வியாழன், 1 பிப்ரவரி, 2018

பாதங்களில் வரும் பித்த வெடிப்புக்கு காரணமென்ன?

பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்த வெடிப்புகளைப் பித்த வெடிப்புகள் என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் உள்ள வெடிப்புகள் அதிகமாகவும், கடுமையாகவும், அடியில் உள்ள வெடிப்புகள் சற்றே குறைவாகவும் காணப்படும்.

பொதுவாக, பித்த வெடிப்பு கடுமையான பனிக் காலத்திலும், கோடையிலும் தொல்லை கொடுக்கும்; உடற்பருமன் இருந்தால் இது அடிக்கடி ஏற்படும். வெறும் காலில் நடப்பவர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். அல்லது பொருத்தமில்லாத காலணி களை அணிந்தாலும் இது ஏற்படலாம். நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பது பித்த வெடிப்பை வரவேற்கும்.

காலணிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் பித்த வெடிப்புக்கு ஒரு காரணமாகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால், இந்த வெடிப்புகள் நிரந்தரமாகவே தொல்லை கொடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்தாலும், தைராய்டு சுரப்புக் குறைபாடு, சொரியாசிஸ் நோய் போன்றவை இருந்தாலும் இதே நிலைமைதான்.

இந்தக் காரணங்களில் உங்களுக்கு எது ஒத்துப்போகிறது என்று பாருங்கள். அந்தக் காரணத்தைக் களைந்துவிட்டால், பித்த வெடிப்புகளும் விடைபெற்றுவிடும்.

பித்த வெடிப்புகளை ஆரம்பத்திலேயே கவனித்து தகுந்த சிகிச்சை பெற்றுக் கொண்டால், விரைவில் குணமாகும். காலம் தாழ்த்தினால், வெடிப்புகள் சருமத்தையும் தாண்டி ஆழமாகச் சென்றுவிடும். அல்லது அவற்றில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். அப்போது வலி ஏற்படும். காய்ச்சல், நெறி கட்டுதல், ரத்தம் வருதல் போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்து தொல்லைகள் அதிக மாகும். அதிலும் நீரிழிவு நோய் இருந்தால், பித்தவெடிப்புகள் ஆறுவதற்கு நாளாகும்.
- விடுதலை நாளேடு,29.1.18

மாரடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உணவுகள்!



மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவும் உணவு வகைகளைத்தான் பெரும்பாலும் மார டைப்பு வந்தவருக்கும் பரிந்துரை செய்வது வழக்கம். என்ன, மாரடைப்பு வருமுன்னர் உணவில் அவ்வளவாக கவனம் செலுத்தி யிருக்க மாட்டோம். ஆயுளில் பாதியைக் கழித்து விட்டோம். இனிமேல் வாழ்க்கை முறையை மாற்றி என்ன செய்யப் போகிறோம்? என்று அலுத்துக்கொண்டே சாப்பிட்டிருப்போம். மாரடைப்பு வந்த பின்னர் உயிர் பயம் வந்திருக்கும். அப்போது கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு சாப்பிடுவோம். அவ்வளவுதான் வித்தியாசம்!

இதயம் காக்கும் உணவு வகைகள்

அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, முழுத்தானியங்கள். நார்ச்சத்து மிகுந்த பயறு, பட்டாணி வகைகள், ஓட்ஸ், துவரை, அவித்த கொண்டைக்கடலை. வெண்ணெய் நீக்கப் பட்ட பால், மோர். கீரைகள், பச்சைக் காய் கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண் டைக்காய், வெள்ளைப்பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக் கோலி ஆகியவை இதயம் காக்கும் உணவு வகைகள்.

அசைவம் விரும்புபவர்கள் தோல் நீக் கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும் கோழி இறைச்சியையும் எண்ணெய்யில் பொரிக் காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.

தினமும் 500 கிராம் பழம் அவசியம். பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக கிரீன் டீ குடிக்கலாம்.

எண்ணெய் விசயத்தில் கவனம் தேவை. செக்கு எண்ணெய்தான் நல்லது. வாரம் ஒரு வகை எண்ணெய் என சுழற்சிமுறையில் பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு 15 மி.லி. எண்ணெய் போதும்.

வேண்டாம் என சொல்லுங்கள்!

பாமாயில், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி. தயிர், வெண்ணெய், பாலாடை, பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த, பொரித்த உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். செயற்கை இனிப்புகள், ‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

உப்பின் அளவு எச்சரிக்கை!

உணவில் உப்பின் அளவு முக்கியம். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதும். நாம் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக உப்பு நம் உடலுக்குள் சேர்வதைவிட, பல உணவு வகைகளில் மறைந்திருக்கும் உப்பு நமக்கே தெரியாமல் சேர்வதுதான் அதிகம். முக்கிய மாக, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப் படும் உணவுகள் போன்றவற்றில் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் உப்பு உள்ளது. இவற்றைத் தவிர்க்க வேண்டும். தவிரவும் ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், வடாம், சிப்ஸ் போன்ற உப்பு மிகுந்த உணவைக் குறைத்துக்கொள்வதும் நல்லது.

- விடுதலை நாளேடு,29.1.18

திங்கள், 22 ஜனவரி, 2018

இளமையில் முடி உதிர்தல்- நரை வருவது ஏன்?


இளம் வயதிலேயே முடி உதிர்வதற்கு என்ன காரணம் எனக் கண்டறிய வேண்டும். அதைச் சரிப்படுத்தினால் முடி உதிர்வது நின்றுவிடும். உங்கள் வயதில் முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்களைப் பார்ப்போம்.

முடி வளர்வதற்குப் புரதச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, துத்தநாகச்சத்து, அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயோட்டின் மற்றும் வைட்டமின்  சி சத்துகள் தேவை. இவற்றில் ஏதே னும் ஒரு சத்து குறைந்தாலும் முடி உதிரத் தொடங்கி விடும். அதிலும் இரும்பும் புரதமும் உடலின் தேவைக்கு இல்லையென்றால், முடி உதிர்வது உறுதி.

ஈஸ்ட்ரோஜன், தைராக்சின் போன்ற ஹார் மோன்களின் குறைபாடுகளால் தலைமுடி உதிர் கிறது. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைமுடி உதிரும். சமீபத்தில் டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை நோய் போன்றவை பாதித்தி ருந்தால் தலைமுடி உதிரலாம். முடி உதிர்வதற்கு பொடுகும் ஒரு முக்கியக் காரணம்தான்.
குளித்தபின் ஈரம் காய்வதற்குள் தலைவாருதல், வீரியம் மிகுந்த அல்லது தரம் குறைந்த ஷாம்பு களைப் பயன்படுத்துதல், அடிக்கடி முடியை பிளீச் செய்தல், தரமற்ற தலைச்சாயங்களைப் பூசுதல், கடினமான சீப்புகளைப் பயன்படுத்துதல், ஹேர் டிரையரை அதிகமாகப் பயன்படுத்துதல், தலை முடியை இறுக்கமாகக் கட்டுதல் போன்றவை தலைமுடி உதிர்வதை ஊக்குவிக்கின்றன.

இளநரை விழுவது ஏன்?

இளநரைக்கு வம்சாவளி ஒரு முக்கியக் காரணம். உங்களுக்கு இந்த மாதிரி இளநரை வந்திருக்கு மானால், அதற்குச் சிகிச்சை பயன் தராது. தலைச் சாயம்தான் தீர்வு. ஆனால், வைட்டமின் குறைவு, தாதுச்சத்துக் குறைவு, பிட்யூட்டரி பிரச்சினை, தைராய்டு பிரச்சினை போன்றவை காரணமாக இளமையில் நரை ஏற்பட்டிருந்தால், அதைக் குணப் படுத்த முடியும். பயாட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் பென்டோதினேட், பி.ஏ.பி.ஏ , துத்தநாகம் போன்ற பல சத்துகள் கலந்த மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொண்டுவர, இளநரை மறையும். தைராய்டு பிரச்சினை உள்ளதா எனப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். தினமும் கால் மணி நேரமாவது வெயிலுக்குச் செல்லுங்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் படுங்கள்.

நீங்கள் தற்போது சாப்பிட்டு வரும் மாத்திரை களால் பக்கவிளைவுகள் ஏற்படாது. அதிக குளோ ரின் கலந்த தண்ணீரிலோ உப்புநீரிலோ குளித்தால், முடி உதிர வாய்ப்புண்டு. மென்மையான தண்ணீரில் குளித்தால் நல்லது.

- விடுதலை நாளேடு, 22.1.18

வாய்ப்புண்ணுக்கு காரணம் என்ன?


வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் பொதுவான காரணங்களை முதலில் பார்ப்போம். ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, இரைப்பையில் புண், குடலில் அழற்சி நோய்கள், ரத்தச்சோகை, நீரிழிவு, பல் ஈறு கோளாறுகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வருகிற சாத்தியம் அதிகம். வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடும் பழக்கம் இருந்தாலும், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களாலும் வாய்ப்புண் வரலாம்.

எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

நீங்கள் வேறு ஊருக்கு மாறிச் செல்லும் பொழுது அங்குள்ள சுற்றுப்புறத்திலிருந்து சாயக் கழிவுகள், உலோகக் கழிவுகள், அமிலம் கலந்த புகைகள், தொழிற்சாலை நுண்துகள்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்று தாக்கும் வாய்ப்பிருந்தாலும் வாயில் புண் வர வாய்ப்பிருக்கிறது.

சரியான உறக்கம் இல்லையென்றாலும், அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். கவலை, இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். அந்த அதீத அமிலம் உறக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாக, செயற்கை வண்ண உணவுகள், மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள்கன்னத்தைக் குத்திப் புண் உண்டாக வாய்ப்பு உண்டு.

அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும் இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். வலிப்பு நோய் மாத்தி ரைகள் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவது உண்டு. திடீரென உடல் எடையைக் குறைத் தாலும் வாய்ப்புண் வர வாய்ப்பிருக்கிறது. மூட்டுவலி, சுயத்தடுப்பாற்றல் நோய், ஹார் மோன்களின் மாற்றம் ஆகிய காரணங் களாலும்

வாய்ப்புண் ஏற்படுவது உண்டு.

உங்களுக்கு எந்தக் காரணத்தால் வாயில் புண் வருகிறது என்று தெரிந்து சிகிச்சை பெறுங்கள்.

வாய்ப்புண்ணில் சில வகைகள் உள்ளன. அதன் வடிவத்தைப் பார்த்தே பெரும்பாலான வாய்ப்புண்களுக்குக் காரணத் தைச் சொல்லி விடலாம். இதற்கு மருத்துவரின் நேரடிப் பரிசோதனைதான் உதவ முடியும்.

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகிவிடும். அதே நேரத் தில் வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக மாறு வதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, வாய்ப்புண் தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.

என்ன சிகிச்சை?

மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்ளவேண்
டும்.

தடுப்பது எப்படி?

வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேலிங் முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். சோடியம் லாரில் சல்பேட்  கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

இந்த உணவுகள் முக்கியம்!

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல் லம், தேன், பேரீச்சை, முளைகட்டிய பயறுகள், கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகிய வற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படு வதை நிச்சயம் தடுக்கலாம்.

- விடுதலை நாளேடு, 22.1.18

திங்கள், 11 டிசம்பர், 2017

வலிப்பும் - விழிப்பும்




வலிப்பு நோயில் பல வகை உண்டு. அதற்கான காரணங்களும் பலவிதம். இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளையில் வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித்தொற்று, மூளையில் புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கான முக்கியக் காரணங்கள்.

சிலருக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வருகிறது. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே. ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவது, சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களாலும் வலிப்பு வரலாம். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக வலிப்பு வருவதுண்டு. பல நேரம் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும். ஒருமுறை வலிப்பு வந்தவருக்கு மீண்டும் மீண்டும் வலிப்புவருவதற்கு அதிக சாத்தியம் உண்டு.

வலிப்பின் வகைகள்

மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். மூளை யின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது பகுதி வலிப்பு. நாம் அவ்வப்போது காண் கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியி ருக்கும். இந்த வகைக்கு முழுவீச்சு வலிப்பு என்று பெயர்.

இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்ப சிகிச்சைமுறை மாறுவது மருத்துவ நியதி.

என்ன செய்ய வேண்டும்?

* வலிப்பு வந்தால், அருகில் உள்ளவர்கள் இவ் வாறு செய்ய வேண்டும்:

*அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள்.

*சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து டை போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.

*மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட் டம் கிடைக்க வழி செய்யுங்கள்.

*அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

*மூக்குக் கண்ணாடி அணிபவராக இருந்தால், அதை அகற்றிவிடுங்கள்.

*வாயில் உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.

*வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் ஆபத்து அதிகம். உடனே அருகில் உள்ள மருத்துவ மனையில் அவசர சிகிச்சையைப் பெற அவருக்கு உதவுங்கள். பின்னர் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள்.

என்ன பரிசோதனை?

வலிப்பு வந்தவர்கள் மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில அடிப்படை ரத்தப் பரிசோதனைகளுடன், மூளை யின் மின்னோட்டத்தை அளவிடும் இ.இ.ஜி., வீடியோ இ.இ.ஜி., சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.அய். ஸ்கேன், பெட்  ஸ்கேன், ஸ்பெக்ட்  ஸ்கேன் முதலியவற்றை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிகிச்சை என்ன?

இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக் கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். நல்ல பலன் கிடைத்துவிடும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்து விடலாம்.

2 முதல் 3 சதவீத நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர் களுக்கு எம்.ஆர்.அய். ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத் தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் மைக்ரோ அறுவைசிகிச்சை தற்போது உள்ளது. இந்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும். ஆனால், இந்த அறுவைசிகிச்சை வலிப்பு நோயாளிக் குத் தேவையா இல்லையா என்பதை மூளை நரம்பியல் மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
- விடுதலை நாளேடு,11.12.17

திங்கள், 20 நவம்பர், 2017

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வழிகள்

தினமும் காலையில் எழுந்தவுடன் நிறைய சுத்தமான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும். சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுதியாக உள்ள வெண்டைக்காய், கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சோற்றுக்கு பதிலாக கோதுமை, கம்பு, கேழ்வரகு ரொட்டிகளை சாப்பிடுவது நல்லது. எண்ணெய் குறைவாக சேர்க்க வேண்டும்.

நடப்பது என்பது சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிகத் தேவையான விஷயமாகும். தினசரி காலை நேரங்களில் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். காலையில் நேரம் கிடைக்காதவர்கள் மாலையில் நடைப் பயிற்சியை செய்யலாம். சாப்பிட்டவுடன் உட்காரவோ, உடனே தூங்கவோ கூடாது. ஒரு பத்து நிமிடமாவது நடந்துவிட்டு, பிறகுதான் தூங்கச் செல்ல வேண்டும். இதனால் உடலில் சர்க்கரை அதிகமாகும் அளவு குறைக்கப்படும்.

சர்க்கரை நோயிற்கான காரணங்கள் மற்றும் தேவையான மருந்து தீர்வுகள்

உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு.

1.உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய் ஆயுள் முழுவதும் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை. இந்த முதல்வகை சர்க்கரை நோய்க்கு அய்டிடிஎம்  என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக் கூடியது.

2. உடலில் இன்சுலின் உற்பத்தி போதிய அளவுக்கு உற்பத்தி ஆகாததால் ஏற்படுவது இரண்டாவது வகை சர்க்கரை நோயாகும். இந்த வகை சர்க்கரை நோய்க்கு என் அய்டிடிஎம்  என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோ யாளிகள் ஆயுள் முழுதும் மாத்திரை சாப்பிட வேண்டி யிருக்கும்.

இந்தியாவில் இரண்டாவது வகை சர்க்கரை நோய் காரணமாக பாதிக்கப்படுவோர்தான் அதிகம். உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை, முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் வந்து விட்டால், ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு தரும் பயன்

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தவுடன் பயப்படத் தேவையில்லை. சாப்பிட்டு ஒன்றரை மணி கழித்து எடுக்கப்படும் இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவு 180 மில்லி கிராமுக்கு கீழ் இருக்கும் நிலையில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தினசரி உடற்பயிற்சி போதுமானது. மாத்திரை தேவையில்லை. ஆக 20 சதவிகித சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகளின் தேவையின்றி உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலமே இரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு ஒரு நோயாளி உணவுக்கட்டுப்பாட்டில் தொடர்ந்து விரும்பி அக்கறை செலுத்தினால் சர்க்கரை நோய் காரணமாக உடலில் ஏற்படும் விளைவுகளை தடுக்க முடியும். ஏனெனில் கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய் காரணமாக இதயம், சிறுநீரகங்கள், கண்கள், பாதங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி முதலில் உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிப்பது அவசியம். ஒவ்வொருவருக்கும் உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள குத்துமதிப்பான கணக்கு ஒன்று உள்ளது.

அதாவது உங்களது உயர அளவிலிருந்து 100-அய்க் கழிக்க வரும் எண்ணே உங்களது சரியான எடை அளவு. உதாரணமாக 170 செ.மீ உயரம் இருந்தால், அவரது எடை 70 கிலோ கிராம்தான் இருக்க வேண்டும். அவரே சர்க்கரை நோயாளியாக இருந்தால் உடல் எடை 10 சதவிகிதம் குறைவாக இருப்பது நல்லது. அதாவது 63 கிலோ கிராம் இருந்தால் நல்லது. சர்க்கரை நோயாளிகள் சமச் சீரான உணவில் தினமும் கவனம் செலுத்துவது அவசியம். புரதம், கார்போ ஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, வைட்ட மின்கள் ஆகியவை போதுமான அளவுக்கு தினமும் உணவில் சேருவதே சமச்சீரான உணவு என சொல்லப் படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டிய காய்கறிகள் : கேரட், பீட்ரூட், பட்டாணி, டபுள் பீன்ஸ் ஆகியவை.

தவிர்க்க வேண்டியவை: உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை தேன், குளுக்கோஸ், ஜாம், வெல்லம், இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள், கேக், இளநீர், தேங்காய், குளிர்பா னங்கள், மதுபான வகைகள், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன் விட்டா, காம்ப்ளான் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அனைத்து வகையான பிஸ்கட்டுகளையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
- விடுதலை நாளேடு, 20.11.17