SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான மருந்தா கியூபா களம் இறக்கியிருக்கும் மருந்துதான் இன்டர்ஃபெரான்-ஆல்பா-டுபி (Interferon Alfa-2B).
இன்டர்ஃபெர் (interfere) என்னும் குறுக்கீடு செய்வதை குறிக்கும் வகையில்தான் இம்மருந்து இன்டர்ஃபெரான் (interferon) என்று அழைக்கப்படுகிறது.
அது என்னன்னு பாக்குறதுக்கு முன்ன நோயெதிர்ப்பு அமைப்பு (immune system) பத்தி கொஞ்சம் பாக்கலாம்.
நம்மோட உடல்ல இயல்பாகவே நோய் கிருமிகளுக்கு எதிரான இயற்கையான பாதுகாப்பு அமைப்பு இருக்கும். அததான் நாம நோயெதிர்ப்பு அமைப்புனு (immune system) சொல்றோம். இந்த நோயெதிர்ப்பு அமைப்பு மனிதனோட உடம்பை நோய் கிருமிகள்கிட்ட இருந்து பாதுகாக்குது.
மனிதனோட ஒட்டுமொத்த உடலே ஒரு பாதுகாப்பு அரண்தான் என்றாலும் புரதங்கள் (proteins), உயிரணுக்கள் (cells), நிணநீர் நாளங்கள் (lymph vessels) ஆகிய தனிப்பட்ட அமைப்புகளாலும் ஆனது.
நம்மோட தோல் மேல்பரப்பு, உமிழ்நீர், கண்ணீர், மூக்குல இருக்குற முடி, சளி, காதுக்குள்ள இருக்குற மெழுகு, சவ்வு, பிறப்புறுப்பு ஈரப்பதம் இது எல்லாமே நோய்க்கிருமிகளுக்கு எதிரான முதல் தடைகள். இது எல்லாமே கிருமிகளை உடலுக்குள்ள போக விடாம தடுக்குது.
உமிழ்நீர்ல இருக்குற குறிப்பிட்ட நொதி (enzyme), கண்ணீர் திரவம் எல்லாம் நுண்ணுயிர்களோட செல் சுவர்களை அழிக்குது.
மூக்கு வழியா நுழையும் நோய்க்கிருமிகள் மூச்சுக்குழாயில் உள்ள சளியில சிக்கி, மூக்குல இருக்குற முடிகளால வெளியேற்றப்படுகின்றன.
உணவுக்குழாய் வழியா நுழையுற பெரும்பாலான நோய்க்கிருமிகள் வயித்துல சுரக்குற அமிலத்தால (acid) அழிக்கபடுகின்றன.
அதுமட்டுமில்லாம நம்மோட உடம்புல உள்ள பல சளி சவ்வுகளும் உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.
இருமல் மற்றும் தும்மலும் கூட நோய்க்கிருமிகளை அகற்ற உதவும்.
இதெல்லாம் நோய் கிருமிகள் தாக்குறத எதிர்கொள்ளுறதுக்கு உடலுக்கு வெளியிலேயே இருக்கக்கூடிய அமைப்புகள் பற்றியானது.
உடலுக்குள்ளாற தாக்குதல் நடந்தா நம் உடல் எப்படி எதிர்கொள்ளும்?
ஒரு நோய்க்கிருமி உடல் செல்களுக்குள் ஊடுருவியபின் நம் உடல் பல்வேறு கட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுது. அதுல ஒண்ணுதான் இன்டர்ஃபெரான்களை வெளியிடும் நடவடிக்கை.
இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன?
இன்டர்ஃபெரோன்கள் (interferon) வைரஸ்கள் தாக்கிய செல்களால் வெளியிடப்படும் ஒரு வகை சமிக்சை புரதங்களின் கூட்டாகும். இப்படி வைரஸால் பாதிக்கப்பட்ட நம் உடலின் செல்கள் சமிக்சைகளை வெளியிடுவதால் அதன் அருகில் உள்ள நல்ல செல்கள் விழிப்படைந்து தங்கள் பாதுகாப்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துகின்றன.
இன்டர்ஃபெரான்களின் வேலை என்ன?
இதுல இன்டர்ஃபெரான்களோட வேலை என்னனா வைரஸ்களோட செயல்பாட்டுல குறுக்கிட்டு அத பெருகவிடாம தடுக்குறதுதான். அப்படி அது குறுக்கீடு (interfere) செய்றதாலதான் அதுக்கு interferon-னு பெயர் வந்தது.
இன்டர்ஃபெரான்கள் எப்படி குறுக்கீடு செய்கிறது?
ஆராய்வுகளின்படி மூன்று வகையான இன்டர்ஃபெரான்கள் உள்ளன. இதுல வைரஸ்களோ இல்ல பிற கிருமிகளோ நம்மோட உடம்புல ஒரு செல்லை தாக்கினா, அந்த பாதிக்கப்பட்ட செல்கள் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு தான் பாதிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கிறது. அவ்வாறு எச்சரிக்கை சமிக்சையாக அது இன்டர்ஃபெரான் ஆல்பா (1) மற்றும் இன்டர்ஃபெரான் பீட்டாவை (2) வெளியிட்டு எச்சரிக்கிறது.
இந்த எச்சரிக்கை சமிக்சையால் தூண்டப்பட்டு இரத்த வெள்ளை அணுக்கள் இன்டர்ஃபெரான்-காமாவை (3) வெளியிடுகிறது. இந்த இன்டர்ஃபெரான்-காமாவானது வைரஸ்கள், சில பாக்டீரியாக்கள், புரோட்டோசோவன் நோய்த்தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்திக்கு முக்கியமான காரணியாக இருக்கிறது. இது மாக்ரோபாஜ்களை (macrophage) தூண்டுகிறது.
மாக்ரோபாஜ் என்றால் என்ன?
மேக்ரோபாஜ் அப்படீங்குறது ஒரு பெரிய வெள்ளை இரத்த அணு. இது நம்மோட நோயெதிர்ப்பு மண்டலத்தோட ஒருங்கிணைந்த ஒரு பகுதி.
நுண்ணுயிர் தாக்கிய செல்களை கண்டுபிடித்து அதை “சாப்பிட்டு” அழிப்பது இதனோட வேலை. கிருமி தாக்கிய செல்களை முழுமையாக விழுங்கி, அதனை ஜீரணித்து, அதோடு சேர்த்து கிரிமிகளையும் அழிக்குது. இந்த முறைக்கு பாகோசைட்டோசிஸிஸ்-னு (phagocytosis) பெயர். இப்படியாக நோய் தாக்குதலுக்கு உள்ளான நம் உடல் செல்களை அழித்து, நோய் கிருமிகள் நல்ல செல்களை தாக்காத வண்ணம் பாதுகாக்கிறது.
இன்டர்ஃபெரானை எப்பொழுது மருந்தாக பயன்படுத்தின தொடங்கினர்?
ஐசாக் மற்றும் இன்டென்மென் (Isaacs & Lindenmann) ஆகியோரின் ஆராய்ச்சியின் விளைவாக இன்டர்ஃபெரான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இன்டர்ஃபெரான் நேரடியாக வைரசை செயலிழக்க வைக்கிறது என்று நினைத்திருந்தனர். 1957-க்கு பிறகு அவை புரதத்தால் ஆனது என்றும், அது பல உயிரிலியல் செயல்பாடுகளுக்கு காரணமான மரபணுவை தூண்டுகிறது என்றும் கண்டறிந்தனர். அவற்றின் செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே அது பலவிதமான வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது பல காரணங்களுக்காக நிறைவேறவில்லை.
இன்டர்ஃபெரான்களைக் கண்டுபிடித்ததன் மூலம் முதலில் உருவாக்கப்பட்ட உற்சாகத்தின் காரணமாக, பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் குறைந்த அளவிலான இன்டர்ஃபெரான்களை மட்டுமே பிரித்தெடுக்க முடிந்ததாலும், அவையும் சுத்திகரிக்கப்பட்டதாக இல்லாமல் போனதாலும் ஆராய்ச்சிகள் திசு வளர்ப்பு சோதனைகள் அளவிலேயே முடிந்து கொண்டிருந்தன.
1970-களின் நடுப்பகுதியில் பின்லாந்தை சேர்ந்த கான்டெல் மற்றும் அவரது சக ஊழியர்களின் (Cantell and his coworkers), முயற்சிகளால் இரத்த வெள்ளையணுக்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இன்டர்ஃபெரான்கள் தயாரிக்கப்பட்டது. பின்னர் வைரசுகளுக்கு எதிரான சிகிச்சையில் அது குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை அடைந்தது. நம் உடலில் உருவாகும் கிருமிகளை மற்ற நோயெதிர்ப்பு செல்களுக்கு காட்டிக்கொடுக்கும் சமிக்சையாக, மருந்தாக இன்டர்ஃபெரான் புரதங்களை பயன்படுத்த துவங்கினர்.
இன்டர்ஃபெரான் மருந்துகள் எவ்வாறு வேலை செய்கின்றன?
இன்டர்ஃபெரான் மனித உடலில் செலுத்தப்பட்டால் அது வைரஸ்களை சமாளிக்க மனித உடலை தயார்படுத்துகின்றன. நம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வெள்ளையணுக்கள் தூண்டப்பட்டு மேக்ரோபேஜ்கள் நோய் தொற்றுக்கு உள்ளான செல்களை அழிக்க தயாராகிறது. இதனால் வைரஸ்கள் நம் உடலில் பெருகி விடாதபடி அவை கட்டுப்படுத்துகின்றன.
இன்டர்ஃபெரான் மருந்துகள் எந்த நோய்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது?
இன்டர்ஃபெரான் மருந்துகள் முதலில் புற்றுநோய் சிகிச்சைக்காக வெளிவந்தன. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் சிகிச்சையிலும் இன்டர்ஃபெரான்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இன்டர்ஃபெரான் மருந்துகள் தயாரிப்பில் கியூபாவின் பங்கு என்ன?
கியூபா தனது முதல் இன்டர்ஃபெரானை 1981 ஆம் ஆண்டில் தயாரித்தது. அதே ஆண்டில் கியூபா டெங்கு நோய்க்கு எதிரான சிகிச்சையில் இன்டர்ஃபெரானை பயன்படுத்தியது. பின்னர் 1986-ஆம் ஆண்டில் ‘மறுசீரமைப்பு’ (recombinant) முறையில் (man-made) இன்டர்ஃபெரான் ஆல்ஃபா-2பி (interferon Alfa-2B) தயாரிக்கப்பட்டது.
கோவிட் 19 (COVID-19)-க்கான மருந்துகள் என்ன?
கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் எந்த மருந்து வெற்றிகரமாக நோயை எதிர்த்து போராட முடியும் என்பது இன்னும் தெளிவாக யாரும் வரையறுக்கவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருந்துகளை சேர்க்கை முறையில் கலந்து பரிசோதனை முயற்சி செய்கின்றன. உலக சுகாதார மையம் (WHO) சமீபத்தில் நான்கு மருந்து கலவைகளை அறிமுகப்படுத்தியது.
1. வைரசுகளுக்கு எதிரான ரெம்டெஸ்விர் (remdesivir)
2. மலேரியாவுக்கு எதிரான குளோரோகுயின் (அல்லது தொடர்புடைய ஹைட்ராக்ஸி குளோரோகுயின்) (chloroquine (or the related hydroxychloroquine))
3. இரண்டு ஹச்.ஐ.வி மருந்துகளின் கலவை
4. அதே இரண்டு ஹச்.ஐ.வி மருந்துகளின் கலவையோடு சேர்த்து இன்டர்ஃபெரான் பீட்டாவுடன்.
இன்டர்ஃபெரான் ஆல்ஃபா-2பி (interferon Alfa-2B) மருந்தை பயன்படுத்திய நாடுகள் எவை?
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கியூபாவின் கூட்டு முயற்சியோடு இன்டர்ஃபெரான் ஆல்ஃபா-2பி-யை கோவிட்-19-னை எதிர்த்துப் போராட பயன்படுத்தியது. உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியின் நட்சத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மருந்து எச்.ஐ.வி, மனித பாப்பிலோமா வைரஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் சி சிகிச்சையில் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ்களுக்கு ஒத்த குணாதிசயங்களைக் காட்டும் வைரஸ்களுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த கியூபன் மருந்து சிறந்ததாக விளங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. COVID-19 ஐ எதிர்த்து கியூபாவின் மருந்துகளை பயன்படுத்துவதை அயர்லாந்து பரிசீலித்து வரும் நிலையில், கியூபா ஏற்கனவே இத்தாலியில் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட தங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அவசர குழுவை அனுப்பியுள்ளது நாம் அறிந்ததே.
பதிவு எழுத்தாளர் ஜீவா - முனைவர் நுண்ணுயிரியல் துறை.
- திருப்பூர் குணா முகநூல் பக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக