- மரு.இரா.கவுதமன்
‘குழந்தையின்மை’ (Sterile) சமூகத்தில் பெரிய இழிவாகக் கருதப்படுகிறது. ‘கடவுளின் சாப’மே இந்நிலைக்குக் காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலைக்குக் காரணமாக ‘பெண்கள்’ முழுமையாக பழி தூற்றப்பட்டனர். ‘மலடி’ என்று ஆணாதிக்க சமூகம் அவர்களை குற்றம் சாட்டியது. இக்கொடுமைக்கு புகுந்த வீட்டுப் பெண்களும் உடந்தையாக இருந்தனர். பல பெண்கள் ‘வாழா வெட்டி’கள் என்கிற பட்டத்துடன் பிறந்த வீட்டிற்கு துரத்தப்பட்டனர். இதை சாக்காக வைத்து, ஆண்கள் மறுமணம் செய்து கொண்டனர். ‘மலடி’ என்று பெண்களை இழிவுபடுத்திய சமூகம் ‘மலடன்’ என்று ஆண்களை ஒரு போதும் குறை சொன்னதேயில்லை. ஏன், ‘மலடன்’ என்னும் சொல்லாடலே இல்லையே! பெண்களுக்கு ஏற்பட்ட இந்த இழிவை, இன்றைய மகப்பேறு மருத்துவம் எப்படி மாற்றியது என்று காண்போமா?
இன்றைக்கு பல இடங்களில் “கருத்தரிக்கும் மய்யம்’’ (Fertility Clinic Centre) என்று நீங்கள் பார்த்திருக்கலாம். ‘இனி வரும் உலகம்’ என்னும் நூலில், தந்தை பெரியார், “ஆண், பெண் உறவில்லாமலேயே’’ ‘குடுவையில்’ குழந்தை பிறக்கும் காலம் வரும் என்று கூறியதை நீங்கள் அறிவீர்கள். இனி ‘கருத்தரித்தல்’ எப்படி நிகழ்கிறது என்று பார்ப்போம். கரு உண்டாக ஆண் கருவும், பெண் கருவும் இணைந்தால்தான் ‘கரு’ உருவாகும். ஆண்கள் பருவம் அடையக் காரணமாக உடலில் ஒரு சுரப்பு சுரக்கும். அதற்கு ‘ஆண்ட்ரஜன்’ (Androgen) என்று பெயர். சிறுநீரகங்களின் மேல் சிறிய அவரை விதை வடிவில் அமைந்துள்ள ‘அட்ரினல் சுரப்பி’களே இந்த சுரப்புக்குக் காரணம். ‘ஆண்ட்ர்’ (Andr) என்றால் கிரேக்க மொழியில் ஆண் என்று பொருள். அதை அடிப்படையாகக் கொண்டே இந்தச் சொல்லாடல் வழக்கத்துக்கு வந்தது. ஆனால், பெண்களின் சினைப்பையிலும் (Overies) இந்தச் சுரப்பு சிறிதளவு சுரக்கிறது. இந்தச் சுரப்பின் காரணமாக, விதைகளில் ‘டெஸ்டோஸ்டிரான்’ (Testosterone) என்கிற சுரப்பு சுரக்கிறது. இதன் காரணமாகவே ஆண்கள் ‘வாலிப’ப் பருவத்தை அடைகின்றனர். குரல் உடைதல், உடலில் பல பகுதிகளிலும், முடி வளர்தல் (மீசை, தாடி போன்றவை), உயிரணுக்கள் உற்பத்தி, விந்து உற்பத்தி ஆகியவை இதன் காரணமாகவே ஏற்படுகிறது. இயல்பாக ஆண் உயிரணுக்கள் 20 மில்லியன் / மில்லி லிட்டர் முதல் 200 மில்லியன்/மில்லி லிட்டர் என்கிற அளவு இருத்தல் அவசியம். 15 மில்லியனைவிட, இது குறைவாக இருந்தால் ஆணால் கருவை உண்டாக்க முடியாது. அது மட்டுமின்றி, ஆண் கருவில் அமைப்பு குறைபாடு, இயக்கத்தில் குறைபாடு இருந்தாலும் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படும். விந்து உற்பத்தி குறைபாடும் இந்நிலைக்குக் காரணம். இயல்பு நிலையில் விந்து 1.5 முதல் 7.5 மில்லி லிட்டர் உற்பத்தி ஆக வேண்டும். ஆண் கருவின் இயக்கம் 40 முதல் 80 சதவிகிதம் இருத்தல் அவசியம். கருவின் அமைப்பு 40 சதவிகிதம் இயல்பாக இருக்க வேண்டும். மேற்சொன்னவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகும்.
பெண்களுக்கு இதைப்போலவே, ‘ஈஸ்ட்ரோஜன்’ (Estrogen), ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progestron) ஆகிய இரண்டு வகை சுரப்புகளை, அவர்களின் சினைப்பைகள் (Ovaries) சுரக்கின்றன. பெண்கள், பருவமடைவதற்கும், மாதவிலக்கிற்கு ஆளாவதற்கும் இந்தச் சுரப்பிகளே காரணம். பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈஸ்ட்ரஜன் சுரப்பே காரணம்.
கருத்தரித்தல் செயல்முறை
பெண்கள் பருவமடைவதற்கும், சினைப்பையில் பெண் கரு முட்டை உற்பத்தியாவதற்கும் இந்தச் சுரப்பே காரணம். இயல்பாக 10 வயது முதல் 12 வயதிற்குள் பெண்கள் பருவமடைவர். மேற்சொன்ன சுரப்புகளால் கருப்பையில் மாற்றங்கள் உருவாகும். கருவைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் கருப்பையின் உட்சுவர் மாறும். மாதவிலக்கு நடந்து 14ஆம் நாளில் வளர்ச்சியடைந்த பெண் கருமுட்டை கருப்பையை வந்தடைந்தால், ஆண் கருவோடு கலக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டால் “கருத்தரித்தல்’’ நிகழும். இல்லையெனில், மேலும் 14 நாள்களில் மாதவிலக்கு ஏற்படும். இதையே ‘மாதவிலக்கு சுழற்சி’(Periods) என்கிறோம். இந்தச் சுரப்புகளில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படும். அதனால் கருவுறும் வாய்ப்பு ஏற்படாது. அதேபோல் கருமுட்டை செல்லும் வழி, கருக்குழாய் (Fellopian tubes)இல், ஏதேனும் அடைப்பு இருப்பின் கருமுட்டை, கருப்பையை அடைய முடியாது. இதுதவிர கருப்பையின் உட்சுவர் (Endometrium) குறைபாட்டுடன் இருந்தாலும் கருவுறுதல் பாதிக்கப்படும். இவையே பெண் மலட்டுத் தன்மைக்குக் காரணம். இந்தக் குறைபாடுக்குக் காரணம் தெரிந்தால், குறையை நீக்குவது எளிதல்லவா? இதைதான் “கருவுறுத்தல்’’ மய்யங்கள் செய்கின்றன. மலட்டு தன்மைக்கான மருத்துவத்திற்கு, மகப்பேறு மருத்துவர்களிடம் முன்பெல்லாம் பெண்களையே அனுப்பி வந்த காலம் மாறிவிட்டது. மருத்துவர்கள் கட்டாயம் கணவர்களையும் சோதிக்க வேண்டும் என கூறுவதால் இருவருமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறை உள்ளவர் யாரென அறிந்து, அதற்கு, அவருக்கு மருத்துவம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மகப்பேறுக்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆண்களுக்கு ஆண் கரு உற்பத்தியிலோ, அமைப்பிலோ, எண்ணிக்கையிலோ, நகர்விலோ குறைபாடு ஏன் ஏற்படுகிறது என ஆய்வு நடத்தப்படுகிறது. பெரும்பான்மையான நேரங்களில் ‘டெஸ்டோஸ்டிரான்’ குறைபாட்டால்தான் ஏற்படும். அதை உடலில் செலுத்துவதால் இந்தக் குறைபாடு சரி செய்யப்படுகிறது. அதன் மூலம் கருவை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டு மலட்டுத் தன்மை நீக்கப்படுகிறது. மகளிருக்கும் இதே போல் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. சுரப்பு குறைபாடுகள் இருப்பின், அதனால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படுகின்றதைக் கண்டறிந்து, அதற்கான மருந்துகளைச் செலுத்துவதன் மூலம், மாதவிலக்குச் சுழற்சி சீராக்கப்பட்டு, சினைப்பையில் தூண்டுதல் ஏற்படுத்தி சினை முட்டை (Ovum) உற்பத்தி சீராக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண் கருவுடன் சேர்தல் (Ovulation) இயல்பாக்கப் படுவதால், கருவுறுதல்(Fertilisation) நிகழ வாய்ப்பு ஏற்படுகிறது. முட்டை நகரும் கருக்குழாயில் சில காரணங்களால் அடைப்பு ஏற்படலாம். அதனால் கருமுட்டை கருப்பையை அடைய முடியாத நிலையுண்டாகும். முதலில் அந்தக் குழாய் அடைப்பை, சரி செய்ய முடிந்தால் அதை சரி செய்வார்கள். சரி செய்ய முடியாத நிலையில், கரு முட்டையை எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆண் கருவோடு கலந்து, சோதனைக் குழாயில் கருவுறுதல் நிகழ்ந்த பின், அந்தக் கருவை, கருப்பையில் செலுத்தி, கருவை நிலைநிறுத்தி, மகப்பேறு வாய்ப்பை உருவாக்குவார்கள். கருப்பையில் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளும், சரி செய்யப்படுகின்றன. இதுபோன்று பன்முறை மருத்துவ முறைகளால் பெரும்பாலும் மலட்டுத் தன்மைகள் நீக்கப்படுகின்றன.
கடவுளால் படைக்கப்பட்ட அல்லது விதியால் உருவான கோளாறுகள் மருத்துவர்களால் சரி செய்யப்பட்டு மகப்பேறு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பெண்களை ‘மலடி’ என பழிகூறி, படுத்தி எடுத்த சமூக அவலங்களும் குறையத் தொடங்கியுள்ளன. குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளால், தேவையான அளவு குழந்தை பெற்றுக் கொள்ளவும், தேவையான நேரத்தில் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதல்லவா?
(தொடரும்...)
- உண்மை இதழ் 16- 31 .12 .19