இன்று உலக மக்கள் தொகையான 760 கோடியில் 10 முதல் 12 சதவிகிதம் வரை நெருங்கிய ரத்த சம்பந்த உறவில்தான் திருமணம் (Consanguineous marriages) செய்து கொள்கிறார்களாம்! காரணம் இதில் குடும்பப் பின்னணியை ஆராயத் தேவையில்லை; தலைமுறை உறவுகள் நீடிக்கும்; குடும்பச் சொத்துக்கள் மற்றவர் கைகளுக்குப் போகாது என்று பல காரணங்கள்.
வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் பலவற்றில் இப்பழக்கம் கலாசார ரீதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. சில அய்ரோப்பிய நாடுகளிலும் நெருங்கிய சொந்தத்தில் மணம் செய்வதுண்டு.
நம் நாட்டில் தாய்வழி உறவுகளில் முறை மாப்பிள்ளை, முறைப்பெண் என்று தேர்ந்தெடுத்து மணம் முடிக்கும் வழக்கம் இருக்கிறது.
பெற்றோர், உடன்பிறப்புகள், பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை அவர்களுடைய வாரிசுகள் இரத்த உறவுகள் ஆகும்.
உலக வரலாற்றில் நெருங்கிய ரத்த சம்பந்த உறவு திருமணங்கள் :
அரச பரம்பரை வாரிசுகளில் சிலர் நோஞ்சானாக இருந்தார்கள்; பலருக்கு ரத்தம் உறைவதில் சிக்கல் (Hemophila) இருந்தது; மனநலம் குன்றி அவலட்சணத்துடன் இருந்த ஸ்பெயின் மன்னர் சார்லஸ்மிமி 1700ஆம் ஆண்டு இறந்தபோது வாரிசு இல்லாமல் அந்த வம்ச ஆட்சியே முடிவுக்கு வந்தது.
உறவில் மணம் செய்த டார்வினின் மூன்று குழந்தைகள் இளம் பிராயத்திலே நோய்வாய்ப்பட்டு இறந்து போயின; மேலும் மூவருக்கு வாரிசுகள் இல்லாமல் போயின. டார்வினே நோய்வாய்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்கு அவருடைய தாத்தாவும் பாட்டியும் நெருங்கிய ரத்த சம்பந்த உறவினர்கள் என்பதே காரணம்.
பின்னாளில் டார்வினின் நான்கு தலைமுறைகளை ஆராய்ந்தவர்கள் நெருங்கிய சொந்தத்தில் மணமுடித்தவர்களின் வாரிசுகளில் சிலருக்கு பிறவிக் குறைபாடுகள் இருந்ததை உறுதி செய்தார்கள். உறவுத் திருமணங்களில் பிறந்த குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் உண்டாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பது உறுதி ஆயிற்று.
உறவுத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளில் சிலருக்கு வாய் பேசாமை, காது கேளாமை, இதயக் கோளாறுகள், மனநலம் பாதிப்பு போன்றவை உண்டாவதைக் காணமுடிகிறது.
காரணம் என்ன?
ஒரு மனிதக் கரு உருவாகும்போது தாயிடம் இருந்த 23 குரோமோசோம்களையும் தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம்களையும் பெறும். அவற்றில் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் (Genes) இருக்கும்.
இதில் ஒரு குறிப்பிட்ட குரோமோசோம் ஜோடிதான் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தீர்மானிக்கும் பெண்ணின் அந்த குரோமோசோமில் X, X என்று ஒரே ரக உயிரணுக்கள் இருக்கும். ஆணில், X, சீ என்று மாறுபட்டு இருக்கும். X உடன் X சேர்ந்தால் பெண்; X உடன் சீ சேர்ந்தால் ஆண்! ஆணா பெண்ணா என்று திர்மானிப்பது ஆணின் விந்தில் இருக்கும் குரோமோசோம்களே.
மற்ற 22 குரோமோசோம் ஜோடிகளில் நிறம், அங்க அமைப்பு, ஆரோக்கியம் உட்பட பல்வேறு பரம்பரை இயல்புகள் பதிவாகியிருக்கும்.
இந்த ஜோடிகளில் இருக்கும் அணுக்களில் ஆதிக்கம் செலுத்துபவை (Dominant), அடங்கி இருப்பவை (Recessive) என்று இருவகை உண்டு.
முன்னோர்களின் பண்புகள்தான் மரபணு மூலம் மணமக்களுக்கு வரும். இப்படி ஒரே பண்புடன் கூடிய மரபணுக்கள் (Homozygotes) தம்பதியினர் இருவர் மூலமும் குழந்தைக்கு வருவதுதான் இச்சிக்கலுக்குக் காரணம். ஒடுங்கி இருக்கும் ஒரே வகை குறைபாடுகள் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளாக (Autosomal recessive disorders) வெளிப்படுகிறது.
- உண்மை இதழ், 1-15.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக