கொதிக்கும் ரத்தம்
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களுக்கும் ரத்தவோட்டம் இருக்கிறது. தாவரங்களுக்கு ரத்தம் என்பது தண்ணீர்தான். எல்லா விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருப்பதில்லை. சில உயிரினங்களுக்கு வெள்ளையாகக்கூட இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு வரை உடலில் ரத்தம் இருக்கிறது என்று தெரியுமே தவிர அது சுற்றோட்டம் (circulation)ஆகிக் கொண்டிருக்கிறது என்பது மருத்துவர்களுக்குக் கூடத் தெரியாமல்தான் இருந்தது.
இங்கிலாந்தில் வாழ்ந்த வில்லியம் ஹார்வி ( ஏப்ரல் 1, 1578 - ஜூன் 3, 1657 )என்பவர்தான் இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப் படுவதையும் நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிப்பதையும் ஒரு நாளைக்கு ஆயிரத்து அய்நூறு காலன் ரத்தம் அதன் வழியாக செல்வதையும் கண்டறிந்தார். இதயத்திலிருந்து ரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிறது என்பதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.
இந்த ரத்தச் சுற்றோட்டம் குறிப்பிட்ட அழுத்தத்தில் இருக்கவேண்டும். குறையினும் மிகையினும் நோய் செய்யும்!
18 அல்லது அதற்கு அதிகமான வயதையுடைய வயதுவந்தோருக்கு பின்வரும் இரத்த அழுத்த வகைப்பாடு பயன்படுத்தப்படுகிறது. கீழே உள்ள அட்டவணை 2 அல்லது அதற்கு அதிகமான அலுவலக வருகையின் போது சரியாக அளவிடப்பட்ட அமர்ந்த நிலையில் எடுக்கப்பட்ட இரத்த அழுத்த அளவுகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வயதுவந்தோருக்குரிய இரத்த அழுத்தத்தின் வகைப்பாடு
நம்முடைய ரத்த அழுத்தம் இயல்பான நிலையில் இருந்தால் நல்லது. ஆனால், எல்லோரும் எல்லா நேரத்திலும் அமைதியாக இருந்துவிட முடியாது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள், அலுவலகப் பிரச்சினைகள், தொழிலில் ஏற்படும் நட்டம், நம்பிக்கைத் துரோகம்,உலக நடப்புகள், ஆகிய காரணங்களால் நம்முடைய ரத்த அழுத்தத்தில் மாறுதல் ஏற்படும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எந்த உணர்ச்சியும் இல்லாத ஜடமாக வாழ்ந்துவிட முடியாது.
"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப "
என்பது தொல்காப்பியம் கூறும் மனவெழுச்சிகள் (emotions). சூழலுக்கேற்ப நம்முடைய உணர்சிகளை வெளிப்படுத்தித்தான் ஆகவேண்டும். அதை அழுத்தி வைக்கவோ அளவுக்கதிகமாக வெளிப்படுத்தவோ கூடாது. மனதிற்கு மகிழ்ச்சியளிக்காத நிகழ்வுகள் நடக்கும்போது ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகரிக்கும். அம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்காமல் தடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால், மனதையும் உடலையும் பயிற்சிகள் மூலம் பக்குவப்படுத்தி குருதியழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உயர் ரத்த அழுத்தம் உள்ள பலருக்கு (95%) அதன் அறிகுறி தெரிவதில்லை.
அதனால்தான் இதை அமைதிக் கொலையாளி (silent killer) என்கிறார்கள். உயர் ரத்த அழுத்தம் ரத்தக் குழாய்களைச் சுருக்கி ரத்தவோட்டத்தைத் தடை செய்கிறது. இதனால் இதயமும் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. சில நேரம் மூளையையும் தாக்குகிறது. இதனால் இதயத்திற்கு அதிக வேலைப்பளு ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் செயலிழப்பு, இதய செயலிழப்பு, சிறு நீரக செயலிழப்பு, நெஞ்சுவலி போன்றவை ஏற்படுகின்றன.
மேற்கண்ட பிரச்சினைகள் வராமல் தவிர்க்க, முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி அவரவர் களுக்கு ஏற்ற உடற்பயிற்சி,உணவு அட்டவணையை தயார் செய்துகொண்டு அதை தினசரி பின்பற்ற வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான சில தவிர்க்க இயலாத காரணிகள் முதுமை: முதுமை காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்க முடியாது. இனம்: ஆப்ரிக்க அமெரிக்கர்கள் (கறுப்பினத்தவர்) போன்ற ஒருசில இனங்களில் மற்ற இனத்தாரைக் காட்டிலும் இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் தாக்குகிறது.
சமூக அந்தஸ்து: கீழ் நடுத்தர மக்களுக்கும் கல்வியறிவு குறைந்தவர்களுக்கும் சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களைக் காட்டிலும் உயர் ரத்த அழுத்தம் சிக்கலை ஏற்படுத்துகிறது.
பரம்பரை: குடும்பச் சொத்தாக அனைவருக்கும் இந்நோய் வருவதுண்டு.
கர்ப்பக் காலம்: நிறைய பெண்களுக்கு கருவுற்றிருக்கும் காலத்தில் உயர் ரத்த அழுத்தம் வருவதுண்டு. பேறு காலத்திற்குப் பின் இயல்பாகிவிடும்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான சில மாற்றக் கூடிய காரணிகள்
உடற்பருமன்: அதிக்கபடியான உடல் எடை உயர் ரத்த அழுத்தத்திற்கான முதன்மைக் காரணமாகும்.
சோடியம் உப்பு: சோடியம் சென்சிடிவ் என்ற நுட்பமான உணர்ச்சி உள்ளவர்களுக்கு உட்கொள்ளும் உப்பின் அளவிற்கேற்ப ரத்த அழுத்தம் அதிகரிக்கவோ குறையவோ கூடும்.சோடியம் உப்பு, உணவின் மூலமாகவும் சில வலி நிவாரணி மருந்துகள் மூலமாகவும் உட்செல்கிறது.
மது: அதிக அளவில் தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
மருந்துகள்: கருத்தடை மாத்திரைகள், உணவுக் கட்டுப்பாடு (diet) மாத்திரைகள், மற்றும் ஒவ்வாமைக்கான மருந்துகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
வேறு சில காரணங்கள்: புகைப் பிடித்தல் அல்லது புகைப்பவர்களின் அருகில் தொடர்ந்து இருத்தல்.
சர்க்கரை நோய். (சாப்பிடாத போது 125 mg /dL க்கும் அதிகமாக இருந்தால்.)
சிறுநீரகக் கோளாறு.
உழலுழைப்பு இல்லாமை, உட்கார்ந்தே வேலை செய்பவர்கள்.
45 வயதைத் தாண்டிய ஆண்கள்.
55 வயதைத் தாண்டிய பெண்கள்.
கருத்தடை மாத்திரை உட்கொள்பவர்கள்.
மேற்கண்ட காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
பொதுவாக ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. வழக்கமான உடற் பரிசோதனைகளின் போது இதைத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் நெருங்கிய உறவினர் களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பின் அதற்கான வாய்ப்பு உங்களுக்கும் அதிகம் என்பதைக் கவனத்தில் கொண்டு அவ்வப்போது சோதனை செய்து கொள்ளுங்கள். மேலும், மன உளைச்சலைத் தரும் நிகழ்வுகளால் தொடர்ந்து தூக்கமின்றியும் தவிப்பாகவும் இருக்கும்போது சோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையின்படி நடப்பது நல்லது.
உயர் ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சைகள் என்ன?
உயர் ரத்த அழுத்தத்திற்கு முக்கியமாக வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து (life style) சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.
1. உடல் எடையைக் குறைத்தல்.
2. புகைப் பிடிப்பதை நிறுத்துதல்.
3. ஆரோக்கியமான உணவு முறை
4. உணவில் உப்பைக் குறைத்தல்.
(தமிழ்நாட்டு மக்கள் ஏன்தான் இவ்வளவு அதிக உப்பும் சர்க்கரையும் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை!)
5. நாள்தோறும் முறையான உடற்பயிற்சி.
6. மது அருந்துவதைக் குறைத்தல்.
இதனுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். எச்சரிக்கை! மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளைக் கூட்டியோ குறைத்தோ உட்கொள்ளாதீர்கள்.
எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?
நலமான (ஆரோக்கியமான)உணவு, அதாவது DASH (Dietary Approaches to Stop Hypertension) diet எனப்படும் உணவு முறை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். இது வழக்கமாக உண்ணும் முறையிலிருந்து மாறுபட்டது. அதாவது,
* அதிக அளவு பழங்கள்,காய்கறிகள், மற்றும் கொழுப்புக் குறைக்கப்பட்ட பால் உணவுகள்.
* கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்.
* தானிய வகைகள், மீன், கொழுப்பில்லாத கோழிக் கறி ஆகியவை.
* இனிப்பு மற்றும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் குறைவாக உண்ணல்.
* மக்னீசியம், பொட்டாசியம் , மற்றும் கால்சியம் ஆகியவை அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளல்.
இக்காலத்தில் இளைஞர்களையும் கூட இந்நோய் தாக்குவதால் 20 வயதிலிருந்தே ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அவர்களும் மேற்கண்ட உணவு முறைகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது கட்டாயம்.
தினந்தோறும் நம்மைச் சுற்றி பல அநியாயங்களும், மனக்குமுறல்களை உண்டாக்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டு தானிருக்கின்றன. அவற்றை எதிர்த்துப் போராடவேண்டிய சமுதாயக் கடமையும் நமக்கிருக்கிறது. அப்போதெல்லாம் நம் குருதியழுத்தம் கொதி நிலைக்கு வரும் என்பதும் உண்மை. அந்த உணர்ச்சிதான் நமக்குப் போர்க்குணத்தைக் கொடுக்கிறது என்பதும் உண்மை. ஆனால், அந்தப் போர்க்களத்தில் நிலைத்து நிற்க நம் உடலையும் மனதையும் பக்குவப்படுத்த மேற்சொன்ன நல வழிகளைப் பின்பற்றி நீண்ட நாள் வாழ்ந்து நாமும் சமுதாயமும் பயன் பெறுவோம்.
- க. அருள்மொழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக