மரு.இரா.கவுதமன்
மருத்துவர் இரா.கவுதமன் சிறந்த பகுத்தறிவாளர். ‘மருத்துவமும் மூடநம்பிக்கையும்’ என்னும் தலைப்பில் உண்மையில் தொடர் கட்டுரை எழுதியவர். தனது மருத்துவ அறிவை துல்லியமாகப் பயன்படுத்தி பல பயனுள்ள மருத்துவச் செய்திகளை இத்தொடர் மூலம் வழங்கியுள்ளார். படித்து பயன் பெறுங்கள்; பகுத்தறிவும் பெறுங்கள்.
(ஆசிரியர்)
அறிமுகம்: இன்றைய மருத்துவம், பல புதிய பரிணாமங்களுடன் வெற்றி நடைபெறுகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சராசரியாக 30 ஆண்டுகளாக இருந்த நமது வயதும், வாழ்க்கையும் இன்று 60 ஆண்டுகளாக மாறியது எப்படி? கடவுளின் அருளாளா? விதி வசத்தாலா? மாயத்தாலா? மாந்திரீகத்தாலா? சிந்தியுங்கள்! மருத்துவத்தின் மகத்தான வளர்ச்சியன்றோ இந்த மாற்றத்திற்குக் காரணம். இம்மாற்றங்கள் செய்த மருத்துவப் புரட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன். இனி கட்டுரைக்குச் செல்வோமா?
பக்கவாதம்:
நம் மூளைதான் நம் உடலின் தலைமைச் செயலகம். நம் உடலின் இயக்கத்தை நரம்பு மண்டலம் மூலம் முழுமையான கட்டுப் பாட்டில் வைத்திருப்பது நம் மூளைதான். மூளை சரியாக இயங்க வேண்டுமானால் தடையில்லாமல் இரத்த ஓட்டம் நிகழ வேண்டும். மூன்று நிமிடங்களுக்கு மேல் இரத்த ஓட்டம் தடைபட்டால் மூளையில் உள்ள திசுக்கள் மரணமடைந்துவிடும். அந்தப் பகுதியிலிருந்து வரும் நரம்புகளும் செயலிழந்து விடும். செயலிழந்த நரம்புகள் செல்லு மிடங்களில் உள்ள திசுக்களும் செயலிழந்து விடும். நம் உடலில் வலப் பக்க இயக்கத்திற்கான மய்யம், மூளையின் இடப் பக்கத்திலும், இடப் பக்க இயக்க மய்யம் வலப் பக்கமும் அமைந்திருக்கும். வலக்கைப் பழக்கம் உடையவர்களுக்கு ‘பேச்சு மய்யம்’ (Speech Centre) இடப் பக்கமும், இடக்கைப் பழக்கம் உடையவர்களுக்கு, இது வலப் பக்கமும் அமைந்திருக்கும். பெரு மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டால், எந்தப் பகுதிக்குச் செல்லும் குழாய்களில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதற்கு எதிர்ப்புறம் உடல் செயலிழந்துவிடும். இதையே ‘பக்கவாதம்’ (Paralysis) என்கிறோம். வலக் கைப் பழக்கக்காரர்களுக்கு, இடப்பக்கம் பாதிக்கப்பட்டால் ‘பேச்சு மய்யமும்’ பாதிக்கப்படும். அதனால் பேச முடியாத நிலை ஏற்படும்.
நீரிழிவு நோய் (Diabetes), மிகு இரத்த அழுத்தம் (Hypertension) ஆகிய நோய்கள் நீண்ட நாள்கள் இருப்பின், நம் இரத்த குழாய்களின் உட்சுவர்களில் மாவுப் பொருள்களோ (Carbohydrates), உப்புப் பொருள்களோ படிந்து விடும். இதனால் இரத்தக் குழாய்கள் கடினத் தன்மை அடைந்துவிடும். மேற்கண்ட நோய்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்தப் படிவங்கள் அதிகமாகி, இரத்தக் குழாய்கள் குறுக்களவு சுருங்கிவிடும். அதனால் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதன் காரணமாக ஏற்கெனவே ‘மிகு இரத்த அழுத்தம்’ உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கும். அதிக அளவு அழுத்தத்தோடு, குறுகிய பாதை வழியாக இரத்தம் செல்லும்பொழுது, இரத்தக் குழாய்களின் பக்கச் சுவர்களில் படிந்துள்ள பொருள்கள் பிய்த்துக்கொண்டு, இரத்த ஓட்டத்தோடு செல்லும். மூளையின், பெருமூளை இரத்தக் குழாய்கள் பல இடங்களில் மிகச் சிறியதாக இருக்கும். பிய்த்துக் கொண்டு வரும், படிவம் அதைவிட சிறிய அளவு குழாய்க்கு வரும்பொழுது, குழாயை அடைத்துவிடும். அதனால் அந்த மூளைப் பகுதிக்குச் செல்லும் இரத்தம் திடீரென தடைபடும்.
இதை ‘பெருமூளை குழாய் அடைப்பு’ (Cerebral Thrombosis) என்று குறிப்பிடுவர். இரத்த ஓட்டம் நின்ற இடத்தில் இருந்து செல்லும் நரம்பு மண்டலம் முழுமையாகச் செயலிழக்கும். சில நேரங்களில் இரத்த அழுத்தம் மிக அதிகமாகும்பொழுது பெருமூளையின் சிறிய இரத்தக் குழாய்கள் கிழிந்துவிடும் நிலைகூட ஏற்படலாம் (Cerebral Haemorrage). இதனால் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிப்படையும். மேற்சொன்ன காரணங்களால், மூளையின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக, உடலின் செயலிழக்கும் தன்மையையே ‘பக்கவாதம்’ என்கிறோம். முன்பெல்லாம், மூளை, தண்டுவட நீரை (Cerebro-Spinal Fluid), முதுகிலிருந்து எடுத்து பரிசோதிப்பதன் மூலம், மூளை இரத்தக் குழாயில் அடைப்புள்ளதா, அல்லது குழாய் கிழிந்து இரத்தம் வெளியேறுகிறதா என்று கண்டறிவர். ஆனால், இப்பொழுது CT ஸ்கேன், MRI ஸ்கேன் மூலம் எந்த இரத்தக் குழாய் பாதித்துள்ளது என்று துல்லியமாகக் கண்டறிவர். முன்பெல்லாம் குழாய் அடைப்பை அதிகமாகாமல் தடுக்கும் மருந்துகளைத் தருவதன் மூலம், நோயைக் கட்டுப்படுத்துவர். ஆனாலும், செயலிழந்த பகுதியைச் சரி செய்ய முடியாது. பயிற்சி மருத்துவம் (Physiotherapy) செய்வதன் மூலம், நோயாளிக்கு ஓரளவு இயக்கத்தை கொடுக்க முடியும். ஆனால், இரத்தக் குழாய் கிழிந்து, இரத்தம் வெளியேறும் நிலை ஏற்பட்டால் பெரும்பாலும் மரணமே நிகழும். ஆனால் இன்று! ஆரம்ப அறிகுறிகள் தெரியும்பொழுதே, நரம்பியல் மருத்துவர்களிடம் சென்றால் இந்நோய் முழுமையாகக் குணமடைய முடியும். ஆரம்ப அறிகுறிகள் தோன்றி 5 மணி நேரம் மிகவும் இன்றியமையா நேரம். உடனே மருத்துவமனைக்குச் சென்றால், பரிசோதனைகள், மருத்துவம் செய்து நோயாளியை முழுமையாகச் சரி செய்ய முடியும். சரி! ஆரம்ப அறிகுறிகள் என்ன? பார்ப்போம்!
* பேச்சு தடைபடும். குழப்பம் ஏற்படும். பேச்சு தடுமாறி, குழம்பிய நிலையில் இருக்கும். புரிதல் குறையும்.
* முகம், கை, கால், உடலின் ஒரு பகுதி மதமதப்புடன், உணர்விழத்தல், செயல் இழக்கும். இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்த முயன்றால், செயலிழந்த பகுதியில் கையை உயர்த்த முடியாது. புன்னகை செய்ய முயன்றால் வாய் கோணிவிடும்.
* ஒரு கண்ணில் பார்வை தடைபடும். கண் இமைகள் தானாகவே மூடி பார்வையிட முடியாத நிலை உண்டாகும்.
* தலைவலி, வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்படும்.
* நடை முழுமையாக பாதிக்கப்படும். கால் சதைகள் பாதிக்கப்படுவதால் முழுமையாக நிற்கவோ, நடக்கவோ இயலாது.
இவையே ஆரம்ப அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. நேரம் கூடக் கூட மூளையில் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கும். நேரம் அதிகரிக்க, ஆபத்தும் அதிகம். பாதிப்பும் அதிகம். அதனால் உடனடி நடவடிக்கையும், எச்சரிக்கையும் கட்டாய தேவை. ஏறக்குறைய 80 சதம் பக்கவாதம் இரத்தக் குழாய் அடைப்பினால்தான் நிகழ்கிறது. முன்பெல்லாம் அடைப்பை கரைக்கும் மருந்துகளும், பயிற்சி மருத்துவமும் நோயைக் கட்டுப்படுத்தவும், நோயாளிக்கு ஓரளவு இயக்கமும் கொடுக்க உதவின. ஆனால், இன்றோ, நோயை முழுமையாகக் குணப்படுத்துகின்றனர். மூளைக்குச் செல்லும் முக்கிய இரத்தக் குழாய், கேரோட்டிட் தமனி (Carotid Artery) யில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை ஒரு சிறிய அறுவை மருத்துவம் செய்து, இரத்தக் குழாயில் படிந்துள்ள, படிவுகளை அகற்றுவர். ஆனால், மூளைப் பகுதியில் இந்த மருத்துவம் செய்வது கடினம். காலிலோ அல்லது கையிலோ உள்ள இரத்தக் குழாய் வழியே ஒரு சிறிய ‘துளைக்குழாயை’ (Catheter) செலுத்துவர். அக்குழாய் மூளையை அடைந்ததும், ஒரு நிறமியை (Dye) செலுத்துவர். அது மூளையில் பரவும் நிலையில், அடைப்பா அல்லது கசிவா என்று முதலில் கண்டுபிடிப்பர். அடைப்பாக இருப்பின், அது கரைய மருந்துகளை அதே குழாய் மூலம் செலுத்துவர். அதன் மூலம் அடைப்பு நீக்கப்பட்டு, மீண்டும் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிக்கு இரத்த ஓட்டம் துவங்கும். அடைப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ‘ஸ்டென்ட்’ (Stent) என்னும் சுருள் கம்பியை அந்த இடத்தில் அதே குழாய் வழியே பொருத்தி விடுவர் (Angio-Plasty). இதன் மூலம் அடைப்பு மீண்டும் வராமல் தடுக்கப்படும். அதே போல் இரத்தக் குழாய் கிழிந்து இரத்தக் கசிவு என்று கண்டறிந்தால், அதே குழாய் வழியே கசிவைத் தடுக்கும் மருந்துகளை உட்செலுத்தி, கசிவை கட்டுக்குள் கொண்டு வருவர். இதன் மூலம் அதிகளவு மூளைத் திசுக்கள் சிதைவை முழுமையாகத் தடுத்து விடுவர். பிறகு ஒரு சில மாதங்கள் பயிற்சி மருத்துவம் செய்வதன் மூலம் ஓரளவு நோயாளி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். இம்மருத்துவ முறை பக்கவாத நோய் மருத்துவத்தில் ஒரு பெரிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையாகாது.
(தொடரும்...)
- உண்மை இதழ் 16- 30 .11 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக