நாம் பருகும் ஓஆர்எஸ் கரைசலில் சோடியம் குளோரைடு - 2.6 கிராமும், பொட்டாசியம் குளோரைடு - 1.5 கிராமும், ட்ரைசோடியம் - 2.9 கிராமும் உள்ளதாக மருத்துவ ஆய்வு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பருகுபவர்களுக்கு எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்காதது ஓஆர்எஸ்; இது மருந்துக் கடைகளிலும், மருத்துவமனைகளிலும் கிடைக்கும். தூய்மையான முறையில் இந்த உப்பு மற்றும் சர்க்கரைக் கரைசலை நாமே தயாரிக்கலாம். ஓஆர்எஸ் தயாரிக்க 1 லிட்டர் சுத்தமான தண்ணீர், சர்க்கரை 6 தேக்கரண்டி (ஒரு தேக்கரண்டி - ஐந்து கிராம்), உப்பு அரை தேக்கரண்டி இந்த மூன்றையும் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டுக் கலந்தால் ஓஆர்எஸ் கரைசல் தயார்.
நமது நாட்டில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 10 விழுக்காடு வயிற்றுப் போக்கால் உயிரிழப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கை கழுவாமல் சாப்பிடுதல், நோய்களைப் பரப்பும் ஈ, கொசுக்கள் ஆகியவை மொய்த்த சுகாதாரமற்ற தின்பண்டங்களை உண்ணுதல், அசுத்தமான நீரைக் குடித்தல் போன்றவை உயிரிழப்புக்கு வழிவகுக்கும் வயிற்றுப் போக்குக்குக் காரணமாக அமைகின்றன. வயிற்றுப் போக்கால் உயிரிழப்பதைக் தடுக்க Oral Rehydration Solution (ORS) எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிற உப்பு நீர் மற்றும் சர்க்கரைக் கரைசல்.
குழந்தைகளைப் போன்றே முதுமைப் பருவத்தினருக்கும் ஓஆர்எஸ் கரைசல் அவசியம். வயிற்றுப்போக்கு காரணமாக, நீர்சத்து வெளியேறி துன்பப்படும் சிறுவர், சிறுமியருக்கு உடனடியாக சிகிச்சை தரப்படுவது முக்கியமாகும். ஏனெனில், இவர்கள் நீர்ச்சத்தைச் சீக்கிரமாகவே இழந்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு அவர்களுடைய உடல் எடை அடிப்படையில் இக்கரைசலைக் கொடுப்பது நல்லதென குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உதாரணத்துக்கு 10 கிலோ உடல் எடை கொண்ட ஒரு குழந்தைக்கு 100 மில்லி கிராம் தரலாம். ஒருவேளை அதில் குணமாகவில்லை என்றால் குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனைப்படி இரண்டாம் கட்ட சிகிச்சையாக ஆன்டிபயாடிக் தரலாம்.
உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக (Zinc) மாத்திரைகள் வயிற்றுப் போக்கைத் தடுக்க வல்லன. வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் ஓஆர்எஸ் கரைசலைப் பயன்படுத்தும்போது அளவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் மிதமிஞ்சிய சர்க்கரை, நீர்ச்சத்து வெளியேற்றத்தை அதிகரிக்கும். அதிக உப்பால் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அசுத்தமான நீரில் உப்பு மற்றும் சர்க்கரைக் கரைசலைத் தயாரித்து உபயோகிப்பதால், அதனால் கிடைக்க வேண்டிய பலன்கள் எதுவும் நமக்குக் கிடைக்காது. இக்கரைசலைப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரும் முன் நன்றாகக் கொதிக்க வைத்து அல்லது பலமுறை வடிகட்டித் தருவது எதிர்பார்த்த பலன்களை நமக்குக் கிடைக்கச் செய்யும்.
பொதுவாக மனித உடலில், 60 விழுக்காடும், குழந்தைகள் உடலில் 70 விழுக்காடும் தண்ணீர் காணப்படுகின்றது. நீரிழப்பைத் தொடக்க நிலையிலேயே, கண்டறிந்து ஓஆர்எஸ் கரைசலை எடுத்துக்கொண்டால், இதனைக் கட்டுப்படுத்த முடியும்.
வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிற குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை எந்தக் காரணத்துக்காகவும் நிறுத்தக் கூடாது. ஏனென்றால், தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் காணப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதோடு, எளிதில் செரிக்கக்கூடிய ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றையும் அவர்களுக்குத் தரலாம். நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கிற நார்ச்சத்து மலம் கழிப்பதைத் துரிதப்படுத்தும். எனவே, வயிற்றுப் போக்கால் அவதிப்படும் காலக்கட்டங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சேர்க்காமல் இருப்பது பாதுகாப்பானது. மாதுளை, ஆப்பிள் முதலான பழவகைகளை உண்பது எதிர்பார்க்கும் பலனைத் தரும்.
-உண்மை இதழ், ஆகஸ்ட், 1 -15 .2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக