வயதானவர்களை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் முழங்கால் மூட்டுவாதம் தற்போது அதிகம் தாக்க ஆரம்பித் திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது சார்ந்த மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளும்போது, இது புரிய ஆரம் பிக்கும்.
முழங்கால் மூட்டு
முழங்கால் மூட்டு நமது உடம்பில் உள்ள எல்லா மூட்டுகளை விடவும் பெரிதான மூட்டு. இது ஃபீமர் எனப்படும் தொடை யெலும்பு, டிபியா எனப்படும் கணுக்காலோடு இணையும் நீண்ட எலும்பு, முழங்கால் சில்லை இணைக்கக் கூடியது. இது நமது உடல் எடையைத் தாங்கவும், விளையாட்டு, உடற்பயிற்சி, மற்ற கடினமான வேலைகளின்போது அவற்றால் ஏற்படும் அழுத் தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூட்டுவாதம் என்றால் என்ன?
இடுப்பு, முழங்கால் போன்ற உடல் எடையைத் தாங்கும் மூட்டுகளைப் பொதுவாகவும், வெகு குறைவாகச் சிறிய விரல் மூட்டுகளைப் பாதிக்கும் பிரச்சினை மூட்டு நோய் எனப்படுகிறது.
முழங்கால் மூட்டுவாதம் யாரை பாதிக்கும்?
சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும், மூட்டுவாதம் முதுமை காரணமாக ஏற்படும் நோய் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த நிலைப்பாடு இப்போது மாறி, 40-45 வயதிலும்கூட அது தாக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. முழங்கால் மூட்டுவாதம் ஏற்படுவதற்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகின்றனர்:
40 வயதுக்கு மேற்பட்டவர்கள்
பெண்கள்
உடல்பருமன் கொண்டவர்கள்
இளம்வயதில் முழங்கால் காயமடைந்தவர்கள் அல்லது அதற்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
பலவீனமான முழங்கால் தசைகளைக் கொண்டவர்கள்
மூட்டுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்பவர்கள்
அதிதீவிர உடற்பயிற்சிகளைச் செய்பவர்கள்
மூட்டுவாதத்தால் மூட்டுக்குள் என்ன நடக்கிறது?
முதுமை காரணமாக வலுவிழக்கும் மூட்டின் உள்ள மைப்புகள், அதிக உடல் எடை, காயம், தசை வலிமையின்மை போன்ற காரணங்களால் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, மூட்டின் குருத்தெலும்பு மெல்லத் தேயத் தொடங்கிச் சிதைய ஆரம்பிக்கிறது.
இதற்கு எதிர்வினையாக, மூட்டு எலும்புகளின் நுனியில் சிறு ஊசிகள் போன்று புதிய எலும்பு வளரத் தொடங்கி நுண்நரம்புகளைக் குத்தி வலியை ஏற்படுத்தும். இவை மட்டுமல்லாது மூட்டுஉறை, தசைநார்கள் தடித்துச் சுருங்கி ஒட்டுமொத்த மூட்டையும் உருக்குலைக்கும். இப்படி மூட்டின் அனைத்து அமைப்புகளும் பாதிக்கப்படுவதால் இது முழு மூட்டு நோய் என்று அழைக்கப்படுகிறது.
முழங்கால் மூட்டுவாதத்தின் அறிகுறிகள் என்ன?
மூட்டு வலி, 30 நிமிடங்களுக்கு மிகாத மூட்டு விறைப்புத் தன்மை, மூட்டு வீக்கம், மூட்டை முழுதாக மடக்க அல்லது நீட்ட முடியாத நிலை, மூட்டை அசைக்கும்போது ஏற்படும் உராய்வு சத்தம் போன்றவை.
அன்றாட பிரச்சினைகளைப் பொறுத்தவரை, நடப்பது, மாடிப்படி ஏறுவது, நிற்பது, எழுந்திருப்பது, காலை மடக்கி உட்காருவது, கழிவறையைப் பயன்படுத்துவது போன்ற சாதாரண நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமமும் அயர்ச்சியும் ஏற்படும். மேலும், வீட்டு விசேஷங்களில் பங்கெடுப்பது, பண்டிகைகளைக் கொண்டாடுவது, பொழுதுபோக்குச் செயல் பாடுகள், விளையாட்டுகளில் பங்கேற்பது உள்ளிட்டவையும் கேள்விக்குறியாகும். சுருக்கமாக, ஒரு நபரின் செயல்பாடு, வாழ்க்கைத் தரத்தில் குறைவு ஏற்படும்.
மூட்டுவாதத்தால் சாதாரண இயங்கு நிலையிலிருந்து, 'மூட்டுச் செயலிழப்பு' என்ற இறுதி நிலையை எட்டுவதற்குச் சராசரியாக 10-15 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், மூட்டுவாதம் கொண்ட வர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான அறிகுறிகள், அன்றாடப் பிரச்சினைகள், சிகிச்சைக்கான தேவைகளைக் கொண்டிருப்ப தில்லை.
சிலருக்கு மிதமான அளவில் பிரச்சினைகள் இருக்கலாம், வேறு சிலருக்கு மூட்டு-மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மிகக் கடுமையான பிரச்சினை இருக்கலாம். ஒவ் வொருவருக்கும் ஏற்றவாறு வலி நிவாரணி, மருந்தில்லா சிகிச் சைகள், மூட்டு-மாற்று அறுவைசிகிச்சை எனப் பல்வேறுபட்ட சிகிச்சைத் தேர்வுகள் உள்ளன.
முழங்கால் மூட்டுவாதத்தைக் குணப்படுத்துவது இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால், முழங்கால் மூட்டுவாதம் உரு வாவதை முன்கூட்டியே தடுப்பதற்கு, கண்டறிந்தவுடன் மோசமடையாமல் கட்டுப்படுத்துவது பெருமளவில் சாத்தியமே. அவற்றில் மிக அவசியமானவை: உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி, மூட்டின் மீதான அழுத்தத்தைக் குறைத்தல்
உடல் எடை குறைப்பு
ஆரோக்கியமான உடல் எடையைவிட அதிகரிக்கும் ஒவ் வொரு 5 கிலோவுக்கும் முழங்கால் மூட்டுவாதத்துக்கான ஆபத்து 36 மடங்கு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.
அதிக உடல் எடை மூட்டுவலியை அதிகமாக்கி, உடலியக்கத்தைக் குறைக்கும், அதனால் மேலும் எடை கூடித் தசைகள் வலுவிழந்து, மூட்டு அழுத்தம், வலி அதிகரிப்பு போன்றவற்றின் சுழற்சி மீண்டும் ஏற்படுகிறது. அதிக எடை கொண்டவர்களில், மூட்டு வாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக மொத்த எடையில் 10% வரை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப் படுகிறது.
உடல் எடையைக் குறைப்பதற்கு, உணவு மாற்றம் மட்டு மல்லாமல் முழு உடல் சார்ந்த உடற்பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது குறிப்பிடத்தக்க பலன் கிடைக்கும். அதே போல், எடையைக் குறைத்த பின்னர், அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒரு உடற்பயிற்சி நிபுணர், உணவியல் வல்லுநர் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பதும் பயனளிக்கும்.
காலுக்கான உடற்பயிற்சிகள்
வலுவற்ற முழங்கால் தசைகள் மூட்டுவாதம் உண்டாவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்பதால், அவற்றைப் பலப்படுத்துவது அவசியம். ஒரு பிசியோதெரபிஸ்ட்டின் கண்காணிப்பில் தொடர்ச்சியாகச் செய்யப்படும் தசை வலிமைப் பயிற்சிகள் (குறிப்பாகக் குவாட்ரி செப்ஸ் எனப்படும் முன்தொடை தசை அல்லது முழு காலுக்கான வலிமை பயிற்சிகள்), நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது போன்ற ஏரோபிக் பயிற்சிகளை ஆறு மாதங் களுக்குச் செய்துவந்தால் மூட்டுவலி குறைந்து, செயல்பாடு அதிகரித்து, வாழ்க்கைத் தரம் மேம்படுத்துவது நிரூபிக்கப் பட்டுள்ளது.
நடப்பது, மிதிவண்டி ஓட்டும் உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவையா?
மூட்டுவாதம் கொண்டவர்கள் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்து உடல் செயல்பாடின் மையை முடிந்தவரை குறைக்க வேண்டும். உலகச் சுகாதார நிறுவனம் 19 முதல் 64 வரை வயது உடையவர்களின் ஆரோக்கியத்துக்குக் குறைந்த பட்சம் வாரத்துக்கு 150 நிமிடங்கள் துடிப்பான நடைப்பயிற்சி, யோகா, மிதிவண்டி ஓட்டுவது போன்ற மிதமான ஏரோபிக் பயிற்சி களைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
இந்த உடற்பயிற்சி வழிகாட்டல்கள் மூட்டுவாதம் உடைய வர்களுக்கும் பொருந்தும். ஆரம்பத்தில் சிறிது சிரமமாகத் தெரிந் தாலும், உங்களால் முடிந்த மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியைச் செய்ய முயற்சியுங்கள். 150 நிமிடங்களை 40-50 நிமிடங்கள் எனப் பிரித்துக்கொண்டு வாரம் 3 அல்லது 4 நாட்கள் செய்யலாம். இதுவரை உடற்பயிற்சியே செய்யாதவர்கள், வாரம் 150 நிமி டங்களை அவசரப்படாமல் படிப்படியாக அடை வதை இலக்காகக் கொண்டு செயல்படலாம். வாய்ப்பிருந்தால் கால்கள், இடுப்பு, முதுகு, வயிறு, கைகளின் தசைகளுக்கு வலிமை தரும் பயிற்சியை வாரம் இரண்டு முறை செய்தால், மேலும் பலன்கள் கிடைக்கும்.
உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவாதம் மேலும் மோசமடையும் என்ற அச்சம் தேவையில்லை. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் ஏற்படப் போகும் பாதிப்புகளைவிட, தொடர்ச்சியான உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கி, வலியைக் குறைத்து, உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருந்து, மூட்டின் ஆரோக் கியத்தை மேம்படுத்தி நன்மையே செய்யும்.
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் கூடுதல் பயன்கள்: இதய நோய், நீரிழிவு நோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்; உடல் எடையைச் சீராக வைத்திருக்க முடியும்; மனச் சோர்வு, பதற்றம் இல்லாமல் புத்துணர்வுடன் இருக்க முடியும்; அன்றாட வேலைகளைச் செய்யும் திறனைப் பராமரிக்க முடியும்.
முழங்கால் மூட்டில் அதிகப்படி அழுத்தத்தைக் குறைப்பதற்கான எளிய வழிகள்
மூட்டு வலி, அதிகப்படியான மூட்டு அழுத்தத்தைக் குறைக்க வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தலாம்
மாடிப்படி ஏறும்போது, பக்கவாட்டு பிடியைப் பிடித்துக் கொண்டு ஏறலாம்
மாடிப்படி ஏறும்போது, பாதிக்கப்படாத/அல்லது குறை வாக வலியுள்ள காலை முதலில் வைத்து ஏறவும்
வெகு நேரம் காலை மடக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டாம்
ஹை-ஹீல்ஸ் செருப்புகளை அணிய வேண்டாம். இது இடுப்பு, பாதம், முழங்காலின் அமைப்பை மாற்றி மூட்டு களில் கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தும்
நீங்கள் கடினமான உடலுழைப்பு தேவைப்படும் வேலையைச் செய்பவரானால், உங்கள் வேலையைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் செய்யலாம் அல்லது தேவைக்கேற்றவாறு மற்றவர் உதவியைப் பெறலாம்.
-விடுதலை,19.12.16