மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (92)

ஜனவரி 1-15,2022 உண்மை இதழ்

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

நோயின் அறிகுறிகள்:

*              தசை வாதம் (Muscle Paralysis)

*              அதிக நீர்மம் வெளியேற்ற முடியாத நிலையில் ஏற்படும் குறைபாடுகள்.

*             கைகள், கால்கள், முகம், கணுக்கால்கள், பாதம் ஆகியவற்றில் நீர் கோத்து விடும். அதனால் அந்த இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              நுரையீரல்களிலும் நீர் கோத்து விடுவதால் மூச்சுத் திணறல் உண்டாகும்.

*              சிறுநீரக நீர்க்கட்டிகள் (Polycystic kidneys) சேரும். அதிக நீர், கல்லீரலுக்கும் பரவும்.

*            அதனால் முதுகு, உடலின் பக்கவாட்டில் வலி ஏற்படும்.

*              சிறுநீரகங்கள் “எரித்ரோபயோடின்’’ (Erythropiotin) என்ற ஊக்கி நீரை (Hormone) சுரக்கும். இந்த ஊக்கி நீர், எலும்பு மஜ்ஜைகளைத் தூண்டிவிட்டு சிவப்பணுக்-களை உற்பத்தி செய்து, இரத்தத்தில் கலக்கும். சிறுநீரகப் பாதிப்பு சிவப்பணுக்கள் உற்பத்தியைக் குறைக்கும். அதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன், சிவப்பணுக்கள் மூலம் செல்வது தடைபடும். இதனால், “இரத்த சோகை’’ (Anaemia) ஏற்படும்.

*             இரத்த சோகை ஏற்படுவதால் களைப்பு உணடாகும்.

*              நினைவாற்றல் குறையும்.

*            கவனக் குறைவு ஏற்படும்.

*             தலைச்சுற்றல் உண்டாகும்.

*              இரத்த அழுத்தம் குறையும்.

*              இயல்பான நிலையில் புரதங்கள் அளவில் பெரியதாக இருப்பதால் சிறுநீரக வடிப்பான்கள் மூலம் வெளியேறாது. ஆனால், வடிப்பான்கள் சேதமடைவதால் புரதங்கள் சிறுநீர் மூலம் வெளியேறும் (Micro proteinaemia) அதனால்,

*             நுரையுடன் சிறுநீர் வெளியேறும்.

*              கணுக்கால், பாதங்கள், கைகள், முகம், வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              பசியின்மை

*              உணவு எடுத்துக் கொள்வதில் ஆர்வமின்மை

*             தோல் கருத்துப் போதல்

*            இரத்தத்தில் புரதங்கள் தேங்குதல்

*              உயிர்க் கொல்லி மருந்துகள் (Anti-biotics-Penicillin) பென்சிலின் போன்றவை ‘வலிப்பு’ (Seizures) உண்டாக்கும்.

நோயறிதல் – ஆய்வுகள்: நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பை 5 அடுக்குகளில் அளவீடு செய்வார்கள். வடிப்பான்கள் (Glomerular Filtration rate (GFR) வடிகட்டும் தன்மைக்கேற்ப இது அளவிடப்படும். 1. வடிப்பான்கள் பாதிப்பு லேசாக இருப்பின், இது முதல் நிலையாகக் கருதப்படும். 2, 3ஆம் நிலைகளில் அதிக அளவு மருத்துவக் கண்காணிப்பு கொடுத்துக் கவனிக்க வேண்டும். நோயாளி குணமடையும் வாய்ப்பு அதிகம். 4, 5ஆம் நிலைகளில் நோயின் கடுமை அதிகமாக இருக்கும். தீவிர மருத்துவம் செய்ய வேண்டிய நிலை. 5ஆம் நிலையில் வடிப்பான் செயலிழப்பு மிகவும் ஆபத்தானது. சிறுநீரகங்கள் மாற்றும் மருத்துவம் செய்ய வேண்டிய நிலை இந்நிலை.

வடிப்பான் வடி திறனளவு: (Glomeruler Filtration Rate):  வடிப்பான் வடிதிறன் பல நிலைகளில் மாறுபடும். வயது, பாலினம், உடல் அளவு, சூழ்நிலை ஆகிய நிலைகளில் வேறுபடும். இது மிகவும் இயல்பானது. ஆனால், சிறுநீரக நோய் மருத்துவர்கள் இதை ஒரு சரியான அளவீடாகக் குறிப்பிடுகின்றனர். தேசிய சிறுநீரக நிறுவனம் (National Kidney Foundation) வடிப்பான் வடிதிறன் அளவீட்டுக் கருவியை தேவைப்பட்டால் கொடுக்கின்றனர். இரத்தத்தில் “கிரியேட்டினின்’’ அளவீடு, அறிவதற்கு வடிதிறன் கருவியைப் பயன்படுத்தத் தேவை.

யூரீமியா: (Uremia):  சிறுநீரகத் துறை வளர்ச்சியடையும் முன், சிறுநீரகச் செயலிழப்பு, யூரீமியா (Uremia) என்றே அழைக்கப்பட்டது. இரத்தத்தில் யூரியா கலப்பதையே அவ்வாறு அழைத்தனர். 1847 வரை இரத்தத்தில் சிறுநீர் கலந்து விடுவதாக மருத்துவர்கள் நினைத்தனர். சிறிதளவோ, அல்லது சிறுநீரோ போகாததால் மருத்துவர்கள் அவ்வாறு நினைத்தனர். சிறுநீரகத் துறையின் வளர்ச்சி இந்த நிலைப்பாட்டை மாற்றியது. இன்று சிறுநீரகச் செயலிழப்பின் ஓர் அறிகுறியாகவே யூரீமியா குறிப்பிடப்படுகிறது.

அடிப்படை ஆய்வுகள்:

*             இரத்தத்தில் அணுக்கள், சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள் எண்ணிக்கை ஆய்வு. (சிவப்பணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, வெளுத்த தன்மை, வெள்ளணுக்கள் அளவு கூடுதல் போன்றவை நோய்த் தன்மையை வெளிப்படுத்த உதவும்.)

*              இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவு கூடியிருந்தால், நோய் உள்ளதை அறிய முடியும்.

*             மீள்ஒலி பதிவில் (Ultra Sonogram) சிறுநீரகங்கள் சிறுத்துத் தெரியும்.

*              ஊடுகதிர் கணினி வரைவி (Computerised Tomography) மூலம் சிறுநீரகங்கள் அமைப்பையும், மற்ற சிறுநீரகங்களின் பாகங்களில் உள்ள குறைபாடுகளையும் எளிதில் கண்டறியலாம்.

மருத்துவம்: நீரிழிவு நோய் முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்கும், நீரிழிவு நோய் அற்றவர்களுக்கும், குறைந்த அளவு புரதச் சத்துள்ள உணவுகள், நோயின் தீவிரத் தன்மையைக் குறைக்கும். ஆனால், இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு இது பயனளிக்காது. அசைவ உணவுகள், அதிகப் புரதச் சத்துள்ள உணவுகள் நோயைத் தீவிரப்படுத்தும்.

மருந்துகள்: வலி நீக்கி மருந்துகள், சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளை அறவே தவிர்க்க வேண்டும். சிறுநீரகச் செயலிழப்பால் ஏற்படும் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்தல் தேவையாகும். நிறமிகள் (Dye) மூலம் செய்யும் சோதனைகளைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரின் நீர்த்த தன்மையை அதிகமாக்கும் மருந்துகளை (Diuretics)

மருத்துவர்கள் கொடுப்பர்.

(தொடரும்…)