சனி, 7 செப்டம்பர், 2019

உணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை!

சுகப்பிரசவமா இருந்தாலும் சிசேரியனாக இருந்தாலும் குழந்தைக்கு தாய்ப்பால் குடுக்கணும். குழந்தை பிறந்து அது மார்பகத்துலேர்ந்து உறிஞ்சி குடிக்கக் குடிக்கத்தான் பால் சுரக்கும். இன்னும் சில பேருக்கு 48 மணி நேரம் ஆகலாம்.



‘சீம்பால்’ எனப்படும் முதலில் சுரக்கும் பால் நோய் எதிர்ப்பாற்றலைக் குழந்தைக்குத் தரும். எனவே, அதைக் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு பால் குடுப்பதை கடிகாரத்தைப் பார்த்துச் செய்யாதீங்க. குழந்தை அழும்போது கட்டாயம் குடுங்க. குழந்தை அழுதா தாமதிக்காமல் தாய்ப்பால் குடுக்கலாம். தண்ணீர், பழச்சாறு என்று எதுவும் கொடுக்க வேண்டாம்.

அடிவயிற்று வலி:

இந்த நேரத்தில் கர்ப்பப்பை சுருங்குவதால் தாய்க்கு அடிவயிற்றில் வலி இருக்கும். இது வலின்னு அப்படியே உட்கார்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ இருந்தால் தையல் போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டு இன்னும் வலி அதிகமாகும். சிசேரியன் செய்திருக்கும் நிலையில் 10 சென்ட்டி மீட்டர் அளவுக்கு தையல் போடுவதால் நிச்சயம் வலி இருக்கும். இதற்கு மாத்திரை கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டும்.



முக்கியமாக சிசேரியன் செய்திருந்தால், படுக்கையிலிருந்து ஒரு பக்கமாக திரும்பி எழுந்திருக்க வேண்டும். அப்படி எழும்போது எதிர்ப்பக்கக் கையை ஊன்றி மெல்ல எழுந்தால் வயிற்று அழுத்தம் ஏற்படாமல் இருக்கும். அதனால் யாரையும் பிடிக்கவோ, தூக்கிவிடவோ சொல்லாதீர்கள். கழிவறைக்கும் தைரியமாக எழுந்து, நடந்து போக வேண்டும்.

சாப்பிட உகந்தவை:

பிரசவத்துக்குப் பிறகு சாப்பாட்டைப் பொறுத்தவரை எந்த நிபந்தனையும் இல்லை. சிசேரியனாக இருந்தால் 24 மணி நேரத்துக்குத் திரவ உணவு எடுத்துக் கொள்வது நல்லது. பொதுவாகத் தாயின் உடல்நிலை நன்றாக இருப்பதற்கும், குழந்தைக்குத் தாய்ப்பால் தரவும், பிரசவத்துக்கு முன்பு எப்படி ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட்டார்களோ அதே மாதிரி தொடர்ந்து சாப்பிடலாம். அதுக்கு மேல, இன்னும் அதிக புரதச் சத்து இருக்கின்ற சாப்பாடும், நிறைய தண்ணீரும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டுக்கும் தாய்ப்பாலின் அளவு, தன்மை இரண்டையும் அதிகப்படுத்தும் சக்தி இருக்கிறது.



இது கூடாது

கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் சாதம், ஓட்ஸ் போன்ற உணவை எடுத்துக்கொண்டால், பால் சுரக்கும் என்று நினைக்கிறார்கள். நெய்கூட அளவுக்கு அதிகமாக சிலபேர் சாப்பிடுவார்கள். இது தவறான எண்ணம். இதனால் தாயின் எடை அதிகமாகும். எளிதில் செரிக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.



ரத்தப்போக்கு

பிரசவத்துக்குப் பிறகு, நாலு முதல் அய்ந்து வாரங்கள் வரை ரத்தப்போக்கு கொஞ்சம் கொஞ்சம் இருந்துகிட்டேதான் இருக்கும். இதற்குப் பயப்படத் தேவையில்லை. ஆனால், இடையில் ரத்தப் போக்கு அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டும். எப்படிப்பட்ட பிரசவமானாலும் கட்டாயம் நடக்க வேண்டும். இது இல்லையென்றால் காலிலோ அல்லது மூளையிலோ ஒருவித ரத்த உறைவு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. காலில் முட்டிக்குக் கீழே வரக்கூடிய ரத்த உறைவு (Deep in Vein Thrombosis) சில சமயம் உடைந்து, நுரையீரலிலோ, மூளையிலோ இன்ஃபெக்ஷனை உண்டாக்குகின்ற அபாயம் இருக்கிறது. இது வராமல் தாயைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.



ஓய்வு கட்டாயம்

குழந்தையை நம்பிக்கையாய் வீட்டில் யாரையாவது பார்த்துக்கச் சொல்லிவிட்டு, தாயானவள் ஒரு மணி நேரம் நிம்மதியாக ஓய்வெடுப்பது ஒரு நல்ல வழக்கமா இருக்கும்.

- உண்மை இதழ், 16-30.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக