கல்லீரல் மார்புக் கூட்டின் கீழ், வலது புறத்தில் அமைந்துள்ள ஓர் உறுப்பாகும். மார்பு, வயிறு இடைச் சுவருக்குக் கீழே (உதரவிதானம் _ diaphragm) ஒரு பெரிய உறுப்பாக இது இருக்கிறது. நம் உடலில் உள்ள உறுப்புகளில், மிகப் பெரிய உறுப்பு இது. செம்பழுப்பு நிறத்தில் 1.4 முதல் 1.6 கிலோ எடையுள்ளது கல்லீரல். கல்லீரலின் கீழ்ப்பகுதியில் பித்தப்பையும் (Gall bladder), இடதுபுறத்தில் இரைப்பையும் இருக்கின்றன. நம் உடலில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலை என்றே இந்த உறுப்பை நாம் சொல்லலாம். கல்லீரல் வலது, இடது மடல்களாகப் (Lobes) பிரிக்கப்பட்டுள்ளது. இவை 8 பிரிவுகளாகப் பிரிந்து அமைந்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 1000 ‘சிறு மடல்கள்’ (Lobules) உள்ளன. ஒவ்வொரு சிறு மடலிலிருந்தும் ஒரு சிறு குழாய் (Duct) வெளியே வருகிறது. இச்சிறு குழாய்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து “கல்லீரல் பொதுக் குழாயாக’’ (Common Hepatic duct) மாறுகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் ‘பித்தநீரை’ (Bile), பித்தப்பைக்கும் (Gall bladder),மேல் சிறு குடலுக்கும் (Duodenum) செலுத்தும் வழியாக கல்லீரல் பொதுக் குழாய் விளங்குகிறது. மகாதமனி (Aorta) யிலிருந்து பிரியும் ஒரு பெரும் தமனியான ‘கல்லீரல் தமனி’ (Hepatic Artery) கல்லீரலுக்கு நல்ல இரத்தத்தை எடுத்துச் செல்கிறது ‘கல்லீரல் சிரை’ (Hepatic Portal Vein) இரைப்பை, மண்ணீரல் மற்றும் கணையத்திலிருந்து செரிமான ஊட்டச்சத்து நிறைந்த இரத்தத்தை உடலுக்குக் கொண்டு செல்கிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளின் அளவினை நிர்ணயித்து, அதற்கேற்ப உடலுக்குள் செலுத்தும் செயலையும் கல்லீரல் செய்கிறது. நம் உடலில் உள்ள இரத்தத்தின் அளவில் 13% கல்லீரலில் எப்பொழுதும் இருக்கும். இரத்தம் அதிகம் உள்ள உறுப்புகளில் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். கல்லீரலின் அடிப்படை உறுப்புகள் “கல்லீரல் செல்களால்’’ (Hepatocytes) ஆனவை. இந்தச் செல்கள், கல்லீரலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டால் உடனடியாக அதைச் சீராக்கும் தன்மையுடையது. இச்சீராக்கல் மிகவும் எளிதாகவும், வேகமாகவும் நிகழும். ஆனால், நீண்டகால கல்லீரல் பாதிப்புகள் சீராக்க முடியாத நிலைமை ஏற்படுத்தும்.
கல்லீரல் செயல்பாடுகள்: மனித உடல் நல்ல முறையில் செயல்படத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்கு வகிக்கிறது. அதனாலேயே நம் உடலில் உள்ள பெரிய தொழிற்சாலையாகக் கல்லீரல் கருதப்படுகிறது. அதன் செயல்பாடுகள் அதிகளவு உடல் இயக்கத்திற்குக் காரணம்.
பித்தநீர் சுரப்பு: பித்த நீர் கல்லீரலில் சுரக்கிறது. பார்ப்பதற்கு கரும்பச்சை நிறத்தில், மஞ்சள் மற்றும் பழுப்பு நிற நீராக இருக்கும். இச்சுரப்பு, சிறுகுடலின் உணவு செரிமானத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றது. கல்லீரலில் உற்பத்தியாகி, பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு, பித்த நாளத்தின் வழியே முன் சிறுகுடலை அடையும். பித்த நீரில் நீர், கோழைப் பொருள்கள், உப்புகள், கொலஸ்ட்ரால், பித்த நிறமிகள், பித்த நீர் உப்புகள் போன்றவை உள்ளன. பித்த நீர் உப்புகள் பெரிய கொழுப்புப் பொருள்களை சிறிய கொழுப்புத் திவலைகளாக மாற்றுகின்றன. மிகப் பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாக கல்லீரல் திகழ்கிறது. உடலின் உள்சூழலைக் கட்டுப்படுத்தி சமநிலையில் வைக்கும் பெரும் பொறுப்பை கல்லீரல் செய்கிறது. வளர்சிதை மாற்றங்களின்(Metabolism) போது உண்டாகும் நச்சுத் தன்மையை அகற்றுதல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்குத் தேவையான உயிர் வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன. வளர்சிதை மாற்ற நிகழ்வுகள், மாவுச் சத்தை கிளைகோஜனாக மாற்றிச் சேமிப்பை முறைப்படுத்துதல், உடலில் உற்பத்தியாகி, இரத்தத்தில் கலந்துள்ள சிவப்பணுக்களை (முதிர்ந்ததும்) சிதைக்கும் பணியையும் கல்லீரல் செய்கிறது. மற்றும் பல வகையான “ஊக்கி நீர்’’ (Hormones) களை சுரக்கிறது. கொழுப்புத் திசுக்களின் செரிமானத்திற்கும் கல்லீரல் உதவுகிறது. உடலுக்குச் செல்லும் மருந்துகளின் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ள மருத்துவ மூலக்கூறுகளைச் சிதைத்து வெளியேற்றும் பணியை இந்த அவயவமே செய்கிறது. சிறு மற்றும் சிக்கலான மூலக்கூறுகளைத் தொகுத்தல் மற்றும் சிதைத்தல் உள்ளிட்ட பல முக்கிய உயிர் வேதியியல் (Bio-Chemistry) )செயல்பாடுகளையும் கல்லீரல் செய்கிறது. சிவப்பணுக்கள் சிதைக்கப்படும்போது, அதில் உள்ள இரும்புச் சத்தை சேமித்தல், சில தனிமங்கள், உயிர்ச் சத்துகள் சேமிப்பு, கொழுப்பு மற்றும் புரதச் சத்துகளைச் சேமித்தல், சில ஊக்கி நீர்கள் சேமிப்பு, யூரியா உற்பத்தி, இரத்தப் புரத நீர் (Plasma)உற்பத்தி, உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைத்து நொதியங்களை (Enzymes) உற்பத்தி செய்வதிலும், அதன்மூலம் உணவு செரித்தலை சீராக வைக்கும் செயலையும், இரத்த உறைவை (Clotting) உண்டாக்கும் புரதங்களை உற்பத்தி செய்யும் பணியையும், காயங்களை ஆற்றும் செயல்திறனையும் கல்லீரல் செய்கிறது. கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய்களையும், மற்றும் பித்த நீர்க் குழாய்களையும் வலை போன்ற அமைப்புடன் பெற்றுள்ளது. முதிர்ச்சியடைந்த இரத்தச் சிவப்பணுக்களைச் சிதைக்கும்பொழுது, அதிலிருந்து “பிலிருபின்’’ (Bilirubin) எனும் கழிவுப் பொருளை நீக்கி பித்த நீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீர் பித்த நீர்க் குழாய் (Bileduct) வழியே சிறுகுடலுக்குச் செலுத்தப்படுகிறது. கொழுப்பு உணவுகளின் தேவையற்ற மூலக் கூறுகளைக் கரைத்து வெளியேற்றும் பணியையும் கல்லீரல் செய்கிறது. உணவு செரிமானத்தில் உருவாகும் எளிய வடிவிலான ஊட்டச் சத்துகள் தேவையான அளவுக்கு மேல் இருக்கும்பொழுது, வேறு வடிவமாக மாற்றப்பட்டு, கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. பின்பு உடல் தேவைக்கு ஏற்ப சேமிக்கப்பட்டுள்ள ஊட்டச் சத்துகள் மீண்டும் எளிய வடிவில் மாற்றப்பட்டு, இரத்தத்தில் செலுத்தப்பட்டு, தேவைப்படும் உறுப்புகளுக்குச் செலுத்தப்படும். பொதுவாக எல்லா குடல் பாகங்களிலிருந்தும், உடலுக்குள் நுழையும் வெளிப்பொருள்கள் யாவற்றையும், “கல்லீரல் இரத்த ஓட்டம்’’ (Portal Circulation) மூலம் கல்லீரல் தன்னுள் இழுத்துக் கொள்ளும். இதுபோன்ற பல்வகைச் செயல்பாடுகளை உடலின் பெரும் தொழிற்சாலையான கல்லீரல் செய்கிறது.
(தொடரும்)
- உண்மை இதழ், மார்ச் 16- 31. 21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக