புதன், 1 செப்டம்பர், 2021

கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை... தவிர்க்க வேண்டிய உணவுகள்...


நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.

கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்போது மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். சருமம் மற்றும் கண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். ரத்த சிவப்பு அணுக்கள் உடைந்துபோகும்போது மஞ்சள் நிறமியான பிலிரூபின் வெளியாகுவது மஞ்சள் நிற மாற்றத்திற்கு காரணமாகும். இது கல்லீரலின் ஆரோக்கியத்தின் மோசமான அறிகுறியாகவும் அமையும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் மருந்து மற்றும் உணவு பழக்கங்கள் மூலம் மஞ்சள் காமாலையை குணப்படுத்திவிடலாம். வேறு சில நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.

கொழுப்பு: மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணெய் சேர்க்கப்படாத உணவை உட்கொள்வது நல்லது. ஏனெனில் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கு வழிவகுக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கச்செய்துவிடும். குறிப்பாக வெண்ணெய், பால் பொருட்கள், இறைச்சி போன்ற நிறைவுற்ற கொழுப்பு கலந்த உணவுகள் கல்லீரலுக்கு மிகவும் மோசமானவை. அதற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் மஞ்சள் காமாலை இருக்கும்போது குறைவாகவே பயன்படுத்தவேண்டும்.

சர்க்கரை: இனிப்பு பிரியர்களுக்கு மஞ்சள் காமாலை கடினமான காலகட்டமாகவே அமையும். ஏனெனில் அந்த சமயத்தில் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச்செய்யும். கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும். ஆதலால் எந்தவகையிலும் சர்க்கரை கலக்கப்பட்ட உணவை தவிர்ப்பது நல்லது.

உப்பு: உணவில் அதிகம் உப்பு சேர்த்தால் அது உடலில் உள்ள நீரில் படிந்துவிடும். கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதில் இருக்கும் சோடியம்தான் அதற்கு காரணம். ஆதலால் கல்லீரலை பாதுகாக்க உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்புக்கு பதிலாக வெங்காய தூள், பூண்டு தூள் சேர்த்து சுவையை மேம்படுத்தலாம்.

இரும்பு: மஞ்சள் காமாலை இருக்கும்போது உடலில் இரும்புச்சத்து அதிகரிப்பது கல்லீரலுக்கு மோசமானது. இரும்புச்சத்து முக்கியமானது என்றாலும் இந்த காலகட்டத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதத்தில் இரும்புச்சத்து கலந்திருக்கும். ஆதலால் புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்.

காய்கறிகள்: கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலி பிளவர், பிராக்கோலி, எலுமிச்சை, கீரை, பீன்ஸ், பூண்டு, மஞ்சள், அவகொடோ, ஆப்பிள், வால்நெட் போன்றவை கல்லீரலின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

தைராய்டு ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்


தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு உறுப்பில் பாதிப்பு இல்லாத மனிதர்களே இல்லை. நவீன மாற்றங்களின் பின்னால் ஓடி, பாரம்பரிய உணவு, பழக்கவழக்கங்களைக் கைவிட்டதன் விளைவாக ஆரோக்கியம் இழந்து, நிம்மதியை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல நூறு நோய்களில் தைராய்டு நோயும் ஒன்று.

கழுத்தின் முன் பகுதியில் ட்ரக்கியா எனப்படும் மூச்சுக்குழலுக்கு மேலே, குரல்வளைக்கு கீழே லாரிங்ஸ் எனப்படும் குரல்வளையின் இரண்டு பக்கவாட்டு பகுதிகளிலும் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி தான், தைராய்டு சுரப்பி. இரண்டு பக்கமும் இணைந்து காணப்படும். இவற்றை இணைப்பது இஸ்த்மஸ் என்ற பூசந்தி. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம்வரை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும்.

இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தை போலிருக்கும். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தைராய்டு சுரப்பி வேலையை தொடங்கி விடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துகளை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இச்சுரப்பியின் ஹார்மோன்கள் மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு பெரும் உதவி செய்கின்றன.

தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் 20 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அயோடின் சத்து குறைபாடு, தைராய்டு சுரப்பியில் வீக்கம், தொற்றுநோய் (வைரஸ்) கிருமி தாக்குதல், இதய நோய்கள், மனநோய், வலிப்பு நோய், புற்று நோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவு, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பி பாதிப்பு, பிறவி தைராய்டு சுரப்பி குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது, மூளையில் உள்ள அய்போதலாமஸ் ஹார்மோன் உற்பத்தி குறைபாடு, உணவு முறை மாற்றங்கள், மனஉளைச்சல் போன்றவற்றால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படுகிறது.

பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மை, தீராத மலக்கட்டு பிரச்சினை, முடி உதிர்தல், தோல் வறட்சி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், குறைந்த அளவு இதயத்துடிப்பு, உடல் பருமன், கை, கால் சில்லிடல் போன்ற அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்நோய் இருக்கலாம்.

உடல் பலவீனம், வேகமான இதயத் துடிப்பு, தூக்கமின்மை, உடலில் அரிப்பு, முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, திடீரென உடல் எடை குறைதல், ஆண்களின் மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கை, கால் நடுக்கம், வயிற்று பிரச்சினை, அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

தைராய்டு பாதிப்பு வராமல் தடுக்க, சத்துள்ள சுத்தமான பச்சை காய்கறிகள், கனிகள், கீரைகள், சரிவிகித உணவு, உடல் உழைப்பு, ஏதாவது ஒரு உடற்பயிற்சி, ஆசனங்கள், மன மகிழ்ச்சி ஆகியவற்றை வாழ்க்கையில் சாத்தியப்படுத்தினால் தைராய்டு நோய் மட்டுமல்ல, எந்த நோயும் வராது. அப்படியே வந்தாலும் எளிதில் தீர்க்க முடியும்.