் செய்து கொண்டிருக்கும் முட்டை _ (Ovum) ஆணின் உயிர் உற்பத்தி செல்லைப் பெற்றுக் (Sperm) கருவாகும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், கரு உருவாகாத நிலையிலும் கருப்பை (Uterus) கருவை ஏற்கத் தன்னைத் தயார்நிலையில் வைத்துக் கொள்கின்றது. கருவாக உருவாகாத முட்டை கருப்பையை அடைந்து உடைந்து விடுகின்றது.

கரு வராத நிலையில் _ கரு இல்லாத நிலையில், கருப்பையில் படிந்துள்ள பொருள்கள் பயனற்றதாகி விடுகின்றன. எனவே, சுவரில் படிந்த பொருள்களாகிய குருதி, திசுக்களின் இளகிய கூழ்ப் பகுதி ஆகியவை பெண்குறி வழியே வெளியேறுகின்றன. இதுவே மாதவிடாயாகும். ஒவ்வொரு மாதவிடாய் முடிந்தவுடனே கருப்பை கருவை ஏற்கத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் வேலையைச் செய்கின்றது.

ஹார்மோன்கள் என்பவை நாளமில்லாத சுரப்பிகள் (Ductless glands - Endocrine glands) சுரக்கும் இயக்குநீராகும். இது நேரடியாகவே குருதியில் கலக்கின்றது.

நாளமில்லாத சுரப்பிகளைத் தவிர திசுக்களில் இருக்கும் சில தனிவகை செல்களும் _  Special cells _ ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த செல்கள் நாளமில்லாத சுரப்பி வகைகளைச் சேர்ந்தவை அல்ல. இங்கு இருவகை ஹார்மோன்களும் செயல்படுகின்றன. உடல் இயல்பான நிலையில் இயங்க ஹார்மோன்கள் காரணமாக அமைகின்றன என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்.

ஹார்மோன்களின் வேலை

மாதவிடாய் முறையாக நடைபெற காரணமாக அமைபவை பிட்யூட்டரி சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களேயாகும். சான்றாக ஒவ்வொரு முட்டையையும் சுற்றி உறை போன்றிருக்கும் சிறு பையின் செயலைத் தூண்டுவது ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனாகும் (Follicle Stimulating Hormone) (FSH) . இந்த ஹார்மோன் தூண்டுவதால்தான் முட்டையுறைப் பை (ஃபாலிக்கிள்ஸ்) எஸ்ட்ரோஜன்  (Estrogen) என்னும் ஹார்மோனைச் சுரக்கின்றது. அதனால்தான் கருப் பை, கருவை ஏற்கும் நிலையை அடைகின்றது. அடுத்து லூட்டினைசிங் ஹார்மோன்  (Luteinizing Hormone) (LH)   முட்டையுறைப்பையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றது.

மேலும் லூட்டினைசிங் ஹார்மோன்(LH) ஃபாலிக்கிள்ஸ்களைத் தூண்டுவதால் கார்பஸ் லூட்டியம்  (Corpus Luteum)  என்னும் ஒரு புதிய அமைப்பு உண்டாகின்றது. இங்கு பிட்யூட்டரி சுரப்பி சுரக்கும் லூட்டியோட்ராபிக் ஹார்மோன்  (Luteotropic Hormone - LH)   கார்பஸ் லூட்டியத்தைத் தூண்டி, புரோகெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோனைச் சுரக்குமாறு செய்கிறது. இந்த புரோகெஸ்ட்ரோன்தான் முட்டையை ஏற்க கருப்பையைப் பக்குவப்படுத்துகின்றது.

மாதவிடாய் நின்றுபோதல்

பெண்களின் ஏதோ ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், முட்டைப் பைகள் (Ovaries)  நான்கு வாரங்களுக்கு ஒருமுறை, ஒரு முட்டையை உற்பத்தி செய்யும் தன்மையை இழந்து விடுகின்றன. ஆதலின் முட்டை (பெண்ணின் உயிர் உற்பத்தி செல்) உண்டாவதில்லை. முட்டை (Ovum)  இல்லையெனில் அது தொடர்பான வேலைகளும் இல்லை. எனவே, மாதவிடாய் நின்று விடுகின்றது. மாதவிடாய் 40 வயதுக்கு முன்னும் நின்று போகலாம்; 45 வயதுக்குப் பிறகும் நின்று போகலாம்.

குறிப்பாக மாதவிடாய் நின்றுபோதல் என்பது ஒரு பெண்ணின் இறுதியும் முடிவுமான மாதவிடாய் எனலாம். ஆனால், இறுதியான மாதவிடாய் என்பதற்குப் பின்னர் 12 மாதங்கள் சென்ற பிறகுதான் அவள் முடிவாக, கடைசியான மாதவிடாய் நின்று போதலை அடைகிறாள் என்று கூறுதல் வேண்டும். மாதவிடாய் நின்று போதல்(Menopause) என்பதற்குரிய இலக்கணமும் இதுதான்.

மாதவிடாய் நின்று போதல் சிலருக்குத் தொல்லையின்றி இயல்பாக _ சிறுகச்சிறுக நாளடைவில் நின்றுபோகும்; சிலருக்குத் திடீரென நின்று போகலாம். சிலருக்கு மாதவிடாய் போக்கு பல நாள்கள் தொடர்ந்த பின்னர் நின்றுபோகலாம். மாதவிடாய் நின்றுபோதல் என்பது சில காரணங்களால் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதாலும் ஏற்படுகின்றது. கருப்பை நீக்கப்பட்டாலும் முட்டைப் பைகள் அவற்றின் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆக முட்டைப் பைகள் (Ovaries)  நீக்கப்பட்டாலும் மாதவிடாய் நின்றுபோகும்  (Surgical Menopause).

சில நோய்களுக்காகக் கதிர்வீச்சு மருத்துவத்தைப்  (Radiotherapy) பயன்படுத்து கின்றபொழுது கதிர்வீச்சால் முட்டைப் பைகள் பாதிக்கப்பட்டு எஸ்ட்ரோஜென்  (Estrogen) என்னும் ஹார்மோன் உற்பத்தியாவதில்லை. அதனால் மாதவிடாய் நின்று போகின்றது. ஆக, மாதவிடாய் 1. இயற்கையாகவும், 2. கருப்பை, முட்டைப் பைகள் ஆகியவை நீக்கப்படுவதாலும், 3. கதிர்வீச்சால் முட்டைப் பைகள் பாதிக்கப்படுவதாலும் நின்று போகின்றது.

விளைவுகள்

மாதவிடாய் நின்றுபோகும் சமயத்தில் சிலருக்குப் பல தொல்லைகள் உண்டாகின்றன. மாதவிடாய்க்கும் ஹார்மோன்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் திடீரென ஏற்பட்ட புதிய நிலையை உடல் சரிசெய்து கொள்வதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.

மேலும் பெண்கள் பெண்மையுடனும், மகிழ்வுடனும், உறுதியுடனும், உடல் வலிமையுடனும் வாழக் காரணமாக அமைபவை ஹார்மோன்களேயாகும். அவற்றுள் மிக முக்கியமானது எஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனேயாகும். இந்த எஸ்ட்ரோஜென் இன்மையால் பலவகை இன்னல்கள் ஏற்படுகின்றன.

வாசோ மோட்டார் -  (Vasomotor)

வாசோ மோட்டார் என்பது குருதிக்குழாய்ச் சுவர்களின் தசைகளைக் கட்டுப்படுத்தி, குறுக்களவைச் சரி செய்தலாகும். இதில் கோளாறு ஏற்படின் தோலின் நுண்குருதிக் குழாய்கள் முறையாகத் திடீரென்று விரிவடைகின்றன. அப்பொழுது உடல் மீது அனல் வீசுதல் போன்ற உணர்ச்சி ஏற்படும்; எரியும்; அனல் வீசும் அடுப்பின் அருகில் அமர்ந்திருப்பதுபோல் இருக்கும்; வியர்த்துக் கொட்டும். இரவில் ஆடைகள் நனைந்து போகுமளவுக்கு வியர்வை உண்டாகும். இத்துடன் மயக்கம், படபடப்பு ஆகியவையும் ஏற்படும்.

நியூரோ என்டோக்ரின்  (NEURO ENDOCRINE)

நரம்பு செல்களில் தனித்தன்மை வாய்ந்த சில செல்கள் இருக்கின்றன. அவை ஹார்மோன்களைச் சுரக்கின்றன. சான்றாக ஆக்சிடோசின்  (Oxytocin), வாசோ பிரசின் (Vaso pressin), ஆகியவை நரம்பு செல்கள் சுரக்கும் ஹார்மோன்களாகும். இவை குருதியுடன் கலக்கின்றன. உடலின் தேவையான பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கு உடலின் செயல்களைக் கட்டுப்படுத்தும் வேலையை நரம்புகளும் நரம்பு செல்கள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களும் செய்கின்றன. இந்த நிலையில் மாறுதல்கள் ஏற்படும்பொழுது கடுகடுப்பு, மறதி, கவனக்குறைவு, தன்னம்பிக்கை இன்மை ஆகியவை ஏற்படும்.

முட்டைப் பைகளில் ஏற்படும் மாறுபாடுகள்

1.            மகப்பேறு ஏற்படும் வாய்ப்புக் குறைதல்

2.            கருமுட்டையில்லாத (Ovum)  மாதவிடாய்ச் சுழற்சிகள்.

ஒரு மாதவிடாய் தொடங்கி முடிந்து அடுத்த மாதவிடாய் ஏற்பட 28 நாள்கள் ஆகும். இதை ஒரு சுழற்சி (Cycle) என்போம். முதல் 14 நாள்களைச் சுழற்சியின் முதல்பாகம் என்றும், இரண்டாவது 14 நாள்களைச் சுழற்சியின் இரண்டாம் பாகம் என்றும் கூறுகிறோம். சுழற்சியின் இரண்டாம் பாகமாகிய 14 நாள்களில் ஹார்மோன்கள் சுரப்பது குறைகின்றது. ஆதலின் இந்த இரண்டாம் பாகச் சுழற்சியை வலுவிழந்த சுழற்சிப்பாகம் என்கிறோம் ( மாதவிடாயின் ஒரு சுழற்சி 14+14 = 28 நாள்களைக் கொண்டது ). இது சிறிதே மாறுபடலாம்.

இன வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்கள்  (Sex Steroids), ஈஸ்ட்ரோஜென்ஸ் (Oestrogens), புரோ ஜெஸ்டிரோன் _ (Progesterone), பிட்யூட்டரி சுரப்பிகள் Inhibin ஆகியவற்றில் மாறுதல்கள் ஏற்படும்.

நரம்பு செல்கள் ஹார்மோன்களைச் சுரப்பதிலும் மாறுதல்கள் உண்டாகும்.

உடலின் வெப்ப நிலை, தூக்கம், மனநிலை, செயல்கள் _  (Behaviour) ஆகியவற்றிலும் வேறுபாடுகள் ஏற்படும்.

மாதவிடாய் நின்றுபோதலின் மாறுதல்கள்

குருதியிலுள்ள முட்டையுறைத் தூண்டு ஹார்மோன்  (FSH) அளவு மாதவிடாய் நின்றுவிட்ட பிறகும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை இயல்பான அளவுக்குமேல் பத்து மடங்கு அதிகமாக உயருகின்றது. அதாவது முட்டையுறைத் தூண்டு ஹார்மோனின்  (FSH)  உற்பத்தி அதிகமாகின்றது. இத்துடன் லூட்டியோட்ராஃபி ஹார்மோனின்(LH)    உற்பத்தியும் கணிசமான அளவுக்கு உயருகின்றது.

ஹார்மோன்கள் அதிகமான இந்த நிலை ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கின்றது. பிறகு இந்த ஹார்மோன்களின் அளவு பெருமளவில் குறைகின்றது. மேலும் மாதவிடாய் நின்ற பின்னர் ஈஸ்ட்ரோஜன், ஆண்ட்ரோஜென் (Androgen) ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தியும் குறைந்து விடுகின்றது. குருதியிலிருக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவுக்கும் உடலின் பருமனுக்கும் எப்பொழுதும் ஓர் உடன்பாடான தொடர்பு(Positive) உண்டு. மற்றபடி தைராய்டு, அட்ரீனல், பாரா தைராய்டு ஆகிய மூன்று சுரப்பிகளில் எத்தகைய மாற்றமும் நிகழ்வது இல்லை.

இந்தியப் பெண்களுக்கு மேல்நாட்டுப் பெண்களைவிட ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாதவிடாய் நின்று விடுகின்றது என்பதை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். பொதுவாக இந்தியப் பெண்களுக்கு 44_48 வயதளவில் மாதவிடாய் நின்று போகின்றது. மேல்நாட்டுப் பெண்களுக்கு 50 _ 51 வயதளவில் மாதவிடாய் நின்றுவிடுகிறது. மனநிலைப் பாதிப்பில், இந்தியப் பெண்களைவிட மேலை நாட்டுப் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், நமது நாட்டுப் பெண்கள், சிறுநீர்ப் பாதை பாதிப்பு, பெண்குறி வழிப் பாதிப்பு ஆகியவற்றில் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த வகைப் பாதிப்பு மேல்நாட்டுப் பெண்களுக்குக் குறைவாகவே ஏற்படுகிறது.

சிறுநீர்ப் பாதை, பிறப்பு வழி பாதித்தல்

URO-GENITAL PROBLEMS

ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் மேற்கூறிய உறுப்புகளின் மேலுள்ள சல்லாத்துணி போன்ற மெல்லிய சவ்வுப்படலம் Epithelium நலிந்து, மெலிந்து போகின்றது. சிறுநீர்ப் பாதையும் பிறப்பு வழியும் எஸ்ட்ரோஜெனைச் சார்ந்து பெறுபவையாகும். மாதவிடாய் நின்று போவதால் இந்தக் கூறு (Factor) _ ஈஸ்ட்ரோஜென் குறைந்து விடுகின்றது. மேற்கூறிய உறுப்புகளுக்கு வலுவளிக்கும் ஈஸ்ட்ரோஜென் இந்த உறுப்புகளின் மேல் செயல்பட முடியாத நிலை ஏற்படுகின்றது. அதன் விளைவாக சிறுநீர்ப் பாதையின் அடிப்பாகம் நலிந்து, மெலிந்து போகின்றது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அவசரமாகச் சிறுநீர் கழித்தல் ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் சிறுநீரை அடக்கி வைக்கும் தன்மையையும் இழந்து விடுகின்றனர். சிறுநீரை அடக்கி வைக்கக் காரணமாக அமைந்துள்ள சுருங்கு தசைகள் செயலிழந்து விடுகின்றன. இதனால் சிரித்தாலோ, இருமினாலோ, உடல் குலுங்கினாலோ அவர்கள் அறியாமலேயே சிறுநீர் கசியும் நிலை உண்டாகின்றது.

ஈஸ்ட்ரோஜென் மாத்திரைகள், பசைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் இக்குறைகளை ஓரளவிற்குத் தவிர்க்கலாம். பெண்குறி வழி பசையின்றி வறண்டு போகும். அங்கு வலியேற்படும். இவற்றை உரிய மருத்துவரின் அறிவுரைக்கேற்பச் செயல்பட்டுச் சரி செய்து கொள்ளல் வேண்டும்.

எலும்புகள் பாதிக்கப்படல்

மாதவிடாய் நின்றுபோகும்பொழுது எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போதல் என்பது நோயாளி அறிந்து கொள்ளாமலேயே மெல்லமெல்ல நிகழும் ஒரு பாதிப்பாகும். இதனால் பெரிதும் பாதிக்கப்படும் எலும்பு தொடை எலும்பின் மேல் பாகமேயாகும் Neck of femur. அடுத்து முதுகு முள்ளெலும்புகள் நொறுங்கிப் போகின்றன. இதனால் உயரம் குறைவதும், கூன் விழுவதும் உடல் ‘ட’ வடிவத்தில் மாறுவதும் ஏற்படுகின்றன. முதுகு வலி ஏற்படுகின்றது; நடமாடும் நிலை குறைகின்றது. முன்னங்கை எலும்பு மணிக்கட்டு அருகில் உடையும் நிலை உண்டாகின்றது. மேலும் பொதுவாக எலும்புகளின் வலிமை குறைவதால் உடலின் எந்த எலும்பும் உடையலாம். அய்ம்பது வயதைக் கடந்த ஆண்களைவிட தாய்மார்களே அதிக அளவில் எண்ணிக்கையிலும் எலும்பு முறிவினைப் பெறுகின்றனர்.

எலும்புகள் தேய வாய்ப்புகள்

1. ஆசிய நாட்டுப் பெண்களும், 2. பரம்பரையாக அதிக எண்ணிக்கையில் எலும்பு முறிவுகளைப் பெற்றவர்களும், 3. குறைவாக ஊட்டச்சத்து உணவினை உண்பவர்களும், 4. இளமையில் போதிய அளவு சுண்ணாம்புச் சத்தினைப் பெறாதவர்களும், 5.மகப்பேறில்லாதவர்களும், 6. நீண்ட நாள்களுக்குப் பிறகு இடைவெளிக்குப் பிறகு ஏற்படும் மாதவிடாய்களை அடிக்கடி பெறுபவர்களும், 7. உரிய காலத்திற்கு முன்னரே மாதவிடாய் நின்று போகும் நிலையை அடைந்தவர்களும், 8. அறுவை சிகிச்சை மூலம் முட்டைப் பைகள் நீக்கப்பட்டவர்களும், 9. ஏதோ ஒரு காரணத்தால் நீண்ட காலம் படுத்த படுக்கையாகக் கிடந்தவர்களும், 10. நீண்ட காலம் தொடர்ந்து கார்ட்டிசோன், Cortisone, தைராய்டு  Thyroid போன்ற மருந்துகளை உட்கொள்ளுபவர்களும், 11. போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களும், 12. புகை, மது ஆகியவற்றின் பழக்கத்திற்கு ஆளாகியவர்களும் எலும்பு முறிதலுக்கு எளிதல் ஆளாவர்.

உலகில் 1990ஆம் ஆண்டு மட்டும் 17 இலட்சம் மக்கள் எலும்பு முறிவுக்கு ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது. மாதவிடாய் நின்றுபோகும் தொடக்கக் காலத்திலேயே ஹார்மோனை ஈடுகட்டும் _ ஈடுசெய்யும் (HRT) மருத்துவத்தைப் பெற்றவர்கள் இத்தகைய எலும்பு முறிவுகளைப் பெருமளவில் தடுத்துக் கொள்ளலாம். வாய்வழியே உட்கொள்ளும் மாத்திரைகள், தோலில் பதிய வைக்கும் வில்லைகள் போன்ற மருந்துகள் மூலம் ஈஸ்ட்ரோஜெனைப் பெறலாம். இம்மருந்துகளைக் குறைந்தது அய்ந்து ஆண்டுகளுக்காவது பயன்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் உரிய பயன் கிடைக்கும்.

இதயம், இதயக் குருதிக் குழாய்கள் பாதித்தல்

பெண்களைவிட ஆண்களே இதய நோய்களால் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றனர் என்னும் ஒரு கருத்து உள்ளது. ஆனால், 60_65 வயதினைக் கடந்துவிட்ட நிலையில் ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேற்கூறிய கருத்து நிலவக் காரணம், இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களில், பெண்களைவிட ஆண்களே அதிக எண்ணிக்கையில் மருத்துவஞ்செய்து கொள்கின்றனர். இதயவலி, போதிய குருதி கிடைக்காததால் இதயத்தில் சில இடங்களில் இதயத் திசுக்கள் மடிதல் (Infraction), குருதி அழுத்தம், மூளைக்குப் போதிய குருதி செல்லாததால் மூளையில் ஏற்படும் திடீர் பாதிப்பு  Stroke, மூளையில் குருதிக் கசிவு போன்ற நோய்கள் மாதவிடாய் நின்று போதலுக்கு முன்னர் பெண்களிடையே குறைவாகவே காணப்படுகின்றன. இதற்குக் காரணம் மாதவிடாய் நின்று போதலுக்கு முந்தைய பருவத்தில் மாதவிடாய் முறையாக நடைபெறும் வயதில் இந்த நோய் வராமல் முட்டைப் பைகள் (Ovaries) தடுக்கின்றன. ஆனால், மாதவிடாய் நின்றுபோன பிறகு இதயம் சுருங்கிச் செயல்படும் தன்மையில் குறைந்து, அதன் இடப் பாகம் தடித்து, முதிர்ந்து போய்ச் செயலில் குறைந்து காணப்படுகின்றது.

மாதவிடாய் நின்று போவதால் மகளிர் உண்ணும் உணவிலுள்ள மாவுப் பொருள்களில் _ கார்போஹைட்ரேட்டுகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குருதியில் அதிக அளவில் சர்க்கரைச் சத்தும், இன்சுலினும் இருப்பதால் குருதிக் குழாய்களின் குறுக்களவு குறைந்து பல தீமைகள் உண்டாகின்றன. மாதவிடாய் நின்று போனதற்குப் பின்னர் இன்சுலின் செயல் முன்பைவிடக் குறைந்து விடுகின்றது. மாதவிடாய் நின்ற பிறகு உடலில் இன்சுலினை எதிர்க்கும் சக்தி உண்டாகின்றது. பெண்களின் உடலில் இடுப்பிற்கு மேலுள்ள பகுதி பருமனாகின்றது. இது பொதுவாக ஆண்களுக்கு ஏற்படும் ஒன்றாகும். குருதியின் கொலஸ்ட்ராலிலுள்ள -  Cholesterol -  கொழுப்புச் சத்துகளில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. நன்மை அளிக்கும் அடர்த்தி குறைந்த லிப்பிடின் (LDL) அளவு குறைகின்றது. இதனால் தீமை ஏற்படும். குருதி அழுத்தம், மாதவிடாய் நின்று போன பிறகு வயது அதிகமானதன் காரணமாக ஏற்படுகின்றது என்றாலும், குருதிக் குழாயின் தன்மை மாறுவதும், குறுக்களவு குறைதலும், எடை கூடுவதும், எஸ்ட்ரோஜென் குறைவதும் குருதி அழுத்தத்திற்கு முக்கிய காரணங்களாகும். இதயம், குருதிக் குழாய்கள் ஆகியவை _ சுருங்கி விரியும் செயலுக்கு ஹார்மோனை ஈடுகட்டும் மருத்துவம் (HRT) பெரிதும் துணை புரிகின்றது. ஆதலின் குருதி அழுத்தம், இதயவலி ஆகியவற்றின் பாதிப்புகள் குறைகின்றன. எனினும் சரியான அளவோடு கூடிய உணவுமுறை, எடை பராமரிப்பு, கொழுப்புச் சத்துகளைக் குறைக்கும் மருந்து வகைகள் ஆகியவற்றிலும் போதிய கவனஞ் செலுத்துதல் வேண்டும். மேலும் புகைபிடித்தலைக் கைவிடல் நலமாகும்.

இவற்றுடன் இதயத் தசைகளிலுள்ள குருதிக் குழாய்களுக்குப் போதிய அளவு குருதி செல்லாத நிலை ஏற்படும் பொழுது இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்சிசன் கிடைக்காது. எனவே, இதயம் பாதிக்கப்படுகின்றது. மேலும் இதயத் தசைகளுக்குக் குருதி மூலம் சத்துப் பொருள்களை எடுத்துச் செல்பவை குருதிக் குழாய்களே.

ஒற்றைத் தலைவலி

ஈஸ்ட்ரோஜென் குருதிக் குழாய்கள் சுருங்கி விடுவதைத் தடுத்து விரிவடையத் துணை புரிகின்றது. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னர் உண்டாகும் தலைவலி Menstural Migraine  எஸ்ட்ரோஜென் குறைவதால் ஏற்படுகின்றது. இவ்வாறே மாதவிடாய் நின்றுபோகும் பொழுது உண்டாகும் தலைவலியும் (Menopausal Migraine) ஈஸ்ட்ரோஜென் குறைவதால் உண்டாவதேயாகும். இத்தகைய தலைவலிகளை நீக்க ஈஸ்ட்ரோஜென் மருந்து வகைகள் பெரிதும் பயன்படுகின்றன. ஹார்மோனை ஈடுகட்டும் மருத்துவத்தின் மூலம் ஈஸ்ட்ரோஜெனைக் கிடைக்கச் செய்வதால் இதயநோய்களின் பாதிப்பிலிருந்து நல்ல அளவில் தப்பித்துக் கொள்ளலாம். மருத்துவ மேற்பார்வையின்றி இந்த மருந்தை நீண்ட காலம் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் சில தீமைகள் கொடுமையானவை என்பதை மறந்து விடலாகாது. சிலருக்கு, குறிப்பாக மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இயல்புக்கு முன்னரே மாதவிடாய் நின்று போதல்

PREMATURE MENOPAUSE

சில சமயங்களில் இயல்புக்கு முன்னரே 35 _ 45 வயதிலேயே மாதவிடாய் நின்று போதலும் உண்டு. இவ்வாறு 100இல் ஒருவருக்கு என்கிற அளவில் உண்டாகும். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் பரம்பரையை முதன்மையாகக் கூறலாம். பொன்னுக்கு வீங்கி என்னும் தொற்று நோய் போன்றனவும் காரணமாகின்றன. காரணம் தெரியாத வழியாலும் ஏற்படுவது உண்டு. இவ்வாறு உரிய காலத்திற்கு முன்னரே மாதவிடாய் நின்று போதல், உரிய காலத்திற்கு முன்னரே முட்டைப் பைகள் செயல்படாமல் போதலேயாகும் _ Premature Ovarian Failure. இத்தகையவர்களுக்கு, சாதாரணமானவர்களை விட அதிக வியர்வை, படபடப்பு, முகத்தில் அனல் வீசுதல் போன்ற நிலை ஆகியவை ஏற்படும். இவர்களுக்கும் ஹார்மோன்களை ஈடுகட்டும் மருத்துவம் செய்யலாம்; பயனும் கிடைக்கும். மேலும் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்டெரோஜென் _  Progesterone  _ ஆகிய ஹார்மோன்களைத் தவிர குறைந்த அளவில் கார்ட்டிசோன் வகை மருந்துகள், பிட்யூட்டரி சுரப்பி வகை மருந்துகள் ஆகியவற்றையும் கொடுக்கலாம். அவை நல்ல பயனைத் தருகின்றன.

ஹார்மோனை ஈடுகட்டும் மருத்துவத்தைத் தொடங்குதல்

இம்மருத்துவத்தை மாதவிடாய் நின்று ஆறு மாதங்களிலிருந்து ஓராண்டிற்குள் தொடங்கலாம். சில சமயங்களில் மாதவிடாய் வந்து கொண்டிருக்கும்பொழுதும் தொடங்கலாம். இம்மருத்துவத்தைத் தொடங்கு முன்னர் குருதிப் பரிசோதனை செய்து எஸ்ட்ராடையால் Oestradiol _ ஃபாலிக்கள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH)   ஆகியவற்றின் அளவைக் கண்டுபிடித்தல் சிறந்ததாகும். சில சமயங்களில் 65 _ 74 வயது உடையவர்களுக்கு இத்தகைய HRT மருத்துவஞ் செய்து எலும்பு முறிவுகளைத் தடுக்கலாம் என்று கருதுகின்றனர். அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்த வகை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதால் இலட்சக்கணக்கான டாலர்கள் செலவாகின்றன. செலவு அதிகமாதலின் நம் நாட்டில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த வகை மருத்துவஞ் செய்து கொண்டு பயன்பெறுகின்றனர். மேலும் அடிக்கடி தவறாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுபவர்கள், வசதி படைத்தவர்கள் ஆகியவர்களால்தான் இந்த மருத்துவ முறையைப் பின்பற்ற இயலும். ஏற்றவகை ஈஸ்ட்ரோஜனைக் கொடுப்பதாலும் அதிக அளவு மருந்தை நீண்டகாலம் கொடுக்காமல் இருப்பதாலும் இம்மருத்துவத்தின் பயனைத் தீமையின்றிப் பெறலாம். தங்கள் குடும்பத்தில் மார்பக நோய்களைப் பெற்றவர்கள் இருப்பின் ஹார்மோனை ஈடுகட்டும் மருத்துவத்தைத் தவிர்த்தல் வேண்டும். எவ்வாறு இருப்பினும், பயனையும் விளைவையும் கருத்திற்கொண்டு மருத்துவத்தைப் பயன்படுத்துதல் நல்லதாகும்.

மார்பகப் புற்று நோய்

உலகெங்கும் இந்நோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகின்றது. அமெரிக்காவில் ஏழு தாய்மார்களுக்கு ஒருவர் என்கிற அளவில் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு என்று கணக்கிட்டுள்ளனர். 1983ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஓர் இலட்சம் தாய்மார்களுக்கு 12 பேர் என்கிற அளவில் இந்த நோய் இருந்ததாகக் கணக்கிட்டுள்ளனர். இப்பொழுது 17.5 பேர் என்கிற அளவில் உள்ளது. இதற்கான காரணங்கள் பலவாறாகப் பேசப்பட்டாலும் நீண்ட நாளைய Hormones உட்கொள்ளுதலும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதிக அளவில் நீண்ட நாள்கள் (5 ஆண்டுகளுக்கு மேல்) ஹார்மோன்ஸ் Hormones உபயோகித்தால் இந்த அபாயம் அதிகரிக்கலாம்.

- உண்மை இதழ் 16 -31. 10 .19

திங்கள், 30 செப்டம்பர், 2019

இதய நோய்களைத் தடுக்கலாம்

அன்றாட வாழ்க்கை முறையில் மாற் றங்கள் செய்தால், இதய நோய்களைத் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதய நோய்களுக்கு வயது, பாலினம், குடும்பப் பின்னணி எனப் பல்வேறு காரணிகள் இருந் தாலும் சில அடிப்படையான வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொண்டால் அவற்றி லிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். இதய நோய்களைத் தடுப்பதற்கான சில ஆலோசனைகள்

புகைபிடிப்பது, புகையிலை பயன் படுத்துவது ஆகிய இரண்டு பழக்கங்களும் இதய நோய்களை உருவாக்குவதற்கான முக் கியக் காரணங்களாகக் கண்டறியப் பட்டுள் ளன. புகையிலையில் இருக்கும் வேதிப் பொருட்கள் இதயம், ரத்த நாளங்களைப் பாதிப்படையச் செய்யும். இந்தப் பாதிப்பு, நாளடைவில் மாரடைப்பு ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. சிகரெட்களில் இருக்கும் கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவில் மாற்றத்தை உருவாக்கும்.

இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. போதுமான ஆக்சிஜன் கொண்ட ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் கடினமாகச் செயல்பட வேண்டியிருப்பதால் இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது. இதய நோய்களைத் தடுக்க வேண்டுமென்றால், புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதுதான் சரியான வழி. எப்போதாவது நண்பர்களுடன் வெளியே செல்லும்போதுதான் புகைபிடிக்கிறேன் என்று சொன்னால் அதுவும் ஆபத்துதான். ஆனால், புகைபிடிப்பதை நிறுத்தியவுடன் இதய நோய்களுக்கான அறிகுறிகள் இயல் பாகவே குறையத் தொடங்கும்.

30 நிமிட உடற்பயிற்சி

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது இதய நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி. உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான எடை, உணவு போன்ற அம்சங்களை இணைத்துக் கொள்ளும்போது அதனால் கிடைக்கூடிய பலன்கள் அதிகம். உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, நீரிழிவு நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த உதவும். ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் சீராக இயங்குவதற்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சியுடன், தோட்டக்கலை, வீட்டு பராமரிப்புப் பணிகள், உங்கள் செல்லப் பிராணியுடன் நடைப் பயிற்சிக்குச் செல்வது என அனைத்துமே உடற்பயிற்சி செய்வது போலத்தான். அதனால் எடுத்தவுடனே கடுமையான உடற்பயிற்சி முறைகளைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையான நடைப்பயிற்சி, தோட்டப் பராமரிப்புப் பணிகள் போன்றவற்றிலிருந்து உங்கள் அன்றாட உடற்பயிற்சியைத் தொடங்கலாம்.

ஆரோக்கியமான உடல் எடை

உடல் எடை அதிகமாக இருப்பது இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. உங்கள் உடல் நிறைக் குறியீட்டைத்   தெரிந்துகொண்டு, அதன்படி உங்கள் உடல் எடையைப் பராமரிப்பது நல்லது. ஆண்களின் இடுப்பளவு 40 அங்கு லத்துக்கு (101.6 செ.மீ) அதிகமாக இருந்தால், அவர் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அதேபோல், பெண்களின் இடுப்பளவு 35 அங்குலத்துக்கு (88.9 செ.மீ) அதிகமாக இருந் தால் அவர்கள் உடல்பருமனால் பாதிக்கப் பட்டிருப்பதாகப் பொருள். அதிக உடல் எடையுடன் இருப்பவர்கள் 3-இலிருந்து 5 சதவீதம் எடையைக் குறைத்தாலும் அது ரத்தச் சர்க்கரை அளவு, நீரிழிவு நோய் அறிகுறிகளைக் குறைக்கும்.

பற்களில் உள்ள கரையை போக்க....

* கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.

* தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

- விடுதலை நாளேடு, 30. 9. 19

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

இன்சுலின் ஊசி நல்லதா??? கெட்டதா

சுகர் நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி💉 போடும் நிலை ஏன் வருகிறது???

இன்சுலின் ஊசி நல்லதா👍???
கெட்டதா👎???

இன்சுலின் ஊசி போடுவதில் இருந்து விடுதலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா??? 😃😃😃

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

ஒரு நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்தால் இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளங்க முடியும்.

நீரிழிவு என்பது நோய் என்ற நிலையில் இருந்து அது ஒரு பன்முக காரணிகள் கொண்ட குறைபாடு என்ற நிலையில் வைத்துப்பார்க்கப்படுகிறது.

it's a deficiency .

அதாவது நம் உடல் ஊட்டச்சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையில் ஏற்படும் குளறுபடி அல்லது குறைபாட்டை நாம் பொதுப்பெயராக "நீரிழிவு" என்று அழைக்கிறோம்

Diabetes is a complex disorder with which our body becomes deficient in handling nutrients from food in a right way.

ஒரு நார்மல் மனிதன்
அவன் உண்ணும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் இருந்தால் அது ரத்தத்தில் க்ளூகோசை கலக்கும்

ரத்தத்தில் இருக்கும் க்ளூகோசை கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் உணரும்.

உணர்ந்த அடுத்த சில நாழிகைகளில்
"இன்சுலினை" ரத்தத்தில் கலக்கும்.

இன்சுலினின் வேலை க்ளூகோசை உடலில் இருக்கும் செல்கள் அனைத்திற்கும் சென்று பசித்திருக்கும் சேய்களுக்கு அன்னை உணவு புகட்டுவது போல பசித்திருக்கும் செல்களுக்கு உணவு ஊட்டும்.

மிஞ்சிய உணவை ( க்ளூகோசை) கல்லீரலில் க்ளைகோஜெனாகவும்  தோலுக்கு அடியே ட்ரைகிளிசரைட் எனும் கொழுப்பாகவும் சேமிக்க உதவும்.
இது பஞ்ச காலத்தில் ஏற்படும் பட்டினிகளின் போது உதவும் என்பதற்காக நமது உடலின் ஏற்பாடு.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு( Fat ) மற்றும் புரதம் (protein) போன்றவை ரத்தத்தில் கலக்கும் போது முறையே ஃபேட்டி அமிலங்களாகவும் அமினோ அமிலங்களாகவும் மாறும்.

அப்போதும் இன்சுலின் சுரக்கும்.
ஃபேட்டி அமிலங்களையும் அமினோ அமிலங்களையும் நமது உடலின் கட்டுமானப்பணிகளுக்கு உபயோகிக்கும் முக்கிய வேலை இன்சுலினுடையது. அதனால் அதை "கட்டுமான மீளுருவாக்க ஹார்மோன்" என்று அழைக்கிறோம். Anabolic harmone.

மேலும் நமது உடலில் புரதத்தை சேமித்து வைத்திருக்கும் தசைகளும், கொழுப்பும் கரையாமல் இருக்க இன்சுலின் அவசியமாகிறது.

இன்சுலின் கொழுப்பு கரைவதை தடுக்கிறது.

இதில் இருந்து நமக்கு புரிந்திருக்கும்
"இன்சுலின்" என்பது நமக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான ஹார்மோன் என்று.

இந்த ஹார்மோன் பிறப்பில் இருந்தே சிலருக்கு முற்றிலுமாக அல்லது  போதுமான அளவு சுரக்காது .
இவர்கள் டைப் ஒன்று நீரிழிவு (TYPE I)  உள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள்

இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சுத்தமாக இல்லாததால் நாம் கட்டாயம் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் யார் கூறினாலும் இன்சுலின் ஊசியை டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள் நிறுத்திவிடக்கூடாது.

அவ்வாறு நிறுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அபாயகரமான நிலைக்கு ஏறிவிடும்.
மேலும் இன்சுலின் இல்லாததால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தில் கீடோன்கள்  ஏறிவிடும்.
நமது செல்களுக்கு க்ளூகோசை ஊட்டவும் இன்சுலின் இல்லை.
புதிதாக உருவாகும் கீடோன்களை சாப்பிட்டும் பழக்கமில்லை. ஆதலால் ஒரே சமயத்தில் க்ளூகோசும் கீடோன்களும் அபாய அளவை தாண்டி கோமா நிலைக்கு அழைத்துச்செல்லும். இதை Diabetic Ketoacidotic coma என்கிறோம்.

பல நேரங்களில் மரணம் சம்பவிக்கும் .எனவே டைப் ஒன்று நீரிழிவு நோயாளிக்கு கட்டாயம் இன்சுலினை மறுக்கக் கூடாது.

இப்போது பெரும்பான்மையான டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கதைக்கு வருவோம்.

டைப் டூ நீரிழிவு எப்படி வருகிறது ?

பொதுவாக முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட காலத்தில் தான் அதிகபட்சமான டைப் டூ நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகின்றன.

எனவே என்னைப் பொறுத்த வரை நான் டைப் டூ நீரிழிவை "இயந்திர தேய்மான நோயாகவே பார்க்கிறேன்"
நமது உடல் ஒரு இயந்திரம் என்றால்

அது இயங்க தேவையான எரிபொருளை விடுத்து வேறொரு எரிபொருளில் இயக்குவதால் ஏற்படும் தேய்மானம் தான் நீரிழிவு நோய் என்பது எனது கருத்து.

மருத்துவ விஞ்ஞானம் டைப் டூ டயாபடிஸ்க்கு முதல் காரணமாக
"ஜீன்கள்" எனும் பிறவிக்குறைபாட்டை குறிக்கிறது.

அடுத்த காரணங்களாக
அதிக கலோரி உணவு
அதிக உடல்  எடை
குறைந்த உடல் பயிற்சி
அதீத மன அழுத்தம்/உளைச்சல்

போன்றவற்றை கூறுகிறது.

நிச்சயம் ஜீன்களின் தாக்கத்தை மறுப்பதற்கில்லை. நம்மால் பெரிதாக மாற்ற இயலாத ஒரு காரணியாக ஜீன்கள் இருக்கின்றன. இதை Non modifiable risk factor  

ஆனால் நம்மால் மாற்ற முடிந்த Modifiable risk factorகளில்
முதன்மையாக நான் கருதுவது

"உணவு"

டைப் டூ நீரிழிவு நோயாளிக்கு ஏன் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாகின்றன?

1. அவரது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சரிவர ரத்த க்ளூகோஸ் அளவுகளை கிரகிக்க முடியாமல் போவது.

இதனால் உணவு சாப்பிட்டபின் ஏறும் சர்க்கரைக்கு ஏற்றாற் போல் இன்சுலின் சுரப்பு இருக்காது.

2. நமது உடலில் உள்ள அத்தனை செல்களிலும் இன்சுலினை இணங்கண்டு கொள்ள ஏதுவாக Insulin receptor கள் இருக்கும். இவற்றின் அளவுகள் செயல்களில் குறைவதால் கணையத்தால் சுரக்கப்பட்ட இன்சுலின் செல்களில் சரியாக வேலை செய்யாது  இதை Insulin resistance என்போம்.

எனவே ஒரு சமயத்தில் இன்சுலினும் குறைவாக சுரந்து , சுரக்கப்பட்ட கொஞ்சூண்டு இன்சுலினும் சரியாக வேலை செய்யாமல் போவதால் ஏற்படுவதே டைப் டூ டயாபடிஸ்

இப்போது இன்சுலின் ஊசி 💉ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது? என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம்

ஒரு சராசரி தமிழருக்கு
40 வயதில் நீரிழிவு கண்டறியப்படுகிறது

அவருக்கு பீட்டா செல்கள் நன்றாக வேலை செய்கின்றன. இன்சுலின் சுரப்பு அளவும் நன்றாக இருக்கிறது. ஆனால் சுரக்கப்பட்ட இன்சுலின் மட்டும் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

ஆகவே முதலில் இன்சுலினை முறையாக வேலை செய்ய வைக்கும் மாத்திரை மட்டும் தரப்படும்.

ஆனால் நம்மவர் அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுகிறார்.
டீயில் சீனியை நிறுத்தவில்லை.
ஆகவே சுகர் கண்ட்ரோல் ஆகவில்லை.

காரணம் இப்போது பீட்டா செல்கள் வேலை செய்வதில் சுணக்கம் காட்டுவதால் உணவு சாப்பிட்டவுடனேயே சுரக்க வேண்டிய இன்சுலின் அளவுகள் குறைகின்றன.

இதை சரி செய்ய பீட்டா செல்களை தூண்டி இன்சுலினை சுரக்கச்செய்யும் மாத்திரைகள் சேர்க்கப்படுகின்றன.

கொஞ்ச காலம் சுகர் கண்ட்ரோல் ஆகிறது.

ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் ரத்த சர்க்கரை அளவுகள் சரியாக இல்லை.

காரணம் இப்போது பீட்டா செல்கள் கிட்டத்தட்ட தங்களது இன்சுலின் சுரப்பை நிறுத்தி விட்டன.
பீட்டா செல்கள் முழுவதும் அழிந்தும் போய் விடும் நிலையும் உண்டு.

இதை Type 2 ->TYPE 1 என்று அழைக்கிறோம்.

அதாவது டைப் டூ நீரிழிவில் இருந்து டைப் ஒன்று நோயாளியாக மாறிவிட்டார் என்று அர்த்தம் .

இப்போது இவருக்கு கணையத்தில் இருந்து இன்சுலினே சுரக்காது.
ஆகவே இன்சுலினை வேலை செய்ய வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது. இன்சுலினை சுரக்க வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது.

இந்த நிலையில் தான் நம் அருமருந்தான இன்சுலின் ஊசிகள் போடப்படுகின்றன.

இன்சுலின் ஏன் மாத்திரையாக இல்லாமல் ஊசியாக இருக்கிறது?

இன்சுலின் என்பது புரதமாக இருப்பதால் மாத்திரையாக போட்டால் நமது ஜீரண மண்டலம் அதை செரிமானம் செய்து  விடும். பலன் இருக்காது. ஆகவே தான் தோலுக்கு அடியில் போடும்  ஊசியாக இன்சுலின் கிடைக்கிறது.

ஆகவே, இன்சுலின் ஒருவருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்றால்

இனிமேல் அவருக்கு உடலில் சுரக்க இன்சுலின் இல்லை  என்று அர்த்தம்.

நமது வீட்டு சூழலையே எடுத்துக்கொள்வோம் 

முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட பல வீடுகளில் கிணறுகள் இருந்தன 

அதில் சில அடிகளில் தண்ணீர் கிடைத்தது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் அதிகமாகவே தண்ணீர் தேவையும் அதிகமாக அதிகமாக ஆள்துளை கிணறுகள் போட்டு உறிஞ்சி எடுத்தோம் 

இப்போது ஆள்துளை கிணறுகளிலேயே காற்று தான் வருகிறது.

உடனே நாம் தண்ணீரை கேன்களிலும் வண்டிகளிலும் வாங்குகிறோம் .

இதே நிலை தான் இன்சுலினுக்கும்..

மாவுச்சத்து அதிகமாக உண்டதால் நீரிழிவு வந்தது.

உடனே மாவுச்சத்தை குறைக்கவில்லை.
மாறாக அதிக மாவுச்சத்து உண்ணும் பழக்கத்திலேயே இருந்தோம்.

நாளாக நாளாக மாத்திரைகள் வேலை செய்யாமல் இன்சுலின் தேவைப்படும் சூழலுக்கு ஆளாகிறோம்

இதுவன்றியும் சில அசாதாரண சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படும்.அவை

1. கடும் நோய் தொற்று
2. விபத்தில் மோசமான காயம்
3. அறுவை சிகிச்சை
4. ஸ்டிராய்டு மருந்து உபயோகிக்கும் போது
5. கர்ப்பிணிகள்

மேற்சொன்ன இடங்களில் நீரிழிவு மாத்திரைகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசி உபயோகிக்கப்படும். மேற்சொன்ன இடங்கள் அனைத்திலும் நம் உடலால் முறையாக இன்சுலின் சுரந்து சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க இயலாது  அல்லது உடல் கட்டுமானப் பணிகளை சரி வர செய்ய இயலாது. எனவே இன்சுலின் கட்டாயம் தேவைப்படுகிறது

இப்போது இந்த கட்டுரையின் கடைசி மற்றும் முக்கிய பகுதிக்கு வருவோம்.

ஒருமுறை போட ஆரம்பித்த இன்சுலின் ஊசியை  டைப் டூ டயாபடிஸ் நோயாளி வாழ்நாள் முழுவதும் நிறுத்த முடியாதா???

இன்சுலின் உங்களுக்கு எதனால் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை அறிந்துமா இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.

நீங்கள் உங்கள் உணவில் மாவுச்சத்தின் அளவை தினமும் 40 கிராமிற்கு உள்ளாக குறைத்தால் உங்கள் கணையம் சுரக்கும் குறைந்த இன்சுலினே போதுமானதாக இருக்கும் நிலை ஏற்படலாம்.

சில நேரங்களில் முற்றிலும் பீட்டா செல்கள் இறந்து விட்டிருந்தால், ஏற்கனவே போடப்பட்டு வந்த இன்சுலின் அளவுகளை விடவும் குறைந்த அளவே போதும் என்ற நிலை வரலாம்.

எனது அனுபவத்தில் பல டைப் டூ நீரிழிவு  நோயாளிகள், குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறி இன்சுலினை நிறுத்தி மாத்திரைகளுக்கு மாறிய கதைகளை கண்டுள்ளேன்.

பலருக்கு பேலியோ உணவு முறைக்கு மாறியும் கூட இன்சுலின் தொடர்ந்து தேவைப்படுகிறது அதையும் காண்கிறோம்.

தேவைக்கு ஏற்ப இன்சுலின் வழங்கப்படும். குறைக்கப்படும். நிறுத்தப்படும்

அந்த முடிவை மருத்துவரிடம் விட்டு விடுங்கள்

இன்சுலின் ஊசி நல்லதா ? கெட்டதா ? என்ற கேள்விக்கான பதில்

நிச்சயம் அது நன்மை செய்வது தான்.
அதிக மாவுச்சத்து அதனால் டைப் டூ நீரிழிவை பெற்று   இன்சுலின் சுரக்காத நிலைக்கு சென்ற மக்களுக்கும் , பிறவி குறைபாடாக டைப் ஒன்று நீரிழிவை பெற்ற மக்களுக்கும் நிச்சயம் இன்சுலின் நிச்சயம் அமிர்தம் தான்.

இன்சுலினால் தினமும் பல கோடி உயிர்கள் காக்கப்படுகின்றன.

இருப்பினும் இன்சுலின் ஊசியின் தேவையின்றி நம்மால்
வாழ முடியும்.

நம் நாவை அடக்கினால் மட்டும் போதும்.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
#இன்சுலின்எனும்அமிர்தம்
#அளவுக்குமிஞ்சினால்அமிழ்தும்நஞ்சே.