திங்கள், 5 செப்டம்பர், 2016

மனித வலுவை கெடுக்கும் 6 காரணிகள்!


ரத்த சோகை: மனித வலுவை கெடுக்கும் முதன்மையான காரணங்களில் ஒன்று ரத்தசோகை. நம் உடலின் செல்களுக்கு ஆக்சிஜனும் ஆற்றலும் செல்வதற்கு ரத்த சிவப்பணுக்கள் முக்கியமான ஊடகமாக இருக்கிறது.
ரத்தசோகையால் ஒருவர் பாதிக்கப்படும்போது இரும்புச்சத்து குறைந்து, ரத்த அணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடுகிறது. இதன் காரணமாகவே ரத்தசோகை ஏற்பட்டவர்கள் சோர்வாக இருக்கிறார்கள். அதிலும், பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினை இது என்பதால் காரணம் தெரியாத சோர்வு கொண்டவர்கள் ரத்தப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சிறுநீரகப் பாதையில் தொற்று: சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தாலோ, அதற்கான சிகிச்சையை சமீபத்தில் எடுத்திருந்தாலோ உடல் சோர்வடையும். அதனால், சிறுநீரகத்தொற்று இருக்கிறதா, ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குறைபாடு முழுவதுமாக நீங்கிவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தைராய்டு பிரச்சினை: நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்றும் அளவான வளர்சிதை மாற்றம் உடலில் சரியாக செயல்பட வேண்டும். தைராய்டு குறைபாடு ஏற்பட்டால் இந்த வளர்சிதை மாற்றம் சரியான கட்டுப்பாட்டில் இருக்காது. எனவே, ஹைப்போதைராய்டு பிரச்சினை இருக்கிறதா என்று நாளமில்லா சுரப்பிகள் மருத்துவரிடம் சோதனை செய்து கொள்ளுங்கள்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல்: இரவில் நன்றாகத் தூங்கி எழுந்தபிறகு காலையில் ஃப்ரெஷ்ஷாக உணர வேண்டும். ஆனால், போதுமான அளவு தூங்கியும் சோர்வாக உணர் கிறீர்களா? அப்படியெனில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் பிரச்னை உங்களுக்கு இருக்கக் கூடும். தூக்கத்தின்போது இந்தக் குறைபாட்டை உங்களால் உணரமுடியாத பட்சத்தில், இரவில் குறட்டை விடுகிறீர்களா என்பதை உங்கள் துணையிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உண்மைதான் என்றால் தூக்கம் தொடர்பான சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு: சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்தில் பலருக்கும் அது தெரிவது இல்லை. அதனால், உடல் சோர்வாகவே இருப்பதாக உணர்ந்தால் அளவுக்கு அதிகமான சர்க்கரையைப் பராமரிக்க முடியாமல் உங்கள் உடல் திணறுகிறது என்று புரிந்து கொள் ளுங்கள். குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தாலோ, பருமன் இருந்தாலோ, நீங்களும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
மன அழுத்தம்: உள்ளம் தான் உடலுக்கு மருத்துவர். மனம் சோர்வடைந்தால் உடல் செயல்படாது என்பது ஊரறிந்த உண்மை.
பசியின்மை, எதிர்மறை எண்ணங்கள், கவலை என மனரீதியாக ஒருவரை முடக்கும் திறன் கொண்டது மன அழுத்தம். எனவே, மன அழுத்தம் இருப்பதாக உணர் கிறவர்கள் மன நல மருத்துவரை சந்தித்துத் தேவையான ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இழந்த எனர்ஜியை மீட்க உதவும்.
விடுதலை நாளேடு,5.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக