திங்கள், 3 செப்டம்பர், 2018

சிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்!

சிறுநீரக பாதிப்பு என்பது வயது வித்தியாசம் இல்லாமல், ஆண்-பெண் வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் ஏற்படக் கூடியது. ஒருவருக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைவதற்குப் பலவிதமான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். சிறுநீரக செயல் இழப்பு என்பதைத் தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல், நிரந்தரமாக சிறுநீரகம் செயல் இழத்தல் என இரண்டு வகையாகப் பிரித்து கொள்ளலாம்.


இவற்றில் முதல் வகையான தற்காலிகமாக சிறுநீரகம் செயல்படாமல் போதல், சில மணி நேரங்கள் அல்லது ஒன்றிரண்டு நாட்கள், வாரங்கள் எனக் குறுகிய காலத்தில் ஏற்படக் கூடியதாகும். சிறுநீர்ப் பாதையில் தொற்று, சிறுநீர் கழிக்கும்போது அளவுக்கு அதிகமாக புரதம் வெளியேறும் நோய், சிறுநீரகங் களில் உண்டாகும் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக அழற்சி, சிறுநீர் பாதையில் கற்கள் உருவாதல் போன்றவை தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல் வகையில் இடம் பெறும்.

சிறுநீரகங்கள் தற்காலிகமாக செயல் இழக்கும்போது, பலவிதமான ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வாந்தி, கருவுற்ற பெண்களுக்கு அதி களவில் ரத்தம் வெளியேறுதல், எலிக் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் உட்பட ஏராளமான பிரச்சினைகள் தோன்றும். மருத்துவர் ஆலோசனைப்படி முறையாக டயாலிசிஸ் செய்து, மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தால் தற்காலிகமாக செயல் இழப்பதை முழுவதுமாக குணப்படுத்திவிடலாம்.

சிறுநீரகம் இரண்டும் நிரந்தரமாக செயல்படாமல் போதல் என்பது உடனடியாக நடந்துவிடாது. மாதக்கணக்காக, பல ஆண்டுகளாக கொஞ்சகொஞ்சமாகத்தான் நடைபெறும். சர்க்கரை நோய், பல நாட்களாக சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுதல் போன்றவைதான் சிறுநீரகங்கள் நிரந்தரமாக செயல்படாமல் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படுகிற பரம்பரை நோய்கள், பிறவிக் குறைப்பாடு காரணமாக, சிறுநீரக வளர்ச்சியில் உண்டாகிற குறைப்பாடுகள், சிறுநீர்ப் பாதையில் தொற்று மற்றும் அடைப்பு, சிறுநீரில் கட்டுக்கு அடங்காமல் புரதம் வெளியேறுதல் முதலானவை மழலைப் பருவத்தில் ஏற்படுகின்ற முக்கியமான சிறுநீர் பிரச்சினைகள் என்று சொல்லலாம். ஒருவருடைய சிறுநீரகம் செயல் இழந்து வருகிறது என்பதை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுத்தல் போன்ற பரிசோத னைகளைச் செய்வதன் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

சிறுநீர் பாதையில் எரிச்சல், நீர் கடுப்பு, யூரின் போகும்போது கடுமையான வலி, தொடர்ச்சியாக வெளியேறாமல் சொட்டுசொட்டாக வெளியேறல், சிறுநீர் கழிக்க முடியாத உணர்வு, கை, கால்கள் வீக்கம் அடைதல், தாங்க முடியாத முதுகு வலி, பசியின்மை, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறல், தோலின் நிறம் வெளுத்துப் போதல், யூரின் நிறம் மாறுதல், சாப்பிடும்போது குமட்டல் உணர்வு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போதல், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற பிரச்சினைகள் போன்றவை மெல்லமெல்ல தோன்ற ஆரம்பிக்கும். திடகாத்திரமான உடல்நலம் கொண்டு இருந்தாலும் வருடம் ஒரு முறை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

சிறுநீரகம் செயல் இழப்பைக் குணப்படுத்தவும், அதனால் ஏற்படுகிற மற்ற பாதிப்புக்களை சரி செய்யவும் தற்போது நவீன சிகிச்சைகள் நிறைய உள்ளன. நோயாளியின் உடல்நலத்தைப் பொறுத்தும், நோயின் தீவிரத்தைப் பொறுத்தும் சிகிச்சைகள் அமையும்.

- விடுதலை நாளேடு, 3.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக