வியாழன், 1 பிப்ரவரி, 2018

பாதங்களில் வரும் பித்த வெடிப்புக்கு காரணமென்ன?

பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்த வெடிப்புகளைப் பித்த வெடிப்புகள் என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் உள்ள வெடிப்புகள் அதிகமாகவும், கடுமையாகவும், அடியில் உள்ள வெடிப்புகள் சற்றே குறைவாகவும் காணப்படும்.

பொதுவாக, பித்த வெடிப்பு கடுமையான பனிக் காலத்திலும், கோடையிலும் தொல்லை கொடுக்கும்; உடற்பருமன் இருந்தால் இது அடிக்கடி ஏற்படும். வெறும் காலில் நடப்பவர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். அல்லது பொருத்தமில்லாத காலணி களை அணிந்தாலும் இது ஏற்படலாம். நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பது பித்த வெடிப்பை வரவேற்கும்.

காலணிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் பித்த வெடிப்புக்கு ஒரு காரணமாகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால், இந்த வெடிப்புகள் நிரந்தரமாகவே தொல்லை கொடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்தாலும், தைராய்டு சுரப்புக் குறைபாடு, சொரியாசிஸ் நோய் போன்றவை இருந்தாலும் இதே நிலைமைதான்.

இந்தக் காரணங்களில் உங்களுக்கு எது ஒத்துப்போகிறது என்று பாருங்கள். அந்தக் காரணத்தைக் களைந்துவிட்டால், பித்த வெடிப்புகளும் விடைபெற்றுவிடும்.

பித்த வெடிப்புகளை ஆரம்பத்திலேயே கவனித்து தகுந்த சிகிச்சை பெற்றுக் கொண்டால், விரைவில் குணமாகும். காலம் தாழ்த்தினால், வெடிப்புகள் சருமத்தையும் தாண்டி ஆழமாகச் சென்றுவிடும். அல்லது அவற்றில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். அப்போது வலி ஏற்படும். காய்ச்சல், நெறி கட்டுதல், ரத்தம் வருதல் போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்து தொல்லைகள் அதிக மாகும். அதிலும் நீரிழிவு நோய் இருந்தால், பித்தவெடிப்புகள் ஆறுவதற்கு நாளாகும்.
- விடுதலை நாளேடு,29.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக