வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

மாரடைப்புக்கு பயோமார்க்கர் பரிசோதனை அவசியமா?


ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை முன்னரே தெரிவிக்க பயோமார்க்கர் பரிசோதனை உள்ளது. இது அனைவருக்கும் அவசியமில்லை. முதலில் பயோமார்க்கர் என்றால் என்ன என்று பார்ப்போம்.

பயோமார்க்கர் - எச்சரிக்கை மணி

உடலில் குறிப்பிட்ட நோய் உள்ளது அல்லது நோய் வர வாய்ப்புள்ளது என்பதை உறுதிப்படுத்தும் உடலியல் உயிர்ப் பொருளுக்கு ‘பயோமார்க்கர்’ என்று பெயர். இது புரதம், கொழுப்பு, மரபணு, என்சைம் என எதுவாகவும் இருக்கலாம். களவுபோன வீட்டில் கைரேகைகளைப் பார்த்துத் திருடனைக் கண்டுபிடிப்பதுபோல, ஒருவர் ரத்தத்தில் குறிப்பிட்ட பயோமார்க்கர் காணப்பட்டால் அவருக்கு அந்த பயோமார்க்கருக்குரிய நோய் உள்ளது என்று முடிவு செய்யப்படும். அதன்மூலம் ஆரம்பகட்டத்தில் உள்ள நோய்களைக் கண்டுபிடித்துத் தடுத்துவிடலாம்.

மாரடைப்புக்கான பயோமார்க்கர்கள்  

1. ஹோமோசிஸ்டீன் பயோமார்க்கர்

ஹோமோசிஸ்டீன் என்பது ஓர் அமினோ அமிலப்புரதம். இது 100 மில்லி ரத்தத்தில் 12 மைக்ரோமோல்ஸுக்குக் கீழ் இருந்தால் இயல்பு அளவு. இது 16 மைக்ரோமோல்ஸ் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து நான்கு மடங்கு அதிகம் என்று அமெரிக்க இதயநலக் கழகம் உறுதி செய்துள்ளது.

குடும்பத்தில் இளம் வயதிலேயே மாரடைப்பால் யாரேனும் மரணம் அடைந்திருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவருமே இந்தப் பரிசோதனையை ஆண்டுதோறும் செய்துகொள்வது நல்லது.

2. லிப்போ புரோட்டீன்  ஏ பயோமார்க்கர்

இது ஒரு வகை கொழுப்புப் புரதம். இதயத்துக்குக் கெட்ட கொலஸ்டிராலைச் சுமந்து செல்கிற ரத்த வாகனம். இது தமனி நாளங்களைப் புண்ணாக்கி ரத்த உறைவை அதிகப்படுத்தும். மற்றவர்களைவிட பரம்பரையில் மாரடைப்பு ஏற்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள், சிறுநீரகப் பிரச்சினை, ஈஸ்ட்ரோஜன் பிரச்சினை, கட்டுப்படாத நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதன் அளவு அதிகரித்து மாரடைப்பை வரவேற்கும். 100 மில்லி ரத்தத்தில் இது 20-லிருந்து 30 மில்லி கிராம்வரை இருக்க வேண்டும். இதன் அளவு அதிகரித்தால் இதயத்துக்கு ஆபத்து என்கிறது சர்குலேஷன் எனும் மருத்துவ ஆய்விதழ்.

3. அப்போலிப்போ புரோட்டீன்  பி பயோமார்க்கர்

இதில் இரு வகை உண்டு. அப்போலிப்போ புரோட்டீன்  பி 48, அப்போலிப்போ புரோட்டீன்  பி 100. இரண்டாவதுதான் இதயத்துக்கு ஆபத்தைத் தருகிறது. இதன் அளவு அதிகரித்தாலும் மாரடைப்புக்கு வாய்ப்புள்ளது.

4. ஃபைப்ரினோஜன் பயோமார்க்கர்

நம் ரத்தம் உறைவதற்குத் தேவைப்படும் ஃபைப்ரினோஜன் எனும் சத்துப்பொருள் 100 மில்லி ரத்தத்தில் 150-லிருந்து 400 மில்லி கிராம்வரை இருக்க வேண்டும். இந்த அளவு அதிகமானால் இதயத்துக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். எவ்வாறெனில், இயல்பான ரத்த ஓட்டத்தில் தட்டணுக்கள் தனித்தனியாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், ஃபைப்ரினோஜன் அதிகமாக உள்ளவர்களின் ரத்த ஓட்டத்தில் இவை ஒரு திராட்சைப் பழக்கொத்துபோல ஒட்டிக்கொண்டு ஓடும். அப்போது இதயத் தமனி போன்ற மிகச் சிறிய ரத்தநாளங்கள் எளிதில் அடைத்துக்கொள்ளும், இதனால் மாரடைப்பு ஏற்படும்.

5. ட்ரோப்போனின் பயோமார்க்கர்

தற்போது மாரடைப்பை முன்னரே அறியப் பயன்படும் முக்கியமான பரிசோதனை இதுதான். ட்ரோப்போனின் அய் மற்றும் டி  எனும் புரதங்களின் அளவை ரத்தத்தில் அளந்து இதயத்தின் நிலைமையை அறிந்துகொள்ள இது உதவுகிறது. இதன் அளவு பொதுவாக மாரடைப்புக்கான சிறு அறிகுறிகள் ஏற்பட்ட நான்கு மணி நேரத்தில் அதிகரிக்கத் தொடங்கி, இரண்டு வாரங்களுக்கு அதே அளவில் நிலைத்திருக்கும்.

6. கிரியேட்டின் பாஸ்போகைனேஸ் பயோமார்க்கர்

கிரியேட்டின் பாஸ்போகைனேஸ்  எனும் என்சைமை அளந்தும் மாரடைப்பை முன்னரே அறிய முடியும். இதன் இயல்பு அளவு 10 முதல் 120  னீநீரீ/லி.  இந்த அளவு அதிகமானால் மாரடைப்புக்கான சாத்தியம் உள்ளது என அறியலாம்.

யாருக்கு அவசியம்?

மாரடைப்புக்கான பயோமார்க்கர் பரிசோதனைகள் எல்லோருக்கும் பயன்தரக்கூடியதுதான் என்றாலும், பரம்பரையாக மாரடைப்பு நோய் உள்ளவர்கள், நாட்பட்ட புகைப் பழக்கம், கட்டுப்படாத உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பருமன்,  அதிக மன அழுத்தம், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு உள்ளவர்கள் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதா என்பதை முன்னதாகவே தெரிந்துகொள்ள, மேற்கண்ட பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக இருந்து ஆபத்தைத் தவிர்க்கலாம்.
-விடுதலை,31.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக