இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அவசியம். நாளொன்றுக்கு 3 வேளை அதிகமாக உண்பதைவிட, சிறிது சிறிதாகப் பலமுறை உண்பது நல்லது. இரவு உணவைத் தூங்கச் செல்வதற்கு 2-3 மணி நேரத்துக்குமுன் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டும். இரவில் சர்க்கரை, தயிர், தேங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சிமுன் அமர்ந்து உணவு உண்பதைத் தவிர்ப்பது நன்று. பீட்சா, பர்க்கர் போன்ற பாஸ்ட்ஃபுட் உணவு வகைகள் இதயத்துக்கு ஆகாது. நாளொன்றுக்குக் குறைந்தது 5 முறை பழங்களையும் காய்கறி களையும் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. பப்பாளிப் பழத்தைக் காலை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. முடிந்தால் தினமும் வால்நட் பருப்பைச் சாப்பிடலாம். எண்ணெய்யில் பொரித்த மீனையும் இறைச்சி யையும் தவிர்ப்பது நல்லது.
உப்பு அதிகம் தவறு
உணவில் அதிகப்படியான உப்பைச் சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தத்தை உரு வாக்கும். உணவைச் சமைத்த பின், அதாவது சாப்பிடும்போது உப்பைச் சேர்க்கக் கூடாது. ஏற்கெனவே உப்பு அதிகம் சேர்த்துத் தயார் நிலையில் உள்ள நூடுல்ஸ், சிப்ஸ், முட்டை, சாஸ், கெட்ச்அப் போன்றவை உடலுக்குக் கேட்டையே விளைவிக்கும். உப்புக்குப் பதிலாக வெங்காயம், பூண்டு, மிளகு, எலு மிச்சைச் சாறு போன்றவற்றை ருசிக்குப் பயன்படுத்தலாம்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த...
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஊறுகாய், அப்பளங் களைத் தவிர்ப்பது எளிய வழி. இளநீர், வாழைப்பழம், ஆரஞ்சு, எலு மிச்சைச் சாறு போன்றவற்றில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. உடலுக்குத் தேவையான (90ml/dl) பொட்டாசியத்தை எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே, இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது.
நல்ல கொழுப்பை அதிகமாக்க...
குழம்பு மீன், வால்நட், கிரீன் டீ, காலை உணவில் பப்பாளி, கீரை வகைகள் போன்ற வற்றை வாரத்துக்கு 2 முறையும் பாதாம் பருப்பை வாரத்துக்கு 2-3 முறையும் உட் கொள்வது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். மது அருந்துவதைத் தவிர்ப்பது உடல் நலனுக்கும் குடும்ப நலனுக்கும் நன்று. சால்மன் போன்ற ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளைச் சாப் பிட்டால், உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும், ரத்த அழுத்தம் குறையும், ரத்த நாளங்களில் ரத்தம் உறைவது தடைபடும், மாரடைப்பு ஏற்படும் ஆபத்து நீங்கும்.
ரத்த குழாய்களில் அடைப்பு
கொழுப்பால் உண்டாகும் அடைப்புக்கு அத்திரோமா (Atheroma) என்று பெயர். இந்த அத்திரோமா இதயத்துக்கு நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் மட்டு மல்லாமல்; மூளை, சிறுநீரகங்களுக்குச் செல் லும் ரத்தக் குழாய்களிலும் அடைப்பை ஏற் படுத்துகிறது. நெய், வெண்ணெய், முட்டை, மாமிசம், மூளை, ஈரல் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நன்று. போதிய உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பதே உடலில் கொழுப்பு சேர்வதற்கு முக்கியக் காரணம்.
டிரான்ஸ்பேட் எனும் எதிரி
உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், டிரான்ஸ்ஃபேட்-அய் (Transfat)
அதிகம் பயன்படுத்துகின்றன. பிஸ்கெட், பொரித்த உணவு, ரஸ்க், ரொட்டி, பன், கேக், மின் அடுப்பில் பொரிக்கப்பட்ட பாப்கார்ன், பீட்சா, பர்க்கர், பிரெஞ்சு பிரை, சாக்லேட், ஐஸ்கிரீம்கள் ஆகியவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகம் உள்ளது. டிரான்ஸ்பேட் உணவால் உடல் பருமன் அதிகமாவதுடன், நல்ல கொழுப்பின் (HDL) அளவு குறைந்து கெட்ட கொழுப்பின் (LDL) அளவு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கிறது. மேலும், ரத்தத்தில் triglyceride என்னும் கெட்ட கொழுப்பின் அளவும் அதிகமாகிறது. எனவே, டிரான்ஸ்ஃபேட் அதிகம் உள்ள உணவை அறவே தவிர்ப்பது இதய நலனுக்கு நன்று.
எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?
கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய்யில் சரிக்குச் சமமாக நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பும் உள்ளன. நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது. சூரியகாந்தி எண்ணெய் குறைந்த அடர்த்திகொண்டது. அதில் PUFA வகைக் கொழுப்பு அதிகமாக உள்ளது. இந்தக் கொழுப்பு உடலுக்கு நல்லது. பாமாயிலில், அடர் கொழுப்பு உள்ளதால் அறவே தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் (30 கிராம்) அளவு எண்ணெய் போதுமானது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு 3 டீஸ்பூன் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வறுவலுக்கு ஏற்ற எண்ணெய்
எண்ணெய்யை அதிகப்படியாகச் சூடு படுத்தும்போது, ரசாயன மாற்றம் ஏற்பட்டு அதனால் புற்றுநோய் ஏற்படச் சாத்தியம் உள்ளது. அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியதாகவும், நுரையும் புகையும் ஏற்படுத்தாத நல்லெண் ணெய்யே வறுவலுக்கு ஏற்ற எண்ணெய் ஆகும். கடலை எண்ணெய்யையும் வறுவலுக்குப் பயன்படுத்தலாம்.
எண்ணெய்யைப் பாதுகாக்க...
எண்ணெய் பாக்கெட்டில் TFA-வின் அளவு குறிப்பிட வேண்டும் எனச் சட்ட மாக்கப்பட்டுள்ளதால், TFA இல்லாத எண் ணெய்களை வாங்க வேண்டாம். பிளாஸ்டிக், டின்களில் வாங்கப்படும் எண்ணெய்யை உடனடியாக இரும்பு, அலுமினியம் அல்லது கண்ணாடி பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண் டும். சமையல் எண்ணெய்யைக் குளிர் நிறைந்த, வெளிச்சம், ஈரமில்லாத பாத்திரத்தில் இறுக மூடி (காற்றுப்புகாதவாறு) பாதுகாக்க வேண்டும்.
ஆயுளை நீட்டிப்போம்
இங்கு உள்ள எளிய குறிப்புகளைப் பின்பற்றினால், இதயத்தின் நலன் மேம்படும். இதயத்தின் நலனே மனிதனின் நலனுக்கு அடிப்படையானது. இதய நலனை நன்கு பேணினால், உடலின் நலன் மட்டுமல்ல; நமது ஆயுளும் நீடிக்கும்.
- விடுதலை நாளேடு, 11.2.19