புதன், 6 பிப்ரவரி, 2019

நம்பிக்கை தரும் புதிய புற்றுநோய் சிகிச்சைகள்

இன்று (பிப்ரவரி-4) உலகப் புற்றுநோய்


விழிப்புணர்வு நாள்




இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கும் மேலானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கிறார்கள். புற்றுநோய் விழிப்புணர்வின் போதாமைகளும், வரும்முன் காக்கத் தவறுவதும்,  தொடக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறு வதும், அடித்தட்டு மக்களைச் சென்றடையாத புற்றுநோய் சிகிச்சைகளும்தாம் இந்த இறப்புக்குக் காரணங்கள் என ‘இந்தியப் புற்றுநோய்க் கழகம்’ பட்டியலிட்டுள்ளது.

புற்றுநோய்க்கு சிகிச்சை


மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, பேலியேட்டிவ் சிகிச்சை போன்றவை புற்றுநோயை மட்டுப் படுத்துகின்றன. முழுமையாகவும் களைகின்றன புற்று நோயின் வகை, இடம், நிலை ஆகியவற்றைப் பொறுத்து இந்த சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கதிர்வீச்சு சிகிச்சை


எக்ஸ்-ரே கருவியின் துணையுடன் கதிர்வீச்சுப் பொருள்களை உடலுக்குள் அனுப்பிப் புற்றுநோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறையே கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy). மனித உடலில் நேரடி விளை வையும் மறைமுக விளைவையும் இந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது. நேரடி விளைவால் உடல் செல்களின் ‘டிஎன்ஏ’க்கள் அழிகின்றன. மறைமுக விளைவால் புற்றுநோய் செல்கள் அழிகின்றன. புற்றுநோய் செல்கள் மீண்டும் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதே கதிர்வீச்சு சிகிச்சையின் முக்கிய நோக்கம்.

கதிர்வீச்சு முறைகள்


கதிர்வீச்சில் வெளிக்கதிர் வீச்சு, உட்கதிர் வீச்சு என இரு உட்பிரிவுகள் உண்டு. வெளிப்புறத்திலிருந்து தோல் வழியாக நோயாளியின் உடலுக்குள் கதிர்களைச் செலுத்தி, புற்றுநோய் செல்களை அழிப்பதே வெளிக்கதிர் வீச்சு. இது ‘டெலிதெரபி’ (Teletherapy) என்றும் அழைக்கப்படுகிறது. உதாரணம், நுரையீரல் புற்றுநோய்க்குத் தரப்படும் சிகிச்சை.

கதிர்வீச்சை உமிழும் அய்சோடோப்புகளை உடலுக் குள் செலுத்தி, அதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பதே ‘பிரேக்கிதெரபி’ (Bracytherapy) எனப்படும் உட்கதிர் வீச்சு. இந்தக் கதிர்வீச்சு தோல் வழியாகச் செல்வ தில்லை. பெரும்பாலும் குறிப்பிட்ட அளவுக்கு வெளிக்கதிர் வீச்சு கொடுக்கப்பட்ட பிறகு, உட்கதிர் வீச்சு தரப்படுகிறது. உதாரணம், உணவுக்குழாய்ப் புற்று, கருப்பைவாய்ப் புற்று.

பழைய கதிர்வீச்சு முறை


பழைய முறை கதிர்வீச்சு சிகிச்சையை ‘2D ரேடியோ தெரபி’ என்பார்கள். இதில் அதிக அளவு கதிர்வீச்சைத் தரவேண்டி இருந்தது. அப்போது அது புற்றுள்ள இடத்தின் அருகில் இருக்கும் திசுக்களையும் அழித்தது. அதனால் நோயாளிக்கு வாயில் புண் ஏற்படுவது, தலைமுடி உதிர்வது போன்ற பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.

இதைத் தவிர்க்க ‘3D கன்ஃபார்மல் ரேடியோதெரபி’ (3D conformal radiotherapy) வந்தது. இந்த சிகிச்சை முறையில் சி.டி. ஸ்கேன் மூலம் நோயுள்ள இடத்தை முப்பரிமாணத்தில் படமெடுத்துக்கொண்டு, கணினி உதவியுடன் நோய்க்குத் தகுந்தவாறு கதிர்வீச்சின் அளவைக் கணக்கிட்டு, புற்றுள்ள இடத்தை மட்டும் தாக்கி அழிக்கும் வகையிலும், அருகில் உள்ள ஆரோக்கிய உறுப்புகளைத் தவிர்க்கும் வகையிலும் சிகிச்சை வடிவமைக்கப்பட்டது. இதில் பக்கவிளைவுகள் குறைந்தன என்றாலும், முழுவதுமாகத் தவிர்க்க முடிய வில்லை.

புதிய கதிர்வீச்சு முறைகள்


நவீனக் கதிர்வீச்சு முறையில் பலவிதம் உள்ளன. அவற்றில் ஒன்று, ‘அய்எம்ஆர்டி’ (Intensity Modulated Radiation Therapy). இதில் கதிர்வீச்சுக் கருவியிலிருந்து புறப்படும் ஒவ்வொரு கதிரின் தன்மையையும் தீவிரத் தையும் மாற்றிக்கொள்ள முடிகிறது. இதன் பலனாக, உடல் உறுப்பு உள்ள இடத்தைப் பொறுத்தும் அதன் அமைப்பைப் பொறுத்தும் கதிர்வீச்சின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடிகிறது. அப்போது அது நல்ல உடல் பகுதி களைத் தாக்குவது தடுக்கப்படுகிறது. உதாரணமாக, மூளைக் கட்டிகளுக்கு ‘அய்எம்ஆர்டி’ கதிர்வீச்சைத் தரும்போது, மூளைக்குள் உள்ள நரம்புகளையோ சுரப்பிகளையோ தேவையில்லாமல் அது தாக்குவது இல்லை.

‘அய்ஜிஆர்டி’ (Image Guided Radiotherapy) என்பது அடுத்ததொரு நவீனக் கதிர்வீச்சு சிகிச்சைமுறை. ‘கோன் பீம் சிடி’(CBCT) 
எனும் பிரத்தியேக ஸ்கேன் துணையுடன் நோயுள்ள இடத்தை நேரடியாகப் பார்த்துக்கொண்டே கதிர் வீச்சு தரப்படும் சிகிச்சை இது. இதனால் புற்றுநோயுள்ள இடத்தை மட்டும் மிகவும் துல்லியமாக அழிக்க முடிகிறது. இது பொதுவாக எல்லாப் புற்றுநோய்களுக்கும் பொருந்தக் கூடியது.

‘எஸ்பிஆர்டி’ (Stereotactic Body Radiotherapy) என்பது மற்றொரு நவீனக் கதிர்வீச்சு சிகிச்சைமுறை. மிகவும் அதிக அளவில் கதிர்வீச்சு தேவைப்படும் புற்றுநோய்களுக்கு ‘சைபர் நைஃப்’ (CyberKnife) எனும் கருவி கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை இது. கல்லீரல், சிறுநீரகம், கணையம், புராஸ்டேட், கழுத்து, மூளை, தண்டுவடம் போன்ற முக்கியமான உடல் உறுப்புகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத அளவுக்குப் புற்றுநோய் ஏற்படு மானால், இந்த சிகிச்சை வழங்கப் படுகிறது. மிகத் துல்லியமான சிகிச்சை மட்டுமில்லா மல் குறுகிய கால சிகிச்சையாகவும் இது கருதப்படுகிறது.

புரோட்டான் சிகிச்சை – அதிநவீன சிகிச்சை!


‘புரோட்டான் சிகிச்சை’ (Proton therapy) என்பது அதி நவீனமானது. ‘புரோட்டான் பீம்’ எனப்படும் பிரத்யேகக் கருவிகொண்டு இந்தக் கதிர்கள் வெளியேற்றப் படுகின்றன. முதலில் ‘சைக்ளோட்ரான்’ எனும் கருவியில் புரோட்டான் கதிர்களின் வேகம், ஆற்றல் செறிவூட்டப் படுகிறது. பிறகு இவை பல்வேறு கட்டங்களில் வடிகட்டப்பட்டு, புற்று நோயுள்ள இடத்தை மட்டும் தாக்கி அழிக்கவல்ல கதிர்களாக வெளித்தள்ளப்படுகின்றன.

இவை பென்சில் முனை போன்று மிகக் கூர்மையாகப் புற்றுள்ள இடத்தை மட்டுமே தாக்கி அழிக்கக் கூடியவை (Cutting-edge pencil-beam scanning technology). இவற்றின் பயணப்பாதையில் முன்னும் பின்னும் உள்ள மற்ற நல்ல உறுப்புகளும் நரம்புகளும் துளியும் தாக்கப்படாமல் தப்பித்துவிடுகின்றன. அதேவேளையில் புற்றுள்ள பகுதி மிகத் துல்லியமாகவும் முழுவதுமாகவும் அழிக்கப்படுகிறது. நோய் நன்கு கட்டுப்படுகிறது.

கூடுதல் நன்மைகள்


நுரையீரல், குடல், கண், கணையம், மார்பகம், புராஸ்டேட், மூளை, தண்டுவடம், முகத்தில் உள்ள சைனஸ் அறைகள் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய் களுக்கு புரோட்டான் சிகிச்சை சிறந்த பலனைத் தருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கும் இது பயன்படுகிறது.  புற்றுநோய்க் கட்டிகளுக்கு மட்டுமன்றி, சாதாரண வகைக் கட்டிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. கதிர்வீச்சு சிகிச்சையின் பக்க விளைவாக வரக்கூடிய இரண்டாம் நிலைப் புற்றுநோய் (Secondary cancer) 
வருவதும் இதில் தடுக்கப்படுகிறது. கதிர்வீச்சு சிகிச்சைக்கு 30-க்கும் மேற்பட்ட அமர்வுகள் தேவைப்படும். புரோட்டான் சிகிச்சையில் 10-க்கும் குறை வான அமர்வுகளே போதுமானது. இதனால், நோயாளிக்கு அலைச்சல் மிச்சமாகிறது. இந்த சிகிச்சை முறை தற்போது சென்னையிலும் வழங்கப்படுகிறது.

-  விடுதலை நாளேடு, 4.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக