தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு உறுப்பில் பாதிப்பு இல்லாத மனிதர்களே இல்லை. நவீன மாற்றங்களின் பின்னால் ஓடி, பாரம்பரிய உணவு, பழக்கவழக்கங்களைக் கைவிட்டதன் விளைவாக ஆரோக்கியம் இழந்து, நிம்மதியை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல நூறு நோய்களில் தைராய்டு நோயும் ஒன்று.
கழுத்தின் முன் பகுதியில் ட்ரக்கியா எனப்படும் மூச்சுக்குழலுக்கு மேலே, குரல்வளைக்கு கீழே லாரிங்ஸ் எனப்படும் குரல்வளையின் இரண்டு பக்கவாட்டு பகுதிகளிலும் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி தான், தைராய்டு சுரப்பி. இரண்டு பக்கமும் இணைந்து காணப்படும். இவற்றை இணைப்பது இஸ்த்மஸ் என்ற பூசந்தி. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம்வரை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும்.
இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தை போலிருக்கும். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தைராய்டு சுரப்பி வேலையை தொடங்கி விடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துகளை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இச்சுரப்பியின் ஹார்மோன்கள் மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு பெரும் உதவி செய்கின்றன.
தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் 20 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அயோடின் சத்து குறைபாடு, தைராய்டு சுரப்பியில் வீக்கம், தொற்றுநோய் (வைரஸ்) கிருமி தாக்குதல், இதய நோய்கள், மனநோய், வலிப்பு நோய், புற்று நோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவு, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பி பாதிப்பு, பிறவி தைராய்டு சுரப்பி குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது, மூளையில் உள்ள அய்போதலாமஸ் ஹார்மோன் உற்பத்தி குறைபாடு, உணவு முறை மாற்றங்கள், மனஉளைச்சல் போன்றவற்றால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படுகிறது.
பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மை, தீராத மலக்கட்டு பிரச்சினை, முடி உதிர்தல், தோல் வறட்சி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், குறைந்த அளவு இதயத்துடிப்பு, உடல் பருமன், கை, கால் சில்லிடல் போன்ற அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்நோய் இருக்கலாம்.
உடல் பலவீனம், வேகமான இதயத் துடிப்பு, தூக்கமின்மை, உடலில் அரிப்பு, முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, திடீரென உடல் எடை குறைதல், ஆண்களின் மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கை, கால் நடுக்கம், வயிற்று பிரச்சினை, அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
தைராய்டு பாதிப்பு வராமல் தடுக்க, சத்துள்ள சுத்தமான பச்சை காய்கறிகள், கனிகள், கீரைகள், சரிவிகித உணவு, உடல் உழைப்பு, ஏதாவது ஒரு உடற்பயிற்சி, ஆசனங்கள், மன மகிழ்ச்சி ஆகியவற்றை வாழ்க்கையில் சாத்தியப்படுத்தினால் தைராய்டு நோய் மட்டுமல்ல, எந்த நோயும் வராது. அப்படியே வந்தாலும் எளிதில் தீர்க்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக