ஞாயிறு, 13 டிசம்பர், 2015

எலும்பு தேய்மானத்தை தடுக்க எளிய வழிமுறைகள்


உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்கம் இன்றி இருக்கும்போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது.
எலும்புகளின் அடிக் கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இடையில் பரவி எலும்புக்கு வலு சேர்க்கின்றன. இந்த இயக்கமானது உடலில் எப்போதும் நடப்பதால் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது.
இந்த சத்துக்கள் பால், பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் இருந்து கிடைக்கிறது. வயது, உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு சரியான உணவு முறையை கடைபிடிப்பது எலும்பு தேய்மானத்தை தவிர்க்க உதவும். குழந்தைகளுக்கு வளர்ச்சியின் காரணமாக உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற வலிகள் தானாகவே சரியாகி விடும். அவர்களுக்கு கை, கால் ஆகியவற்றில் வலி ஏற்படும்போது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால்போதும்.
வலிக்கும் பகுதிகளில் வீக்கம், தொடு வலி, நொண்டுதல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இதேபோல் குழந்தைகள் படிக்கும் வயதில் எவ்வித உடற்பயிற்சியும் இன்றி இருந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கும். எனவே கால்சியம் உணவுகளை உட்கொள்வதுடன் குழந்தைப் பருவத்தில் இருந்தே உடற்பயிற்சியை வழக்கப்படுத்துவது அவசியம்.
பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங் களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.
வயது 30அய்த் தொட்டவர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி, பால், முட்டை மற்றும் கடல் உணவுகள், கொட்டை வகைகள் ஆகிய வற்றில் வைட்டமின்-டி அதிகம் உள்ளது.  வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்கவேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி செல்ல வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏரோபிக்ஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் நல்ல பலன் தரும். எலும்புகளை உறுதி செய்யும்.
எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டியது அவசியம்.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துவிடுவது நல்லது. எலும்பு தேய்மானத்துக்கான அறிகுறி உள்ளவர்கள் எலும்பு தேய்மானத்தின் அளவை அதற்கான கருவிகள்மூலம் தெரிந்து கொள்ள முடியும். உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன்மூலம் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும்  என்கிறார் பிசியோதெரபி மருத்துவர் செந்தில்குமார்.
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்க உணவில் செலுத்த வேண்டிய கவனம் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. உடல் உழைப்பைவிட அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல், எந்தவித உடற்பயிற்சியும் இன்றி இருத்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.
மேலும் கால்சியம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் உண்ணாமல் தவிர்ப்பவர்களுக்கு சிறுவயதிலேயே எலும்பு வலுவிழக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாக்கெட் செய்யப்பட்ட துரித உணவுகள், குளிர்பானங்கள் குடிப்பதும் எலும்பு தேய்மானத்துக்குக் காரணமாகிறது.
எனவே சிறு வயதில் இருந்தே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம் குடிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகை முழு தானியத்தை தினமும் ஒருவேளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம்.
ராகி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, முருங்கைக் காய் மற்றும் முருங்கைக்கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, கீரை வகைகள் ஆகியவற்றில் கால்சியம் சத்து உள்ளது. இவை எலும்பு வலுவடைய உதவும்.
பெண்களின் மெனோ பாஸ் 40 வயதுகளில் வருவதால் அதன் பின்னர் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளாகின்றனர். அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை சேர்க்க வேண்டும். மெனோ பாசுக்குப் பின்னர் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்குக் கிடைக்கும்.
வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
-விடுதலை,18.8.14

கண்ணில் தெரியும் புற்றுநோயின் அறிகுறி



புற்றுநோயை காட்டிக் கொடுப்பதில் கண்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு என்றால் நம்ப முடிகிறதா?
உடலின் எந்த பாகத்தில் புற்றுநோய் வந்தாலும், அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்குமாம். ஆச்சரி யமான,  அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் கண் சிகிச்சை நிபுணர் பிரவீண் கிருஷ்ணா. கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசிவது, விழித்திரை  பிரச்சினை... வயசானவங்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும் பாலும் முதுமையின் அறிகுறிகள் என்று அலட்சியப்படுத் தறவர்கள்தான் அதிகம்.
வயதானால் பார்வை மங்குவதும், பூச்சி பறக்கிறதும் இயல்புதான்னு விட்டுவிடுவார்கள்.
ஆனால், அதெல்லாம் அவங்க உடம்பில் எங்கயோ புற்றுநோய் தாக்கியிருக்கிறதுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று யாருக்கும் யோசிக்கத் தோன்றாது. நடுத்தர வயசுக்குப் பிறகு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்குகிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற  கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக் கங்கள் மாறிப் போறது, இருமல், ரத்தத்தோட வெளியேறும் சளி... இப்படி புற்றுநோய்க்கான பொதுவான  அறிகுறிகளைத் தாண்டி, கண்களிலேயும், அதைக் கண்டுபிடிக்கலாம்.
மனித உடம்பில் அதிகப்படியான ஆக்சிஜன் ரெட்டினா என்று சொல்கிற விழித்திரைக்குத்தான் போகிறது. அந்த ஆக்சிஜன், விழித்திரைக்குப் பின்னாடி உள்ள  கோரா யிடு-ங்கிற பகுதி மூலமாகத்தான் விழித்திரைக்குப் போகும். உடம்போட ரத்த ஓட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைந்து போகும்.   அதனால், ரத்தத்தில் உள்ள புற்று நோய் செல்கள், கோராயிடு மூலமாக, விழித்திரைக்கு போகும். விழித்திரையில் தண்ணீர் கசிஞ்சு, விழித்திரை முன்னாடி வரும். திடீர் பார்வைக் குறைபாடுதான் இதற்கான அறிகுறி.
சிலருக்கு  ‘non hodgkin's lymphoma - என்று சொல்லக் கூடிய ரத்தப் புற்றுநோய் இருக்கும். கண்களில் பூச்சி பறக்கிறது, வெளிச்சம் அதிகமாகத் தெரிவதையும் முதுமையோட அறிகுறிகளாகவும், மறதி, நடக்கும்போது ஏற்படுகிற பிரச்சினைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்புப்படுத்திப் பார்த்து,  வேறு வேறு சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால்தான் அதை சரியாகக் கண்டுபிடிக்க முடியும்.
பி ஸ்கேன் மூலமாக  விழித்திரையைப் பரிசோதித்து, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங்கிறதையும் கண்டுபிடிப்பாங்க. பிறகு விழித் திரவத்தை எடுத்து  சோதனைக்குட்படுத்தி, புற்றுநோய் இருக்கிறதா என்பதை உறுதி செய்து, அப்படி உறுதியானால், அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் பிரவீண்.
-விடுதலை,18.8.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது


மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது
சென்னை, ஜூன் 17_ காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கிராம சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகநாதன் (வயது 27). இவர் பொறி யியல் படிப்பை முடித்து விட்டு வேலை தேடிவந் தார். வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்காக ஓட்டுநர் வேலை செய்து வந்தார்.
கடந்த 11 ஆம் தேதி லோகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பட்டாளம் என்ற பகுதியில் டேங்கர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் செங்கல் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை 6.55 மணிக்கு லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து அவரு டைய உடல் உறுப்புகளை குடும்பத்தினர் கொடை யாகக் கொடுக்க முடி வெடுத்தனர். மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் பொறியாளர் அஸ்பி வினோகர் நேம்ஜி என்ப வரின் மகள் ஹவோபியா (21) சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப் பட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஹவோபியாவிற்கு இரு தயக் கொடை பெறுவதற் காக அவருடைய குடும்பத் தினர் எதிர்நோக்கியிருந் தனர்.
லோகநாதனின் இருத யத்தை ஹவோபியாவிற்கு வழங்க முடிவானது. இரு தயத்தை விரைவாக கொண்டு செல்வது குறித்து மருத்துவர்கள் காவல் துறையினருடன் ஆலோ சனை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு லோகநாதனின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவ மனையில் பிரித்து எடுக்கப் பட்டன. இதில் 20 மருத் துவர்கள் ஈடுபட்டனர். மாலை 5.35 மணி அளவில் லோகநாதனின் உடலில் இருந்து இருதயம் பிரித் தெடுக்கப்பட்டது.
மாலை 5.45 மணி அள வில் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து மின்னல் வேகத்தில் இருதயம் ஆம் புலன்சு மூலம் அடையாறு மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் போக்கு வரத்து காவல்துறையினர் நின்று வயர்லெஸ் மூலம் போக்குவரத்தைச் சீர்படுத் தினர்.
ஆம்புலன்சு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரியாக 13 நிமிடம் 22 விநாடிகளில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு மருத் துவர் குழுவினர் இத யத்தை அறுவைச் சிகிச்சை மூலம் ஹவோபியாவிற்கு பொருத்தினர்.
லோகநாதனின் 2 கண் கள் எழும்பூர் கண் மருத் துவமனைக்கும், 2 சிறுநீர கங்கள் அடையாறு மலர் மருத்துவமனைக்கும், கல் லீரல் வேலூர் அரசு மருத் துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கும் கொடையாக கொடுக்கப் பட்டன. லோகநாதன் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மீண்டும் மறுவாழ்வு பெற முடியும்.
லோகநாதனின் தாயார் ராஜலெட்சுமி கண்ணீரு டன் கூறும்போது, "என் மகனை காப்பாற்ற முடியாது என்று மருத் துவர்கள் கூறியதும் இடி விழுந்தது போல் இருந்தது. அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவனை நேரில் காண முடியும் என்று கருதினேன். எனவே அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன்வந் தேன். என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர்வாழ வேண்டும் என்றார்.
2008 ஆ-ம் ஆண்டு மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத் தினை தமிழக அரசு செயல்படுத்தியது. இதன் மூலம் தமிழகத்தில் இது வரை 76 இருதயங்கள், 861 சிறுநீரகங்கள், 37 நுரை யீரல்கள், ஒரு கணையம், 500 இதய வால்வுகள், 730 கண்கள் மற்றும் ஒரு தோல் ஆகியவை கொடை யாகப் பெறப்பட்டுள்ளன.
இதில் 611 சிறுநீரகங்கள், 378 கல்லீரல்கள், 66 இத யங்கள், 28 நுரையீரல்கள் சென்னையில் கொடை யாக பெறப்பட்டவை என் பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் தான் உடல் உறுப்புகள் கொடைய ளிப்பதில் முதலிடத்தில் உள்ளது.
குறிப்பு: 2008இல் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் மகனான ஹிதேந்திரனின் இதயம் பெங்களூரைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுக்குப் பொருத் தப்பட்டது தெரிந்ததே!
-விடுதலை,17.6.14

காது வலிக்கான காரணங்கள்!


மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது. தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வில் ஆழ்ந்த பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது காது. அதேபோல், விழிக்கும் போது முதலில் செயல்படத்தொடங்கும் புலனும் காதுதான்.   சத்தங்களை கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகள் பயன்படுவது இல்லை.
நாம் நிலையாக நிற்பதற்கும் கூட காதுதான் முக்கிய பங்காற்றுகிறது. காது வழியாக நாம் சத்தத்தை கேட்பதால்தான் பேச முடிகிறது. குழந்தைகளும் சத்தத்தை உணர்ந்துதான் பேசவே ஆரம்பிக்கின்றன. எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும்.
காது மண்டலம், வெளிக்காது (புறச்செவி), நடுக்காது (நடுச்செவி), உட்காது (உட்செவி) என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சத்தம் எழுப்பும்போது, அது நம் வெளிக்காதின் வழியே ஊடுருவி காது ஜவ்வை அசைக்கிறது. இது நடுக்காதில் இருக்கும் மிகச்சிறிய எலும்புகளான மெல்லன்ஸ், இன்கஸ், ஸ்டெப்ஸ் என்கிற மூன்று எலும்புகளை அசைக்கும்.
அதில் ஸ்டெப்ஸ் எலும்பினால் அதிர்வு தரப்பட்டு உள் காதிலுள்ள திரவம் அசைகிறது. இதனால் செவி நரம்பு தூண்டப்பட்டு, அந்த ஓசை நம் மூளைக்குசென்று நமக்கு சத்தத்தை உணர வைக்கிறது.
எப்போதும் வெளிக்காது, உள்காது என இரண்டு பக்கமும் சரியான அழுத்தம் இல்லாமல் போனால், காது அடைப்பும் வலியும் ஏற்படும். விரல்களால் மூக்கை அழுத்தி பிடித்து, முடிந்த அளவுக்கு வாயை மூடி காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து, காது வழியாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இதனால், காதுக்குள் இருக்கும் ஜவ்வானது சமநிலையை அடைந்து அடைப்பு வலி குறையும்.
சிலர் சுத்தப்படுத்து வதாக கூறி அடிக்கடி ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றை காதில் விட்டு அழுக்கு எடுப்பது வழக்கம். காது ஒரு சென்சிடிவ் உறுப்பு. கம்பி போன்ற பொருட்களை உள்ளே செலுத்தும்போது, உள்ளே புண்ணாகி சீழ் பிடித்துவிடும். இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது காதுக்கு நல்லது.
தவிர, காதில் அடிபடுதல் மற்றும் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் காதில் சீழ்வடிதல் பிரச்சினை ஏற்படலாம். சளி, பாக்டீரியா தொற்று, சுகாதாரமற்ற சூழ்நிலைகளால் கூட காதில் சீழ்வடிதல் பிரச்சினையை ஏற்படுத்தும்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல், சீழ் வடிவதால் நாற்றம், காதுகளில் வலி போன்ற அறிகுறிகள் தென்படலாம். இவ்வாறு வலி ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
வலிக்கான காரணம்
பற்சொத்தை, கடைவாய்ப்பல் வெளிவராதிருத்தல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி, கழுத்தெலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும். தொண்டை அழற்சி காரணமாகவும், நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காது வலி ஏற்படலாம்.
சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம். நீர்நிலைகளில் குதித்து குளிப்பதாலும், கடல் நீரில் குளிப்பதாலும் நோய் தொற்று ஏற்பட்டு நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும்.
பாதுகாப்பது எப்படி?
கோதை குச்சி, பட்ஸ் மூலம் சுத்தம் பண்ணுதல் கூடாது. காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகக் குறைந்த அளவில் சத்தத்தை வைத்துக்கேட்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல், மெல்லிய இசையை மட்டுமே கேட்க வேண்டும்.
சுற்று வட்டாரத்தில் அதிக இரைச்சல் இருப்பது தெரிந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து செல்பேசியில் பேச நேரிட்டால் ஒரு காதிலிருந்து மறு காதுக்கு  போனை மாற்றி வைத்து பேசுவது நல்லது.
காதில் பூச்சி புகுந்துவிட்டால், சில துளி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். உடனே பூச்சி செத்து வெளியே வந்துவிடும். கோதில் அடிக்கடி டிராப்ஸ்களை போடக்கூடாது. இதனால் நோய் தொற்று, அரிப்பு ஏற்படலாம். கோதிலுள்ள முடிகள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன.
எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது. மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும். எனவே மூக்கை சிந்தும்போது அதை துடைப்பது நல்லது.

யாருக்கு எத்தனை மணி நேரம்?
பள்ளி செல்ல ஆரம்பிக்கிற 3 அல்லது 4 வயதில் 9 அல்லது 10 மணி நேர தூக்கம் இருக்கும். மதியம் தூங்க வைத்தால், ஒரு மணி நேரம்  தூங்குவார்கள். முன்பு அரை நாள் பள்ளிக் கூடம் இருந்தபோது வீட்டுக்கு வந்ததும் மதியம் தூங்குவார்கள்.
இன்றைய கல்விமுறை மாற்றத்தால் மதியத்தூக்கம் குழந்தை களுக்குக் கிடைப்பதில்லை. 4 முதல் 8 வயதில் இரவு 9 மணி நேரம், மதியம் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் தூங்குவார்கள்.
வளர் இளம் பருவத்தினருக்கு இரவில் 8 மணி நேரம் தூக்கம் வேண்டும். முடிந்தால் 9 மணி நேரத் தூக்கம் நல்லது.  பெரியவர்கள் 6 மணி நேரம் தூங்குவதே போதுமானது!
-விடுதலை,2.3.15

புதன், 9 டிசம்பர், 2015

காய்ச்சலை தடுப்பது எப்படி?



மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருக்குக் காய்ச்சல் நீடித்தால் `ஒருவேளை இது டைபாய்டாக இருக்குமோ? என்று அய்யப்படும் அளவிற்கு 'டைபாய்டு காய்ச்சல்  பொதுமக்கள் மத்தியில் பிரபலம். தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி, பனிக்காலம் முடியும் வரைக்கும் - அதாவது, அக்டோபர் முதல் ஜனவரி வரை - டைபாய்டு காய்ச்சல் நீடிக்கும். டைபாய்டு காய்ச்சலுக்குக் 'குடற்காய்ச்சல் என்று வேறு ஒரு பெயரும் உண்டு.
காரணம், இந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள் சிறுகுடலில் வசித்து, அங்கேயே வளர்ந்து, காய்ச்சலை உண்டாக்குவதுதான்.    யாருக்கு வருகிறது?     குழந்தை முதல் முதியோர் வரை எல்லா வயதினரை யும் இது பாதிக்கலாம் என்றாலும் இந்தியாவில் அய்ந்திலிருந்து பத்து வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளையே இது பெருமளவில் பாதிக்கிறது.
அதிலும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த குழந் தைகள், சுகாதாரம் குறைந்த இடங்களில் வசிக்கும் குழந்தைகள் போன்றோருக்கு டைபாய்டு பாதிப்பு அதிகம். பெரியவர்களைப் பொறுத்த அளவில் சாலையோர உணவகங்களில், சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில் அடிக்கடி சாப்பிடும் வழக்கத்தில் உள்ளவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் இது ஒரு தொற்றுநோய் என்பதால், வீட்டில் ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், அடுத்தவர்களுக்கும் வர அதிக வாய்ப்பு உண்டு.
டைபாய்டு வரும் வழிகள்: 'சால்மோனல்லா டைபை’ எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் இந்தக் காய்ச்சல் வருகிறது. நோயாளியின் சிறுகுடலிலும் அதைச் சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வசிக்கின்றன. மலம், சிறுநீர் ஆகியவை மூலம் இவை வெளியேறி மண்ணில் கலக்கின்றன.
இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடங்களாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. கண்ட இடங்களில் உட்காரும் ஈக்கள் இந்தக் கிருமிகளைச் சுமந்து கொண்டு தெரு விலிருந்து வீட்டிற்கு வருகின்றன.
நாம் பயன்படுத்தும் குடிநீரிலும் உணவிலும் இவற்றைக் கலந்து விடுகின்றன. இந்த அசுத்த உணவையும் தண்ணீரையும் சாப்பிடு பவருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது. ஏற்கனவே டைபாய்டு வந்து குணமானவரின் குடலில் சில காலம் இவை வசிப்பது உண்டு... அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும் அவரை அறியாமலேயே அவ்வப்போது வெளியேறுவதுண்டு. இந்தக் கிருமிகள் அந்த நபரை அவ்வளவாக பாதிக்காது.
ஆனால், ஈக்கள் மூலம் மற்ற வர்களை அடையும்போது அவர்களுக்கு டைபாய்டு வந்து விடுகிறது. இந்த நபர்களை `நோய் கடத்துநர்கள் () என்கிறார்கள், மருத்துவர்கள்.
நோய் பரவும் மாற்று வழிகள்: டைபாய்டு கிருமிகள் தண்ணீரில் இரண்டு நாட்கள்தான் உயிர்வாழும். ஆனால், ஈரமான நிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேல் வாழத் தகுதி பெறும். ஆகையால் இந்தக் கிருமிகள் வாழும் மண்ணில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் சரியாகச் சுத்தம் செய்யத் தவறினால் அல்லது சரியாக வேகவைக்கத் தவறினால் அவற்றைச் சாப்பிடும் நபருக்கு டைபாய்டு வந்துவிடும்.
இந்தக் கிருமிகள் பாலில்கூட இருக்கலாம். பாலைக் கொதிக்க வைக்காமல் லேசாக சூடுபடுத்தி குடிக்கும்  பழக்கமுள்ளவர் களுக்கு இந்தக் காய்ச்சல் வர அதிக வாய்ப்புள்ளது. மேலும், குளிர் சாதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்கும் பனிக்கட்டி, அய்ஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளில் இவை பல மாதங்களுக்கு உயிர்வாழும். முக்கியமாக, சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில் இவை அதிகமாக வசிக்கும். அங்கு உணவு சாப்பிடும் வாடிக்கை யாளர்களுக்கு டைபாய்டு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு.
நோய் தோன்றும் முறை: அசுத்த உணவு, தூய்மையற்ற குடிநீர் போன்றவை மூலம் நம் உடலுக்குள் நுழையும் இந்தக் கிருமிகள் சிறுகுடலை அடைந்து உடனே ரத்தத்தில் கலந்துவிடும். அங்கு இவை பல்கிப்பெருகி மீண்டும் குடலுக்கே வந்து குடலில் உள்ள நிணநீர்த் திசுக்களில் குடியேறும்.
'சிறுகுடலின் பாதுகாப்புப்படை   என்று அழைக்கப்படுகின்ற `பேயரின் திட்டுகள் எனும் பகுதிகளை அழிக்கும். இதனால் குடல் சுரப்புத் திசுக்கள் மற்றும் குடல் நிணநீர் முடிச்சுகள் வீங்கும். அப்போது குடல் திசுக்களில் சில்லரைக் காசு போல் வட்ட வட்டமாக புண்கள் உண்டாகி, காய்ச்சல் வரும். இதுதான் 'டைபாய்டு காய்ச்சல்.
அறிகுறிகள்: மனித உடலுக்குள் இந்த நோய்க்கிருமி நுழைந்து, பத்திலிருந்து பதினான்கு நாட்கள் கழித்து டைபாய்டு அறிகுறிகள் துவங்கும். முதல் நாளில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு தோன்றும். அடுத்த நான்கு நாட்களில் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். இரவில் காய்ச்சல் அதிகமாகும். 104  டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக காய்ச்சல் எகிறும். ஒவ்வொரு நாளும் தலைவலி அதிகரிக்கும். உடல்வலி கடுமையாகும்.
பசி குறையும். வாந்தி வரும். வயிறு வலிக்கும். ஏழாம் நாளில் நாக்கில் வெண்படலம் தோன்றும். வயிற்றுப் போக்கு தொல்லை தரும். சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். உடலெங்கும் பரவலாக ரோஜா நிறப் புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகள் மார்பிலும் முதுகிலும் அதிக அளவில் காணப்படும்.
சிக்கல்கள்: இந்தக் காய்ச்சலுக்குத் தொடக்கத்திலேயே சிகிச்சை பெறத் தவறினால் விளைவுகள் மோசமாகும்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் மிகவும் அதிகமாகி வலிப்பு வரலாம். உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் வரலாம். சுயநினைவை இழக்கலாம்.சிலருக்கு நோய் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலத்தில் ரத்தம் வெளியேறலாம்.
இன்னும் சிலருக்கு குடலில் சிறு துளைகள் விழுந்து 'ரத்த மலம் போகலாம். இத்துடன் ரத்த வாந்தியும் வர வாய்ப்புண்டு. மேலும் ரத்தத்தில் இந்த நோய்க்கிருமிகளில் நச்சுத்தன்மை அதிகரித்து, செப்டிசீமியா எனும் நிலைக்கு மாறி, நோயாளிக்கு அதிர்ச்சி நிலை உருவாகி, உயிருக்கே ஆபத்து வரலாம்.
சிகிச்சை முறைகள்: டைபாய்டு காய்ச்சலுக்கு மருத்துவர் கூறும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த நோய் கிருமிகளை நேரடியாகத் தாக்கி, டைபாய்டு காய்ச்சலைக் குணப்படுத்த பல நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் உள்ளன.  மருத்துவர் ஆலோசனைப்படி முறைப்படி பயன்படுத்தினால் நோய் முழுவதுமாக குணமாகும். இல்லையென்றால் டைபாய்டு காய்ச்சல் மீண்டும் வந்துவிடும்.
-விடுதலை,9.11.15

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா?

    - பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி
    ஆண்_பெண் உடல் உறவு இல்லாமலே மருத்துவர்கள் செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் காலம் மிக விரைவில் வரும். சோதனைக் குழாய்களில் விந்துக்களைச் செலுத்தி, கருத்தரிப்பு நிகழ்ந்த பிறகு அதனைப் பெண்ணின் கருப்பையில் வைத்துக் குழந்தையை வளர்க்கும் காலம் வருங்காலம்! பிள்ளைப் பேற்றுக்கு ஆண்_பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல உடற்கட்டும் புதிய நுட்பமும், அழகும், உடல் வலிமையும் உள்ள குடிமக்கள் ஏற்படும்படியாக, பொலிகாளைகளைப் போல் தெரிந்தெடுத்து, மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ஊசிமூலம் பெண்களின் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண்_பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
    1943இல் தந்தை பெரியார் இக்கருத்துகளை வெளியிட்டபோது பலர் அதிர்ச்சியடைந்து போனார்கள். மயங்கி விழுந்தவர்களும் உண்டு. ஆனால் மருத்துவ அறிவியல் தந்தை பெரியார் என்னும் இயற்கை அறிவியலாளரின் திசையிலேயே பயணித்தது. 1978இல் பிரிட்டனில் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. அதன் பெயர் லூசி பிரவுன். அதன் பின்னர் சில ஆண்டுகளில் கல்கத்தாவில் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. இன்று உலகில் எல்லா நாடுகளிலும் இந்த முறை மிக எளிமையாகிவிட்டது.
    தென்னகத்தைப் பொருத்தவரையில், அரச மரத்தைச் சுற்றிவந்தால், கோவில்களில் சின்னச் சின்ன தொட்டில்களைக் கட்டித் தொங்க விட்டால், விரதமிருந்தால் குழந்தை பிறக்கும் என்னும் மூடநம்பிக்கை ஆழமாக வேரூன்றியிருந்தது. அதைவிட, சாமியார்கள் பிள்ளைவரம் கொடுக்கும் ஒரு கொள்ளை நோய் பரவியிருந்தது. சாமியார்களிடமும் ஆசிரமங்களுக்கும், மடாலயங்களுக்கும் சென்று மக்கள் மானத்தை இழந்துவரும் தொடர்கதை இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையில், தந்தை பெரியார் இத்தகைய மூடநம்பிக்கைகளை எதிர்த்து முழக்கமிட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டினார்.
    மலட்டுத்தன்மை: மலட்டுத்தன்மை என்பதைக் காரணமாகக் காட்டி பல பெண்கள், ஆண்களால் புறக்கணிக்கப் பட்டார்கள். ஆனால் மலட்டுத்தன்மை என்பது ஆண்களிடமும் உண்டு என்னும் திடுக்கிடத்தக்க உண்மை வெளியானவுடன் பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெற்றார்கள். அச்சம் அகன்று துணிவு பிறந்தது. கணவன்_மனைவி இருவருமே இப்போது மருத்துவரை நாடித் தம் குறைபாடுகளை நீக்கிக் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆக மலட்டுத்தன்மை என்பது இப்போது பொய்யாக்கப்பட்டு பெண்களை மட்டுமே குறிப்பிட்டுக் கூறப்பட்டு வந்த மலடி என்ற சொல் (ஆண்களைக் குறிக்கும் இதற்கு நிகரான சொல் இல்லை) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. இந்த மலடி என்ற சொல்லைப் பயன்படுத்தி ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கமும் இப்போது காண்பதற்கு அரிதாகும்.
    சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கம் பற்றித் தந்தை பெரியார் 1938இல் தம் புரட்சிக் கருத்துகளை வெளியிட்டபோது, இது கடவுள் படைப்புக்கு எதிரான கருத்து; நாத்திகர்களின் கோணல் பார்வை என்று தந்தை பெரியாரைச் சாடினார்கள் மதவாதிகள்!
    இன்று மருத்துவ அறிவியல் வியத்தகு வளர்ச்சியை அடைந்துள்ளது. சோதனைக் குழாய் மூலம் குழந்தை வளர்ப்பு என்பது பழைய முறையாகிவிட்டது! பெண்ணின் கரு முட்டைகளை அதிகம் உருவாக்கி (என்சைம்ஸ் வழியாக) அதனை எடுத்து ஆணின் உயிரணுக்களோடு சோதனைக் குழாயில் அய்ந்தாறு நாட்கள் வளர்த்து அதன்பின் அதனைத் தாயின் கருப்பையில் வைத்து வளர்ப்பது சோதனைக் குழாய் (Test Tube Methode) முறையாகும். இம்முறையிலிருந்து படிநிலை வளர்ச்சி பெற்று இப்போது கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test) என்னும் மிக நுட்பமான வளர்நிலையை எட்டியுள்ளது.
    கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test): இந்த முறை மருத்துவம் மிக நுட்பமானது. ஒரு மெல்லிய ஊசி; அந்த ஊசியின் உட்புறம் ஒருவகை வேதிப் பொருள் கலவையால் பூசப்பட்டிருக்கும் (டெஃப்ரான்). இந்த மெல்லிய ஊசியின் மூலமாகப் பெண்ணின் கருமுட்டை காயம் ஏற்படாமல் சேதாரம் இல்லாமல் வெளியே எடுக்கப்படுகிறது. அதனோடு ஆண் உயிரணுவைச் சேர்த்து ஒரு கேப்சுயூலில் வைத்துப் பெண்ணின் பிறப்புறுப்பிலேயே கரு வளர்க்கப்படுகிறது; இதன் பின்னர், தாயின் கருப்பையில் அக்கரு வைக்கப்படுகிறது. தாயின் இயற்கையான வெப்பத்தில் கரு வளர்ந்துவரும். இதற்கு முன்பு சோதனைக் குழாய் முறைக்கு ஆன செலவை விட கேப்சுயூல் முறைக்கு மூன்றில் ஒரு பங்குதான் செலவு!
    கேப்சுயூல் முறை மருத்துவத்திற்கான கருவிகள் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இவற்றின் விலை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. இவற்றை இங்கேயே உற்பத்தி செய்யும் நிலை வந்துவிட்டால் செலவு மிக மிகக் குறைவாகும். ஏழைகளுக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கும் நல்வாய்ப்பாகிவிடும்.
    கேப்சுயூல் முறையில் குழந்தை வெளியே வளர்வதில்லை. அது தாயின் அரவணைப்பில் கருப்பையிலேயே வளர்கின்றது. ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால் மறுமுறையும் இதே சோதனையை எளிதில் தொடரலாம். 2011ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்தச் சோதனை வெற்றிபெற்றது. இந்தியாவில் _ தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சோதனை வெற்றி பெற்றது.
    ஈரோட்டில் 64 வயதுப் பெண்மணிக்கு: ஈரோட்டில் 64 வயதான ஒரு பெண்மணி; பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் மலடி என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டு உறவினர்களின் ஓரப் பார்வையால் சொல்லவொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகி வாழ்ந்து வந்தார். அவருக்கு 45ஆம் வயதில்  மாதவிடாய் நின்றுவிட்டது. இருபது ஆண்டுகளாகச் சர்க்கரை நோய்; இரத்த அழுத்தம் எல்லாம் இருந்தன. கணவருக்கு அகவை 75; அவர் இதய நோயாளி. என்றாலும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்காதா என்ற கவலை ஒருபுறம் நெஞ்சைத் துளைத்து ஏங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லா மருத்துவத்தையும் பார்த்துவிட்டார்கள்.
    கடைசியில் கேப்சுயூல் முறையையும் பார்த்துவிடலாம் என்று டாக்டர் நிர்மலா சதாசிவத்தை அணுகினார்கள். 64 வயதுப் பெண்ணுக்கு இருந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து அவருக்குத் தாய்மைப் பேற்றை நல்கி அவர்கள் இருவரும் இதுவரை பெற்றிராத மகிழ்ச்சியைக் கொடுத்தார் டாக்டர் நிர்மலா சதாசிவம். உலகில் இந்த வயதில் எவருக்கும் குழந்தை பிறந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் முதல்முறையாக ஈரோட்டில் இந்த மருத்துவம் மருத்துவத் துறை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தச் சோதனைகளின் மூலவர், தொலை நோக்குச் சிந்தனையாளர், சோதனைக் குழாயில் குழந்தை உருவாகும் என்ற முன் அறிவிப்பை வெளியிட்ட அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்தச் சாதனை நிகழ்த்தப் பெற்றிருக்கிறது.
    டாக்டர் நிர்மலா சதாசிவம் இணையரை அழைத்து பெரியார் மன்றம் பெருமைப்படுத்தியது. பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கி அய்யாவுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
    1926 வரையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த விதியை தந்தை பெரியார், பனகல் அரசரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அந்த விதியை அகற்றினார்கள். அதன் பின்புதான் நம்மவர்கள் மருத்துவத்துறையில் நுழைய முடிந்தது! இன்று உலகம் வியக்கத்தக்க சாதனைகளை நம்முடைய மருத்துவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்!
    -உண்மை இதழ்,ஜூன்1-15,2015

    எல்லா இரத்தப் பிரிவுகளையும் ஒன்றாக்கிய நொதியம்


    இரத்த தானம் செய்ய பலர் முன்வந்தாலும் நோயாளியின் இரத்தப் பிரிவுடன் ஒத்திருந்தால் மட்டுமே நோயாளிக்குச் செலுத்த முடியும் என்ற நிலை இதுவரை இருந்துவந்தது. இந்த நிலையினை மாற்றியமைக்கும் புதிய நொதியம் (என்சைம்) கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    புதிய நொதியமானது ஏ மற்றும் பி பிரிவு இரத்தத்தில் காணப்படும் உடற்காப்பு ஊக்கிகளை (ஆன்டிஜென்) பிரித்து எடுத்துவிடும். இதனால், அந்த ரத்தம் ஒ பிரிவு இரத்தத்தின் தன்மையைப் பெற்று விடும்.
    ஏ, பி பிரிவு இரத்தங்களிலிருந்து ஏற்கெனவே உடற்காப்பு ஊக்கிகளைப் பிரித்தெடுக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், நொதியத்தை  பரிணாம வளர்ச்சி இயக்கம் என்ற புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி யுள்ளனர்.
    இந்த ஆய்வுக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆய்வாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    உண்மை இதழ்,16-31.5.15

    வெள்ளி, 4 டிசம்பர், 2015

    மருத்துவப் புரட்சிக்கு வித்திட்ட கறுப்புத் தாய்!


    அமெரிக்காவில் வர்ஜினியா என்ற மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரு புகை யிலை விவசாய - அடிமைகளாக முன் னோர்கள் இருந்த கறுப்பின அமெரிக்கப் பெண்மணி ஹென்ரிட்டா லாக்ஸ்.
    இவர் 5 ஆவது, 6 ஆவது வகுப்பு மட்டுமே படித்த ஒரு ஏழைப் பெண்மணி. அய்ந்து (5) குழந்தைகளுக்குத் தாயாகி விட்டவர்.
    1951 இல் அவர் மெரிலாண்ட் பகுதியில் (வாஷிங்டன் டி.சி. - அருகில் உள்ள பகுதிதான்) பிரபல ஜான்ஹாப் கின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்!
    குழந்தைப் பருவம் முதலே இந்த பெண்மணிக்கு மூச்சுத் திணறல் வரு வதுண்டு அடிக்கடி. மூக்குப் பகுதி கொஞ்சம் வளைந்திருக்கும் (Deviated Septum) பல ஆண்டுகளாக பல் வலி உபாதையும் அடிக்கடி.
    15 வயது முதலே கணவனோடு தாம்பத்திய வாழ்வு. பிறகு உடலுறவில் நாட்டமில்லை. காரணம், அவர்களை அறியாமலேயே அந்தப் பெண்ணுக்கு கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer). இவரது தாய், தந்தைக்கு இவர் 10 பிள்ளைகளில் மூத்தவர்.
    இந்தப் பெண்ணை ஜான் ஹாப் கின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். அது அவருக்கு வெளிநாடு போல் தோன்றியது. காரணம், அவர்கள் பேசும் ஆங்கிலம்கூட இவருக்குச் சரிவரத் தெரியாது.
    புகையிலை விவசாய அறுவடை, பன்றி வளர்ப்பு - இவைதாம் இவருக்குத் தெரியும்.
    இவருக்கு Cervix என்ற சொல்லோ, Biopsy என்ற வார்த்தையோ எதுவும் தெரியாது! எழுதப் படிக்கவே தெரி யாதவர் இவர்!
    தனது வலி பற்றி டாக்டர்களிடம் சொன்னார்; ரத்தம் கசிந்து கொண் டிருந்ததை அறிந்து கூறினார். மூன்று மாதம் கழித்து ஒரு பெரிய கட்டியாக அது மாறியது.
    அவர் உயிருடன் மருத்துவமனையில் இருக்கிறபோது, அவருக்குத் தகவல் தெரியாமலேயே அவரது உடம்பிலிருந்து செல்கள்(Cells)
    எடுத்து குளிர்பதனப் பெட்டி அறையில் வைக்கப்பட்டன! அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அந்த செல்கள் எடுத்து வைக்கப்பட்டன.
    பொதுவாக  இப்படி எடுக்கப்படும் செல்கள் உயிருடன் இருப்பதில்லையாம்! இது மிகவும் உயிர் நிலையிலேயே பராமரிக்கப்பட்டு, இன்றும் பலவித நோய்களுக்கும், சிகிச்சைகளுக்கும் மூலாதாரமாகப் பயன்படுகிறதாம்!
    மைக்ரோஸ்கோப் என்ற நுண் ணாடியின்மூலம் பார்த்தால் வறுக்கப்பட்ட முட்டை (Fried Egg) போல அந்த செல்கள் காணப்படுமாம்! ஹீலாவின் செல்கள் வளர்ந்தன; வளர்ந்துகொண்டே இருக்கின்றன 350 மில்லியன் அடிக்கு. (35 கோடி அடி நீளம்; 5 அடி அவரது உயரம்). அவர் இறந்துவிட்டார்; அவரி டமிருந்து எடுக்கப்பட்டு, பாதுகாத்து பராமரிக்கப்பட்டு மருத்துவ ஆராய்ச் சிக்குப் பயன்படும் அந்த செல்கள்மூலம் மருத்துவ ஆராய்ச்சி நாளும் வளர்ந் தோங்குகிறது இன்றும்கூட!
    போலியோ வாக்சின், கீமோதெரபி, குளோனிங், ஜீன் மேப்பிங், விட்ரோ ஃபர்ட்டிலைசேஷன் போன்ற பல முக்கிய ஆய்வுகளுக்கு அவரது தியாகம் அவரது அனுமதியின்றியே அமெரிக்க டாக்டர்கள் செய்தது - மனித குல வளர்ச்சிக்கு அந்தக் கறுப்பின, ஏழைத்தாயின், படிக்காத ஒரு பெண் ணிடம் அறக்கொடை (செத்தும் கொடுத்ததால் அப்படி அழைப்பதில் தவறில்லையே) மனித குலத்திற்குப் பயன்படுகிறதே!
    ஹெல்த் இன்ஷுரன்ஸ் கூட கட்ட முடியாத அந்த கறுப்புப் பெண்ணின் செல்கள் மூலம் இன்றும் - அவை பல நூறு கோடி டாலர்களை பலர் சம் பாதிக்க மூலதனமாக முதலாகப் பயன்படுகிறது!
    இதை ஒரு நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர், பெண்தான் - சிறப்பான வரலாறாக மருத்துவ உலகின் மிகப் பெரிய புரட்சியாக மலர்ந்த ஒரு அருமை யான நூலாக படைத்துள்ளார்.  அண்மையில் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது நியூஜெர்சியில் ஒரு பேரங்காடியில் இந்த நூல் ஒரு மூலையில் 20 சதவிகித தள்ளுபடியுடன் கிடைத்தது!
    இந்நூல் எப்படிப்பட்டது?
    ‘‘A thorny and provocative book about cancer, racism, Scientific ethics, and cripping poverty’’ - The immortal life of Henrietta Lacks.
    இதன் தமிழாக்கம்:
    புற்றுநோய், இனவெறி, அறிவியல் நன்னெறி, வாழ்க் கையை முடக்கிப் போடும் வறுமை ஆகிய முட்களைப்பற்றி, ஆத்திர மூட்டக் கூடிய, சிந்தனையைத் தூண்டும் நூல் - ஹென்ரிட்டா லாக்சின் அழிவே இல்லாத வாழ்க்கை.
    லாக்ஸ் மகளைக் கண்டுபிடித்து, கோபம் - சோகம் நிறைந்த அந்த மகளுடன் கலந்து பேசி இந்நூலை எழுதி உலகுக்கு இந்தக் கதையைத் தந்தவர் ரெபாக்கா ஸ்கூலூட் (Rebecca Skloots) என்ற பெண் எழுத்தாளர். இவர் ஒரு மனிதநேயர்; கடவுள் நம்பிக்கையற்றவரும்கூட. அவருக்கும் உலகு கடமைப்பட்டுள்ளது!
    குறிப்பு: இந்நூல் 2010 ஆம் ஆண்டு பல பரிசுகளைப் பெற்ற ஒரு நூல்!
    லாக்ஸ் செல்லை அவர் அனுமதியின்றி எடுத்த அமெரிக்க டாக்டர் இன்னமும் 100 வயது கடந்து வாழ்ந்து கொண்டுள்ளார். இதை நான் வேறு வழியில் கண்டறிந்தேன்!
    -விடுதலை,5.9.12

    செவ்வாய், 1 டிசம்பர், 2015

    குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்

    மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.
    திருமணம் முடிந்து நான்காண்டு-களாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது உதவும்.
    ஆனால், சில ஆண்கள் தன் ஆண்மையை உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி ஓராண்டிலே குழந்தை பெற்றுக் கொள்வர்.
    சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறப்பதில்லை.
    குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள் உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை பாதிப்பு.
    பொதுவாக, குழந்தை இல்லை யென்றதும் பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம் செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல குற்றமும் ஆகும்.
    குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும் ஆணே பெரும்பாலும் காரணம். எனவே, இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும். பெரும்பாலும் சரி செய்துவிட முடியும். அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.
    குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து உடலுறவு கொள்ள வேண்டும்.
    மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.
    இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்பு தள்ளிப் போகிறது.
    குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள் என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு கொள்ளும்போது வெளியேறிய விந்து பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும். அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய நாள்களும் விலக்கப்பட வேண்டும்.  பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
    இந்த விவரம் அறிந்திருந்தால் தேவையில்லாமல் பெண் கருவுறவும், கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவும் வேண்டிய நிலை வராது!
    -உண்மை,16-31.10.15

    அதிகம் விந்து வெளியேறுவதால் ஆண்மை இழப்பார்களா?

    தொலைக்காட்சியில் சில மருத்துவர்கள் அச்சுறுத்துவது சரியா? இளைஞர்கள் கட்டாயம் அறிய வேண்டியவை!
    இரத்தம் வேறு. விந்து வேறு. விந்து ஒரு சுரப்பு. வாயில் எச்சில் ஊறுவதுபோல் விந்துப் பையில் விந்து சுரக்கும். எனவே, 60 சொட்டு இரத்தம் ஒரு சொட்டு விந்து என்பது தப்பு. விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பு ஏற்படும், உறுப்பு சிறுத்து, துவண்டு விடும்.
    உடலுறவு கொள்ள முடியாது என்று சில மருத்துவர்கள் அச்சுறுத்தி இலட்சக்-கணக்கான இளைஞர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக, மன உளச்சல் உடையவர்களாக, அச்சம் உடையவர்களாக ஆக்கி வைத்துள்ளனர். இளைஞர்களே இது உண்மையல்ல. சுய இன்பத்தில் ஈடுபட்டு, கையால் விந்தை வெளியேற்றுவது இளைஞர்களின் இயல்பு. இது நல்லது.
    தப்பான செயலில் ஈடுபடாமல் காக்கிறது. இதில் கேடு ஏதும் இல்லை. இதனால் ஆண்மை இழப்பு ஏற்படாது.
    உறுப்பு சிறுத்துப் போகாது; துவண்டு போகாது. அப்படி நினைத்து தன்னம்பிக்கை இழப்பதால்தான் இப்பாதிப்புகள் வருவதுபோல் தோன்றும். ஆனால், இது பொய். நமக்கு எந்த பாதிப்பும் வராது என்று தன்னம்பிக்கையோடு இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஈடுபட்டால் இதனால் எப்பாதிப்பும் இல்லை என்பதை அறியலாம். திருமணமான புதிதில் ஒரு நாளைக்கு நான்கைந்து முறைகூட உடலுறவு கொள்வர். இதனால் ஆண்மையோ, உடல் நலமோ பாதிக்கப்படுவதில்லை. ஆண்கள் 13 முதல் 14 வயதில் பருவம் அடைவர். அப்போது தனிமையில் கையால் விந்து வெளியேற்றி சுயஇன்பம் அடைவர்.
    இவ்வாறு வெளியேற்றவில்லை யெனில் இரவில் கனவில் தானே வெளியேறும். எந்தவொன்றும் அளவு மீறக்கூடாது என்பது இதற்கும் பொருந்தும். 14 வயதில் தினம் வெளியேற்றுவர். பின் வாரம் மூன்று நான்கு நாள்கள். அதன் பின் வாரம் ஒருமுறை என்று குறையும். இதனால் ஆண்மை இழப்போ.
    உறுப்பு தளர்வோ வரவே வராது. அப்படி வரும் என்ற தப்பான எண்ணத்தால்தான் உறுப்பு தளர்வு ஏற்படுகிறது. இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாலே உறுப்பு எழுச்சி நல்ல முறையில் இருக்கும். பொதுவாக ஆண்கள் 14 வயது முதல் 18 வயதுவரை தினம் விந்தை வெளியேற்றுவதை அல்லது ஒரு நாளைக்கு சிலமுறை வெளியேற்றுவதை தவிர்த்து, எப்போது உணர்வு கட்டுப்படுத்த முடியாத அளவிற்குச் செல்கிறதோ அப்போது தனிமையில் வெளியேற்றுவது சிறந்தது.
    தினம் செய்வதால் உடலின் பொலிவு, செழுமை குறையும். மற்றபடி ஆண்மை குறையாது. வாரம் ஒருமுறை இருமுறை சுயஇன்பத்தில் ஈடுபடுவது உடல் நலத்திற்கு நல்லது. 25 வயது முதல் 35 வயது வரை ஒருநாள் விட்டு ஒருநாள்; 35 வயது முதல் 45 வயது வரை வாரம் ஒருமுறை; 45 வயது முதல் 55 வயது வரை மாதம் இருமுறை. 55 வயது முதல் 70 வயது வரை மாதம் ஒரு முறை உடலுறவு கொள்வது அல்லது சுயஇன்பம் செய்வது நலம் தரும்.
    கோடைக்காலத்தில் அதிகம் விந்து வெளியேற்றப்படாமல் இருப்பது நல்லது. இவற்றைக் கருத்தில் கொண்டு இளைஞர்-கள் அளவு மிஞ்சாது அளவோடு இன்பம் அடைந்து மகிழ்வோடு வாழ வேண்டும்.
    மாறாக, இதைத் தவறாக எண்ணி அஞ்சி, தன்னம்பிக்கை இழந்து தளர்ந்து போகக் கூடாது.
    -உண்மை,1-15.11.15