செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

இரண்டு கைகளையும் இழந்தவருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு

சென்னை, பிப்.3 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் போடிக்காமன்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி.  கூலித்தொழிலாளி.    இவ ருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது ஒரே மகன் நாராயணசாமி.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நாராயணசாமியால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலவில்லை. மேலும் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் நாராயணசாமியின் தலையில் விழுந்தது. இதனையடுத்து பத்தாம் வகுப்பு முடிந்த உடனேயே கட்டட வேலைக்குச் சென்ற நாராணசாமி படிப்படியாக கொத்தனாராக உயர்ந்தார்.

2015-ம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி  சித்தையன்கோட்டை என்ற இடத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது கான்கிரீட் போடுவதற்காக ஒரு நீண்ட கம்பியை தூக்கிய போது எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் உரசியது. இந்த விபத்தில் இவரது இரண்டு கைகளும் முழங்கைக்கு கீழே கருகிப்போனது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய் கொடுத்த ஆலோசனை மற்றும் உதவியுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில்  சேர்ந்தார். அடுத்த நாளே  மூளைச் சாவு ஏற்பட்ட கொடையாளி ஒருவரின் இரண்டு கைகளும் அவருக்குப் பொருத்தப்பட்டன.  கடந்த  ஓராண்டாகத் தொடர் சிகிச்சை, தொடர் கண் காணிப்பில்  இருந்த நாராயணசாமி, திங்கள்கிழமை வீடு திரும்புகிறார். நாராயணசாமிக்கு மேற் கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை குறித்து  கை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் ரமாதேவி கூறியது:

ஸ்டான்லி மருத்துவமனை கை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை இந்திய அளவில் புகழ்பெற்ற முதல்நிலை மய்யம் என்றாலும் மூளைச்சாவு ஏற்பட்டவரின் கைகளை பயன் படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவேதான் முதன்முறையாகும்.  உலகம் முழுவதும் 87 மருத்துவமனைகளில் இதுவரை 110 பேருக்கு இவ்வகை அறுவைச் சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார் மருத் துவர் ரமாதேவி.

- விடுதலை நாளேடு, 3.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக